Tuesday, March 15, 2016

ஆஸ்கர் விருது 2016 - குமுதம் கட்டுரை - Uncut version



கேனஸ்,  பாஃப்டா, வெனிஸ் போன்று உலகெங்கிலும் வழங்கப்படும் பல சர்வதேச சினிமா விருதுகள் இருந்தாலும் கொட்டாம்பட்டியில் உள்ள ஆசாமி கூட  வாட்ஸ்-அப்பில் ஆவலாக கவனிக்கும் அளவிற்கு புகழ்பெற்றது ஆஸ்கர் விருது.

 'மாப்ள.. இந்த வருஷம் நிச்சயம்டா"  என்று சில பல சமயங்களில்  எதிர்பார்க்கப்பட்டு 'ஆஸ்கர் நாயகன்' என்கிற பட்டத்தோடு மட்டும் திருப்தியடைய வேண்டிய கமல் ரசிகனின்  நிலைமையைப் போலவே ஹாலிவுட்டில் உள்ள டிகாப்ரியோவின் ரசிகனுக்கும் ஆகியிருந்திருக்கும். 'இனிமே வயசுக்கு வந்தா என்ன.. வராட்டி என்ன?' என்கிற அளவிற்கு சோர்ந்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். இந்த வருடமாவது   டிகாப்ரியோவிற்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

கடந்த வருடங்களில் சிறந்த நடிகருக்கான பிரிவில் இதுவரை நான்கு முறை நாமினேட் ஆகியும் அது கிடைக்காத வெறுப்பில் விருதுக் கமிட்டியை 'F***k you' என்று அவர் கெட்ட வார்த்தையால் திட்டிய ராசியோ என்னவோ இந்த ஐந்தாவது முறையில் விருதை வென்றே விட்டார் டிகாப்ரியோ. தி ரெவனெண்ட் திரைப்படத்திற்காக 'சிறந்த நடிகர்' பிரிவில் கிடைத்த விருது அது. அவருடைய தொடர்ந்த ஆர்வத்திற்கும் அர்ப்பணிப்பிற்குமான சரியான பரிசு என்றும் சொல்லலாம்.

தி ரெவனெண்ட் - 19-ம் நூற்றாண்டின் காலக்கட்டத்தில் நிகழும் கதை. மிருகங்களின் தோலுக்காக வேட்டையாடும் வெள்ளையர்களுக்கும் செவ்விந்திய பழங்குடி  இனத்தவருக்கும்  இடையிலான சண்டையின் பின்னணியில் ஒரு தனிமனிதனின் உயிர்வாழும் வேட்கையையும் துரோகத்திற்காக பழிவாங்கும் அவனின் இடைவிடாத துரத்துதலையும் கொண்ட உக்கிரமான பாத்திரத்தில் அசத்தியிருந்தார் டிகாப்ரியோ.

'அப்பாடா! இப்பவாவது கொடுத்தீங்களேடா... என்று விருதை வாங்கிக் கொண்டு நகர்ந்து விடாமல் சமகாலத்தின்  அரசியல் பிரச்சினை குறித்து ஏற்புரையில் டிகாப்ரியோ பேசியதுதான் முக்கியமான விஷயமே.

 'புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை.  சூழலை  மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர்களை,  புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும்,  உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும்,  கோடான கோடி  ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர்களை, நாம் ஆதரித்து ஆக வேண்டும்.”

***

தி ரெவனெண்ட் திரைப்படம் 'சிறந்த இயக்குநர்' மற்றும் 'சிறந்த ஒளிப்பதிவு' ஆகிய பிரிவுகளிலான விருதையும்  வென்றது. இதன் இயக்குநரான அலெஹாந்த்ரோ கான்சலஸ் கடந்த ஆண்டும் ''The Birdman' என்கிற திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'Spot Light' வென்றது. கிறிஸ்துவ பாதிரிமார்கள் சிறார்களின் மீது நிகழ்த்தும் பாலியல் குற்றங்கள் நீண்ட காலமாக மறைத்து வைக்கப்பட்டிருக்க, புலனாய்வு பத்திரிகையின் குழு ஒன்று அந்தக் குற்றங்களை தோண்டி எடுக்கிறது. உண்மைச் சம்பவங்களையொட்டி உருவான  இத்திரைப்படம் ஆறு பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தாலும் 'சிறந்த திரைப்படம்' மற்றும் 'சிறந்த அசல் திரைக்கதை' ஆகியவற்றில் விருது பெற்றது.

டிகாப்ரியோவைத் தவிர இந்த வருடத்தில் விருது பெற்ற இன்னொரு மிக மிக முக்கியமான நபர் என்று இத்தாலிய இசையமைப்பாளர்  என்னியோ மாரிக்கோனைச் சொல்ல வேண்டும். 'A Fistful of Dollars' போன்ற வெஸ்டர்ன் திரைப்படங்களில் கேட்ட, புல்லாங்குழலின் உன்னதத்திற்கு இணையான மெல்லிய விசில் சப்தமும்  தூரத்தில் ஒலிக்கும் தேவாலய  மணியோசையும் உங்கள் நினைவுக்கு வருகிறதா? உலகத்திலுள்ள மிக முக்கியமான பின்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இவரைக் கொண்டாடுகிறார்கள்.  கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளராாக விளங்கினாலும், கடந்த வருடங்களில் ஐந்து முறை நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் திரைப்படத்திற்காக  இவர் வாங்கிய முதல் ஆஸ்கர் விருது இதுதான் எனும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இவருக்கு 2007-ல் கெளவர விருது வழங்கப்பட்டிருந்தது.

டோரண்ட்டினோவின் 'The Hateful Eight' திரைப்படத்தின் அபாரமான பின்னணி இசைக்காக மாரிக்கோன் இந்த விருதைப் பெற்றார். இத்திரைப்படம் மூன்று பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தாலும் பின்னணி இசைப் பிரிவில் மட்டுமே விருது வென்றது உலகமெங்கிலும் உள்ள டோரண்ட்டினோ ரசிகர்களுக்கு ஏமாற்றமாயிருந்திருக்கலாம். என்றாலும் மாரிக்கோன் பெற்ற விருது முழுமையான மகிழ்ச்சியை அளித்திருக்கும்.

***

இந்த வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான விருதுகளை தட்டிச் சென்றது Mad Max: Fury Road. ஆறு விருதுகள். அனைத்துமே நுட்பம் சார்ந்த துறையிலானது. ஆண் நாயகர்களே ஆதிக்கம் செலுத்தும் ஹாலிவுட்டில் ஒரு பெண் நாயகியாக நிகழ்த்தும் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளைக் கொண்ட திரைப்படம். பெண்ணிய அடையாளத்தை பிரதானமாகக் கொண்ட சாகச திரைப்படம் எனலாம். வருங்காலத்தில் நீர் ஆதாரங்களை கைப்பற்றுபவரே  வல்லரசாக இருக்க முடியும் என்கிற அரசியலை பரபரப்பான சாகசக் காட்சிகளோடு விவரிக்கிறது. பத்து பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்தது.

சிறந்த நடிகைக்கான விருது பிரி லார்சனுக்கு 'தி ரூம்' என்கிற திரைப்படத்திற்காக கிடைத்தது. ஆணாதிக்க விளைவினால் உருவாகும் குடும்ப வன்முறையில் குழந்தைகள் பாதிக்கப்படும் துயரத்தை பதிவு செய்த திரைப்படம். தன்னுடைய இளம் வயது மகனுடன் சுமார் ஏழு ஆண்டுகள் ஓர் அறையில் அடைத்து வைக்கப்படுகிறார் ஜாய். அவளுடைய கணவன்தான் அந்தக் கொடுமையை செய்கிறார். அந்த துயரம் மகனை பாதித்து விடக்கூடாதே என்பதற்காக ''அந்த அறை'தான் உலகம் என்று அவனை நம்ப வைக்கிறார் ஜாய். பிறகு வெளியுலகைக் காண நேரும் அந்தச் சிறுவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களோடு படம் தொடர்கிறது.

சிறந்த துணை நடிகருக்கான விருதை மார்க் ரைலான்ஸ் பெற்றார். ஸ்பீல்பெர்க் இயக்கிய 'பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்' என்கிற திரைப்படத்தில் அமெரிக்காவில் சிக்கிக் கொள்ளும்  ரஷ்ய உளவாளியாக இவர் நடித்திருந்தார். உயிர்  பறிக்கப்படவிருக்கும் நெருக்கடியான நேரத்திலும் அந்தச் சூழலை தத்துவார்த்தமாக வெளிப்படுத்தும் பாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். சிறந்த துணை நடிகைக்கான விருது 'தி டானிஷ் கேர்ள்' படத்தில் நடித்த அலிசியா விக்காண்டருக்கு சென்றது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது  ‘தி பிக் ஷார்ட்’ படத்திற்கு வழங்கப்பட்டது.

***

பலரும் எதிர்பார்த்தபடி சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை டிஸ்னியின்  'இன்சைட் அவுட்' தட்டிப் பறித்தது. கோபம், பயம், சந்தோஷம் போன்ற உணர்வுகளுக்கு உருவம் தந்து அவை சிறுமி ரைலியின் தலைக்குள் எப்படியெல்லாம் செயலாற்றுகின்றன என்பதை வேடிக்கையாகவும் அதே சமயத்தில் பொருள் பொதிந்ததாகவும் உருவாக்கியதற்காகவே இப்படத்தை வரவேற்கலாம். பெரியவர்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.

சிறந்த அயல் நாட்டு திரைப்படமாக ஹங்கேரியின் ‘சன் ஆஃப் சால்’ விருது பெற்றது. சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருது ‘எக்ஸ் மெஷினா’ படத்துக்கு கிடைத்தது.

நிகழ்ச்சி தொகுப்பாளர்களுள் ஒருவராக நம்மூர் பாலிவுட்டின் தங்கத் தாரகையான பிரியங்கா சோப்ரா இருந்தார் என்கிற அளவோடு நாம் திருப்தியடைய வேண்டியதுதான்.

***


ஆஸ்கர் விருதுகளின் தேர்வில் நீண்டகாலமாக வெளிப்படும் நிறவெறி அரசியல் பற்றிய கண்டனங்கள் இந்த வருடமும் எழுந்தன. நடிகர் வில் ஸ்மித், சில்வஸ்டர் ஸ்டோலோன் நடித்த ''கிரீட்' திரைப்படத்தின் இயக்குநர் ரியான் கூக்ளர் போன்ற கறுப்பினக் கலைஞர்கள் இந்த வருட விழாவை புறக்கணித்தது நெருப்பில்லாமல் புகையாது என்பதை சுட்டிக் காட்டியது.

ஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் தேர்வு செய்து அனுப்பப்பட்ட மராத்திய திரைப்படமான 'கோர்ட்' , சிறந்த படமாக இருந்தாலும் நாமினேஷன் பட்டியலைக் கூட எட்டவில்லை. அடுத்த வருடமாவது நமக்கு ஆஸ்கர் வடை கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

(குமுதம் 06.03.2016 தேதியிட்ட இதழில் வெளியானது - நன்றி: குமுதம்)

suresh kannan

Sunday, March 13, 2016

Brooklyn (2015) - பெண்களை புரிந்து கொள்வது எளிதல்ல


 
சமீபத்திய அகாதமி விருதில் சிறந்த திரைப்படம்/நடிகை/தழுவல் திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் நாமினேட் ஆகியிருந்த 'ப்ரூக்லின்' என்கிற திரைப்படம் பார்த்தேன்.

வாவ்....என்னவொரு திரைப்படம் இது?

இதில் சித்தரிக்கப்படும் சில சம்பவங்கள் ஏறத்தாழ அந்தரங்கமாக என்னுடன் பொருந்தியிருந்ததால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில்தான் பார்க்க முடிந்தது. படம் பார்க்கும் தருணம் முழுவதிலும் என் கைகள் இருக்கையின் கைப்பிடியை அழுந்த பிடித்திருந்ததை அவ்வப்போது உணர்ந்து விலக்கிக் கொண்டேன்.

பொருளீட்டுவதற்காக தனிநபர்கள் அந்நிய பிரதேசத்திற்கு செல்லும் துயரம் இதில்  பதிவாகியிருக்கிறது. ஆண்களே உள்ளுற அச்சப்படும் இந்த விஷயத்தில் பெண்கள் எவ்வாறு உணர்வார்கள்? அதிலும் ஓர் இளம்பெண்?

***

வருடம் 1952. அயர்லாந்தின் ஒரு சிறிய நகரத்திலிருந்து அமெரிக்காவின் ப்ரூக்லின் நகரத்திற்கு செல்கிறாள் எல்லிஸ். புலம்பெயர்பவர்களுக்கேயுரிய ஹோம் ஸிக்னெஸ் அவளை வாட்டுகிறது. வயதான தாயும் உயிருக்கு உயிரான சகோதரியும் கடல் கடந்து நீண்ட தூரத்தில் இருக்கும் பிரிவு அவளுக்கு துயரத்தை தருகிறது. மெல்ல அங்குள்ள நடைமுறைக்கு பொருந்தி வரும் அவள் ஓர் இத்தாலிய இளைஞனை சந்திக்கிறாள். தன்னுடைய பிரிவுத் துயரத்தை அவனுடைய அன்பின் மூலம் கடக்கிறாள்.

எல்லிஸ்ஸின் சகோதரி இறந்து போகும் தகவல் கிடைக்கிறது. பிறந்த இடம் திரும்ப நினைக்கிறாள். அவள் திரும்பி வருவாளோ என்கிற அச்சம்  அவளுடைய காதலுனுக்கு. திருமணம் செய்து விட்டுப் போ என்கிறான். 'அலைபாயுதே' பாணியில் ரகசிய திருமணம்.

அயர்லாந்து திரும்பும் எல்லஸுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கின்றன. அவள் சகோதரி பணிபுரிந்த இடத்தில் இவளும் பணிசெய்ய நேர்கிறது. ஒருபணக்கார ஐரிஷ் இளைஞன் எல்லிஸ் பால் கவரப்படுகிறான். இருவரையும் இணைத்து திருமண பேச்சுகள் கிளம்புகின்றன. இந்த திருமணத்தை எல்லிஸ் தாய் மிகவும் எதிர்பார்க்கிறாள். இதன் மூலம் தன்னுடைய மகளுக்கு பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும் என்பது அவளுடைய நோக்கம்.

தற்காலிகமாக அங்கு தங்கி விட்டு பின்பு ப்ரூக்லின் திரும்பி விடலாம் என நினைத்துக் கொண்டிருக்கும் எல்லிஸ்-ஸின் மனம் சஞ்சலமடைகிறது. இந்த அதிர்ஷ்டமான விஷயங்கள் எல்லாம் அவள் ப்ரூக்லினுக்கு போகும் முன் கிடைத்திருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? அவளுடைய காதலனுடைய (கணவன்) கடிதங்களை வாசிக்காமல் அப்படியே வைக்கிறாள். இங்கேயே தங்கி விடலாம் என்பது அவளுடைய நோக்கமா என்ன?

பெண்கள் காதல்  போன்ற உணர்வுகளுக்கு அத்தனை எளிதில் அடிமையாவதில்லை. அதை விடவும் தங்களின் பாதுகாப்பான மற்றும் நிலையான வாழ்விற்கே அவர்கள் முன்னுரிமை தருவார்கள். இதற்காக அவர்கள் தங்களின் காதலுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பது பொருள் அல்ல. இதை ஒரு பெண்ணின் நோக்கில்தான் புரிந்து கொள்ள  முடியும். அவர்கள் தங்களின் காதலுக்கு உண்மையாக இருப்பதை விடவும் மற்ற உறவுகளை இணைத்த ஒட்டுமொத்த சூழலையே கணக்கில் கொள்கிறார்கள். எல்லிஸ் தன்னுடைய தாயை நன்றாக கவனித்துக் கொள்வதற்கு அந்த வசதியான வாழ்க்கை தேவை என்று ஒருவேளை அவள் முடிவெடுத்திருக்கலாம்.

என்றாலும் இந்த தருணத்தில் எனக்கு எல்லிஸ் மீது கோபமும் அதே சமயம் பரிதாபமும் வந்தது. ஓ.. எல்லிஸ்.. என்ன இருந்தாலும் நீ இதை செய்யக்கூடாது?

எல்லாம் கூடி வரும் நேரத்தில் ஒரு கலகம் நடக்கிறது. எல்லிஸ்  பணிபுரிந்த முன்னாள் நிறுவனத்தின் பெண் உரிமையாளர், ப்ரூக்லினுள் உள்ள அவரது உறவினர் மூலம் எல்லிஸ்-ஸின் திருமணத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். எனவே இதைப் பற்றி எல்லிஸிடம் ரகசியமாக விசாரிக்கிறார். சினமும் குற்றவுணர்வும் அடையும் எல்லஸூக்கு அந்த விசாரிப்பு திகைப்பைத் தந்தாலும் குழப்பத்திலிருந்து விலகி தெளிவான முடிவை எடுக்க ஒரு சந்தர்ப்பத்தை தருகிறது. தன் தாயிடம் உண்மையை சொல்லி விட்டு ப்ரூக்ளினுக்கு செல்கிறார்.

அவளுடைய காதலனை சந்திக்கும் அந்த இறுதிக் காட்சி.. ஓ.. என்னவொரு காட்சி அது. ஏறக்குறைய நான் அழுது விட்டேன். எல்லிஸ் இந்த முடிவை எடுத்திருக்காவிடில் அவளை நான் மன்னித்திருக்க மாட்டேன்.

***

இத்திரைப்படம் பெண்களின் மிக பிரத்யேகமான குணாதிசயங்களை மிக நுட்பமாக யதார்த்தமாக விவரிக்கிறது. பெண்கள் திருமணமாகி ஒரு புதிய சூழலானது, ஏறத்தாழ பொருளீட்டுவதற்காக இன்னொரு பிரதேசத்திற்கு செல்லும் அதே சூழல்தான். புதிய இடம். புதிய மனிதர்கள். முதலில் அச்சமும் படபடப்புமாய் இருந்தாலும்  பிறகு மெல்ல மெல்ல அந்த சூழலில் அவர்கள் தங்களை கச்சிதமாகப் பொருத்திக் கொள்கிறார்கள். அந்த இடத்தையே பிரகாசமாக ஆக்கி விடுகிறார்கள். பிறகு அவர்கள் நினைத்தால் கூட அந்த இடத்தை பிரிய முடியாத அளவிற்கான பந்தம் ஏற்படுகிறது.

எல்லிஸ்-ஸூக்கு ஏற்படும் இந்தச் சம்பவங்கள் மூலம் இதை தெளிவாக உணர முடிகிறது. Colm Tóibín என்கிற ஐரிஷ் நாவலாசிரியர் எழுதிய படைப்பிற்கு அற்புதமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் Nick Hornby. இயக்கம்: John Crowley.

எல்லிஸாக நடித்திருக்கும் Saoirse Ronan வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது சம்பிதாயமாக இருந்தாலும் அது மிகையல்ல. சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றுமளவிற்கு தன்னுடைய பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.

***

ப்ரூக்ளின் திரும்பும் எல்லிஸ் கப்பலில் தன்னைப் போலவே புதிதாக செல்லும் ஓர் இளம் ஐரிஷ் பெண்ணுக்கு தனக்கு முன்னர் கிடைத்த உபதேசங்களை சொல்கிறார் - இறுதிக் காட்சியில்.


'அங்கு நிறைய ஐரிஷ் மக்கள் இருப்பார்கள் அல்லவா? என்னுடைய வீடு போல அந்த இடத்தை உணர முடியுமா? - புதிய பெண் கேட்கிறாள்.

"ஆம். அங்கு வீடு போல உணர முடியும்" - எல்லிஸின் பதில். கவனியுங்கள், அவள் திருமணம் செய்திருப்பது அவளுடைய கலாசாரத்திற்கு முற்றிலும் அந்நியமான ஒரு இடத்தில், முற்றிலும் அந்நியக் கலாசாரத்தை சேர்ந்த ஓர் இத்தாலிய இளைஞனை.

ஓ.. இந்தப் பெண்கள்.... :)

suresh kannan

Saturday, March 05, 2016

பீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்



 

மனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். அந்தந்த கணத்தின் பரபரப்பான நிகழ்வுகளை, சர்ச்சைகளை ஒரு சுவிங்கம் போல் மென்று அதன் சுவை கரைவதற்குள்  துப்பி விட்டு அடுத்த சுவிங்கத்தை நோக்கி ஓடும் செய்தி ஊடகங்களின் பரபரப்பான பாணியை இணைய வம்பாளர்களும் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். ஆனால்  விசையை முடுக்கினாற் போல் அதிலொரு மாற்றம் சமீபத்தில்  நிகழ்ந்தது.   தமிழகத்தின் நான்கைந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொழுதுபோக்கு உரையாடல்களும் வம்புகளும் சட்னெ்று நின்று போய் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணிகளும் உதவி கோருதலும் பெறுதலுமாக சூழல் பரபரப்பாக மாறிற்று. இது ஆக்கப்பூர்வமான பரபரப்பு. இணைய மொண்ணைகள் என்று பொதுவான எள்ளலில் குறிப்பிடப்படும் இவர்களால்தான் பெரும்பாலான பாதிக்கப்பட்ட நபர்கள் தக்க நேரத்தில் உதவி பெற்றார்கள், காப்பாற்றப்பட்டார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒரு சமூக  நிகழ்வு.

நான்கைந்து நாட்கள் நீடித்த இந்த நல்ல மாற்றத்தை மீண்டும் தலைகீழாக்கியது ஒரு பாடல் மீீதான சர்ச்சை. தமிழகம் இயல்பு நிலைக்கு மாறியதோ இல்லையோ, இணைய உலகம் அதன் 'இயல்பு நிலைக்கு' சட்டென்று திரும்பி விட்டது. வெள்ள சேதம் ஏற்பட்டதற்கான அரசியல் காரணங்களும் அது சார்ந்த கோபங்கள், உரையாடல்கள் அனைத்தும் சர்ச்சைப் பாடலின் மீதான வம்பு வெள்ளத்தில் மூழ்கியது. இந்தப் போக்கு நம் கலாசார பலவீனங்களில் ஒன்று எனத் தோன்றுகிறது.

இந்த சர்ச்சை தொடர்பான விவரங்கள் என்னவென்று தெரியாதவர்களுக்காக (அப்படி எவரேனும் உள்ளாார்களா என்ன?) அதைப் பற்றிப் பார்ப்போம். தமிழகத்தின் மாவட்டங்கள் வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்டு அதனிடமிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் போது இணையத்தில் ஒரு பாடல் வெளியாகிறது. பாடியவர் நடிகர் சிம்பு எனவும் இசையமைப்பாளர் அனிருத் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.. பாடலின் முதல் வரியிலேயே பெண்களின் அந்தரங்க உறுப்பைச் சுட்டும் கொச்சையான வார்த்தை ஒன்று உபயோகப்படுத்தப்பட்டு நடுவில் உள்ள ஓர் எழுத்து மாத்திரம் பீஃப் ஒலியால் மூடப்பட்டிருந்தது. என்றாலும் அது என்ன வார்த்தை என்று கேட்கும் பெரும்பாலோனோர்க்கு எளிதாகவே புரியும். அதுதான் அதன் நோக்கமும் கூட என்று தெரிகிறது.

பொதுவாக இணையத்தில் உரையாடப்படும் சர்ச்சைகள் இணைய அளவிலேயே உயர்ந்தெழுந்து அடங்கி ஓய்ந்து விடும். ஆனால் இந்த சர்ச்சையின் மீதான எதிர்ப்பு இணையத்தையும் தாண்டி சமூக வெளியிலும் கடுமையாக பிரதிபலித்தது.  மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய இயக்கம் போன்றவர்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்த்துமளவிற்கு சென்றது. காணொளி ஊடகங்களில் செய்தியாளர்களும் கனவான்களும் கொதிப்புடன் இதைப் பேசி பேசி மாய்ந்தார்கள். சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களையும் தூக்கில் போட வேண்டும், தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற ஆவேசமான குரல்கள எழுந்தன. இது தொடர்பான பல வழக்குகள் ஒருபுறம் தொடுக்கப்பட மற்றொரு புறம் காவல்துறை விசாரணயும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சர்ச்சையையொட்டி பொதுச் சமூகத்தின் இந்த அதீதமான எதிர்ப்பு பாசாங்கிற்குப் பின்னால் உள்ள உளவியலையும் இது போன்ற ஆணாதிக்கச் செயற்பாடுகளின் பின்னே உறைந்திருக்கும் சமூகவியல் காரணங்களையும், அறிவுசார் சமூகம் இது போன்ற சர்ச்சைகளை கையாள வேண்டிய நிதானத்தைப் பற்றியும் என்னளவில் சொல்ல முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். தவறிழைப்பவர்களை காப்பாற்றுவதோ அல்லது இது போன்ற கீழ்மைகளை ஊக்குவிப்பதோ அல்ல. இது போன்ற ஆணாதிக்கத் திமிரினால் எழும் செயற்பாடுகள் பெண்களின் மீது செலுத்தப்படும் மனம்/உடல் சார்ந்த வன்முறைகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் மேலதிக காரணமாகி நிற்கின்றன என்கிற பிரக்ஞை இல்லாமல் இல்லை. என்றாலும் ஒரு Devil's advocate-ன் குரலை மனச்சாய்வற்ற நீதியொன்று கவனிப்பதைப் போல இந்தச் சர்ச்சையின் மீதான மறுபக்க நியாங்களையும் பற்றி நாம் நிதானமாக கவனிக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒருவகையில் இந்தச் சர்ச்சை மீது எழுந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அதீதமான எதிர்ப்பும் அதிலுள்ள போலித்தனங்களும் பாசாங்களுமே இதை எழுதத் தூண்டியது. இந்த அதிகமான எதிர்ப்பே இந்தப் பாடலின் மீதான அதிக கவனத்தைக் குவித்து விட்டதோ என்பதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

***

திரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாச வரிகளால், வார்த்தைகளால் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து அடங்குவது நமக்குப் புதிதான விஷயமல்ல. ஆனால் இந்த குறிப்பிட்ட சர்ச்சையில் ஏறக்குறைய சமூகத்தின் அனைத்து தரப்பும் இந்த எதிர்ப்பில் ஒன்றிணைந்து  மிக கடுமையான அளவிற்கு பரபரப்பு எழுவது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இது போன்ற சர்ச்சைகளில் பொதுப்புத்தி சார்ந்தவர்களின் நிதானமற்ற உடனடி ஆவேசம் எவ்வாறிருக்கும் என்பது புதிதானதல்ல. 'திருடன் பராபஸை விடுதலை செய், இயேசுவை சிலுவையில் ஏற்று' என்கிற கூக்குரலிட்ட வேதாகம காலத்திலிருந்து பொதுமக்களின் நிதானமற்ற எதிர்வினைகளுக்கான வரலாற்று உதாரணங்கள் நிறைய உள்ளன. பொதுப்புத்தியின் நிதானமற்ற, உடனடியான கண்மூடித்தனமான எதிர்ப்பு காலங்காலமாக எவ்வாறு இருக்கிறது என்பதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஆனால் இது போன்ற நெருக்கடியான சூழல்களை நிதானத்துடன் அணுக வேண்டிய அறிவுசார் சமூகமும் இந்தச் சர்ச்சையையொட்டி பொதுப்புத்தியுடன் இணைந்து கொண்டது ஆபத்தான போக்கு. இவர்களின் நோகக்கில் சமநிலை தவறிய சிலபல எதிர்வினைகளை கவனிக்க நேர்ந்தது. மற்ற சமயங்களில் நிதானத்துடன் அவற்றின் பல்வேறு பரிமாணங்கள் சார்ந்து சிந்திக்கும் இந்த அறிவுஜீவிகள் இந்தச் சர்ச்சையை ஏன் மிகையுணர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள் என்று எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரின் வீட்டுப் பெண் கலைஞர்கள் நடனமாடினால் இந்தப் பாடலுக்கு குறிப்பாக அந்த சர்ச்சையான வார்த்தைக்கு எவ்வாறு அபிநயம் பிடிப்பார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் ஓர் ஆவேசமான கட்டுரையை எழுதினார் ஒரு பெண்ணிய எழுத்தாளர். இணையத்தில் ஒருபக்கம் அதற்குப் பலத்த வரவேற்பும் மறுபுறம் கண்டனங்களும் இருந்தது. அந்தப் பெண்களும் ஆணாதிக்கப் போக்கினால் பாதிக்கப்படுவர்களாக (Victim) இருக்கலாம், அதனாலேயே அவர்களின் எதிர்வினைகள் மெளனமாகி அல்லது அடங்கிப்  போயிருக்கலாம் என்கிற யூகத்தின் மீதான சந்தேகத்தின் பலனைக் கூட தராமல் குற்றஞ்சாட்டிருக்கப்பட்டவர்களின் உறவினர்களை முன்முடிவுடன் கடுமையாக விமர்சித்த போக்கை என்னவென்பது? இன்னொரு பெண்ணிய எழுத்தாளர் - அவர் உளவியலாளரும் கூட - பாடலின் முதல் வார்த்தை தொடர்பான விமர்சனத்தை வைத்து விட்டு, இது  போன்ற கயவர்களை புறக்கணித்து விட்டு  நம் வேலையைப் பார்ப்போம் என்று முகநூலில் எழுதுகிறார். கயவர்களும் சமூகத்திலிருந்து உருவாகிறவர்கள்தான். அதன் ஒரு பகுதியாக இருப்பவர்கள்தான். ஒரு மனிதன் கயவனாவதற்கு பின்னணியிலுள்ள உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்களைப் பற்றி அந்த உளவியலாளருக்கு தெரியாதா? அவரும் இந்த தருணத்தில் பொதுப் புத்தியைச் சார்ந்த எதிர்வினையையே ஏன் செய்கிறார்? இந்த மனோபாவத்தில் அமையும் இவருடைய முன்முடிவுகள் சிகிச்சையாளர்களைப் பாதிக்காதா?

இது போன்று மேலும் சில உதாரணங்களை மேற்கோள் காட்ட முடியும். எந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதையே தனது சமீபத்திய புதினத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதுவது போல் விதம்விதமாக பட்டியல் போன்று எழுதிச் சென்ற ஒரு 'பின்நவீனத்துவ' எழுத்தாளர் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தின் முன்னணியில் நின்று ஆவேசமாக உரையாடியது ஒரு சுவாரசியமான முரண்நகை. இவரே அளித்துக் கொண்ட தன்னிலை விளக்கத்தில் 'நான் கூட இது போன்ற வார்த்தைகளை என் நாவலில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றை குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை' என்கிறார். புத்தகங்களுக்கு சென்சாரை எப்போது கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை. முன்பு சில பெண்ணிய எழுத்தாளர்கள் தங்களின் அந்தரங்க உடல் உறுப்புகளையே பிரதானமாகக் கொண்டு கவிதைகள் எழுதினார்கள். உடலரசியல் சார்ந்த  கோபம் அதில் இருந்தது. 'ஆணாதிக்க மனோபாவத்தை நோக்கி.. இந்த உறுப்புகளை வைத்துத்தானே எங்களைச் சீண்டுகிறீர்கள். கிண்டலடிக்கிறீர்கள்... இதோ நாங்களே எங்கள் படைப்புகளில் முன்வைக்கிறோம்.." என்பது போன்ற கலகமும் அறச்சீற்றமும் அவற்றில் இருந்தன. ஆனால் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் கவன ஈர்ப்பிற்காகவும் காமம் சார்ந்த கிளர்ச்சியை மட்டும் தூண்டும் பின்நவீனத்துவப் போலிகளும்  இந்தச் சர்ச்சை எதிர்ப்பில் கலந்து கொண்டதுதான் நகைச்சுவை.

***

இணையத்தில் வெளிவந்த அல்லது கசியவிடப்பட்ட அந்தப் பாடல், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட் ஒரு சினிமாப்பட பாடலோ அல்லது தனியார் ஆல்பத்தின் பாடலோ அல்ல. அது டம்மியாக உருவாக்கப்பட்ட பாடல் என்கிறார்கள். அதனுடன் தொடர்புள்ளதாக சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர்களின் பெயர்கள் இருந்தாலும்  அனிருத் இதற்கு தான் இசையமைக்கவில்லை என்று மறுத்து அல்லது ஒதுங்கி விட்ட நிலையில் சிம்பு இதை தான் பாடியதாக ஒப்புக் கொள்கிறார். ஆனால் தன்னுடைய அந்தரங்கமான சேமிப்பிலிருந்த பல பாடல்களில் ஒன்றான இதை எவரோ திருடி இணையத்தில் வெளியிட்டு விட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார். அனிருத் மற்றும் சிம்பு ஆகியோர் இருவர் மீதும் இது போன்ற சர்ச்சைகளின் மீதான குற்றச்சாட்டுகள்ஏற்கெனவே இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட சர்ச்சையில் அது சிம்பு தரப்பால்தான் இணையத்தில் வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்படாத சூழலில் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்துதான் ஆக வேண்டும். அது நிரூபிக்கப்படுவதற்குள் சமூகமே இணைந்து தர்மஅடி போடுவது தர்மமே ஆகாது. அத்தனை பெரிய அரசு இயந்திரத்தை கையில் வைத்திருக்கும் சமகால ஆளுங்கட்சியே தம்மை  விமர்சித்த 'நட்ராஜ்' என்பவர் எவர் என்பதை சரியாக ஆராயமலேயே நடவடிக்கை எடுத்த கேலிக்கூத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நிதானமான விசாரணைகளின் மீது உருவாகும் நீதிதான் ஏறத்தாழ சரியானதாக இருக்கும்.

இந்தப் பாடலை நடிகர் தரப்பே வெளியிட்டு விட்டு பின்பு இத்தனை கடுமையான எதிர்ப்பை எதிர்பார்க்காததால் மறுக்க விரும்புகிறார்களோ என்கிற ஐயம் எழுந்தாலும் கூட 'தாங்கள் நிரபராதிகள்' என்கிற அவர்களின் முறையீட்டை நிதானமாக பரிசீலிப்பதே முறையானது. தமிழகமே வெள்ள சேதத்தினால் தத்தளிக்கும் சமயத்தில் இந்தப் பாடலை வெளியிட எத்தனை திமிர் இருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. ஒருவேளை இது நடிகர் தரப்பினால் விளம்பர நோக்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்த அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் தமது வணிக நடவடிக்கைகளை பாதிக்கும் என்பது கூடவா அவர்களுக்குத் தெரிந்திருக்காது?. 'எனக்கு இழுக்கு தேடித்தரவே எவரோ இதை திருடி வெளியிட்டுள்ளனர்' எனறு நடிகர் கூறும் விளக்கமும், இந்தப் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிடப்பட்டதை வைத்துப் பார்க்கும் போது சரிதானோ என்று தோன்றுகிறதா இல்லையா? மழை வெள்ள அபாயத்தை சரியாக நிர்வகிக்காத ஆளுங்கட்சிக்கு எதிராக  மக்களுக்கு இயல்பாக எழுந்த கோபத்தை திசை திருப்புவதற்காகவே இந்தப் பாடல் வெளியிடப்பட்டது என்றெழுகிற இன்னொரு யூகத்திற்கான சாத்தியக்கூறு இருந்தாலும் அது தொடர்பான குற்றவாளியைத்தானே தேட வேண்டும்?  எந்தவொரு குற்றச்சாட்டையும் 'இது எதிர்க்கட்சிகளின் சதி' என்று மறுக்கிற அரசியல்வாதிகளின் நகைச்சுவைப் போக்கையும் இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது.

தன்னுடைய அந்தரங்கச் சேமிப்பிற்காக என்றாலும் சிம்பு ஏன்  இது போன்ற பாடலைத் தயாரிக்க வேண்டும்? தனி மனித சுதந்திரப்படி இதைக் கேட்க யாருக்குமே உரிமை கிடையாது. பொதுச் சமூகத்திற்கு முகமூடியணிந்த நல்ல முகத்தைக் காட்டும் நம்முடைய அந்தரங்கத்தில் சமூகத்தால் கீழ்மைகளாக கருதப்படுபவைகள் சிலவற்றின் மீது இச்சையுள்ளது. ஏற்கெனவே பாலியல் வறட்சியால் குமையும் இது போன்ற சமூகத்தில் வேறு எவருக்கும் துன்பம் தராமல் அந்தரங்கத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் செயல்களின் மூலமாக அது சார்ந்த மன அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு என்பதே உளவியல் ரீதியிலான கருத்து. சமூகத்தின் பாலியல் குற்றங்கள் குறையும் நோக்கில் இதற்கான அவசியமும் உள்ளது. மேலும் இந்தப் பாடலின் துவக்கத்திலுள்ள சர்ச்சையான வார்த்தையைத் தாண்டிச் சென்றால், இதரப் பகுதிகள் கொச்சையான வார்த்தைகளில் அமைந்திருந்தாலும் காதல் தோல்வி அடைந்த இளைஞனை நோக்கி 'பெண்களை திட்டாதே.. உன்னையே திட்டிக் கொள்.. உனக்கேற்ற துணை வரும் வரை காத்திரு' என்பது போன்ற உபத்திரவமல்லாத உபதேசங்களே உள்ளன. '.இதற்குத்தானா பாபு?' என்கிறாள் மோகமுள் புதினத்தில் வரும் யமுனா. அதையேதான் வேறு வடிவில் கொச்சையான வார்த்தையில் கேட்கிறது இந்தப் பாடல்.

ஆனால் இந்த துவக்க வார்த்தையை மாத்திரம் வைத்து, அதிலும் இத்தனை பிரம்மாண்டமான சர்ச்சை எழுவதில் எத்தனை அபத்தமுள்ளது என்பதை சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் புரியும். நாம் எதனை பிரதானமாக அழுத்தம் தந்து கவனிக்கிறோம் என்பதும். 'காதலின் புதினத்தை வைத்து love anthem என்கிற தனிப்பாடலைக் கூடமுன்பு நான் உருவாக்கினேன், அதைப் பற்றி யாருமே பேசவில்லையே என்று சிம்பு தரப்பில் கேட்கப்படும் கேள்வியில் குறைந்த பட்ச நியாயம் உள்ளதுதானே? அனிருத் போல இதிலிருந்து விலகி ஓடி விடாமல், பொது மனோநிலையின் எதிர்ப்பை திருப்திப் படுத்தும் விதத்தில் ஒரு போலிக் கும்பிடு போட்டு விட்டு இந்தச்  சர்ச்சையை தாண்டி விட முயற்சிக்காமல் தன்னுடைய தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்ளும் அவரின் அந்த துணிச்சலைப் பாராட்டியேயாக வேண்டும். 'இதை நான்  இணையத்தில் வெளியிடாத போது, யாரோ செய்த தவறினால், என்னுடைய அந்தரங்கச் செயல் ஒன்றை எட்டிப் பார்த்து விட்டு ஏன் இப்படி குற்றஞ்சாட்டுகிறீர்கள், உங்களின் அந்தரங்கத்தை எவராவது வெளிப்படுத்தி விட்டு உங்களையே கண்டித்தால் ஒப்புக் கொள்வீர்களா?' என்று தனிமனித உரிமை நோக்கில் அவர் முன்வைக்கும் கேள்விகளில் நியாயம் உள்ளதா  இல்லையா என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்.

சிம்புவின் பிம்பம் என்பது இன்றைய நவீன சராசரி இளைஞனின் குறியீடு. சிம்பு  உண்மையான வாழ்விலும் சரி, திரையிலும் சரி, ஒரு காதலில் விழுவார். புலம்புவார். அது சார்ந்த வன்மத்தை எதிரொலிக்கும் பாடல்களை உருவாக்குவார். பிறகு இன்னொரு காதலில் விழுவார். அதிலும் மறுபடியும் தோல்வி..புலம்பல்.. எரிச்சல். இந்தக் குணாதிசயம் பெரும்பாலும் சமகால சராசரி இளைஞனுக்குப் பொருந்துபவை.  அவர்களில் பலர்  என்ன செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள். தாங்கள் காதலித்த பெண்ணை பிரச்சினை ஏற்படும் போது  ஆதாரங்களைக் காட்டி மிரட்டுகிறார்கள், பெண் சமூகத்தையே ஒட்டுமொத்தமாக திட்டிப் புலம்புகிறார்கள், இன்னும் சில குதர்க்க குணமுள்ள இளைஞர்கள் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டுகிறார்கள், சிலர் செய்தே விடுகிறார்கள். இன்று பொருளாதார ரீதியாக பெண்கள் சுதந்திரம் பெற்று மெல்ல வெளியே வருவதை நவீன ஆண் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. தன்னைச் சார்ந்து நின்ற உடமை தன்னுடைய பாதுகாப்பில் இருந்து வெளியேறி சுயசிந்தனைகளுடன் விலகுவதைக் கண்டு பதட்டமடைகிறது. சாலையில் ஸ்கூட்டியில் தன்னைக் கடந்து செல்லும் இளம் பெண்ணைக் கண்டு தன்னியல்பாக எரிச்சலைடந்து அந்தப் பெண்ணின் மீது மோதுவது போல் செய்வதோ அல்லது அவளைத் தாண்டிச் செல்ல முயல்வதோதான் இன்றைய நவீன இளைஞனின் அடையாளம். இவற்றையேதான் சமகால இளைய நடிகர்களின் திரைப்படங்களிலும் 'வெட்டுடா அவளை, குத்துடா அவளை' என்பது போன்று எதிரொலிப்பதைக் காண முடிகிறது.

இப்படியாக சமூகத்திலும் உள்ள ஆயிரம் சிம்புகளை நாம் எப்போது கண்டிக்கப் போகிறோம்? சினிமா என்பது இருமுனை கத்தி. அது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது; சமூகமும் சினிமாவின் கூறுகளை தன்னிச்சையாக பின்பற்றுகிறது. இதில் சமூகம் மாத்திரம் தன்னை மறைத்துக் கொண்டு  இன்னொரு முனையை மட்டும் எத்தனை காலத்திற்கு குற்றம் சொல்லப்  போகிறோம்? ஒரு நடிகரின் இன்னமும் நிரூபிக்கப்படாத தவறை வைத்து அவரை பொது எதிரியாக நிறுத்தி ஒன்று சேர்ந்து கடுமையாக கண்டிப்பதின் மூலம் ஆணாதிக்க உலகின் வக்கிரங்களையும் தவறுகளையும் மழுப்பிக் கொள்ளப் போகிறோமா?

திரிஷா அல்லது நயனதாரா என்றொரு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. முழுக்க முழுக்க ஆணாதிக்க வசனங்களாலும் வக்கிரமான காட்சிகளாலும் அது நிறைந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது. இன்றைய தமிழ் சினிமாவின் உடனடி பார்வையாளர்கள் இளைஞர்களே. அவற்றின் துவக்க வெற்றியை அவர்களே தீர்மானிக்கிறார்கள். எனில் ஆணாதிக்க மனோபாவமுடைய இளைஞர்கள் நிறைந்துள்ள சமூகத்தில் பிரபலமாக இருப்பதின் காரணத்தினாலேயே ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து கூடிக் கண்டித்தால் தீர்வு கண்டுவிட முடியுமா? இதில் என்ன வேடிக்கையென்றால் பாடலில் உள்ள சர்ச்சையான வார்த்தையை வழக்கமாக பொதுவெளியிலும் இணைய எழுத்திலும் கூசாமல் சொல்லும், எழுதும் இளைஞர்கள் கூட இந்த எதிர்ப்புக்  கூட்டத்தில் சேர்ந்து கொண்டு பாடலில் உள்ள ஆபாச வார்த்தையை விட மேலதிக வார்த்தைகளை அறச்சீற்றத்துடன் எதிர்ப்பு என்ற பெயரில் இறைத்ததுதான். நேற்றைய இளைஞர்கள்தான் இன்றைய பெற்றோர்கள். அவர்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலும் அந்த வயதுக்குரிய இது போன்ற  ஆணாதிக்க நோக்கிலான ஆபாசங்களை, தடுமாற்றங்களை செய்தவர்களாக இருப்பார்கள். பெரியவர்களாகிய பிறகும் தங்களின்  குடும்பங்களில் ஆணாதிக்க செயற்பாடுகளை இன்னமும் செய்பவர்களாக இருப்பார்கள். இப்படியாக சமூகச் சுழற்சியிலேயே ஆணாதிக்கம் சார்ந்த வன்முறையும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டிருக்கும் போது இது போன்ற ஒற்றை அடையாள எதிர்ப்பை பாசாங்குடன் செயற்படுத்துவதின் மூலம் அதைப் போக்க முடியுமா? இந்த நோய்க்கூறு மனநிலையின் ஆணிவேருக்கல்லவா சிகிச்சையைத் தேட வேண்டும்?

***

பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த ஒரு சில்லறைத் திருடன் பிடிபட்டு விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகிறது? அந்தப் பேருந்தில் உள்ள பெரும்பாலோனோர் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் அவரை தர்மஅடி போடுகிறோம். காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். தர்மத்தை நிலைநாட்டிய திருப்தியுடன் கலைந்து செல்கிறோம். ஆனால் அந்தப்  பேருந்தின் உள்ளேயே சில்லறை பாக்கியை ஒழுங்காக திருப்பித் தராத நடத்துநர் இருக்கலாம். இயன்ற அளவில் வருமானவரி ஏய்ப்பு செய்யும் ஆசாமி இருக்கலாம். லஞ்சம் வாங்கும் ஓர் அரசு ஊழியர் இருக்கலாம். தன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சிறுவியாபாரி இருக்கலாம். ஆக.. ஓர் அமைப்பிற்குள்ளே இத்தனை தவறான ஆசாமிகள் இருக்கும் போது ஒரு சில்லறைத் திருடனை ஒன்று சேர்ந்து தண்டிப்பதின் மூலம் தவறுகளை ஒழித்து விட்டதாக கருதிக் கொள்ளுதல் எத்தனை அறியாமை? சில்லறைத் திருடன் உருவாவதற்கான சமூகவியல் காரணத்தையும் உளவியல் காரணத்தையும் பற்றி ஆய்வதுதானே அறிவு சார்ந்த செயற்பாடாக இருக்க முடியும்?

சினிமாப் பாடல்களில், வசனங்களில், உடல்அசைவுகளில், நகைச்சுவைகளில் ஆபாசம் இருப்பதென்பது ஏதோ சமீபத்திய போக்கு அல்ல. அதிலுள்ள வணிக வாய்ப்பையும் அதிகமான லாபத்தையும் கண்டுகொண்டவுடனேயே அது பெருமளவு அதிகரித்து விட்டது.. 'நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்தக் கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.. என்று காமத்தை மிக கண்ணியமாகச் சொன்ன கண்ணதாசன்தான் 'கைக்கு அடக்கமா எடுத்துத் தின்ன வாட்டமா'" என்று 'எலந்தபயம்' பாடலையும்  எழுத நேர்ந்தது. "என்னம்மா..  நான் இத்தனை வருடங்களாக பாடலெழுதி வருகிறேன்.. அதில் எனக்கு கிடைக்காத புகழையெல்லாம்  நீ ஒரே பாடலில் பெற்று விட்டாயே.." என்று எல்.ஆர்.ஈஸ்வரியிடம் அவர் கேட்குமளவிற்கு அந்தப் பாடல் பொதுச்சமூகத்திடம் அபாரமான வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை நிகழ்ந்த ஆபாச பாடல்வரிகள், காட்சிகளையெல்லாம் பட்டியலிட்டால் இன்னொரு பெரிய தனிக்கட்டுரையாக எழுத வேண்டி வரும். சமூகத்தின் நேரடியான, மறைமுகமான ஆதரவு இல்லாமல் அவை  எல்லாம் எவ்வாறு இத்தனை காலமாக வெற்றி பெற முடியும்? இது போன்ற பாடல்களை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த வாலியை வலிக்காமல் அவ்வப்போது கண்டித்தாலும் 'வாலிபக் கவிஞர்' என்றுதானே இச்சமூகம் கொண்டாடியது? இந்தச் சர்ச்சையை திரைப்படப் பாடலாசிரியர்களின் கூட்டறிக்கை ஒன்று கண்டித்ததை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

மேற்கத்திய சமூகங்களைப் போல அந்தந்த வயதுக்குரியவர்களுக்கான தனித்தனி திரைப்படங்கள் எடுக்கும் வழக்கம் இங்கில்லை. எல்லாமே கூட்டுஅவியல்தான். சம்பிரதாயத்திற்காக A சான்றிதழ் வழங்கப்பட்டாலும் அவற்றை எல்லோரும் பார்க்கக்கூடிய நடைமுறைதான் இங்குள்ளது.  குழந்தைகள் படமென்றாலும் சாமிப்படங்கள் என்றாலும் கூட அதில் சாமர்த்தியமாக ஒரு ஆபாசப்பாடலை, காட்சிகளை வணிக நோக்கத்திற்காக செருகி விடும் திரைக்கதை வல்லுநர்கள் பலர் இங்குண்டு. மற்ற படங்களிலாவது அதை ஒழுங்காக காட்டித் தொலைக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சலித்துக் கொண்டபடி ஓர் ஆணின் முகமும் பெண்ணின் முகமும் அண்மைக்காட்சியில் நெருங்கி வருகிறது என்றால் உடனே இடையில் எங்கிருந்தோ ஒரு பூ வந்து ஆடி மறைத்துக் கொள்கிறது. நேரடியாக காட்டப்படும் கவர்ச்சியை விட தணிக்கைத் துறையை ஏமாற்றுவதற்காக இப்படி சாமர்த்தியமாக மழுப்பப்படும் காட்சிகள் அதிக ஆபத்தானது. அவரவர்களின் வக்கிரம் சார்ந்த கற்பனைகளைத் தூண்டும் மோசமான செயலையே இவை செய்கின்றன. பாலியல் சார்ந்த மனப்புழுக்கங்களை அதிகரிக்கின்றன.  நாகரிக உலகின் கட்டுப்பாடுகளின் படி அடக்கி வைக்கிற இந்த அழுத்தங்கள் பாலியல் வன்முறைகளாகவும் குற்றங்களாகவும் வெடிக்கின்றன.

ஒருவகையில் இந்தப்  பாடலில் ஒலிக்கும் பீஃப் ஒலியை ஊடகத் தணிக்கையின் மீதான எள்ளலான விமர்சனமாகவும் கொள்ளலாம். சினிமா வசனங்களில் ஒலிக்கும் ஆபாசமான, வார்த்தைகளை தணிக்கை செய்கிறேன் பேர்வழி என்று ஒலியை மாத்திரம் மழுப்பி அனுமதிக்கிறார்கள். ஆனால் திரையரங்குளில் இந்த மெளன இடைவெளிகளை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும் இளம் பார்வையாளர்கள் கூக்குரலிட்டு தங்களின் அங்கீகாரத்தை அதற்கு  வழங்குகிறார்கள். இந்த நோக்கில் பார்த்தால் தணிக்கைத் துறையின் அந்தச் செயலைப் போலவே சுயதணிக்கையுடன் வெளியான இந்தப்பாடலை இத்தனை கடுமையாக எதிர்ப்பதற்கான காரணம் என்ன? நாம் எதிர்க்க வேண்டியது தணிக்கைத் துறையின் அரைகுறையான இந்தப் போக்கையா அல்லது அதன் சிறு பங்கான இந்தப் பாடலையா? இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒருவேளை இவையெல்லாம் குதர்க்கமான வாதங்களாகத் தோன்றினாலும் நம் சமூகத்தின் பெரும்பான்மையான பகுதியே புரையோடிப் போயிருக்கும் போது ஒற்றை எதிர்ப்பின் மூலம் நாம் திருப்தி கொள்ளும் போக்கில் உள்ள அவல நகைச்சுவையைப் பற்றி  நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

***

இந்த ஆணாதிக்க எதிர்ப்புகளில் சார்புநிலை நோக்கில் அவரவர்களுக்குச் சாதகமான விதிகளும் உள்ளன. தன்னார்வலர்களால் நிகழ்த்தப்பட்ட வெள்ள  நிவாரண உதவிகளின் மீது சமகால ஆளுங்கட்சி தன்னுடைய தலைவரின் புகைப்படத்தை ஒட்டிக் கொள்வது தொடர்பாக கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த அசந்தர்ப்பமான சூழலில் செய்யப்பட்ட அராஜகமான சமூக அநீதி  அது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் இது சார்ந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பெண் முதல்வரின் புகைப்படம் உள்ளாடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு கேலிச்சித்திரம் இணையத்தில் உலா வந்தது. இதை அரசியல் சார்ந்த கோபம் என்று நியாயப்படுத்தி விடவே முடியாது. அரசியல் சார்ந்த எதிர்ப்புகளை, கோபங்களை ஜனநாயகம் அனுமதித்திருக்கும் விதங்களில் வெளிப்படுத்துவதுதான் முறையானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் பிரதிநிதியை கொச்சையாக சித்தரிப்பதென்பதும் ஆணாதிக்க செயற்பாட்டின் எதிரொலிதான். உலகெங்கிலுமுள்ள பெண் அரசியல் தலைவர்கள், அவர்கள் பெண் என்னும் காரணத்தினாலேயே அவர்கள் மீது அந்தக் கோணத்தில் எழும் ஆபாசமான கேலிச்சித்திரங்களையும் வம்புகளையும் நாம் காண்கிறோம். ஒரு பெண் அரசியல்வாதியின் மீது சித்தரிக்கப்பட்ட இந்த ஆபாசச் செயலை எந்தப் பெண்ணியவாதியோ, சமூக ஆர்வலர்களோ, பொதுச்சமூக நபர்களோ கண்டித்ததாக தெரியவில்லை. ஆணாதிக்கப் போக்கின் எதிர்ப்பின் நியாயம் அந்தந்த கோணங்களில் மாறுமா என்ன?

சரி. இவற்றிற்கெல்லாம் என்னதான் தீர்வு? இங்கு ஆண் சமூகத்திற்கும் பெண்  சமூகத்திற்கும் இடையில் ஒரு பிரம்மாண்டமான தடுப்புச் சுவர் உள்ளது. தாய்வழிச் சமூகம் தந்தை வழிச்சமூகமாக உருமாறிய ஆதிக்காலத்திலிருந்து இன்னமும் கரையாமல் அழுத்தமாக நிற்கும் சுவர் இது. எனவேதான் சுவற்றிற்கு மறுபக்கம் பார்க்கும் ஆவலும் அது சார்ந்த குற்றங்களும் வன்முறைகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெண்ணின் உடல் சார்ந்த வேதனைகளும் அவற்றின் பிரத்யேகமான பிரச்சினைகளும் வலிகளும்  ஆணுக்கு முறையாக அறிமுகப்படுத்தப்படவேயில்லை. எனவேதான் பெண் என்னும் சகஜீவியை அப்படியல்லாமல் உடல் சார்ந்த கிளர்ச்சிப் பண்டமாக மட்டுமே அவன் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். ஊடகங்களும் திரைப்படங்களும் இது சார்ந்த கிளர்ச்சியை வளர்த்து தங்களின் வணிகத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ஆண், பெண் சார்ந்த பாகுபாடுகள், உயர்வு தாழ்வு அணுகுமுறைகள், தடைகள் சிறுவயதிலிருந்தே அவர்களுக்குள் திணிக்கப்படுகின்றன.

ஆண்கள் உயர்வு மனப்பான்மையுடனும் பெண்கள் அப்படிப் பிறந்த காரணத்தினலாயே தாழ்வுணர்வுடனும் தன் மீது நிகழ்த்தப்படும்  கொடுமைகளை சகித்துக் கொள்ளவும் மறுக்கப்படும் விஷயங்களை மெளனமாக கடந்து போகவும் கற்றுத்தரப்படுகிறார்கள். இந்தச் செயல்களை அறியாமை மற்றும் ஆழ்மன திணிப்பு காரணமாக பெண்களே செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.ஆணுக்கும் பெண்ணுக்குமான தோழமை என்பது முழுக்க தவிர்க்கப்பட்டு அவர்களின் அருகாமை பாலியல் நோக்கில் மட்டுமே பார்க்கப்பட்டு அது சார்ந்த தடைகளும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பரஸ்பர புரிதல் ஏதுமில்லாமல் தனித்தனி கூண்டுகளில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போன்று இரு தரப்பினரும் வளரும் அவலமான சூழல் நிகழ்கிறது. பெண் என்பவள் எவ்வித பிரத்யேக உணர்வும் அற்ற ஆணின் உடமையல்ல, தன்னைப் போலவே எல்லா உணர்வுகளும் கொண்ட சகஜீவி என்பது ஆண்களுக்கு மிக அழுத்தமாக கற்றுத்தரப்பட வேண்டும். பெற்றோர், சமூகம், ஊடகங்கள், கலை, இலக்கியம் என்று சமூகத்தின் எல்லாத் துறையும் பொறுப்புடன் இணைந்து ஒன்றுகூடி இழுக்க  வேண்டிய தேர் இது.

இதன் மீது அமைந்த உரையாடல்களும் விவாதங்களும் படைப்புகளும் போன்றவை தொடர்ந்து உருவாகிக் கொண்டிருப்பதினால்தான் இந்த மாற்றத்தை நோக்கி மெல்ல மெல்ல சென்று நிலையான தீர்விற்கு நகர முடியுமே ஒழிய இன்னமும் நிருபணமாகாத ஒரு  வழக்கில் தொடர்புள்ள சில்லறைத் திருடனைப் பிடித்து ஊர்கூடி தர்மஅடி போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணுவது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நோய் ஒன்றிற்கு குண்டூசியால் சொறிந்து கொண்டு சரியாகி விட்டது என்று கற்பனை செய்வது போலத்தான்.இருக்கும். தனிநபர் மீதான எதிர்ப்புகளால்அல்ல, ஒட்டுமொத்த சமூகமே தன்னை நோக்கி திரும்பி இந்தச் சர்ச்சையின் மீதாக தன்னை முழுவதும் பரிசீலனை செய்து கொள்ள வேண்டியதுதான் இந்தச் சூழலில் மிக மிக அவசியம்.

- உயிர்மை - பிப்ரவரி 2016-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Tuesday, March 01, 2016

உப்பு கருவாடு - தமிழ் சினிமாவின் மீதான சுயபகடி





இயக்குநர் ராதா மோகனின் சமீீபத்திய திரைப்படம் 'உப்பு கருவாடு'.

பொதுவாகவே  ஒரு தமிழ் சினிமா உருவாவதை அதற்குத் தொடர்பேயில்லாத பல அபத்தமான காரணிகளும் விதிகளும் தீர்மானிக்கின்றன. சினிமா என்கிற அற்புதமான ஊடகத்தின் தரத்தை மெல்ல உயர்த்த முயலும் கலைஞர்களுக்கு மத்தியில் அதன்  அடிப்படையை அறியாத அதையொரு லாபமீட்டும் வணிகமாக மட்டும் பார்க்கும் இத்துறைக்கு சம்பந்தமேயில்லாத சில அசட்டு முதலாளிகள் இந்த விதிகளை உருவாக்குகிறார்கள். தமிழர்களின் ரத்தத்திலும் சுவாசத்திலும் வாழ்வியலோடும் அரசியலோடும் பின்னிப் பிணைந்த சினிமா  என்கிற முக்கியமான பொழுதுபோக்கு வடிவம், அந்த முக்கியத்துவத்தின் பிரக்ஞையேதும் அல்லாமல் கல்யாணத்து சாம்பாரில் போடப்படும் உப்பைப் போல எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்கிற சூழலைக் கொண்டிருக்கிறது. இது சார்ந்த முரண்களையும் அபத்தங்களையும் உறுத்தாத மெல்லிய நகைச்சுவையுடனும் சுயபகடித்தன்மையுடன் சொல்லிச் செல்கிறது இத்திரைப்படம். மேற்பார்வைக்கு சாதாரணதொரு படைப்பாகத் தெரியும் இந்த திரைப்படத்தை இந்த நோக்கில் மையப்படுத்தி பார்க்கும் போது இதன் பரிமாணங்கள் அவல நகைச்சுவையுடன் விரிவதைப்  பார்க்க முடிகிறது.

சினிமாவைத் தவிர வேறு எந்த ஊடகமும் தம்முடைய துறையில் உள்ள அபத்தங்களைப் பற்றி வெளிப்படையாக சுய பகடியோ சுய விமர்சனமோ செய்து கொள்வதில்லை. சினிமாவிலும் அவை உருவாவதின் ரகசியங்கள் ஒரு காலக்கட்டம் வரையில் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்பட்டிருந்தன. தன்னுடைய அபிமான நாயகன் தீயவர்களை பாய்ந்து பாய்ந்து தாக்கும் சண்டைக்காட்சிகளை  உண்மை என்றே நம்பிய பாமரத்தனம் கூட முன்பு இருந்தது. நாயகர்கள் இந்த ரகசியங்களை பாதுகாப்பதின் மூலம் தங்கள் பிம்பங்களின் முகமூடி வெளியில் தெரியாமலிருப்பதற்காக மிகவும் மெனக்கெட்டார்கள். மேலும் ஒரு சினிமா உருவாவதைப் பற்றிய நடைமுறை ரகசியங்கள் வெளியில் தெரிந்து விட்டால் அவற்றின் மீதான சுவாரசியம் மக்களுக்கு போய்  விடும் என்றும் பொதுவாக நம்பப்பட்டது. எனவே சினிமாத்துறை சார்ந்த நபர்களைத் தவிர வேறு எவரையும்  படப்பிடிப்புத் தளத்திற்குள் அனுமதிக்காமலிருந்த சூழல் பொதுவாக இருந்தது.  ஆனால் 'இன்டோர் ஷூட்டிங்' எனப்படும் மூடிய படப்பிடிப்புத் தளங்களில் சினிமா உருவாகும் வரையே இந்த ரகசியங்களைக் காப்பாற்ற முடிந்தது. அவற்றைத் தாண்டி காமிராக்கள் வெளியே  பயணப்படத் துவங்கியவுடன் இதன் ரகசியங்களை பார்வையாளர்கள் மெல்ல அறிந்து கொள்ளத் துவங்கினார்கள். இன்று ஒரு சினிமா உருவாக்கப்படும் பல அடிப்படையான நுட்ப விஷயங்களையும் அதன் பின்னணிகளையும் ஒரு பொதுப்பார்வையாளன் கூட அறிந்திருக்கிறான். அவற்றைப் பற்றி விவாதிக்கிறான்.  அதிலுள்ள குறைகளை எள்ளலுடன் விமர்சிக்கத் துவங்கியிருக்கிறான்.

சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் பல மூடநம்பிக்கைகளை விமர்சிக்கும் தமிழ் சினிமாத் துறையின் உள்ளேயே பல மூடநம்பிக்கைகளும் சென்ட்டிமென்ட்டுகளும் இருக்கின்றன என்பது ஒரு சுவாரசியமான முரண்நகை. படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் கேமராவின் முன்னால் தேங்காய் உடைப்பது முதல் கடைசி நாளன்று பூசணிக்காய் உடைப்பது வரை பல அசட்டு நம்பிக்கைகள் இருக்கின்றன. பெரும் முதலீட்டோடு செய்யப்படும் வணிகம் என்பதால் அது சார்ந்த வேண்டுதல்களும் பதட்டங்களும் இயல்பாகவே அமைகின்றன. அறிவுசார் விஞ்ஞானிகள் புழங்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலேயே ஏவுகணைகளை வானில் ஏவுவதற்கு முன்னால் பூஜை நடக்கும் என்று சொல்லப்படும் போது இவை எம்மாத்திரம்? நாயகனுக்கோ நாயகிக்கோ படப்பிடிப்பில் சிறு விபத்து ஏற்பட்டால் அத்திரைப்படம் உறுதியான வெற்றி என்பது முதல் குறிப்பிட்ட நடிகர் படத்தில் இருந்தால் மிக அதிர்ஷ்டம் என்பது வரை முன்பு தற்செயலாக நடந்த விஷயங்கள் பின்பு அதிர்ஷ்ட விதிகளாக்கப்பட்டன. இதில் என்ன கூடுதல்  நகைச்சுவை எனறால் பொதுவாக எந்தவொரு பணியையும் துவங்கும் போது மின்சார தடை ஏற்பட்டால் அது அபசகுனமாக கருதப்பட்ட சூழலானது, அதைப் போன்றதொரு தடையை தன்னுடைய முதல் தருணத்திலேயே எதிர்கொண்ட இளையராஜா அடைந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு அதிர்ஷ்டமாக மாறிவிட்டது.

திரைத்துறையில் நிலவும் இது போன்ற மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்தவர்களில் முக்கியமானவராக பாலச்சந்தரைச் சொல்லலாம். 'நீர்க்குமிழி' எனும் அவருடைய முதல் திரைப்படத்தின் தலைப்பு சென்ட்டிமென்டிற்கு எதிரானதாக கருதப்பட்டது. அதை மாற்றச் சொல்லி அவரை எச்சரித்தார்கள். என்றாலும்  தன்னுடைய திறமையின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக பிடிவாதமாக அந்தத் தலைப்பையே வைத்து வெற்றியும் பெற்றார். சிவப்பான நிறத்தில் அழகாக உள்ளவர்கள் மட்டுமே சினிமாவில் நடிக்கத் தகுதியானவர்கள் என்கிற பொதுவான விதியை உடைத்து ரஜினிகாந்த், சரிதா போன்றவர்களை பிரதான பாத்திரங்களில் நடிக்க வைத்து வெற்றி பெற வைத்தவர். சினிமா உருவாகும் படப்பிடிப்புக்காட்சிகளை, பாடல்பதிவுக் காட்சிகளை தன் திரைப்படத்தின் உளளேயே வெளிப்படையாகக் காட்டியவர். 'சர்வர் சுந்தரம்' படத்தில் தமிழ் சினிமா ஹீரோவாக இருக்கும் நாகேஷ், குதிரையொன்றில் வேகமாக பயணிக்கும் காட்சியானது எப்படி Rear Projection Screen உத்தியின் மூலமாக அம்பலப்படுத்தியிருப்பார். இது போன்ற விஷயங்களை மக்கள் அறிந்து கொள்வதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.  இது போன்று தன்னுடைய திறமை மீது மட்டும் நம்பிக்கை வைக்கும் அரிதான சில படைப்பாளிகள் திரையுலகினுள் இருக்கிறார்கள். மணிரத்னம் கூட தன்னுடைய படப்பிடிப்புகளை துவக்கும் முன் பூஜைகள் ஏதும் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.

***

தமிழ் சினிமாவில் உருவாகும் ஆபாசமும் அசட்டுத்தனமும் கலந்த பெரும்பாலான கசடுகளுக்கே இடையே கண்ணியமான முறையில் ஒரு திரைப்படத்தை தருவது கூட பெரிதில்லை, அதிலிருந்து விலகாமல் தொடர்ச்சியாக அதே போன்று  நல்ல படங்களை  இயக்குவதென்பது பெரிய சவால். இந்த வகையில் இயங்கும் இயக்குநர் ராதா மோகனை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். ஏனெனில் சுசி கணேசன் என்ற இன்னொரு இயக்குநரின் முதல் திரைப்படமான 'ஃபைவ் ஸ்டார்' அருமையான திரைக்கதையுடன் கூடிய நல்ல முயற்சியாக இருந்தது. அடுத்த திரைப்படமான 'விரும்புகிறேன்' சுமாரான முயற்சி என்றாலும் மோசமானதில்லை. ஆனால் இந்த திரைப்படங்கள் அதிக அளவில் வெற்றி பெறாமல் போனதில் அவர் சோர்வடைந்திருக்கலாம். எனவே அடுத்தடுத்து அவர் உருவாக்கிய 'திருட்டுப் பயலே, கந்தசாமி' போன்ற திரைப்படங்கள் மோசமான மசாலா திரைப்படங்களின் வடிவமைப்பில் சிக்கிக் கொண்டு விட்டன. இந்த சூழலுக்கு அவர் மட்டுமே காரணமில்லை. நல்ல முயற்சிகளை பெரும்பாலும் கைவிடும் பார்வையாளர்களும்தான். இந்த நோக்கில்தான் ராதாமோகனின் தொடர்ச்சியான கண்ணியமான திரைப்படப் பங்களிப்பு கவனத்துக்குரியதாகிறது.

'மிஸ்ஸியம்மாவின்' திரைக்கதையை மெருகேற்றி உருவாக்கிய முதல் திரைப்படமான 'அழகிய தீயே', எழுத்திலும் சினிமாவிலும் தாயின் அன்பே  பொதுவாக அதிகம் பேசப்பட்டுக்  கொண்டிருக்கும் போது தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ள அன்பைச் சொன்ன 'அபியும் நானும்", மாற்றுத் திறனாளிகளின் நோக்கில் காதலுணர்வையும் அவை சார்ந்த அகச்சிக்கல்களையும் சொன்ன 'மொழி' போன்ற சிறப்பான திரைப்படங்களை உருவாக்கிய ராதாமோகனின் இந்த திரைப்படம் 'உப்பு கருவாடு'. தமிழ் இலக்கணப்படி நடுவில் வந்திருக்க வேண்டிய 'க்' என்கிற ஒற்றெழுத்து தவிர்க்கப்பட்டிருப்பதை, இலக்கணத்தை ஒதுக்கி  நியூமரலாஜிப்படி தப்பும் தவறுமாக திரைப்படத்தின் தலைப்புகள் வைக்கப்படுவதின் மீதான கிண்டலாக கொள்ளலாமோ, என்னவோ.

உப்பு கருவாட்டின் கதைப் பின்னணி என்னவென்பதைப் பார்ப்போம்.

முதல் படம் தோல்வியிலும் இரண்டாவது படம் பாதியிலேயே நின்று போன சோகத்தில் இருக்கும் ஓர் இளம் இயக்குநரை அணுகிறார் ஒரு திரைப்பட மீடியேட்டர். அடுத்த படத்திற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதிலுள்ள முக்கியமான நிபந்தனை பணம் போடும் முதலாளியின் மகள்தான் கதாநாயகி. தன் கனவுகளைப் புதைத்து விட்டு வேறு வழியில்லாமல் நடிக்கவே வராத அந்தப் பெண்ணை வைத்து இயக்குநர் ஒத்திகை பார்ப்பதும் தன்னுடைய சில உதவாக்கரை உதவி இயக்குநர்களுடன் கதைவிவாதம் செய்வதும் அதில் ஏற்படும் ஒரு முக்கியமான சிக்கலும்தான் இத்திரைப்படம். வளரும் நகைச்சுவை நடிகராக இருக்கும் கருணாகரனை இத்திரைப்படத்தில் நாயகனாகியிருப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். கருணாகரனும் தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்ந்து நகைச்சுவைக்கும் தீவிரத்தன்மைக்கும் இடையிலான ஒரு தன்மையை தன்னுடைய பாத்திரத்திற்கு வழங்கி இயக்குநரின் தேர்விற்கு நியாயம் செய்திருக்கிறார்.

படமுதலாளியாக எம்.எஸ்.பாஸ்கர். மீன், கருவாடு வியாபாரத்தில் பணம் அமோகமாக வருவதால் சினிமாவில் முதலீடு செய்வதில் பிரச்சினையில்லை. தனது இரண்டாவது மனைவியின் மகளின் நடிப்பார்வத்திற்காக இரண்டு, மூன்று கோடியை தூக்கிப் போடுவது   இவருக்குப் பெரிய விஷயமில்லை. போதாக்குறைக்கு இவரே ஒரு பார்ட்-டைம் கவிஞராகவும் இருக்கிறார். அவ்வப்போது சில அசட்டுத்தனமான கவிதைகளை (?!) சொல்லி பயமுறுத்துகிறார். இவருக்கு வலதுகரமாக ஒரு போலி சாமியார். சினிமாவில் நடிக்க வேண்டுமென்பது இவரது ரகசிய ஆசைகளில் ஒன்று. ஒரு தமிழ் திரைப்படம் உருவாவதை எத்தனை அபத்தான விதிகள் தீர்மானிக்கின்றன என்று முதல் வரியில் எழுதியிருந்தேன் அல்லவா? அதற்கான உதாரணங்களுடன் இது போன்ற பல ரகளைகளுடன் நகர்கிறது திரைப்படம்.

நடிகர் நாசர் ஒரு விழாவில் பேசும் போது ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். ஓர் இயக்குநருக்கு வாய்ப்பு தர விரும்பிய தயாரிப்பாளர், இயக்குநர் வரும் போது அவருடைய ஜாகத்தையும் எடுத்து வரச் சொன்னாராம். ஏன்? தயாரிப்பாளரின் ஜாதகமும் இயக்குநரின் ஜாதகமும் பொருந்தினால்தான் படம் தயாரிக்க ஒப்புக் கொள்வாராம். நடக்கப் போவது படப்பிடப்பா அல்லது இருவருக்குமான முதலிரவா என்று குழப்பமாக இருக்கிறது. முதலில் இந்தத் தகவலை கேட்கும் போது வேடிக்கையாக இருந்தாலும் சினிமாவில் நிகழும் பல சென்ட்டிமென்டுகளை அறியும் போது இதுவே பரவாயில்லை என்பதாக தோன்றியது.

இடைத்தரகராக மயில்சாமி. எந்தவொரு சகுனத்தையும் சூழலுக்கும் தனக்கும் ஏற்றபடி சரியாக்கிக் கொள்ளும் இவரது சாதுர்யமான பேச்சு சிரிப்பை வரவழைக்கிறது.  கனவுத் தொழிற்சாலை நாவலை எழுதின சுஜாதா, அதில் கிட்டு என்கிற, பொய்யையும் புரட்டையும் மிக சகஜமாக செய்கிற ஒரு  சினிமாவுலக இடைத்தரகரின் சித்திரத்தை மிக துல்லியமாக எழுதியிருப்பார். மயில்சாமியின் கதாபாத்திரம் அதற்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே தமிழ் ஹீரோயின்கள் ஏன் பெரும்பாலும் லூஸூகளாகவே சித்தரிக்கப்படுகிறார்கள் என்று எனக்கு குழப்பமாகவே இருந்தது. ஒருவேளை நாயகனின் பிம்பத்தை இன்னமும் ஊதிக்காட்ட நாயகியை ஒன்றும் தெரியாத அப்பாவியாக, வெள்ளந்தியாக, நாயகனால் காப்பாற்றப்படவிருக்கும் அபலையாக காட்டுகிறார்களோ என்று தோன்றியது. சாவித்திரி,, சரிதா, ரேவதி, சுஹாசினி போன்று தனித்த ஆளுமையையும் நடிப்பாற்றலையும் கொண்டு உருவாகிய நாயகிகள் ஏன் சமீபத்தில் எவருமே இல்லை என்று தோன்றியது. அதற்கான விடை ஒருவேளை இத்திரைப்படத்தில் இருப்பதாக கண்டு கொண்டேன். முன்பெல்லாம் சுமாரான பொருளாதாரப் பின்னணியில் உள்ள பெண்கள்தான் நடிக்க வருவார்கள். சினிமாவுலகம் பெண் பித்தர்கள் நிறைந்த கயவர்களின் உலகம் என்பதான ஒரு சித்திரம் பொதுவில் இருந்ததால் நடுத்தர மற்றும் பணக்காரப் பெண்கள் அதில் நுழைய தயங்கினார்கள். அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லாமலிருந்தது.

ஆனால் இப்போது நிலைமை நிறையவே மாறி விட்டது. தமிழ் தெரிந்த, நடிப்புத் திறமை இருக்கும் பெண்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்காது. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி சிவப்பான நிறத்தில், கொடியிடையாளாக இருந்தால் போதும். நடிப்புத் திறமைக்கான அவசியமே இல்லை. எனவேதான் மாடலிங் செய்யும் பெண்கள், உயர்வர்க்கத்து பெண்கள், படமுதலாளிகளின் உறவினர்களின் பெண்ககள் போன்றவர்கள்தான் இன்றைய நாயகிகள். தங்களின் பாக்கெட் மணிக்காக கூட சிலர் நடிக்க வருகிறார்கள். இரண்டு கவர்ச்சிப் பாடல்களுக்கும் மூன்று காட்சிக் கோர்வைகளில் மட்டும் வருவதற்கு நடிப்பாற்றல் எதற்கு? எனவே பெண்களின் சிறப்பை, அவர்களின் ஆளுமைக் குணங்களை பிரதானப்படுத்தும் திரைப்படங்கள் உருவாவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு உருவாகி வந்தாலும் இளைஞர்களே இன்றைய சினிமாவின் துவக்க வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பதால் அது போன்ற திரைப்படங்கள் ஓடுவதில்லை.

எனவே செல்வச் செழிப்பின் பினனணியில் இருந்து வருபவர்களுக்கு மெனக்கெட்டு நடிக்க வேண்டும் என்கிற அவசியமேதுமில்லை. அந்தச் சூழலில் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்ட கல்யாண குணங்களை நடிப்பிற்காக கூட அவர்களால் மாற்றிக் கொள்ள இயலவில்லை. எனவே நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்ணாக நடிக்க வேண்டி  வந்தாலும் அந்த வறுமையுலகம் குறித்த அனுபவமோ கற்பனையோ அல்லாமல் கொஞ்சி கொஞ்சிப் பேசுகிறார்கள். இது போன்ற பெண்களின் இந்தப் பிரத்யேக குணாதியசங்களே நாளடைவில் தமிழ் சினிமா நாயகியின் குணாதிசயமாக எதிரொலித்து அதுவே நிலைபெற்று விட்டதோ என கருதத் தோன்றுகிறது.

இதில் கருவாடு வியாபாரியின் பணக்கார மகளாக வரும் நந்திதாவிற்கு சுட்டுப் போட்டாலும் நடிப்பு வருவதில்லை. அவரை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார் இயக்குநர். உண்மையில் இந்தப் பாத்திரத்திற்காக அவர் முதலில் யோசித்து வைத்திருந்தது  நடிப்புத் திறமையுள்ள தனது தோழி ஒருவரை. ஆனால் அவரை இத்திரைப்படத்தில் உபயோகப்படுத்த முடியாதபடியான நெருக்கடி. தோழியின் தாயும் நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்து காத்திருந்து துணை நடிகையாகவே காலம் தள்ளும்  தகவல் படத்தின் ஓரிடத்தில் வசனமாக சொல்லப்படுகிறது. நடிக்கத் திறமையிருந்தும் பலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிற அபத்தமும் அந்த திறமை துளிக்கூட இல்லாதவர்களுக்கு வாய்ப்பு தங்கத் தட்டில் தேடி வருகிற அபத்தமும் என இரண்டிற்குமான முரணை இயக்குநர் மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறார். இது போல பல காட்சிகள் படம் பூராவும் வந்து தமிழ் சினிமா ஏன் பல காலமாகவே பூட்டகேஸாக இருக்கிறது என்பதை மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

படமுதலாளியின் உதவியாளர் ஒருவர் சினிமா ஆட்களுக்கு உதவுவதாக நியமிக்கப்படுகிறார். சினிமாவில் ஆர்வமுள்ள அவரும் தன்னுடைய யோசனைகளை இயக்குநருக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறார். இயக்குநருக்கு என்ன செய்வதென்றே தெரியாத தர்மசங்கடம். ஹாலிவுட்களில் ஒரு திரைக்கதையை பல முன் விவாதங்களுக்குப் பிறகு தயார் செய்து ஒரு கச்சிதமான திரைக்கதைப் புத்தகமாக மாற்றிக் கொள்வார்கள்.  மிக மிக அத்தியாவசியம் என்றால்தான் இடையில் இதை சில மாற்றங்களை செய்யத் துணிவார்கள். இந்தப் புத்தகத்தில் திரைக்கதை, காமிரா கோணங்கள், பாத்திரங்களின் வடிவமைப்புகள், அது சார்ந்த வசனங்கள், உடல்மொழிகள், அசைவுகள் என்று எல்லாமே முன்கூட்டிய திட்டமிடலுடன் கச்சிதமாக தீர்மானிக்க்பட்டிருக்கும். சீட்டுக்கட்டு மாளிகையிலிருந்து அடியில் ஒரு சீட்டை உருவினாலும் மொத்தமும்  கவிழ்ந்து விடுவது போல பிறகு செய்யப்படும் மாற்றங்கள் ஒட்டுமொத்த படைப்பையும் ஒழுங்கையும் பாதித்து விடும் என்கிற பிரக்ஞையும் ஜாக்கிரதையும் அவர்களுக்குண்டு.

ஆனால் துரதிர்ஷ்டமாக தமிழ் சினிமாவில் சில இயக்குநர்களே இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள்.மற்ற உருவாக்கங்கள்  எல்லாம் முன்பே குறிப்பிட்டபடி கல்யாண சாம்பாரில் உப்பு போடும் கதைதான்.  பட முதலாளியின் மச்சினன், ஒன்று விட்ட சித்தப்பா, வீட்டு கூர்க்கா என்று எல்லோரும் சொல்லும் தங்கள் இஷ்டப்படி சொல்லும் ஆலோசனைகளை வேறு வழியில்லாத நெருக்கடியில் கேட்டு மோசமான கூட்டு அவியல் மாதிரி உருவாகி அசட்டுத்தனமாக நிற்பதுதான் தமி்ழ் சினிமா.

பயணம் என்கிற தனது முந்தைய திரைப்படத்தில் சூப்பர் ஹீரோக்களின் போலித்தன்மையை கதறக் கதற கிண்டலடித்த ராதா மோகன், இந்தத் திரைப்படத்தில் ஒரு தமிழ் சினிமாவின் உருவாக்கத்தில் எப்படியெல்லாம் அபத்தங்களும் இடையூறுகளும் நிகழ்கின்றன என்பதை தனது பிரத்யேக நகைச்சுவையோடு சொல்கிறார். இது போன்ற spoof திரைப்படங்கள் தமிழிலேயே வரத் துவங்குவதும் ரசிகர்களின் மனநிலையும் அதையே வழிமொழிவதுமான சூழல் பெருகும் போது இது போன்ற அபத்தங்கள் வருங்காலத்தில் பெருமளவு தவிர்க்கப்படலாம். அதற்கு ராதாமோகனின்  இத்திரைப்படமும் ஒரு துளி காரணமாக இருக்கும்.  

அம்ருதா - ஜனவரி 2016-ல் வெளியான கட்டுரை (நன்றி: அம்ருதா)

suresh kannan