Saturday, April 04, 2015

வலியவன்




பல வருடங்களாக மெருகேற்றிய திரைக்கதையின் திறமையை தங்கள் முதல் திரைப்படத்திலேயே கொட்டி விட்டு. இரண்டாவது திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் வழக்கமான வணிக சூத்திரங்களை பின்பற்றும் இயக்குநர்கள் வரிசையில் சரவணன் இணைந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இந்த வணிக வார்ப்புகளின் இடையில் இவர்களின் தனித்தன்மைகள் எங்காவது தன்னிச்சையாக ஒட்டிக் கொண்டிருக்கும், அவ்வளவே. 'இவன் வேற மாதிரி'யிலேயே சரவணன் இதை நிரூபித்து விட்டார்.

இவரது சமீபத்திய திரைப்படமான 'வலியவன்' பார்த்தேன். கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது உருகி அதன் கண்களை மறைக்கும் போது கொக்கை பிடித்து விடலாம் என்கிற நையாண்டி பழம் பாடல் உண்டு. அவ்வாறான ஒரு திரைக்கதை.   கையாலாகாத நிலையில் ஓர் அவமதிப்பை தன்னுள் புதைத்துக் கொள்ளும் இளைஞனை காதல் அழைப்பின் மூலம் அவனுள் இருக்கும் வீரத்தை தூண்டியெடுக்கிறாள் ஒரு பெண். தொடர்ந்த பயிற்சியும் உழைப்பும் வாய்ப்பும்தான் ஒரு சாதராணனுக்கும் சாதனையாளனுக்கும் உள்ள தூரம் என்கிற நீதியை சலிப்பான திரைக்கதையின் மூலம் சுற்றி சொல்லியிருக்கிறார்கள். கதை நிகழும் மையத்திற்கே ஆதாரமாக விளங்கும் அந்த அவமதிப்பிற்கான சம்பவமும் காரணமும் வலிமையாக இல்லாமல் அபத்தமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் உள்ளது.

இத்திரைப்படத்தில் உடனே என்னைக் கவர்ந்த அம்சம், ஒரு நடுத்தர வயது ஆணுக்கும் ஓர் இளம்பெண்ணுக்கும் உள்ள நட்பு. தமிழ் திரையில் இதுவரையில் சொல்லப்படாத கோணம் என நினைவு. தன்னுடைய நண்பர் அடைந்த அவமானத்தைப் போக்க அவர் மகனைத் தூண்டுவது நல்லதொரு முடிச்சு என்றாலும் கோட்டை விட்டிருக்கிறார்கள். சலிப்பை ஏற்படுத்தும் வகையில் நிகழும் அந்த நீண்ட கார் பயண காட்சிக் கோர்வைகளை ஒரு நல்ல திரைக்கதையாளன் யோசிக்க மாட்டான் என கருதுகிறேன். 'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தில் நிகழ்ந்த காதல் மற்றும் காதலர்களுக்கிடையே நிகழ்ந்த சம்பவங்களில் எத்தனை சுவாரசியமும் நம்பகத்தன்மையும் இருந்தன? அஞ்சலியின் பாத்திரம் சற்று மிகையாக இருந்தாலும் எத்தனை குறும்புத்தனத்துடன் இருந்தது? பாத்திரங்களை இப்படி வடிவமைக்கும் திறமையை இயக்குநர் எங்கே தொலைத்தார்?

முரளி, மோகன் போல ஒரு சாமானிய கதாநாயகனாக ஜெய்யை சிறப்பாக வடிவமைக்க முடியும். அவருடைய உடல்மொழியில் அதற்கான தகுதிகள் உண்டு. இதிலும் அவ்வாறே இயங்குகிறவர், சட்டென்று வீரராக மாறி விடும் போது காட்சிகளின் நம்பகத்தன்மை தடாலென்று கீழே இறங்கி விடுகிறது. அதைப் போலவே ஒரு விளையாட்டுத் துறையின் இயல்புகளை, நுணுக்கங்களை அறியாமல் அதை எதிர்மறையாக நம்பகத்தன்மையற்று உபயோகிப்பது இன்னொரு பலவீனம்.

'மான் கராத்தே'வில் குத்துச்சண்டையை நகைச்சுவையாக அணுகுகிறவன் வெற்றி பெற்று விடுவதாகவும் அதன் எதிர்நாயகன் ஒரு மூர்க்கனைப் போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். அதைப் போலவே ஐ திரைப்படத்திலும் ஆணழகுப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் பெரும்பாலோனோர் இணைந்து தோல்வி பயத்தின் காரணமாக நாயகனை தாக்குதல் போன்ற காட்சி. இவ்வாறான காட்சிகளின் மூலம் தொடர்புள்ள விளையாட்டையும் அதன் சாதனையாளர்களையும் அவமானப்படுத்துகிறோம் என்கிற புரிதல் இயக்குநர்களுக்கு இருக்கிறதா என தெரியவில்லை. சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் புகழ்பெற்றிருக்கும் ஒருவன், இத்திரைப்படத்திலும் அவ்வாறே 'ஒண்டிக்கு ஒண்டி வாடா' என்று உடனே சண்டையில் ஈடுபடுவதைப் போன்ற காட்சியமைப்பு நெருடலை ஏற்படுத்துகிறது.

அழகம்பெருமாளின் இயல்பான நடிப்பு அற்புதம். கும்கியின் மூலம் சற்று தலைதூக்கிய இமான் மறுபடியும் கூட்டத்தில் தொலைந்து விடுவார் போல. ஆண்ட்ரியா ரசிகர்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பதால் அவரைப் பற்றி ஏதும் சொல்வதாய் இல்லை. காதல் பிரச்சினைக்கு உபதேசம் செய்யும் ஓர் சாலையோர அநாமதேயர், தேநீருக்காக காசு தருவதற்கு சொல்லும் காரணம், அபாரம். :)



suresh kannan

No comments: