Wednesday, December 03, 2014

கதாநாயகிகளின் ஆயுள்ரேகை


 தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் கதாநாயகி டி.ஆர்.ராஜகுமாரி. தென்னிந்திய சினிமாவின் முதல் கனவுக்கன்னியும் கூட. தனது 40வது வயது வரை நடித்தவர். கே.ஆர்.விஜயா, சாவித்திரி, சரோஜாதேவி, பானுமதி, தேவிகா.... என்றுஅப்போதைய காலத்து கதாநாயகிகள் பெரும்பாலும்  தங்களின் இளமைக்காலத்தைக் கடந்த பிறகும் கூட நாயகிகளாக நடிக்க முடிந்தது. இவர்களில் பெரும்பாலும் அண்டைய மாநிலங்களைச் சேர்ந்தவர்களே. சினிமாவில் நடிப்பது ஒழுக்கத்திற்குப் புறம்பானது என்று கருதப்பட்ட காலத்தில் அழகும் திறமையும் இருந்தாலும் துணிவுடன் நடிக்க முன்வருபவர்கள் குறைவாக இருந்ததால் ஒரு சில குறிப்பிட்ட நபர்களே தொடர்ந்து நாயகிகளாக நடித்துக் கொண்டிருந்தார்கள். கொடியிடையும் இளமையும் கொண்ட பெண்தான் நாயகியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு சாத்தியம் இல்லாததால் இடுப்பின் சுற்றளவு அசாதரணமான அளவில் இருந்தவர்கள் கூட 'அம்மா.. நான் காலேஜூக்குப் போயிட்டு வரேன்' என்று பேசிய வசனங்களை ரசிகர்கள் பெரிதும் நெருடலாக எடுத்துக் கொள்ளாமல் ரசித்தார்கள்.

ஆனால் நிலைமை இப்போது வெகுவாக மாறி விட்டது. ப்ளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டே நடிக்கும் நாயகிகளின் எண்ணிக்கை பெருகி விட்டது. பாக்கெட் மணிக்காக சினிமாவில் நடிக்க வருபவர்கள் கூட இருக்கிறார்கள். ஆனால் திரைத்துறையில்  இயங்கும் இவர்களின் காலஅளவு சொற்பமானதாக இருக்கிறது. இரண்டு மூன்று ஆண்டுகளைக் கடப்பதே சிரமம். நவீன திரைப்படங்களில் பிரேம்கள் சட்சட்டென்று மாறுபவதைப் போலவே நாயகிகளும் உடனுக்குடன் மாறிக் கொண்டேயிருக்கிறார்கள். ரசிகர்களின் ரசனையும் அதைப் போலவே மாறிக் கொண்டிருக்கிறது.  ஒரேயொரு தமிழ் திரைப்படத்தில் நடித்து விட்டு பின்பு காணாமற்போன நாயகிகளின் எண்ணிக்கை அதிகம். கமலுடன் இணைந்து நடித்த 'குணா' திரைப் படத்தின் நாயகி ரோஷிணி, அஜித்துடன் 'காதல் மன்னன்' திரைப்படத்தில் நடித்த மானு போன்றவர்கள் உடனடி நினைவுக்கு வருகிறார்கள்.

சமூகத்தின் எல்லாத்துறையையும் போலவே சினிமாவும் ஆணாதிக்கத்தன்மை கொண்டதாக இருப்பதில் வியப்பேதுமில்லை. ஐம்பது, அறுபதைக் கடந்த நடிகர்கள் கூட இன்னமும் டோப்பா முடியுடனும் கூலிங்கிளாஸூடனும் ஹீரோவாக நடிக்கும் அவலம் மாறவில்லை. ஒரு பெண் குழந்தை ஹீரோவுடன் நடிக்கும்.பின்பு அதுவே மகளாக நடிக்கும். பின்பு நாயகியாகவும். பின்பு நாயகி ரிடையர்டு ஆகி அண்ணி, அம்மா வேடத்திற்கு நகர்ந்த பிறகும் டோப்பா முடியும் கூலிங்கிளாஸூம் அதே இடத்தில் நகராமல் ஹீரோவாக இருக்கும். இவர்கள் சுட்டிக்காட்டுபவர்கள்தான் ஹீரோயினாக நடிக்க இயலும் கொடுமையும் மாறவில்லை. விதிவிலக்காக பானுமதி போன்ற அபூர்வமான பன்முக திறமைசாலிகள் தங்களின் தனித்தன்மையால் ஆண்களின் ஆதிக்க உலகின் இடையே  தனி நட்சத்திரமாக ஜொலித்தார்கள். தான் நடிக்க ஒப்புக்கொண்ட படம் ஒன்றிற்காக  அப்போதைய ஆண் நடிகர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத ஊதியத்தைப் பெற்றார் கே.பி.சுந்தராம்பாள். ஆண்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்திய ஆக்ஷன் நாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்தார் விஜயசாந்தி.

ஆகவே தங்களின் சொற்ப ஆயுள் காலத்தைப் புரிந்து கொள்ளும் சமகால கதாநாயகிகள் இயன்ற வரை அதிக படங்களை ஒப்புக் கொண்டு அதற்கான சமரசங்களை விலையாக கொடுத்துக் கொண்டு அழகுப் பதுமையாக டூயட் ஆடி முடிப்பதோடு தங்களின் சேவையை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள். விதிவிலக்காக சில நாயகிகள் மாத்திரம்தான் ரசிகர்களின் நீண்ட கால அன்புக்கு பாத்திரமாக முடிகிறது. அந்த அன்பு  கோயில் கட்டும் அபத்தம் வரை கூட நீள்கிறது.  ஆணாதிக்க ஆக்ரமிப்புள்ள உள்ள சூழலில்  சமகால நாயகிகளில்  நயனதாரா, திரிஷா, அனுஷ்கா போன்றவர்கள் பத்தாண்டுகளைத் தாண்டியும் இன்னமும் களத்தில் நீடிப்பது ஆச்சரியமான விஷயம் மாத்திரமல்ல, பாராட்டப்பட வேண்டியதும் கூட. இது எப்படி சாத்தியமாகிறது?

திறமையான நடிப்பின் மூலமோ அசத்தலான கவாச்சியின் மூலமோ குழப்பமான சர்ச்சைகளின் மூலமோ, எப்படியோ.. எப்போதும் மஞ்சள் வெளிச்சத்தின் கீழேயே இருப்பது அவசியமாக இருக்கிறது. சிலர் அவர்களாகவே தங்களைப் பற்றிய வம்புச் செய்திகளையும் கிசுகிசுக்களையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் பரப்புவதாகச் சொல்கிறார்கள். எப்போதும் மக்களின் கவனத்திலேயே தங்குவதற்கு இவை அவசியமானதாக இருக்கின்றன. நடிப்பின் மூலமாக அல்லாமல் புற அழகின் மூலமாகவே ஒரு நடிகையின் இருப்பும் வாய்ப்பும் உறுதி செய்யப்படுவதால் உடலை கச்சிதமாக வைத்துக் கொள்ள பல தியாகங்களை செய்ய வேண்டியிருக்கிறது. தாங்கள் தோ்ந்தெடுக்கும் திரைப்படத்தின் கதையையும் அதில் தங்களின் பங்கையும் விட அதில் நடிப்பவர் முக்கியமான, வெற்றிகரமான ஹீரோவா என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

இதற்கு மாறாக ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து விட்டு பிறகு தங்களது சந்தை வாய்ப்பை இழக்கும் நடிகைகளின் பாடு பரிதாபகரமானது. அதுவரை அனுபவித்துக் கொண்டிருந்த உயர்நிலை அந்தஸ்துகளையும் சொகுசுகளிலிருந்து இறங்கவும் இழக்கவும் முடியாமல் தங்களின் செல்லுலாயிட் கதாநாயகன்களுக்கே அக்காவாகவும் அம்மாவாகவும் நடிக்க வேண்டிய கொடுமை. தங்களின் சம்பாத்தியம் குறைந்தவுடனேயே அவர்கள் உளரீதியான தாக்குதல்களையும் அழுத்தங்களையும் மனஉளைச்சல்களையும் எதிர்கொள்வது முதலில் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட சுற்றத்தார்களிடமிருந்தே. நடிகையாக தொடர்ந்து ஓடிக் கொண்டேயிருந்தவர்கள் ஒரு நாள் ஓய்ந்து திரும்பிப் பார்க்கும் போது தம்மைச் சுற்றியிருந்தவர்கள் தனக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றிருந்த எண்ணத்திற்கு மாறாக தன்னுடைய பணத்திற்கு மாத்திரமே பாதுகாப்பாக இருந்தவர்கள் என்கிற உண்மையை நேரடியாக எதிர்கொள்ளும் போது அகரீதியான பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். பந்தயக் குதிரைக்கு காயம் பட்டவுடனே சுட்டுக் கொல்லப்படுவதைப் போன்றதொரு நிலைமை.

இளமைக்காலங்கள் என்கிற திரைப்படம் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த சசிகலா என்பவர் தனது இறுதிக்காலத்தில்  நோயுற்று எவர் துணையுமின்றி அநாதையாக இறந்து போன அதிர்ச்சிகரமான செய்தியை நாளிதழ்களில் வாசித்திருப்போம். சுற்றத்தார்கள் தரும் அழுத்தம் தாங்காமல் சிலர் வேறுவழியின்றி பணம் சம்பாதிப்பதற்காக தவறான வழிகளில் சென்று பின்பு பிடிபட்டு ஊடகங்களின் கட்டம் கட்டிய வம்புச் செய்திகளுக்கு தீனியாகிறார்கள். இந்தக் காரணங்களினாலேயே இவர்களது சிலரது திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையாமல் திசை திரும்பி விடுகிறது. இவையெல்லாம் பத்திரிகைகளில் வந்த உதாரணங்கள் மட்டுமே. வெளிவராத பரிதாபங்கள் எத்தனையோ இருக்கலாம். இம்மாதிரியான ரிடையர்டு நடிகைகளின் உடனடி புகலிடம் தொலைக்காட்சி சீரியல்கள். சினிமாவில் மீந்து போன புகழை வைத்துக் கொண்டு சீரியல்களில் கண்களை உருட்டி யாரையாவது பளார் பளார் என்று அறைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? பஞ்ச் டயலாக் நாயகர்கள் மாத்திரமே பெரும்பான்மையாக உலா வரும் தமிழ் திரையுலகில் பெண்களை பிரதான பாத்திரங்களாகவும் அவர்களது உலகை, சிக்கலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் பெரும்பான்மையாக வெளிவரவோ அல்லது ரசிகர்களால் வரவேற்கப்படவோ இல்லை என்பதே. கதாநாயகிகள் பிரதான பாத்திரங்களாக சித்தரிக்கப்படும் திரைப்படங்களுக்கென ஒரு சந்தை கிடையாது. எல்லாமே ஹீரோக்களைச் சுற்றித்தான் இயங்குகிறது. பெண்களை முக்கியத்துவப்படுத்தி படமெடுத்த இயக்குநர்கள் பாலச்சந்தர், மகேந்திரன் போன்றவர்கள் இன்று ஜீவிக்க முடியாது.

பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் திரைப்படங்கள் இப்போது அபூர்வமாகவே கவனதிற்குள்ளாகின்றன. பல வருடங்கள் கழித்து திரையுலகிற்கு திரும்பிய ஸ்ரீதேவி நடித்த 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' திரைப்படம் பரவலான பாராட்டைப் பெற்றது . போலவே சமீபத்தில் மஞ்சு வாரியர் நடித்த 'How old are you?' என்கிற மலையாள திரைப்படமும் கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. இரண்டு திரைப்படங்களுமே திருமணத்திற்குப் பின் தங்களின் தனித்தன்மைகளை இழந்து சமையலறைக்குள் அடைந்து போய் அதனாலேயே தங்களின் குடும்பத்தினரால் பத்தாம்பசலிகளாக பார்க்கப்படும் நடுத்தரவயதுப் பெண்கள் தங்களின் கூடுகளிலிருந்து பொருளாதார தன்னிறைவோடும் தன்னம்பிக்கையோடும் சுதந்திரமாக பறக்கும் தகுதியைப் பெறுவதைப் பற்றி உரையாடுகின்றன. கங்கனா ராவத் நடித்த 'Queen' என்கிற இந்தி திரைப்படத்தையும் இதனுடன் இணைக்கலாம். இந்த மாற்றம் இன்னமும் தொடர்ச்சியாக நிகழ வேண்டும்.

நடிகை என்பதன் அடையாளம் ஒரு பெண்ணுடலாகவும் அழகுப் பதுமையாகவும் மாத்திரம் அல்லாமல் ரத்தமும் சதையும் கொண்டதொரு ஆன்மாவாக சித்தரிக்கப்படும் திரைப்படங்கள் பெருமளவில் உருவாக்கப்பட்டு அவை வணிகரீதியாகவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் ஆணாதிக்க திரைப்படங்கள் ஒடுங்கி பெண்களுக்காக பெண்களே உருவாக்கப்படும் படைப்புகள் அதிகமாகும். பெண் இயக்குநர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். இத்தனை வயது வரை மட்டும்தான் ஒரு பெண் பிரதான பாத்திரத்தில் நடிக்க முடியும் என்கிற மாயையான வேலிகள் உடைபடும்.சினிமா ரசிகர்களிடம் ஏற்பட வேண்டிய ரசனை மாற்றமும் இதற்கு ஆதரவாக இருக்கும். இருக்க வேண்டும்.

'தி இந்து' தீபாவளி மலரில் வெளியான கட்டுரை. (நன்றி: தி இந்து)

suresh kannan

4 comments:

faqirsulthan said...

நடிக்கும் காலத்தில் எப்படி இருந்தார்களோ தெரியாது ஆனால் பட வாய்ப்புகள் இழந்தபின் அவர்களின் நிலை விளக்க இன்றைய ஒரு செய்தி போதும்.
இணைப்பு
http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=66909

faqirsulthan said...

மேற்கண்ட இணைப்பில் காணப்படும் செய்திக்கான நிஷா என்ற நடிகை 2007 லிலேயே இறந்து விட்டார் என்றும், வாட்ஸ் அப் போன்ற வலைத்தலங்களில் வரும் செய்திக்கான நம்பகத்தன்மை குறித்து யோசித்து வெளியிட வேண்டும் என தமிழ்முரசு செய்தி வந்த சில நிமிடங்களில் வந்த ஒன் இண்டியா வின் இதே செய்திக்கான பின்னூட்டத்தில் பலர் குறிப்பிட்டுள்ளனர். மேற்கண்ட இணைப்புக்கு வருந்துகிறேன்.
ஆனால் கதாநாயகிகளின் ஆயுள்ரேகை மறுக்க முடியாத உண்மை. ஆணாதிக்கம் உச்சத்தில் இருக்கும் சினிமா உலகம் இதை மறுக்க முடியாது.

scenecreator said...

http://en.wikipedia.org/wiki/Rajani

Sriram said...

வாழ்கையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றி அடைந்த நாயகிகள் பலரும் உண்டு - Example - வைஜயந்திமாலா, பானுமதி, ஜெயலலிதா, ரேவதி, குஷ்பு. வீணாய்போன நாயகர்களும் உண்டு - பாண்டியன் போல. சினிமா என்னும் தொழிலில் நாயகிகளின் வேலை காலம் என்பது நாயகர்களை ஒப்பிடும் போது குறைவு. இதற்கும் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அழகு தொழில்நுட்பம் வளர வளர நாயகிகளும் நீண்ட நாள் (நாயகர்கள் போல்) நடிக்க வாய்ப்புகள் உருவாகும்.