Tuesday, September 09, 2014

ஜிகர்தண்டா - முழுமை கூடாத நம்பிக்கைதமிழ் சினிமா இயக்குநர்களுக்கு பொதுவாக இரண்டாவது படம் என்பது மிகப் பெரிய கண்டம்தான். பல வருட மெருகேற்றலில் முதல் படத்தை சிறப்பாக உருவாக்கி விட்டு அது வணிக ரீதியாக வெற்றியும் பெற்று விட்டால் உடனே வரிசையில் வந்து நிற்கும் தயாரிப்பாளர்களை தவிர்க்க முடியாமல் இருட்டு அறையில் முரட்டு அடியாக அடுத்த படத்தை காமா சோமாவாக உருவாக்கி பெரும்பாலும் கவிழ்ந்து போவார்கள். ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் இந்தக் கண்டத்தை வெற்றிகரமாக தாண்டியிருக்கிறார். இதுதான் அவர் முதலில் உருவாக்க விரும்பிய படம் என்று கேள்விப்பட்டேன். அதன் உழைப்பு பல இடங்களில் தெரிகிறது.

ஐரோப்பிய சினிமாக்களில் இருந்து தமக்கான உத்வேகத்தை பெற்ற சில தமிழ் இயக்குநர்கள் பிற்பாடு சில வருடங்களிலேயே கலைந்து போன பொற்கால மறுமலர்ச்சியை எண்பதுகளில் உருவாக்கினார்கள். புராணப் படங்களில் இருந்து சமூக சினிமாக்களுக்கு தாவி பிறகு அங்கிருந்து ஒரு குறிப்பிட்ட வகையான மசாலா டப்பாவில் சிக்கி தேங்கிப் போன தமிழ் சினிமா சற்று சோம்பல் முறித்து மேலே பயணப்படுவதற்கு பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரைய்யா போன்றவர்கள் அந்த மறுமலர்ச்சிக் காலத்தில்  காரணமாக இருந்தார்கள். ஐரோப்பிய சினிமாக்களைப் போன்று தனிமனிதர்களின் அகரீதியான பிரச்சினைகள், உறவுச்சிக்கல்கள், உளவியல் பாதிப்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு நுட்பமான பார்வையுடன் கூடிய சினிமாக்கள் அந்த பொற்காலத்தில் உருவாகின. இருந்தாலும் மசாலா டப்பாவே மீண்டும் வென்றது.

அந்தக் காலத்தைப் போலவே, தேங்கிப் போயிருக்கும் சமகால தமிழ் சினிமா இப்போது வேறு வகையான மறுமலர்ச்சியைக் கண்டிருக்கிறது. வன்முறையின் அழகியல், விழுமியங்களை பகடி செய்யும் யதார்த்தம், நல்லவன் வாழ்வான் என்கிற நீண்ட கால புத்தக நீதிகளை தலைகீழாக புரட்டிப் போடுதல் என்று கொரிய சினிமாக்களிலிருந்தும் இன்னபிற அயல் சினிமாக்களில் இருந்தும் தமக்கான உத்வேகத்தைப் பெற்றிருக்கும் பின்நவீனத்துக் கூறுகளைக் கொண்ட அபத்த நகைச்சுவை திரைப்படங்களின் சாயல்கள் குவியத் துவங்கியுள்ளன. சில வருடங்களுக்கு முன் வெளியான ஆரண்ய காண்டம் இதன் துவக்க வாசல். Quentin Tarantino, Coen brothers, Guy Ritchie போன்றவர்கள் இந்த இளம் இயக்குநர்களின் ஆதர்சமாக விளங்குகிறார்கள். பஞ்ச் டயலாக் அபத்தங்களினால் சலிப்புற்றிருக்கும் தமிழ் பார்வையாளர்கள் இந்த முயற்சிகளினால் சற்று இறுக்கம் தளர்ந்து இவை சுமாராக இருந்தாலும் கூட வாரியணைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவ்வகையான அபத்த நகைச்சுவை திரைப்பட முயற்சிகள் பெரும்பாலும் வன்முறையும் குற்றவுலகமும் சார்ந்தவைகளாகவே உள்ளன. தினமும் தயிர்சாதமும் மாங்காய் ஊறுகாயையும் தவிர ஒரு துப்பாக்கியைக் கூட நேரில் பார்த்திராத நடுத்தர வர்க்கத்தின் ஆழ்மன குரூர ஃபேண்டசி வடிகால்களுக்கு  இம்மாதிரியான வன்முறைகள் உடனே பிடித்து விடுகின்றன. வன்முறையைத் தாண்டியும் நம் அன்றாட மத்தியதர வர்க்க வாழ்வியல்களில் இருந்தே பல அபத்த நகைச்சுவைகளை உருவாக்க முடியும் என்பதை இந்த இயக்குநர்கள் கண்டுகொண்டால் நல்லது.

***

ஜிகர்தண்டாவின் கதையை ஒருவரியில் சொல்லி விடலாம். "பாட்சா ஆண்டனி மாதிரியான ஒரு டெரர் ஆசாமியை ஒரு புத்திசாலி இளைஞன் பவர் ஸ்டார் சீனிவாசன் மாதிரி ஒரு காமெடி பீஸாக ஆக்குவது'

ஒரு தொலைக்காட்சி சானலின் ரியாலிட்டி ஷோ நிகழ்த்தும் குறும்படப் போட்டியில் தோற்றுப் போகும் கார்த்திக் எனும் ஓர் இளம் இயக்குநன், அங்கு நிகழும் ஒரு ஈகோ சண்டையால் திரைப்படத்தை இயக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பை பெறுகிறான். 'சமூகத்தை திருத்தறதெல்லாம் என் வேலை இல்லை. ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கேங்க்ஸ்டர் படம் வேண்டும்" என்று வணிக யதார்த்தம் பேசும் தயாரிப்பாளர் வெளிநாட்டு டிவிடிகளை உதாரணம் காட்டுகிறார். தமிழ் சினிமாக்கள் எப்படியான நிர்ப்பந்தங்களில் இருந்தெல்லாம் உருவாகின்றன என்பதற்கு இந்தக் காட்சி ஓர் உதாரணம். ஒரு சமகால நிஜ ரவுடியின் வாழ்க்கையை அருகிலிருந்து அவதானித்து அதிலிருந்து தன் கனவுத் திரைப்படத்தை உருவாக்க விரும்பும் இளம் இயக்குநன் இதற்காக மதுரைக்குச் செல்கிறான். 'அசால்ட் சேது்' என்கிற ரவுடியை நெருங்க முயலும் முயற்சிகள் அபத்தமாக தோற்றுப் போகின்றன. இதற்காக ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றவும் செய்கிறான். ஒருவழியாக ரவுடியை நெருங்கி தாம் அறிய விரும்பும் விஷயங்களை அடைந்த சமயத்தில் அந்த ரவுடி தானே இந்த திரைப்படத்தின் ஹீரோவாக நடிக்கிறேன் என்று அடம்பிடிக்கிறான். தன்னுடைய கனவுகளை சிதைக்கும் ரவுடியை அந்த இயக்குநன் தன் அறிவால் எப்படி நுட்பமாக பழிவாங்குகிறான் என்பது இறுதிப்பகுதி.

இத்திரைப்படத்தின் திரைக்கதை நேர்க்கோட்டு வடிவத்தின் பாவனையில் இயங்கினாலும் ஆங்காங்கே மெட்டா பிக்ஷன் வகையில் மூன்று நான்கு இழையின் அடுக்குகளை ஒன்றன் பின்னாக ஒளித்து வைத்து  முன்னும் பின்னுமாக அநேர்க்கோட்டு வடிவத்திலும் இயங்குகிறது. ஓர் இயக்குநன் சினிமா எடுக்கப் போகும் சம்பவங்களே நாம் பார்க்கும் சினிமாவாக விரிகிறது. சினிமாவுக்குள் சினிமா, அதற்குள் இயக்குநரின் கனவுத் திரைப்படத்தின் காட்சிகளும் சமகால நிகழ்வுகளில் மிகப் பொருத்தமாகவும் குழப்பம் ஏற்படுத்தாமலும் ஒளிந்திருக்கின்றன. படத்தின் துவக்க காட்சியிலேயே இதற்கான ரகளைகள் ஆரம்பமாகி விடுகின்றன. சமகாலத்தில் நிகழும் ஓர் புனைவுக் காட்சி நிஜ சம்பவமோ என்று பார்வையாளனை குழப்பி படத்தில் இறுதியில்தான் இது தெளிவாகிறது. இந்தக் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் ஒரு திரையிசைப் பாடலின் தொடர்ச்சி கடந்த கால நிகழ்வொன்றில் இயக்குநரின் செல்போன் ரிங்டோனாக இணைந்து முடிகிறது. ஒரு தமிழ் ஹீரோவை வைத்து இயக்குநர்  உருவாக்க விரும்பும் திரைப்பாடலின் ஃபேண்டசி காட்சி தொடர்ந்து ரவுடியின் வீட்டுத் தொலைக்காட்சியில் பிம்பமாக எதிரொலிக்கிறது. இவ்வாறு காலத்தை குழப்பும் சிறு சிறு புனைவு விளையாட்டுக்களை படம் முழுவதும் இயக்குநர் மிதமாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.

திரையுலகப் போராட்டத்தில் தாம் சந்தித்த சிக்கல்களையும் படத்தின் சம்பவங்களாக இணைத்துள்ளோரோ என்று நினைக்கும் வகையில் அவரின் பெயர் முதற்கொண்டு இயக்குநரின் தனிப்பட்ட அடையாளங்களும் படத்தில் பதிவாகியுள்ளன. இதில் உச்சபட்ச சுவாரசியம் என்னவெனில் திரைப்படத்தில் தயாரிப்பாளரும் இயக்குநருக்கும் ஏற்படும் சிறுமோதல்களிலான புனைவுக்காட்சிகள் வேறு வகையில் படத்தின் வெளியிலுமாக நிஜமாக நிகழ்ந்து இந்த புனைவு விளையாட்டு படம் முடிந்த பிறகும் நீண்டுள்ளது என்பதுதான். படத்திலுள்ள சில வன்முறைக்காட்சிகளை நீக்கி  U சான்றிதழ் பெறுவதன் மூலம் விற்பனை ஆதாயங்களைப் பெற முடியும் என்பது தயாரிப்பாளரின் தரப்பு வாதம். ஆனால் இயக்குநர் இதற்கு ஒப்புக் கொள்ளாததாலேயே பட வெளியீடு சற்று தாமதமாகியுள்ளது. இப்போது இந்த திரைப்படம் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் படத்தில் வரும் தயாரிப்பாளரைப் போலவே நிஜ தயாரிப்பாளரும் மகிழ்ச்சியடைந்திருப்பார் என கருதலாம். புனைவு யதார்த்தமாகவும் யதார்த்தம் புனைவாகவும் மாறும் சுவாரசியமிது. இன்னொரு சமகால திரைப்படமான 'சதுரங்க வேட்டையில்' வரும் ஒரு வசனத்தையும் இங்கு பொருத்தமாக நினைவுகூரலாம். "ஒரு பொய் சொன்னா அதில் கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கணும். அப்பதான் அது பொய்யின்னு தெரியாது"

***

ஒருவகையில் இத்திரைப்படம் முன்வைக்கும் நீதியென்பது 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்பதாகவும் கொள்ளலாம். புனைவின் வலி்மையையும் அதை சாமர்த்தியமாக உபயோகிப்பதின் மூலம் வரலாற்றை உண்மைக்கு எதிர்திசையில் இயங்க வைக்க முடியும் என்று நீண்டகாலமாக தொடரும் உண்மையையும் இத்திரைப்படம் மீண்டும் நிரூபித்துள்ளது. ஒரு நகரமே அஞ்சி நடுங்கும் ஒரு ரவுடியை  சினிமாவுக்கேயுரிய மிகைகளுடனும் பெருமைகளுடனும் புனைவில் புகுத்தும் பாவனையில் திட்டமிட்டு அதைத் திருகி வேறு விதமாக பார்வையாளர்களுக்கு முன்வைக்கும் போது அது பயங்கர நகைச்சுவைப்படமாகி விடுகிறது. இது சாத்தியமா என்றால் சாத்தியமே. பவர்ஸ்டார் சீனிவாசன், ரித்தீஷ், சாம் ஆண்டர்சன் போன்ற தமிழ் சினி்மா முன்னோர்கள் இது உண்மைதான் என நிரூபித்துள்ளார்கள். ஒரு அதிரடியான ஹீரோவாக அதற்கான சண்டைக்காட்சிகளுடனும் பாடல்காட்சிகளுடனும்தான் இந்தப் படங்களை உருவாக்கியிருப்பார்கள். ஆனால் இவர்களின் படங்களை திரையில் பார்க்கும் போது மக்கள் இதை எப்படி காமெடியாக அணுகியுள்ளார்கள் என்பதை இணையத்தில் இவர்கள் தொடர்பாக பரிமாறப்பட்டிருக்கும் நகைச்சுவைக் குறிப்புகளை பார்த்தால் தெரியும். ஜிகர்தண்டாவில் தன் கனவுத் திரைப்படத்தை சிதைக்க முயலும் ரவுடியை இயக்குநன் இப்படியாக நுட்பமாக பழிவாங்குகிறான்.

இத்திரைப்படத்தில் வரும் ரவுடிக்கும் கூட புனைவிற்கும் அபுனைவிற்குமான துல்லியமான வேறுபாடு புரிந்துள்ளது. எனவேதான் இளைஞன் தன்னைப் படம் பிடிக்க வந்திருக்கிறான் என்று தெரிந்ததும் தொலைக்காட்சிகளில் வரும் 'குற்றம் நடந்தது என்ன" என்பது மாதிரியான ஷோவா என்று ஜாக்கிரதையாக கேட்கிறான். முன்பே தன்னைப் பற்றி இப்படியாக எழுதும் ஒரு பத்திரிகையாளனை அவன் எரித்துக் கொன்றிருக்கிறான். ஆனால் அது அபுனைவாக அல்லாமல் நாயகன், தளபதி மாதிரியான ரவுடியை ஹீரோவாக முன்வைக்கும் திரைப்பட முயற்சி என்று அறிய வந்ததும் உற்சாகமாகி இளைஞனுக்கு முழுமையாக உதவ முன்வருகிறான். இத்தனை ஜாக்கிரதையான புத்திசாலித்தனம் கொண்ட ஒரு ரவுடி எப்படி இயங்கிக் கொண்டிருக்கும் கேமரா முன்பு தன்னுடைய கொலை சாகசங்களையெல்லாம் ஒரு வாக்குமூலமாக தரும் முட்டாள்தனத்தை செய்கிறான் என்பது கேள்விக்குறி. ஒரு கதாபாத்திரத்தை அதற்கான பிரத்யேக குணாதிசயங்களுடன் வடிவமைக்கும் போது இது போன்ற பிசிறல்களும் சறுக்கல்களும் இல்லாமல் கச்சிதமாக திட்டமிட வேண்டும்.

***

இயக்குநரின் திறமையைத் தாண்டி இத்திரைப்படத்தின் நிறம் அற்புதமாக வேறுவகையில் தோன்றியிருப்பதற்கு முக்கியமான காரணிகளாக இருவரைச் சொல்லலாம். ஒருவர் 'அசால்ட் சேதுவாக' நடித்திருக்கும் பாபி சிம்ஹா. இத்திரைப்படம் திட்டமிடப்படும் போது இந்த பாத்திரத்தை இவர் விரும்பிக் கேட்டதாகவும் ஆனால் இவரது அனுபவமின்மை காரணமாக இதற்கு இவர் பொருத்தமாக இருப்பாரா என்று இயக்குநர் தயங்கியதாகவும் ஒரு செய்தி. ஆனால் அட்டகாசமான உடல்மொழியாலும் வசன உச்சரிப்புகளாலும் முழுப்படத்தின் சுவாரசியத்திற்கும் இவரே முழுமுதற் காரணமாக இருக்கிறார் என்றால் அது மிகையாகாது. ஏற்கெனவே 'நேரம்' என்கிற ஒரு திரைப்படத்தில் இது போன்ற வேறு வகையான ரவுடி பாத்திரத்தை பாபி சிம்ஹா திறம்பட கையாண்டதே இயக்குநர் தைரியம் கொண்டதற்கு காரணமாக அமைந்திருக்கக்கூடும். சிறுசிறு காமெடி பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த இந்த திறமையான இளைஞரின் விஸ்வரூப வெற்றி மிக மகிழ்ச்சியளிக்கிறது. இதை இவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னொருவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். பொதுவாக தமிழ் சினிமாக்களில் பொருத்தமில்லாமல் எரிச்சலூட்டும் வகையில் உபயோகிக்கப்படும் திரையிசைப்பாடல்கள் ஏற்படுத்தும் சலிப்பை இதுமாதிரியான புத்துணர்ச்சியான கலைஞர்கள்தான் போக்குகிறாார்கள். முதல் திரைப்படமான 'அட்டகத்தி' முதலே கவனிக்கத்தக்க ஓர் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் விளங்குகிறார். திரையிசைப் பாடல்களின் அதுவரையான மரபின் ஒழுங்குகளை கலைக்கும் ஒரு கலகக்காரன். வினுச்சக்கரவர்த்தியின் குரலுக்கு இணையான பாடகர்களையெல்லாம் வைத்து பாடலை உருவாக்க (டிங் டாங்) அசாத்தியமான தைரியம் வேண்டும். போலவே, கண்ணம்மா பாடலில் வரும் ரொமாண்டிக்கே இல்லாமல் ஒலிக்கும் டூயட்டில் வரும் பெண் குரல் (ரீட்டா) ஆச்சரியப்படுத்தும்விதமாக கவர்கிறது. இன்னொரு பாடலான 'பாண்டி நாட்டு கொடி' அதகளமான உருவாக்கம்.

இதன் ஹீரோ சித்தார்த் என்பது ஒரு சம்பிரதாயத்திற்கே. பாபி சிம்ஹாதான் படம் முழுவதையும் ஆக்ரமிக்கிறார். அனைத்து பிரேமிலும் தான் தோன்ற வேண்டும் என்று நினைக்கும் நாயகர்களுக்கு மத்தியில் சித்தார்த் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். புடவை திருடியாக வரும் லட்சுமி மேனன். திரைப்படத்தை உருவாக்க ரவுடி தொடர்பான தகவல்களுக்காக தன்னைக் காதலிப்பது போல் நடித்து ஏமாற்றிய இயக்குநனை இவர் நுட்பமாக பழிவாங்குவது அபாரமான திருப்பம். வழக்கமான தமிழ் நாயகிகளுக்கு பொருத்தமில்லாத குணாதிசயம் இது. உதவி ரவுடிகளாக நடித்திருக்கும் அனைவருமே சிறப்பான தேர்வு.

***

இத்திரைப்படம் பிரதானமாக A Dirty Carnival  எனும் கொரியப்படத்தின் நகல் எனும் சர்ச்சை எழுந்ததையொட்டி அதைப் பார்த்தேன். அதன் கதைப் போக்கின் ஒரு பகுதி இதனுடன் சற்று ஒத்துப் போகிறது. அதாவது ஒரு நிஜ ரவுடியின் வாழ்க்கையை அவனது பால்யகால நண்பன் திரைப்படமாக உபயோகித்துக் கொள்கிறான். அவ்வளவுதான். மற்றபடி இரண்டிற்கும் கதைப் போக்கிற்கும் சம்பவங்களுக்கும் நிறைய மாற்றங்கள்.

ஒருவேளை அந்த திரைப்படத்தின் பாதிப்பில்தான் தமிழ் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்று யூகம் செய்தாலும் கூட  இதை தமிழ்ப்படுத்துவதற்காகவும் திரைக்கதையின் மெனக்கெடல்களுக்காகவும் ஜிகர்தண்டா குழு செய்திருக்கும் உழைப்பு நிச்சயம் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த ஒரு அற்பமான காரணத்தை கொண்டு ஒரு குழுவின் உழைப்பை கொச்சைப்படுத்துவது போன்ற அழுகுணி ஆட்டம் இருக்க முடியாது. அவுட்லைனைப் பொறுத்தவரை ஜிகர்தண்டா டைட்டில் கார்டில் இதற்கான கிரெட்டிட் தருவதில் இயக்குநருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. சசி, வெற்றிமாறன், கெளதம் வாசுதேவன் போன்ற முன்னோர்கள் ஏற்கெனவே செய்ததுதானே?

ஆனால் கொரியப் படங்களில் அதிக சமரசங்கள் இல்லாமல் இன்னமும் மேலதிகமாக உழைக்கிறார்கள். தமிழ் சினிமாக்களில் பொதுவான சாபமான திணிக்கப்பட்ட செயற்கைத்தனமான கோணங்கித்தனங்கள் எதுவும் இதில் அதிகமில்லை. பொதுவாக தமிழ் சினிமாவில் ரவுடி என்றால் ஒரு தலைவனும் அவனுடைய ஆட்களையும் மாத்திரம் காட்டுவார்கள் அல்லவா? ஆனால் A Dirty Carnival -ல் இம்மாதிரியான ரவுடிக் கூட்டங்களின் படிநிலைகளையும் அவர்களுக்குள்ள விசுவாசத்தையும் பணிவையும் தவிர்க்க இயலாத சிக்கல்களில் செய்யப்படும் துரோகத்தையும் விரிவாக சித்தரிக்கிறார்கள். அந்தவகையில் இந்த திரைப்படம் என்னை ரொம்பவும் கவர்ந்தது. ஒரு Gangster படத்திற்கே உண்டான முடிவு. அது அப்படித்தான் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்த சர்ச்சையில் தொடர்புபடுத்தப்பட்ட இன்னொரு கொரிய திரைப்படமான Rough Cut -க்கிற்கும்  ஜிகர்தண்டாவிற்கும் தொடர்பேயில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். இதில் ஒரு நடிகனுக்கும் ரவுடிக்கும் இடையேயான ஈகோ போராட்டம். A Dirty Carnival -ஐ விட இது இன்னமும் நுட்பமான திரைப்படம். இருவரும் தங்களின் நிலைகளிலிருந்து மறு முனைக்கு தாவ முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் சற்று திகட்டுகிறது.A Dirty Carnival -ஐ போலவே இதன் இறுதிக்காட்சியும் அதன் தர்க்கத்தை மீறாமல் அமைந்திருக்கிறது. எவ்வளவுதான் முயன்றாலும் அவர்களின் நிலைகளிலிருந்து மாற முடிவதில்லை. புலிவால் பிடித்த கதைதான். பாலச்சந்தர் இயக்கி 'தப்புத்தாளங்கள்' என்றொரு தமிழ் திரைப்படம் வந்திருந்தது. ஒரு ஆண் ரவுடியும் ஒரு பெண் பாலியல் தொழிலாளியும் தங்களின் நிலைகளிலிருந்து மாறி  வெளிவந்து மைய நீரோட்டத்திற்குள் புக முயல்வார்கள். ஆனால் இந்த சமூகத்தில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அபத்தமான சூழல் மறுமறுபடியும் அவர்களை அதிலேயே தள்ளும் பரிதாபம்தான் மிஞ்சும். ஜிகர்தண்டாவில் இந்த உருமாற்றம் இறுதிக்காட்சியில் மாத்திரம் செயற்கையாக துருத்திக் கொண்டிருந்தது.

இது போன்ற சர்ச்சைகளை இளம் தமிழ் இயக்குநர்கள் தவிர்க்க முடியும் முன்பு அதிகம் பாராட்டப்பட்ட மூடர் கூடமும் கொரிய திரைப்படத்தின் நகல் என்று பிற்பாடு தெரியவரும் போது சற்று ஆயாசமாய் இருக்கிறது. தமிழில் உருமாற்றுவதற்காக அவர்கள் செய்யும் அத்தனை உழைப்பும் இது போன்ற சர்ச்சைகளின் மூலம் காலியாகி விடுகிறது. நம் தமிழ் கலாசார பின்னணிகளிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் எத்தனையோ சுவாரசியமான திரைக்கதைகளை உருவாக்கலாம். கொஞ்சம் நுட்பமான அப்சர்வேஷனும் கற்பனைத் திறனும் வேண்டும், அவ்வளவுதான்.

மற்ற வழக்கமான சமகால தமிழ் சினிமாக்களுக்கு இடையில் ஜிகர்தண்டா நிச்சயம் ஒரு மாறுதலான முயற்சி. பார்வையாளர்கள் உற்சாகமாக ரசிக்கிறார்கள்.  படத்திற்குள் நிறைய சுவாரசியமான நகைச்சுவை குறுங்கதைகள் உள்ளன. ஆனாலும் ஒட்டுமொத்த நோக்கில்  இதுவொரு முழுமையான முயற்சியாக அமையவில்லை. திரைக்கதையிலும் பாத்திர வடிவமைப்புகளிலும்  பல பிசிறுகள் உள்ளன. தர்க்க ரீதியான முரண்கள் உள்ளன. படத்தின் இரண்டாம் பகுதி இன்னமும் கச்சிதமாக திருத்தப்பட்டிருக்க வேண்டும். ரவுடியானவன் இறுதியில் தன்னை நடிகனாக ஒருவாறாக ஒப்புக் கொள்ளும் மனநிலை சார்ந்த உருமாற்றம் போதுமான அளவு இல்லாவிட்டாலும் கூட இயல்பாக நிகழ்கிறது என்றாலும் இளம் இயக்குநருக்குள் அந்த மாஃபியா தன்மை படிந்து அவன் ஒரு கேங்க்ஸ்ர் தன்மை கொண்டவனாக நிகழும் உருமாற்றம் கவித்துவ நீதியாக அமையலாம் என்கிற நோக்கில் இணைக்கப்பட்டு ஆனால் செயற்கைத்தனமாக துருத்திக் கொண்டு நிற்கிறது. ஆரண்ய காண்டத்தைப் போன்று ஒரு கச்சிதமான நிறைவு இதில் அமையவில்லை. என்றாலும் இயக்குநர் கார்த்திக்கின் வருங்கால திரைப்படங்களில் அவர் இந்த முழுமையை நோக்கி பயணிப்பார் என்று நம்புவதற்கான தடயங்கள் ஜிகர்தண்டாவில் உள்ளன.

- உயிர்மை - செப்டெம்பர் 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
suresh kannan

3 comments:

Singara Velan said...

Good Review

Singara Velan said...

MGR,சிவாஜி, AVM, ரஜினி, கமல், SPமுத்துராமன் போன்ற மிக பெரிய மசாலா உற்பத்தியாகும் இடத்தில் வீடு, உதிரிபூக்கள் போன்ற படங்களால் எந்த மாற்றத்தாயும் ஏற்படுத்திவிட முடியாது. போன்ற படங்கள் வந்திருந்தால் நிச்சயம் ஒரு மிக பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

அப்பாவி ரசிகன் said...

இத்திரைப்படத்தின் திரைக்கதை நேர்க்கோட்டு வடிவத்தின் பாவனையில் இயங்கினாலும் ஆங்காங்கே மெட்டா பிக்ஷன் வகையில் மூன்று நான்கு இழையின் அடுக்குகளை ஒன்றன் பின்னாக ஒளித்து வைத்து முன்னும் பின்னுமாக அநேர்க்கோட்டு வடிவத்திலும் இயங்குகிறது////
.
.
இதெல்லாம் இயக்குனருக்கு தெரியுமாப்பா?