Thursday, August 28, 2014

சிங்கள சினிமா: With you, Without you. - போரும் மன்னிப்பும்




சிங்கள திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேவின் அண்மைய திரைப்படமான Oba Nathuwa Oba Ekka (ஆங்கிலத்தில், With you, Without You) 2012-ல் வெளியாகி சர்வதேச அளவில் விருதுகளையும் பரவலான கவனத்தையும் விமர்சகர்களிடையே பாராட்டுக்களையும் பெற்றிருந்தாலும் அதன் அரசியல்தன்மை காரணமாக இலங்கையில் இன்னமும் திரையிடப்பட முடியாத நிலையில் இருக்கிறது. இது போன்ற தடைகள் பிரசன்னவிற்கு புதிதல்ல. இவரது முந்தைய திரைப்படங்களுள் ஒன்றான Purahanda Kaluwara (Death on a Full Moon Day, 1997) இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டது. பிரசன்ன வழக்குத் தொடர்ந்ததின் காரணமாக ஏறத்தாழ ஒரு வருட போராட்டத்திற்குப் பின் இலங்கை உச்சநீதி மன்றத்தின் மூலமாக தடை விலகி அதற்கான நஷ்டஈடும் வழங்கப்பட்டு பிறகு வெளியாகி வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.

போரும் அதற்குப் பிந்தைய சூழலும் அந்தச் சமூகத்தின் தனிநபர்களின் இயல்பான வாழ்வை தலைகீழாக கலைத்துப் போடும் துயரங்களையே  பெரும்பாலான பிரசன்னவின் சினிமாக்கள் மையப்படுத்துகின்றன.  அவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள், வன்கொடுமைகள், மனிதஉரிமை மீறல்கள், பொருளிழப்புகள், குறிப்பாக அவர்களின் உளவியல் ரீதியான சிக்கல்கள் போன்றவற்றை இவரின் படைப்புகள் இயல்பான தொனியில் கவனப்படுத்துகின்றன.  மனிதர்கள் மாத்திரமல்ல, 2003-ல் வெளியான “Ira Madiyama” (August Sun) என்கிற திரைப்படத்தில் புலிகள் இசுலாமியர்களின் மீது மேற்கொண்ட வெளியேற்றத்தின் காரணமாக ஒரு சிறுவனுக்கும் அவனது வளர்ப்பு நாய்க்கும் ஏற்படும் பிரிவும் கூட அதற்கேயுரிய துயரத்தின் வலியுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னுள்ள அரசியலை கலையமைதியுடனும் ஒரு கலைஞனுக்கேயுரிய பொறுப்புடனும் எவ்வித மனச்சாய்வில்லாத பார்வையுடனும் தமது திரைப்படங்களில் பிரசன்ன கையாள்கிறார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பொதுவாக போர் தொடர்பான திரைப்படமென்றதும் அதன் காட்சிகளில் சாகசங்களைக் கூடி ஹாலிவுட் பாணியில் அதை ரொமாண்டிசைஸ் செய்வதும் சோகத்தைக் கூட்டி மெலோடிராமாவாக ஆக்கும் அபத்தங்களும் பிரசன்னவின் திரைப்படங்களில் இல்லை.

2012-ல் உருவாக்கப்பட்ட With you, Without You திரைப்படமானது ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பின் சென்னையில் திரையிடப்பட்ட போது ஏற்பட்ட சிறு பரபரப்பின் காரணமாகவே அதன் மீது பரவலான பொது பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. இதன் காரணமாகவே இந்த சூழலை உருவாக்கியவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். சென்னையின் ஒரு மல்டிபெக்ஸ் திரையரங்கில் இது திரையிடப்பட்ட போது சில அநாமதேயர்களின் எதிர்ப்புகளாலும் மிரட்டல்களாலும் முதல் நாளிலேயே திரையிடல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்குப் பின்னணியில் தமிழ் தேசிய அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் இருப்பதாக  திரைஆர்வலர்களிடையே ஒரு புகார் எழுந்த போது எந்தவொரு தமிழ் அமைப்பின் பிரதிநதியும் இதற்குப் பொறுப்பேற்காமல் அவ்வாறாக குற்றஞ்சாட்டப்பட்டதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்கள்.

இதன் பிறகு தமிழ் ஸ்டுடியோ என்கிற திரைஇயக்கத்தைச் சார்ந்த அருண் ஒழுங்கு செய்திருந்த ஏற்பாட்டின் காரணமாக இத்திரைப்படம் பார்வையாளர்களுக்காக சென்னையில் ஒரு தனியார் அரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் பிரசன்ன விதானகேவும் வந்திருந்தார். அரங்கம் முழுமையாக நிறைந்து மேலும் பலர் நின்றவாறே படம் பார்த்தனர்.  திரையிடல் மிக அமைதியாக நடந்தது. படம் முடிந்ததும் சில நபர்களிடமிருந்து இத்திரைப்படத்திலுள்ள அரசியல் சார்ந்து ஆவேசமான கேள்விகள் எழும்பின. திரையரங்கை எவரும் மிரட்டவில்லை என்று முன்னர் தமிழ் தேசியர்கள் அளித்த அறிக்கையில் உண்மையில்லை என்பதை இந்த ஆவேசக் கேள்விகளே மறைமுகமாக அம்பலப்படுத்தி விட்டதோ என்று எழுகிற சந்தேகத்தை எவரும் புறக்கணித்து விட முடியாது.

ஒரு கலைப் பிரதியை எவ்வாறு சரியான நோக்குடன் அணுகுவது என்கிற புரிதல் சற்றும் இன்றி பிரதேசமும் இனமும் சார்ந்த கண்மூடித்தனமான பற்றுதலுடனும் மிகையுணர்ச்சிகளுடனும் எழுப்பப்பட்ட அந்தக் கேள்விகளில் பல அபத்தமானவை. சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும் ஒரு திரைப்படைப்பாளியை அணுகுகிற மதிப்பும் இணக்கமும் அல்லாமல் ஏதோ இலங்கையின் வெளியுறவுத் துறையின் அமைச்சரே அங்கு நின்று கொண்டிருந்தது போல அந்த நபர்கள் தங்கள் ஆவேசங்களை இயக்குநரின் மீது வீசிக் கொண்டேயிருந்தனர். பிரசன்ன இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருந்தும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை அவசரமாக முடித்தனர். இந்தச் சந்தடியில் இயக்குநரின் கைகளைப் பற்றி "சிறப்பானதொரு திரைப்படத்தை தந்திருக்கிறீர்கள். வாழ்த்துகளும் நன்றியும்' என்று மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. திரைப்படம் தொடர்பாக நான் நினைத்திருந்த சில கேள்விகளை கேட்கும் வாய்ப்பு அமையவில்லை.

அந்த குறிப்பிட்ட சில பார்வையாளர்கள் மாத்திரமல்ல, இணையத்தில் இத்திரைப்படம் குறித்து எழுதப்பட்ட சில கேள்விகள் அபத்தமானவையாக எனக்குத் தோன்றியது. அது குறித்து பின்னர் பார்ப்போம். அதற்கு முன்பு இத்திரைப்படம் பற்றி...


()


இலங்கையின் மலையக  சிறுநகரத்தில் அடகுக்கடை நடத்துபவர் சரத்ஸ்றி. நடுத்தர வயது மனிதர். வட்டித் தொழில் செய்யும் மனிதர்களுக்கேயுரிய கறார்தனமும் கருணையற்ற தன்மையும் கொண்டவராக இருக்கிறார். போர் சூழல் காரணமாக இடம் பெயர்ந்த தமிழர்கள் உள்ளிட்ட தேநீர் தோட்டத் தொழிலாளிகள் தங்களின் வறுமை காரணமாக பொருட்களை அடகு வைப்பதும் சிரமத்துடன் அவைகளை மீட்பதுமாக இருக்கிறார்கள். அங்குள்ள டீ எஸ்டேட்டுகளில் ஒரு துண்டு நிலத்தையாவது வாங்கி விட வேண்டும் என்பது சரத்ஸ்ரியின் கனவு. செல்வி எனும் இளம் தமிழ் பெண் அடகுக் கடைக்கு அடிக்கடி வந்து செல்கிறாள். தொடர்ந்து அவள் பொருட்களை அடகு வைப்பதன் மூலம் மிகுந்த வறுமையில் இருக்கிறாள் என தெரிய வருகிறது. அவளின் எளிமையான தோற்றம் சரத்ஸ்றிக்குள் சலனத்தை ஏற்படுத்துகிறது. தன் இயல்பிற்கு மாறாக அடகுப் பொருட்கள் அல்லாமல் கடனாக கூட அவளுக்கு பணம் தர முன்வருகிறார். ஆனால் செல்வி அதை சுயமரியாதையுடன் மறுத்து விடுகிறாள். இதனால் அவள் மீது இன்னமும் மதிப்பும் அன்பும் கூடுகிறது. அவளை திருமணம் செய்ய உத்தேசிக்கிறார். தன்னிடம் பணிபுரியும் தமிழ் பெண்மணி மூலமாக செல்வியிடம் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.

சிங்கள ராணுவத்தின் வன்கொடுமைகள் காரணமாக தன்னுடைய பெற்றோர்களையும் சகோதரர்களையும் இழந்து அநாதையாகியிருக்கும் செல்வி தன்னுடைய உறவினர்களின் வீட்டில் அண்டியிருக்கிறாள். அங்கு வேண்டாத விருந்தாளி போல நடத்தப்படுகிறாள். அவளை ஒரு பணக்கார பெரியவருக்கு திருமணம் செய்து தரும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த சிக்கலான சூழலில் தன்னிடம் பிரியம் செலுத்தும் சரத்ஸ்ரியிடம் அடைக்கலமாக சேர்வது அவளுக்கு நல்ல தேர்வாகப் படுகிறது. திருமணம் நடக்கிறது. சரத்ஸ்ரியின் பின்னணி பற்றி செல்வி அறிய முயலும் போது அதை வெளிப்படுத்த அவர் விரும்புவதில்லை. 'நானும் உன்னை ஏதும் கேட்கவில்லை, நீயும் ஏதும் கேட்காதே' என்கிறார். என்றாலும் இருவரின் பரஸ்பர அன்பு காரணமாக இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.

சரத்ஸ்றியின் நண்பன் காமினி அங்கு விருந்தாளியாக வருகிறான். அவன் சிங்கள ராணுவத்தில் பணிபுரிபவன் என்பதும் சரத்ஸ்றியும் முன்னாள் ராணுவத்தினன் என்கிற செய்தி செல்வியின் மனநிலையை வெகுவாக பாதிக்கிறது. காமினியும் இன்னும் சில ராணுவக்கூட்டாளிகளும் சேர்ந்து தமிழ்ப் பெண்களை வன்கலவி செய்து விடுகின்றனர். இது குறித்த ராணுவ விசாரணையின் போது சரத்ஸ்றி, 'அவர்கள் அந்த நேரத்தில் என்னுடன்தான் இருந்தார்கள்' என்று பொய் சாட்சி சொல்லி அவர்களை தப்பிக்க விடுகிறார். பின்னர் இந்தக் குற்றவுணர்வின் கனம் தாங்காமல் அங்கிருந்து விலகி அடகுத் தொழில் செய்து கொண்டிருக்கிறார். சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்கள் காரணமாக தன்னுடைய குடும்பத்தையே இழந்து நிற்கும் செல்விக்கு தன்னுடைய கணவரும் அந்த அமைப்பின் ஒருபகுதியாக இருந்தவர் என்பதை அறியும் போது அவருடனான நெருக்கமான மனநிலையிலிருந்தும் பிரியத்திலிருந்தும் விலகி விடுகிறாள்.  இருவருக்கும் ஏற்படும் சச்சரவுகள் தொடர்கின்றன.

என்றாலும் செல்வியின் சிக்கலான மனநிலையை அனுதாபத்துடன் புரிந்து கொள்ளும் சரத்ஸ்றி மேலதிகமாகவே தன்னுடைய பிரியத்தை தொடர்கிறார். தன்னுடைய நிலம் வாங்கும் கனவையெல்லாம் ஒதுக்கி விட்டு தன் தொழிலை விற்று விட்டு செல்வி முந்தையதொரு சமயத்தில் விவரித்திருந்த ஆவலின் படி இந்தியாவிற்கு செல்லவும் தீர்மானிக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்குகிறார். செல்விக்கு அவர் மீதுள்ள பிரியம் பெரிதும் விலகாதிருந்த போதிலும் சிங்கள ராணுவம் அவளுடைய குடும்பத்தை சிதைத்திருப்பதின் பாதிப்பு காரணமாக சரத்ஸ்றியை  முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாததொரு நிலையில் தத்தளிக்கிறாள். இந்த மனநெருக்கடியின் உச்சத்தில் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

()

நேர்க்கோட்டில் விவரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையை இயக்குநர் பிரசன்னா நான்-லீனியர் திரைக்கதை தன்மையுடனான உத்தியில் ஆனால் எந்தவொரு சிக்கலும் அல்லாமல் மிகத் தெளிவாக உருவாக்கியிருக்கிறார். செல்வியின் தற்கொலைக் காட்சியோடுதான் திரைப்படம் துவங்குகிறது. அதன் துயரத்துடன் சரத்ஸ்றி தனக்குள் நிகழ்த்திக் கொள்ளும் அந்தரங்கமான உரையாடல்களின் மூலம் காட்சிகள் விரிகின்றன. "நீ விரும்பிய வேறு எவருடராவது சென்றிருக்கலாமே, அப்போது திரும்பி ஒரேயொரு ஒரு புன்னகையை எனக்குத் தந்திருந்தால் எனக்கது போதுமானதாக இருந்திருக்குமே" என்பதாக சரத்ஸ்றியின் மனப்பதிவும் "என்னுடைய அன்பை முழுமையாக மனப்பூர்வமாக உங்களுக்கு வழங்க இயலவில்லை. ஆகவே உங்களை விட்டு விலகுகிறேன்" என்பதாக செல்வியின் மனப்பதிவும் இந்த உரையாடல்களில் வெளிப்படுகின்றன.

1876-ல் எழுதப்பட்ட ப்யோதர் தஸ்தயெவ்ஸ்கியின் சிறுகதையான 'A Gentle Creature' -ஐ தழுவி இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதே சிறுகதையின் தழுவலோடு ஏற்கெனவே இதுவரை ஐந்து திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பிரெஞ்சு இயக்குநர் ராபர்ட் ப்ரெஸ்ஸானின் 'A Gentle Woman' (1969), இந்திய இயக்குநர் மணிகெளலின் நாஸர் (1998) ஆகியவை இதில் அடக்கம். தனிநபர்களின் அகரீதியான சிக்கல்களும் உளவியல் பாதிப்புகளும் குற்றவுணர்ச்சிகளும் புனைவுகளின் மூலமாக வெளிப்படுவது தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம். அது இந்தச் சிறுகதையில் வெளிப்பட்டிருப்பதைப் போலவே திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக பதிவாகியிருக்கிறது.

செல்வியை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய முழுமையான அன்பை அவள் மீது பொழிவதின் மூலம் தன்னுடைய கடந்த கால குற்றவுணர்ச்சிகளிலிருந்து மீண்டு புதியதொரு வாழ்வை துவங்குவது சரத்ஸ்றியின் நோக்கமாக இருக்கிறது. சிங்கள ராணுவத்தின் அத்துமீறல்கள் மூலம் தமிழர்களின் சொத்துக்களும் பெண்களின் கற்பும் சூறையாடப்பட்டதின் கடந்த கால குற்றவுணர்வில் அவர் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கலாம். எனவேதான் அவர் தன்னைப் பற்றிய எந்தவொரு விவரத்தையும் செல்வியிடம் சொல்வதில்லை. ஆனால் அவருடைய ராணுவ நண்பனின் மூலம் உண்மை வெளிப்படும் போது செல்வியின் நம்பிக்கையை இழக்கிறார். எந்தவொரு உணர்வினாலும் ஒட்டப்படவே முடியாத ஒரு விரிசல் அந்த உறவில் நேர்கிறது. இதன் காரணமாக கணவரிடமிருந்து வெளிப்படுவது முழுமையான தூய அன்பாக இருந்தாலும் கடந்த கால கசப்புகளினால் அதை ஏற்கவும் முடியாத திருப்பிச் செலுத்தவும் முடியாததொரு மனஉளைச்சலில் செல்வி உயிர் நீக்கிறாள். போர் எழுப்பும் கொடுமையான வரலாற்று கடும்புழுதி தனிமனித உறவுகளின் மீது கசப்பாக படிந்து அவர்களை பரஸ்பர விரோதிகளாக்குகிறது.

அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஒரு சில நபர்கள் தங்களின் நிலைகளை அழுத்தமாக ஸ்தாபித்துக் கொள்வதற்காக எடுக்கும் அரசியல் முடிவுகளினால் ஏற்படும் போர்களின் காரணமாக ஒட்டுமொத்தமாக இரு பிரதேசங்களுமே பரஸ்பரம் பகையாளிகளாக உருமாறும் மாயத் தோற்றம் உருவாகிறது. இந்த முடிவுகளுக்குத் தொடர்பேயில்லாத லட்சக்கணக்கான தனிமனிதர்கள் பல்வேறு வகைகளினால் ஏற்படும் துயரத்தின் மூலம் அல்லறுகிறார்கள். முன்பின் அறிமுகமேயில்லாத ஓர் அந்நியரை பகையாளிகளின் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்கிற ஒரே காரணத்திற்காகவே உடனே கொல்லத்துணிகிற மூர்க்கங்களை இந்தப் போர்களும் போர் பிரச்சாரங்களும் சிலருக்கு ஏற்படுத்துகின்றன. ஆனால் இவை அரசியில் பின்னணியும் மிகையுணர்ச்சியும் கொண்ட குறுங்குழுக்கள் மாத்தி்ரமே. இதர கோடிக்கணக்கான நபர்கள் போரையும் அதன் விளைவுகளையும் வெறுக்கத்தான் செய்கிறார்கள். இதன் மீது பகைமை நீள்வதை அவர்கள் விரும்புவதில்லை. போரைச் சந்தித்திராத ஒரு சமூகத்தினால் எவ்வளவு விளக்கினாலும் அதன் கொடுமையை அது அறிய முடிந்திராது. மாறாக அவர்களின் வரவேற்பறையின் அரசியல் விவாதங்களுக்கே அவை பயன்படும்.

செல்வியின் அன்பு மறுக்கப்படுவதை உணரச் சகியாத சரத்ஸ்ரி அவளின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோருகிறான். இனமும் மொழியும் பிரதேசமுமான கற்பிதங்களைத் தாண்டி ஒரு மனிதன் தனக்குள் உறைந்திருக்கும் மூர்க்கங்களை விலக்கி அதன் பின் உறைந்திருக்கும் ஆன்மீக அன்பு காரணமாக வந்து சேரும் இடம் இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த கற்பிதங்களைக் கொள்ளாத சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த ஒரு உன்னதமான கலைஞனும் தன்னுடைய படைப்புகளை இதை நோக்கியே வலியுறுத்துவான். பகைமை இன்னமும் நீள்வதற்கான செயல்களை அல்ல. பிரசன்ன இத்திரைப்படத்தின் மூலமும் இதையே வலியுறுத்துகிறார்.

()

இத்திரைப்படம் பெரும்பாலும் அண்மைக் கோணத்தில் அமைந்த காட்சிகளினாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. போர்களினால் ஏற்படும் இழப்புகளை சந்திக்கும் எந்தவொரு சமூகத்திற்கும் இந்தப் படைப்பு பொருந்தும் என்பதால் நிலவெளிக்காட்சிகள் மட்டுப்படுத்தப்பட்டு  மனிதர்களின் முகங்களும் உணர்வுகளும் பிரதானமாக வெளிப்படும் சட்டகங்களின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிக சாவகாசமான காட்சிகள் அதன் அழகியல் உணர்வுகளோடு நகர்கின்றன. எந்தவொரு போர்க்காட்சியையும் வன்முறைக் காட்சியையும் காண்பிக்காமலேயே அது தனிநபர்களின் உள்ளத்தில் ஆறாத வடுவாய் உறைந்திருக்கும் துயரத்தை பிரசன்னவின் இந்த சினிமா அற்புதமாக வெளிப்படுத்தி விடுகிறது.

சரத்ஸ்றியாக நாடக உலகில் மிகுந்த அனுபவத்தைப் பெற்றிருக்கும் ஷ்யாம் பெர்ணாண்டோ நடித்திருக்கிறார். இதுவே அவரது அறிமுகத் திரைப்படம். ராபர்ட் ப்ரெஸ்ஸானின் திரைப்படங்களில் வரும் பிரதான பாத்திரங்களைப் போலவே பெரிதும் உணர்ச்சியை வெளிப்படுத்தாத இறுக்கமான உடல்மொழியின் மூலம் அவருடைய பாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படத்தின் படி  WWF விளையாட்டுச் சண்டையை பார்த்துக் கொண்டிருப்பதுதான் இவரது ஒரே பொழுதுபோக்கு. ராணுவத்திலிருந்து விலகி விட்டாலும் உடல் வலிமையை நிரூபிக்கும் சாகசமானது இவரது மனதிலிருந்து விலகவில்லை என்பதாகவே இதை பொருள் கொள்ளலாம். போலவே செல்விக்கும் தமிழ்த்திரைப்படங்களை பார்ப்பதும் பாடல்கள் கேட்பதும் தமிழகத்தை காண்பதும் விருப்பமானதாக இருக்கிறது. தாயகம் குறித்த ஏக்கமே இதன் அடையாளம். செல்வியாக இந்திய நடிகையான அஞ்சலி பாட்டில் அற்புதமாக நடித்துள்ளார். சரத்ஸ்றியிடம் தன்னுடைய பிரியத்தையும் அதற்கு முரணாக தன் வெறுப்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் இவரது முகபாவங்கள் மிக இயல்பாக பதிவாகியுள்ளன. பாத்திரங்களின் தன்மைகளும் அவைகளின் பிரத்யேக குணாதிசயங்களும் மிகுந்த திட்டமிடுதல்களுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டதற்கு இவை சிறு உதாரணம்.

இதன் மீதான விமர்சனங்களைப் பார்ப்போம். "போருக்குப் பிந்தைய ஒரு சிங்கள சமூகத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்கள் சினிமா பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தமிழ் பக்திப் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. இதன் மூலம் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மழுப்பப்பட்டு தமிழ் மக்கள் அங்கு மகிழ்ச்சியாகவும் சிங்களர்களுடன் இணக்கமாகவும் வாழ்கின்றனர் என்கிற பொய்ச் செய்தியை பரப்புரை செய்ய முயலும் இலங்கை அரசிற்கு இத்திரைப்படம் உதவுகிறது" என்பது ஒரு குற்றச்சாட்டு.

சரத்ஸ்றியின் அடகுக் கடையில் பல தமிழர்கள் தங்களின் பொருட்களை அடகு வைக்க தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றனர். ஒரு தமிழ்ப் பெரியவர் கடை எப்போது திறக்கும் என கேட்டுக் கொண்டேயிருக்கிறார். ஒரு தமிழ்ப் பெண் தன்னுடைய தாலியை கண்ணீருடன் அடகு வைக்கிறார். அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் வறுமையின் பிடியில் தவிக்கிறார்கள் என்பது நுண்தகவல்களாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதையெல்லாம் விட்டு விட்டு அவர்கள் திரைப்படம் பார்க்கும் ஒரு காட்சியை வைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று மொண்ணையாக புரிந்து கொள்வதை என்ன சொல்வது? மிகையுணர்ச்சியைக் கொண்ட தமிழ் திரைப்படங்களாகவே பார்த்து பார்த்து பழகின நபர்களுக்கு  போருக்குப் பிந்தைய சமூகத்தில் தலையில் ரத்தம் சிந்த சிந்த அழுது கொண்டே ஓடிவரும் குழந்தைகள் மாதிரியான பிம்பங்களை அடுக்கினால்தான் மனம் நிறைவுறுமா? இடையறாத துன்பத்திற்கு இடையிலும் அவர்கள் சற்று இளைப்பாறும் புன்னகைக்கும் தருணங்களே இருக்காதா? அல்லது ராஜபக்ஷேவை நினைவுப்படுத்தும் உருவத்தைக் கொண்ட ஒரு நபரை ஹீரோ அடித்துத் துவைக்கும் காட்சிகள் இருந்திருந்தால் ஒருவேளை இவர்கள் திருப்தியுற்றிருப்பார்களோ?

"வசனங்களின் சில இடங்களில் புலிகள் 'தீவிரவாதிகள்' என்று குறிக்கப்படுகிறார்கள் அவைகளை நீக்க வேண்டும்" என்பது இன்னொரு புகார்.  இது தொடர்பான வசனங்கள் சிங்கள ராணுவத்தினர்களாக சித்தரிக்கப்படும் பாத்திரங்கள் பேசுவது. அவர்களின் நோக்கில் அவ்வாறுதான் பேச இயலும். அப்போதுதான் காட்சிகளின் நம்பகத்தன்மை கூடும். தமிழ் சினிமாக்கள் அதிகாரத்திற்கும் சென்சாருக்கும் பயந்து கொண்டு காட்சிகளையும் வசனங்களையும் மழுப்புவது போல சிறந்த சினிமாவை உருவாக்க முனையும் சர்வதேச படைப்பாளியும் மனச்சாட்சியை கைவிட்டு செய்ய முடியுமா? 'இதில் ஏன் ஆண் தமிழராகவும் பெண் சிங்களராகவும் இருக்கக்கூடாது?" என்று இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. ஆண்மையவாத மனநிலையிலிருந்து உருவாகும் அபத்தங்களே இவை.

இவ்வாறான சிறு தகவல்களை தவறாகப் புரிந்து கொண்டு ஒரு படைப்பை நிராகரிப்பதை விட அதன் மையம் எதை நோக்கி நகர்கிறது என்பதை புரிந்து கொண்டால் படைப்பாளியின் நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். "நாங்கள் தவறு செய்துவிட்டோம். எங்களை மன்னித்து விடு" என்று ஒரு சிங்கள ராணுவத்தின் பிரதிநிதி, தமிழ்ப் பெண்ணின் பிரதிநிதியிடம் காலில் விழுந்து கதறியழுகிறான். சிங்கள ராணுவத்தின் அத்தனை அத்துமீறல்களும் இந்த ஒற்றைக் காட்சியிலேயே வாக்குமூலமாக வெளிப்பட்டு விடுகிறது. ஏற்கெனவே தம்முடைய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடையை சந்தித்த இயக்குநர், இதுவும் தடை செய்யப்படலாம் என்பதை யூகித்தும் மிக துணிவுடன் இப்படியொரு காட்சியை ஒரு சிங்கள இயக்குநர் சித்தரித்ததற்கு உண்மையில் அவரைப் பாராட்ட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக உணர்ச்சியில் கொந்தளிக்கும் தமிழகத்தில் கூட இந்தப் பிரச்சினை குறித்த ஒரு துணிவான அரசியல் சினிமா உருவாகவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது.

அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் போர்களுக்கும் அது தொடர்பான குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் அதன் ஒட்டு மொத்த சமூகத்தையே வெறுப்பதும் பகையுடன் நோக்குவதும் அபத்தமானது. தமிழர்களைப் போலவே இந்தப் போரினால் அவதியுறும் சாதாரண சிங்கள மனிதர்களும் இருக்கிறார்கள். தமிழர்களுக்காக போராடும் மனச்சாட்சியுள்ள சிங்கள பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். அனுதாபிகள் இருக்கிறார்கள். பிரசன்னவைப் போன்ற திரைப்படைப்பாளிகள் இருக்கிறார்கள். இதற்காக இலங்கை அரசின் அடக்குமுறைகளையும் உயிர் ஆபத்துக்களையும் எதிர்கொள்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஊடகங்கள் தரும் மிகைவெறுப்புடன் தரும் செய்திகளினால் பாதிக்கப்பட்டு சிங்களன் என்றவுடனேயே நரம்பு புடைத்து கோபப்பட தேவையில்லை. தமிழகத்திற்கு வரும் சாதாரண சிங்கள பயணிகளை, பெளத்த துறவிகளை தாக்க வேண்டியதில்லை. இது தொடர்பான போராட்டங்களும் கோபமும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் முடிவுகளை தீர்மானிப்பவர்களையும் நோக்கியே இருக்க வேண்டும். சாதாரண அப்பாவிகள் நோக்கியல்ல. தார்மீக மனநிலையில் இயங்கும் படைப்பாளிகள் மீதல்ல.

உலகத்தின் மற்ற நாடுகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் விருதுகளையும் பெறும் ஒரு திரைப்படம், அது உரையாடும் பிரச்சினைகள் மையம் கொண்டிருக்கும் பிரதேசங்களில் திரையிடப்பட இயலாமல் தடையையும் எதிர்ப்பையும் சம்பாதிப்பது விநோதமானது. பிரசன்னவின் இந்த சினிமா அதன் மீது திணிக்கப்பட்ட அரசியல் வெறுப்புகளைத் தாண்டி எவ்வித தடையுமில்லாமல் திரையிடப்படுவதே இதன் மீது பதிவாகியுள்ள தவறான முன்முடிவுகளுக்கு தீர்வாக இருக்கும். இத்திரைப்படம் தவறா அல்லவா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். அரசியல் நோக்கமும் ஆதாயமும் உள்ள மிகையுணர்ச்சியில் இயங்கும் குழுக்கள் அல்ல. 

(காட்சிப் பிழை, ஆகஸ்டு  2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)     

suresh kannan

No comments: