Sunday, August 31, 2014

மாதொருபாகன் - பாலியலின் ஒரு ரகசியக் கதவு



பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' புதினத்தை வாசித்தேன்.

இதன் உள்ளடக்கம் காரணமாகவே இந்தப் புதினம் தமிழ் சமூகத்தில் மிக அதிகமான சர்ச்சைகளையும் அதன் மீதான உரையாடல்களையும் அதன் மீதான கலாசார தெளிவுகளையும் பெற்றிருக்க வேண்டும். அதுவே இந்த நூலின் வெற்றியாக அமைந்திருக்க முடியும். ஆனால் அப்படியேதும் நடைபெறாதது நம்முடைய வாசிப்பின் போதாமையையும் ரசனை வறட்சியையுமே சுட்டுகிறது. ஒரு சமூகக் குழுவின் கலாசார பின்புலத்தையும் அதன் தொன்மத்தையும் வரலாற்றுக் குறிப்புகளையும் ஒரு புனைவின் பாவனையில் கடந்து செல்வது மிக சிக்கலானதொரு பணி. பெருமாள் முருகனின் பல படைப்புகள் இந்தக் கடினமான பணியை இலகுவான மொழியில் சாத்தியமாக்குகின்றன. திருமணமாகாமல் தட்டிக் கொண்டே போகும் ஒரு கவுண்டர் சமூகத்து இளைஞனின் உளச்சிக்கல்களை இதற்கு முந்தைய 'கங்கணம்' என்கிற நாவல் விளக்கிச் செல்கிறது என்றால் 'மாதொருபாகன்" குழந்தைப் பேறில்லா ஒரு தம்பதியினர் எதிர்கொள்ளும் சமூக மற்றும் உளச்சிக்கல்களை விவரித்துச் செல்கிறது.

தமிழர்களின் நுட்பமான கலாசார பின்புலங்களுக்கும் நாகரிகங்களுக்கும் எத்தனையோ விஷயங்கள் மிகையுணர்ச்சியோடும் பெருமையோடும் மேடைகளில் உதாரணம் காட்டப்படுகின்றன. ஆனால் பாலியல் விஷயங்கள் என்றால் மாத்திரம் ஒரு அசூயையோடு அதைக் கடந்து ஆனால் ரகசியக் கண்களால் உற்று  நோக்கிக் கொண்டேயிருக்கும் ஒரு போலித்தனம் இச்சமூகத்தில் எப்போது நுழைந்தது என்று தெரியவில்லை. பாலியல் சமாச்சாரங்களை மேற்குலகு விஞ்ஞான ரீதியாக அணுகுவதற்கு முன்பாகவே அதை ஆன்மீகத்துடன் இணைத்து இலைமறை காயாக புரிந்து கொள்ளும் வண்ணம் பல புடைப்புச் சிற்பங்களும் பாடல்களும் உருவாக்கப்பட்டிருந்தன.அதன் நுட்பத்தை பொறுமையாக திறந்து பார்க்கும் ஞானம்தான் நமக்கு வாய்க்கவிலலை. குழந்தைப் பேறின்மைக்கு நூலாசிரியர் விவரிக்கும் சமூகத்திலேயே ஒரு நுட்பமான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதைக் குற்றவுணர்ச்சியில்லாமல் கையாள்வதற்கு ஏதுவாக ஆன்மீகத்துடன் பிணைத்தும் வைக்கப்பட்டிருக்கிறது. 'ஒருவனுக்கு ஒருத்தி' என்கிற போலியான ஒழுக்க மதிப்பீடுகள், மனித குலம் ஏற்படுத்தியிருக்கும் கற்பிதங்கள் இயற்கைக்கு எதிரானவை. நிலவுடமைச் சமுதாயச் சிந்தனையின் தொடர்ச்சியாக திருமணம், குடும்பம், வாரிசு போன்ற நிறுவனங்களை தோற்றுவித்த மனித குலம் தான் விரித்து வைத்திருக்கும் வலையில் தானே மாட்டித் தவிப்பது பரிதாபத்துக்குரிய விஷயம்.

ஒருபக்கம் பெண்களை தெய்வமாகப் போற்றி பாவனை செய்து இன்னொரு பக்கம் இரண்டு வயது பெண் குழந்தைகளிடம் கூட பாலியல் வன்முறையை நிகழ்த்தும் பாலியல் வறட்சி கொண்ட ஒரு சமூகத்தில் நான் எப்போதும் நினைத்துக் கொள்வது இதுதான். "ஓர் ஆணும் பெண்ணும் மனதார இசைந்து விரும்பி பழக விரும்பினால் அந்த அந்தரங்கம் மதிக்கப்படவேண்டும். அதற்கு எந்தவொரு கற்பிதமும் நிறுவனமும் அமைப்பும் தடையாக இருக்கக்கூடாது,போலியான ஒழுக்க மதீப்பீடுகளைக் கொண்டு அந்த உறவு கொச்சைப்படுத்தப்படக்கூடாது" என்பது. நம் ஆதி காலத்து தாய்வழிசமூகம் இவ்வாறுதான் இருந்தது. பாலியல் வறட்சிகளோ உளச்சிக்கல்களோ வன்முறைகளோ இல்லாமல் அது நிம்மதியாகவே இயங்கியிருக்கக்கூடும். ஆணாதிக்க சுயநலங்கள் உள்நுழைந்தவுடன்தான் பல குழப்பங்கள் ஏற்பட்டன. 'நாகரிக உலகத்திலிருந்து கற்காலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டுமா என்று நீதி சார்ந்த கூச்சல்கள் ஒலிக்கக்கூடும் என்றாலும்  கலாசாரம் என்பது சமூகத்திற்கு சமூகம் வேறுபடும் நிலையில்லாதது என்கிற மேல்நோக்குப் பார்வையில் நோக்கினால் இதைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தப் புதினத்தின் உச்சத்தை நோக்கி பெருமாள் முருகன் தனது வாசகர்களை மிக நிதானமாக தயார்ப்படுத்தி அழைத்துச் செல்கிறார். விடுதலைக்கு முன்பான காலனியாதிக்க காலத்தில் இயங்கும் இந்தப் புதினத்தில் கொங்கு சமுதாயத்தின் பல்வேறு தொன்மங்களை கடந்து செல்ல வேண்டும். என்னதான் பெருமாள் முருகன் கடிவாளத்தை இறுகப் பற்றி சாவகாசப்படுத்தியிருந்தாலும், குழந்தைப் பேறிற்கான பதினான்காம் திருவிழா பற்றிய விவரணையைத் தொட்டதுமே ஒரு திரில்லர் நாவலின் சாகசத்திற்கு இணையாக பரபரக்கிறது. ஒரு கச்சிதமான தருணத்தி்ல் புதினம் நிறைவு பெறுகிறது. தாகூரின் 'சிதைந்த கூடு' என்கிற நெடுங்கதையையொட்டி சத்யஜித்ராய் உருவாக்கிய சாருலதா திரைப்படம், பரஸ்பரம் நம்பிக்கையை இழந்ததொரு தருணத்தில் நிறைவுபெறும்.அதன் தொடர்ச்சியை நாம் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டியதுதான். அவ்வாறான வாசக பங்கேற்பையே இந்தப் புதினமும் கோருகிறது.

குழந்தைப் பேறின்மைக்கு டெஸ்ட் ட்யூப் பேபி, வாடகைத் தாய் என்று பல தீர்வுகளை சமகால விஞ்ஞானம் ஏற்படுத்தி வைத்திருக்கும் போதிலும் அது குறித்தே நாம் பல மனத்தடைகளையும் சந்தேகங்களையும் கொண்டிருக்கும் போது பல ஆண்டுகளுக்கு முன்பு இயங்கிய ஒரு தொன்ம சமூகத்தில் வைக்கப்பட்டிருக்கும் நடைமுறை சார்ந்த யதார்த்தமான தீர்வின் முற்போக்குத்தனம் வியக்க வைக்கிறது.

சமீபத்தில் வந்த மிக முக்கியமானதொரு, அதிகம் உரையாடப்பட வேண்டிய புதினமிது. திருச்செங்கோடு குறித்தான களஆய்வில் கிடைத்த பல அனுபவங்களில் ஓர் உந்துதல்தான் இந்த நாவல் என்கிறார் பெருமாள் முருகன்.ஆய்வின் போது கிடைத்த தரவுகளை வரலாறு சாாந்து விரிவாக எழுதும் எண்ணமிருப்பதாக முன்னுரையில் தெரிவித்திருக்கிறார். அது சாத்தியப்பட்டால் அது தமிழின் முக்கியமானதொரு கலாசார ஆவணப் பதிவாக இருக்கும் என்கிற நம்பிக்கையை இந்தப் புதினம் ஏற்படுத்துகிறது. 

ஆசிரியர்: பெருமாள்முருகன்
பக். 192. விலை ரூ. 140 (2010)
வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம்
669, கே.பி. சாலை
நாகர்கோவில்.

suresh kannan

Thursday, August 28, 2014

சிங்கள சினிமா: With you, Without you. - போரும் மன்னிப்பும்




சிங்கள திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேவின் அண்மைய திரைப்படமான Oba Nathuwa Oba Ekka (ஆங்கிலத்தில், With you, Without You) 2012-ல் வெளியாகி சர்வதேச அளவில் விருதுகளையும் பரவலான கவனத்தையும் விமர்சகர்களிடையே பாராட்டுக்களையும் பெற்றிருந்தாலும் அதன் அரசியல்தன்மை காரணமாக இலங்கையில் இன்னமும் திரையிடப்பட முடியாத நிலையில் இருக்கிறது. இது போன்ற தடைகள் பிரசன்னவிற்கு புதிதல்ல. இவரது முந்தைய திரைப்படங்களுள் ஒன்றான Purahanda Kaluwara (Death on a Full Moon Day, 1997) இலங்கை அரசால் தடைசெய்யப்பட்டது. பிரசன்ன வழக்குத் தொடர்ந்ததின் காரணமாக ஏறத்தாழ ஒரு வருட போராட்டத்திற்குப் பின் இலங்கை உச்சநீதி மன்றத்தின் மூலமாக தடை விலகி அதற்கான நஷ்டஈடும் வழங்கப்பட்டு பிறகு வெளியாகி வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.

போரும் அதற்குப் பிந்தைய சூழலும் அந்தச் சமூகத்தின் தனிநபர்களின் இயல்பான வாழ்வை தலைகீழாக கலைத்துப் போடும் துயரங்களையே  பெரும்பாலான பிரசன்னவின் சினிமாக்கள் மையப்படுத்துகின்றன.  அவர்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள், வன்கொடுமைகள், மனிதஉரிமை மீறல்கள், பொருளிழப்புகள், குறிப்பாக அவர்களின் உளவியல் ரீதியான சிக்கல்கள் போன்றவற்றை இவரின் படைப்புகள் இயல்பான தொனியில் கவனப்படுத்துகின்றன.  மனிதர்கள் மாத்திரமல்ல, 2003-ல் வெளியான “Ira Madiyama” (August Sun) என்கிற திரைப்படத்தில் புலிகள் இசுலாமியர்களின் மீது மேற்கொண்ட வெளியேற்றத்தின் காரணமாக ஒரு சிறுவனுக்கும் அவனது வளர்ப்பு நாய்க்கும் ஏற்படும் பிரிவும் கூட அதற்கேயுரிய துயரத்தின் வலியுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்னுள்ள அரசியலை கலையமைதியுடனும் ஒரு கலைஞனுக்கேயுரிய பொறுப்புடனும் எவ்வித மனச்சாய்வில்லாத பார்வையுடனும் தமது திரைப்படங்களில் பிரசன்ன கையாள்கிறார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பொதுவாக போர் தொடர்பான திரைப்படமென்றதும் அதன் காட்சிகளில் சாகசங்களைக் கூடி ஹாலிவுட் பாணியில் அதை ரொமாண்டிசைஸ் செய்வதும் சோகத்தைக் கூட்டி மெலோடிராமாவாக ஆக்கும் அபத்தங்களும் பிரசன்னவின் திரைப்படங்களில் இல்லை.

2012-ல் உருவாக்கப்பட்ட With you, Without You திரைப்படமானது ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பின் சென்னையில் திரையிடப்பட்ட போது ஏற்பட்ட சிறு பரபரப்பின் காரணமாகவே அதன் மீது பரவலான பொது பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. இதன் காரணமாகவே இந்த சூழலை உருவாக்கியவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். சென்னையின் ஒரு மல்டிபெக்ஸ் திரையரங்கில் இது திரையிடப்பட்ட போது சில அநாமதேயர்களின் எதிர்ப்புகளாலும் மிரட்டல்களாலும் முதல் நாளிலேயே திரையிடல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதற்குப் பின்னணியில் தமிழ் தேசிய அமைப்பைச் சேர்ந்த சில நபர்கள் இருப்பதாக  திரைஆர்வலர்களிடையே ஒரு புகார் எழுந்த போது எந்தவொரு தமிழ் அமைப்பின் பிரதிநதியும் இதற்குப் பொறுப்பேற்காமல் அவ்வாறாக குற்றஞ்சாட்டப்பட்டதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார்கள்.

இதன் பிறகு தமிழ் ஸ்டுடியோ என்கிற திரைஇயக்கத்தைச் சார்ந்த அருண் ஒழுங்கு செய்திருந்த ஏற்பாட்டின் காரணமாக இத்திரைப்படம் பார்வையாளர்களுக்காக சென்னையில் ஒரு தனியார் அரங்கில் திரையிடப்பட்டது. இயக்குநர் பிரசன்ன விதானகேவும் வந்திருந்தார். அரங்கம் முழுமையாக நிறைந்து மேலும் பலர் நின்றவாறே படம் பார்த்தனர்.  திரையிடல் மிக அமைதியாக நடந்தது. படம் முடிந்ததும் சில நபர்களிடமிருந்து இத்திரைப்படத்திலுள்ள அரசியல் சார்ந்து ஆவேசமான கேள்விகள் எழும்பின. திரையரங்கை எவரும் மிரட்டவில்லை என்று முன்னர் தமிழ் தேசியர்கள் அளித்த அறிக்கையில் உண்மையில்லை என்பதை இந்த ஆவேசக் கேள்விகளே மறைமுகமாக அம்பலப்படுத்தி விட்டதோ என்று எழுகிற சந்தேகத்தை எவரும் புறக்கணித்து விட முடியாது.

ஒரு கலைப் பிரதியை எவ்வாறு சரியான நோக்குடன் அணுகுவது என்கிற புரிதல் சற்றும் இன்றி பிரதேசமும் இனமும் சார்ந்த கண்மூடித்தனமான பற்றுதலுடனும் மிகையுணர்ச்சிகளுடனும் எழுப்பப்பட்ட அந்தக் கேள்விகளில் பல அபத்தமானவை. சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கும் ஒரு திரைப்படைப்பாளியை அணுகுகிற மதிப்பும் இணக்கமும் அல்லாமல் ஏதோ இலங்கையின் வெளியுறவுத் துறையின் அமைச்சரே அங்கு நின்று கொண்டிருந்தது போல அந்த நபர்கள் தங்கள் ஆவேசங்களை இயக்குநரின் மீது வீசிக் கொண்டேயிருந்தனர். பிரசன்ன இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக இருந்தும் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக அமைப்பாளர்கள் நிகழ்ச்சியை அவசரமாக முடித்தனர். இந்தச் சந்தடியில் இயக்குநரின் கைகளைப் பற்றி "சிறப்பானதொரு திரைப்படத்தை தந்திருக்கிறீர்கள். வாழ்த்துகளும் நன்றியும்' என்று மாத்திரமே என்னால் சொல்ல முடிந்தது. திரைப்படம் தொடர்பாக நான் நினைத்திருந்த சில கேள்விகளை கேட்கும் வாய்ப்பு அமையவில்லை.

அந்த குறிப்பிட்ட சில பார்வையாளர்கள் மாத்திரமல்ல, இணையத்தில் இத்திரைப்படம் குறித்து எழுதப்பட்ட சில கேள்விகள் அபத்தமானவையாக எனக்குத் தோன்றியது. அது குறித்து பின்னர் பார்ப்போம். அதற்கு முன்பு இத்திரைப்படம் பற்றி...


()


இலங்கையின் மலையக  சிறுநகரத்தில் அடகுக்கடை நடத்துபவர் சரத்ஸ்றி. நடுத்தர வயது மனிதர். வட்டித் தொழில் செய்யும் மனிதர்களுக்கேயுரிய கறார்தனமும் கருணையற்ற தன்மையும் கொண்டவராக இருக்கிறார். போர் சூழல் காரணமாக இடம் பெயர்ந்த தமிழர்கள் உள்ளிட்ட தேநீர் தோட்டத் தொழிலாளிகள் தங்களின் வறுமை காரணமாக பொருட்களை அடகு வைப்பதும் சிரமத்துடன் அவைகளை மீட்பதுமாக இருக்கிறார்கள். அங்குள்ள டீ எஸ்டேட்டுகளில் ஒரு துண்டு நிலத்தையாவது வாங்கி விட வேண்டும் என்பது சரத்ஸ்ரியின் கனவு. செல்வி எனும் இளம் தமிழ் பெண் அடகுக் கடைக்கு அடிக்கடி வந்து செல்கிறாள். தொடர்ந்து அவள் பொருட்களை அடகு வைப்பதன் மூலம் மிகுந்த வறுமையில் இருக்கிறாள் என தெரிய வருகிறது. அவளின் எளிமையான தோற்றம் சரத்ஸ்றிக்குள் சலனத்தை ஏற்படுத்துகிறது. தன் இயல்பிற்கு மாறாக அடகுப் பொருட்கள் அல்லாமல் கடனாக கூட அவளுக்கு பணம் தர முன்வருகிறார். ஆனால் செல்வி அதை சுயமரியாதையுடன் மறுத்து விடுகிறாள். இதனால் அவள் மீது இன்னமும் மதிப்பும் அன்பும் கூடுகிறது. அவளை திருமணம் செய்ய உத்தேசிக்கிறார். தன்னிடம் பணிபுரியும் தமிழ் பெண்மணி மூலமாக செல்வியிடம் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.

சிங்கள ராணுவத்தின் வன்கொடுமைகள் காரணமாக தன்னுடைய பெற்றோர்களையும் சகோதரர்களையும் இழந்து அநாதையாகியிருக்கும் செல்வி தன்னுடைய உறவினர்களின் வீட்டில் அண்டியிருக்கிறாள். அங்கு வேண்டாத விருந்தாளி போல நடத்தப்படுகிறாள். அவளை ஒரு பணக்கார பெரியவருக்கு திருமணம் செய்து தரும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த சிக்கலான சூழலில் தன்னிடம் பிரியம் செலுத்தும் சரத்ஸ்ரியிடம் அடைக்கலமாக சேர்வது அவளுக்கு நல்ல தேர்வாகப் படுகிறது. திருமணம் நடக்கிறது. சரத்ஸ்ரியின் பின்னணி பற்றி செல்வி அறிய முயலும் போது அதை வெளிப்படுத்த அவர் விரும்புவதில்லை. 'நானும் உன்னை ஏதும் கேட்கவில்லை, நீயும் ஏதும் கேட்காதே' என்கிறார். என்றாலும் இருவரின் பரஸ்பர அன்பு காரணமாக இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது.

சரத்ஸ்றியின் நண்பன் காமினி அங்கு விருந்தாளியாக வருகிறான். அவன் சிங்கள ராணுவத்தில் பணிபுரிபவன் என்பதும் சரத்ஸ்றியும் முன்னாள் ராணுவத்தினன் என்கிற செய்தி செல்வியின் மனநிலையை வெகுவாக பாதிக்கிறது. காமினியும் இன்னும் சில ராணுவக்கூட்டாளிகளும் சேர்ந்து தமிழ்ப் பெண்களை வன்கலவி செய்து விடுகின்றனர். இது குறித்த ராணுவ விசாரணையின் போது சரத்ஸ்றி, 'அவர்கள் அந்த நேரத்தில் என்னுடன்தான் இருந்தார்கள்' என்று பொய் சாட்சி சொல்லி அவர்களை தப்பிக்க விடுகிறார். பின்னர் இந்தக் குற்றவுணர்வின் கனம் தாங்காமல் அங்கிருந்து விலகி அடகுத் தொழில் செய்து கொண்டிருக்கிறார். சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்கள் காரணமாக தன்னுடைய குடும்பத்தையே இழந்து நிற்கும் செல்விக்கு தன்னுடைய கணவரும் அந்த அமைப்பின் ஒருபகுதியாக இருந்தவர் என்பதை அறியும் போது அவருடனான நெருக்கமான மனநிலையிலிருந்தும் பிரியத்திலிருந்தும் விலகி விடுகிறாள்.  இருவருக்கும் ஏற்படும் சச்சரவுகள் தொடர்கின்றன.

என்றாலும் செல்வியின் சிக்கலான மனநிலையை அனுதாபத்துடன் புரிந்து கொள்ளும் சரத்ஸ்றி மேலதிகமாகவே தன்னுடைய பிரியத்தை தொடர்கிறார். தன்னுடைய நிலம் வாங்கும் கனவையெல்லாம் ஒதுக்கி விட்டு தன் தொழிலை விற்று விட்டு செல்வி முந்தையதொரு சமயத்தில் விவரித்திருந்த ஆவலின் படி இந்தியாவிற்கு செல்லவும் தீர்மானிக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்குகிறார். செல்விக்கு அவர் மீதுள்ள பிரியம் பெரிதும் விலகாதிருந்த போதிலும் சிங்கள ராணுவம் அவளுடைய குடும்பத்தை சிதைத்திருப்பதின் பாதிப்பு காரணமாக சரத்ஸ்றியை  முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாததொரு நிலையில் தத்தளிக்கிறாள். இந்த மனநெருக்கடியின் உச்சத்தில் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

()

நேர்க்கோட்டில் விவரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையை இயக்குநர் பிரசன்னா நான்-லீனியர் திரைக்கதை தன்மையுடனான உத்தியில் ஆனால் எந்தவொரு சிக்கலும் அல்லாமல் மிகத் தெளிவாக உருவாக்கியிருக்கிறார். செல்வியின் தற்கொலைக் காட்சியோடுதான் திரைப்படம் துவங்குகிறது. அதன் துயரத்துடன் சரத்ஸ்றி தனக்குள் நிகழ்த்திக் கொள்ளும் அந்தரங்கமான உரையாடல்களின் மூலம் காட்சிகள் விரிகின்றன. "நீ விரும்பிய வேறு எவருடராவது சென்றிருக்கலாமே, அப்போது திரும்பி ஒரேயொரு ஒரு புன்னகையை எனக்குத் தந்திருந்தால் எனக்கது போதுமானதாக இருந்திருக்குமே" என்பதாக சரத்ஸ்றியின் மனப்பதிவும் "என்னுடைய அன்பை முழுமையாக மனப்பூர்வமாக உங்களுக்கு வழங்க இயலவில்லை. ஆகவே உங்களை விட்டு விலகுகிறேன்" என்பதாக செல்வியின் மனப்பதிவும் இந்த உரையாடல்களில் வெளிப்படுகின்றன.

1876-ல் எழுதப்பட்ட ப்யோதர் தஸ்தயெவ்ஸ்கியின் சிறுகதையான 'A Gentle Creature' -ஐ தழுவி இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதே சிறுகதையின் தழுவலோடு ஏற்கெனவே இதுவரை ஐந்து திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. பிரெஞ்சு இயக்குநர் ராபர்ட் ப்ரெஸ்ஸானின் 'A Gentle Woman' (1969), இந்திய இயக்குநர் மணிகெளலின் நாஸர் (1998) ஆகியவை இதில் அடக்கம். தனிநபர்களின் அகரீதியான சிக்கல்களும் உளவியல் பாதிப்புகளும் குற்றவுணர்ச்சிகளும் புனைவுகளின் மூலமாக வெளிப்படுவது தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகம். அது இந்தச் சிறுகதையில் வெளிப்பட்டிருப்பதைப் போலவே திரைப்படத்திலும் மிகச் சிறப்பாக பதிவாகியிருக்கிறது.

செல்வியை திருமணம் செய்து கொண்டு தன்னுடைய முழுமையான அன்பை அவள் மீது பொழிவதின் மூலம் தன்னுடைய கடந்த கால குற்றவுணர்ச்சிகளிலிருந்து மீண்டு புதியதொரு வாழ்வை துவங்குவது சரத்ஸ்றியின் நோக்கமாக இருக்கிறது. சிங்கள ராணுவத்தின் அத்துமீறல்கள் மூலம் தமிழர்களின் சொத்துக்களும் பெண்களின் கற்பும் சூறையாடப்பட்டதின் கடந்த கால குற்றவுணர்வில் அவர் ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கலாம். எனவேதான் அவர் தன்னைப் பற்றிய எந்தவொரு விவரத்தையும் செல்வியிடம் சொல்வதில்லை. ஆனால் அவருடைய ராணுவ நண்பனின் மூலம் உண்மை வெளிப்படும் போது செல்வியின் நம்பிக்கையை இழக்கிறார். எந்தவொரு உணர்வினாலும் ஒட்டப்படவே முடியாத ஒரு விரிசல் அந்த உறவில் நேர்கிறது. இதன் காரணமாக கணவரிடமிருந்து வெளிப்படுவது முழுமையான தூய அன்பாக இருந்தாலும் கடந்த கால கசப்புகளினால் அதை ஏற்கவும் முடியாத திருப்பிச் செலுத்தவும் முடியாததொரு மனஉளைச்சலில் செல்வி உயிர் நீக்கிறாள். போர் எழுப்பும் கொடுமையான வரலாற்று கடும்புழுதி தனிமனித உறவுகளின் மீது கசப்பாக படிந்து அவர்களை பரஸ்பர விரோதிகளாக்குகிறது.

அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஒரு சில நபர்கள் தங்களின் நிலைகளை அழுத்தமாக ஸ்தாபித்துக் கொள்வதற்காக எடுக்கும் அரசியல் முடிவுகளினால் ஏற்படும் போர்களின் காரணமாக ஒட்டுமொத்தமாக இரு பிரதேசங்களுமே பரஸ்பரம் பகையாளிகளாக உருமாறும் மாயத் தோற்றம் உருவாகிறது. இந்த முடிவுகளுக்குத் தொடர்பேயில்லாத லட்சக்கணக்கான தனிமனிதர்கள் பல்வேறு வகைகளினால் ஏற்படும் துயரத்தின் மூலம் அல்லறுகிறார்கள். முன்பின் அறிமுகமேயில்லாத ஓர் அந்நியரை பகையாளிகளின் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்கிற ஒரே காரணத்திற்காகவே உடனே கொல்லத்துணிகிற மூர்க்கங்களை இந்தப் போர்களும் போர் பிரச்சாரங்களும் சிலருக்கு ஏற்படுத்துகின்றன. ஆனால் இவை அரசியில் பின்னணியும் மிகையுணர்ச்சியும் கொண்ட குறுங்குழுக்கள் மாத்தி்ரமே. இதர கோடிக்கணக்கான நபர்கள் போரையும் அதன் விளைவுகளையும் வெறுக்கத்தான் செய்கிறார்கள். இதன் மீது பகைமை நீள்வதை அவர்கள் விரும்புவதில்லை. போரைச் சந்தித்திராத ஒரு சமூகத்தினால் எவ்வளவு விளக்கினாலும் அதன் கொடுமையை அது அறிய முடிந்திராது. மாறாக அவர்களின் வரவேற்பறையின் அரசியல் விவாதங்களுக்கே அவை பயன்படும்.

செல்வியின் அன்பு மறுக்கப்படுவதை உணரச் சகியாத சரத்ஸ்ரி அவளின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோருகிறான். இனமும் மொழியும் பிரதேசமுமான கற்பிதங்களைத் தாண்டி ஒரு மனிதன் தனக்குள் உறைந்திருக்கும் மூர்க்கங்களை விலக்கி அதன் பின் உறைந்திருக்கும் ஆன்மீக அன்பு காரணமாக வந்து சேரும் இடம் இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த கற்பிதங்களைக் கொள்ளாத சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த ஒரு உன்னதமான கலைஞனும் தன்னுடைய படைப்புகளை இதை நோக்கியே வலியுறுத்துவான். பகைமை இன்னமும் நீள்வதற்கான செயல்களை அல்ல. பிரசன்ன இத்திரைப்படத்தின் மூலமும் இதையே வலியுறுத்துகிறார்.

()

இத்திரைப்படம் பெரும்பாலும் அண்மைக் கோணத்தில் அமைந்த காட்சிகளினாலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. போர்களினால் ஏற்படும் இழப்புகளை சந்திக்கும் எந்தவொரு சமூகத்திற்கும் இந்தப் படைப்பு பொருந்தும் என்பதால் நிலவெளிக்காட்சிகள் மட்டுப்படுத்தப்பட்டு  மனிதர்களின் முகங்களும் உணர்வுகளும் பிரதானமாக வெளிப்படும் சட்டகங்களின் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிக சாவகாசமான காட்சிகள் அதன் அழகியல் உணர்வுகளோடு நகர்கின்றன. எந்தவொரு போர்க்காட்சியையும் வன்முறைக் காட்சியையும் காண்பிக்காமலேயே அது தனிநபர்களின் உள்ளத்தில் ஆறாத வடுவாய் உறைந்திருக்கும் துயரத்தை பிரசன்னவின் இந்த சினிமா அற்புதமாக வெளிப்படுத்தி விடுகிறது.

சரத்ஸ்றியாக நாடக உலகில் மிகுந்த அனுபவத்தைப் பெற்றிருக்கும் ஷ்யாம் பெர்ணாண்டோ நடித்திருக்கிறார். இதுவே அவரது அறிமுகத் திரைப்படம். ராபர்ட் ப்ரெஸ்ஸானின் திரைப்படங்களில் வரும் பிரதான பாத்திரங்களைப் போலவே பெரிதும் உணர்ச்சியை வெளிப்படுத்தாத இறுக்கமான உடல்மொழியின் மூலம் அவருடைய பாத்திரத்திற்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். திரைப்படத்தின் படி  WWF விளையாட்டுச் சண்டையை பார்த்துக் கொண்டிருப்பதுதான் இவரது ஒரே பொழுதுபோக்கு. ராணுவத்திலிருந்து விலகி விட்டாலும் உடல் வலிமையை நிரூபிக்கும் சாகசமானது இவரது மனதிலிருந்து விலகவில்லை என்பதாகவே இதை பொருள் கொள்ளலாம். போலவே செல்விக்கும் தமிழ்த்திரைப்படங்களை பார்ப்பதும் பாடல்கள் கேட்பதும் தமிழகத்தை காண்பதும் விருப்பமானதாக இருக்கிறது. தாயகம் குறித்த ஏக்கமே இதன் அடையாளம். செல்வியாக இந்திய நடிகையான அஞ்சலி பாட்டில் அற்புதமாக நடித்துள்ளார். சரத்ஸ்றியிடம் தன்னுடைய பிரியத்தையும் அதற்கு முரணாக தன் வெறுப்பை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் இவரது முகபாவங்கள் மிக இயல்பாக பதிவாகியுள்ளன. பாத்திரங்களின் தன்மைகளும் அவைகளின் பிரத்யேக குணாதிசயங்களும் மிகுந்த திட்டமிடுதல்களுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டதற்கு இவை சிறு உதாரணம்.

இதன் மீதான விமர்சனங்களைப் பார்ப்போம். "போருக்குப் பிந்தைய ஒரு சிங்கள சமூகத்தில் வாழும் சிறுபான்மை தமிழர்கள் சினிமா பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தமிழ் பக்திப் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. இதன் மூலம் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மழுப்பப்பட்டு தமிழ் மக்கள் அங்கு மகிழ்ச்சியாகவும் சிங்களர்களுடன் இணக்கமாகவும் வாழ்கின்றனர் என்கிற பொய்ச் செய்தியை பரப்புரை செய்ய முயலும் இலங்கை அரசிற்கு இத்திரைப்படம் உதவுகிறது" என்பது ஒரு குற்றச்சாட்டு.

சரத்ஸ்றியின் அடகுக் கடையில் பல தமிழர்கள் தங்களின் பொருட்களை அடகு வைக்க தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றனர். ஒரு தமிழ்ப் பெரியவர் கடை எப்போது திறக்கும் என கேட்டுக் கொண்டேயிருக்கிறார். ஒரு தமிழ்ப் பெண் தன்னுடைய தாலியை கண்ணீருடன் அடகு வைக்கிறார். அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் வறுமையின் பிடியில் தவிக்கிறார்கள் என்பது நுண்தகவல்களாக வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இதையெல்லாம் விட்டு விட்டு அவர்கள் திரைப்படம் பார்க்கும் ஒரு காட்சியை வைத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று மொண்ணையாக புரிந்து கொள்வதை என்ன சொல்வது? மிகையுணர்ச்சியைக் கொண்ட தமிழ் திரைப்படங்களாகவே பார்த்து பார்த்து பழகின நபர்களுக்கு  போருக்குப் பிந்தைய சமூகத்தில் தலையில் ரத்தம் சிந்த சிந்த அழுது கொண்டே ஓடிவரும் குழந்தைகள் மாதிரியான பிம்பங்களை அடுக்கினால்தான் மனம் நிறைவுறுமா? இடையறாத துன்பத்திற்கு இடையிலும் அவர்கள் சற்று இளைப்பாறும் புன்னகைக்கும் தருணங்களே இருக்காதா? அல்லது ராஜபக்ஷேவை நினைவுப்படுத்தும் உருவத்தைக் கொண்ட ஒரு நபரை ஹீரோ அடித்துத் துவைக்கும் காட்சிகள் இருந்திருந்தால் ஒருவேளை இவர்கள் திருப்தியுற்றிருப்பார்களோ?

"வசனங்களின் சில இடங்களில் புலிகள் 'தீவிரவாதிகள்' என்று குறிக்கப்படுகிறார்கள் அவைகளை நீக்க வேண்டும்" என்பது இன்னொரு புகார்.  இது தொடர்பான வசனங்கள் சிங்கள ராணுவத்தினர்களாக சித்தரிக்கப்படும் பாத்திரங்கள் பேசுவது. அவர்களின் நோக்கில் அவ்வாறுதான் பேச இயலும். அப்போதுதான் காட்சிகளின் நம்பகத்தன்மை கூடும். தமிழ் சினிமாக்கள் அதிகாரத்திற்கும் சென்சாருக்கும் பயந்து கொண்டு காட்சிகளையும் வசனங்களையும் மழுப்புவது போல சிறந்த சினிமாவை உருவாக்க முனையும் சர்வதேச படைப்பாளியும் மனச்சாட்சியை கைவிட்டு செய்ய முடியுமா? 'இதில் ஏன் ஆண் தமிழராகவும் பெண் சிங்களராகவும் இருக்கக்கூடாது?" என்று இன்னொரு கேள்வி கேட்கப்பட்டது. ஆண்மையவாத மனநிலையிலிருந்து உருவாகும் அபத்தங்களே இவை.

இவ்வாறான சிறு தகவல்களை தவறாகப் புரிந்து கொண்டு ஒரு படைப்பை நிராகரிப்பதை விட அதன் மையம் எதை நோக்கி நகர்கிறது என்பதை புரிந்து கொண்டால் படைப்பாளியின் நோக்கத்தையும் புரிந்து கொள்ளலாம். "நாங்கள் தவறு செய்துவிட்டோம். எங்களை மன்னித்து விடு" என்று ஒரு சிங்கள ராணுவத்தின் பிரதிநிதி, தமிழ்ப் பெண்ணின் பிரதிநிதியிடம் காலில் விழுந்து கதறியழுகிறான். சிங்கள ராணுவத்தின் அத்தனை அத்துமீறல்களும் இந்த ஒற்றைக் காட்சியிலேயே வாக்குமூலமாக வெளிப்பட்டு விடுகிறது. ஏற்கெனவே தம்முடைய திரைப்படங்களுக்கு இலங்கையில் தடையை சந்தித்த இயக்குநர், இதுவும் தடை செய்யப்படலாம் என்பதை யூகித்தும் மிக துணிவுடன் இப்படியொரு காட்சியை ஒரு சிங்கள இயக்குநர் சித்தரித்ததற்கு உண்மையில் அவரைப் பாராட்ட வேண்டும். ஈழத்தமிழர்களுக்காக உணர்ச்சியில் கொந்தளிக்கும் தமிழகத்தில் கூட இந்தப் பிரச்சினை குறித்த ஒரு துணிவான அரசியல் சினிமா உருவாகவில்லை என்பதை நினைவில் கொள்வது நல்லது.

அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் போர்களுக்கும் அது தொடர்பான குற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ளாமல் அதன் ஒட்டு மொத்த சமூகத்தையே வெறுப்பதும் பகையுடன் நோக்குவதும் அபத்தமானது. தமிழர்களைப் போலவே இந்தப் போரினால் அவதியுறும் சாதாரண சிங்கள மனிதர்களும் இருக்கிறார்கள். தமிழர்களுக்காக போராடும் மனச்சாட்சியுள்ள சிங்கள பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். அனுதாபிகள் இருக்கிறார்கள். பிரசன்னவைப் போன்ற திரைப்படைப்பாளிகள் இருக்கிறார்கள். இதற்காக இலங்கை அரசின் அடக்குமுறைகளையும் உயிர் ஆபத்துக்களையும் எதிர்கொள்கிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஊடகங்கள் தரும் மிகைவெறுப்புடன் தரும் செய்திகளினால் பாதிக்கப்பட்டு சிங்களன் என்றவுடனேயே நரம்பு புடைத்து கோபப்பட தேவையில்லை. தமிழகத்திற்கு வரும் சாதாரண சிங்கள பயணிகளை, பெளத்த துறவிகளை தாக்க வேண்டியதில்லை. இது தொடர்பான போராட்டங்களும் கோபமும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் முடிவுகளை தீர்மானிப்பவர்களையும் நோக்கியே இருக்க வேண்டும். சாதாரண அப்பாவிகள் நோக்கியல்ல. தார்மீக மனநிலையில் இயங்கும் படைப்பாளிகள் மீதல்ல.

உலகத்தின் மற்ற நாடுகளில் திரையிடப்பட்டு பாராட்டுக்களையும் விருதுகளையும் பெறும் ஒரு திரைப்படம், அது உரையாடும் பிரச்சினைகள் மையம் கொண்டிருக்கும் பிரதேசங்களில் திரையிடப்பட இயலாமல் தடையையும் எதிர்ப்பையும் சம்பாதிப்பது விநோதமானது. பிரசன்னவின் இந்த சினிமா அதன் மீது திணிக்கப்பட்ட அரசியல் வெறுப்புகளைத் தாண்டி எவ்வித தடையுமில்லாமல் திரையிடப்படுவதே இதன் மீது பதிவாகியுள்ள தவறான முன்முடிவுகளுக்கு தீர்வாக இருக்கும். இத்திரைப்படம் தவறா அல்லவா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். அரசியல் நோக்கமும் ஆதாயமும் உள்ள மிகையுணர்ச்சியில் இயங்கும் குழுக்கள் அல்ல. 

(காட்சிப் பிழை, ஆகஸ்டு  2014-ல் வெளியான கட்டுரை - நன்றி: காட்சிப் பிழை)     

suresh kannan

Sunday, August 24, 2014

ஃபன்றி - தலித் சினிமா - எச்சில் குளத்தில் மூழ்கும் கருங்குருவி


இப்படியொரு காட்சியை கற்பனை செய்து கொள்ளுங்கள். காலையில் எழுந்து தயாராகி வீட்டை விட்டு வெளியில் வருகிறீர்கள். சிறிது நேரத்திற்கெல்லாம் உங்களின் மேல் எச்சில் உமிழப்படுகிறது. நீங்கள் துடைத்துக் கொண்டு நகர்ந்தாலும் உங்கள் முகத்திலும் தலையிலும் உடம்பின் மீதும் தொடர்ந்து எச்சில்கள் துப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. துடைக்க துடைக்க மேலும் எச்சில். மனம் வெதும்பி உள்ளூர அழுகையுடன் துடைத்து சென்று கொண்டேயிருக்கிறீர்கள். எச்சில்கள் நின்றபாடில்லை. வேலை முடிந்து திரும்பும் போதும் எச்சில் மழையுடன்  வீடு திரும்புகிறீர்கள். பலவகையான எச்சில்களால் நனைந்த சிலை போல உங்களை உணர்கிறீர்கள். கடவுளை நொந்து கொண்டு குளித்து விட்டு உறங்குகிறீர்கள். எச்சில் நீராலான ஒரு குளத்தில் மூழ்கி காற்றுக்காக அல்லாடுவது போல் ஒரு கொடுங்கனவு. அலறியடித்துக் கொண்டு எழுந்து தன்னிச்சையாக உடம்பெங்கும் துடைத்துக் கொள்கிறீர்கள். எப்படியோ அயர்ந்து உறங்கி மறுபடியும் எழுந்து வெளியே வந்து மீண்டும் அன்றைய காலையின் முதல் எச்சிலை வெளியே சந்திக்கிறீர்கள்...

மேலே குறிப்பிட்டது சற்று மிகையான கற்பனையாக இருந்தாலும் சாதிக் கட்டுமானம் என்பது பழமைவாத சிந்தனைகளுடன் இன்னமும் இறுக்கமாக உள்ள இந்திய தேசத்தில் தலித் சமுதாயத்தின் பெரும்பாலானவர்கள் மேற்சொன்னபடிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த தீண்டாமையின் வேர்கள் இன்னமும் பசுமையாகவே இருப்பதின் காரணமாக ஆதிக்க சாதியினரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள் பெருநகரங்களில் சற்று மட்டுப்பட்டிருக்கிறது என்றாலும் சிறுநகரங்களில் குறிப்பாக கிராமங்களில் தலித் மக்கள் இத்தகைய இருண்ட வாழ்க்கையைதான் காலம் காலமாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். . 'நீ தாழ்ந்த சாதியில் பிறந்தவன்" என்று ஆதிக்கச் சாதியினர் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். இதன் மூலம் ஏற்படும் தலித் மக்களின் வலி நீடித்துக் கொண்டேயிருப்பதின் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உயர்சாதியினர் வசிக்கும் தெருக்களில் செருப்பணியாமல் அதை கையில் தூக்கி நடப்பது, தேநீர்க்கடைகளின் இரட்டைக்குவள வேறுபாடுகள் என்று அன்றாட நடைமுறை விஷயங்களில் துவங்கி இறந்து போனாலும் கூட பிணத்தை வேறு வழிகளில் சுற்றி எடுத்துச் செல்ல வைக்கும் தீண்டாமைச் சுவர்கள் இன்னமும் அழியாமல் உள்ளன. நாகரிக வளர்ச்சியோ கல்வியறிவின் சதவீத உயர்வோ ஆதிக்கசாதி மனங்களை  பெரிதளவில் மாற்றிவிடவில்லை. சாதி அரசியலும் தன்னுடைய ஆதாயங்களுக்காக இந்தத் தீயை அணையாமல் பார்த்துக் கொள்கிறது.

பழந்தமிழ் இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே சாதிமறுப்பு படைப்புகள் இருந்தன. 'பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா, இறைச்சித்தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ' என்கிற சித்தர் பாடல்களில் இருந்து பாரதி வரை அவை  நீண்டாலும் 1990-களில் தலித் இலக்கியம் என்கிற வகைமை தோன்றிய பிறகுதான் தமிழில் தலித் அரசியல் குறித்த முழு பிரக்ஞையோடு படைப்புகள் உருவாகின. இதைச் சார்ந்த படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் இதன் பின்புலத்தில் உருவானார்கள். இதற்கான உந்துதல் கருப்பின இலக்கியத்திலிருந்தும் மராத்தியில் தோன்றிய தலித் இலக்கியத்திலிருந்தும் தமிழிற்கு வந்தது. எழுத்தில்  தமிழுக்கென பிரயேக வகைமை உருவானது போல மிக வலிமையானதொரு காட்சி ஊடகமான சினிமாவில் தலித் சினிமா என்றொரு வகைமை உருவாகவே இல்லை. சாதிய படிநிலையின் உச்சியில் இருந்த பிராமணர்களின் ஆதிக்கத்தில் தமிழ் சினிமா இருந்த போது அந்த பின்புலத்தில்தான் படைப்புகள் உருவாகின. புராணக்கதைகளை மறுஉருவாக்கம் செய்ததின் தன்னிச்சையான தொடர்ச்சியாக  நந்தனார் போன்ற அபூர்வ விதிவிலக்குகள் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டோர்களின் வலியை அதன் பின்புலத்தோடு முழு வீச்சில் சொன்ன சினிமாக்கள் அதுவரை உருவாகவில்லை.

பிராமணர்களின் அதிகாரம் சற்று தளர்ந்த போது அந்த இடத்தை இடைநிலைச் சாதிகள்  கைப்பற்றிக் கொண்டன. நேரடியாக அல்லது மறைமுகமாக அவர்களின் சாதியையும் சாதியத் தலைவர்களையும் நாயகர்களாக ஆராதிக்கும் அவற்றின் தலைப்புகளைக் கொண்ட சினிமாக்கள் உருவாகின. சாதிய மோதல்களுக்கும் வன்முறைகளுக்கும் இவை காரணமாக இருந்தன. தலித்களின் பிரச்சினைகளைப் பற்றி சில திரைப்படங்கள் மிதமாக உரையாடினாலும் அவை அந்தப் படைப்புகளின் ஒரு பகுதியாக இருந்தனவே ஒழிய முழுவதுமாக இல்லை. இதில் முற்போக்கு போலி சினிமாக்களும் கலந்தே இருந்தன. 'தேவர்-ன்றது உங்களோட பட்டமா?" என்று செவிட்டில் அறையும் கேள்வியைக் கேட்ட சிறுவன், பிராமண அடையாளத்திலிருந்த நகைச்சுவைக் காட்சிகள் இருந்தன. தாழ்த்தப்பட்டோரின் துயரங்களையும் தங்களின் கச்சாப்பொருளாக செரித்துக் கொண்ட வணிக சினிமா அவற்றை ரொமாண்டிசைஸ் செய்ததே ஒழிய உண்மையான அக்கறையுடன் தமிழில் உருவான ஒரு தலித் சினிமா என்பது இன்று வரை இல்லை எனலாம்.

***

இந்த நிலையில் மராத்தி மொழியில்  ஃபன்றி  (Fandry) என்கிற ஓர் அசலான தலித் சினிமா உருவாகியிருக்கிறது  நாகராஜ் மஞ்சுளே இயக்கிய  இத்திரைப்படம் தேசிய அரசு விருது உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது. தமிழில் தலித் இலக்கியமானது மராத்தியில் இருந்து தமக்கான உந்துதலைப் பெற்றுக் கொண்டதைப் போலவே இந்த மராத்தி சினிமாவிலிருந்து உத்வேகத்தைப் பெற்று தலித்களின் வாழ்வியலை சிறப்பாகவும் நேர்மையாகவும் பதிவு செய்யும் தமிழ் சினிமாக்கள் வருங்காலத்தில் உருவாகும் என நம்புவோம்.

பல்லாண்டுகளாகத் தொடரும் தீண்டாமைக் கொடுமையை ஒரு கலைப்படைப்பின் மூலமாக சொல்லும் போது எரிமலை நெருப்பின் தகிப்போடுதான் சொல்ல வேண்டும் என்றில்லை. நகக்கண்ணில் மெல்லிய ஊசியேற்றியும் சொல்லலாம். ஃபன்றி திரைப்படம் மேற்பார்வைக்கு எளிமையானதாகவும் உள்ளுக்குள் பல அடுக்குகளில் கடுமையான அரசியல் விமர்சனங்களை ஒளித்து வைத்திருக்கும் ஒரு சிறந்த தலித் சினிமாவாகவும் அமைந்திருக்கிறது. ஒரு பதின்ம வயதுச் சிறுவனின் நிறைவுறாத காதலின் பின்னணியோடும் யதார்த்தமான அழகியலோடும் தலி்த் மக்களின் துயரத்தை இத்திரைப்படம் பதிவு செய்திருக்கிறது. நிற்க.. காதல் என்றவுடனே நீங்கள் நம்தன நம்தன... என்கிற பின்னணியுடனான பாடல் காட்சிகளும்  இறுதிக்காட்சியில் தீப்பந்தங்கள் இளம் காதலர்களை கும்மிருட்டில் துரத்தும் தமிழ் சினிமாக்களை நினைவு கூராதீர்கள். அந்த அபத்தங்கள் எல்லாம் இதில் இல்லை. சாதிய, நிற,வர்க்க வேறுபாடுகளினால் ஓர் இளையமனம் எதிர்கொள்ளும் அவமானங்களின் பெருமூச்சும் கண்ணீரும் இதன் காட்சிகளில் உறைந்துள்ளன. சாதியக் கொடுமைகளைத் தாங்கி தாங்கி அதை ஏற்றுக் கொண்டு கெட்டிப்பட்டுப் போன தாழ்த்தப்பட்ட மக்களின் முந்தைய தலையினரிடமிருந்து விலகி இளைய தலைமுறை அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் போராட்டத்தையும் முயற்சியையும் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது.

நவீன கைபேசிகளும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான உரையாடல்களும் கூட இருந்தாலும் அடிப்படை கழிப்பிட வசதிகள் அற்ற, மஹாராஷ்டிராவில் உள்ள அகோல்நர் என்கிற சிறிய கிராமம். கைக்காடி எனும் வழக்கொழிந்துக் கொண்டிருக்கிற திராவிட வழி மொழி பேசும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குடும்பத்தைச் சார்ந்தவன் சிறுவன் ஜாபியா. வறுமையான குடும்பம் என்பதை சொல்லத் தேவையில்லை. சாதி இந்துக்கள் ஏவுவதில் கிடைக்கும் வேலைகளைச் செய்து ஜீவிக்கிறார்கள் அவனது குடும்ப உறுப்பினர்கள். பாதி நாட்கள் வேண்டா வெறுப்பாக வேலைக்கு செல்லவும் மற்ற நாட்களில் பள்ளி செல்வதுமாக இருக்கிறான் ஜாபியா. அவன் ஆர்வமுடன் பள்ளி செல்வதற்கு கல்வியின் மீதுள்ள ஈடுபாட்டையும் தவிர இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. விடலைப் பருவத்துக்கேயுரிய காதல் சக மாணவியான ஷாலுவின் மீது உண்டாகிறது. அல்லும் பகலும் அவள் நினைவாக திரிகிறான். அவளோ உயர்சாதியைச் சார்ந்தவள். வர்க்க வேறுபாடும் உண்டு. தன் நிறத்தைக் குறித்த தாழ்வுணர்வு ஜாபியாவிற்கு உண்டென்றாலும் தன் காதல் என்றாவது உண்மையாகலாம் என்று பகற்கனவு காண்கிறான்.

ஊர் திருவிழா ஒன்றின் சாமி ஊர்வலத்தில் பன்றியொன்று குறுக்கே வந்து இடையூறு செய்ய அதை தீட்டாக கருதி ஊரில் உள்ள பன்றிகளையெல்லாம் விரட்டியடிக்கும் பொறுப்பு ஜாபியாவின் தந்தை மீது சுமத்தப்படுகிறது. தன் மகளுக்கு திருமணம் செய்யும் கவலையோடும் நிதி நெருக்கடியோடும் இருக்கும் அவர் தனது குடும்பத்தோடு பன்றிகளை விரட்டும் செயலைச் செய்கிறார். தான் படிக்கும் பள்ளியின் அருகில் சக மாணவர்களின்  முன்னிலையில் அதுவும் தான் விரும்பும் பெண் வேடிக்கை பார்க்க பன்றிகளை துரத்தும் செயலில் ஏற்படும் அவமானத்தில் சிக்கித் தவிக்கிறான் ஜாபியா. சுற்றியுள்ள ஆதிக்க சாதிக்காரர்கள் இந்த குடும்பமே சிரமப்பட்டு பன்றிகளை விரட்டிப் பிடிக்கும் காட்சியை விளையாட்டு போல நின்று ரசிக்கிறார்கள். சாதி குறித்த வசைகளையும் கிண்டல்களையும் குதூகலத்துடன் எறிகிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க இயலாமல் மிகுந்த ஆக்ரோஷத்தோடு அவர்களை ஜாபியா தாக்கத் துவங்கும் புள்ளியில் படம் நிறைகிறது.

ஒரு தலித்தால்தான் ஒரு சிறந்த தலித் படைப்பை உருவாக்க முடியுமா என்று ஆய்வுக்குரியது என்றாலும் இந்த சமூகத்தைச் சேர்ந்த இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே 2011-ல் உருவாக்கிய குறும்படமொன்று ஏற்கெனவே தேசிய விருது பெற்றிருக்கிறது. ஃபன்றியில் நிகழும் சம்பவங்கள் ஏறத்தாழ அவரது சுயஅனுபவங்களே. இவர்தான் அந்த சிறுவன் ஜாபியா என்பதை சொல்லித்தான் அறிய வேண்டுமென்பதில்லை. ஜாபியாவின் தந்தையாக நடிக்கும் நபரைத் தவிர மற்ற அனைவரும் தொழில்முறை சாராத நடிகர்களே. இதில் சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே உள்ளிட்ட மற்ற அனைவருமே அத்தனை இயல்பாக நடித்துள்ளனர். குறிப்பாக ஜாபியா எனும் பிரதான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் சிறுவன் சோம்நாத் அக்வாடை இதில் நடிக்க ஒப்புக் கொள்ளவே மூன்று மாதத்திற்கும் மேலாக முயன்றிருக்கிறார் இயக்குநர். பொதுவாக சிறுமுதலீட்டில் உருவாகும் கலை சார்ந்த திரைப்படங்களின் உருவாக்கம் அழுது வடியும் ஒளிப்பதிவோடு மந்தமாக நகரும். ஆனால் இதன் ஒளிப்பதிவாளரான விக்ரம் அம்லாடியின் அபாரமான திறமையினால் காட்சிகள் மிகுந்த அழகியலோடு பதிவாகியிருக்கின்றன. அவசியமான இடங்களில் மாத்திரம் ஒலிக்கும் அலோக்நந்தாவின் பின்னணி இசை காட்சியின் அர்த்தங்களை கூட்டுகிறது. இத்திரைப்படம் விருது விழாக்களைத் தவிர வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

***

இந்து புராணத்தின்படி  மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் மூன்றாவது வராக அவதாரம். பன்றியைக் குறிப்பது. ஆனால் இத்திரைப்படம் முழுவதும் பன்றி என்பது தீண்டாமையின் குறீயீட்டுடன் இயங்குகிறது. அந்தக் கிராமத்தின் ஆதிக்கசாதி மக்கள் அங்கு மேயும் பன்றிகளை வெறுக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட மக்களையும் அதே சொல்லினால்  கிண்டலடிக்கிறார்கள். மேலே பட்டாலே தீட்டு என்று அலறுகிறார்கள். இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே திரைக்கதையை அடுக்கியிருக்கும் விதமே மிகுந்த நுண்ணுணர்வுடன் சிறப்பாக அமைந்திருக்கிறது. ஒரு காட்சியில் சிறுவன் ஜாபியா புத்தகம் கேட்கும் சாக்கில் ஷாலுவிடம் பேசலாமா என்று தயங்கி வருகிறான். அவள் சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்தச் சமயத்தில் பன்றி ஒன்று குறுக்கே ஓடிவந்து ஒரு மாணவி மீது தீண்டிச் செல்கிறது. ஷாலு சிரிப்புடன் பன்றி தீண்டிய மாணவியை யாரும் தொடாதீர்கள் தீட்டு' என தடுக்கிறாள். இதைப் பார்க்கும் ஜாபியா முகம் சுருங்கிப் போய் திரும்புகிறான். பன்றி ஏற்படுத்திய தீட்டை பசுமாட்டின் சிறுநீர் கொண்டு கழிக்கிறார்கள். பன்றியை வெறுக்கும் ஷாலு ஓர் ஆட்டுக்குட்டியை பிரியத்துடன் தடவிக் கொடுக்கிறாள். இது போன்ற காட்சிகளில் உள்ள நுட்பமான சாதிய முரண்களை இயக்குநர் எந்த அண்மைக் கோணமும் கொண்டு பிரத்யேகமாக பார்வையாளர்களுக்கு கவனப்படுத்துவதேயில்லை. இவை இயல்பாகவே நகர்கின்றன. பார்வையாளர்களுக்குத்தான் இளம் தலைமுறையினரிடமும் தன்னிச்சையாக பரவியிருக்கும் சாதிய உணர்வின் அழுத்தம் குறித்து அதிர்ச்சி ஏற்படுகிறது.

இன்னொரு காட்சியில் ஷாலுவின் தந்தை ஜாபியாவிடம் அவரது வீட்டு நீர்தொட்டியில் மாட்டியிருக்கும் பன்றிக்குட்டியை எடுத்துப் போடச் சொல்லி ஆணையிடுகிறார். ஜாபியா அந்த வயதுக்கேயுரிய சுயமரியாதையுடன் அதை மறுத்து சென்று விடுகிறான். ஊர் பெரியவர்களை பகைத்துக் கொள்ளாதே என்று ஜாபியாவின் தந்தை கண்டிக்கிறார். அன்றிரவு அவனுக்கு ஒரு கொடுங்கனவு வருகிறது. கிணற்று நீரில் மூழ்கி உயிருக்கு அல்லாடுவதைப் போல. திடுக்கிட்டு எழுகிறான். அந்த பன்றிக்குட்டியின் நிலையின் அவனுடைய நிலையும் ஒன்றாகத்தான் இருக்கிறது.

பன்றிகளைப் போலவே கருங்குருவி ஒன்றும் திரைப்படம் நெடுக ஜாபியாவின் நிறைவேறாத காதலின் குறியீடாக வருகிறது. கருங்குருவி ஒன்றை எரித்து அதன் சாம்பலை தான் விரும்புகிற பெண்ணின் மீது வீசி விட்டால் அவள் வசியத்தில் மயங்கி தன்னை விரும்புவாள் என்கிற உபதேசத்தின் காரணமாக படம் பூராவும் கருங்குருவியை துரத்திக் கொண்டே இருக்கிறான் ஜாபியா. ஆனால் அதுவும் ஷாலுவைப் போலவே இவனுடைய கைக்கு கடைசிவரை அகப்படாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. அது அகப்படாது என்பது அவனுடைய உள்ளுணர்விற்கு தெரிந்தேயிருக்கிறது. எனவேதான் ஷாலுவிற்கு எழுதும் ஒரு கடிதத்தில் "என்னைப் பிடிக்கவில்லையென்றால் யாரிடமும் சொல்லி அவமானப்படுத்தி விடாதே" என்கிறான். ஆனால் அந்தக் கடிதம் தரப்படாமலேயே அழிந்து போகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அறியாமையிலிருந்து பிறக்கும் மூடத்தனங்களின் அடையாளத்துடன் இந்த கருங்குருவி பறக்கிறது.

தலித் இளைஞர்கள் வன்னிய சாதிப் பெண்களை ஜீன்ஸூம் கூலிங்கிளாஸூம் அணிந்து மயக்குகிறார்கள் என்று தமிழகத்தின் சாதிக்கட்சி அரசியல் தலைவர் சொன்ன விஷயம், ஜாபியாவிற்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. ஜீன்ஸ் வாங்குவது அவனது கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. அவளது தாயோ இதோ அதோ என்று போக்கு காட்டி வெறுப்பேற்றுகிறார். சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அதற்கு மேலேயுள்ளவர்களை கவனித்து அதை அடையும் ஆசையை ஏற்படுத்திக் கொள்வது மிக இயல்பான விஷயம்தான். தன்னுடைய ஜீன்ஸ் கனவை நிறைவேற்றிக் கொள்ள தானே உழைக்கிறான் ஜாபியா. ஆனால் அவனது அந்த எளிய கனவு கூட நிறைவேறாமல் அழிந்து போகும் கருணையின்மை மிக இயல்பாக நிகழ்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி காட்சிகளின் மூலம் இயக்குநர் பார்வையாளர்களின் கண்களில் எதையுமே திணிப்பதில்லை. ஆனால் நாம் புரிந்து கொள்ள பல விஷயங்கள் அதில் பொதிந்துள்ளன. சமீபத்திய தமிழ் சினிமாவான "மூடர் கூடத்தில்" அடித்தட்டு இளைஞனொருவன் "காதல் தோல்வி-ன்றதெல்லாம் நம்மைப் போல ஏழைகளுக்கு ஒரு ஆடம்பரமான விஷயம்" என்று சக இளைஞன் ஒருவனுக்கு உபதேசிப்பான். காதல் தோல்வி மட்டுமல்ல காதல் என்பதே அடித்தட்டு மக்களுக்கு ஆடம்பரம்தான்.அடிப்படைத் தேவைகளுக்கான தீர்வுகளுக்கே உழைக்கும் நேரம் சரியாக இருக்கும் போது காதலிப்பதற்கு நேரம் கிடைக்குமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அப்படி ஏற்படும் காதல் உயர்சாதி பெண்ணின் மீது என்றால் அது திருமணத்தில்தான் முடியும் என்கிற நிச்சயமுமில்லை. ரகசிய திருமணத்தில் முடிந்தாலும் அதில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஆணோ, பெண்ணோ உயிரோடு இருக்க முடியுமா என்பதையே அது தொடர்பான சாதிய வன்முறைச் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சமீபத்திய தமிழக நிகழ்வான இளவரசன்-திவ்யா விவகாரம் இதற்கொரு சரியான உதாரணம்.

ஒரு சிறந்த சிறுகதையின் இறுதி வரியைப் போல, அதன் முற்றுப் புள்ளியைப் போல இத்திரைப்படத்தின் இறுதிக் காட்சியின் சட்டகம் மிகச் சிறப்பாக உறைந்து நிற்கிறது. ஜாபியாவின் குடும்பம் பன்றிகளைத் துரத்தி இங்குமங்குமாக ஓடுகிறது. ஜாபியாவோ அவமானத்தில் குறுகி அவ்வப்போது ஒளிந்து கொள்கிறான். அவனை ஒரு பன்றியைப் போலவே கல்லால் அடித்து வேலையைத் தொடரச் செய்கிறார் அவனது தந்தை. பன்றிகள் போக்குக் காட்டிக் கொண்டு ஓடுகின்றன. அவை அருகே வந்து அகப்படும் நேரத்தில் அருகேயுள்ள ஜாபியாவின் பள்ளியிலிருந்து தேசிய கீதம் ஒலிக்கிறது. அருகே கடந்து செல்லும் பன்றியை பிடிக்க முடியாத எரிச்சலுடன் ஜாபியாவின் குடும்பம் உறைந்து அப்படியே நிற்கிறது. சாதியங்களால் கட்டப்பட்டிருக்கும் இந்திய தேசிய அரசியலின் சூட்சுமக் கயிறுகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை எப்படியெல்லாம் கட்டுப்படுத்தி வைத்திருக்கின்றன என்கிற செய்தியை இதை விடவும் சிறப்பாக சொல்லி விட முடியுமா என தெரியவில்லை.

பன்றிகளைத் துரத்திப் பிடிக்க  ஜாபியாவின் குடும்பம் படும் சிரமத்தைப்  பார்த்து அதை நகைச்சுவைக் காட்சியாக கண்டு ஷாலு உட்பட அவனின் சக மாணவர்கள் சிரிக்கிறார்கள். ஒரு விளையாட்டுப் போட்டியை பார்க்கும் சுவாரசியத்துடன் ரசிக்கிறார்கள். ஆதிக்கசாதி இளைஞர்கள் இவர்களை சாதிய வசைகளுடன் கிண்டலடிக்கிறார்கள். தந்தையிடம் அடிவாங்கிய ஜாபியா அந்த முரட்டுக் கோபத்துடன் ஆவேசத்துடன் இயங்கி ஒரு பன்றியைப் பிடித்து விடுகிறான். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விடுதலைக்காக அரசியல் ரீதியாக போராடிய அம்பேத்கர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் சுவர் ஓவியங்களின் பின்னணியில் கட்டப்பட்ட பன்றி எடுத்துச் செல்லப்படுவது ஒரு குரூரமான நகைச்சுவை. தொடர்ந்து கிண்டலடித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களில் ஒருவனை ஆவேசத்துடன் தாக்கத் துவங்குகிறான் ஜாபியா. தாக்கப்பட்டவன் இவனை அடிப்பதற்காக வரும் போது ஜாபியா எறியும் கல் பார்வையாளர்களை நோக்கி வருவதுடன் காட்சி உறைகிறது. காலம் காலமாக ஒடுக்கப்பட்டு கொதிந்தெழும் ஒரு இளைய தலைமுறையினரிடமிருந்து எறியப்படும் அந்தக் கல் நம்முடைய அகத்தில் ஏற்படுத்தும் வலியையும் மீறி நம்முடைய சாதிய மனங்கள் தொடர்ந்து இயங்கும் என்றால் நாம் மனிதர்களாக வாழவே தகுதியில்லை.

- உயிர்மை - ஆகஸ்டு 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan