வெங்கட்பிரபு 'மங்காத்தா'வின் ஹாங்ஓவரில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அதைப் போலவே பரபரப்பான திரைக்கதையை அமைக்க முயன்று வெற்றி பெறலாம் என்று நினைத்து தோற்றுப் போயிருக்கிறார். மங்காத்தாவின் வெற்றிக்குக் காரணம் பரபரப்பான திரைக்கதையைத் தாண்டிய ஒரு முக்கியமான காரணம் உண்டு. அது அஜித். நரைமுடியுடன் கூடிய இயல்பான தோற்றத்தில் எதிர்நாயகனாக இயக்குநரால் நடிக்க வைக்கப்பட்டதும்.
ஷாரூக்கான் 'தர்' திரைப்படத்தில் எதிர்நாயகனாக நடித்து வெற்றி பெற்றதற்கு சமமானது இது. ஆனால் அது போன்ற திரைக்கதையை கார்த்தியையும் பிரேம்ஜியையும் கவர்ச்சியையும் வைத்து ஒப்பேற்ற முயன்றால் அது தோல்வியை அடையலாம் என்று வெங்கட்பிரபு யூகித்திருக்க வேண்டும். முதலில் இநத திரைப்படத்திற்கு 'பிரியாணி' என தலைப்பிட என்ன காரணம் என்று குழப்பமாக இருக்கிறது. 'நாயகன் பிரியாணி சாப்பிட சென்று அதைத் தொடர்ந்து சந்திக்கும் சிக்கல்கள்தான் கதை' என்று டெம்ப்ளேட்டாக எழுதுபவர்கள் தலைப்பின் காரணத்தை எளிதாக நியாயப்படுத்தி விடுகிறார்கள். உண்மையில் ஓர் அழகியைத் தொடர்ந்து செல்வதன் மூலம்தான் கார்த்தியும் பிரேம்ஜியும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். எனில் படத்தின் தலைப்பை 'ஐட்டம்' என்று வைத்திருக்கலாமே?. எனக்குப் பிடித்த உணவு வகையான பிரியாணியை வெங்கட்பிரபு இப்படி கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.
'இதுக்குத்தானே காத்திருக்கிட்டாங்க' என்ற வசனத்தின் பிற்பாடு ஒரு கெட்ட கவர்ச்சி ஆட்டம் வருகிறது. முக்காடு போட்டுக் கொண்டு ரிகார்டு டான்ஸ் பார்க்க வந்திருப்பவர்களைப் போல 'இதற்குத்தானே வந்திருக்கிறீர்கள்' என்று பார்வையாளர்களை இதை விட கேவலமாக எவரும் அவமானப்படுத்தி விடவே முடியாது.
வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான சென்னை-28 தான் அவரின் அழுத்தமான அடையாளம். சுஜாதாவின் நிலாநிழல் நாவலை நினைவுப்படுத்துவது போல் நடுத்தரவர்க்க இளைஞர்களையும் தெருவோர கிரிக்கெட்டையும் அவர்களுக்கிடையான நட்பையும் காதலால் ஏற்படும் குறுக்கீட்டையும் இயல்பான நகைச்சுவையில் புதிதான டிரீட்மெண்டில் சொன்னதாலேயே அது பெருவாரியான வெற்றியைப் பெற்றது. சலிக்க வைத்த தமிழ் சினிமாவில் சென்னை-28 அப்போது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அவர் அடுத்திய இயக்கிய சரோஜா ஏதோவொரு ஹாலிவுட்டின் நகல் என்று நினைவு. ஏறக்குறைய அதே இளைஞர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் சொதப்பலான திரைக்கதையால் மோசமான திரைப்படமாக அமைந்தது. அடுத்த திரைப்படமான 'கோவா' மாறுதலாக ஒரு நல்ல முயற்சி. அதைப் பற்றி இங்கு எழுதியிருக்கிறேன்.
ஆனால் சென்னை-28--ல் இருந்து விலகி வெற்றிகரமான வணிக இயக்குநர் என்கிற நிலையை அடைய வேண்டும் என்கிற விருப்பத்தினால் வெங்கட்பிரபு அவரது பிரத்யேக அடையாளத்தை இழக்கிறார் என்பதை உணர வேண்டும். பிரியாணி அதைத்தான் நிரூபிக்கிறது.
'வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டுங்கள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுங்கள்' என்கிற உபதேசத்திற்கான தமிழ்நாடு அரசின் ஆவணப்படத்தைப் போன்ற திரைக்கதையை 'எங்கேயும் எப்போதும்' கொண்டிருந்தாலும் இரண்டு இளம் காதலர்களைப் பற்றின இரண்டு தனித்தனி இழைகள் மிகமிக சுவாரசியமானதாகவும் குறும்புத்தனத்துடன் அமைந்திருந்ததே சரவணன் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இறுதிப்பகுதி மெலோடிராமாவாக அமைந்திருந்தாலும் வாகனங்களை இயக்குபவர்களின் அலட்சியத்தினால் சில தனிநபர்களின் கனவுகளும் வாழ்க்கையும் எவ்வாறு சிதைந்து போகிறது என்கிற செய்தியை அழுத்தமாகச் சொன்னது 'எங்கேயும் எப்போதும்'
இந்த நிலையில் சரவணனின் அடுத்த திரைப்படத்தைப் பாாக்கும் போது அவரும் தனது அடையாளங்களை இழந்து விட்டு வெற்றிகரமான இயக்குநர்களின் நகலாக முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது. 2008-ல் சட்டக்கல்லூரியில் இருபிரிவு மாணவர்களிடையே நிகழ்ந்த கலவரத்தை அச்சு அசலாக காண்பித்திருப்பதில் படம் துவங்கும் போது, பெரியவர்களிடமிருந்து இளம் தலைமுறையினரிடமும் பரவியிருக்கும் சாதி என்னும் புற்றுநோயையும் அதன் பின்னிருக்கும் சாதிய அரசியலையைப் பற்றி இயக்குநர் பேசப் போகிறார் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் 'நீங்க பார்த்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமா சார்' என்று தலையில் தட்டி உட்கார்த்தி வைத்து விடுகிறார்.
இயக்குநர் ஷங்கர் உருவாக்கி வைத்திருக்கும் அதே டெம்ப்ளேட்டை மணம் மாறாமல் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் சரவணன். மிகப் பெரிய வலைப்பின்னல்களில் இயங்கும் ஊழல் அரசியல்வாதிகளை லட்சிய நோக்கு கொண்ட ஒரு தனிமனிதன் ரகசியமான செய்கைகளால் தண்டிப்பது போன்ற ராபின்ஹீட் வகை திரைக்கதை. புகழ்பெற்ற நடிகர்களின் வாரிசுகளின் திணிப்புகளால் விக்ரம் பிரபு போன்றவர்களை நாம் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. வழக்கம் போல புத்தி பேதலித்த மாதிரியான ஹீரோயின். கொக்கு தலையில் வெண்ணையை வைத்து அது வழிந்தோடி கண்களை மறைத்த பின் அதைப் பிடிப்பது போன்று எதற்காக வில்லனை கடத்தி வந்து பிற்பாடு தெருவில் விட்டு விடுகிறார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம். அப்போதுதான் அவன் பழிவாங்கும் நோக்கில் இரண்டாம் பாதியை நகர்த்த முடியும் என்பதுதான் திரைக்கதை உத்தி என்றால் தமிழ் சினிமாவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.
()
முதல் திரைப்படங்களில் புதுமையான தனது கனவுகளையும் எண்ணங்களையும் இறைத்து விட்டு 'அட பரவாயில்லையே' என்று இவர்களை வியக்கும் போது 'ஹிஹி.. நாங்களும் சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம்.' என்று இவர்கள் ஹிட் இயக்குநர்கள் வரிசையில் இணைய அலைமோதுவதைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது.
suresh kannan
suresh kannan
No comments:
Post a Comment