அரசியல்
காரணமாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ தடை செய்யப்படுவதின் மூலமாகவே அதிக
கவனத்தைப் பெற்று விடும் மிகச் சாதாரண படங்களுக்கான சமீபத்திய உதாரணம்,
விஜய் நடி்தது விஜய் இயக்கி (ஐயோ, ஒரு விஜய் யையே நம்மால்
தாங்கமுடியவில்லை) வெளிவந்த அதாவது வெளிவர முயன்ற.. 'தலைவா'. இதற்கு
முந்தைய உதாரணம் விஸ்வரூபம்.
இந்தப் படம் வெளிவருவதற்கு தடையாய் இருப்பதாய் கருதப்பட்ட
அரசியல் காரணங்கள் படத்தை விடவும் அதிக சுவாரசியமாயிருக்கின்றன. கடந்த கால
ஆட்சியில் தன்னுடைய திரைப்படமான 'காவலன்' வெளிவருவதற்கு திரையரங்குகள்
கிடைப்பதில் அப்போதைய தமிழ் சினிமாவின் சர்வாதிகாரிகள் தடையாய்
இருந்ததால், அதிமுக பக்கம் சாயத் துவங்கினார் விஜய். தேர்தல் சமயத்திலும்
மறைமுகமாக ஜெயலலிதாவை ஆதரித்தார். ஆனால் இந்த அரசியல் பூமராங் தன் பக்கமே
திரும்பலாம் என்பதை அப்போது யூகிக்கத்தவறி வி்ட்டார் என்று தோன்றுகிறது.
இவ்வாறு அரசியல் ரீதியாக தமிழ் சினிமா பழிவாங்கப்பட்டதற்கு 'முகம்மது பின்
துக்ளக்' முதல் 'முதல்வன்' வரை என்று பல முன்னுதாரணங்கள் உள்ளன.
கடந்த ஆகஸ்டு 9 ந்தேதி வெளிவந்திருக்க வேண்டிய திரைப்படத்திற்கு
அதற்கு வெகு சில நாட்கள் முன்பு படம் வெளிவராமலிருப்பதற்கான திரைமறைவு
பணிகள் துவங்கி விட்டதாக தெரிகிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு
மெத்தனமாய் அல்லது இயங்காமலேயே போகும் அரசு இயந்திரம், இம்மாதிரியான
பணிகளுக்கு நெருக்கடி காரணமாக சுறுசுறுப்பாக இயங்கும். படத்திலுள்ள சில
ஆட்சேபகரமான விஷயங்களினால் படம் வெளிவந்தால் திரையரங்குளில் குண்டு
வைப்போம் என்று 'யாரோ' கடிதம் அனுப்பியதாலும், திரையரங்க உரிமையாளர்கள்
படத்தை வெளியிட முடியாத சூழலில் இருப்பதாலும், சட்ட ஒழுங்கு பிரச்சினை
காரணமாக படம் வெளியாகாது என்பது போன்ற செய்திகள் வெளியாகின.
'அவ்வாறெல்லாம் இல்லை. இந்த விவகாரத்திற்கும் காவல்துறைக்கும்
தொடர்பில்லை. இது திரைப்படத்துறை தொடர்பான பிரச்சினை' என்று தமிழக
காவல்துறை இந்த விவகாரத்தை அவசரம் அவசரமாக கை கழுவியது. இதைத்தவிர
இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, முன்னர் சர்வாதிகாரிகளாக
இருந்தவர்களின் சானலுக்கு விற்கப்பட்டதால் (அரசியலில் மட்டுமல்ல
வணிகத்திலும் நிரந்தர நண்பனும் கிடையாது, பகைவனும் கிடையாது) இப்போதைய
அரசு கோபம் கொண்டதாகவும் ஒரு செய்தி. வருங்கால முதல்வர் கனவில் விஜய்
தரப்பு செய்யும் ஆர்ப்பாட்டங்களால் ஜெயலலி்தா கோபம் கொண்டதாகவும், எனவே
விஜய் தரப்பை தட்டி வைக்க படத்தை தடை செய்ததாகவும் இன்னொரு வதந்தி.
இப்படி பல வதந்திகள் உலவிக் கொண்டிருக்க படம் வெளிவர
முடியாததற்கான காரணம் பொதுமக்களுக்கு தெரியாவிட்டாலும், அது குறைந்தபட்சம்
விஜய்க்காவது தெரிந்திருக்குமா என தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக
தமிழக முதல்வரை சந்திக்க கொடநாடு சென்ற விஜய், சந்திக்க முடியாத
காரணத்தால் தவிக்க, மனுவை பங்களாவின் வாட்ச்மேன் பெருந்தன்மையுடன் 'அரசு
மரியாதையுடன்' வாங்கிக் கொண்டதாகவும் கூட ஒரு வதந்தி உலவியது. அதன் பின்பு
'ஹோம்ஒர்க்' செய்யாத பள்ளிக்கூட மாணவன் போன்ற தோரணையில் உள்ளே கசியும்
கண்ணீருடன் விஜய் ஒரு வீடியோ பேட்டி அளித்தார். 'தமிழக மக்களுக்கு பல நல்ல
விஷயங்களை செய்யும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்' தலைவா படத்தையும்
வெளிகொண்டு வருவதற்கான உதவிகளை செய்வார் என நம்பிக்கை தெரிவிப்பதாகவும்
அதற்கான வேண்டுகோளையும் வைத்தார். தமிழக மக்களுக்கு உண்மையிலேயே ஜெயலலிதா
நன்மை செய்ய விரும்பினால், தலைவாவை வெளிவரச் செய்யாமலிருப்பதும் ஒரு நல்ல
விஷயம்தான் என்று மக்கள் ஒருவேளை நினைக்கக்கூடும் என்கிற எளிய உண்மை கூட
விஜய்க்கு புரியாமல் போனது ஆச்சரியம்.
கமல்ஹாசனின் விஸ்வரூபத்திற்கு இதே போன்றதொரு தடை ஏற்பட்ட போது தேசிய
அளவில் பரபரப்பு ஏற்பட்டது. 'மதச்சார்பற்ற இடத்தை நோக்கிச் செல்வேன்,
அதற்கான இடம் இங்கே இல்லாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுவேன்' என்று
முழங்கினார் கமல். 'கருத்துச் சுதந்திரத்தின் மீதான தடை' பற்றி
அறிவுஜீவிகள் புதிய உற்சாகத்துடன் உரையாடினார்கள். விஸ்வரூபம்
விவகாரத்திலாவது திரைமறைவு காரணங்கள் நமக்கு தெரியாவிட்டாலும் வெளிப்படையான
காரணம் ஒன்று சொல்லப்பட்டு தமிழக அரசின் தடை நேரடியாக வெளிப்பட்டது.
கமல் நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால் தலைவா விவகாரத்தில் என்ன
நடக்கிறதென்றே யாருக்கும் தெரியவிலலை. 'எல்லோரும் சும்மா இருநதா எப்படி,
யாராவது பேசுங்கப்பா' என்று தமிழ் சினிமாவின் பஞ்சாயத்துக் காட்சிகளில்
நிற்பதைப் போன்று எல்லோருமே கையைப் பிசைந்து கொண்டு மெளனமாக
நின்றார்கள்.
***
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு திரைஊடகத்தை
பயன்படுத்திக் கொள்வது ஒரு குறுக்கு வழி என்பதான அபத்தம் தமிழகத்தில்
நடைமுறையில் சாத்தியமானவுடன், நண்டு சிண்டான நடிகர்கள் கூட 'நான் தனிநபர்
அல்ல. என் பின்னால் பெருந்திரளான மக்கள் இருக்கிறார்கள்' என்று பன்ச்
டயலாக் பேச ஆரம்பித்து விட்டார்கள். நிஜத்தில் பம்மி பம்மி விஜய் தந்த
வீடியோ வேண்டுகோளையும் தலைவாவில் அவர் ஆக்ரோஷத்துடன் பேசும் பன்ச்
டயலாக்கையும் ஒப்பிட்டுப் பார்க்கும் மக்கள், இந்த பொம்மை நாயகர்களின்
உண்மையான தோற்றத்தை அறிய மாட்டார்களா? திரையில் இவர்கள் எந்த
கோமாளி்த்தனத்தை வேண்டுமானாலும் செய்துப் போகட்டும். ஆனால் இவர்களை நிழல்
வீராவேசங்களை உண்மை என்று நம்பி தம்மை ஆள்வதற்கு தகுதியுள்ளவர்களாக
இவர்களை அறியாமை காரணமாக மக்கள் நினைக்கும் போதுதான் பிரச்சினையாகிறது.
நிழலையும் நிஜத்தையும் ஒப்பிடக்கூடிய இவ்வாறான சந்தர்ப்பங்களின் மூலம்தான்
மக்கள் தங்களின் அறியாமைகளிலிருந்து வெளிவர வேண்டும். 'தங்களின் படம்
வெளிவர வேண்டுமென்று சுயநலத்தோடு கண்ணீர் விடும்' இதே நடிகர்கள் நாளை
அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தங்களுக்கு போட்டியாக
கருதக்கூடியவர்களின் படங்களை வருங்காலத்தில் தடை செய்வார்கள். 'வாழ்க்கை
ஒரு வட்டம்டா' என்பது சினிமா வசனமாக மாத்திரமல்லாமல் அல்லாமல் அரசியல்
சிந்தாந்தமாக கூட பின்னாளில் உருமாறக்கூடும்.
இந்த விவகாரத்திற்கு திரைத்துறையினர் காட்டிய கடும் மெளனம்
கோழைத்தனமானது. தடைக்கான காரணம் என்னவென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படா
விட்டாலும் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், இதன் உள்விவகாரங்கள் குறித்து
திரைத்துறையில் உள்ளவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஈழ பிரச்சினை,
தமிழக மீனவர் பிரச்சினை போன்ற, அரசுக்கு சாதகமான விவகாரங்களில் கூட்டம்
போட்டு ஆவேசமாக குரல் தரும் சூப்பர் ஸ்டார்களும் பவர் ஸ்டார்களும், அதிகார
பீடத்தில் உள்ளவர்களை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் புகழ்ச்சி மழையில்
நனைக்கும் நடிகர்களும் இது விஷயமாக சில முணுமுணுப்புகளைத் தவிர எவரும்
பொதுவில் குரல் தரவில்லை. முட்டை விற்பவர்கள் கூட அவர்களின் தொழிலுக்கு
ஒரு பிரச்சினை என்றால் அவர்களின் சங்கத்தின் மூலம் ஒன்றுகூடி அதிகாரிகளைச்
சந்தித்து முறையிடுகிறார்கள். பத்திரிகைகளில் 'அம்மா தாயே எங்களை
கவனியுங்கள்' என்று விளம்பரம் தருகிறார்கள். ஆனால் பலகோடி ரூபாய்
முதலீட்டிலும் லாபத்திலும் இயங்கும், மக்களின் சிந்தனைகளை
மாசுபடுத்துவதோடு அவர்களிடமிருந்து காசும் பிடுங்கிக் கொள்ளும்
திரைத்துறை இது குறித்து காட்டும் கள்ள மெளனம் வியப்பாய் இருக்கிறது.
அதிகாரத்தை எதிர்த்து போராடக்கூட வேண்டாம், அது குறித்து உரையாடுவதில் கூட
இத்தனை பயம் என்றால் தங்களை சூப்பர் ஹீரோக்களாக திரையில் காட்டிக்
கொள்வதில் சற்று கூட மனச்சாட்சி உறுத்தாதா என்று தோன்றுகிறது. அரசைப்
பகைத்துக் கொண்டால் அதன் மூலம் தாங்கள் இழக்கப் போகும் செளகரியங்கள் மீதே
இவர்களுக்கு அக்கறை இருக்கிறது என்று தோன்றுகிறது. நெல்லுக்கு பாயும்
நீர் புல்லுக்கும் பாயும் அதிர்ஷ்டத்தைப் போல 'கருத்துச் சுதந்திரம்'
குறித்த உரையாடல்களின் வெளிச்சம் விஸ்வரூபத்திற்கு கிடைத்ததைப் போல அந்த
அதிர்ஷ்டத்தின் சிறு சதவீதம் கூட 'தலைவா'விற்கு கிடைக்காதது ஒருவகையில்
அநீதிதான்.
***
இப்படியெல்லாம் அவதிக்குள்ளாகி, Time to lead
அலட்டல்களையெல்லாம் துறந்து வெளியான 'தலைவா' திரைப்படம் எப்படியிருக்கிறது
என்று பார்த்தால் இதை தடை செய்ய முயன்ற காரணிகளின் மீது மதிப்பும்
மரியாதையுமே வருகிறது. 'காட்பாதர்' புதினத்தை எழுதின மரியா பூஸோ, அவரின்
படைப்பு இந்தியத் திரைப்படங்களில் எப்படியெல்லாம் வன்புணர்ச்சி
செய்யப்படுகிறது என்பதைக் காண நேர்ந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பார்.
அதிலும் 'தலைவா'வைக் காண நேர்ந்தால் அவர் இரண்டாம் முறையாக இறக்க
வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன்னர், தெய்வத் திருமகளை 'I am Sam'
படத்திலிருந்து உருவி உருவாக்கின இயக்குநர் விஜய், காட்பாதரை ஏற்கெனவே
உருவல் செய்த இயக்குநர்களுக்கு குரு வணக்கம் செய்து இத்திரைப்படத்தை எத்தனை
மோசமாக முடியுமோ அத்தனை மோசமாக நகலெடுத்திருக்கிறார். நகலெடுப்பதைக்
கூட சிறப்பாக செய்ய முடியாத அளவிற்கு தமிழ் சினிமா சூழல் வணிக மோகத்தில்
ஆழ்ந்திருப்பதுதான் இதிலுள்ள முரண்நகை. இத்திரைப்படத்தைப் பற்றிச் சொல்ல
வேறெதுவுமே இல்லை என்பதுதான் இதன் சிறப்பம்சம். 'இதற்கா இத்தனை
ஆர்ப்பாட்டம்' என்கிற சலிப்புடன்தான் தலைவா -ல் இருந்து தலைவலியுடன் வீடு
திரும்ப வேண்டியிருந்தது.
- உயிர்மை - செப்டெம்பர் 2013-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
suresh kannan
3 comments:
சூடா... ஒரு காஃபி...! Please...
"முட்டை விற்பவர்கள் கூட "
........ ?
டைரக்டர் (???) விஜய் , படம் பார்ப்பவர்களை என்ன நினைத்து நகல்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறாரோ தெரியவில்லை.
காட்பாதர் மட்டுமா.. தேவர்மகன்.. படக்காட்சிகள் என பி. வா எடுத்த மாதிரி இருக்கிறது படம்
Post a Comment