Monday, September 10, 2012

நான் - விஜய் ஆண்டனி


 ஒரு துறையில் பிரபலமாகி விட்டவர்கள் அந்த காரணத்தினாலேயே தமக்கு சம்பந்தமில்லாத துறையிலேயும் திறமை காண்பிக்க முயல்வது பெருகி விட்டது. அதனால்தான் பிரபலமான நடன இயக்குநர்கள் திரைப்படங்களை இயக்கி நம்மைக் கொல்வதும் ரிடையர்டு ஆன நடிக,நடிகைகள் ரியாலிட்டி ஷோ தீர்ப்புகள் முதல் கூடங்குளம் அணுஆலை வரை தம்முடைய 'கமெண்ட்டுகளை' ஊடகங்களில் வாரி வழங்கும் அபத்தங்களும் நிகழ்கின்றன.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி்  நாயகனாக நடிக்கும் 'நான்' போஸ்டர்களை பார்த்த போது, சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டார் சீனிவாசன் போன்ற இன்னொருவர் தமிழ்த்திரைக்கு கிடைத்து விடுவார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக (துரதிர்ஷ்டவசமாக) விஜய் ஆண்டனி ஏதோ ஒரு இடைவெளியில் தப்பிப் பிழைத்திருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

பதின்ம வயது சிறுவனொருவன் தன் தாய் பிறன்மனை நோக்கும் காரணத்திற்காக கோபம் கொண்டு அவர்களை கொல்வதான கிளிஷேத்தனமாக காட்சிகளோடு படம் துவங்குகிறது. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் காலம் காலமாக கற்பு எனும் கற்பிதத்தை திரையில் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கும் அபத்தத்தைப் பற்றி பேசியாக வேண்டும். ஏதோ ஒரு காரணத்தினால் தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. மனைவியோ அல்லது கணவனோ இன்னொரு தொடர்பில் ஈடுபடுகிறான். இப்போது என்ன செய்ய வேண்டும். இருவரும் தத்தம் உறவுகளைப் பற்றி நிதானமாக உரையாடி சட்டப்பூர்வமாக பிரிவதற்கான வழிமுறையில் ஈடுபடுவதே ஆரோக்கியமான நாகரிகமான சமூகம் செய்ய வேண்டிய வழி.

மாறாக நம் தமிழ்த் திரைப்படங்கள் என்ன சொல்லித் தருகின்றன? திருமணமான ஒரு பெண் இன்னொரு ஆணோடு கூடி so called கற்பை இழந்து விட்டாளா? உடனே கண்கள் சிவக்க..... தூக்கு அருவாளை......  இந்தச் செய்தி கணவன்மார்களுக்கு மட்டுமல்ல, பதின்ம வயது இளம் நெஞ்சங்களுக்கும் திணிக்கப்படுகிறது. இந்த இடத்தில் ஜெயகாந்தனின் 'அந்தரங்கம் புதினமானது' என்கிற சிறுகதை நினைவுக்கு வருகிறது. தன்னுடைய தந்தை இன்னொரு பெண்ணுடன் கொண்டிருக்கிற தொடர்பு குறித்து அறிகிற இளைஞனொருவன் அது குறித்து திகைப்பும் கோபமும் கொள்கிறான். தாயிடம் இது பற்றி உரையாடுகிறான். இந்தத் தொடர்பைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிற தாய் அது பற்றி கோபம் கொள்ளாதிருப்பதற்காக அவளிடம் சண்டையிடுகிறான். அவனை அமர வைத்து அந்த தாய் உரையாடுவதுதான் அந்தச் சிறுகதையின் மையம். இம்மாதிரியான முதிர்ச்சியான சிந்தனைகளை நோக்கித்தான் ஒரு நாகரிகமாக சமூகம் நகர்ந்தாக வேண்டும். இன்னமும் நிலவுடைமைச் சிந்தனைகளுடன் அரிவாளைத் தூக்கும் காண்டுமிராண்டித்தனத்தை கற்றுத் தரும் தமிழ் சினிமாக்களும் முதிர்ச்சியை நோக்கி நகர வேண்டிய தருணமிது.

'நான்' திரைப்படத்தை பற்றி பேச வந்து திசை மாறி விட்டது.

விஜய் ஆண்டனி தம்முடைய பலவீனங்களை தெளிவாக உணர்ந்து அதற்கேற்றவாறான திரைக்கதையை தேர்ந்தெடுந்திருப்பது நன்று. அபத்தமான பாடல் காட்சிகளோ, சண்டைக்காட்சிகளோ இல்லை. இயக்குநரின் சுவாரசியமான கதை சொல்லும் திறமையால் படம் சுவாரசியமாகவே துவங்குகிறது. ஆனால் ஒரு நிலையில் படம் அப்படியே அமர்ந்து விடுகிறது. சூழ்நிலை காரணமாக நண்பனைக் கொல்பவன், அங்கேயே தம்மைத் தொடர்வானா என்கிற கேள்வி இடையறாது நம்மைத் தொல்லை செய்கிறது. அது மாத்திரமல்ல. விஜய் ஆண்டனி தன்னை ஆள்மாறாட்டம் செய்து கொள்வதான காட்சிகள் அதீத முஸ்தீபுகளுடன்.. ஏதோ ஒரு சர்வதேச தீவிரவாத செயலை செய்யப் போகும் பில்டப்புகளுடன் தொடர்கின்றன. ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று முடியும் போது ஏமாற்றமாக இருக்கிறது. 'தொடரும்' என்று வேறு போட்டு பயமுறுத்தியிருக்கிறார்கள்.

விஜய் ஆண்டனி நன்றாகவே முயற்சித்திருக்கிறார். ஆனால் பெருச்சாளியை விழுங்கின பூனை மாதிரி அவ்வப்போது விழிப்பது ஏன் என்று தெரியவில்லை. மற்றபடி இயக்குநர் ஒரு திறமையான கதை சொல்லியாக வரக்கூடிய தடயங்கள் படத்தில் இருக்கின்றன.திரைக்கதைக்காக இன்னும் உழைத்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
 
suresh kannan

7 comments:

Ashok Adhwaith said...

I am not used to typing in Tamil. Wud take some time to learn.

For a healthy family life and for raising healthy children, affairs outside marriage or affairs before marriage is not conducice. All the so called "progressive societies" who encourage "liberal thinking" are by and large family disasters. You need not look abroad for this. You can even look around to see the disasters wreaked in their families by irresponsible parents, who have extra marital and premarital affairs. Tell me one family, where the children are emotionally healthy when parents are "liberal". The so called "progressive thinking" is an excuse for the inability to subordinate impulses to matured thinking. Nirkka.

Western societies subordinate family welfare to individual impulse. It would be individually gratifying but goes against societal stability. Jayakanthan has written lot of good revolutionary material. No doubt. But that does not make every view of his right and justified. Lot of people would like writing which support individual liberty. We would obviously like a teacher who allows you to come and go anytime than a person who insists on discipline.

Surely, as you say, arivaal or suicide is not the response. But writing or movies that encourage immorality in the name of free thinking do not contribute to society.

வவ்வால் said...

சுரேஷ்கண்ணன்,

// ஆனால் பெருச்சாளியை விழுங்கின பூனை மாதிரி அவ்வப்போது விழிப்பது ஏன் என்று தெரியவில்லை.//

:-))


மலச்சிக்கல் வந்ததுப்போலவே ஒரு ரியாக்‌ஷனோடு இருக்காரே என நினைத்தேன்,பெருச்சாளி முழுங்கினா அப்படித்தானே ஆகும் !!!

rajasundararajan said...

தவறுதலா ஒண்ணு நடந்து போச்சு. பேசித் தீர்க்காம அருவாளைத் தூக்குறதா பண்பட்ட லட்சணம் என்று நீங்கள் கேட்டிருப்பது சரிதான். (அதற்காக திருவாளர் அத்வைதி மாதிரி கமலஹாஸன் குடும்பத்தை உதாரணம் கேட்க மாட்டேன். அல்லது ரோஜாக்களைப் பற்றி மட்டும்தான், முட்களைப் பற்றி இலக்கியம் பண்ணக் கூடாது என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.)

'நான்' படத்தில், அந்தக் கேரக்டரைசேஷனில், என்ன கஷ்டப் பட்டாவது வாழவேண்டும் என்னும் உந்துதலில் அவன் செய்யும் காரியங்களுக்கு moral justification கொண்டுவர, இயக்குநர்/ கதையாசிரியர்களுக்குத் தெரியவில்லை என்பதுதானே அவர்களைத் 'தொடரும்...' போட வைத்திருக்கிறது?

அவர்களுக்காக இரங்குவோமாக!

Anonymous said...

Extra-marital relationships cannot be justified and if a child gets angry on account of that it has to be understood. There is nothing feudal in that.Rather often it is men who have the feudal attitude treating women as their slaves/property indulge in such affairs.You are mixing up irrelevant issues.Divorce is a way out but justifying such relationships is not an answer.
Basically it is a question of ethics and commitment. One cannot take a stand that both can be ignored and such affairs should be taken as permissible relationships for men/women.

silviamary.blogspot.in said...

/ஜெயகாந்தனின் 'அந்தரங்கம் புதினமானது' என்கிற சிறுகதை நினைவுக்கு வருகிறது. தன்னுடைய தந்தை இன்னொரு பெண்ணுடன் கொண்டிருக்கிற தொடர்பு குறித்து அறிகிற இளைஞனொருவன் அது குறித்து திகைப்பும் கோபமும் கொள்கிறான். தாயிடம் இது பற்றி உரையாடுகிறான். இந்தத் தொடர்பைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருக்கிற தாய் அது பற்றி கோபம் கொள்ளாதிருப்பதற்காக அவளிடம் சண்டையிடுகிறான். அவனை அமர வைத்து அந்த தாய் உரையாடுவதுதான் அந்தச் சிறுகதையின் மையம். இம்மாதிரியான முதிர்ச்சியான சிந்தனைகளை நோக்கித்தான் ஒரு நாகரிகமாக சமூகம் நகர்ந்தாக வேண்டும்/ ஜெயகாந்தனின் சிறுகதையின் மையத்தை உல்டாவாக மாற்றிப் பாருங்கள். அதாவது தன் தாய் இன்னொரு ஆணுடன் உடல் ரீதியான தொடர்பில் இருப்பதைப் பார்த்து விடுகிற மகன் தன் தந்தையியிடம் போய் அதைக் கண்டிக்கச் சொல்ல அவர்களின் நியாயத்தை தந்தை பேசுவதான கதையை,நிச்சயமாக ஜெயகாந்தனே கூட எழுதத் துணிய மாட்டார். அதுதான் இங்கு கற்பு என்றும் கலாச்சாரம் என்றும் காலங்காலமாக கற்பிக்கப்பட்டு... எழுதவே ஆயாசமாக இருக்கிறது. அந்தரங்கம் எல்லாம் ஆண்களுக்கு மட்டும் தான்; அவர்கள் அதை ஒருபோதும் பெண்களுக்கு நீட்டிக்க அனுமதிக்க மாட்டார்கள். சோ.சுப்புராஜ்

பின்னோக்கி said...

பல ஆங்கில த்ரில்லர் படங்களைப் பார்த்திருந்தாலும், தமிழில் வந்த இந்த த்ரில்லர் வகைப் படம் நன்றாக ரசிக்கும்படியே இருந்தது.

லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், edge of the seat த்ரில்லர் வகையில் எனக்குப் பிடித்தமான ஒரு படமாகவே இருந்தது.

பின்னோக்கி said...

பல ஆங்கில த்ரில்லர் படங்களைப் பார்த்திருந்தாலும், தமிழில் வந்த இந்த த்ரில்லர் வகைப் படம் நன்றாக ரசிக்கும்படியே இருந்தது.

லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், edge of the seat த்ரில்லர் வகையில் எனக்குப் பிடித்தமான ஒரு படமாகவே இருந்தது.