Thursday, March 22, 2012

திருகலான திரில்லர் (Kahaani)


 தொலைபேசியில் அபூர்வமாக அழைக்கும் நண்பர், வித்யா பாலனின்  'கஹானி பார்க்கத் தவறாதீர்கள். மிக நல்ல படம்" என்றார் அசரிரீ போல.

'கஹானி' மிக புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட ஆனால் அபத்தமான திரில்லர். பார்த்து முடிக்கும் வரையில் பார்வையாளனை திரையோடு கட்டிப் போட வைக்கும் அபாரமான திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை. அசத்தலான அந்த முடிவை முன்பே சற்று யூகிக்க வேண்டுமெனில் 'எல்லாவற்றையும் சந்தேகி' என்கிற கார்ல் மார்க்ஸை பின்பற்ற வேண்டும் அல்லது எல்லாவற்றையும் கோக்குமாக்காக யோசிக்கப் பழகியிருக்க வேண்டும். இறுதியில் பார்வையாளனை திகைக்க வைக்க வேண்டும் என்கிற இயக்குநரின் நோக்கம் வெற்றிகரமாக தற்காலிமாக நிறைவேறியிருக்கிறது என்பதைத் தவிர பிறகு நிதானமாக யோசித்துப் பார்த்தால் பல லாஜிக்கான புள்ளிகள் நெருடலாக இணைய மறுக்கின்றன. 'கொக்கு தலையில் வெண்ணையை வைத்து பிடிப்பது' என்பதான அசட்டுத்தனமே படத்தின் காண்பனுபவத்தை அரைகுறையாக்குகிறது.

இந்திய உளவுத்துறையை இத்தனை முட்டாள்தனமாக சித்தரிக்க முடியுமா என்பதுதான் பிரதானமான நெருடல். திரைப்படக் கதாசிரியர்களே யோசிக்காத பல கோணங்களில் பல பிரமிப்பூட்டும் 'வரலாற்று'  கதைகளை தினம் தினம் 'உருவாக்கும்' உளவுத்துறையினரின் சாமர்த்தியர்த்திற்கு முன்பு 'துர்கா பூஜை வீரத்திருமகள் - கர்ப்பிணி' போன்ற அபத்த ஒப்பனைகளெல்லாம் எடுபடுமா என்பது.   கணினி உபயோகம் பரவலாகி வி்ட்ட நிலையில் இன்றும் கூட அது தொடர்பான அபத்தக் காட்சிகளை "புத்திசாலித்தனமான" படங்களில் கூட காண நேர்வது சங்கடமாக இருக்கிறது. குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சி மகா அபத்தம். பார்வையாளனை எதையும் யூகிக்க விடாது, திரில்லருக்கான முழுமையான அனுபவத்தைத் தராமல் ஒரு பாத்திரம் மூலமாக எல்லாவற்றையும் விளக்குவதன் மூலம் பார்வையாளனின் யோசிக்கும் திறனை அவமானப்படுத்தி......ஹிட்ச்காக்கின் திரில்லர்களை யோசித்துப் பார்த்தால் இது போன்ற நெருடல்கள் பார்வையாளர்களுக்கு ஏற்படாத வகையில் கூடுமான வரையில் தவிர்த்திருப்பதை உணர முடியும். பார்வையாளன் காட்சி வடிவத்தை புரிந்து கொள்வதில் சற்று முன்னேறியிருக்கக்கூடிய சூழலில், இப்பவும் 'என்ன நடந்திச்சின்னா' என்று இழுப்பது சரியல்ல.


 மற்றபடி இந்தியத் திரைப்படங்களில் இது ஒரு சிறந்த திரில்லர் என்பதில் சந்தேகமில்லை. என்ன ஒரு கஷ்டமெனில் நாம்  அப்போது சற்று மூளைக்கு ஓய்வு தந்திருக்க வேண்டும். வித்யா பாலனுக்கு சமீபத்தில்தான் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்திருப்பதால் அவர் சிறப்பாக நடித்ததாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மற்றபடி இதில் என்னை மிகவும் கவர்ந்தது, உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் Nawazuddin Siddiqui -ன் அசத்தலான நடிப்பும் உடல்மொழியும். புதுடெல்லி, நேஷனல் ஸ்கூல் டிராமாவில் பயின்றவர். (இணைப்பிலுள்ள அவரின் நேர்காணலை வாசிக்கவும்).

கொல்கத்தா நகரமும் துர்கா பூஜை திருவிழாவும் இந்த திரில்லருடன் மிக அழகாக பின்னப்பட்டிருக்கின்றன. படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் (விஷால்-சேகர்) இந்த திரில்லருக்கு பக்க பலமாயிருக்கின்றன.  வித்யா காவல்துறை இளைஞனை மிதமாக seduce செய்யும் விதமும் இளைஞனின் கண்ணில் தெரியும் காதலும் அழகான சிறு கிளைக்கதையாக விரிகிறது. காலில் இடித்துக் கொள்ளும் அந்த  சில நிமிடக் காட்சி ஒரு கவிதை. படத்தின் துவக்கக் காட்சி படத்துடன் ஒன்றுவதற்கான ஆர்வர்த்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுஜாய் கோஷ் இன்னமும் நம்பகத்தன்மையுடன் கூடிய 'கஹானி'யை '(கதை) உருவாக்கியிருந்தால் இது இன்னமும் மிகச்சிறந்ததொரு திரில்லராக உருவாகியிருக்கக்கூடும்.


suresh kannan

6 comments:

CS. Mohan Kumar said...

I think we can see it once. I am yet to see this film. Will see soon.

ஹாலிவுட்ரசிகன் said...

பார்க்கவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

ஒஸ்தி பார்த்து குஸ்தியானது போல இல்லாமல் இருந்தால் போதும்.

rajamelaiyur said...

நல்ல விமர்சனம்

rajamelaiyur said...

இன்று
அஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ

Dwarak R said...

i felt cheated after leaving moving hall. Mangatha climaxkkum intha padathoda climaxkkum periya vithyasam illai.

As you have rightly pointed a mystery movie should respect viewer's intelligence.

One very good thing i liked about the movie was Kolkatta's portrayal (daylight, early morning, rainy season, durga pooja and etc).

Namma orru movies chennai kammikkum pothu Central, Koovam bridge, beach first scene kammichutu vitturuvanga.

சுந்தர் (காங்கோ) said...

திருகல், ஆழ்மன குரைப்புகள், பழிவாங்குதலின் பரிசுத்தம் (இதுல என்னய்யா பரிசுத்தம் வேண்டிகிடக்கு), சப்தங்களின் வன்புணர்ச்சி, அபத்தம், தருக்கப்பிழை, திகிலான நேர்காணல் - நீங்கள் எடுத்தாளும் வார்த்தைகளே ஒருவித வித்தியாச மன உணர்வைத்தருகின்றன (கசப்பின் ருசி).. இயல்பாய் அமைகின்றனவா அல்லது திகைப்பை ஏற்படுத்தும் நோக்கமா?

டிஸ்கி: “இதுல என்னய்யா பரிசுத்தம்”னு டைப் பண்ணிட்டேன், பிறகு எதேச்சையா பாத்தா அதுக்கு ஏற்கனவே ஒரு விளக்கம் இருக்கு உங்க கிட்ட. “நம்முடைய ஆக்கப்பூர்வமான செயல்முறைகளின் போதும் சிந்தனைகளின் போதும் கூட நமக்குள் முழுமையாக நிகழாத ஒருமுகப்படுத்தப்பட்ட மனக்குவிப்பும் வலிமையும் செயலும், பழிவாங்குதலின் போது நிகழ்கிறது”

கலவையான உணர்வுகள்...