Saturday, February 26, 2011

நடுநிசி நாய்களின் ஆழ்மன குரைப்புகள்


 ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய அகத்தில் அந்தரங்கமான ஓர் உலகமுண்டு. (என்னைப் பொறுத்த வரை அந்தரங்கம் என்ற ஒன்றே கிடையாது. அது ஒரு கற்பிதம். மற்றவர்கள் அறியாதது என கருதிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தனி மனிதனின் அந்தரங்கமான ரகசியம் அனைத்தையும் பொதுவான வகைமைகளுக்குள் அடைத்துவிடலாம்). அந்த இருட்டான உலகத்தின் மிருகங்கள், சமூகம் கட்டமைத்திருக்கும் விதிகள் மற்றும் போதிக்கப்பட்டிருக்கும் நீதிகள் காரணமாக பதுங்கியிருக்கின்றன. சுயஒழுக்கத்தின் பழக்கத்தின் காரணமாக வெகு சிலரால் அந்த மிருகங்களை கட்டுப்படுத்த முடிகிறது. மாறாக சிலர் அந்த மிருகங்களின் கட்டுப்பாட்டிற்குள் துரதிருஷ்டமாக வந்துவிட்டால் பிரச்சினை ஆரம்பம். இவர்கள் குற்றவாளிகள் எனும் நோக்கில் அல்லாமல் நோயாளிகள் என்ற நோக்கில்தான் அணுகப்பட வேண்டும். 

கெளதம் மேனனின் 'நடுநிசி நாய்கள்'  திரைப்படம் இப்படியொரு நோயாளியை மையப்படுத்தி இயங்குகிறது.

தாயில்லாச் சிறுவன் சமர், வீட்டிலியே கூட்டுக்கலவியில் ஈடுபடும், ஒருபால் உறவில் ஈடுபடும் தந்தையுடன் பாதுகாப்பாற்ற வக்கிரமான சூழலில் வளர்கிறான். இவனைக் கண்டு பரிதாபப்படும் பக்கத்து வீட்டுக்காரரான நடுத்தர வயதுப்பெண் மீனாட்சி, அவனின் தந்தையை காவல்துறையில் பிடித்துக் கொடுக்க, அவர் தற்கொலை செய்து கொள்கிறார். அனாதையாகும் சிறுவன் சமரை, வீரா என பெயர் மாற்றி வளர்க்கிறார் மீனாட்சி. கட்டற்ற பாலுறவு மற்றும்  வன்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட சூழலில் வளர்ந்த சமர் என்கிற வீரா, உளப்பாதிப்பு காரணமாக ஒருநிலையில் மீனாட்சியின் மீது மையல் கொண்டு வன்கலவி கொள்கிறான். அவன் மீது கோபம் கொள்ளும் மீனாட்சி, ஒருவாறாக சமாதானமாகி, தான் திருமணம் செய்து கொள்ளப் போவதை வீராவிடம் தெரிவிக்கிறார். அவர் மீதுள்ள பொசசிவ்னஸ் காரணமாக அவரின் கணவரை கொலை செய்கிறான் வீரா. இதில் நிகழும் தீ விபத்தில் மீனாட்சி படுகாயமடைகிறார். பின்பு... இந்தச் சம்பவங்கள் காரணமாக வீராவிற்கு ஏற்படும் உளப்பாதிப்பின் விளைவான காட்சிகளோடு படம் நீள்கிறது.

வீராவாக, இத்திரைப்படத்தின் இயக்குநான கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த வீரபாகு. முதல்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கான தேர்ந்த நடிப்பு. தன்னுடைய வாக்குமூலத்தை தரும் காட்சிகளில் இவரது முகபாவங்களும் வசன உச்சரிப்புகளின் ஏற்ற இறக்கங்களும் பாராட்டத்தக்கது.  Multiple Personality Disorder ஆல் பாதிக்கப்பட்டிருக்கும் இவரின் நடிப்பு (இது பார்வையாளர்களுக்கு வெளிப்படும் நேரத்தில்) அந்நியனை நினைவுப்படுத்துகிறது. இத்தனை துரித கண இடைவெளிகளுக்குள் இந்த நோயுள்ளவர்களின் ஆளுமைகள் மாறுவதில்லை என்பது மருத்துவர்களின் பொதுவான கருத்தாக இருந்தாலும், பார்வையாளர்களின் எளிய புரிதலுக்காக வைக்கப்பட்டிருந்த இந்த மிகைநடிப்பை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். இதே போல் வீரா இளைஞனாக ஆரம்பக்காட்சிகளில் கொந்தப்பட்ட தலைமுடியுடன் வரும் தோற்றமும் எரிச்சலூட்டுகிறது.

மீனாட்சியாக பாடகி ஸ்வப்னா ஆப்ரஹாம். வீரா இவரை வன்கலவி செய்யும் காட்சியில் இவரது முகம் மாத்திரம் மிகுஅண்மைக் கோணக் காட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த ஐந்தாறு நிமிடங்களில் இவரது பல்வேறு பட்ட விதங்களில் மாறும் இவரது முகபாவங்கள் அருமை. இன்னொரு தோற்றத்தில் இவரது நடிப்பு கவரவோ பயமுறுத்தவோ இல்லை. ஆனால்  அந்த டிவிஸ்ட் சற்று எதிர்பாராதது. இந்த பாத்திரத்திற்கு முதலில் தபுவை அணுகியிருந்தார் இயக்குநர். (அவரே தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்தது). ஆனால் ஸ்கிரிப்ட்டைக் கண்டு தயங்கிய தபு நடிக்க மறுத்துவிட்டாராம். ஒருவேளை தபு நடித்திருந்தால் அது இந்தப் படத்திற்கு இன்னமும் பலமாய் அமைந்திருக்கும்.

இந்தப் படத்தின் பரவலாக அறியப்பட்ட ஒரே தெரிந்த முகம் சமீரா ரெட்டி. படத்தில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு இல்லையெனினும் தான் கடத்தப்பட்டதின் வலியை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் தேவாவின் (இவரும் கெளதமின் உதவி இயக்குநர்) பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்தது.

()

இந்தப்படத்தின் பெரிய பலவீனம் வலுவான கதையோட்டத்தைக் கொண்டிருக்காததும், சுவாரசியமற்ற திரைக்கதையைக் கொண்டிருப்பதும் மற்ற சில சஸ்பென்ஸ் திரைப்படங்களை நினைவுப்படுத்தும் சாத்தியத்தைக் கொண்டிருப்பதும். (பிரதானமாக ஹிட்ச்காக்கின் சைக்கோ). சில காட்சிக் கோர்வைகள் பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்களை' நினைவுப்படுத்துகிறது.

இங்கே இடைவெட்டாக பாரதிராஜாவின் திரைப்படத்தைப் பற்றி ஒருசில வரிகளாவது எழுதியாக வேண்டும். கிராமப்புறத் திரைப்படங்களை தன்னுடைய வெற்றியின் அடையாளமாகக் கொண்டு வெளிப்பட்ட ஓர் இயக்குநர் அதிலிருந்து முற்றிலும் விலகி வேறொரு களததை, உள்ளடக்கத்தைக் கொண்டு உருவாக்கின அந்த துணிச்சலான முயற்சி, எப்போதும் பாராட்டத்தக்கது. அதுவும் அந்தக் கால கட்டத்தில்.

சிகப்பு ரோஜாக்களுக்கும் நடுநிசி நாய்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவெனில் முன்னது போன்று நடுநிசி நாய்கள் 'ரெமாண்டிசிசைஸ்' செய்யப்படவில்லை. நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழலும் அதன் பின்னதான காட்சிகளும் அதன் இருண்மையோடும் கட்டுப்பாடற்ற தன்மைகளோடும் அப்படியே வெளிப்பட்டிருக்கின்றன. 'உளப்பாதிப்பு'ள்ள பாத்திரம் என்பதற்காக அதன் மீது அனுதாபத்தையோ அல்லது அதீத எரிச்சலையோ பார்வையாளன் வெளிப்படுத்துமாறு  கொண்டிருக்கவில்லை. இந்த சமநிலையை இறுதிவரை இயக்குநர் பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக்காட்சியில் காவல் அதிகாரியுடன் சண்டையிடும் வீரா, 'நாயைப் போய் சுட்டிக் கொன்னுட்டியேடா' என்று கதறுகிறான். பார்வையாளர்களின் நோக்கில் கொடூரமானவாக அதுவரை சித்தரி்க்கப்படும் வீராவிடம், அன்பிற்கான அடையாளமும் ஒளிந்திருப்பதை போகிற போக்கில் ஒரு கீற்றாக இந்தக் காட்சி சொல்லிச் செல்கிறது.

இந்தச் சுமாரான படத்தின் மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. இந்தப் படத்தின் ஹீரோவாக அவரையே சொல்லலாம். 'ஒரு நல்ல படத்தில் ஒளிப்பதிவு துருத்திக் கொண்டு தெரியக்கூடாது' என்பதெல்லாம் ஒருநிலையில் சரியே. ஆனால் நாம் ஒளிப்பதிவாளரின் கண்களின் மூலம்தான் சினிமா பார்க்கிறோம் என்கிற வகையிலும் காட்சிகளின் அழகியல் சார்ந்தும் ஒளிப்பதிவாளரின் தனித்துவமும் முக்கியமானதே. வீரா, தனது பள்ளித் தோழி சுகன்யாவை தன்னுடைய தோட்டத்தில் துரத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில் காவல்துறைஅதிகாரி ஒருவர் சந்தேகத்துடன் அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஏரியல் ஷாட்டில் இரண்டையும்  பார்வையாளன் பார்த்துக் கொண்டிருக்கும் போது மழை பெய்யும் காட்சியை காமிரா பதிவு செய்திருக்கும் அழகும் துல்லியமும் பிரமிக்கத்தக்கது. இது போன்று பல காட்சிகளைக் குறிப்பிடலாம். இந்தத் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு வற்புறுத்துவதற்கான பிரதான காரணம் மனோஜின் அட்டகாசமான ஒளிப்பதிவு. சில காட்சிகள், உண்மை சம்பவங்கள் நிகழும் போது படமெடுக்கப்பட்ட வீடியோ போலவே டாக்குமெண்டரித்தனத்துடன் உள்ளது.

இன்னொரு காரணம், பின்னணி இசையை உபயோகிக்காத காரணத்தினால் அதை சமன் செய்ய முன்னமே திட்டமிடப்பட்ட பிரத்யேக ஒலிப்பதிவு. பின்னணி இசை இல்லை என்பதை உணரவே முடியாத அளவிற்கான ஒலிப்பதிவு. இந்தியாவிலேயே இதுதான் முதனமுறை என்று நினைக்கிறேன்.  பார்வையாளர்களின் செல்போன் சிணுங்கல்கள் கூட இடையூறு ஏற்படுத்துமளவிற்கு பல மெளனமான காட்சிகள் நகர்கின்றன.

பழைய கள்ளை புதிய தொழில்நுட்ப மொந்தையில் தந்திருந்தாலும் சிலவற்றை பட்டவர்த்தனமாக முன்வைத்தற்காக கெளதம் மேனனின் இந்த முயற்சி பாராட்டத்தக்கதே. குறிப்பாக சிறுவர்களின் மீது நிகழ்த்தப்படும் பாலுறவு அத்துமறீல் குறித்தது. மதூர் பண்டார்கரின் 'சாந்தினி பார்' திரைப்படத்தில் ரவுடிக்கு மகன் என்கிற காரணத்தினாலேயே சிறுவன் ஒருவனை காவல்துறை சிறுவர் சிறையில் தள்ளும். அங்குள்ள மூத்தவயதுள்ள சிறுவர்கள் ரவுடியின் மகனை வன்கலவி செய்துவிடுவார்கள். விடுதலையடைந்த பிறகும் அந்தச் சம்பவத்தினால் நேர்ந்த மன அழுத்தம் தாங்காமல் எங்கிருந்தோ சம்பாதித்த ஒரு துப்பாக்கியைக் கொண்டு அவர்களை அவன் கொன்றுவிடுவான். சமூக விரோதி என்று சமூகத்தால் கருதப்படுகிறவர்களின் ஆரம்பக் காரணங்களையும் இந்தச் சமூகமே வைத்திருக்கிறது.

நடுநிசி நாய்களில் கூட்டுக்கலவியில் ஈடுபடும், மகனுடன் வன்கலவியில் ஈடுபடும் அந்தத் தந்தையின் சிறுவயதை ஆராய்ந்தால் அவரும் இதுபோன்ற சிக்கலில் அப்போது மாட்டிக் கொண்டவராகவோ அல்லது வேறு உளப்பாதிப்பில் உள்ளவராகவோ இருக்கக்கூடிய சாத்தியமிருக்கிறது.

படத்தின் அபத்தமான இறுதிப்பகுதி டாக்குமெண்டரித்தனத்தோடு படம் பார்த்த ஒட்டுமொத்த மனநிலையை சிதறடித்துவிடுகிறது. இயக்குநர் இதை வேறுவிதமாக கையாண்டிருக்கலாம்.

()

இப்போது இந்தப்படம் குறித்து இணையத்தில் வெளிவந்த சில எதிர்வினைகளைப் பார்ப்போம்.

படம் மொக்கை என்கிற ரீதியில் வெளிவந்த பார்வைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. கிளிஷேவான கதை, பெரிதும் சுவாரசியமற்ற திரைக்கதை என்கிற ரீதியில் இது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆனால் என்னைப் பொறுத்தவரை  பின்னணி இசை இல்லாதது மற்றும் இதுவரை அல்லாத ஒரு பிரச்சினையை இயக்குநர் கையாண்டது என்கிற வகையில் ஒரு புதிய முயற்சியாகவே  இத்திரைப்படத்தை அணுகலாம். சினிமாவை நேசிப்பவனாக இந்த முயற்சி எனக்கு பிடித்தேயிருந்தது. இணையத்தில் கிடைக்கும் தேசலான பிரிண்ட்டில் பார்த்துவிட்டு குற்றஞ்சாட்டுவது முறையல்ல. முன்னரே கூறியபடி திரையரங்கில் இதை பார்ப்பதற்கான காரணங்கள் உள்ளன.

இன்னொரு குற்றச்சாட்டு மொண்ணைத்தனமானது. இத்திரைப்படம் தமிழ் கலாசாரத்தை, விழுமியங்களை சேதப்படுத்தியிருக்கிறது என்பதும், சமூகத்தின் எங்கோ ஒரு மூலையில் நிகழ்வதை பொதுவெளியில் ஏன் பிரதானப்படுத்த வேண்டும் என்பதும்.

ஒரு கட்டமைக்கப்பட்ட சமூகம் எல்லாவிதமான நிறைகளையும் குறைகளையும்  புனிதங்களையும் வக்கிரங்களையும் கொண்டது. சமூகத்தின் இருண்மையான, அழுக்கான பகுதிகளை பொதுப்பரப்பில் வெளிச்சம் போட்டுக் காட்டுபவதே ஓர் உண்மையான கலைஞனின அடிப்படைப் பொறுப்பாக இருக்க முடியும். 'கற்பு கற்பு என்று கதைக்கறீர்களே இதுதானய்யா பொன்னகரம்' என்றெழுதினார் புதுமைப்பித்தன். எல்லா வக்கிரங்களையும் தன்னுள் கொண்டிருக்கும் சமூகம், இந்த நிர்வாண உண்மையை எதிர்கொள்ள முடியாமல் கண்கூசுகிறது, பதட்டமடைகிறது.

இதில் சர்ச்சைக்குரியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் காட்சிகளை இயக்குநர் மிக subtle  ஆக நாகரிகமாக கையாண்டிருக்கிறார். பார்வையாளனுக்கு ஆபாசக் கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கில்லை என்பது காட்சிகளை கையாண்ட விதத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஒருவித கையாலாகாத குற்றவுணர்வு நிலையில்தான் ஓர் ஆரோக்கிய மனநிலையில் உள்ள பார்வையாளன் அந்தக் காட்சிகளை எதிர்கொள்கிறான்.

ஆனால், நாயகியின் கையைத் தொட்டதுமே அவள் புணர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றதான முகபாவத்தையும், முத்தமிட்டுக் கொள்வதை இருபூக்கள் வந்து மறைப்பதையுமே பல ஆண்டுகள் கண்டு வந்திருந்த தமிழ்ச்சினிமா ரசிகனின் பொதுப்புத்தி, அதே மொண்ணைத்தனத்தோடு இயக்குநர் காட்டியிராததையும் தனது வக்கிரததால் நிரப்பிக் கொண்டு களித்து விட்டு பிறகு போலிப் பாசாங்காக கூக்குரலிடுகிறது. நேரடி நிர்வாணத்தைவிட பார்வையாளன் இட்டு நிரப்பக்கூடிய சாத்தியத்துடன் கிளர்ச்சியை ஏற்படுத்த செயற்கையாக கட்டமைக்கப்படும் அபத்தங்கள் ஆபத்தானவை. பாலியல் வறட்சியில் அவதிப்படும் தமிழ் சமூகத்தில் இந்த ஆபத்து எரிகிற நெருப்பில் எண்ணையாய் மாறி கற்பழிப்புகளாகவும் சிறுமிகள்,குழந்தைகள் மீதான வன்கலவிகளாவும் நீள்கின்றன. ஆனால் இந்த நோய்களின் அறுவைச் சிகிச்சைகளுக்கான முயற்சிகளைக் கண்டு இந்தச் சமூகமே பதற்றப்படுவது நகைமுரண்.

இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களால், இத்திரைப்படம் ஆபாசமானதோ என்று தயங்கி நிற்பவர்களை, முதிர்ச்சியுள்ள பார்வையாளர்களை, தயங்காமல் சென்று பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். சிக்கலான கதையமைப்புகளை, காட்சிகளைக் கொண்ட சில வெளிநாட்டு திரைப்பட டிவிடிகளில் 'FOR MATURE AUDIENCES ONLY' என்று போட்டிருப்பார்கள். அதனுடைய முழு அர்த்தம் இப்போதுதான் விளங்குகிறது. கெளதம் மேனன் இதன் விளம்பரங்களில் 'பலவீனமானவர்களுக்கு அல்ல' என்று போட்டிருப்பதற்குப் பதிலாக 'தயிர்வடைவாதிகளுக்கு அல்ல' என்று போட்டிருக்கலாம்.

suresh kannan

23 comments:

உலக சினிமா ரசிகன் said...

இசையில்லாமல் இவருக்கு முன்பே அடூர் கோபாலகிருஷ்ணன் கொடியேற்றம் படத்தில் செய்து காட்டிவிட்டார்.இதை விளம்பரப்படுத்தி மலிவான புகழை தேடவில்லை அந்த மேதை.
சாருலதாவையும்,அபூர்வராகங்களையும்,தப்புதாளங்களையும்
ஆராதித்த என்னால் இப்படத்தை ஜீரணிக்க மிடியவில்லை.

உலக சினிமா ரசிகன் said...

எங்களைப்போன்றவர்களுக்கு தயிர்வடைவாதிகள் என்ற பெயர்சூட்டியுள்ளதுக்கு நன்றி.

முகவை மைந்தன் said...

அரங்குல போய் படம் பார்த்தேன். பின்னணி இசை இல்லாததை உணரவே இல்லை. வெகு நெருக்கமான ஒளிப்பதிவில் தவறவிட்டிருக்கேன். படம் பார்த்துக்கப்புறம் இரண்டொரு பார்வைகள் படிச்சேன். இந்த அளவுக்கு தேர்ந்தெடுத்த சொற்கள்ல இல்லைன்னாலும்:-) உங்களோடது தான் என் பார்வைக்கு நெருக்கமா இருக்கு.

//'சிகப்பு ரோஜாக்களை' நினைவுப்படுத்துகிறது.//

மூடுபனியையும்.

//ஆனால் நாம் ஒளிப்பதிவாளரின் கண்களின் மூலம்தான் சினிமா பார்க்கிறோம் என்கிற வகையிலும் காட்சிகளின் அழகியல் சார்ந்தும் ஒளிப்பதிவாளரின் தனித்துவமும் முக்கியமானதே.//

//கெளதம் மேனனின் இந்த முயற்சி பாராட்டத்தக்கதே//
இந்த மாதிரி நெருக்கத்துல போய் காட்சி இருந்ததுனாலயே எனக்கு விண்ணைத் தாண்டி வருவாயாவும் புடிச்சிருந்தது.

//இதில் சர்ச்சைக்குரியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் காட்சிகளை இயக்குநர் மிக subtle ஆக நாகரிகமாக கையாண்டிருக்கிறார். பார்வையாளனுக்கு ஆபாசக் கிளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கில்லை என்பது காட்சிகளை கையாண்ட விதத்திலிருந்து தெளிவாகத் தெரிகிறது.//

//தமிழ்ச்சினிமா ரசிகனின் பொதுப்புத்தி, அதே மொண்ணைத்தனத்தோடு இயக்குநர் காட்டியிராததையும் தனது வக்கிரததால் நிரப்பிக் கொண்டு களித்து விட்டு பிறகு போலிப் பாசாங்காக கூக்குரலிடுகிறது.//

//தயங்காமல் சென்று பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.//
நானும் தான். ஆனா, ஆகா, ஓகோ படம்லாம் இல்லை. நல்ல முயற்சின்ற அளவுல.

நீங்க உள்புகுந்து பார்த்த அளவுக்கு எனக்கு பார்க்கத் தெரியலை.

bandhu said...

//நேரடி நிர்வாணத்தைவிட பார்வையாளன் இட்டு நிரப்பக்கூடிய சாத்தியத்துடன் கிளர்ச்சியை ஏற்படுத்த செயற்கையாக கட்டமைக்கப்படும் அபத்தங்கள் ஆபத்தானவை.//
This is absolutely true. This is what all our movies have been doing, excepting a few.

ஜானகிராமன் said...

நல்ல பதிவு. நீங்கள் சொல்வது போல படத்தின் தொழில்நுட்ப மற்றும் கதைசொல்லலின் தனித்தன்மை தமிழுக்கு புதிய என்ற வகையில் இந்த படத்தை நிச்சயம் கவனம் கொள்ளவேண்டும். மலினமான வியாபார யுக்தியை கௌதம் விரும்பியிருந்தால் இந்த படத்தை இன்னும் ஆபாசமாக எடுத்திருக்கமுடியும். அதற்கான போதுமான வாய்ப்புகள் இருந்தும் அதனை இயக்குனர் தவிர்த்தது பாராட்டப்படவேண்டியது.

Indian said...

Agree with your review.

Anonymous said...

@உலக சினிமா ரசிகன்

//சாருலதாவையும்,அபூர்வராகங்களையும்,தப்புதாளங்களையும்
ஆராதித்த என்னால் இப்படத்தை ஜீரணிக்க மிடியவில்லை//

ஜீரணிக்க முடியவில்லை என்பெதெல்லாம் சும்மா..

சு.க. சொல்வதை போல சமூகத்தில் ஒளிந்திருக்கிற ஒரு கசப்பான உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்வதில் இருக்கும் பயம்தான் பிரச்சினையே..

அடுத்தவன் நம்மைப்பற்றி என்ன நினைப்பானோ என்பதற்காகவே இங்கு நிறைய பேர் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லத் தயங்கும் சூழலே நிலவுகிறது.

Anonymous said...

இயல்புக்கு மாறான, செயற்கையான, "ஹேய்.. ஹா...ஸ்.. ஆ..." போன்ற அருவருக்கத்தக்க ஆபாச சப்தங்களை கொண்ட திரைப்படைங்களையும், ஆபாச அசைவுகள் கொண்ட நடனப்(?) போட்டிகளையும் வெட்கமில்லாமில் குழந்தைகளுடன் வரவேற்பறையிலேயே பார்த்து ரசிக்கும் ஜென்மங்கள் இதை மட்டும் ஆபாசம் என்று கூச்சலிடுவதை காணும்போது எரிச்சலாகவே இருக்கிறது..

Anonymous said...

//நேரடி நிர்வாணத்தைவிட பார்வையாளன் இட்டு நிரப்பக்கூடிய சாத்தியத்துடன் கிளர்ச்சியை ஏற்படுத்த செயற்கையாக கட்டமைக்கப்படும் அபத்தங்கள் ஆபத்தானவை//

உண்மைதான். பெரும்பாலான (தரமான) பிறமொழித் திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகளை காணும்போது உடல் ரீதியான கிளர்ச்சி என்பது அரிதாகவே இருக்கிறது. அடிப்படையில், நிர்வாணம் என்பது ஆபாசமே அல்ல என்பது என் கருத்து.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

prakash said...

HONEST REVIEW...

உலக சினிமா ரசிகன் said...

தகப்பன் மகளை பெண்டாளும் வோல்வரையும் ரசித்திருக்கிறேன்.எந்தக்கருத்தையும் சொல்லலாம்.அதில் கலைத்தன்மை இருக்க வேண்டும்.மக்களை மேம்படுத்தும் உள்ளடக்கம் கட்டாயம் வேண்டும்.இரண்டுமே ந.நி.நாய்களில் இல்லை.மதனின் பின்னூட்டதிற்க்கான எதிர்வினை இது.இதுவே கடைசி .மேலும் லாவணி பாட விருப்பமில்லை.

Anonymous said...

i saw a movie called the american(2010) starring george clooney...i suggest u this movie...d......

விஸ்வா said...

சரியான பார்வை, புரிதல்...
பகிர்வுக்கு நன்றி...

Aravind said...

Very honest review. Criticizes the creation and not the creator(as some other reviews are doing).

தயாஜி said...

சிறப்பாக இருந்தது...... வாழ்த்துகள் நண்பரே
"நடுநிசி நாய்கள்" பார்த்த இரண்டு நாளாய் தூங்க முடியவில்லை......

Boston Bala said...

யுத்தம் செய் பார்த்தாச்சா?

shortfilmindia.com said...

//இது போன்ற அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களால், இத்திரைப்படம் ஆபாசமானதோ என்று தயங்கி நிற்பவர்களை, முதிர்ச்சியுள்ள பார்வையாளர்களை, தயங்காமல் சென்று பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். சிக்கலான கதையமைப்புகளை, காட்சிகளைக் கொண்ட சில வெளிநாட்டு திரைப்பட டிவிடிகளில் 'FOR MATURE AUDIENCES ONLY' என்று போட்டிருப்பார்கள். அதனுடைய முழு அர்த்தம் இப்போதுதான் விளங்குகிறது. கெளதம் மேனன் இதன் விளம்பரங்களில் 'பலவீனமானவர்களுக்கு அல்ல' என்று போட்டிருப்பதற்குப் பதிலாக 'தயிர்வடைவாதிகளுக்கு அல்ல' என்று போட்டிருக்கலாம்.
//

:))

Anonymous said...

Nadunisi naigal vimarsanagalil idhu thaan miga sirandha ondraaga ninaikiren.

SS

குரங்குபெடல் said...

எங்களை அவமானபடுத்தியற்கு
ஆழ்மன கண்டனங்கள் . . .

---- தயிர்வடை தின்போர் சங்கம்

Anonymous said...

விமர்சனத்திற்கு நன்றி,

வழக்கமாக தன படங்களில் கேரள பின்புலத்தை கொண்ட கதை நாயகர்கள் , நாயகிகளை கதை பத்திரங்களை உணதமாக காட்டும் மேனன் , இப் படத்தின் கதை பத்திரங்களை மட்டும் சுத்த தமிழனாக காட்டுவது ஏனோ !!!.

Anonymous said...

"பாலியல் வறட்சியில் அவதிப்படும் தமிழ் சமூகத்தில் இந்த ஆபத்து எரிகிற நெருப்பில் எண்ணையாய் மாறி கற்பழிப்புகளாகவும் சிறுமிகள்,குழந்தைகள் மீதான வன்கலவிகளாவும் நீள்கின்றன. ஆனால் இந்த நோய்களின் அறுவைச் சிகிச்சைகளுக்கான முயற்சிகளைக் கண்டு இந்தச் சமூகமே பதற்றப்படுவது நகைமுரண்." - அபத்த வாதம். கட்டற்ற பாலியலை தடை இன்றி அனுமதிக்கும் ஐரோப்பிய நாடுகளில் கூடத்தான் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகம். இந்தியாவில் கைது செய்யப்படும் பெரும்பாலான வெளிநாட்டு பாலியல் குற்றவாளிகள் ஐரோப்பியர்கள்தான். கெளதம் மேனன் தன் போலி-அறிவுஜீவிதனத்தை 'Derailed, Se7en','My girl series' என சுட்டு எடுப்பதை கண்டு நகைத்துவிட்டு போகலாம், ஆனால் இப்படி உள்ளே பதுங்கி இருக்கும் பல நடுநிசி ஓநாய்களுக்கு திணிப்போடுவதை எங்களை மாதிரி தயிர்வடைகளாவது எதிர்கிறதே.

Anonymous said...

Mr.suresh,
this film is really not worth any review at all..film is not about the content,its about the making.you are supporting the content that the director has taken which any body can do...its the making the creates the cinema ..tats what makes the audience involve.if the making is not good,then the word cinema review does not come into picture.have you seen old boy,the content's shock is easily overcome by making..thats what a cinema is!!!.most of the cinema review and the so called genious reviewers take only the content into account..NNN... is a badly written script with very badly sketched screenplay..thats enough to throw this movie..mahanadhi's content is also good ,it is made brilliant by the script and screenplay...by the way in this movie veera tella to sameera reddy"enkita saaman iruku paakkkriya"what kind of subtlety did that scene show or what kind of symbolism does it reveals..i think this review over glorifies the movie which is unwanted..if you want to how multiple personality is handled c the movie identity.. thanks