Tuesday, August 10, 2010

எஸ்.ரா.அளித்த மகிழ்ச்சி



நேற்று எஸ்.ராமகிருஷ்ணனின் தளத்தைப் பார்வையிட சென்ற போது அவர் மிகவும் சிலாகித்து குறிப்பிட்டிருந்த  ஒரு திரைப்படத்தை கண்டவுடன், அவர் ஏதோ என்னையே பாராட்டியது போல் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அதற்கு காரணமிருக்கிறது. அதற்கு முன்னால்...

எனக்கு உலக சினிமாவின் மீதான ஆர்வமேற்படுவதற்கு எஸ்.ராவின் எழுத்துதான் மிகப் பெரிய உந்துதலாக இருந்தது / இருக்கிறது என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லி வந்திருக்கிறேன். இதுவரை நான் சினிமா பற்றி 122 பதிவுகள் எழுதியிருப்பதை சமீபத்தில் கவனித்த போதும், சினிமா விமர்சனங்கள் பற்றி தமிழில் எழுதப்படும் பதிவுகளில் குறிப்பிடத்தகுந்ததாக இந்த வலைப்பதிவையும் ஜெயமோகன் குறிப்பிட்ட போதும் நான் நன்றியுடன் எஸ்.ரா.வை நினைத்துக் கொண்டேன்.

சுயதம்பட்டத்தை நிறுத்திக் கொண்டு விஷயத்திற்கு வருகிறேன். Le Grand Voyage என்ற திரைப்படத்தைப் பற்றி எஸ்.ரா சமீபமாக எழுதும் போது 'கடந்த சில வருசங்களில் நான் பார்த்த ஆகச்சிறந்த படம் இதுவே என்பேன்.' என்கிறார். இதில் எனக்கு உடனே உடன்பாடு ஏற்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் எவ்வித அறிமுகமுமில்லாமல் எதிர்பார்ப்புமில்லாமல் இயல்பாக இத்திரைப்படத்தை பார்த்தேன். பாரம்பரியங்களை கைவிடாத பழமைவாதியாக தோற்றமளிக்கும் தந்தை - இதற்கு நேரெதிராக நவீன உலக இன்பங்களை இலக்கில்லாமல் துய்க்க விரும்பும் மகன் .. என்று இரண்டு முரண்பட்ட பாத்திரங்கள் நீண்ட தொலைவிற்கு பயணிக்க நேரும் ஒரு ROAD MOVIE. தலைமுறை இடைவெளி காரணமாக ஏற்படுகிற உணர்வு மோதல்களை, முரண்களை இத்தனை கச்சிதமாக, யதார்த்தமாக எந்தவொரு திரைப்படத்திலும் நான் பார்த்ததில்லை. பிரமித்து அமர்ந்துவிட்டேன்.

ஏறத்தாழ என்னுடைய அலைவரிசையிலேயே சிந்திக்கும் ரசனையுடைய ஒரு நண்பரிடம் இந்தப் படத்தை காணக் கொடுத்தேன். "ரொம்பச் சாதாரணமான படம். இதுக்குப் போய் ஏன் இத்தனை எக்சைட்மெண்ட்' என்று அசுவாரசியமாய் குறுந்தகட்டை திரும்பக் கொடுத்தார் . என்னுடைய புரிதலில்தான் தவறிருக்கிறதோ என்று குழப்பமேற்பட்டது. சமயங்களில் இப்படியாகிவிடும். பரவலாக மிகவும் அதிகம் சிலாகிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தைக் காண நேரும் போது மிக மோசமாக படமாக்கப்பட்ட, தொடர்பில்லாத மொண்ணைத்தனமான காட்சிகளுடன் இயங்கும் அது நமக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தரலாம். 'இதை அப்படியே வெளியில் சொன்னால் நம்முடைய ரசனையை சந்தேகிப்பார்களோ' என்பதனால் கூட அந்த ஏமாற்றத்தை அப்படியே விழுங்கி விட நேரிடும். மாறாக நாமும் அந்த சிலாகிப்பு கும்பலோடு இணைந்து கொண்டு "ரொம்ப பாதிச்ச படங்க. அதிலும் அந்த சீன்ல கேமரா டிராவல் ஆகுது பாருங்க. ச்சே.. சான்ஸே இல்ல" என்ற பாவனையை செய்ய நேரிடும். (இங்கு இரா.முருகனின் ஏதோவொரு சிறுகதையில் உள்ள வரிகள் நினைவுக்கு வருகிறது. 'பலான காட்சிகள்' நிறைந்திருப்பதாக நம்பி ஓர் ஆங்கிலப்படத்திற்குச் செல்லும் நண்பர்கள் அவ்வாறு பெரிதாக எந்தவொரு காட்சியும் இல்லாத ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு அதை சமாளிக்கும் மனநிலையுடன் "..வக்காலி. அந்த காட்டுக்குள்ள எப்படி படம் எடுத்திருக்கான் பாருடா" என்று பாவனையாக இயல்புக்குத் திரும்ப விழைவார்கள்).

நண்பரின் மறுதலிப்பு காரணமாக நானும் இவ்வாறான குழப்பத்திற்கு ஆளானேன். அதன் காரணமாகவே இந்தத் திரைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். முன்பைவிடவும் அதிகமாக பிடித்துப் போயிற்று. எப்படியும் இதை இந்தத் தளத்தில் எழுதி விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனோ அது இயலவில்லை. முன்னர் எனக்குள் படிந்திருந்த குழப்ப உணர்வு ஆழ்மனதில் உறைந்து 'இதை எழுத விடாமல் தடுத்துக் கொண்டிருந்ததோ' என்று  இப்போது யோசிக்கும் போது  தோன்றுகிறது.

இப்படியாக என்னை குழப்பிக் கொண்டிருந்த ஒரு படத்தை, மிகுந்த சிலாகிப்புடன் நான் மிக விரும்பி வாசிக்கும் ஓர் எழுத்தாளர் குறிப்பிட்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. என்னுடைய ரசனை எஸ்.ராவின் பதிவின் மூலமாக உறுதிப்பட்டதன் விளைவிது. இனி காணவிருக்கும் திரைப்படங்களை எவ்வித குழப்பங்களுமில்லாமல், மற்ற விமர்சனங்கள் ஏற்படுத்தும் கற்பிதங்களின் பாதிப்புகளுமில்லாமல், எழுதுவதற்கான ஓர் உறுதியையும் தெளிவையும் எஸ்.ராவின் பதிவு அளித்திருக்கிறது.

suresh kannan

18 comments:

Anonymous said...

Its a nice trick. praise all leading writers, u will become a star writer. mokkaikal mulusavathu ipdithan

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பதிவு.பல முறை படம் பார்த்த பின் இது நமக்கு பிடித்தது எல்லாருக்கும் பிடிக்குமா என ஒரு குழப்பம் அனைவருக்கும் வரும்.
நீங்க சொலறதை பார்த்தா அந்தப்படம் சந்தோஷ் சுப்ரமணியம் மாதிரி தெரியுது

பிச்சைப்பாத்திரம் said...

அன்பான செந்தில்குமார்,

என்னைத் திட்டிக் கூட இரண்டு வரி எழுதி விடுங்கள். சகித்துக் கொள்கிறேன். :)

சந்தோஷ் சுப்ரமணியன் போன்ற படங்களுடன் இதை கனவில் கூட ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஏன் இப்படி சொல்கிறேன் என்பதை நீங்களே இத்திரைப்படத்தை பார்ப்பதின் மூலம் உணர முடியும்.

அ.முத்து பிரகாஷ் said...

தலை முறை இடைவெளிகள் குறித்து பேசி தீர்வதில்லை ...
புரிதல் ஏற்படும் போது நாம் தந்தையாகிவிட வேண்டியிருக்கிறது ...
பார்க்கவேண்டுமென ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன உங்கள் வரிகள் ...

R. Gopi said...

Thanks for sharing. It induces me to see the movie.

You liked a movie, that's fine. Its your own assessment of the movie. There is nothing right or wrong about this. Someone else liking it or not liking it should not influence you. What if another writer who you admire the most says something bad about this movie tomorrow?

Regards

R Gopi

ஜோ/Joe said...

யூடியூபில் தேடிப்பார்த்தேன் .முழுப்படமுமே இருக்கிறது ..சில காட்சிகள் பார்த்தேன் ..முழுவதும் பார்க்கப் போகிறேன். நன்றி!

Jegadeesh Kumar said...

எஸ்.ராவின் பதிவை நானும் படித்தேன்.
நமக்கு வளர்ச்சி தராத anonymous பின்னூட்டங்களை நீங்கள் வெளியிட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்கள் சந்தோஷம் புரிகிறது சு.க.. வாழ்த்துகள்..

//'இதை அப்படியே வெளியில் சொன்னால் நம்முடைய ரசனையை சந்தேகிப்பார்களோ' என்பதனால் கூட அந்த ஏமாற்றத்தை அப்படியே விழுங்கி விட நேரிடும். மாறாக நாமும் அந்த சிலாகிப்பு கும்பலோடு இணைந்து கொண்டு "ரொம்ப பாதிச்ச படங்க. அதிலும் அந்த சீன்ல கேமரா டிராவல் ஆகுது பாருங்க. ச்சே.. சான்ஸே இல்ல" என்ற பாவனையை செய்ய நேரிடும்.//

எல்லாருக்கும் இருக்கக் கூடிய இயல்பே.. வெளிப்படியா சொல்லி இருக்கீங்க.. அப்படித்தான் நிறைய பேர் உலப்படம் பாக்க ஆரம்பிக்கிறோம்...:-)))

//இரா.முருகனின் ஏதோவொரு சிறுகதையில் உள்ள வரிகள் நினைவுக்கு வருகிறது. //

”முதல் ஆட்டம்”

பார்க்க வேண்டிய படம் எனத் தெரிகிறது.. முயலுகிறேன்..:-)))

KKPSK said...

மகிழ்ச்சி கொள்ளவேண்டிய தருணமே!

அனானியரின் கருத்து தவறு. வெளியிட்டமைக்கு நன்றி.

சந்தோஷ் சுப்ரமணியன் ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை. வெற்றி படமே.

முன்னணி நாயகர்ளின் படங்களை விட நன்றாகவே இருக்கிறது.

Amal said...

சில மாதங்களுக்கு முன் இப்படத்தை பார்த்தபோது, உலகப்படம் உலகப்படம் என்று எழுதும் எவருமே ஏன் இந்த படத்தைக் கண்டுகொள்ளவில்லை என்று தோன்றியது. ஒருவேளை யதார்த்தத்தையும் (Children of Heaven, Cinema Paradiso வகையறா) மீறிய யதார்த்தம் இந்த படத்தில் உள்ளதாலோ என்ற எண்ணமே மேலோங்கியது. நேற்று எஸ்.ரா பதிவைப் பார்த்தவுடன் ஒரு நிறைவு. இன்று உங்களுடையதையும் தான்!

ரா.கிரிதரன் said...

:) :) காசா பணமா? மனசுல மணி அடிக்கும்போதே இதெல்லாம் பதிவேட்டுல எழுதிடணும் தல! :)

ஆனாலும் ரசனை மட்டும் நூறாவது ஒப்பீனியன் கேட்டாலும் டவுட்டாவே இருக்குமோ?

சமீபத்தில் எஸ்.ரா பரிந்துரைத்த Winged Migration ஆவணப்படத்தை ரொம்பவே ரசித்துப் பார்த்தேன்.அதன் மேக்கிங்கும் அசத்தலாக இருந்தது.

ராம்ஜி_யாஹூ said...

மகிழ்ச்சி கொள்ள வேண்டிய தருணமே.
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
உயிர்ம்மை சுஜாதா சிறந்த தமிழ் பதிவர் விருது முடிவுகள் எஸ் ரா

சென்ஷி said...

:))

பெரும்பான்மையான பின்னூட்டங்களில் படத்தைப் பற்றிய கருத்தோ விமர்சனம் குறித்த கருத்தோ இல்லாமலிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... #தமிழ்ச்சூழல் அய்ஸ் வழியாக ஜ்யோவ்விலிருந்து சென்ஷி..


ராம்ஜி யாஹூவிற்கு அடுத்த வருடம் சிறந்த பின்னூட்டத்திற்கான சுஜாதாவிற்கான விருதை காசு கொடுத்து வாங்கித் தர யாரும் தயாராக இருந்தால் செலவு செய்ய ரசிகர் மன்றம் தயாராய் இருக்கிறது.

-சென்ஷி

சென்ஷி said...

முந்தைய பின்னூட்டத்தில் பெரும்பான்மையான தவறுதலாக இடம்பெற்றுவிட்டது..

பின்னோக்கி said...

நமக்குப் பிடித்த ஒன்று, பரவலாக பிறருக்குப் பிடிக்காமல், அத்துறை வல்லுனர் நம் கருத்தை ஒத்துப்போகும் போது தனி இன்பம் தான். புரிந்துகொள்ள முடிகிறது.

Anonymous said...

உங்கள் எழுத்தை நீங்கள் மதிக்கும் எழுத்தாளர்கள் பாராட்டியது கண்டு மகிழ்வது இயல்பு. ஆனால், உங்கள் ரசனையையே அவர்களை வைத்து உறுதி செய்து கொண்டால், என்ன அடிப்படையில் உங்கள் விமர்சனங்களை நம்பிப் படிப்பது? தன் ரசனையின் மீது தெளிவும் உறுதியும் இருப்பது விமர்சகனுக்கு முக்கியம்.

Mathi said...

நண்பர் சுரேஷ்,
இது போன்ற அருமையான உலகப் படங்களின் சி.டி/டி.வி.டி சென்னையில் எங்கே கிடைக்குமென்று சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.நன்றி

Venkat said...

Hi Suresh,

I have been reading your blog and have liked it. I have seen other movies referred by you and have been happy.

With that thing in mind, I started watching this La Grand Voyage - but I must it was disappointing. For the praises you wrote - in my opinion, it did not live up to MY expectations. Of course it has shown the generational gap and does not have commercial aspects in the movie - which is a welcome thing.

But beyond that - I do not think it needs rave reviews to the extent you have written. I am not saying that this is a mokkai movie - but it - IMO - does not merit such rave reviews. Just wanted to give my opinion - for whatever it is worth for.

Can you take your time and explain why you liked the movie - may be I will be able understand and appreciate the movie better. S Ra has written the reasons but I feel I am able to connect with your thoughts much better than him....

Thanks for your time and identifying good movies for other film agnostic people like me.

Thanks

Venkata Raghavan R