Wednesday, June 16, 2010

எல்.கே.ஜி. முதல் நாள்


எங்களின் இரண்டாவது மகளும் பொதுவாழ்க்கையில் தன்னை வேண்டாவெறுப்பாக பிணைத்துக் கொண்ட நாள் இன்று.  ஆம். தன்னுடைய எல்,கே.ஜி. யின் முதல் நாளை, முதல் பள்ளி அனுபவத்தை இன்று சந்திக்கிறாள்.

எங்களின் முதல் மகளைப் போல் அல்லாமல் தாத்தா - பாட்டி அனுபவங்களும் அதிகமில்லாமல் தன்னுடைய அம்மாவுடனே பெரும்பாலான நாட்களை கழித்ததில் ஒரு  TYPICAL  அம்மா 'கோண்டுவாக' ஆகியிருந்தாள். அவளுடைய அம்மா குளியலறைக்குச் செல்லும் அந்த சொற்ப நிமிடங்களைக் கூட அவள் தனியாக கழிக்க சம்மதித்தில்லை. எனவே எவ்வாறு இந்த 'திகில்' அனுபவத்தை அவள் எதிர்கொள்ளப் போகிறாள் என்று எங்களுக்கு பதட்டமாகவே இருந்தது.

எல்.கே.ஜி. என்பதால் நேரடியாகவே வகுப்பில் அமர வைத்து விட்டனர். ஆசுவாசப்படுத்திக் கொள்ள எல்லா குழந்தைகளுக்கும் லாலிபப்பை ஆசிரியையே தந்தார். 'ராமன் ஆண்டாலென்ன...' என்று சில குழந்தைகள் தத்துவார்த்தச் சிக்கல் இல்லாமல் விச்ராந்தியாக அமர்ந்திருக்க, சிலது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கிற நிலையில் அமர்ந்திருந்தன. மூன்றடிக்கும்  மேலாக துள்ளிக் குதித்து அழுது ஆகாத்தியம் செய்த ஒரு சிறுவனை அடக்குவதற்கு டிஸ்கொதே பார்களில் இருக்கும் பவுன்சர்கள் வந்தால்தான் முடியும் போலிருந்தது. எவரோ ஒரு குழந்தையின் அம்மா ஜன்னலில் எட்டி எட்டிப்  பார்த்து கலங்கிக் கொண்டிருந்தார்.

எங்களின் மகள், அவளுடைய அம்மா அருகில் நின்றிருந்த வரை, ஒரளவு சமாளித்துக் கொண்டிருந்தவள், அவர் வெளியே வந்தவுடன் எல்லாவற்றையும் எறிந்து விட்டு பின்னாலேயே ஓடிவர முயன்றாள். பின்பு அவளிடமிருந்த வெடித்த வன்முறையை ஒப்பிடும் போது மேற்குறிப்பிட்ட சிறுவனை இவள் வென்றுவிடக்கூடிய சாத்தியம் அதிகமிருந்தது.

அசட்டுத்தனமான, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிற, பணம் சம்பாதிப்பதையே தன்னுடைய பிரதான எதிர்கால திட்டமாக ஆக்கும் நிலையில் பயணிக்கிற  நம்முடைய  இந்தியக் கல்விமுறையை திடமாக அவள் எதிர்கொள்வதற்கான  எல்லாவிதமான துணிவையும் அவளுக்கு வழங்க இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

()

எங்களின் முதல மகளை பள்ளியில் சேர்த்த அனுபவத்தை மரத்தடி குழுமத்தில் ஜூன் 16, 2004 அன்று எழுதியிருந்தேன். அது இங்கே.

எங்கள் மூன்றரை வயது மகளை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்தனின் தொடர்ச்சியாக இன்று முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் அவளை உற்சாகப்படுத்தும் விதமாக நாங்கள் இருவருமே உடன் சென்றிருந்தோம். (இதைவிட முக்கியமான வேலை இன்று என்னவாக இருக்க முடியும்?). இதுவரை நேரம், கடிகாரம் இந்த விஷயங்களில் எல்லாம் பாதிக்கப்படாமல் இஷ்டப்பட்ட நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தவளின் வாழ்க்கையில் இன்று முதல் டென்ஷன ஆரம்பமானது. ('எட்டரை மணிக்கெல்லாம் ஸ்கூல்ல இருக்கணும். சீக்கிரம் முழுங்கித் தொலைடி!')

இயல்பிலேயே ¨தைரிய குணமுடைய எங்கள் மகள் எந்தவித கலக்கமுமின்றி மிக உற்சாகமாக எங்களுடன் வந்தாள். பள்ளியின் உள்ளே 'குழந்தைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்' என்று கலவையாக குழந்தைகளை காண முடிந்தது. சிலது 'உம்'மென்று அமர்ந்து கொண்டிருந்தன. சிலது முதல் நாளிலேயே உயரமான இடத்திலிருந்து குதித்து தம்முடைய ராஜாங்கத்தை நடத்தி கொண்டிருந்தன. சில கண்ணை கசக்கிக் கொண்டும் பராக்கு பார்த்தபடியும் இருந்தது ஒரு சுவாரசியமான கொலாஜ் சித்திரத்தை பார்த்த மாதிரி இருந்தது.

அது ஒரு கிருத்துவப் பள்ளி என்பதால் பைபிள் வாசிப்புடன் மீட்டிங் தொடங்கியது. புது மாணவர்களை உற்சாகப்படுத்தி வரவேற்கும் விதமாக சீனியர் மாணவர்கள் கோமாளி போல் வேடமிட்டும், இனிப்புகள் வழங்கியும், சிறிய அளவில் கலை நிகழ்ச்சிகள் வழங்கியும் சிறப்பித்தனர். வீட்டில் POGO சேனலையே பார்த்து காலம் கழிக்கும் எங்கள் மகள், இங்கே படிப்பில் மிகுந்த அக்கறையுள்ளவள் போல், "எப்பம்மா படிக்க போறது,இந்த மாதிரி டான்ஸ் எல்லாம் ஆடிட்டு இருந்தா டயமாவுதில்ல?" என்று கேட்டு எங்களை வியப்பிலாழ்த்தினாள். "ஏம்ப்பா நீங்க ஆபிஸ் போகலே?" என்று கேட்டு என்னை துரத்தினாள்.

அவரவர் வகுப்புகளை அறிவித்து அமர வைத்தபின், பெற்றோர்கள் விடைபெற ஆரம்பித்த உடன்தான் ஆரம்பித்தது கச்சேரி. ஏறக்குறைய பாதி எண்ணிக்கை குழந்தைகள் வீறிட்டு அழத் துவங்கின. கூட்டிலிருந்து அலறி அடித்துக் கொண்டு வரும் கோழியை போல் அழுதுக் கொண்டு ஓடிவந்த சிறுவனை வகுப்பு ஆசிரியை கதாநாயகியை வில்லன் தூக்கிக் கொண்டு போகும் கண்க்காக தூக்கி சென்றார். ஜனனல் வழியாக ஒரு சிறுமி அவளுடைய அம்மாவை "போகாதீங்கம்மா" என்று கதறி தீர்த்தது, எல்லா சென்டிமென்ட் படங்களையும் தூக்கி சாப்பிடும் போலிருந்தது.

எங்கள் மகள் அவ்வப்போது பாட்டி வீட்டில் எங்களை பிரிந்து பழகி இருந்த அனுபவம் இருந்தமையால் எங்களை கவனியாமல் பக்கத்திலிருந்த ஒரு மாணவன் வைத்திருந்த ஒரு பேருந்து பொம்மையை பிடுங்குவதிலேயே கவனமாக இருந்தாள். கொஞ்சம் அழுவாளோ என்று பயந்திருந்த எனக்கு, என் மனைவிதான் கண்கலங்கி அந்தக் குறையை தீர்த்தாள்.

பெற்றோராக எங்கள் கடமையில் இன்னொரு தொடர்ச்சியான விஷயத்தை செய்து முடித்த திருப்தியில் நாங்கள் அவளிடமிருந்து விடைபெற்றோம். அடுத்த வேளை சோற்றுக்கான உத்தரவாமில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியாமலிருக்கிற இந்த தேசத்தில் அந்தக் குறை நேராவண்ணம் ஒரளவு பொருளாதர வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற இறைவனுக்கு மனமார நன்றி சொன்னேன்.

suresh kannan

10 comments:

Arun Nadesh said...

//எங்களின் இரண்டாவது மகளும்//

நீங்க ஆணாதிக்கவாதி இல்லை.. ஒத்துக்கிறேன்..;-) பழைய நினைவுகளை அசைபோட வைத்தது உங்கள் பதிவு.

முதல் நாள் சமத்துப் பிள்ளையாக இருந்தேன். அடுத்து ஒரு வாரம் அக்காவுடன் டீல் போட்டு மூன்றாம் வகுப்பில் அமர்ந்து கொண்டேன். ஆசிரியர்கள் கண்டுபிடிக்க ஒரு வாரம் ஆனது. நான் சமத்தாக ஒன்றாம் வகுப்பு பாடம் படிப்பதாக வீட்டில் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
:-)

Paleo God said...

முதல் நாள் என் குழந்தைகள் பள்ளிக்குச்சென்ற போதும் இந்த வேதனையும் பரிதவிப்பும் என்னிடமும் இருந்தது. கொஞ்ச நேரம் அழுவான் அப்புறம் சரிய்யாப்போயிடும் நீங்க போங்க என்று சொல்லும் டீச்சரின் வார்த்தைகளைக் கேட்டு என்னால் சிரித்துவிட்டுச் செல்ல முடியவில்லை. ஏனெனில் நாளிதழ் ஒன்றின் செய்தியில் இப்படி பள்ளியின் முதல் நாள் கதறி அழுத குழந்தை ஏக்கத்தில் இறந்த செய்தி ஒன்று என் மனதில் ஆழப் பதிந்து விட்டிருந்தது. :(((

நல்லவேளையாக அவர்கள் திணிப்பினை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டிருந்தனர். என்ன செய்ய இனி அப்படித்தானே வாழ்வு நகர்த்த வேண்டும்!!

--

முதல் குழந்தைக்கு இறைவனை வேண்டியதும் இரண்டாம் குழந்தைக்கு இயற்கையை வேண்டி இருப்பதையும் நான் அறிவியல் பூர்வமாகவே புரிந்துகொள்கிறேன். :)))

குழந்தைக்கு என் வாழ்த்துகள்.

Jey said...

நல்லா சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க. எனக்கும் அதே அனுபவம்தான், எனது மகளுக்கு(LKG) நாளை பள்ளி தொடக்கம. அந்த அனுபவத்தை நான் எனது முதல் பதிவாக எழுதுகிறேன்.

Sriram Srinivasan said...

நானும் இந்த அனுபவத்தை பெற்றிருக்கேன் :)
என் மகள் மிக தைரியசாலி அழுகை இல்லை ஆனால் என் மகன் கதையோ வேறு :)

தங்களின் மகளின் கல்வி மிக நன்றாக
அமைய என் வாழ்த்துக்கள்

- ஸ்ரீராம்

Chithran Raghunath said...

ப்ரீ-கேஜியில் விடும்போது எங்களைத் திரும்பிப் பார்த்து ஒரு விழியோரம் துளி கண்ணீர், உதடு பிதுக்கி அழுகையை அடக்கிய கோலம், ஸ்கூல் முடிந்ததும் எங்களைப் பார்த்து பறந்தடித்து ஓடிவந்த குதூகலம் ஆக எல்லாம் தாண்டி என் பையன் அஞ்சாப்பு வந்துவிட்டான். இப்போது ஸ்கூல் வாசலில் விட்டுவிட்டு வந்துவிடுகிறேன். திரும்பிப் பார்க்காமல் போய்விடுவான்.

எல்லோருடைய ஃப்ளாஷ்பேக்குகளையும் கிளறும் பதிவு.

கானகம் said...

//அசட்டுத்தனமான, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிற, பணம் சம்பாதிப்பதையே தன்னுடைய பிரதான எதிர்கால திட்டமாக ஆக்கும் நிலையில் பயணிக்கிற நம்முடைய இந்தியக் கல்விமுறையை திடமாக அவள் எதிர்கொள்வதற்கான எல்லாவிதமான துணிவையும் அவளுக்கு வழங்க இயற்கையை பிரார்த்திக்கிறேன்.//

//அடுத்த வேளை சோற்றுக்கான உத்தரவாமில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியாமலிருக்கிற இந்த தேசத்தில் அந்தக் குறை நேராவண்ணம் ஒரளவு பொருளாதர வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற இறைவனுக்கு மனமார நன்றி சொன்னேன்.//

ஒரு ஆறு வருடத்தில் எவ்வளவு முற்போக்காளர் ஆகியிருக்கிறீர்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியம் எழாமலில்லை. உங்கள் முதல் குழந்தைக்கு இறைவனின் ஆசியிம், இரண்டாம் குழந்தைக்கு இயற்கையின் ஆசியும் கிடைக்கட்டும்.

பதிவு நன்றாய் இருந்தது.

ஜெயக்குமார்

பாலகுமார் said...

நலல கட்டுரை.. எங்கள் வீட்லயும் அதே கதை தான்.. என் பொண்ண விட அம்மா அழுகை தான் ஜாஸ்தி.

Ashok D said...

நல்ல கற்பனை... சுமாரான பதிவு :)
சும்மா ஒரு தமாஷுக்கு

என் பையன் என்ன சொல்லியிருப்பான்னு நினைக்கறீங்க... ’போடா அப்பா நான் பாத்துக்குறேன்னு’ தான் சொன்னான்..(prekg 2 1/2 வயசு)...ஆனா அவங்க க்ளாசுல பொடிசுங்க.. பன்னற ஓலங்கல பாத்து கொஞ்சம் கலங்கிட்டான்...

//அசட்டுத்தனமான, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிற, பணம் சம்பாதிப்பதையே தன்னுடைய பிரதான எதிர்கால திட்டமாக ஆக்கும் நிலையில் பயணிக்கிற நம்முடைய இந்தியக் கல்விமுறையை திடமாக அவள் எதிர்கொள்வதற்கான எல்லாவிதமான துணிவையும் அவளுக்கு வழங்க இயற்கையை பிரார்த்திக்கிறேன்.//

’அவளுக்கு’ என்பதை மாற்றி ’எல்லா குழந்தைகளுக்கும்’ என இடுகிறேன்

இப்ப 1st std போயிட்டான் என் மகன்.. எப்படி உள்ள நுழைறான் தெரியுங்களா... ’ஹாய் மச்சான்ஸ்’.. அட நம்புங்க .. உண்மைதான் சொல்லறான்... எனக்கு தெரிஞ்சு ஒன்பதாங்க்ளாஸ் வரைக்கும் அம்மா ஊட்டி சாப்பிட்டவன் தான்... ஆனா இன்றைய குழந்தைங்க kgஸ்லயே ரொம்ப தெளிவா இருக்காங்க...

யாசவி said...

Really soothing

Waiting for my turn

So nice

ஹரன்பிரசன்னா said...

இறைவனிலிருந்து இயற்கை வரை உங்க பயணம் அட்டகாசம் தோழர். பகுத்தறிவாளராக இருந்த நீங்கள் காட்டுமிராண்டியாக ஆனபோதும்கூட, நன்றாகவே எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். :P

உங்கள் இரண்டு குழந்தைகளைகளுக்கும் இறைவன் எல்லா நலங்களும் அருளட்டும்.