தமிழத் திரைப்படங்களைப் பொறுத்தவரை சர்வதேச தரத்தில் திரைப்படம் எடுக்கக்கூடியவர்களாக நான் கருதுவது (அவர்களின் வணிகத் திரைப்படங்களை தவிர்த்து) மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா ஆகியோர்களை மாத்திரமே. ஆனால் அவர்கள் ரிடையர் ஆகிற நிலையில் இருப்பதால் அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.
என்று அமீரைப் பற்றி இந்தப் பதிவில் மிக நம்பிக்கையாக எழுதியிருந்தேன். ஏனெனில் என்னைப் பொருத்தவரை 'பருத்தி வீரன்' மிகுந்த நுண்ணுர்வான காட்சிகளுடன் உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட படைப்பாக கருதுகிறேன். உயிர்மை நூல் வெளியீட்டில் அமீர், 'நான் எந்த உலக சினிமாவையும் பார்ப்பதில்லை, நூலும் வாசிப்பதில்லை. அதற்கான அறிவாற்றலும் என்னிடமில்லை' என்று பேசும் போது நல்ல சினிமாக்களை உருவாக்குவதற்கு இதுவே இவரின் முக்கியத் தகுதியாக இருக்கப் போகிறது என்று என்னுள் எண்ணிக் கொண்டேன். இதன் அடிப்படையில் அமீரின் 'யோகி' என்னுள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இயக்குநர் வேறொருவராக இருந்தாலும் அமீரின் தயாரிப்பு மற்றும் நடிப்பு என்கிற காரணத்தினால் அமீர் தனக்குரிய தரத்தை தக்கவைத்திருப்பார் என்று நம்பினேன். தொலைக்காட்சி நேர்காணல்களில் மற்ற இயக்குநர்கள் வழக்கமாக தரும் "இது ஒரு வித்தியாசமான கதை" என்றெல்லாம் பில்டப் தராமல் 'ரொம்ப உழைச்சிருக்கோம். பாருங்க' என்று இயல்பாக கூறினதும் பிடித்திருந்தது.
யோகி சுடுகிறார் (?!)
ஆனால்.. பத்திரிகை மற்றும் இணைய விமர்சனங்கள் மூலம் 'யோகி', TSOTSI என்கிற தெற்கு ஆப்ரிக்க திரைப்படத்தின் அப்பட்டமான நகல் என்பதை அறிய நேரும் போது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இதனாலேயே அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவல் முற்றிலும் வடிந்து எரிச்சலும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது. (TSOTSI படத்தைப் பற்றி முன்னர் நான் எழுதின பதிவு) ஹாலிவுட் படங்களையும் தமிழுக்குத் தோதாக மாற்ற முடிகிற இன்னபிற மொழிப்படங்களையும் அப்படியே உருவிவிடுவது தமிழ்ச்சினிமாவிற்கு புதிதல்ல. கமல் இதில் விற்பன்னர். அதற்கு ஒருவரி க்ரெடிட் தருவதோ அல்லது காப்பிரைட் பிரச்சினை காரணமாக நேரடியாக அல்லாமல் மறைமுகமாகவேனும் ஒப்புக் கொள்வதோ கூட இவர்கள் ஜாதகத்தில் கிடையாது. உலக சினிமா பற்றின பிரக்ஞை குறைவாயிருந்த காலகட்டத்திலாவது இவர்கள் செய்த திருட்டுத்தனங்களை சிறிய வட்டத்தால் மாத்திரமே உணர முடிந்தது. இந்த சிறுகூட்டத்தால் என்ன செய்துவிட முடியும் என்று அதையே இவர்களும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இணையமும் நகல் குறுந்தகடுகளும் பிரத்யேக தொலைக்காட்சிகளும் உலக சினிமாக்களை வாரியிறைக்கிற, ஒரு பொதுவான சினிமா பார்வையாளன் கூட அகிரா குரோசாவையும் பெர்க்மனையும் அறிந்து வைத்திருக்கிற இந்தக் காலக்கட்டத்தில் இவர்கள் வெளித்திரைப்படங்களை கொஞ்சமும் கூச்சமில்லாமல் உருவுவது பாமரர்களின் மீது இவர்கள் வைத்துள்ள பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
'கதை பஞ்சம்' என்று இவர்கள் பாவனையாக சலித்துக் கொள்வதைக் கண்டால் சிரிப்பாக இருக்கிறது. அப்படிப்பபட்ட பஞ்சத்தையும் மீறி இவர்கள் என்ன காவியத்தைப் படைக்கிறார்கள் என்று பார்த்தால் அதை விட அதிகம் சிரிப்பு. தமிழ்நாட்டில் இல்லாத பிரச்சினையா? இவற்றை கலைப்படங்களாக எடுத்து தலையில் துண்டு போட்டு போகச் சொல்வது என் நோக்கமல்ல. இவற்றைக்கூட வணீகரீதியான வெற்றி பெறக்கூடிய தகுதியுடன் உருவாக்க முடியும். வழக்கமான கிளிஷேக்களை மக்கள் வெறுக்கிறார்கள் என்பதை இன்றைய திரையரங்குகளில் மக்களின் வெளிப்பாட்டை வைத்து உணர முடிகிறது. (என்ன ஆனாலும் சரி, வெகுஜன சினிமாச் சகதியில்தான் புரள்வேன் என்கிற ஞானவான்களை ஒருபுறம் ஒதுக்கிவிடுவோம்)
சொந்தமான ஒரு கதைப்பின்னணியை உருவாக்குவது சிரமமென்றால் நல்லதொரு தமிழ் இலக்கியப் படைப்பாளியின் படைப்பை அனுமதியுடன் பெற்று அதை திரைவிரிவாக்கம் செய்யலாம். கதை விவாதம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அபத்தச் செலவுகளின் ஒரு பகுதியை மாத்திரம் கூட அவர்களுக்கு தந்தால் போதுமானதாயிருக்கும். அதை விட்டு ஏன் இவர்கள் குறுந்தகடுகளையே நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த வரிசையில் நான் பெரிதும் நம்பிக் கொண்டிருந்த அமீரும் சேர்ந்ததுதான் எனக்கு அதிர்ச்சி. மற்ற வகையான இயக்குநர்கள் என்றால் பழகிப் போன ஒன்றாக எடுத்துக் கொண்டிருப்பேன். அவ்வளவு சீக்கிரம் தமிழ் இயக்குநர் யார் மீதும் நம்பிக்கை வைக்காதே என்பதுதான் 'யோகி' எனக்குத் தந்த பாடம். (இதை மேற்சொன்ன பதிவின் பின்னூட்டத்திலேயே சிலர் சொல்லியிருந்தனர். அவர்களின் தீர்க்கதரிசனத்தை வணங்கத் தோன்றுகிறது).
image courtesy: original uploader
suresh kannan