Wednesday, May 27, 2009

The Visitor (2008)

'இந்தத் திரைப்படத்தை கட்டாயம் பாருங்கள்' என்கிற பரிந்துரையுடன் இந்தப் பதிவை துவக்க விரும்புகிறேன்.

'இயற்கை ஒரு அழகான ஓவியத்தைப் போல பூமியை படைத்தது. சுயநலத்தின் உச்சமான மனித இனம் தனது அநாகரிக கூரிய நகங்களால் அதில் அசிங்கமான எல்லைக்கோடுகளை வரைந்தது".

மேற்கத்திய அறிஞர் யாரும் சொன்னதல்ல. நான்தான். மனிதனின் கற்பிதங்களில் மிகக் கொடூரமானவைகளில் ஒன்று நாட்டின் எல்லைக்கோடுகள். எத்தனையோ நபர்களின் கண்ணீரினாலும் ரத்தத்தினாலும் போடப்பட்ட கோடுகள் அவை. இன்று பாகிஸ்தான் என அழைக்கப்படும் நிலப்பரப்பு சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவாக இருந்தது. அதற்கும் முன்னால் இந்தியா என்கிற தேசமே கிடையாது. பல சமஸ்தானங்களாக பேரரசுகளாக சிதறிக் கிடந்தன. இன்று எல்லைக்கோட்டைக் கடந்து இன்னொரு நிலப்பரப்பிற்குச் செல்வது அத்தனை எளிதல்ல. அதிகாரத்தின் பல்வேறு சம்பிரதாயங்களைக் கடக்க வேண்டும். இந்த விஷயத்தில் பறவைகள் மனிதனைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றன. விளையாட்டுப் போட்டியில் கூட பாகிஸ்தான் என்றவுடன் எப்படியாவது நாம் வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் கூச்சலிடுகிறோம். அந்த அளவிற்கு இந்தக் கற்பிதங்கள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன.

எத்தனையோ காரணங்களுக்காக புலம் பெயர்ந்து வாழும் மனிதர்கள் தங்களின் உறவுகளை இணையத்திலும் கடிதங்களின் மூலமாகவும்தான் துயரத்தோடு ஸ்பரிசித்து ஆறுதலையடைய முடிகிறது. இவ்வாறான அப்பாவிகள் தாங்கள் வாழும் நாடுகளில் அதிகாரத்தின் தொடர்ந்த கண்காணிப்புக்கு உள்ளாகி தனது அன்றாட வாழ்வை மன உளைச்சலுடன் கழிக்க நேரிடுகிறது. அந்த மாதிரியான மனிதர்களின் துயரத்தைப் பற்றி பேசுகிறது இந்த அமெரிக்கத் திரைப்படம். The Vistior.

Photobucket

பொருளாதார பேராசிரியராகவும் சிடுமுஞ்சியாகவும் உள்ள வால்டர் வேல் (வால்டர் வெற்றிவேல் என்று வாசிக்காதீர்கள்) பியானோ கற்றுக் கொள்ளும் முயற்சியோடு படம் துவங்குகிறது. அந்த வாத்தியத்தை அவரால் கற்றுக் கொள்ள முடியாததால் சலிப்புடன் அதை கைவிடுகிறார். ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்வதற்காக நீயூயார்க் செல்லும் அவர் சில மாதங்களாக பயன்படுத்தப்படாமலிருக்கும் தன்னுடைய அபார்ட்மெண்டில் நுழையும் போது அங்கொரு இளம் தம்பதியினர் தங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறார். யாரோ அவர்களை ஏமாற்றி வாடகைக்கு குடியேற்றியிருக்கின்றனர். நியூயார்க்கில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அவர்கள் எந்தவித பிரச்சினையையும் எதிர்கொள்ள விரும்பாமல் உடனேயே வெளியேற சம்மதிக்கின்றனர். அந்த இரவு நேரத்தில் அவர்கள் தவிப்பதை கண்ட வால்டர் சில நாட்களுக்கு அவர்கள் அங்கேயே தங்க வேண்டிக் கொள்கிறார். மெல்ல அவர்களுக்குள்ளான நட்பு மலர்கிறது.

உணவு விடுதி ஒன்றில் டிரம்மராக பணிபுரியும் அந்த இளம் கணவன் (தாரெக்) வால்டருக்கு டிரம்மை இசைக்க கற்றுத் தருகிறான். முதலில் தயங்கும் அவர் பின்பு அதில் மிகுந்த ஈடுபாடு காட்டத் துவங்குகிறார். இருவரின் சிநேகமும் இறுக்கமாகத் துவங்கும் போது தாரெக் போலீசாரால் கைது செய்யப்படுகிறான். சட்டவிரோதமாக அந்த நகரில் தங்கியிருக்கும் காணத்திற்காக அவனை சிறையில் அடைக்கின்றனர். மகனை தேடி வரும் தாரெக்கின் தாய் அவனில்லாமல் அந்த நகரை விட்டு நீங்க மறுக்கிறார். வால்டர் அவளை தன்னுடைய தங்கச் சொல்லி வேண்டுகிறார். தாரெக்கை வால்டர் வெளியே கொண்டுவர எடுக்கும் பிரயத்தனங்களும் அதற்கு அதிகாரம் அசைந்து கொடுக்காத கொடுமையுமான காட்சிகளுமாக மீதப்படம் விரிகிறது. 'எங்கே என்று அறியப்படாமலேயே தாரெக் அந்த நகரை விட்டு வெளியேற்றப்பட்டான்' என்ற தகவலுடனான சோகத்துடன் படம் நிறைவடைகிறது.

()

தெளிந்த நீரோடை போல எந்த அதிரடியும் இல்லாத தெளிவான திரைக்கதையுடன் நகரும் இத்திரைப்படத்தில் வால்டராக Richard Jenkins தனது அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். இவர் அமெரிக்க நாடகங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலுமே அதிகம் நடித்திருக்கிறார். அவர் திரைப்படத்தில் பிரதானமாக நடிக்க ஆரம்பித்தது இந்தப்படமே. எந்தவொரு காட்சியிலும் இவரின் முக உணர்வுகள் மிகையாக வெளிப்படுவதேயில்லை. ஏதோ படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் போலவே கூலாக இருக்கிறார். ஆனால் காட்சிக்கு மிகப் பொருத்தமாக அவர் உடல்மொழி இயங்குகிறது. அகாதமி விருதின் சிறந்த நடிகருக்கான பரிந்துரை பட்டியலில் இவர் பெயர் இடம் பெற்றிருந்தது.

தாரெக்காக நடித்திருக்கும் hazz sleiman-ம் அவர் மனைவி ஜனாப்பாக நடித்திருக்கும் Danai Jekesai Gurira -ம் மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றனர். சிறந்த நடிகரான Thomas McCarthy இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பல திரைப்பட விழாக்களில் இந்தப்படம் பங்கேற்றதோடு விருதுகளையும் வென்றிருக்கிறது.

படத்தின் பல காட்சிகளில் வரும் sub-text என்னை பிரமிக்கச் செய்தது. உதாரணமாக வால்டேர் பியானோ கற்றுக் கொள்ள முயல்கிற காட்சியோடுதான் படம் துவங்குகிறது. இறந்து போன அவர் மனைவி பியானோ டீச்சராக இருந்தது பிற்பாடான ஒரு உரையாடலின் மூலம் பார்வையாளனுக்கு உணர்த்தப்படுகிறது. இயந்திரத்தனமான தன் பேராசிரியர் வாழ்க்கையில் வெறுமையையே உணர்வதாகவும் சாதித்தது என்று ஏதுமில்லை என்று தாரெக்கின் தாயிடம் பிற்பாடு கூறுகிறார். ஆக..அவர் தன் மனைவி உயிருடன் இருக்கையில் அவருடன் நேரத்தை செலவழிக்கவோ பியானோ கற்றுக் கொள்ளவோ முயலவில்லை. அவருடைய மறைவுக்குப் பின்புதான் தனிமையை உணர்ந்து மனைவியின் நினைவை மீட்டெடுக்க பியானோ கற்றுக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் அந்த வாத்தியத்தை விட தாரெக் மிகுந்த நட்புடன் கற்றுத்தரும் டிரம் வாத்தியத்தை வால்டரால் விரைவாக கற்றுக் கொள்ள முடிகிறது.

இந்த சமாச்சாரங்கள் எதுவும் உரத்த குரலில் பார்வையாளனுக்கு சொல்லப்படுவதில்லை. நிகழ்வுகளின் ஊடாக ஒரு நுட்பமான பார்வையாளன் தானாகவே உணரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

அதே போல் காட்சிகளின் தொனிக்கேற்ப நடிகர்கள் எதிர்வினை புரிவது மிக அற்புதமாக அமைந்திருக்கிறது. தாரெக்கின் மனைவி ஜனாப் தன்னுடைய மாமியாரை முதன் முறையாக சந்திக்கும் காட்சியை சொல்லலாம். தூரத்திலிருந்து அவளை கவனிக்கும் தாரெக்கின் தாய், "இவ்வளவு கருப்பாக இருக்கிறாளே"? என்று வால்டேரை கேட்கிறார். பின்பு அவர்கள் நெருங்கினதும் வால்டேர் இருவரையும் அறிமுகப்படுத்துகிறார். தங்களுக்கு தங்க இடம் தந்த வால்டேர் குறித்து அவளுக்கு மரியாதை இருந்தாலும் அந்நியன் என்ற காரணத்தினாலேயே தங்கள் உலகத்திற்குள் அவர் நெருங்கி வருவதை அவள் விரும்புவதில்லை. எனவே படம் முழுவதும் ஜனாப்பின் முகம் இறுக்கமாகவே இருக்கும். ஆனால் அவள் தன்னுடைய மாமியாரைச் சந்தித்தும் அவளின் முகபாவங்கள் மிகுந்த மாற்றத்தோடு ஆச்சரியத்துடனும் மரியாதையுடனும் அழுகிற காட்சி மிகுந்த நெகிழ்வை எனக்குள் ஏற்படுத்தியது.

அதே போல் வால்டேருக்கும் தாரெக்கிற்கும் விரியும் நட்பு மிகுந்த அழகியல் உணர்ச்சியுடன் சொல்லப்பட்டிருக்கிறது. சிறையில் இருக்கும் தாரெக் தன்னைச் சந்திக்க வரும் வால்டேரிடம் 'இசைப் பயிற்சி எப்படியிருக்கிறது" என்று கேட்டுவிட்டு சிறையிலேயே வாசித்துக் காட்டும்படி வால்டேரை அன்புடன் வற்புறுத்துகிறான்.

()

நான் ஆரம்பத்தில் சொன்னது போல எல்லைக்கோடுகள் போன்ற கற்பிதங்கள் எவ்வாறு மனிதத்தை நசுக்குகின்றன என்பதை மிகவும் அற்புதமாக சித்தரித்திருக்கின்றது இத்திரைப்படம். கட்டாயம் பாருங்கள்.

suresh kannan

13 comments:

ஷண்முகப்ரியன் said...

நீங்கள் சொன்ன கதை படம் பார்க்கத் தூண்டுகிறது.பார்த்து விட்டு எழுதுகிறேன்,சுரேஷ் கண்ணன்.

சரவணகுமரன் said...

Visitor? Vistior?

பிச்சைப்பாத்திரம் said...

//Vistior?//

visitor தான். திருத்தி விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி சரவணகுமரன்.

ஆளவந்தான் said...

என்ன ஒரு ஒற்றுமை. இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்து ரொம்ப நாளாச்சு. இந்த வார இறுதியில் தான் படத்த பார்த்தேன்.

எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சுட்டீங்க..அருமை.

இன்னொரு விசயம். வால்டர் நியூயார்க்லேயே இருந்தாலும் சுதந்திர தேவி சிலை போன்ற முக்கிய சுற்றுலா இடங்களை அவர் பார்த்ததே இல்லை என்பதிலிருந்தும், அவர் எவ்வ்ளவு தூரம் தனது கடந்த காலத்தை பயன்படுத்தாம போயிருக்கிறார் என்பதையும்..


பின் அவருடைய அபார்ட்மெண்டில் வசிப்பவர் விரும்பி பேச வரும்ப்போது பேச்சை துண்டித்து போவதில் தெரியும் அவரது நட்பின் வட்டமும் ஆழமும்.


நல்ல படம், அருமையான விமர்சனம். பகிர்ந்தமைக்கு நன்றி.

Jackiesekar said...

'இயற்கை ஒரு அழகான ஓவியத்தைப் போல பூமியை படைத்தது. சுயநலத்தின் உச்சமான மனித இனம் தனது அநாகரிக கூரிய நகங்களால் அதில் அசிங்கமான எல்லைக்கோடுகளை வரைந்தது".//
மிக அற்புதமான வரிகள் பதிவை ரசித்தேன் நன்றி

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி. இன்னும் படம் பார்க்கவில்லை.

சென்ஷி said...

//'இயற்கை ஒரு அழகான ஓவியத்தைப் போல பூமியை படைத்தது. சுயநலத்தின் உச்சமான மனித இனம் தனது அநாகரிக கூரிய நகங்களால் அதில் அசிங்கமான எல்லைக்கோடுகளை வரைந்தது".//

;-))

படம் பற்றிய பகிர்விற்கு நன்றி...

King Viswa said...

சுரேஷ் கண்ணன்,

//'இயற்கை ஒரு அழகான ஓவியத்தைப் போல பூமியை படைத்தது. சுயநலத்தின் உச்சமான மனித இனம் தனது அநாகரிக கூரிய நகங்களால் அதில் அசிங்கமான எல்லைக்கோடுகளை வரைந்தது"// அட்டகாசமான ஆரம்பம். நான் உங்கள் வலைப் பதிவுக்கு வருவது இதுவே முதல் தடவை. மனதை கொள்ளை அடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

//மேற்கத்திய அறிஞர் யாரும் சொன்னதல்ல. நான்தான்// ரசித்தேன். நம்ம மக்களிடையே இருக்கும் ஒரு கெட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. நம்ம ஆள் சொன்ன கண்டுக் கொள்ளவே மாட்டர்கள். அடுத்தவன் சொன்னால் தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.

// யாரோ அவர்களை ஏமாற்றி வாடகைக்கு குடியேற்றியிருக்கின்றனர்.// இதையெல்லாம் நம்ம கவுண்டமணி எப்பவோ செய்து விட்டார்.

இந்த படத்தை நான் இதுவரையில் பார்க்க வில்லை. இது ஒரு இண்டிபெண்டன்ட் படம் என்பதால் டீ.வி.டி இன்னமும் கிடைக்க வில்லை. ஆனால் உங்களின் விமர்சனம் படித்தவுடன் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. நல்ல முயற்சி.

இந்த படத்தின் இயக்குனர் பற்றி சொல்ல வேண்டும். இவர் இயக்கிய தொலைக்காட்சி சீரியல்கள் சிலவற்றை நான் பார்த்து இருக்கிறேன். அவற்றில் மிகச்ச் சிறந்தது பாஸ்டன் பப்ளிக் ஆகும். அந்த தொடர் இந்தியாவில் ஸ்டார் வேர்ல்ட் தொலைக் காட்சியில் வந்தது. 2 சீசன் தொடர்ந்து பார்த்தேன்.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அந்த தொடரை நிறுத்தி விட்டார்கள். அப்போது மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். உங்கள் பதிவை பார்த்தவுடன் அடைந்த மகிழ்வுக்கு எல்லையே இல்லை. எப்பாடு பட்டாவது இந்த படத்தை விரைவில் பார்த்து விடுவேன்.

தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துங்கள்.

கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்

மயிலாடுதுறை சிவா said...

என்ன ஆச்சர்யம் போன வாரந்தான் இந்த படத்தை பார்த்தேன். நீங்கள் எழுதி விட்டீர்கள்.

இந்த படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரம் க்ரெக்கின் அம்மா மெளனா (wonderful Israeli Arab actress Hiam Abbass) சூப்பராக நடித்து இருப்பார்கள்.

படத்தின் இறுதி காட்சியில் நியூயார்க்கின் மெட்ரோ நிலையத்தில் அவர் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது அப்படியே படத்தை முடிப்பது சூப்பர்!

நல்ல விமர்சனம் வழக்கம் போல்...

மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

esnips.com
scribd.com

In tese websites u can download famous english fictions...forward this to others too..

KARTHIK said...

நல்ல விமர்சனங்க.

இந்த விமர்சனத்த படிக்கும் போது ஹெட்ஜ் ஆப் ஹெவன் படமும் நினைவுக்கு வந்து போகுதுங்க.

Venkat said...

Suresh,

Thanks. Your review was good. Saw the movie now and it is indeed very good.

Thanks for introducing a good movie.

Venkat

Kaarthik said...

Dear Suresh Kannan,

You are doing a wonderful job by writing very good reviews of some rare movies. I use to watch the movies that are suggested by in ur blog. I'm doing this for couple of months. I watched this movie yesterday and loved it. The ending is excellent. The characterizations and performances are really class apart. You could have written more about the actress who acted as Tarek's mother. She's graceful and delivered a Subtle performance.

I felt Amitabh Bachchan and Dimple Kapadia would fit the lead roles if it's remade. Can't think of anyone in Tamil :(

Thanks for ur review n suggestion :-)