Saturday, March 07, 2009

வழக்குரைஞர்கள்: போக்கிரிகள்... ஒழுக்கங் கெட்டவர்கள்

சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த மோதலை விசாரிக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி B.N.ஸ்ரீகிருஷ்ணா அவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணைக் கமிஷனின் அறிக்கையை முழுவதுமாக படிக்க முடிந்தது. வழக்குரைஞர்களை லும்பன்களாக இந்த அறிக்கை சித்தரிக்கிறது.

..."Lawyers behaving like hooligans and miscreants. Lawyers think they are immune from the law, the report adds. Soft-pedalling policy by the lawyers led to the situation"...


என்று வழக்குரைஞர்களை கடுமையாக சாடியுள்ளது அந்த அறிக்கை. hooligans and miscreants என்கிற வார்த்தைக்கு போக்கிரி, ஒழுக்கங்கெட்டவர்கள், கயவர்கள் என்று அர்த்தம் கூறுகிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி.

வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தியிருப்பதை ஆரம்பத்திலேயே உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடுத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நிர்வாகம் இது குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்காமல் மெளனம் காத்திருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் பிரபாகாரனின் பிறந்த நாளை கொண்டாடியும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்திய ஆரம்பக் காரணங்கள் முதல் சுப்ரமண்ய சுவாமி மீது நடந்த முட்டை தாக்குதல் வரை அறிக்கையில் ஆராயப்பட்டிருக்கிறது.

Photobucket

தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வரும் வழக்குரைஞர்கள் இந்த அறிக்கையை ஏற்க மறுத்திருப்பதுடன் இது குறித்து கொதிப்படைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் இந்த போராட்டத்தினால் நீதிமன்றப் பணிகள் முடக்கி வைக்கப்பட்டிருப்பதுடன் பொதுமக்களின் பல்வேறு வழக்குகள் தேங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நீதிபதிகளின் பற்றாக்குறை காரணமாக ஏற்கெனவே லட்சக்கணக்கான வழக்குகள் நீதிக்காக காத்திருக்கும் போது அதன் மீது இன்னும் சுமையைக் கூட்டுவது போல் நடக்கும் இந்தப் போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காது என்பதை வழக்குரைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இம்மாதிரியான போராட்டங்கள் வருங்காலத்தில் நடைபெறாதவாறு வழக்குரைஞர்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டும். இப்போதைய போராட்டத்தைக் கூட உச்சநீதிமன்றமே தீவிரமாக தலையிட்டு வழக்குரைஞர்கள் பணிக்கு திரும்ப நிர்ப்பந்திக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் பணிக்குத் திரும்பாதவர்கள் மீண்டும் தங்கள் வழக்குரைஞர் பணியை சில வருடங்களுக்கு மேற்கொள்ள இயலாதவாறு தடை ஏற்படுத்த வேண்டும்.

()

சென்னை உயர்நீதிமன்றத்தின் அருகே அலுவலகம் அமைந்திருப்பதனால் சட்டக் கல்லூரி மாணவர்களாலும் வழக்குரைஞர்களின் தீடீர் போராட்டங்களினாலும் அடிக்கடி பாதிக்கப்படும் பொதுமக்களில் நானும் ஒருவன். அம்பேத்கர் சட்டக் கல்லூரியும் குறளகமும் அமைந்திருக்கும் நாற்சந்தி மிகுந்த போக்குவரத்து நெரிசல் மிக்கது. இங்கு சாலையைக் கடக்க விரும்பும் பாதசாரிகளுக்கு மிகுந்த மனோதிடம் தேவை. வேகமானதொரு வீடியோ கேம் விளையாட்டை கையாளும் லாகவத்துடனும் கவனத்துடன்தான் இங்கு சாலையை கடக்க முடியும். சிறிது தாமதித்தாலும் எதிர்புறமிருந்து வரும் வாகனமோ இடதுபுறமிருந்து வரும் வாகனமோ நம்மீது மோதும் அபாயமுண்டு. இந்த மாதிரியான நெரிசலான சாலையில்தான் சட்டக்கல்லூரி மாணவர்களோ, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களோ சாலையில் அமர்ந்து தீடீர் போராட்டம் நடத்துவார்கள். சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்படும். நடைபாதை வியாபாரிகளும் பொதுமக்களும் நடக்கவிருக்கும் வன்முறை குறித்த அச்சத்துடன் ஓடுவார்கள். அவசர வேலையாக செல்லும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி குறைந்தது ஒருமணி நேரத்தையாவது இழக்க வேண்டியிருக்கும். சென்னையின் அனைத்து மாநகர பேருந்துகளின் சந்திப்பு என்பதாலும் தென்சென்னையையும் வடசென்னையையும் இணைக்கும் பாதை என்பதாலும் பல பேர் இதனால் பாதிக்கப்படுவர். ஆனால் சட்டம் படிப்பவர்களுக்கும் அதை நடைமுறைப்படுத்துவர்களுக்கும் இதுகுறித்து கிஞ்சித்தும் அக்கறை கிடையாது. தங்களது வலிமையை நிலைநாட்டின திருப்தி ஏற்படும் வரையில் கலைந்து செல்ல மாட்டார்கள்.

அறிக்கையில் கூறப்பட்டிருப்பது போலவே வழக்குரைஞர்கள் சட்டத்தின் விதிகள் தமக்கானது அல்ல எனவும் அது தம்மை கட்டுப்படுத்தாது என்பதாகவும்தான் அன்றாட வாழ்வில் நடந்து கொள்கின்றனர். யாராவது ஒரு வழக்குரைஞர் குற்றவழக்கில் கைது செய்யப்பட்டாலோ அல்லது விசாரணைக்காக அழைத்து செல்லப் பட்டாலோ மற்ற வழக்குரைஞர்கள் கூட்டமாக வந்து வன்முறையின் மூலமோ காவல்துறையினரை மிரட்டுவதின் மூலமோ அவரை விடுவித்து அழைத்துச் சென்று விடுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவில் வந்த ஒரு செய்தி: குடிபோதையில் இருந்த வழக்குரைஞர் ஒருவர், காற்றுக்காக மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரப் பெண்களின் நடுவே படுத்து சில்மிஷம் செய்துள்ளார். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. ஆனால் அவர் தனது கைபேசியில் சக வழக்குரைஞர்களுக்கு உடனே தகவல் அளித்து விட்டார். அவ்வளவுதான். அந்த இரவிலும் காவல்நிலையத்திற்கு விரைந்து வந்த வழக்குரைஞர் பட்டாளம் சில்மிஷம் செய்த நபரை மீட்டுச் சென்று விட்டது. ஆனால் சாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர்களுக்கு குரல் கொடுக்க எவரும் முன்வருவதில்லை.

வழக்குரைஞர்களின் அராஜகத்திற்கு இன்னொரு தனிப்பட்ட அனுபவத்தையும் கூற விரும்புகிறேன். எங்களின் அடுக்ககத்தில் ஏற்பட்ட சில்லறைத் தகராறு ஒன்றில் ஈடுபட்ட வழக்குரைஞர் ஒருவர், சக குடிவாசியை குடிபோதையில் ஆபாசமாக திட்டித் தீர்த்ததோடு "உன் டைவர்ஸ் கேஸ்ல உனக்கு முன்ஜாமீன் எடுத்துக் கொடுத்தவனே நான்தாண்டா" என்று.. இன்னும் பல தகவல்களை பொதுவில் கொட்டித் தீர்த்தார். தன்னை நம்பி வாடிக்கையாளர்கள் தரும் தகவல்களின் ரகசியங்களை காக்க வேண்டும் என்பது வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் போன்றவர்களின் தொழில் தர்மம். ஆனால் தனிப்பட்ட விரோதத்தில் இவர்கள் அந்த தர்மத்தை மீறுவது போன்ற நம்பிக்கைத் துரோகம் வேறெதுவும் இருக்க முடியாது.

()

கிருஷ்ணாவின் அறிக்கை வழக்கறிஞர்களை மாத்திரம் சாடாமல் அதீதமாக எதிர்வினையாற்றிய காவல் துறையினரையும் குறைகூறுகிறது. வழக்குரைஞர்கள் ஏற்படுத்திய முதல் தாக்குதல்களினால் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே SAG (Swift Action Group) வழக்குரைஞர்களின் மீது எதிர்தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் அது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அல்லாமல் பழிவாங்கும் நடவடிக்கையைப் போல் அமைந்தது கண்டிக்கத்தக்கது. காவல் துறையினர் பெண் வழக்குரைஞர்கள் மாத்திரமல்லாமல் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என எதிரில் வரும் அனைவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அவ்வாறான தாக்குதலில் காவலர்கள் முறைப்படி நடந்து கொள்ளவில்லை என்பதையும் கிருஷ்ணாவின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

....Despite instructions that during a lathi charge the lathi blow should be aimed at parts of the body other than thehead, the police freely rained lathi blows on the heads of the lawyers, causing head injuries to a number of lawyers.
மேலும் அங்கிருந்த வாகனங்களையும் நீதிமன்ற அலுவலகங்களின் உள்ளேயிருந்த பொருட்களையும் காவல்துறையினரின் குழு சேதப்படுத்தியுள்ளதை தொலைக்காட்சி ஒளிபரப்பிய சலனக் காட்சிகளில் காண முடிந்தது. 'வழக்குரைஞர்களின் வசவுச் சொற்களினாலும் கற்கள் கொண்டு தாக்கியதனாலும் ஏற்பட்ட கோபத்தை காவல்துறையினர் தாங்கிக் கொள்ள இயலாத பொறுமையின்மையால்தான் இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தவறில்லை' என்கிற மாதிரியான வாதம் சிலரால் வைக்கப்படுகிறது. இது முட்டாள்தனமான வாதம். இம்மாதிரியான கலவரங்களை அடக்குவதற்குத்தான் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது. அதைவிட்டு அவர்களும் தெருப்பொறுக்கிகள் போல் பதில் தாக்குதலில் ஈடுபட்டதை நியாயப்படுத்துவது முறையாகாது.

வழக்குரைஞர்களைப் போலவே காவல்துறையினரும் கட்டுக்கடங்காதவாறு நடந்து கொண்டிருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

....The policemen behaved in the same fashion as the unruly mob of lawyers.


நீதித்துறையும் காவல்துறையும் சமநிலையான சமூகத்தின் முக்கியமான இரு தூண்கள். இந்த தூண்கள் காலங்காலமாகவே ஒன்றையொன்று முட்டிக் கொண்டு நிற்கின்றன. இதனால் அஸ்திவாரமே ஆட்டங்காணும் அபாயமிருக்கிறது. இந்தச் சம்பவத்தின் மூலமாவது இதற்கொரு நிரந்தர முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

suresh kannan

3 comments:

ஆளவந்தான் said...

பூனைக்கு யார் மணி கட்டுவது?

enRenRum-anbudan.BALA said...

நல்ல இடுகை, சுரேஷ்.

ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை, சரியாக ஆய்ந்து தகவல்களையும், செய்ய வேண்டியவை பற்றியும் சொல்கிறது. பார்க்கலாம், என்ன ஆகிறதென்று.

சாணக்கியன் said...

/* வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தியிருப்பதை ஆரம்பத்திலேயே உயர்நீதிமன்ற நீதிபதிகள் தடுத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நிர்வாகம் இது குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்காமல் மெளனம் காத்திருப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது */

அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த நீதிபதிகளின் சாதி ஆராயப் பட்டிருக்கும். நீதிபதிமீது கூட முட்டை வீசியிருக்கக் கூடும்.

ஐம்பது வருடங்களாக வெறுப்பை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்ததின் அதை மக்கள் ஏற்றுக் கொண்டதின் விளைவுதான் இது. இதற்கு தீர்வு இருப்பதாகத் தெரியவில்லை. நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்...

இதுபோன்ற ரகளையை வழக்கமான ரவுடிகள் செய்திருந்தால் போலிசாருக்கு அவ்வளவு கோபம் வந்திருக்காது... இந்த கருப்புக் கோட்டு ரௌடிகள் செய்ததினால்தான் அவர்கள் பொறுமையை இழந்துவிட்டனர்... இவர்களை நம்பி கோர்ட்டுக்கு போவதற்கு யாருக்கு தைரியம் வரும்? கட்டப் பஞ்சாயத்தே மேலோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை