சில வருடங்களுக்கு முன் மதுரையில் வாக்கிங் சென்ற ஒரு அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் அதன் பின்னணியில் ஒரு மூத்த அரசியல்வாதியின் மகன் இருந்ததாக பெரும்பான்மையோரால் நம்பப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதும் பின்னர் நீதிமன்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதும் நமக்கு தெரியும். அவர்களின் பெயர்களை நம்மால் கூற முடியும். ஆனால் அந்தக் கொலையை நிகழ்த்திய மனிதர்களைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவ்வாறான நிழல் மனிதர்களை ரத்தமும் சதையுமாக நம் முன் உலாவ விடுகிறது 'சுப்பிரமணியபுரம்'.
தமிழ்ச்சினிமாவின் வரலாற்றில் அது வரை புழங்கிக் கொண்டிருந்த புராண, சமூகப் படங்களிலிருந்து மாற்றாக 1980-களில் ஒரு புதிய அலை தோன்றியது. மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரையா, போன்றவர்கள் யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான திரைப்படைப்புகளை உருவாக்கினர். தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று இந்த காலகட்டம் சினிமா விமர்சகர்களால் கருதப்படுகிறது. பிறகு வணிக சினிமாக்களின் பிடியில் நீண்ட வருடங்கள் சிக்கியிருந்த தமிழ்சினிமா, தற்போதைய காலகட்டத்தில்தான் நம்பிக்கை தரும் புதிய இயக்குநர்களின் மூலம் வணிகப்பிடியிலிருந்து மெல்ல தன்னை விடுவித்துக் கொண்டு வருகிறது. சுப்பிரமணியத்தின் பிரதான கதை நிகழும் காலகட்டமும் 1980 என்பது இதற்கு மிக இசைவான பொருத்தமாகும்.
இந்தப்படத்தின் கதைச்சரடு மிக மெல்லியது. அதை அழுத்தமான திரைக்கதையின் மூலமும் பாத்திரங்களையும் காட்சிக் கோர்வைகளையும் பெரும்பாலும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதின் மூலம் நெடுங்காலம் பார்வையாளர்களால் பேசப்படக்கூடிய ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் சசிகுமார்.
சசிகுமார். பரமன், அழகர், காசி, டோப்பா, டும்கன் என்கிற ஐவர் சுப்பிரமணியபுரத்தின் சில்லறை ரவுடிகள். கடைசி இருவரைத்தவிர மற்றவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. அந்த ஊரில் இருக்கும் சோமு என்கிற முன்னாள் கவுன்சிலர் இழந்து போன தன்னுடைய பெருமையை மீட்கத் துடிக்கிறார். அவரின் தம்பி கனகு இதற்கான பின்னணியில் இயங்குகிறான். இவர்களின் தங்கை துளசியும் அழகரும் மெளனக்காதல் புரிகின்றனர். சோமு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட செயலாளர் பதவி இன்னொருவருக்கு போக கோபமுறும் கனகு, புதிய மா.செவை கொலைசெய்ய அழகர் குழுவை மறைமுகமாக தூண்டுகிறான். அவர்களுக்காக கொலை செய்யும் அழகரும், பரமனும் பிறகு எந்தவித உதவியும் செய்யப்படாமல் கனகுவால் புறக்கணிக்கப்படுகின்றனர். கோபமுறும் இருவரும் ஜெயிலில் உள்ள ஒருவரின் உதவியால் வெளியே வந்து அந்த நன்றிக்கடனுக்காக ஒரு கொலையை செய்கின்றனர். கனகுவை வீழத்த இருவரும், இவர்களை வீழ்த்த அவனும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்குப் பிறகான காட்சிகள் மிக அழுத்தமாகவும் எதிர்பாராத திசையிலும் பயணிக்கிறது.
கனகு அழகருக்கும் பரமனுக்கும் செய்யும் துரோகம், துளசி அழகருக்கு செய்யும் துரோகம், காசி பரமனுக்கு செய்யும் துரோகம்... என இந்தக் கதையின் மையச்சரடு துரோகத்தினால் பின்னப்பட்டிருக்கிறது. Oldboy என்கிற கொரிய திரைப்படம், பழிவாங்குதலை ஆதாரமாக கொண்டிருக்கிறதென்றால் இந்தத் திரைப்படம் துரோகத்தின் நிகழ்வுகளால் இயங்குகிறது.
()
தற்கால படங்களிலிருந்து மிகுந்த மாறுதலைக் கொண்டிருக்கும் இந்தப்படத்தின் முக்கியமான சுவாரசியமான விஷயம் பிரதான கதை நிகழும் காலம். 1980-ன் காலம் மிக அருமையாக இதில் நிறுவப்பட்டிருக்கிறது. டார்ட்டாய்ஸ் கொசுவர்த்தி சுருள் சுவர் விளம்பரங்கள், ரூ.2.25 சினிமா டிக்கெட், குழாய் வடிவிலான ஒலிபெருக்கிகள், நெளிவான 20 பைசா நாணயம், கோடீஸ்வரர்களாக விரும்புவர்கள் நாடும் கே.ஏ.சேகர் லாட்டரி நிறுவன விளம்பரம், டயனோரா தொலைக்காட்சி, கோலி சோடா, பெல்பாட்டம் பேண்ட், (யானைக்கால் வியாதியஸ்தர்கள் தங்கள் குறையை மறைக்க போடுவது என்றொரு கிண்டல் அப்போது உலவியது) பெரிய காலர் வைத்த சட்டை, ஸ்டெப் கட்டிங் தலை.... என கலைஇயக்குநர் ரெம்கோனின் நேர்த்தியான பங்களிப்பின் மூலம் பார்வையாளர்கள் அந்தக் காலகட்டத்திற்கே சென்று விடுகின்றனர். (வெள்ளை பெயிண்ட் அடிக்கப்பட்ட மாநகர பேருந்து மாதிரியான சில நெருடல்களை தவிர்த்து விடலாம்). 80-களில் அடித்தட்டு இளைஞர்கள் லுங்கி கட்டுவதே ஒரு தினுசாக இருக்கும். லுங்கியை பாதியாக மடிக்காமல், தொடைப்பகுதியில் லுங்கியை பிடித்து தூக்கி இடுப்பின் மேலாக முடிச்சிடுவதில் லுங்கி முக்கால்பாகம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த சமாச்சாரம் கூட மிக நுணுக்கமாக இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இளைஞன் ஒருவனுக்கு அந்த வயதில் மிகுந்த பரவசத்தையும், போதையையும் தருவது, அவன் காதலிக்க விரும்பும் பெண்ணின் கடைக்கண் பார்வையாகத்தான் இருக்க முடியும். துளசியின் அடிக்கண் பார்வையும் அழகரின் அசட்டுச் சிரிப்பும் இளையராஜாவின் பொருத்தமான பின்னணி பாட்டுக்களோடு அவ்வப்போது மோதிக் கொள்வதின் மூலம் இந்த விஷயம் உயர்ந்த பட்ச கலையம்சத்துடன் இந்தப் படத்தில் பதிவாகியிருக்கிறது, தன்னுடய காதலை நண்பனிடம் நிரூபிக்க முயல்வதில் கர்வமடைவது உட்பட. (ஆனால் இந்தக் காட்சிகள் உடனுக்குடன் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது சற்றே சலிப்பைத் தருவதையும் சொல்ல வேண்டும்)
கஞ்சா கருப்பு தவிர அத்தனை கதாபாத்திரங்களையும் இயக்குநர் புதிதாக பயன்படுத்தியிருப்பதால் புகழ்பெற்ற நடிகர்களின் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் நினைவுக்கு வந்து தொலையாமல் காட்சிகள் மிகுந்த நம்பகத்தன்மையோடு இயங்குகின்றன. அழகராக ஜெய்யும், பரமனாக இயக்குநர் சசிகுமாரும், கனகுவாக இயக்குநர் சமுத்திரக்கனியும், காசியாக கஞ்சா கருப்புவும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர். இவர்களைத் தவிர பிரதான பாத்திரங்கள் அல்லாதவர்களில் கால் ஊனமுற்றவராக வரும் டும்கனும், துளசியின் அப்பாவாக வரும் நபரும் மிகுந்த யதார்த்தமாக நடித்திருக்கின்றனர். எதிரிகளால் துரத்தப்படும் அழகர் ஒரு இடத்தில் பதுங்கி பயத்தின் பீதியில் உறைந்திருக்கும் காட்சியும், கனகுவின் தலையை துண்டிக்கும் போது பரமனின் முகத்தில் வெளிப்படும் குரூரமும் சிறப்பான முகபாவங்களோடு வெளிப்பட்டிருக்கின்றன.
()
இந்தப்படத்தின் சிறப்பான உருவாக்கத்திற்கு ஒளிப்பதிவு இயக்குநர் கதிரின் பங்கு மகத்தானது. மதுரையின் இரவு நேரத்தை மிக நெருக்கமாக பதிவு செய்திருக்கும் படத்தின் ஆரம்பக்காட்சிகள், மாவட்ட செயலாளரை போட்டுத் தள்ளிவிட்டு மூவரும் நிலாவின் மெளன சாட்சியின் பின்னணியில் ஒருவர் பின் ஒருவராக ஒடும் காட்சிகள், சுப்பிரமணியபுரத்தின் சந்து பொந்துகளில் எதிரிகளால் துரத்தப்படும் போது அழகரின் வேகத்தோடும் லாவகத்தோடும் கேமராவும் பின்தொடரும் காட்சியும் சிறந்த உதாரணங்கள்.
இயக்குநர் சசிகுமாருக்கு இசை ஆசிரியாராக இருந்த - தொலைக்காட்சி தொகுப்பாளாராக நாம் பெரிதும் அறிந்திருக்கும் - ஜேம்ஸ் வசந்தன் இந்தப்படத்தின் இசையை அமைத்திருக்கிறார். ராஜாக்களும் ரஹ்மான்களே கதி என்றிருக்கும் தமிழ்த் திரையிசையின் போக்கில் இவ்வாறான புதிய காற்று வீசுவது அவசியமானது. ஆரம்ப சில காட்சிகளைத் தவிர பிற்பாதியில் மிக இறுக்கமாக திரைக்கதையை கொண்டிருக்கும் இந்தப்படத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்பதே என் கருத்து. ஆனால் "கண்கள் இரண்டால்" போன்ற அருமையான பாட்டு கிடைத்திருக்காது. பரமன் கனகுவின் தலையை துண்டித்து ஒரு பையில் எடுத்துச் செல்லும் காட்சியில் பலத்த மெளனத்தையே பின்னணி இசையாக உபயோகித்திருப்பதின் மூலம் அந்தக் காட்சியின் குருரத்தை பலக்க எதிரொலிக்கச் செய்திருக்கிறார் வசந்தன். 'சுப்பிரமணியபுரம் எங்கள் தலைநகரம்' பாடலும் காட்சியமைப்புகளும் மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் வரும் 'டோல் டோல்'-ஐ நினைவுப்படுத்துகிறது.
சில நெருடல்களும் இந்தப்படத்தில் இல்லாமல் இல்லை. துளசி மற்றும் காசியின் துரோகங்களுக்கான பின்னணியோ அதற்கு முன்னோட்டமான காட்சிகளோ மிக அழுத்தமாக இந்தப்படத்தில் நிறுவப்படவில்லை. பார்வையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவை லேசான செயற்கைத்தனத்தோடு அமைந்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. (படத்தின் ஆரம்பக்காட்சியில் மாத்திரம் டோப்பாவும், டும்கனும் காசியிடம் மொக்கச்சாமி குறித்து உரையாடும் போது "ஏண்டா அவரு உங்க இனம்தான்றதால சப்போட் பண்றியா" என்று கேட்பதை கடைசிவரை நினைவு கொள்வது சிரமம்). துரத்தப்படும் அழகர் தான் ஒளிந்திருக்கும் வீட்டுப் பெண்ணின் காலில் விழுவது யதார்த்தமாக இருக்கிறதென்றால் கனகு தனது தங்கையின் காலில் விழுவது நாடகத்தன்மையோடு அமைந்திருக்கிறது. 'Infactuation' என்ற வார்த்தையை 1980-ன் ஒரு மதுரை கல்லூரிப் பெண் உபயோகிப்பது, அடித்தட்டு மக்களின் நெருக்கமான நண்பனாக பீடியே இருந்த காலகட்டத்தில் அழகரும் பரமனும் சிகரெட்டுகளாக ஊதித்தள்ளுவது, பெரும்பாலான காட்சியில் பேண்ட் அணிந்திருப்பது, 28 வருடங்களுக்குப் பிறகும் பரமனின் நண்பர்கள் காசியை கொல்ல வன்மத்தோடு அலைவது... இவைகள் படத்தின் மிகச் சிறிதான நெருடல்கள்.
()
ஒரு காலகட்டம் வரை வில்லன்களை தமிழ்ச்சினிமா மிக விநோதமாக உருவகப்படுத்தி வைத்திருந்தது. சண்டைக் காட்சிகளின் போது கீழே விழுவதற்கு தோதாக அட்டைப்பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கும் அறைகள், பல வண்ணங்களுடான பாட்டில்களில் உள்ள திரவத்தை வில்லனும் அடியாட்களும் அருந்தி மகிழும் போது கவர்ச்சியாட்டம் போடும் வில்லனின் காதலி, சுவிட்சை அழுத்தியவுடன் இரண்டாக பிளக்கும் அறை.. ஏதோ அவர்கள் வேறு உலகத்திலிருந்த வந்த தீயசக்திகள் என்பது போலவே தமிழ்ச்சினிமா இயக்குநர்கள் சித்தரித்து வைத்திருந்தனர். அவ்வாறில்லாமல் வில்லன்கள் நம் சமூகத்தில் நமக்கு நடுவே நம்மைப் போலவே வாழ்பவன்தான் என்பதை - நான் அறியும் வரை - மணிரத்னத்தின் 'பகல் நிலவு' மாற்றியமைத்தது. ஒரு முதியவர் பயபக்தியுடன் சாமி கும்பிடுவதான காட்சியுடன்தான் சத்யராஜின் அறிமுகம் அமைந்த ஞாபகம். அதைப் போலவேதான் அடியாட்கள் என்கிற பாவப்பட்ட ஜென்மங்களும். வில்லன் கைகாட்டினவுடன் நாயகனிடம் வரிசையாக வந்து அடிவாங்கி கீழே விழுந்து துடிக்கும் நபர்கள்.
தான் தெய்வமாக நினைக்கும் அரசியல் தலைவனாலேயே கொல்லப்படும் ஒரு அப்பாவித் தொண்டனை நெருக்கமாக சித்தரித்திருந்த படம் பாரதிராஜாவின் 'என்னுயிர்த் தோழன்'. வடசென்னையின் அழுத்தமான பின்னணியுடன் இயங்கிய இந்தப்படத்திற்கு பிறகு அரசியலால் தன் வாழ்வையே இழக்கும் அடித்தட்டு மக்களைப் பற்றின யதார்த்தமான படம் இதுதான் என்று தோன்றுகிறது.
()
தமிழ்ச்சினிமாவின் வழக்கமான சில சம்பிதாயங்களை இயக்குநர் சசிகுமார் கைவிட முடியாமல் தவித்திருப்பது தெரிகிறது. பாடல்காட்சிகளும், கஞ்சா கருப்புவின் ஆரம்ப நகைச்சுவைக் காட்சிகளும் சில உதாரணங்கள். இந்தக் கட்டாயங்களிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இந்தப்படத்தை உருவாக்கியிருப்பார் என்றுதான் தோன்றுகிறது. ஒரு திரைப்படத்தின் அடிப்படை விஷயமான கதையை/திரைக்கதையை பலவீனமாக வைத்துக் கொண்டு தொழில்நுட்பங்களையே பிரதானப்படுத்தி முழங்கும், முழுக்க வணிக நோக்கில் எடுக்கப்படும் தற்கால படங்களோடு ஒப்பிடும் போது 'சுப்பிரமணியபுரம்' தமிழ்ச்சினிமாவை தரத்தின் அடுத்த படிக்கு மெல்ல நகர்த்தியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். சசிகுமார் தன்னுடைய அடுத்த படத்தை எந்த தடைகளுமில்லாமல் உயர்ந்த பட்ச கலை அம்சங்களுடன் படைக்க என் வாழ்த்துகள்.
இந்தப்படத்தை பார்த்து முடித்த சில மணி நேரங்கள் வரை 'சுப்பிரமணியபுரத்தின்' தாக்கத்திலிருந்து என்னால் வெளிவர இயலவில்லை. திரைப்பட ரசிகர்கள் இந்தப்படத்தை கொண்டாடியதற்கு காரணமும் அதுவாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.
suresh kannan