"ஒரு படத்தின் விமர்சனம் என்பது எந்த ஊடகங்கள் மூலமாக வெளிப்பட்டாலும் சரி, அது ஒரு தனிமனித எண்ணங்களின் வெளிப்பாடுதான். ஒரு படத்தயாரிப்பாளன் (film maker) அதை பொருட்படுத்த தேவையில்லை" என்கிறார் பிரெஞ்சு நாட்டு திரைப்பட இயக்குநர் ழான் பால் ஷீத்தர். "பொதுப்புத்தியின் ஒட்டு மொத்த கலவையான கூறுகளையும் தன்னகத்தே கொண்டதே ஒரு சிறந்த விமர்சனமாக அமைய முடியும்" என்கிறார் ஜெர்மன் நாட்டின் பிரபல திரைப்பட விமர்சகர் மோர்சன்பிரே. (நான் சொந்தமா யோசித்து சொன்னது அப்படின்னா நீங்க ஒத்துப்பீங்களா? அதனாலதான் இப்படி வெளிநாட்டு ஆசாமிங்களோட பேர்ல கூடு பாயறது).
மேற்கத்திய நாடுகளில் திரைப்படமோ, நாடகமோ விமர்சகர்களின் கருத்துகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. தனது படைப்பு அரங்கேறின இரவன்று படைப்பாளிகள் நகத்தைக் கடித்துக் கொண்டு மறுநாள் நாளிதழுக்காக காத்திருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். நமது உள்ளுர் ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஒரு மேம்போக்கான பார்வையில் பார்ப்போமே.
()
செய்திகளை முந்தித்தருவதாக சொல்லிக் கொள்ளும் 'தினத்தந்தி'யின் திரை விமர்சனம் ரொம்பவும் மொண்ணையானது. 'கிச்சா வயது 16' படமானாலும் சரி, 'ஹேராம்' படமானலும் சரி ஒரே மாதிரியான தொனிதான். "ரகசியாவின் நடனம் இளசுகளை கிளுகிளுப்பூட்டக்கூடியது' போன்ற வரிகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். 'மொத்தத்தில் பார்க்க வேண்டிய படம்" என்று வெண்ணைத்தனமாக முடிப்பார்கள். இந்த மாதிரி விமர்சனங்களைப் படிப்பதை விட 'ஷகீலா இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்.. அவைகளில் எத்தனை நூறுநாட்களை தாண்டி ஓடியது? போன்ற புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டிருந்தாலவது போகிற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும். 'தினமலர்' எப்பவாவது அபூர்வமாக எழுதும் விமர்சனங்களும் 'வளவளவென்றுதான்' இருக்கும். (வாரமலரில் இப்படி தொடர்ந்து கிண்டலடிக்குமளவிற்கு தமிழ்ச்சினிமாவாசிகளுக்கும் இவர்களுக்கும் அப்படி என்ன ஜென்மப் பகை என்று தெரியவில்லை).
'தி ஹிண்டு'வின் பழைய விமர்சனங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்கும். ஆங்கிலப்படங்களுக்கும் இந்திப்படங்களுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இப்படி தமிழுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். (விளம்பரங்கள் செய்யும் வேலையா என்று தெரியவில்லை.) நடிகைகளின் clevage சர்வசாதாரணமாக ஆப்செட் பளபளப்பில் மின்னுகிறது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கொடுத்த ஒரு ஜவுளிக்கடை விளம்பர பெண்ணின் தொப்புள் தெரிகிறது என்று பிரசுரிக்க மறுத்து விட்டார்கள். (இத்தனைக்கும் அது line drawing).
ஆனந்தவிகடன் நீண்ட ஆண்டுகளாக மார்க் போட்டு (வாத்தியாரா இருந்த எவரோ விமர்சகரா ஆரம்பித்து வைத்த பழக்கமோ என்னமோ) தன்னுடைய சேவையை ஆற்றி வருகிறது. இது வரை அதிகபட்சமாக மதிப்பெண் பெற்ற எதுவென்று தெரியவில்லை. {பாரதிராஜாவின் படமொன்றை (16 வயதினிலே (?) மதன் சமீபத்தில் குறிப்பிட்ட ஞாபகம்} சமீப காலங்களில் அதன் மொழி மிகவும் மாறிவிட்டது. (இளமை கலாட்டா).
பெரியார் திரைப்பட விமர்சனத்திற்கு பயபக்தியும் மதிப்பெண் போடாமல் விட்டதை சாருநிவேதிதா சவட்டிக் களைந்ததில் எனக்கு முழு உடன்பாடே. வாழும் காலத்திலேயே தீவிர விமர்சனங்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட ஆளுமையை மதிப்பிட பயந்து தாழ்ந்து போனது விகடன். 'பாய்ஸ்' படத்திற்கு 'த்தூ'' என்று பத்தாம்பசலித்தனமாக காறித்துப்பியது போன்ற ஒரு அநியாயம் இருக்க முடியாது. தீமைகளை ஒழிக்கும் அவதார நாயகர்களிடமிருந்து விலகி ஒரு கூடுமானவரை பாசாங்கை விலக்கி யதார்த்தத்தைக் கையாண்டு எடுத்த ஒரே ஷங்கர் படம் என்பதே என் மதிப்பீடு.
"கடைசி வரியில் கவிழ்த்து விடும் குமுதம் கூட" என்று வைரமுத்து ஒரு பிரயோகத்தை தன்னுடைய நாவலொன்றில் உபயோகித்த நினைவு. குமுதம் விமர்சனங்களை அதிகம் படித்ததில்லையென்றாலும் மிகவும் குறும்புத்தனமான விமர்சனங்களை படித்த நினைவிருக்கிறது. ராமராஜன் படத்திற்கு படத்தின் ஸ்டில்லை (still) மட்டும் பிரசுரித்து 'இந்தப்படத்திற்கெல்லாம் விமர்சனம் தேவையா?" என்பதுதான் விமர்சனமே. நாயகியின் கவர்ச்சியோ கவர்ச்சியான படத்தை மட்டும் கவனமாக நடுப்பக்கத்தில் போட்டும் சமூகப் பொறுப்பான பத்திரிகையிது.
பொதுவாக அச்சு ஊடகக்காரர்கள் தயாரிப்பாளர் தரும் கவரின் எடையைப் பொறுத்தே எதிரொலிப்பார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.
()
சிற்றிதழ்களின் வரலாறு வேறுவகையானது. ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவை ஏதோ நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து மாதிரியே அணுகுவார்கள். (நன்றி: சுஜாதா). பின்பு பின்நவீனத்துவம் முன்வாசல் வழியாக வந்த பிறகும் பெர்க்மன், குரசோவா போன்றவர்களுக்கு மட்டுமே அனுமதி. ரே, ஷ்யாம் பெனகலும் எப்பவாவது தென்படுவார்கள். ஆனால் சமீப காலங்களில் இந்த நிலை மாறியுள்ளது. மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களின் படங்கள் என்றால் கையில் கற்களுடன் குஷியாக காத்திருந்த நிலை பரிணாம வளர்ச்சியடைந்து பாலா, அமீர், பாலாஜி சக்திவேல் வகையறாக்களுக்கும் நீண்டுள்ளது. மிகவும் நுணுக்கமான மொழியில் பல்லைக்கடிக்கும் கட்டுடைத்தலில் கடுமையான கட்டுரை வாசகனை பல சமயங்களில் பழகாதவன் வெங்காயம் அரியச் சென்றவனைப் போல கலங்க வைப்பது. யமுனா ராஜேந்திரன் என்றொரு ஆசாமி இருக்கிறார். பெருக்கல், வகுத்தல் போன்ற கணிதக் குறிகளை உரைநடையிலும் கையாள முடியும் என்று தெரிய வைத்தவர். குறைந்தது 20 பக்கங்களாவது நீளும் இவரது விமர்சனங்களை முழுவதும் படித்து முடிப்பவர்கள், மனைவியின் ஜாக்கெட்டுக்கு ஊக்கு தைக்கும் உருப்படியான வேலை கூட இல்லாத வெட்டி ஆசாமிகளாகத்தானிருக்க முடியும்.
அ.ராமசாமி என்றொரு விமர்சகர், காதல் திரைப்படத்தில் மைக்ரோ செகண்டுகளில் காட்டப்பட்ட பெரியார் சிலையின் கோணத்தை வைத்துக் கொண்டு எழுதிய விமர்சனம் நகைச்சுவையின் உச்சம். படம் ஆரம்பிக்கும் முன்பே தங்களது ஆயுதங்களை தீட்டிக் கொண்டு தீர்மானமாக அமர்ந்திருப்பார்களாயிருக்கும். காலச்சுவடு இதழ் ஒன்றில், மணிரத்னத்தின் இருவர் படத்தின் ஒரு ஷாட்டுக்கு விமர்சகரின் 2 பக்க அரசியல் ரீதியான கோணத்தைப் படித்திருந்தால் இயக்குநரே அயர்ந்து போயிருப்பார்.
()
இது இப்படியென்றால் தொலைக்காட்சிகளின் வேலை இன்னும் காமெடி. கலாநிதி மாறனின் ஒன்று விட்ட மச்சான் மாதிரியான தோரணையும் ஒரு ஆசாமி கால் மேல் கால் போட்டு ஒற்றை வரியில் தன்னுடைய செளகரியத்துக்கேற்ப படங்களை கலாய்த்ததில் திரையுலகத்தினருக்கு ரொம்ப நாட்களாக வயிற்றெரிச்சல். தன்னுடைய சானலுக்கு விற்க சம்மதிக்கும் படங்களை தலைமேல் தூக்கும் இவர்களின் பாணி ரொம்பவுமே அநியாயம். பொதிகை சானலில் பத்தாவது அரியர்ஸ் வைத்திருக்கும் ஒரு சிறுமி, சொல்லிக் கொடுத்த ஸ்கிரிப்டை மனப்பாடமாக சொல்லி விட்டுப் போகும். (குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்று பொதிகைக்கு யாராவது சொன்னால் தேவலை). கஅகாலத்தில் கோட்டு, சூட்டு போட்டுக் கொண்டவரைப் போல் அசெளகரியத்துடன் ஒரு நபர், நடிகர் சிவகுமார் மாடுலேஷனில் ஸ்கிரிப்டை வாசித்து விட்டு போவார் 'ராஜ்டிவி'காரர்.
'விஜய்'யில் மதனின் விமர்சனம் கொஞ்சம் தேவலையாக இருக்கும் என்றாலும், மனிதர் அநியாயத்திற்கு நல்லவராக இருக்கிறார். கடுமையாக விமர்சிக்க மாட்டேன் பேர்வழி என்று விஷால் படத்தைக்கூட 'ரே'படத்தை சர்வஜாக்கிரதையாக விமர்சிப்பதைப் போல, இயக்குநருக்கு கை கொடுப்பார். ஆனால் இது Times Now சானலில் ராஜீவ் வழங்கும் நிகழ்ச்சியின் பிரதி சரியாக விழாத கார்பன் காப்பி என்பது அதையும் பார்ப்பவர்களுக்கு விளங்கும். (ஆனால் ராஜீவ் நீரிழவுக்காரர் கழிவறைக்கு விரைகிற அவசரத்திலேயே பேசுவதை தவிர்த்தால் நன்றாயிருக்கும்) இவரைப் போலவே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியாக ஒரு நல்ல திரைப்படத்தின் dvd-ஐ பரிந்துரை செய்வதை நான் ஆர்வத்துடன் கவனிப்பேன்.
சமீப காலமாக சுஹாசினியும் (ஜெயாடி.வி) களத்தில் குதித்திருக்கிறார். ஆனால் இவர் பேசி பேசி ஓய்ந்து போவதில், பார்ப்பது தொலைக்காட்சியா அல்லது வானொலியா என்று சந்தேகம் வந்துவிடும். காட்சி ஊடகத்தை இப்படி பேசியே விமர்சிப்பது மிகவும் அநியாயம். மணிரத்னம் மனைவி என்கிற பந்தாவில் இந்தியாவின் எந்த நடிகரானாலும் தொலைபேசியில் உரையாட முடிவது நிகழ்ச்சியின் பலம். (மணிரத்னம், நிகழ்ச்சயில் எந்தப்படத்தையும் காரசாரமாக விமர்சிக்காதே என்று சொல்லியிருக்கிறாமே).
()
எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் படத்தின் விமர்சனத்தை தருபவர்கள், முந்தைய காட்சியிலிருந்து வெளிவருபவர்கள் என்று பொதுவான நம்பிக்கையிருக்கிறது. ஆனால் இவர்களும் கேமராவின் வெளிச்சத்தில் நனையும் குதூகூலத்துடன் "சூப்பரு' என்று ஒரே மாதிரியாக சொல்வது நாடகத்தனமாயிருக்கிறது. இவர்களையும் தாண்டி நமது வலைப்பதிவர்களின் விமர்சனங்களைப் பற்றி சொல்லலாம் என்றால்...
சேம் சைடு கோல் போட நான் தயாராயில்லை. என்றாலும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் வகையில் திரை விமர்சனங்களை இந்தப் பதிவில் வாசிக்க முடியும். :-)
14 comments:
சுரேஷ்,
மறு ஒளிபரப்பா? ;)
சிற்சில பகுதிகளை முன்பே வாசித்ததுபோல இருக்கு.
-மதி
உவமானங்கள் பிரமாதம். கல்கி, குங்குமம்..?
இப்பொழுது விஜய் ஆதரவு/சூர்யா ஆதரவு/அஜீத் ஆதரவு என்று பத்திரிகைகள் கிளம்பி இருப்பதாக நண்பர் தெரிவித்தார்... எந்தப் பத்திரிகை, எப்படி எழுதுகிறது என்பது வீட்டு வேலை.
பதிவு கலக்கல்!
//ஆனால் இது Times Now சானலில் ராஜீவ் வழங்கும் நிகழ்ச்சியின் பிரதி சரியாக விழாத கார்பன் காப்பி என்பது அதையும் பார்ப்பவர்களுக்கு விளங்கும். (ஆனால் ராஜீவ் நீரிழவுக்காரர் கழிவறைக்கு விரைகிற அவசரத்திலேயே பேசுவதை தவிர்த்தால் நன்றாயிருக்கும்) இவரைப் போலவே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியாக ஒரு நல்ல திரைப்படத்தின் dvd-ஐ பரிந்துரை செய்வதை நான் ஆர்வத்துடன் கவனிப்பேன்.//
அது CNN-IBN ராஜீவ் மஸந்த் என்று நினைக்கிறேன்.
பதிவு பிடித்திருந்தது....
புதிய பார்வை 'மதுர' படத்தைக்கூட 'ஹேராம்' படத்தை அணுகுவது போல் அணுகும். அதைவிட மதுர போன்ற படங்களை ஒதுக்கிவிட்டுப் போகலாம்.
பலவரிகள் ஏற்கனவே படித்திருப்பது போலத் தோன்றுகிறது.
I thought Rajeev Masand is in CNN-IBN. Has he moved to Times Now
-- http://sorgenkind.wordpress.com/
Thanks for your comments.
மதி & பிரசன்னா:
'கூறியது கூறல்' ஒரு பலவீனம்தான் இல்லையா? இனி மேல் தவிர்க்க முயல்கிறேன்.
பாலா:
என்ன இது? :-)
சுதர்சன் கோபால் & அனானி:
இப்படி கொஞ்சம் தப்பா எழுதினாத்தான் பின்னூட்டமிடுவீங்க போலிருக்கு. :-) நீங்கள் சுட்டிக்காட்டியது சரிதான்.
நல்ல பதிவு சுரேஷ்...
'அ.ராமசாமி என்றொரு விமர்சகர், காதல் திரைப்படத்தில் மைக்ரோ செகண்டுகளில் காட்டப்பட்ட பெரியார் சிலையின் கோணத்தை வைத்துக் கொண்டு எழுதிய விமர்சனம் நகைச்சுவையின் உச்சம்'
மிகவும் உண்மை.
துக்ளகில் இதயத்தை திருடாதே என்ற படத்தை விமர்சித்திருந்தது ரொம்பவே கலக்கல். இன்னும் சில படங்களுக்கும் அவர்கள் விமர்சனம் செய்து இருக்கிறார்கள் - மிகவும் வித்தியாசமான விமர்சனங்களாக இருக்கும்.
இலவசக் கொத்தனார்:
இதைப் பற்றி எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். விட்டுப் போய் விட்டது. துக்ளக்கில் 'துர்வாசர்' என்ற பெயரில் காரசாரமான விமர்சனங்களை எழுதினவர் எழுத்தாளர் வண்ணநிலவன்.
உங்களதை எனக்குத் தெரிந்து "சுரேஷ் கண்ணன்" பாணி விமர்சனம்னு பிரகாஷ் நக்கல் விட்டிருந்தது நினைவில் வருகிறது.
அது என்னான்னு அவர்கிட்டயே கேட்கலாம்.(எனக்குத் தெரிந்தவரை படத்தைப் பற்றியே பேசாமல்; பக்கத்தில் படம் பார்த்தவர் சாப்பிட்ட ஐஸ்கிரிமைப் பற்றி பேசுவீர்கள் அதனால் தான் என்று நினைக்கிறேன்.)
நான் யாருன்னு உங்களுக்கு மெயில் அனுப்புறேன்.
மொத்ததில் படிக்க வேண்டிய கட்டுரை
-------------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணயம் முழுவதும் கழிந்து கிடக்கிறது
எனக்கு தெரிந்து மதனின் திரைப்பார்வை CNN-IBN / TimesNow-க்கு சேனல்கள் தொடங்குவதற்கு முன்பிருந்தே இருக்கிறது. தற்போது மாற்றி கொண்டிருந்திருக்கலாம். ஆனால் மதனின் கார்டூன் ஒரு நல்ல பஞ்ச்.
ரிடிஃப் தளத்தில் ராஜா சென்னின் விமர்சனம் நன்றாக இருக்கும். அதைவிட அவருடைய விமர்ச்னத்திற்கு வரும் பின்னூட்டங்கள் சுவாரசியமானவை. :-)
எங்கெங்கோ ஒரு சுற்று சுற்றி வந்தால் கடைசியாக இந்தப் பதிவுக்கு கொண்டு வந்து விட்டது :-)
வெகுஜன சினிமாவை அறிவுஜீவி கண்ணாடி கொண்டு பார்ப்பது நிச்சயமாக அந்த சினிமாவை விட அபத்தம்.
நல்ல ஜாலியான பதிவு. பதிவு சுவாரஸ்யமாக ஓடிக்கொண்டிருக்கும் போது நீங்களும் அறிவுஜீவிகளின் சில பல்லுடைக்கும் வார்த்தைகளை போடுவது தான் ஸ்பீட் ப்ரேக்கர்!
நல்லா இருந்திச்சு.. முழுசாப் படிச்சு முடிச்சேன்..நாங்களெல்லாம்.. பத்திரிக்கையில் சினிமா விமர்சனம் படிச்சால்.. அதில் இருந்த படத்தின் ஸ்டில் தவிர மத்தது எல்லாம்.. அடுத்த பக்கத்துக்குப் போன உடனேயே மறந்து போகும்..
இத்தனையும் நினைவு வைத்திருந்து, 40 பக்க நோட்டு முழுவதும் கட்டுரை எழுதிய சுரேஷ் கண்ணனின் நினைவுத்திறனும் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது..
அன்புடன்
சீமாச்சு..
Post a Comment