Tuesday, February 20, 2007

புதிய பார்வை - சினிமா சிறப்பிதழ்


புதிய பார்வை என்றொரு இடைநிலை இதழ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? புத்தகக் கடைகளில் சினிக்கூத்து, நக்கீரன், ஜீனியர் விகடன் போன்ற குப்பைகளில் மார்பை செயற்கையாக நிமிர்த்திக் காட்டிக் கொண்டிருக்கும் நடிகைகளின் புகைப்படங்களின் மத்தியில் உற்றுப் பார்த்தீர்களேயானால் (வரிகளின் இடையில் படிக்காமலிருக்க வேண்டுகிறேன்) இந்த புத்தகம் உங்களுக்கு தெரியக்கூடும். பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வந்துக் கொண்டிருந்த பத்திரிகை நடுவில் நின்று போய் மீண்டும் வெளிவர ஆரம்பித்து இரு வருடங்களிருக்கும். இப்போதைய இணைஆசிரியர் மணா. (இவர் குமுதம் தீராநதியில் ஆசிரியராக இருந்தவர்) ஆசிரியரைப் பற்றி கேட்காதீர்கள்.
Photobucket - Video and Image Hosting

"இப்போது அதுக்கு என்ன?" என்பவர்களுக்கு: பிப்ரவரி 16-28 2007 இதழை தவற விடாதீர்கள். ஏனெனில் இது பல சுவாரசியமான அபூர்வமான கட்டுரைகளுடன் சினிமா சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. .
* பெரியார் படம் இயக்கிய ஞானராஜசேகரனின் நேர்காணல் சுவையாக இருக்கிறது.

* "தமிழ் சினிமாவில் அரசியல்" என்று ஒரு கட்டுரையில் நிழல் "ப.திருநாவுக்கரசு" அபூர்வமான தகவல்களை தந்திருக்கிறார்.

* "சப்தங்களின் வழியே நிகழும் வன்முறை" என்கிற கட்டுரை, இன்றைய தமிழ்ச் சினிமாக்களின் ஒலி என்கிற கூறு பார்வையாளனை எவ்வாறு உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்பதை ஆழமாக ஆய்கிறது. இதை எழுதியவர் செழியன் (ஆனந்த விகடனில் உலக சினிமா பற்றி தொடர் எழுதுகிறவர்)

* "இன்றைய மலையாள சினிமா ஒர் அவசரக் காட்சி" - இந்த கட்டுரையை எழுதியவர் என்னுடைய ஆதர்ச கட்டுரையாளர்களில் ஒருவரான சுகுமாரன்.

இன்னும் சில கட்டுரைகளும், கால பைரவனின் சிறுகதையும் தவிர, காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து ஆதியோடு அந்தமாக ஆராயும் ஒரு கட்டுரையும் வாசிக்க உகந்தது.

3 comments:

தங்கவேல் said...

புதிய பார்வை முன்பு (மணா ஆசிரியரான பின்புதான்)தொட்ர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவின் காரணமாக இந்த இதழ் வாங்கிப் பார்க்கிறேன்.
//ஆசிரியரைப் பற்றி கேட்காதீர்கள்.//
'திரைமறைவு அரசியல்வாதி' என்பதால் பெயர் குறிப்பிட விருப்பமில்லையா?!

மனோகர் said...

பயனுள்ள தகவல்.'சினிமா சிறப்பிதழ்' என்று போட்டுவிட்டு நமீதாவின் படத்தையும், பேட்டியையும் போடும் பத்திரிக்கைகள் மத்தியில் இப்படியும் ஒரு பத்திரிக்கை வருவதே பெரிய விசயம்.'திரைமறைவிலிருந்து'வெளிவரும் ஒரு உருப்படியான விசயம்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

காலச்சுவடு, உயிர்மை இன்னபிற இதழ்கள் வந்தாலும் விரும்பிப்படிக்கும் சஞ்சிகை இதுதான். ஆனால், இந்த இதழ் கைக்குக்கிடைக்கவில்லை. தகவலுக்கு நன்றி சுரேஷ்கண்ணன்.

-மதி