Wednesday, February 14, 2007

Jana Aranya (1976) The Middle Man

இந்திய சினிமா சர்வதேச திசையை நோக்கி பயணமளித்த ஆரம்பக்கட்டங்களை செழுமையாக்கதில் சத்யஜித்ரேவின் பங்கு பிரதானமானது. அவர் இயக்கிய ஜன ஆரண்யா என்கிற படத்தை சமீபத்தில் பார்க்க வாய்த்தது. மணி சங்கர் முகர்ஜி என்பவர் எழுதிய நாவலை (அதே தலைப்புதான்) - ரேவின் பெரும்பான்மையான படங்கள் சிறுகதைகளையும் நாவல்களையும் அடிப்படையாகக் கொண்டது. - கொண்டு இயக்கப்பட்ட படமிது.

இந்தியக் கல்வி நிறுவனங்கள் தனது அபத்தமான கல்வித்திட்டங்கள் மூலம் தனது பிரஜைகளை ஆட்டு மந்தைகளாக்கி வீசும் போது, அது வரை வசந்த காலங்களில் வாழ்ந்திருந்த அவர்கள், யதார்த்த வாழ்வின் குரூரத்தை நேராக சந்திக்கும் போது ஏற்படும் அதிர்ச்சியை இந்தப்படம் சொல்லுகிறது. படிப்பை முடித்து விட்டு எந்தவிதமான பின்புலனும் இல்லாமல் சொந்த வியாபாரத்தில் இறங்கும் எவரும் இந்தப் படத்தை மிக நெருக்கமாக உணர்வார்கள்.

சோம்நாத் (பிரதீப் முகர்ஜி) திறமையான மாணவன். இருந்தும் முதல் வகுப்பை அடைய முடியாமல் தேர்வாகிறான். பல இடங்களில் முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. இவனின் தந்தை (சத்யா பானர்ஜி) புராதன மனநிலையைக் கொண்டவர். லஞ்சம், ஊழல் போன்றவைளை கேட்ட மாத்திரத்திலேயே அதிர்ச்சி அடைகிற நேர்மையாளர். காதலி திருமணப் பத்திரிகையோடு வரும் போது இன்னும் சோர்ந்து போகிறான். இவனின் நண்பன் வறுமையான குடும்பத்தைச் சேர்நத சுகுமார் என்பவனும் வேலை இல்லாமல் சிரமப்படுகிறான். தனது இரண்டு சகோதரிகளை வீட்டிற்கு வரும் சோம்நாத்திற்கு அறிமுகப்படுத்துகிறான்.

இந்நிலையில் சோம்நாத்திற்கு இடைநிலை ஊழியம் செய்யும் ஒருவரின் (உத்பல் தத்) அறிமுகம் கிடைக்கிறது. Demand-ம் Supply-ம் எங்கிருக்கிறது என்பதை புலனறிந்து தேவைப்படுகிறவர்களுக்கு மாற்றிக் கொடுத்து இடையில் சம்பாதிக்கும் வேலை. பச்சையாகச் சொன்னால் Broker. ஆரம்பத்தில் கிடைக்கும் சிறுசிறு தொகைகள் அவனை உற்சாகப்படுத்துகிறது. மிகப்பெரிய ஆர்டர் ஒன்று கிடைக்கும் போலிருந்து கிடைக்காமல் ஏதோவொரு காரணத்தினால் தடைபடுவது அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. யதேச்சையாக அறிமுகமாகும் மிட்டர் என்கிற பழம் தின்று கொட்டை போட்ட சீனியர் (ரபி கோஷ்) அவனுக்கு ஆர்டர் கிடைப்பதை சாத்தியமாக்குகிறதில் உள்ள பின்னணிகளை விளக்குகிறார். வாடிக்கையாளனின் தனிமனித பலவீனங்களை கண்டுகொண்டு அதன் மூலம் வெற்றி அடைகிற வழியை காண்பித்து கொடுக்கிறார் அவர்.

இந்த வகையில் இவனுக்கு வரக்கூடிய பெரிய ஆர்டரை தருபவருக்கு பெண்கள் விஷயத்தில் நிறைய சபலம் இருப்பதை உணர்ந்து வைத்திருக்கிறார். ஒரு பெண் பாலியல் தொழிலாளியை (formerly known as prostitute) ஏற்பாடு செய்து கொடுப்பதின் மூலம் அந்த ஆர்டரை கைப்பற்ற முடியும் என்பதை சோம்நாத்திற்கு உணர்த்தி அதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறார். மிகவும் கட்டுப்பாடான குடும்ப பின்னணியிலிருந்து வந்திருக்கும் சோம்நாத்திற்கு இது மிகுந்த தயக்கத்தையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இந்த தயக்கங்களை உடைத்தெறியும் மிட்டல், வாடிக்கையாளனிடம் நேரத்தை குறித்துக் கொண்டு பாலியல் தொழிலாளியை ஏற்பாடு செய்ய ஆரம்பிக்கிறார். முதலில் அணுகப்படும் ஒரு குடும்பத்தலைவி alias பாலியல் தொழிலாளி சம்மதிக்கும் நேரத்தில் அவளின் குடிகார கணவன் வந்து துரத்தி விடுகிறான். இன்னொரு இடத்தில் ஓட்டலுக்கெல்லாம் வர சாத்தியப்படாது என்று மறுத்துவிடுகிறார்கள். மிகுந்த தர்மசங்கடத்தோடு சோம்நாத் மிட்டலோடு சுற்றிக் கொண்டிருக்கிறான். இன்னொரு சீப்பான இடத்தில் பிம்ப் ஒருத்தன் அழகான இளம் பெண் ஒருத்தியை ஏற்பாடு செய்வதாக உறுதியளிக்கிறான்.

அவளைப் பார்க்கும் சோம்நாத் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகிறான். அவள் கல்லூரி நண்பன் சுகுமாரனின் தங்கை. பணம் கொடுத்து திரும்பிப் போகச் சொல்லும் சோம்நாத்தை மறுக்கிறாள் அவள். வேறுவழியின்றி தன்னுடைய வாடிக்கையாளனிடம் விட்டுவிட்டு வருகிறான். "காண்டிராக்ட் கிடைத்துவிட்டது அப்பா" என்று குற்ற உணர்ச்சியுடன் சொல்லிவிட்டு வீட்டிற்கு வரும் மகனைப் பற்றி - அதன் பின்புலம் தெரியாமல் - சந்தோஷப் பெருமூச்சு விடுகிறார் அப்பா.

()

பிடித்த சில பாத்திரங்கள், காட்சியமைப்புகள்:

புத்தகங்களை, கிழிக்கப்பட்ட தாள்களை வைத்துக் கொண்டு ஜாலியாக தேர்வெழுதும் மாணவர்களோடு படம் துவங்குகிறது. இவர்களுக்கு மத்தியில் நேர்மையாக எழுதிக் கொண்டிருக்கும் சோம்நாத் அப்பாவியாக தோற்றமளிக்கிறான். சோம்நாத் இண்டர்வியூ செய்யப்படும் காட்சிகள் திறமையான எடிட்டிங் மூலம் பிரகாசிக்கிறது. What, When, Where போன்று தொடங்கும் கேள்விகள் கேட்பவர்களின் முகங்கள் வேறு வேறு முகங்களில் சடார் சடாரென்று மாறி, திகைப்பை ஏற்படுத்துகிறது.

நண்பன் சுகுமாரின் வீட்டிற்கு செல்லும் போது அவனுடன் பேசிக் கொண்டே வெளியே வர, சுகுமார் திடீரென்று வீட்டிற்குள் ஓடி தங்கையை திட்டுகிறான். அவள் உடை மாற்றுவதை ஜன்னல் வழியே சில இளைஞர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சோம்நாத் போஸ்டல் ஆர்டர் ஒட்டி விண்ணப்பிக்கும் கடிதம் தபால் பெட்டியில் போடப்படுவதில் தொடங்கி, போஸ்ட்மேன் வழியாக சா¡ட்டிங் அலுவலகத்திற்கு சென்று லட்சக்கணக்கான விண்ணப்பங்களோடு நிறையும் காட்சி திறமையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

Mr.மிட்டல்-ஆக வரும் ரபி கோஷ்-ன் நடிப்பு இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம் என்பேன். ஒரு தந்திரமான, எந்த குறுக்குவழியையும் கையாளும் ஒருவனின் சித்திரத்தை மனிதர் மிகத் திறமையாக நம் முன் நிறுத்துகிறார். சம்பந்தப்பட்ட வருடத்தின் சிறந்த நடிகர் விருதை எனக்கு தரும் அதிகாரம் ஒருவேளை எனக்கு வழங்கப்பட்டிருந்தால், இவருக்குத்தான் அதை தயக்கமின்றி தருவேன். அப்படி ஒரு அபார நடிப்பு. ஒரு வாடிக்கையாளனை பின்தொடர்ந்து சாமியார் அருளுரை கூட்டத்திற்கு சோம்நாத்தை அழைத்துச் செல்லும் மிட்டல் ஒரு பணக்காரனை காட்டி கூறுகிறார். "இன்னும் சற்று நேரத்தில் பார், கண்ணீரை துடைத்துக் கொள்வான்".

ரேவின் சிறந்த படங்களில் ஒன்றான இது, 1975-க்கான சிறந்த பட மற்றும் இயக்குநர் விருதை பெற்றிருக்கிறது.

2 comments:

Anonymous said...

Good. Pl write more like this.

Umabathy said...

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க.