Saturday, July 15, 2006

பார்த்ததில்... கேட்டதில்.... படித்ததில்..

ஆனந்தவிகடன் வார இதழில் "பார்த்ததில்... கேட்டதில்.... படித்ததில்.. என்றொரு பகுதியில் இசை, புத்தகம், திரைப்படம் என்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் பிரபலமானவர்களை, அவர்களுக்கு பிடித்தமான படைப்புகளை வரிசைப்படுத்தச் சொல்லி வெளியிடுகிறார்கள். இவ்வாறு கேட்கப்படுகிறவர்களில் எத்தனை பேர் இயல்பாகவும், வெளிப்படையாகவும் தங்களின் பட்டியலை சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. மற்றவர்களின் பார்வையில் தம்முடைய ரசனை உயர்வாக தெரிய வேண்டும் என்கிற ஆசையினால், விரும்பிப் படிப்பது "சரோஜாதேவி"யாக இருந்தாலும் (இந்தப் பெயரில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொருவர் எழுதிக் கொண்டிருந்தார்கள்) ஷேக்ஸ்பியரின் காவியங்கள்தாம் விரும்பிப் படிப்பது என்று ஜீலியஸ் சீசர் போல் கம்பீரமாக சொல்லிக் கொள்வார்கள்.

அவ்வாறில்லாமல் வெளிப்படையாக, தன்னிச்சையாக ஒருவரின் ரசனை வெளிப்படும் தருணத்தில் அவருடைய மனப்பான்மையை நம்மால் ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். இப்போதைய நடைமுறையில் சொன்னால் ஒருவர் தனது செல்போனின் Ring tone மற்றும் Hello tune ஆகியவற்றை எந்தப் பாடல்களைக் கொண்டு தேர்வு செய்கிறார் என்பதைப் பொறுத்து அவரின் குணாதியசத்தை ஒரளவு கணிக்க முடியும். அவருக்கு பிடித்த எத்தனையோ பாடல்கள் இருப்பினும், தன்னுடைய கருவியில் திரும்பத் திரும்ப ஒலிக்கப் போகிறது எனும் போது இன்னும் பிரத்யேகத்துடனும் சிரத்தையுடனும் தன்னுடைய தேர்வை கண்டடைவார்.
என்னுடைய நண்பரின் செல்போனில் வைத்துள்ள ஹலோ டியூனின் படி "Yes. Who is this?" என்றொரு கம்பீரமான ஆண் குரல் திரும்பத் திரும்ப ஒலிக்கும். அழைப்பவர் விழிப்பாக இல்லாவிட்டால், எதிர்முனையில் இருப்பவர்தான் பேசுகிறார் என்று நினைத்து "நான்தாங்க, கோயிஞ்சாமி பேசறேன்" என்று அவர் உண்மையாக பேசுவது வரை பொய்க்குரலுடன் மல்லாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

()

ஆனந்தவிகடன் தொடர் படி என்னுடைய விருப்பப் பட்டியலை எழுத முனைந்தால் எப்படியிருக்கும் என்ற ஆசை வந்ததால் இந்தப்பதிவு. கூடுமானவரை பிலிம் காட்டாமல் என்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன்.

படித்ததில்.......

சத்திய சோதனை - மோகன்தாஸ்.
மரப்பசு - தி.ஜானகிராமன்
ரத்தஉறவு - யூமா வாசுகி
ஆனந்தாயி - சிவகாமி
புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
ஆனந்த வயல் - பாலகுமாரன்
சதுரங்க குதிரை - நாஞ்சில்நாடன்
காகித மலர்கள் - ஆதவன்
ஜெயந்தன் சிறுகதைகள்
ஏழாம் உலகம் - ஜெயமோகன்


கேட்டதில் .........
How to Name it மற்றும் 1980-ல் வெளிவந்த பாடல்கள் - இளையராஜா
Tere Kasam - Adnan Sami
1942 A Love Story - R.D.Burman
இருவர் - AR Rahman
Greatest Hits of Beethovan
Devotional Songs - Anuradha Potuwal
Taal - AR Rahman
Colonial cousins - ஹரிஹரன்
பி.சுசீலா ஹிட்ஸ்
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா - மலையாளம்


பார்த்ததில்........

சாருலதா (வங்காளம்) - சத்யஜித்ரே
பதேர் பாஞ்சாலி (வங்காளம்) - சத்யஜித்ரே
அவள் அப்படித்தான் - ருத்ரைய்யா
உதிரிப்பூக்கள் - மகேந்திரன்
ஹே ராம் - கமல்ஹாசன்
Mrs. & Mr. Iyer - அபர்ணா சென்
உன்னால் முடியும் தம்பி - கே.பாலச்சந்தர்
குருதிப் புனல் - பி.சி.ஸ்ரீராம்
வீடு - பாலுமகேந்திரா
நாயகன் - மணிரத்னம்


விருப்பப்படும் நண்பர்கள் இதனை தொடரலாம்.

Friday, July 14, 2006

தீவிரவாதி ஜிடேன்

ஒரு வழியாக உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவடைந்து விட்டது. விளையாட்டுக்களின் ராஜா என்று இந்த விளையாட்டைச் சொல்வேன். 90 நிமிடங்கள், 22 கால்கள், ஒரு பந்து என்கிற அளவில், எந்த நிமிடத்திலும் ஆட்டத்தின் முடிவு மாறக்கூடிய அளவில் பார்வையாளனை பரபரப்பாகவும், சுவாரசியமாகவும் வைத்திருக்கக்கூடிய இந்த விளையாட்டு, ஏறத்தாழ 110 கோடி பேர் உள்ள இந்தியாவில் பெரும்பான்மையாக கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும். இதோடு இந்த விளையாட்டு பிரதானமாக கவனிக்கப்படுவது அடுத்த உலக கோப்பையின் போதுதான். கிரிக்கெட் என்கிற ராட்சசம், கபடி, கில்லி, பம்பரம், காற்றாடி போன்ற உள்ளுர் பிரத்யேக விளையாட்டுக்கள் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. முன்பு ESPN சானல் தடையில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது நிறைய கிளப் போட்டிகளை தவறாமல் பார்த்துவிடுவேன். எந்த கிளப், எந்த ஆட்டக்காரர் அல்லது நாட்டுக்காரர் என்பதெல்லாம் எனக்கு அவ்வளவாக முக்கியமில்லை. வெள்ளை கலர், நீல கலரில் எது சிறப்பாக ஆடுகிறது என்பதை ஒரு ஐந்து நிமிடம் கவனிப்பேன். சிறப்பாக ஆடக்கூடிய அணியின் சார்பான பார்வையாளனாக தன்னிச்சையாக மாறிவிடுவேன். "எனது" அணி வெற்றிபெற வேண்டும் என்கிற சுவாரசியத்துடன் ஆட்டத்தை கவனிப்பதற்கு இந்த உத்தி உதவியாக இருந்தது.

சமீபத்திய உலக கோப்பை போட்டிகளில் என்னைப் பொறுத்த வரை கால் இறுதிப்போட்டி தொடரில் பிரேசிலும் பிரான்சும் மோதியதிலிருந்துதான் பரபரப்பின் உச்சத்தை தொட்டது. இதில் பிரேசில் தோற்றுவிடும் என்று அப்போது யாராவது சொல்லியிருந்தால் எங்கள் எதிர்வீட்டு நாய் கூட அதை நம்பியிருக்காது. அந்த ஆட்டத்தில் முதலிலிருந்தே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக அதன் தடுப்பாட்டக்காரர்கள் vierra போன்றவர்கள் தங்கள் பங்கை சிறப்பாக ஆற்றினார்கள். "சரியாக ஆடவில்லை" என்று ரொனால்டினோவைப் பற்றின குற்றச்சாட்டுக்கள் அதீதமானது என்றுதான் கூறுவேன். மத்தியகள ஆட்டக்காரக்காரராக அவர் பந்தை சிறப்பாக கையாண்டார்... மன்னிக்கவும்.. காலாண்டார். எதிர் அணிக்காரர்கள் பந்தை அவரிடமிருந்து பறிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அவர் அளித்த பல பாஸ்களை சக ஆட்டக்காரர்கள் (குறிப்பாக ரொனால்டோ) வீணாக்கினார்கள்.

பிரான்சின் Zidane எப்போதுமே எனது பிரியமான ஆட்டக்காரர். 1998 உலக கோப்பை போட்டிகளில் அவர் அடித்த வெற்றிக் கோல்கள் இப்போதுமே என் எண்ணங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பிரேசிலுடனான போட்டியில் அவரின் ஆட்டம் பார்வையாளர்களை திருப்திப் படுத்தும் வகையில் இருந்தது. ஹென்றிக்கு அவர் அடித்த அற்புதமான pass-ஆல் அன்றைய போட்டியில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவுடன் பிரான்ஸ்தான் கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்பினேன். சர்வதேச விளையாட்டிலிருந்து விடைபெறப் போகிற அவர் கோப்பையை கைப்பற்றி சாதனை புரியப் போகிறார் என்று நானும்
பெரும்பான்மையோரைப் போல தீவிரமாக நம்பினேன். அதற்கேற்றாற் போல் தனக்கு கிடைத்த பெனால்டி கிக்கை சாமர்த்தியமாக பயன்படுத்தி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கோல் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். பதிலுக்கு இத்தாலியும் ஒரு கோல் சமனாக்கியது.

எக்ஸ்ட்ரா டைமில் வந்ததுதான் வினை. அப்பாவின் சட்டையின் பின்னாலிருந்து இழுக்கும் குறும்புக்கார மகன் போல, இத்தாலிய வீரர் மாட்டரஸி ஜிடேனின் சட்டையை இழுத்துக் கொண்டே போக எரிச்சலைடந்த ஜிடேன் "சட்டை வேண்டுமா? ஆட்டம் முடிந்ததும் தருகிறேன்" என்பதாக பத்திரிகைச் செய்தி. பதிலுக்கு மாட்டரஸி ஜிடேனை "தீவிரவாதி" என்றாரா? "உன் மனைவியின் சட்டையை தா" என்றாரா? அவருடைய உறவினர்களை ஆபாசமாக திட்டினாரா? .. ஒன்றும் தெரியவில்லை. கோபமடைந்த ஜிடேன், கையால் அடித்தால் நடுவர் பவுல் கொடுத்து விடுவாரோ என்னவோ என்று நினைத்து மஞ்சுவிரட்டு காளை போல தலையால் வேகமாக மாட்டரஸியின் தலையில் முட்டியதை தொலைக்காட்சியில் லைவ்வாக பார்த்த போது அந்த நடுராத்திரியில் கொஞ்சமிருந்து தூக்கக் கலக்கமெல்லாம் விலகிப் போனது.

பெனால்டி கிக்கில் பிரசித்தமான ஜிடேன் அந்த ஆட்டத்தில் நீடித்திருந்தால் பிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கக்கூடும் என்பதுதான் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களின் கணிப்பு. ஒரு அணிக்கு தலைவனாக பொறுப்பான நிலையில் இருந்தவர், அந்த தருணத்தை முதிர்ச்சியுடன் அணுகியிருக்கலாம். எதிரணியினர் ஆத்திரமூட்டும் வகையில் பேசி கவனம் சிதைப்பதுதான் வாடிக்கையான விஷயம்தான். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும் ஒரு பேட்டியில் "பாகிஸ்தான் அணியினர் தாம் பேட் செய்கையில் ஆபாசமாக வெறுப்பேற்றும் வகையில் பேசி அவுட் ஆக்க முனைவது வாடிக்கையானது" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜிடேன் இந்த விஷயத்தை பின்னால் fifa-விடம் புகார் தெரிவித்திருந்து மாட்டரஸி மீது நடவடிக்கை எடுக்க வைத்திருக்கலாம். இவரது அவசரமான முன்கோபத்தால் சக அணியினரின் அத்தனை வருட தயாரிப்பும் உழைப்பும் வீணாகிவிட்டதுதான் சோகம்.

பீலே, மாரடோனா போன்ற கால்பந்து ஜாம்பவான்களின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவர் ஜிடேன் என்பதில் சந்தேகமேயில்லை. ஆஸ்திரேலியா கடைசி தருணத்தில் பெனால்டியை ஏற்படுத்தி போட்டியிலிருந்து விலகிப் போன பரிதாபத்தைப் போல், பிரான்சும் ஜிடேனின் இந்த தவறால் கோப்பையை இழந்தது வருத்தமானது. இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடமும் உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

()

தீவிரவாதம் என்கிற வார்த்தை ஆங்காங்கே குண்டு வெடிக்கும் இன்றைய சூழ்நிலையில் எதிர்மறையானதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு கொள்கையில், சித்தாந்தத்தில், கருத்தில், செய்கையில் தீவிரமாக இயங்குபவர் அனைவரும் தீவிரவாதிகள்தான். கால்பந்து என்னும் விளையாட்டில் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் இயங்கிய ஜிடேனை அந்தத் துறையில் தீவிரவாதி என்றழைப்பதில் தவறில்லைதானே?

(கோக்குமாக்காக ஒரு தலைப்பை வைத்து விட்டு எப்படியெல்லாம் நியாயப்படுத்தி எழுத வேண்டியிருக்கிறது)

Wednesday, July 05, 2006

ஒரு வயோதிகத் தகப்பனின் நெடும் பயணம்

வெளியூரில் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் மகன் காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதாக உங்களுக்கு தகவல் வருகிறது. அலறியடித்துக் கொண்டு ஓடுகிறீர்கள். காவல் துறையோ, அரசு இயந்திரமோ, அதிகார அமைப்போ எங்கிடமிருந்தும் உங்கள் மகனைப் பற்றிய தகவலை அறிய முடியவில்லை. உயிரோடு இருக்கிறானா அல்லது இறந்து போனானா... ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்ன செய்வீர்கள்?

நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது. காவல்துறையிடமிருந்தும், அரசியல்வாதிகளிடமிருந்தும் முறையான பதில் பெறமுடியாத அவ்வாறான ஒரு தந்தை நியாயம் வேண்டி நீதிமன்றத்தின் கதவுகளை நடுங்கும் கைகளோடு வெகுநேரம் தட்டிக் கொண்டிருந்த நெகிழ்ச்சியான அனுபவங்கள்தாம் இந்தப் புத்தகம்.

()

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் - ராஜன் கொலை வழக்கு - பேராசிரியர் டி.வி. ஈச்சரவாரியர் - (தமிழில் குளச்சல் மு.யூசுப்) - காலச்சுவடு பதிப்பகம் - 208 பக்கங்கள் - ரூ.100/-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படுகிற இந்தியாவின் பெருமைமிக்க அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் அழிக்கவே முடியாத ஒரு கறை 1975 ஜூன் 26 அன்று ஏற்பட்டது. இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட "இந்தியாவின் இருண்ட காலம்" என்று வர்ணிக்கப்படுகிற நெருக்கடி நிலையைத்தான் (Emergency) குறிப்பிடுகிறேன் என்பது சொல்லாமலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதற்கு முன்னர் அருகாமையில் உள்ள நாடுகளுடன் போர் ஏற்பட்ட போது தேசத்தின் பாதுகாப்பிற்காக இந்தியாவில் இரண்டு முறை நெருக்கடி நிலை பிரகனடப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு தனிமனிதரின் சுயநலத்திற்காக, தன்னுடைய அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக, தன்னுடைய குடிகளை காப்பாற்ற வேண்டிய ஒரு பிரதமரே நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது. அதிகார அமைப்பின் துணையுடன் காவல் துறையினர் நடத்திய துஷ்பிரயோகங்களில் பல மனிதர்கள் அடைந்த மனரீதியான, உடல்ரீதியான வலிகளில் இந்தியாவே வாதைகளின் ஒரு கூடாராமாக மாறிப் போன, நீதி என்பது இருட்டில் உறைந்து போன கடுமையான காலகட்டமாய் இருந்தது அது.

1976 மார்ச் 1ம் தேதி, முன்னிரவு நடந்த கல்லூரி கலைவிழாவினில் கலந்து கொண்டு அதிகாலையில் கல்லூரிக்கு பேருந்தில் சக மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் வந்திறங்கிய ராஜன் என்கிற, கோழிக்கோடு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்றி அந்த கல்லூரி மாணவர் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். இந்தச் செய்தி கல்லூரி முதல்வரால் மாணவரின் தந்தையான, ஒரு கல்லூரியின் இந்திப் பேராசிரியரான டி.வி. ஈச்சரவாரியருக்கு தெரியப்படுத்தப்படுகிறது. விசாரணை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமில்லாத செய்தியை அறிந்து கொள்கிற அவருக்கு காவல் துறையின் கடுமையான முகத்தைத்தான் தரிசிக்க இயல்கிறதே, மகன் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறான், எங்கே அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்கிற நியாயமாய் தெரிவிக்கப்பட வேண்டிய எந்தச் செய்தியும் தெரிவிக்கப்படவில்லை.

அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கருணாகரனை அவருக்கு நெருக்கமான பேராசிரியரின் மூலம் அணுகுகிறார் ஈச்சரவாரியர். திருப்திகரமான பதிலேதும் இல்லை. நக்ஸல்பாரிகளின் இருப்பிடத்திற்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்படும் போது ராஜன் தப்பிவிட்டார் என்கிற அதிகாரப்பூர்வமற்ற செய்திதான் கிடைக்கிறது. ராஜனுக்கு இடதுசாரிகளின் மீது அனுதாபம் உண்டே தவிர, தீவிரவாத இயக்கங்களில் ஒருபோது ஈடுபட மாட்டான் என்ற உறுதியோடு இருக்கும் அவர் இதை நம்பவில்லை. அப்போதைய முதல்வரான ஸி. அச்சுதமேனோனை அணுகும் போதும் பூடகமான பதில்களே கிடைப்பதோடு, ஒரு சூழ்நிலையில் வெடித்துப் போய் "நான் ஒரு துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு கேரளம் பூராவும் உன் மகனைத் தேடி ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனா ஏறியிறங்க வேண்டுமா" என்கிற அவமதிப்பும் நேர்கிறது.

இங்கே ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்கிறார் ஈச்சரவாரியர். 1949 மார்ச் மாதம். பொதுவுடமைக்கார இயக்கத்தினர் அரசாங்கத்தால் வேட்டையாடிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். அச்சுதமேனனும் மற்ற தோழர்களும் தலை மறைவாக இருந்தனர். நடுஇரவில் ஈச்சரவாரியரின் வீடு தட்டப்படுகிறது. அழுக்கடைந்த உடம்போடும், உடுப்புகளோடும் அச்சுதமேனோன் நின்று கொண்டிருக்கிறார். "அந்திக்காட்டிலிருந்து போலீசின் கண்களை விட்டுத் தப்பியோடி வந்திருக்கிறேன். பின்னால் போலீஸ் வருகிறது. எப்படியாவது ஒரு மறைவிடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்" ஈச்சரவாரியரும் பொதுவுடைமை இயக்க அனுதாபிதான். தன்னுடைய உறவுக்காரச் சிறுவர்களின் துணையுடன் சற்று தூரமுள்ள ஒரு கிராமத்தில் பாதுகாப்பாக தங்க அனுப்பி வைக்கிறார். இந்த நிலையில் அவர்கள் மொத்தமாக போலீசாரிடம் பிடிபட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தை அவர் உணர்ந்திருந்தாலும் வேறு வழிதெரிந்திருக்கவில்லை.

ஒரு காலத்தில் அப்படி தன்னால் உதவி செய்யப்பட்டு இப்போது முதல்வராயிருக்கும் அச்சுதமேனோனின் அலட்சியத்தால் உடைந்து போகிறார் ஈச்சரவாரியர். பொதுநல சிந்தனைகளின் தாக்கத்தால் அதிகார அமைப்பையே உயிரையும் துச்சமென மதிக்கும் இளைஞர்களில் சிலர், அதே அதிகாரம் தன்னிடம் வந்த பின்னால் தலைகீழாக மாறிப்போகும் விந்தை தொடர்ந்து கொண்டேயிருப்பதுதான் போலும். இப்படி அச்சுதமேனோன், கே.கருணாகரன் போன்ற அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற தன்மையினால் பந்தாடப்படும் அவர் அதிகார அமைப்பின் உச்சமான ஜனாபதி வரைக்கும் மனுக்களை அனுப்பி சலித்துப் போய் கடைசி புகலிடமாக நீதிமன்றத்தை அணுகுகிறார்.

நெருக்கடி காலம் வாபஸ் பெறப்பட்ட 1977 மார்ச் 21ம் தேதிக்கு பிறகு நீதிமன்றம் சந்திக்கிற முதல் ஆள்கொணர்வு மனு (Habeas Corpus) அது. கேரளா மட்டுமன்றி தேசத்தின் கவனத்தையே ஈர்த்த வழக்கமாக அது அமைந்தது. "ராஜன் கைது செய்யப்படவில்லை" என்று முன்னர் சட்டசபையில் தவறான தகவல் கொடுத்த கருணாகரன், ராஜன் கைது செய்யப்பட்டது நீதிமன்றத்தால் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட நிலையில் பதவியேற்ற ஒரே மாதத்தில் ராஜினாமா செய்ய வேண்டியதாயிருந்தது. பத்திரிகைகளின் பொய்ச் செய்திகள், ஆதரவான சில பத்திரிகைகள், சாட்சியங்கள் காவல் துறையினரால் மிரட்டப்படுதல், ஆகிய பல்வேறு தடைகளைத் தாண்டி ராஜன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதும் விசாரணை முகாமில் துன்புறுத்தப்பட்டதும் நீதிமன்றத்தால் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது. என்றாலும் ராஜன் கொலை செய்யப்பட்டது சந்தேகத்திற்கிடமின்றி நிருபிக்கப்படாததால் உயர் பொறுப்பில் இருந்த காவல்துறையினர் சிலருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை என்பதோடு முடிவுக்கு வந்தது. அதையும் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் விடுதலை செய்யப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர்.

ஆக... ஒரு குடியரசு நாட்டில் ஒரு நிரபராதி எந்தவித முகாந்திரங்களுமில்லாமல் அதிகார அமைப்பின் கொடிய பிரதிநிதிகளால் கொலை செய்யப்பட்டதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை என்பதும் ஏதும் கிடையாது என்பதே இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. ஆக.. ராஜன் கொலை வழக்கின் மொத்த தீர்ப்பே இதுதான் என்கிறார் ஈச்சரவாரியர்.

தன் மகன் இறந்து போனதற்கு நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கை தொடர்கிறார் ஈச்சரவாரியர். இந்த வழக்கிலும் பல சிரமங்களை கடந்த பின் ஆறுலட்சம் ரூபாய் நஷ்டஈடாக கிடைக்கிறது. "ராஜன் ரத்தத்த வித்த காசு உனக்கு வேணுமாடா?" என்று அவரின் மூத்த சகோதரரிடமிருந்து உட்பட பல எதிர்ப்புக்குரல்கள் கேட்கிறது. ஆனால் இதைக் கொண்டு அரசு பொது மருத்துவமனையில் ராஜன் நினைவாக ஒரு வார்டும் இன்னும் பல பொதுநலத்திட்டங்களுக்குத்தான் இந்த பணம் பயன்படபோகிறது என்பதை அறிந்தவுடன் அனைவரின் பாராட்டும் ஈச்சரவாரியருக்கு கிடைக்கிறது. ஏற்கெனவே சிறிதளவில் மனநோயாளியாக இருந்த ராஜனது அம்மா, அவர் நினைவாக புலம்பி 2000-ல் இறந்து போகிறது.

()

சரி. ராஜனுக்கு என்னதான் ஆனது? அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னிரவில் கலை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற அதே இரவில் நக்ஸல்பாரி இயக்கங்களால் காயண்ண என்கிற இடத்தில் போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்படுகின்றன. அதில் சம்பந்தப்பட்டிருக்கிற ராஜன் என்கிற பெயர் காவல்துறைக்கு கிடைக்கிறது. எனவே அதே பெயருள்ள கல்லூரி மாணவரை எந்தவித காரணமும் சொல்லாமல் விசாரணை முகாமிற்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி கொன்றதாக கருதப்படுகிறது. நீதிமன்றத்தாலும் "கருதப்படுகிறதுதான்" இதுவரை இந்த வழக்கில் ராஜனின் மரணத்தைப் பற்றின எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் காவல்துறையாலோ, நீதிமன்றத்தாலோ தெரிவிக்கப்படவில்லை.

இந்த வழக்கிற்குப் பிறகுதான் "ஒருவரை கைது செய்தபின் அவரின் உறவினருக்கு தகவல் அனுப்பப்பட வேண்டும்" "குற்றம் சாட்டப்பட்டவரை 24 மணிநேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய வேண்டும்" என்கிற வி.ஆர்.கிருஷ்ணய்யரின் பிரசித்திபெற்ற அந்த ஆணைகள் காவல்துறையினரின் வழிகாட்டுதலுக்கு இடப்படுகின்றன.

()

.... ராஜனைப் போன்று அதிகாரத்தின் ராட்சசக் கால்களால் மிதித்து அழிக்கப்பட்ட மனித உயிர்கள் ஏராளம். அந்த ஜீவன்களுக்கு ஈச்சவாரியரைப் போனற கல்வியறிவு பெற்ற அயராமல் உரிமைக்காகப் போராடும் ஒரு பாதுகாப்பாளர் இல்லை. ஆனால் ஈச்சரவாரியரின் இந்த நூலைப் படிக்கும் போது நாமறிந்திராத அந்தத் துயர முகங்களும் அவர்களது அவலங்களும் தவிர்க்க இயலாமல் நினைவுக்கு வரும்.... என்று இந்தப் புத்ககத்தின் முன்னுரையில் சுகுமாரன் குறிப்பிடும் போது ஆமோதிக்கத் தோன்றுகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பனை தேடுகிறேன் பேர்வழி என்று ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும், பழங்குடியினரும் அதிரடிப்படையினரால் முகாமில் கொடுமைப்படுத்தப்பட்ட அவலங்கள், சதாசிவம் விசாரணைக் கமிஷன் மூலம் நாம் அறிய நேரும் போது, இதுபோன்ற கொடுமைகள் காலங்காலமாக நிழலாக நம்மை தொடர்ந்து வரும் விஷயங்கள்தான் எனப் படுகிறது.

()

புத்தகத்தின் பல இடங்களில் ஈச்சரவாரியர் தன்னுடைய மகனைப் பற்றின நினைவுகளையும், மன உளைச்சல்களையும் வர்ணிக்கும் போது கண்ணீரை அடக்க பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டியதாயிருந்தது. மொழிபெயர்ப்பு நூல் என்கிற ஞாபகம் வராதவாறு மொழிபெயர்த்த குளச்சல் மு.யூசுப் மிகுந்த பாராட்டுக்குரியவர்.

அலுவலத்திலிருந்து வீட்டிற்கு கிளம்புகையில் ரயிலில் மிகவும் அசுவாரசியத்துடன்தான் இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். நான் இறங்க வேண்டிய இடத்திலிருந்து இரண்டு நிலையங்கள் தாண்டி ரயில் சென்றுக் கொண்டிருப்பதை பிறகுதான் கவனித்தேன். வீட்டிற்குச் சென்று ஒரே அமர்வில் இதை முடித்த போது உணர்ச்சியின் சோக உச்சியில் என்னையே நான் ஈச்சரவாரியாக உணர்ந்தேன்.