Thursday, April 27, 2006

அட்சய திருதியையும் அசட்டுத்தனங்களும்

வருகிற ஏப்ரல் 30, 2006 அக்ஷய திருதியை நாளாக கொண்டாடப்படுவதையொட்டி (?) ஏற்கெனவே பதியப்பட்ட இந்தக் கட்டுரை மீள் பதிவு செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட நாளில் தங்கம் வாங்குபவர்களுக்கு சமர்ப்பிக்கவும் படுகிறது. :-)

()


கடந்த ஒரு வாரமாக சென்னை அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்களுமாக 'இயேசு வருகிறார்' செய்திக்கு அப்புறமாக பரபரப்பான செய்தியாக இதுதானிருக்கும் என்கிற வகையில் ஒரே கலாட்டாவாக இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடிபோகப் போவதான பரபரப்பில் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டு வம்புகளும், தொலைக்காட்சி தொடர்களைப் பற்றியும் பேசுவதற்கு முன்னால் அவர்கள் விவாதிக்கக் கூடிய விஷயம் இதுவாகத்தானிருக்கிறது. ஆக்கப்பூர்வமாக ஏதாவது பேசியிருக்கப் போகிறார்கள் என்று கனவு காணாதீர்கள். இல்லை.

அக்ஷய திருதியையான இன்று ஒரு கிராம் தங்கம் வாங்கினால் கூட வருகிற நாட்களில் அவர்கள் கேட்காமலேயே, கனக தாரா ஸ்தோஸ்திரம் சொல்லாமலேயே அவர்கள் வீட்டு கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுமாம். பீரோவைத் திறந்து பார்த்தால் அவர்களுக்குத் தெரியாமலேயே கிலோ கணக்கில் தங்கம் இருக்குமாம்.

சீட்டு நிறுவனங்கள் 38 சதவீத வட்டி கொடுப்பதாக கூறி நிதி வசூலித்த போது இருந்த அதே பரபரப்பு இப்போதும் நிலவுகிறது. பெண்கள் பூரிப்புடன் தங்கநகைக் கடைகளில் வரிசையில் நிற்க, ஆண்கள் அம்போவென்று விளக்கெண்ணைய் குடித்த முகபாவத்துடன் வாசலில் காத்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு ரூபாய்க்கு லாட்டரி வாங்கி ஒரு கோடி சம்பாதிக்க நினைக்கும் பேராசைக்கு கொஞ்சமும் குறைவில்லாத தன்மை அவர்கள் கண்களில் பார்க்க முடிகிறது.

இந்த நாளின் ஐதீகம் என்னவென்று எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. ஆனால் இந்த மாதிரியான பேராசைத்தனமான அசிங்கத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, ஐதீகம் என்று பம்மாத்து செய்யும் அசட்டுத்தனம் என்னை அருவருப்புடன் குமட்ட வைக்கிறது. இந்த மாதிரி பேராசையுடன் நகை வாங்கப் போகிறவர்கள், கல்வியறிவில்லாத, அடுத்து வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத அடித்தட்டு மக்கள் இல்லை. நன்கு படித்த, வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் அத்தனையும் கொண்ட உயர் / நடு மத்திய தர வர்ககத்தினரே. மாருதியில் பயணிக்கிறவன் டொயாட்டாவிலும், தாம்பரத்தில் வீடு வைத்திருக்கிறவன், அண்ணாநகரில் பங்களா வாங்கும் பேராசையிலும் இருக்கிறான் என்பதே இந்தச் செய்தியில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மறைமுக உண்மைகள். மனிதன் தன் வசதிகளை பெருக்கிக் கொண்டு போகட்டும் தப்பில்லை. ஆனால் அது உழைப்பின் மீது சாத்தியமாகப்பட வேண்டுமே தவிர குருட்டு அதிர்ஷ்டங்களால் வரும் என்று எதிர்பார்ப்பது அபத்தமானது. அசட்டுத்தனமானது.

இவர்கள் தாங்கள் கற்ற கல்வியை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எந்தத்துறையில் படித்தால் வளமான எதிர்காலம் இருக்குமென்று தேடி லஞ்சம் கொடுத்தாவது முட்டி மோதி சீட் வாங்கி படித்து, நல்ல வருமானம் வரும் நிறுவனத்தில் பணிபுரிந்து, மார்க்கெட்டில் தனக்கேற்ற விலையை தரும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு படுக்கையறை கொண்ட வீடு வாங்கி, தன் எதிர்காலத்திற்காகவும் வாரிசுகளுக்குமான சொத்தை சேர்த்து வைத்து விட்டு ஒரு நாள் ஹார்ட் அட்டாக் வந்து செத்துவிடுவதைத் தவிர, தான் கற்ற கல்வியை சுயசிந்தனைகளுக்காக பயன்படுத்துகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. தன் முன்னோர்கள் சொன்ன காரியங்கள் என்றாலும் அதை நாமாகவும் ஆராய்வோம் என்கிற அடிப்படை யோசனை கூட இவர்களுக்கு தோன்றாமல் ஆட்டு மந்தைக் கூட்டங்களாக இருப்பது எரிச்சலாக இருக்கிறது. 'தேடிச் சோறு நிதந் தின்று' என்கிற பாரதியின் பாட்டுக்கு நாமே உதாரணங்களாய்த் திகழும் வேடிக்கை மனிதர்களாயிருக்கிறோமா?

உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் அறியாமைதான். போதுமான கல்வியறிவு பெற்றிருந்தும் அதே அறியாமையில் நாம் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம். என்ன செய்தாவது நாம் பணக்காரர்களாகி விட வேண்டும் என்கிற ஆசைதான் இவர்கள் கண்களை மறைக்கிறதா? அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது உண்மையானால், போன வருடம் இதே நாளில் தங்கம் வாங்கியதற்கு இந்த வருடம் அதிக தங்கம் இவர்களிடம் 'தானாக வந்து' சேர்ந்திருக்கிறதா? அதற்கும் முன்வருடம் தங்கம் வாங்கியவன் இந்நேரம் தங்கச் சுரங்கத்திற்கல்லவா உரிமையாளனாக இருந்திருக்க வேண்டும். இல்லையே? இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் இந்த வருடமும் தங்கம் வாங்க வரிசையில் நிற்பவர்களை என்னவென்பது? பரபரப்பான சினிமாவின் அனுமதிச்சீட்டு ஒன்றிற்கு முன்பதிவு செய்வது போல், இந்த வருடமும் குறிப்பிட்ட இந்நாளில் தங்கம் வாங்க முன்பதிவு செய்யப்படுகிறதாம்.

இந்த விஷயத்தில் வணிகர்களைச் சொல்லி பயனில்லை. வணிக தர்மப்படி அவர்களின் முக்கிய நோக்கம் பொருட்களை எப்படியாவது விற்பதும் அதன் மூலம் லாபம் பெறுவதும். இதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யவோ வாக்குறுதி கொடுக்கவோ தயாராக இருப்பார்கள். வாடிக்கையாளர்களாகிய நாம் அலலவா சிந்திக்க வேண்டும்? தந்தையர் தினம், அன்னையனர் தினம் என்று இறக்குமதி செய்யப்பட்ட சென்டிமென்ட்டுகளை அவர்கள் தங்கள் விளம்பரங்களின் மூலம் ஊதிப் பெருக்கி வாடிக்கையாளர்களை எப்படியாவது வாங்கச் செய்கிறார்கள். இந்த அட்சய திருதியையும் அதே போன்றதுதான்.

()

பெண்ணுரிமை, பெண்ணியம் பேசும் சில பெண்களும் உடம்பு நிறைய நகைகளை பூட்டிக் கொண்டு முழங்கும் போது சிரிக்கவே தோன்றுகிறது. தன்னை, தன் சிந்தனைகளை வைத்து பிறர் மதிக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை இல்லாமல் தான் போட்டிருக்கிற நகைகளை வைத்து தன்னை பிறர் மதிக்க வேண்டும் என்று அடிமைச் சிந்தனைகளுடன் இருக்கிற இவர்கள் பெண்ணுரிமை என்பது எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்களா? சில ஆண்களும் இவர்களுக்கு போட்டியாக நகைகள் அணிந்திருப்பதை காண எரிச்சலாகவும், அருவருப்பாகவும் இருக்கிறது. இடது கை விரல்களிலும் மோதிரங்கள் அணிந்திருப்பவர்களை காணும் போது, இடது கையால் மட்டும் செய்ய வேண்டிய ஒரு வேளையில் என்ன செய்வார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

கேவலம் ஒரு உலோகம் நம்மை இவ்வாறு ஆட்டி வைப்பது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா? இரும்பைப் போல, அலுமினியத்தைப் போல இவை நம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கக்கூடியதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. நாம் முதலீடு செய்திருக்கிற அத்தனை தங்கத்தையும் பொதுவில் முதலீடு செய்தால் உலக வங்கிக்கே கடன் கொடுக்கும் நிலையில் இந்தியா மாறிவிடும் என்று தோன்றுகிறது. அத்தனை முதலீடு ஒரு உலோகத்தின் மீது உள்ள பிரேமை காரணமாக முடங்கிக் கிடக்கிறது. (வருங்கால பாதுகாப்பிற்காக சொற்ப அளவில் தங்கம் சேர்த்து வைத்திருக்கும் எளியவர்களை நான் இதில் சேர்க்கவில்லை)

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்கிற பாரதியின் வாக்கை, 'எத்தனை கோடி ஆசைகள் வைத்தாய் இறைவா' என்று மாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம் போலிருக்கிறது..

8 comments:

களப்பிரர் - jp said...

"உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம் அறியாமைதான். போதுமான கல்வியறிவு பெற்றிருந்தும் அதே அறியாமையில் நாம் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம். என்ன செய்தாவது நாம் பணக்காரர்களாகி விட வேண்டும் என்கிற ஆசைதான் இவர்கள் கண்களை மறைக்கிறதா?"

சரியாக சொன்னீர்கள், தலைவா!!
இதை பத்திரபடுத்தி வைக்கவும். ஒவ்வொரு வருடமும் தேவைபடும்.

வாஸ்து, எண் கணிதம், ஜோதிடம், யந்திரம், பிறந்த நாள் பலன், ராசி பலன், நாடி ஜோதிடம்...இன்னும் எத்தனை கோடி வழிகளில் வெற்றி உன்னை தேடி வரும் என் நம்புகிறாய்??!!!

Sam said...

//இந்த நாளின் ஐதீகம் என்னவென்று எனக்குத் தெரியாது//

இந்த நாளில் சூரியன் சந்திரன்
இரண்டும் உச்சத்தில் இருக்கிறது.Sun
in Aries and Moon in Taurus in Rohini.

This is just marketing.சோதிடத்தை காரணம் காட்டி எதையாவது சொல்லி ஏமாற்றுவது ஆசை காட்டுவது சுலபம்.

வியாபாரத்தில் நேர்மை எல்லாம் போய் விட்டது.

அன்புடன்
சாம்

buginsoup said...

"Yesu Varukir" - Ithai ethaanai murai thinamum papaeril paarkireegal?
Summa vaarthaiku suvai kootta eatahiyavathu eluthateergal. We have already enough religious issues in the world.

Anonymous said...

//பக்கத்து வீட்டு வம்புகளும், தொலைக்காட்சி தொடர்களைப் பற்றியும் பேசுவதற்கு முன்னால் அவர்கள் விவாதிக்கக் கூடிய விஷயம் இதுவாகத்தானிருக்கிறது. ஆக்கப்பூர்வமாக ஏதாவது பேசியிருக்கப் போகிறார்கள் என்று கனவு காணாதீர்கள். இல்லை.//

என்னதான் உண்மையென்றாலும், இப்படி ஒரு ஆணாதிக்கவாதியை நான் பார்த்ததேயில்லை ஐயா!

நல்லா இருங்கடே!!

சாத்தான்குளத்தான்

Anonymous said...

ஐயா யாராவது; இந்திய;இலங்கை;பங்களாதேச திறைசேரிக்குள்; ஒரு கிராம் தங்கம் வாங்கி இந்த நாளில் போட்டு விடுங்கோ! கொட்டோ! கொட்டெனு! கொட்டி கொழிக்கட்டும்.
பேராசையின் உச்சம்!!!
யோகன் -பாரிஸ்

Karthik Krishna said...

//'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா' என்கிற பாரதியின் வாக்கை, 'எத்தனை கோடி ஆசைகள் வைத்தாய் இறைவா' என்று மாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறோம் போலிருக்கிறது..
//
சரியாக சொன்னீர்கள்...

அருமை...
வாழ்த்துக்கள்...

ஹரன்பிரசன்னா said...

இந்தப் பதிவை இன்று மீண்டும் மீள்மீள் பதிவு செய்வீர்கள் என நினைத்தேன். :>

kalimuthu kumaran said...

Ethai ariyaamai enbathaivida asattu thanamaana peyraasai endru kooruvathey sariyaaga erukkum.