Wednesday, April 26, 2006

இறந்த காலம் பெற்ற உயிர்

புனைவுகளின் ரசிகன் நான். மாறாக கட்டுரைகளை கண்டாலே திகைப்பூண்டை மிதித்தவன் போல் (அப்படியென்றால் என்ன?) தாண்டிப் போய் விடுவேன். வெகுஜன பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளும் இதில் அடக்கம். சிற்றிதழ்களில் வரும் கட்டுரைகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. இப்ரு மொழியின் மூலம் தமிழ் கற்றுக் கொண்டவர்கள்தான் சிற்றிதழ்களில் எழுத முக்கிய தகுதியோ எனுமளவிற்கு அந்த மொழியின் அடர்த்தி குறித்தும் கடுமை குறித்தும் எனக்கு ஒவ்வாமையே உண்டு. கணையாழி, சுபமங்களா, புதியபார்வை போன்ற நடுநிலை இதழ்களின் பழைய இதழ்களில் புனைவுகளை மாத்திரம் பத்திரப்படுத்தி கட்டுரைகளை கவனமாக தூக்கியெறிந்து விடுவேன்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல புனைவுகளில் செயற்கையாக கட்டமைக்கப்படும் கனவுலகங்களின் வெறுமையும் யதார்த்தமின்மையுமான பெரும்பான்மையான படைப்புகள் சலித்துப் போய் உண்மையை எட்டிப் பார்க்கும் ஆர்வத்தில் கட்டுரைகளின் பக்கம் என் கவனம் விழுந்தது. புனைவுகளில் உள்ள வசதி, ஒரு பொய்யையோ, உண்மையையோ எப்படி வேண்டுமானாலும் தன் விருப்பத்திற்கு ஏற்ப வளைத்தோ, நிமிர்த்தியோ கட்டமைத்துக் கொள்ளலாம். கட்டுரைகளில் ஒரு சொல் உண்மைக்கு மாறாக எழுதப்பட்டாலும் அதன் எதிர்வினையை உடனே எதிர்கொள்ள நேரிடும். தாம் தீவரமாக நம்பும் ஒரு கருத்தை, அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று அறிந்தே இருந்தாலும், நெஞ்சுரத்துடன் எழுதுபவர்களே கட்டுரைகளின் பால் வரலாம்.

()

"இறந்த காலம் பெற்ற உயிர்" என்கிற சுந்தர ராமசாமியின் கட்டுரைத் தொகுதியை படித்த போது, ஒரு கட்டிடக் கலைஞனின் லாகவத்தோடு அவர் வார்த்தைகளை ஒவ்வொரு செங்கல்லாக பொருத்தமாக அமைப்பதை கவனித்த போது மிக்க பொறாமையே ஏற்பட்டது. ஆங்காங்கே தெறிக்கும் நகைச்சுவை புன்னகையை ஏற்படுத்தினாலும் தீவிரமான யோசிப்பையும் கோருவது. இத்தனைக்கும் தனது பதினெட்டாவது வயதில் தமிழ் எழுதக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் போது ("ஆசிரியர் கற்றுத் தரும் போது ஒவ்வொன்றும் எவ்வளவு சிரமமாக இருந்ததோ அந்தளவுக்குச் சுயமாக கற்றுக் கொள்ளும் போது ஒவ்வொன்றும் சுலபமாக இருந்தது.") என்னுள் ஏற்படும் சுய பரிதாபம் மிகக் கொடுமையானதாக இருக்கிறது.

பல்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட 34 கட்டுரைகளையும் சில கடிதங்களையும் உள்ளடக்கிய இந்தத் தொகுதியை படித்து முடித்த போது நவீன தமிழ் இலக்கியக்க உருண்டையின் சில பகுதிகளை சுற்றி வந்த திருப்தி ஏற்பட்டது.

"திருவள்ளுவர் என் நண்பர்" என்ற கட்டுரையின் இந்தப் பகுதியை சாவகாசமாக படித்துப் பாருங்கள். பெரும்பான்மையான பேச்சாளர்கள் இந்த உலகப் பொதுமறையை எவ்வளவு அபத்தமாக கையாண்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவரும்.

".......... மேடைப் பேச்சாளர் தன் புலமைக் கொடியை நிலை நாட்டத் திருக்குறளைச் சற்று விரிவாக கற்றிருக்க வேண்டும் எனற அவசியம் கூட இல்லை. ஆங்காங்கே வாகாகச் சில குறள்களைப் பொறுக்கி நெட்டுரு செய்திருந்தாலே போதுமானது. பல்வேறு சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தி வருவது போல் அக்குறள்களின் தேர்வு அமைந்திருந்தால் சொற்பொழிவாளர் கெட்டிக்காரர்தான். அரசியல் மேடைகளில் எந்தெந்தக் குறள்கள் ஜொலிக்கும் என்பது அவருக்குத் தெரியாமலா இருக்கும். கைவசம் இருக்கும் குறளுக்குத் தோதாகப் பேச்சின் தலைப்பு அமையவில்லை என்றால் அதை இழுத்து மடக்கிக் கைவசப் படுத்திக் கொள்வதும் மேடைப் பேச்சுக்குரிய சாமர்த்தியங்களில் ஒன்றுதான். சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல் முதலில் சிறிது கூச்சமாகவே இருக்கும். கூச்சம் மனித ஜன்மங்களுடன் இணைந்து வந்து கொண்டிருக்கும் ஒரு பழைய வியாதி. கைத்தட்டல் தரும் பரவசம் அவ்வியாதியை இருந்த இடம் தெரியமால் அடித்து விடும்.....

ந.பிச்சமூர்த்தியும் கலை : மரபும் மனித நேயமும்,

ரகுநாதன் ஒரு சந்திப்பு,

புதுமைப்பித்தன்: தமிழுக்கு நவீனப் பார்வை தந்தவர்,

சாகித்திய அக்காதெமிப் பரிசும் தமிழ்ச் சூழலும்,

தமிழச் சூழலில் சில சலனங்கள்,

சுய அறிமுகம்: சில சிதறல்கள்,

என் படைப்பனுபவம்,

தமிழ் வழிக் கல்வி,

இறந்த காலம் பெற்ற உயிர்

ஆகிய கட்டுரைகளை என்னளவில் முக்கியமானதாக கருதுகிறேன். ஒரு உன்னதமான வாசிப்பனுபவத்தை உங்களுக்கு இந்தத் தொகுதி வழங்கும் என்கிற தீவிரமான நம்பிக்கையின் பேரில் இதை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.

()

இறந்த காலம் பெற்ற உயிர்: (கட்டுரைகள்) சுந்தர ராமசாமி, காலச்சுவடு பதிப்பகம், 192 பக்கங்கள், ரூ.90.

1 comment:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த புத்தகம் இன்று கையில் கிடைத்தது இதைப்பற்றியாரேனும் எழுதி இருக்கிறார்களோ என்று பார்வையிட்டப்போது இந்தபதிவு கிடைத்தது..