Thursday, April 07, 2005

ஜெயகாந்தன் என்கிற ஆளுமை

கடந்த மாதத்தின் ஏதோவொரு நாளின் மாலை வேளை. சோர்வும், எரிச்சலும், விரக்தியுமாக இருந்தது சூழ்நிலை. சிறுநீரக கல் அடைப்பினால் ஏற்பட்ட உட்கோளாறில் உடல்நலம் குன்றிப் போய் உடலும் மனமும் மிகவும் சோர்ந்திருந்திருந்ததனால் ஏற்பட்டிருந்த மனநிலை அது. (கல் வைத்திருந்தால் அதிர்ஷ்டம் என்கிறவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும் போலிருக்கிறது) வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்றிருக்கிற குழந்தை அவ்வப் போது உள்ளே வந்து அம்மாவின் முந்தா¨¨யை தொட்டுச் செல்வது போல் சுரமும் அவ்வப் போது வந்துப் போய்க் கொண்டிருந்தது. புத்தக அலமாரிகள் வழிய நிறைந்திருந்த எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் கூட கைகொடுக்கவில்லை. படுக்கையறையின் புழுக்கம் தாங்காமல் ஒரு மாற்றத்திற்காக வரவேற்பறையில் வந்து உட்கார்ந்தேன். தொலைக்காட்சியில் ஏதோ 'எழவெடுத்த' தமிழ்ப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எரிச்சல் தாங்காமல் கண்களை மூடிக் கொண்டேன். இதே நிலை இன்னும் நீடித்தால் சற்று நேரத்தில் பாயைப் பிராண்ட ஆரம்பித்து விடுவேனோ என்று பயமாக இருந்தது.

அந்த நேரத்தில்தான் தொலைக்காட்சியின் தலைப்புச் செய்திகளில் அது காதில் விழுந்தது. 'ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது'.

Image hosted by Photobucket.com

ஏதோவொரு விசையை அழுத்தினாற் போல் சூழ்நிலையே சட்டென்று இடவலமாக மாறியது. மெல்ல மதுவருந்திக் கொண்டிருக்கிறவன் ஏதோவொரு கணத்தில் போதையை மூளைக்குள் உணர்கிறாற் போல் அல்லாமல் அந்தச் செய்தி சட்டென்று என்னை தாக்கியது. என்னுள் ஊறிக்கிடந்த எரிச்சலையும் வேதனையையும் அடித்துக் கொண்டு போய் பதிலாக உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வந்து நிரப்பியது. மிக மிக சந்தோஷமாக உணர்ந்தேன். எனக்கே பரிசு கிடைத்த மாதிரி இருந்தது.

இந்தியா போன்ற லஞ்ச லாவண்யம் ஊறிக்கிடக்கும் நாடுகளில் நியாயமான அங்கீகாரம் அரசியல் இடையீடு எதுவும் இல்லாமலும் தகுதியானவர்களுக்கும் சென்று சேரும் எண்ணிக்கைகள் மிகவும் சொற்பமானவை. அதுவும் தமிழில்....? தகுதியானவர்களுக்கல்லாமல் போன முறை தமிழில் இந்த விருது போய் சேர்ந்த இடம் குறித்த அதிருப்தியும், அதிக முறை வாங்கிக் குவிக்கிற பக்கத்து மாநில மொழி குறித்த எரிச்சலும் சந்தேகங்களும் இந்த செய்தியால் சற்று மட்டுப்பட்டன.

இந்தச் செய்தியை உடனே யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. 'சூர்யாவும் ஜோதிகாவும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, தெரியுமா'? என்றால் என்னவென்று கேட்க லட்சக் கணக்கான காதுகள் காத்திருக்கும் இந்த அபத்தமான சூழ்நிலையில், இந்த தேவையில்லாத செய்தியை எந்த பைத்தியக்கார காதுகள் கேட்க தயாராயிருக்கும்?

இந்த நிகழ்வை கொண்டாட வேண்டும் போல் இருந்தது. புத்தக குவியிலில் இருந்து தேடி அவரின் 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' சிறுகதையை படிக்கவாரம்பித்தேன். இந்தச் சிறுகதையை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டதடவையாவது படித்திருப்பேன். இந்தச் சிறுகதையின் மேல் எனக்கிருக்கும் தனி பிரேமைக்கு காரணமுண்டு. பத்தாவாவது வகுப்பிலோ அல்லது பன்னிரெண்டாவதிலோ இது எனக்கு தமிழ் இரண்டாம் தாளில் பாடமாக வந்திருக்கிறது. மற்ற பாடங்களை மூக்கால் அழுது கொண்டே மனப்பாடம் செய்யும் வேளையில் நானே விருப்பப்பட்டு படித்த சிறுகதை இரண்டினுள் இதுவும் ஒன்று. மற்றது - புதுமைப்பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது'.

()

எழுத்தாளன் என்பவன் எந்த ஒரு காரணத்திற்காகவும் கூனிக்குறுகாமல் கம்பீரமாக இருக்க வேண்டும் என்கிறதொரு பிம்பம் எனக்குள் எழ காரணமாயிருந்தவர்கள் பாரதியும், ஜெயகாந்தனும். தங்களுடைய கருத்துக்களையும் படைப்புகளையும் சுற்றிவளைத்தோ, வழவழா மற்றும் கொழகொழாவென்றோ சொல்லாமல் (சாருநிவேதிதாவின் மொழியில் சொன்னால், தயிர்வடை Sensibility) கேட்பவனுக்கு சட்டென்று உறைக்கிறாற் போல் ஆணியடித்தாற் போல் சொல்கிற படைப்பாளிகள் தமிழில் சொற்பமே. அவர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன்.

ஐந்தாம் வரை மட்டுமே படித்து நாதாரியாய்ச் சுற்றித்திரிந்து கொண்டிருந்த அந்தச் சிறுவனை, காலம் கம்யூனிஸம் என்கிற வெம்மையான நிழலில் கொண்டுவந்து போட்டது. உலக இலக்கியங்களின் அறிமுகமும், மனித மனங்களைப் பற்றின விசாலமான பார்வையும் அவனுக்கு அங்கேதான் ஏற்பட்டது. வெடிமருந்து குடோனில் ஒரு சிறு பொறிபட்டாற் போல் கம்யூனிஸம் அவன் சுயசிந்தனைகளை வளர்த்தது.

ஒரே ஒரு சிறுகதையின் மூலம் ஒரு சமுதாயத்தையே திரும்பி பார்க்க வைக்க முடியும் என்றால், உண்மையாகச் சொல்கிறேன் - அவன் தான் எழுத்தாளன்; எழுத்தை ஆள்பவன். அக்னிப் பிரவேசம் வெளியான காலத்தில் அந்தச் சிறுகதை பல்வேறு வகையான விமர்சனங்களை சந்தித்தது. தண்ணீர் ஊற்றினால் கற்பு (?!) போனது சரியாகி விடுமா என்றும் அவளை சாகடித்திருக்க வேண்டும் என்றும் பிற்போக்குவாதிகள் தங்கள் அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களை முன்வைத்தார்கள், தங்கள் வீட்டில் அந்த மாதிரியானதொரு அசம்பாவிதம் நடந்தால் எவ்வாறு எதிர்கொள்வோம் என்று யோசிக்காமலேயே அல்லது அவ்வாறு யோசிக்க விரும்பாமலேயே.

விளிம்புநிலை மனிதர்களைப் பற்றின படைப்புகளை படைத்தவர்கள் தமிழில் சொற்பமே. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் என்கிற மிகச்சிறியதொரு பட்டியலது. அதுவரை பெரும்பாலும் பிராமணர்களின் அக்ரகாரத்திலும் சமையலறைகளிலும் சுற்றிக் கொண்டிருந்த தமிழ்ச்சிறுகதையை சேரிக்குள் இழுத்து வந்த துணிச்சல்காரர்களில் ஜெயகாந்தன் முக்கியமானவர். அவர் சிறுகதைகளில் மற்றவர்கள் அணுகத் தயங்குகிற குஷ்டரோகிகளும், பிச்சைக்காரர்களும், விபச்சாரிகளும் மிக யதார்த்தமான உலகில் நடமாடுவார்கள். ஆபாசமாக எழுத்தாளர் என்று விமர்சிப்பவர்களுக்கு அவர் தரும் பதில்: 'நான் இந்தச் சமூகத்தைத்தான் பிரதிபலிக்கிறேன். அது ஆபாசமாகத் தெரிந்தால் அது உங்கள் குறையேயன்றி என் குறையல்ல.'

பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களைப் போல் சிறுகதையில் பிரகாசித்த அளவிற்கு நாவல் வடிவத்தில் ஜெயகாந்தனால் பிரகாசிக்க இயலவில்லை என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். திரைப்படத்துறையை துணிந்து விமர்சிப்பவர் கூட அந்தத் துறையில் நுழைந்து தங்கள் பங்களிப்பை ஆற்ற வேண்டும் என்று முன்வருவது குறைவு. தேசிய விருது போட்டிகளில் சத்யஜித்ரேயின் படங்களுடன் போட்டியிடக்கூடிய அளவிற்கு தரமான திரைப்படங்களை தயாரித்தவர் பிற்பாடு என்ன காரணத்தினாலோ அதிலிருந்து விலகி நின்றது
தமிழச் சினிமாவின் துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.

'சில நேரங்களில் சில மனிதர்கள்' திரைப்படத்தில், சினிமாவின் சம்பிரதாயக் காட்சிகளில் இருந்து மிகவும் விலகி நிற்கிற ஒரு காட்சியைக் கண்டு வியந்து போனேன். சாப்பாட்டு மேசையில் - ரசமோ அல்லது தயிர் சாதமோ- சாப்பிட்டு முடிக்கிற லட்சுமி பிற்பாடு தட்டில் எஞ்சியிருக்கிற அந்த நீரையும் சாதத்தையும் தட்டை மேலே தூக்கி வாயில் கவித்துக் குடிப்பார். நம் வீடுகளில் அன்றாடம் காண்கிற இந்த எளிய காட்சியை, அற்பசங்கைக்கு கூட ஒதுங்காமல் மரங்களை சுற்றி ஆடும் நாயக நாயகிகள் நிறைந்த கவர்ச்சி சினிமாவில் அதுவரை நான் பார்த்ததே இல்லை.

()

ஐந்நூறு, ஆயிரம் என்று எழுதிக்குவிக்கிற கதைத் தொழிலாளர்கள் மத்தியில், தன் புகழ்க்கொடி உயரப் பறக்கும் வேளையில் எழுதுவதை நிறுத்திக் கொண்ட கம்பீரம் ஜெயகாந்தனுக்கு மட்டுமே உரியது. அவரின் அரசியல் நிலைப்பாடுகளின் முரண்பாடுகள், சில சமயங்களில் வாசகர்களிடம் காட்டுகிற தேவையில்லாத முரட்டுத்தனங்கள், சில அதிரடியான விமர்சனங்கள், ஞானபீடவிருது பெற்றதற்காக சமீபத்தில் அவர் ஜெயேந்திரரிடம் ஆசி பெற்றது வரையான அனைத்து நெருடல்களையும் தாண்டி அவர் படைப்புகளை அதிலுள்ள ஆழத்திற்காகவும், விசாலமான பார்வைகளுக்காகவும் நான் விரும்புகிறேன். அவரின் தனிப்பட்ட வழக்கங்களைப் பற்றி வருகிற விமர்சனங்கள், புகார்கள் கூட அவரைப் படிப்பதில் எனக்கேதும் இடைஞ்சல் செய்ததில்லை. அவரின் சிறுகதை ஒன்றின் தலைப்பின் மூலம் சொன்னால் - அந்தரங்கம் புனிதமானது.

முதிர்ச்சியற்ற, அரைவேக்காட்டுத்தனமான விமர்சனங்களால் ஜெயகாந்தன் என்கிற அந்த கம்பீரமான ஆளுமையை யாராலும் சேதப்படுத்தி விடவே முடியாது.

()
என்னை விட மூத்தவர்களை கூட அண்ணா என்றோ சார் என்றோ அழைப்பதை விட அவர்களை பெயர் சொல்லி அழைப்பதையே நான் விரும்புவேன். என்னையும் மற்றவர்கள் அப்படியே அழைப்பதையேயும். (தொழில் முறையில் சில சமயம் இதை பின்பற்ற முடிவதில்லை என்பது யதார்த்தமான உண்மை)
அந்த வகையில்,

வாழ்த்துக்கள் ஜெயகாந்தன்.


suresh kannan

14 comments:

Anonymous said...

Nanraaka ezuthi irukireerkal. Aanaal, novelkalil enaku oru manithan oru veedu oru ulagam, paarisuku po, oru nadikai naadakam parkiraal, sila nerangalil sila manitharkal aakiyana mele sonna varisaiyil mikavum pidikum. intha novelkalil onru kooda illamal, thamilin sirantha novel patiyalai, ilakiyam patriya sariyaana parvai ullavarkalaal, koduka mudiyaathu enbathu en 2 cents. Kurunovelkal jeyakanthanin innoru sirapu. Niraiya kuru novelkalai avai kurunovelkal enru azaikapata kalathil ezuthiyavar. Kurunovelkalil jeyakanthan thota sikarangal matravarkal thoduvatharkaaka innamum kathirukinrana. Anbudan, PK Sivakumar

By: PK Sivakumar

Anonymous said...

Nanraaka ezuthi irukireerkal. Aanaal, novelkalil enaku oru manithan oru veedu oru ulagam, paarisuku po, oru nadikai naadakam parkiraal, sila nerangalil sila manitharkal aakiyana mele sonna varisaiyil mikavum pidikum. intha novelkalil onru kooda illamal, thamilin sirantha novel patiyalai, ilakiyam patriya sariyaana parvai ullavarkalaal, koduka mudiyaathu enbathu en 2 cents. Kurunovelkal jeyakanthanin innoru sirapu. Niraiya kuru novelkalai avai kurunovelkal enru azaikapata kalathil ezuthiyavar. Kurunovelkalil jeyakanthan thota sikarangal matravarkal thoduvatharkaaka innamum kathirukinrana. Anbudan, PK Sivakumar

Anonymous said...

நான் பெரிதாக எதுவும் வாசித்ததில்லை. சென்ற மாதம்தான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' பார்த்தேன். அவ்வளவுதான் எனக்கும் ஜெயகாந்தனுக்கும் உள்ள சம்பந்தம். உங்கள் விவரிப்பு நன்றாக இருக்கிறது. நிறைய வாசிக்கத் தூண்டுகிறது. நன்றி சுரேஷ் கண்ணன்.
-காசி

Anonymous said...

சுரேஷ், தங்கள் உடல் நிலை தற்போது எப்படி இருக்கிறது? தேறி விட்டீர்களா?

வானம்பாடி said...

சுரேஷ், தங்கள் உடல் நிலை தற்போது எப்படி இருக்கிறது? தேறி விட்டீர்களா?

Anonymous said...

பின்னூட்டமளித்த நண்பர்களுக்கு நன்றி.

அவரின் முன்னுரைகளைப் பற்றி எழுத நினைத்து விடுபட்டுப் போனது.

சுதர்சன்: நன்றாக தேறி விட்டேன். உங்கள் அன்பிற்கு நன்றி.

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமளித்த நண்பர்களுக்கு நன்றி.

அவரின் முன்னுரைகளைப் பற்றி எழுத நினைத்து விடுபட்டுப் போனது.

சுதர்சன்: நன்றாக தேறி விட்டேன். உங்கள் அன்பிற்கு நன்றி.

Anonymous said...

உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. நான் உங்கள் ப்ளாக்கை தொடர்ந்து வாசித்து வருகிறேன். எழுத்து நடை சொல்லவர்ற விடயத்தை வாசிக்க வைக்கிறது. ஜெயகாந்தன் என்னுடைய மிகவும் விருப்பத்துக்குரியவர். ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், பாரிசுக்குப் போ, நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற நல்ல நாவல்களையும் எழுதியிருக்கிறார். இப்ப, கோகிலா என்ன செய்து விட்டாள் போன்றவற்றில் ரஸ்சிய எழுத்தாளர்களின் குறிப்பாக அன்ரன் சேக்கோவின் பாதிப்பு இருப்பதாகத் தோன்றுகிறது. அதைப்பற்றி எழுதவேண்டும் எ;னறு இருக்கிறேன். ஜெயகாந்தன் புறக்கணிக்க முடியாத ஒரு ஆளுமை என்பதில் ஜயமில்லை அவரது சிலநேரங்களில் சில மனிதர்கள் பெண்களாலும் விமர்சிக்கப் பட்டது அதாவது ஏன் அந்தப் பெண்ணை குளிப்பாட்ட வேண்டும் அவள் அப்போ அழுக்கானவளா என்று. பல விமர்சனங்கள் எடுத்துக் கொள்ளப்படவேண்டியவை தான் பின்பு அவருடைய நடவடிக்கைகள் எப்படியிருந்த போதும் ஜெயகாந்தனுடைய படைப்புக்களையோ ஆளுமையையோ புறந்தள்ள முடியாது என்று தான் தோன்றுகிறது.

Anonymous said...

உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. நான் உங்கள் ப்ளாக்கை தொடர்ந்து வாசித்து வருகிறேன். எழுத்து நடை சொல்லவர்ற விடயத்தை வாசிக்க வைக்கிறது. ஜெயகாந்தன் என்னுடைய மிகவும் விருப்பத்துக்குரியவர். ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், பாரிசுக்குப் போ, நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற நல்ல நாவல்களையும் எழுதியிருக்கிறார். இப்ப, கோகிலா என்ன செய்து விட்டாள் போன்றவற்றில் ரஸ்சிய எழுத்தாளர்களின் குறிப்பாக அன்ரன் சேக்கோவின் பாதிப்பு இருப்பதாகத் தோன்றுகிறது. அதைப்பற்றி எழுதவேண்டும் எ;னறு இருக்கிறேன். ஜெயகாந்தன் புறக்கணிக்க முடியாத ஒரு ஆளுமை என்பதில் ஜயமில்லை அவரது சிலநேரங்களில் சில மனிதர்கள் பெண்களாலும் விமர்சிக்கப் பட்டது அதாவது ஏன் அந்தப் பெண்ணை குளிப்பாட்ட வேண்டும் அவள் அப்போ அழுக்கானவளா என்று. பல விமர்சனங்கள் எடுத்துக் கொள்ளப்படவேண்டியவை தான் பின்பு அவருடைய நடவடிக்கைகள் எப்படியிருந்த போதும் ஜெயகாந்தனுடைய படைப்புக்களையோ ஆளுமையையோ புறந்தள்ள முடியாது என்று தான் தோன்றுகிறது
-thanya

Anonymous said...

Attractive post.. photo also!

By: ramki

மயிலாடுதுறை சிவா said...

அன்பு நண்பர் சுரேசுக்கு
தங்கள் உடல் நலம் எப்படி உள்ளது?
ஜெயகாந்தன் பற்றிய தங்கள் பதிவு மிக அருமை.
தங்கள் புகைப் படத்தை அருணின் வலைப் பூவில் பார்த்தேன்.
மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

நல்ல பதிவு.
உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்றேன். இப்பதிவு மிகவும் நன்று.
நன்றிகள்.

Anonymous said...

அப்படி அந்தப் பெண்ணைக் குளிப்பாட்டாமல் அந்தத் தாய் அவளைக் காட்டிக் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றக் கற்பனைதான் "சில நேரங்களில் சில மனிதர்கள்". இக்கதையில் தான் ஏன் கங்காவுக்கு அவ்வாறு செய்யவில்லை என்றுக் காட்டிக் கொடுத்த அந்தத் தாயே யோசிப்பது திரைப்படத்தில் அருமையாகக் காட்டப்பட்டிருக்கும்.
இதன் தொடர்ச்சியான "கங்கை எங்கே போகிறாள்" ஒரு சொதப்பலாகத்தான் எனக்குப் பட்டது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

The above comments are mine.
Dondu Raghavan