Wednesday, December 30, 2015

வேதாளம் - மறுஉருவாக்க மசாலா

 

ரஜினிகாந்த் நடித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 1995-ல் வெளிவந்த 'பாட்சா' திரைப்படம் தமிழக சூழலில் பொதுவாக இரு விதங்களில் முக்கியமானது. ஒன்று, தேங்கிப் போயிருந்த தமிழ் மசாலா சினிமாக்களின் திரைக்கதையில் அத்திரைப்படம் புது ரத்தத்தை பாய்ச்சியது. இன்னொன்று, இன்றைக்கு இந்த விஷயம் ஆறிப் போன பஜ்ஜியைப் போல ஆகி விட்டாலும் ரஜினி 'அரசியலுக்கு வருவாரா' என்கிற எதிர்பார்ப்பு மீதான நெடும் உரையாடலை இந்த திரைப்படத்தின்  வெற்றி விழா நிகழ்வு சர்ச்சை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் ரஜினியின் வளர்ச்சிப்பாதையிலும் இத்திரைப்படம் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இத்திரைப்படம் வெளிவந்து 20 வருடங்களாகியும் இன்றும் கூட தனது வசீகரத்தை இழக்காமலிருப்பதே இதன் சிறப்பிற்கு உதாரணம். மாற்று சினிமா ரசிகர்கள், வெகுசன திரைப்படங்களை அசூயையுடன் பார்த்தாலும் ஒரு சுவாரசியமான, விறுவிறுப்பான மசாலா திரைப்படத்தை உருவாக்குவது அத்தனையொன்றும் எளிதான விஷயமில்லை  என்பதற்கான கச்சிதமான உதாரணம் 'பாட்சா'.

பாட்சா திரைப்படத்தின் திரைக்கதை, அது பெற்ற மகத்தான வெற்றி காரணமாக அதற்குப் பின்பு வந்த பல தமிழ் திரைப்படங்களிலும் எதிரொலித்தது. ஒரு சாதாரண, அப்பாவியான நபருக்குப் பின்னேயுள்ள அறியப்படாத இன்னொரு அதிசாகச முகம் ஓர் உச்சக்கட்ட தருணத்தில் பார்வையாளர்களுக்கு வெளிப்படுவது என்பது இதன் அடிப்படை. சரத்குமார் நடித்த 'ஏய்' என்கிற திரைப்படம் ஏறத்தாழ பாட்சாவின் திரைக்கதையை அப்படியே நகலெடுத்தது. இயக்குநர் முருகதாஸ் உருவாக்கிய ரமணா, கஜினி, முதற்கொண்டு  ஷங்கரின் இந்தியன், கமல்ஹாசனின் சமீபத்திய விஸ்வரூபம் வரை  பல திரைப்படங்களில் இந்த திரைக்கதையின் சிதறலான கூறுகளை காண முடியும். இந்த வகையில் பாட்சாவை இதற்கான முன்னோடியாக சொல்லலாம். தமிழ் மாத்திரமல்ல, சில பல தென்னிந்திய திரைப்படங்களிலும் இத்திரைக்கதையின் பாதிப்பு இருந்தது. 1999-ல் வெளியாகிய மோகன்லால் நடித்து சிபிமலயில் இயக்கிய 'உஸ்தாத்' என்கிற மலையாள திரைப்படமும் ஏறத்தாழ இந்த திரைக்கதையில்தான் அமைந்திருந்தது.


'ஹம்' என்கிற இந்தி திரைப்படத்திற்காக அமிதாப் பச்சனுடன் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கும் போது தம்பிக்காக அண்ணன் காவல்துறை பணியை கோரும் காட்சியொன்று விவாதிக்கப்பட்டு  பிறகு அது திரைக்கதைக்கு பொருத்தமில்லாத காரணத்தினால் நிராகரிக்கப்பட்டது. இந்தக் காட்சிக் கோர்வையை நினைவில் வைத்திருந்த ரஜினிகாந்த் இதை பின்னர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் விவரிக்க அதிலிருந்து பிறந்தது 'பாட்சா'. இதுவொரு cult அந்தஸ்து கொண்ட பிரம்மாண்டமான படைப்பாக ஆகுமென்று அப்போது எவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

***

இத்தனைக்கும் பாட்சா திரைப்படம் அபத்தமான தர்க்கப் பிழைகள்  கொண்ட மசாலா திரைப்படம். மாணிக் பாட்சாவாக இருக்கும் போது வயதான தோற்றத்தில் இருக்கும் ரஜினி, அதற்குப் பிறகான தலைமறைவு காலக்கட்டத்தில் அதற்கு எதிராக அதியிளமையான ஒப்பனையில் இருப்பார். இன்னொரு காட்சியில், வில்லன் ரகுவரனுக்கு ஆதரவாக இருக்கும் மாஃபியா ஆட்களை தன்னுடைய தரப்பிற்கு ஆதரவாக இழுக்க அவர்களை ஒருங்கிணைத்து பேசும் கூட்டத்தில் 'என்னை நம்பி வாங்க..ஆண்டவன் காப்பாத்துவான்' என்பார். பயங்கரமான சமூக விரோதிகளான டான்கள் ஏதோ பஜனைக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மாதிரி பரவசத்துடன் அவருடைய பின்னால் செல்வார்கள். இது போன்ற அபத்த நகைச்சுவைகளெல்லாம் படத்தைப் பார்க்கும் போது நாம்  உணராதபடிக்கு செய்து இதையொரு முக்கியமான வெகுஜன திரைப்படமாக்கியது அதன் விறுவிறுப்பான திரைக்கதையும் ரஜினியின் உடல்மொழியின் வசீகரமும்தான். ரகுவரன் என்கிற திறமையான நடிகர் இதன் வில்லனாக நடித்தது ஒரு கூடுதல் காரணம். தேவாவின் ரகளையான பின்னணி இசையும் பாலகுமாரனின் விறுவிறுப்பான வசனமும்.

பாட்சாவின் முதல்பாதி மட்டுமே கூடுதலான சுவாரசியம் கொண்டது. ஒரு சாதாரண ஆட்டோ டிரைவரின் பின்னேயுள்ள மர்மத்தை அறியும் ஆர்வம் பெருகும்படியாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அந்தக் காட்சிகளை அமைத்திருப்பார். ஆனால் இந்த மர்மத்தைக்  கடந்த பிற்பாதி காட்சிகள் அந்த சுவாரசியத்தை அந்தளவிற்கு காப்பாற்ற முடியாத வழக்கமான மசாலா படங்களின் சலிப்புடன் நகர்வதை காண முடியும்.

சாகச மனிதனின் தலைமறைவுக் காலக்கட்டத்தை கொண்டிருக்கும் கதைகூறல் முறை என்பது இந்திய மரபில் ஏற்கெனவே உள்ளதுதான். மகாபாரதத்தில் பாண்டவர்கள்  சூதாட்டத்தில் தோற்றபிறகு பன்னிரெண்டு ஆண்டுகள் காட்டிலும் ஓராண்டு யாரும் அறியாமலும் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது.. ஆரண்யக பருவமும் விராட பருவமும் இந்த தலைமறைவு வாழ்க்கை தொடர்பான சம்பவங்களை விவரிக்கின்றன. பிறகு நிகழ்வது குருசேஷத்திரப் போர்.


பாட்சாவின் திரைக்கதையை வைத்து பல மசாலா தோசைகளை புரட்டிப் புரட்டிப் போட்ட தமிழ் திரைப்படங்களின் வரிசையில் இணைந்துள்ளது சமீபத்தில் வெளியான அஜித் நடித்த 'வேதாளம்'. எஸ்.பி. முத்துராமன் இயக்கிய 'முரட்டுக்காளை'யை சற்றே உருமாற்றி 'வீரம்' என்கிற திரைப்படமாக முன்னர் எடுத்த இயக்குநர் சிவா இப்போது 'பாட்சா'வை சில மாற்றங்களுடன் வேதாளமாக உருவாக்கியிருக்கிறார்.

தன்னுடைய தங்கையின் கல்விக்காக கொல்கத்தா வரும் அஜித், சராசரியான நபராகவும் அப்பாவியாகவும் முதலில் சித்தரிக்கப்படுகிறார். அங்கு டாக்சி டிரைவராக பணிபுரிகிறார். ஆனால் அவருக்குப் பின்னால் இன்னொரு பயங்கரமான சாகச முகம் இருக்கிறது. தன் தங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்த நினைக்கும் சர்வதேச பயங்கரவாத சகோதரர்களை கொன்று நீதியையும் பாசத்தையும் நிலைநாட்டுகிறார்.

பாட்சாவிற்கும் வேதாளத்திற்கும் இடையே சில சாதகமான மற்றும் பாதகமான வேறுபாடுகள் உள்ளன. பாட்சாவின் முதல் பகுதியில் ரஜினியின் கடந்த கால அடையாளம் சில நிமிடங்களில் மறைமுகமாக வெளிப்படும் காட்சிகள் பார்வையாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையூட்டும் படி உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் வேதாளத்தில் அந்த மேஜிக் நிகழவில்லை.

எப்படி எம்.ஜி.ஆர்  தன்னுடைய எல்லா திரைப்படங்களிலும் பரிசுத்தமான நல்ல ஆசாமியாக இருக்கிறாரோ அப்படியே ரஜினியும் டானாக இருந்தாலும் எல்லோர்க்கும் உதவும் நல்ல டானாக இருக்கிறார். முன்பே குறிப்பிட்டபடி 'ஆண்டவன் காப்பாற்றுவான்' என்கிற ஆத்திகவாத பக்திபூர்வமான டான். இத்தனைக்கும் தன்னுடைய திரைப்பயணத்தை வெற்றிகரமான வில்லனாக துவங்கியவர் ரஜினி. ஆனால் நாயகனாக நிலைபெற்ற பிறகு எம்.ஜி.ஆரைப் போலவே தன்னுடைய கதாபாத்திரங்கள் எவ்வித எதிர்மறையான குணாதிசயமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார். (சந்திரமுகி வேட்டையன் போன்றவை விதிவிலக்கு). தன்னுடைய நண்பனை கொலை செய்த ஒரு டானை பழிவாங்கும் காரணத்திற்காகவே தானும் ஒரு டான்  ஆகிறார். மக்களுக்கு உதவுகிறார். ரகுவரன் தரப்பு ஆட்களிடம் "நீங்கல்லாம் மனச்சாட்சியில்லாம வேலை செஞ்சிட்டு இருக்கீங்க" என்கிறார். டானாகவும் இருந்து கொண்டு மனச்சாட்சியோடும் இயங்குவது நாயக தன்மையின் ஒரு விநோதமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு கதாபாத்திரத்தின் வடிவமைப்பு முழுக்க நல்லியல்புடன் எவ்வித யதார்த்தமும் அல்லாமல் நாயக பிம்பங்களை ஊதிப் பெருக்கவும் அதை தக்க வைத்துக் கொள்ளவுமே உருவாக்கப்படுவதின் அபத்தங்கள் இவை.

ஆனால் இந்த நோக்கில் வேதாளத்தின் திரைக்கதை இதிலிருந்து ஆறுதலாக மாறுபடுகிறது. பிற்பாதியில் அஜித்தின் இன்னொரு முகம் வெளிப்படும் போது அவர் பணத்திற்காக எதையும் செய்யும் நகைச்சுவைக் கொடூரனாக இருக்கிறார். இந்தப் பகுதியில் வரும் காட்சிகள் சற்று சுவாரசியமாக இருக்கின்றன. பின்பு வரும் நிகழும் நாடகத்தனமான சென்டிமென்ட் காட்சிகளின் மூலம் 'தத்தெடுத்த' தங்கையை பாதுகாக்கும் பாசமிகு அண்ணனாக மாறி இது தமிழ் சினிமாதான் என்பதை நிரூபிக்கிறார்கள். அப்பாவித்தனமான முகத்தை சட்டென்று வில்லத்தனம் கொண்டதாக மாற்றுவதை அஜித் வாலி, வில்லன், மங்காத்தா என்று இதிலும் தொடர்கிறார். இது பார்வையாளர்களைக் கவர்ந்தாலும் தொடர்ந்து இந்த வண்டி ஓடுவது கடினமானது.

பாட்சாவில் ஆட்டோ டிரைவராக இருக்கும் நபர், ஒரு கணத்திற்குப் பிறகு உள்ளூர் ரவுடிகளை தனியாளாக அடித்து துவம்சம் செய்வதைக் கூட ஒருவாறு சகித்து நம்பி விட முடிகிறது. ஆனால் வேதாளத்தில் அதிநுட்ப பாதுகாப்பு சமாச்சாரங்களுடனும் ஆயுதங்களுடனும் இருக்கும் வில்லனையும் அவரது ஆட்களையும் ஒற்றை ஆளாக அஜித் சண்டையிட்டு வெல்வது போன்ற பூச்சுற்றல் காட்சிகளை இன்னமும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்று தெரியவில்லை.

தன்னுடைய வயதிற்கு ஏற்ற நரைத்த தலைமுடியோடு  ஒப்பனையில்லாமல் நடிப்பது ஒருவகையில் பாராட்டத்தக்கதுதான் என்றாலும் நாயகிகளையும் திரைக்கதையையும் தனது வயதுக்கேற்ற வகையில் அஜித் தேர்வு செய்தால் அது மிகவும் பாராட்டத்தக்க  செயலாக இருக்கும்.  'பெண்கள் இப்போதுதான் வெளியே வரத் துவங்கியிருக்கிறார்கள், கல்வி கற்கிறார்கள், காதல் என்ற பெயரில் அவர்களை துரத்தி துன்புறுத்தி வற்புறுத்தி காதலைப் பிடுங்குவது ஆண்மைக்கு அழகல்ல' என்பது இத்திரைப்படத்தில் அஜித் சொல்லும் ஒரு செய்தி, நாயகன் என்றால் உபதேசம் செய்ய வேண்டும் என்கிற சம்பிதாயத்திற்காகத்தான் இது என்றாலும் 'தன்னைக் காதலிக்காத பெண்கள் மீது  இளைஞர்கள் ஆசிட் அடிக்கும்' செய்திகள் பெருகிவரும் இன்றைய சூழலில் இந்தச்  செய்தி முக்கியமானது.  நடிகரின் நடை,உடை,பாவனைகளை கண்மூடித்தனமாக பின்பற்றும்  ரசிகர்கள் இந்த செய்தியிலுள்ள நியாயத்தையும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

***

பாட்சா திரைப்படத்தின் வெற்றிக்கு எவ்வாறு ரஜினியின் நாயக பிம்பம்  அடிப்படைத் தூணாக உதவியதோ, அப்படியே வேதாளம் திரைப்படத்தின் வணிக வெற்றிக்கும் அஜித்தின் பிம்பம் உதவியிருக்கிறது. இயல்பாக உருவாகி வரும் கதைக்காக அல்லாமல் நாயகர்களின் பிம்பங்களுக்காக கலந்து கட்டி உருவாக்கப்படும்  இம்மாதிரியான மசாலா திரைக்கதைகள் வெற்றி பெறுவது ஒருவகையில் நம்முடைய கலாசார பலவீனத்தையே சுட்டிக் காட்டுகிறது. மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா போன்ற இயக்குநர்கள்  எண்பதுகளில் மாற்று சினிமா முயற்சிகளை உருவாக்கி ஒரு புதிய அலையை தமிழ் சினிமாவின் போக்கில் உருவாக்க முயன்ற போது சகலகலாவல்லவன், முரட்டுக்காளை போன்ற வணிக மசாலா திரைப்படங்களின் வெற்றி அந்தப் போக்கை குரூரமாக கலைத்துப் போட்டது.

நுட்ப வளர்ச்சியின் மூலம் உலக சினிமாவை அணுகுவது எளிதாகி விட்ட இன்றைய காலக்கட்டத்தில் அவற்றை உள்ளூர் சினிமாவோடு தன்னிச்சையாக ஒப்பிட்டு அதிருப்தி அடையும் பார்வையாளர்களின் மனநிலையை சமகால புதிய அலை இயக்குநர்களும் புரிந்து கொண்டு வழக்கமான ஃபார்முலா சினிமாவாக அல்லாமல் புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவைகள் வெற்றியையும் பெறுகின்றன. இந்தப் போக்கை இது போன்ற மசாலா திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிகள் குலைத்து விடுகின்றன என்பதுதான் வேதனையான விஷயம். படைப்பாளர்களைத் தவிர இதற்குத் துணை போகும் பார்வையாளர்களையும்தான் நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வெகுஜன மனோபாவத்திற்கு தீனி போடும் மசாலா படங்களே தேவையில்லை என்பதல்ல இதன் பொருள். முன்னரே குறிப்பிட்ட படி ஒரு சுவாரசியமான, விறுவிறுப்பான மசாலா சினிமாவை உருவாக்குவது அத்தனை எளிதல்ல. ஆனால் அரைத்த மசாலாக்களையே மாற்றி மாற்றிப் போட்டு அரைத்து ' ஆக்சுவலி.. இது ஒரு வித்தியாசமான ஸ்கிரிப்ட்' என்று பார்வையாளர்களை  தொடர்ந்து ஏமாற்றிக்  கொண்டிருப்பதுதான்  எரிச்சலைத் தருகிறது. இத்தனை நீண்ட கால தமிழ் சினிமா வரலாற்றின் இதுவரையான அத்தனை மசாலா சினிமாக்களின் திரைக்கதைகளையும் ஒரு பறவைப் பார்வையில் பார்த்தால் அவற்றின் தேய்வழக்கு அபத்தங்களை மிக எளிதாக வகைப்படுத்தி விட முடியும். அடுத்து வரப்போகும் காட்சிகளை ஒரு சராசரி பார்வையாளர் கூட எளிதில் யூகித்து விடுவார்.

வெகுசன திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர்கள் பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தையும் கணக்கில் கொண்டு புதிது புதிதான வகை மாதிரிகளை முயன்று பார்ப்பது நல்லது. ஒரு திரைப்படம் வணிகரீதியான வெற்றியடைவதை அது வெளியாகும் சமயத்தின் அந்த நேரத்து சூழல்களும் போக்குகளும் தீர்மானிக்கின்றன. எதிர்பாராமல் ஒரு சாதாரண படம் பலத்த வெற்றியை அடைவது சூதாட்டத்தில் தற்செயலாக வெல்வது போன்றதே. ஆனால் ஒரு திறமையான இயக்குநரால் மெனக்கெட்டு உருவாக்கப்படும் வெகுசன திரைப்படமானது பெரும்பாலும் தோல்வியைத் தழுவுவதில்லை. புதுமையை ஆவலுடன் எதிர்பார்க்கும் பார்வையாளர்கள் இந்த முயற்சிகளை கைவிடுவதில்லை.

***

வேதாளம் திரைப்படத்தின் முதல் கட்ட வசூல் நிலவரம் பிரம்மாண்ட அளவில் அமைந்திருப்பதைப் பற்றி அந்த நடிகரின் ரசிகர்கள் இணையத்தில் சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள். மட்டுமல்லாமல் போட்டி நடிகரின் திரைப்பட வசூல் விவரத்தை இதனுடன் ஒப்பிட்டு கிண்டலடிக்கிறார்கள்.  எதிர்தரப்பிலிருந்தும் அவருடைய அபிமான நடிகரின் பழைய திரைப்படங்களின் வசூல் விவரங்களும் வெற்றிகளும் வசைகளும் பதிலுக்கு சரமாரியாக மழை போல் பொழிகின்றன.  தமிழ் இணையத்தில் பெரும்பாலான உரையாடல்களும் வம்புச் செய்திகளும் கிசுகிசுக்களும் தமிழ் சினிமாவையொட்டியே அமைந்திருக்கின்றன. ரசிகர்கள்தான் இப்படியென்றால் சம்பந்தப்பட்ட நடிகர்களும் தங்களின்  திரைப்படங்களில் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்ளும், சவால் விட்டுக் கொள்ளும், கிண்டலடிக்கும் பாவனைகளை வசனங்களிலும் பாடல் வரிகளிலும் உடல்மொழியிலும் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். இந்தப் பாவனைகள் ரசிகர்களின் மோதல்களுக்கு மேலதிக தூண்டுதல்களாக இருக்கின்றன.

இது போன்ற ரசிக மனோபாவ மோதல்கள் பாகவதர்x சின்னப்பா காலத்திலிருந்தே உண்டு. இது துவக்கத்தில் சம்பந்தப்படட நடிகரின் மீது எழுந்த அபிமானத்தின் மீது தன்னிச்சையாக உருவானதாக இருந்தாலும் பிறகு இதிலுள்ள வணிக வாய்ப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நடிகர்களின் தரப்பு, பிழைப்புவாத ஊடகங்கள் என்று திரையுலக வணிகத்தைச் சுற்றி இயங்குபவர்கள் இது போன்ற மோதல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இதை  உணர முடியாத அறியாமையில் மூழ்கியிருக்கும் பாமர ரசிகர்கள் இந்த 'ஊக்குவிக்கப்படும்' மோதல்களை அறியாமல் தங்களுக்குள் அடித்துக் கொண்டு தங்கள் தரப்பை நிரூபிப்பதற்காக சவால் விட்டு அதற்காக எதையும் செலவு செய்யும் அப்பாவிகளாக இருக்கிறார்கள். நடிகர்களின் தரப்பும் அதைச் சார்ந்த வணிகவுலகமும் எதிர்பார்ப்பது இதைத்தான்.

ஒரு துறையில் ஒரேயொரு பெரிய நபர் மட்டுமே செல்வாக்குடன் தொடர்ச்சியான வெற்றியுடன் இயங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அங்கேயொரு சலிப்பான சூழல் இருக்கும். அந்த வணிகம் தேங்கி தோற்றுப் போவதற்கு அதுவேயொரு காரணமாக கூட இருக்கலாம். மாறாக அவருக்கொரு வலுவான எதிர் தரப்பு ஒன்று இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகும்? இருவருக்குமான போட்டி ஆரம்பமாகும். இருவர் தரப்பிலும் இணைந்து கொள்ள நபர்கள் வந்து சேருவார்கள். இந்த சூழலை அதிகம் பேர் கவனிக்கும் வாய்ப்பு ஏற்படும். இதிலுள்ள ஆதாயம் கருதி இணைபவர்களைத் தவிர விசுவாச மனோபாவத்தோடு வந்து இணையும் அப்பாவிகளே அதிகம். இவர்களே இந்த சினிமா ரசிகர்கள். வலுவான வில்லனின் மூலம் நாயகனின் பராக்கிரமம் அதிகமாக எடுபடுவது மாதிரியான சூட்சுமம் இது.

ரசிகர்களுக்கிடையே ஏற்படும் இந்த மோதலை சில பிரபல சினிமா நடிகர்கள் கள்ள மெளனத்தோடு வேடிக்கை பார்ப்பார்கள். உதட்டளவில் அவர்களுக்கு உபதேசம் செய்தாலும் இந்த மோதல் நடவடிக்கைகள் தொடர்வதற்கான மறைமுக வேலைகளை  இவர்கள்தான் செய்வார்கள். ஒரு நடிகர் வளர்ச்சி நிலையில் இருக்கும் போது அவர்களின் பட வெளியீட்டின் போது  பேனர் கட்டுவது, திரையரங்குகளில் ரசிகர்களின் போர்வையில் கூக்குரலிடுவது எல்லாம் நடிகர் தரப்பு ஏற்பாடு செய்த ஆட்களே. இதிலுள்ள வசீகரத்தைப் பார்த்து பின்னர் அப்பாவி ரசிகர்கள் தாமாக  ஒன்று கூடுவார்கள். போட்டி ரசிகரின் படத்தை விட தம்முடைய தரப்பு நடிகரின் படம் ஓட வேண்டும் என்பதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பார்கள். இது தொடர்பான அசட்டுப் பெருமைகளோடு தங்களின் உரையாடல்களை அமைத்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு மனிதனின் அந்தரங்கமான விழைவும் அவனுக்கான ஒரு பிரத்யேக அடையாளத்தை தேடுவதாகத்தான் இருக்கும். அதை தன்னுடைய சுயஉழைப்பால் அடைய முடியாதவர்கள்  நடிகர்களின் ரசிகர்கள் என்ற பெயரில் இரவல் அடையாளங்களின் மூலம் இந்த அடையாளத்தை அடைய முயல்வார்கள். அதுவே சினிமா ரசிகர் மன்றங்கள் எந்த காலத்திற்கும் தொடர்வதற்கான ஆதார சுருதி. தங்களின் அபிமான நடிகர்கள் அரசியலில் நுழைவதின் மூலம் அதற்கான ஆதாயத்தை பெற முடியுமா என்பதும் இந்த ரசிகர் மன்ற தலைவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

அது எம்.ஜி.ஆர்xசிவாஜி காலமாக இருந்தாலும் சரி, ரஜினிxகமல் காலமாக இருந்தாலும் சரி, சமகால விஜய் xஅஜித் காலமாக இருந்தாலும் சரி. சினிமாவிற்கு வெளியேயும் உள்ளேயும் இவர்களுக்கு இடையே காணப்படும் மோதல் போக்குகளில், வசனங்களில், உடல்மொழிகளில்  இவை  பெரும்பாலும் திட்டமிட்டு 'உருவாக்கப்பட்ட' பாவனையே. இந்த மோதலி்ல் சிலவை தொழில் சார்ந்த பொறாமைகளில் எழுவது என்றாலும்  அவைகளில் பெரும்பான்மையாக இருப்பது வணிகம் தொடர்பான 'உருவாக்கப்பட்ட' சந்தர்ப்பவாத மோதல்களே.

திரைப்படம் என்பது சமூகக் கருத்துக்களை கடத்துவதற்கான வலிமையான ஊடகம் என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அதனுடைய முதன்மையான அடிப்படை என்பது பொழுதுபோக்கே. சினிமாவை இந்த அளவில் மட்டும் அணுகாமல் நிழலிற்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் காணத் தெரியாமல் சினிமாவில் அதிநாயக பிம்பங்களாக தோன்றுபவர்கள் உண்மையாகவே அப்படி இருப்பார்கள் என நம்பும் அப்பாவி ரசிகர் கூட்டம் இருக்கும் வரைக்கும் அபத்தமான மசாலா சினிமாக்களுக்கு அழிவேயிருக்காது.

அம்ருதா - டிசம்பர் 2015-ல் வெளியான கட்டுரை (நன்றி: அம்ருதா)

suresh kannan