Monday, February 16, 2015

நிர்வாணத்தின் கண்களும் (PK) பழிவாங்குதலின் வக்கிரமும் (ஐ)


முதலில் ஒரு பழைய ஜென் கதையை நினைவுகூரலாம்.  பெளத்தப் பேராசிரியர் ஒருவர் ஜென் குருவிடம் ஜென் பற்றி அறிய வருகிறார். குரு விளக்கத் துவங்கும் எந்தவொரு விஷயத்தையும் பேராசிரியர் இடைமறித்து அது தொடர்பாக தான் அறிந்தவற்றிலிருந்து ஏதாவது சொல்லத் துவங்குகிறார்.

சில நிமிடங்களுக்குப் பின் ஜென் குரு பேராசிரியரை தேநீர் அருந்த அழைக்கிறார். பேராசிரியரின் கோப்பையில் தேநீரை ஊற்றத் துவங்குகிறார் குரு. கோப்பை நிறைந்தும் கூட தேநீரை ஊற்றிக் கொண்டேயிருக்கிறார். பதறிப் போகும் பேராசிரியர், கோப்பை நிறைந்து வழிகிறதே, உங்களுக்குத் தெரியவில்லையா?" என்கிறார். குரு புன்னகையுடன், வெற்றுக் கோப்பையில்தான் தேநீரை ஊற்ற முடியும். ஏற்கெனவே நிறைந்திருக்கும் கோப்பையில் அல்ல. போலவே ஏற்கெனவே அறியப்பட்ட விஷயங்களால் நிறைந்திருக்கும் உங்கள் மனதில் புதிதாக எதையும் நான் இட இயலாது. எனவே வெற்றுக் கோப்பையுடன் வாருங்கள்' என்று பேராசிரியரை திருப்பி அனுப்பி விடுகிறார்.

புறவயமாக எந்தவொரு கற்பித அடையாளங்களும் அற்று  நிர்வாணமாக நாம் பிறப்பதைப் போலவே அகவயமாகவும் ஒரு தூய வெற்றுக் கோப்பையை போலத்தான் நாம் பிறக்கிறோம். ஆனால் சுற்றியுள்ள சமூகம் அவர்களுக்குள் ஏற்கெனவே நிரப்பப்பட்ட கருத்துக்களையும் எண்ணங்களையும் வழக்கங்களையும் அப்படியே இந்தக் கோப்பைக்குள் போடுகிறது. நாமும் அந்த எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொண்டு எவ்வித புதிய கருத்துக்களையும் சேர்க்க முடியாத வகையில் நிரப்பப்பட்ட கோப்பைகளின் வரிசையில் இணைந்து விடுகிறோம். பொதுவாக இந்த சுழற்சிதான் தொடர்ந்து நிகழ்கிறது. இதற்கு மாறாக நாம்அறிந்த எல்லாவற்றையும் உதறி விட்டு மீண்டும் பிறந்த ஒரு குழந்தையின் பார்வையில் எல்லாவற்றையும் பரிசீலனை செய்து பார்த்தால் நம்முடைய அதுவரையான நம்பிக்கைகளில் உள்ள பொய்களும் அபத்தங்களும்  வேறு வேறு பரிமாணங்களில் தெரியும். நிரப்பப்பட்ட கோப்பை வரிசையிலிருந்து விலகுபவர்கள்தான் பகுத்தறிவுவாதிகளாகவும் கலைஞர்களாகவும் அறிஞர்களாகவும் ஞானிகளாகவும் ஆகிறார்கள்.

ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் வெளிவந்த PK திரைப்படம் இது போன்றதொரு அனுபவத்தைத்தான் பார்வையாளர்களுக்கு தருகிறது. அயல்கிரக மனிதன் ஒருவன் (அமீர்கான்) பூமியைப் பற்றி ஆராய்வதற்காக இங்கு வருகிறான். ராஜஸ்தானில் அவனுடைய விண்கலம் வந்திறங்குகிறது. வந்தவுடனேயே அவனுடைய ரிமோட் கண்ட்ரோல் வழிப்பறி செய்யப்படுகிறது. அது இல்லாமல் அவனால் திரும்பிச் செல்ல முடியாது. அதைத் தேடி அலையும் போது இந்தியாவின் பன்முக கலாச்சாரங்களும் வழக்கங்களும் மதங்களும் வழிபாட்டுமுறைகளும் நம்பிக்கைகளும் அவனைக் குழப்புகின்றன. அவனுடைய உலகத்தில் அவையில்லை. எனவே தன்னுடைய  நிர்வாணமான பார்வையில் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்கிறான். அவனுடைய கேள்விகள் மேற்பார்வைக்கு அப்பாவித்தனமானவையாகயும் முட்டாள்தனமாகவும் தோன்றினாலும் நம்முடைய பல்லாண்டு கால நம்பிக்கைகளின் அடிப்படைகளைக் குலைப்பதாக இருக்கின்றன. அவனுடைய பாமரத்தனமான கேள்விகளின் மூலம் நமது ஆன்மீக முரண்களுக்கு பதில் கிடைக்கப் பெறுகிறோம் என்பதை உண்மை. பீகே என்றால் குடித்திருக்கிறாயா? என்று அர்த்தம். மதுவருந்திய சமயத்தில்தான் ஒருவன் மிக நேர்மையாகவும் உண்மை பேசுகிறவனாகவும் இருக்கிறான் என்பதால் இந்த தலைப்பு மிக பொருத்தமாய் அமைந்திருக்கிறது. மிக ரகளையான நையாண்டி காட்சிகளுடனும் வசனங்களுடன் நகர்கிற இத்திரைப்படம் பார்வையாளர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த சிரிப்புகளின் இடையில் அதுவரையிலான நம்முடைய மத அடிப்படையிலான ஆதார நம்பிக்கைகள் சரிந்து விழுகின்றன என்பதை மெல்ல  உணர்கிறோம்.

பொதுவாக ராஜ்குமார் ஹிரானியின் திரைப்படங்கள் ஒரு சராசரியான இந்திய திரைப்படத்தின் வெகுஜன கேளிக்கைக்கான கட்டமைப்பில் அமைந்திருந்தாலும் உறுத்தாத நகைச்சுவையுடன் சமூகத்திற்கான ஒரு செய்தியை உணர்த்துகிற பாவனையையும் கொண்டிருக்கும். முன்னாபாய் எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட அவரது முதல் இரண்டு திரைப்படங்களும் வன்முறைக்கு எதிரான, அன்பு சார்ந்த  காந்திய சிந்தனைகளை சமகால நவீன சமூகம் எப்படி தமக்குள் உள்வாங்கிக் கொள்வது என்பதைப் பற்றி பேசியது. 3  IDIOTS  புத்தகக் கல்விக்கும் நடைமுறை அனுபவ அறிவிற்குமான இடைவெளியையொட்டி கல்வித்துறையின் அபத்தங்களைப் பற்றி பேசியது.  PK திரைப்படம் தனது அழுத்தமான நையாண்டி வசனங்கள் மற்றும் காட்சிகளின்  மூலம் இந்தியச் சமூகத்தின் மதம் சார்ந்த உணர்வுகளிலுள்ள முரண்களையும் மூடநம்பிக்கைகளையும் விமர்சிக்கிறது.

புண்படுத்தாத நகைச்சுவையின் மூலம் எத்தனை தீவிரமான விஷயங்களையும் விமர்சனங்களையும் சமூக எதிர்ப்பின்றி சிநேகமான தொனியில் வலிமையான ஊடகமான சினிமாவில் எளிதில் சொல்லி விட முடியும் என்பதற்கு சார்லி சாப்ளின் காலத்திலிருந்தே பல உதாரணங்கள் உள்ளன. PK அந்த பாணியையே பின்பற்றியிருக்கிறது. அயல்கிரக மனிதர்கள் பூமிக்கு வருவது குறித்து உலகமெங்கிலும் பல்விதமான அறிபுனைவு கதைகளும் திரைப்படங்களும் உள்ளன. எழுத்தாளர் சுஜாதா கூட 'கடவுள் வந்திருந்தார்' என்ற நாடகத்தை எழுதியிருக்கிறார். இந்த நாடகத்தின் சாயல் கூடஇத்திரைப்படத்தில் உண்டு. அயல்கிரக மனிதனின் வருகையெல்லாம் ஒரு பாவனைதான். அந்த அந்நிய மனிதனின் வெளிப்புற பார்வையிலிருந்து கிடைக்கும் செய்திகளும் விமர்சனங்களும்தான் வெளி்ச்சமும்தான் முக்கியம்.

படம் முழுவதும் நம்மை கிண்டலடித்துக் கொண்டேயிருக்கும் நையாண்டி வசனங்களும் காட்சிகளும்தான் இத்திரைப்படத்தின் முக்கிய பலம். உதாரணத்திற்கு ஒரு காட்சியை விளக்க முயல்கிறேன். நிறுத்தப்பட்டிருக்கும் வாகனமொன்றில் நிர்வாணமாக பாலுறவு கொண்டிருப்பவர்களிடமிருந்து  இயல்பாக எடுத்து அணிந்திருக்கும் (நம்மூர் மொழியில் - திருடியிருக்கும்)  உடையின் உள்ளே கிடைக்கும் பணத்தைப் பார்க்கிறார் அமீர்கான். அது என்னவென்று அவருக்குப் புரிவதில்லை. ஆனால் அதில் அச்சிடப்பட்டிருக்கும் மனிதரின்  புகைப்படம் உள்ள தாளைக் கொடுத்தால் தின்பதற்கு ஏதாவது கிடைக்கும் என்பது மாத்திரம் புரிகிறது. உடனே காந்தி புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும் சுவரொட்டி, துண்டுச்சீட்டு, கிழிக்கப்பட்ட பத்திரிகை.. போன்றவற்றை திரட்டி எடுத்துச் சென்று கடையில் தருகிறார். ஆனால் அது செல்லுபடியாவதில்லை. நிராகரிக்கப்படுகிறது. இந்தியச் சமூகத்தில் காந்தி எனும் ஆளுமை மதிக்கப்படுவது பணத்தில் மாத்திரமே, மாறாக அவரது கொள்கைகளும், சிந்தனைகளும் பின்பற்றப்படாமல் வெறும் பெயரளவில்தான் உள்ளன என்கிற பகடி இந்தக் காட்சியில் வெளிப்படுகிறது. அமீர்கான், காவல்துறையின் உடையை அணிந்து கொண்டு வரும் போது காந்தி நோட்டுக்கள் தானாக அவரிடம் லஞ்சமாக தரப்படுகிறது. எத்தனை கிண்டல்?

இந்தியாவில் கடவுள்  மற்றும் மதம் போன்ற அடையாளங்கள் எல்லாம் எதற்தெற்கெல்லாம் பயன்படும் என்பதற்கு விவஸ்தையே இல்லை. உதாரணத்திற்கு ஒன்றை பார்க்கலாம். கட்டிடங்களில் உள்ள படிக்கட்டின் மூலைகளில் பான்பராக் எச்சில் துப்புவதும் மறைவிடங்களில் சிறுநீர் கழிப்பதும் குப்பை கொட்டுவதும் இந்திய கலாசாரங்களில் ஒன்று. கட்டிட உரிமையாளர்கள் இதை தடுப்பதற்காக அந்த இடங்களில் கடவுள்களின் படங்களை வரைந்து வைத்து விடுவார்கள். சில இடங்களில் வெவ்வேறு மதக்கடவுள்களின் படத்தையும் இணைந்து வரைந்து வைப்பார்கள். எல்லோருக்குமே பொருந்தும் அல்லவா? மதச்சகிப்பின்மை என்பது இப்படி சுயநலமாக மட்டுமே வெளிப்படுகிறது. இதன் மூலம் தாங்கள் தீவிரமாகவும் புனிதமாகவும் நம்பும் கடவுள்களை தாங்களே அறியாது அவமானப்படுத்துகிறார்களா அல்லது அதையும் விட சுத்தம் என்கிற விஷயம் பெரிது என நினைக்கிறார்களா என்று புரியாது. இந்த திரைப்படத்திலும் ஏறக்குறைய இதே மாதிரியான உத்தியை அமீர்கானும் பயன்படுத்துவார். கோயில் உண்டியலில் பணத்தை எடுத்துக் கொண்டு அடி வாங்கிய முன்அனுபவத்தில் தம்முடைய கன்னங்களில் கடவுள் படம் அச்சிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்வார். இவரை அடிக்க வருபவர்கள் திகைத்து நின்று விடுவார்கள். சிறிய அளவில் உள்ள கடவுள் பொம்மை ரூ.20, பெரிய அளவில் உள்ள பொம்மை ரூ.50, என்று கோயில் வாசலில் விற்கப்படும் போது  அதிக விலையில் விற்கப்படும் கடவுள் பொம்மைக்கு சக்தி அதிகமா என்று அப்பாவித்தனமாக கேட்பார் அமீர்கான்.

இம்மாதிரியான கிண்டல்கள் திரைப்படத்தில் தொடர்ச்சியாக வந்து கொண்டேயிருக்கின்றன. என்னவொன்று இந்து மத அடையாளங்கள் பிரதானமாக கிண்டலடிக்கப்பட்டதைப் போன்று இதர மதங்களின் மீதான கிண்டல்கள் போகிற போக்கில் இருப்பது ஒரு பலவீனம். அப்படியெல்லாம் செய்திருந்தால் படம் வெளியே வந்திருக்காது என்பதும் யதார்த்தம்தான். இந்த மாதிரியான நையாண்டியான விமர்சனங்கள் எல்லாம் பெரியார் போன்ற பகுத்தறிவுவாதிகள் தமிழகத்தில் ஏற்கெனவே நிகழ்த்தியவைதான். என்றாலும் இவை போன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருப்பது அவசியம். அதுவும் மத அரசியலும் சாதிய சக்திகளும் மேலதிக சக்தியோடு உயிர்த்தெழுந்து வந்து கொண்டிருக்கும் சமகால அரசியல் சூழலில் இது போன்ற பகுத்தறிவுக் குரல்கள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட வேண்டியது அவசியம். சுண்டல் போல பத்ம விருது தரப்படுவதற்காக இந்து சாமியார்களின் பட்டியல் தயார் செய்யப்படுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சாமியார்களின் போர்வையில் உலவும் போலி ஆன்மீக தரகர்களின் மோசடிகளை வெளிப்படுத்தும் இம்மாதிரியான படைப்புகள் நிச்சயம் தொடர்ந்து வெளிவர வேண்டும்.

படைப்புச் சுதந்திரம் என்பது கலாசார காவலர்களாலும் மத அடிப்படைவாதிகளாலும் நசுக்கப்படுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் மீதான சர்ச்சையும் பிரான்ஸ் தேசத்து கார்ட்டூன் பத்திரிகையான சார்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையும் சமீபத்திய உதாரணங்கள். இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்னாலேயே இது எதைப் பற்றிய திரைப்படமென்பதை அறியாமலேயே  இத்திரைப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர் ஒன்றில் அமீர்கான் நிர்வாணமாக காணப்படுவதை ஆட்சேபித்து பொதுநல வழக்கொன்று போடப்பட்டது. 'கலையை கலையாக இருக்க விடுங்கள். உங்கள் மனம் புண்படுமென்றால் அதைப் பார்க்காதீர்கள். அவ்வளவுதான் விஷயம்' என்று நீதிமன்றம் இந்த கலாசார காவலர்களின் தலையில் ஓங்கி ஒன்று போட்டு வெளியே அனுப்பி விட்டது. இத்திரைப்படம் பெருவாரியாக இந்து மதத்தின் மீதான கிண்டல்களைக் கொண்டிருப்பதால் இதை தடை செய்ய வேண்டும் என்று இந்துத்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். ஆனால் நடைமுறை உண்மை என்னவென்றால் இந்தியாவிலேயே மிக அதிகமாக வசூலித்த திரைப்படமாக (ரூ.600 கோடிக்கும் மேல் என்கிறார்கள்) PK இருக்கிறது. போலவே வெளிநாடுகளில் அதிகம் வசூலித்த இந்தியத் திரைப்படங்களில் முதலிடமாகவும். இது இந்து மனங்களை புண்படுத்துமென்றால் இத்தனை ஆரவார வரவேற்பைப் பெற்றிருக்குமா? அவரவர்களின் மதவுணர்வுகளுடன் வாழ்பவர்களின் சதவீதம் பெரும்பான்மை என்பதையும் அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற படைப்புகளை தடை செய்யக் கோரும் அடிப்படைவாதிகளின் சதவீதம் குறைவு என்பதையே இந்த வசூல் விவகாரம் உணர்த்துகிறது. மிக அதிகமாக வசூலித்ததனாலேயே இது சிறந்த திரைப்படமாகவும் ஆகி விடாது. ராஜ்குமார் ஹிரானி போன்றவர்கள் படைப்பாளிகள் என்பதை விடவும் இந்திய வெகுஜன உளவியலை நன்கு புரிந்து கொண்டிருக்கிற சிறந்த வியாபாரிகள் என்பதும் இன்னொரு புறமான உண்மை.


இந்தியில் ராஜ்குமார் ஹிரானி என்பது ஒரு வெற்றிகரமான பிராண்டின் பெயர் என்றால் தமிழ் சூழலில் ஷங்கர் என்பது இன்னொரு வகையான பிராண்ட். சமூகத்தின் அனைத்து வகையான பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் எல்லாவித சமரசங்களுடனும், சமூகப் பிரச்சினையை உரையாடுகிறேன் பேர்வழி என்று பிரம்மாண்டமான பகற்கனவுகளை வண்ணமிகு பொட்டலத்தில் கட்டி நுட்பமாக சந்தைப்படுத்தி அதிக லாபத்தை பார்த்து விடும் வெற்றிகரமானதொரு மார்க்கெட்டிங் குரு. இவரது பெரும்பாலான திரைப்படங்கள், ரோட்டில் எச்சில் துப்புபவனைக் கொன்று விட்டால் நாடு சுபிட்சமாகி வல்லரசாகி விடும் என்பது போன்ற ஆபத்தான கருத்தியல்களையும் மேம்போக்கான எளிய தீர்வுகளையும்  கொண்டிருந்தாலும் கடைசி வரையிலாவது சகித்துக் கொண்டு பார்த்து விட முடிகிற சுவாரசியத்தையாவது குறைந்தபட்சம் கொண்டிருக்கும். ஆனால் அந்த தகுதியைக் கூட இழந்து மிகுந்த சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது அவரது சமீபத்திய திரைப்படமான ஐ அல்லது ஐய்யய்யோ. நாயகன் சமூகப் பிரச்சினைக்காக போராடுகிறான் என்கிற பாவனையெல்லாம் இல்லை என்பதுதான் இதில் மிஞ்சியிருக்கும் ஒரு சிறிய ஆறுதல். ஆனால் தன்னுடைய அழகையும் உடலையும் சிதைத்தவர்களை பழிவாங்குவதற்காக நாயகன் யோசித்து செயல்படுத்தும் திட்டங்கள் இருக்கிறதே, கருடபுராண தண்டனைகள் எல்லாம் தோற்றுவிடும் அளவிற்கான உச்சபட்சமான வக்கிரத்தின் தன்மையைக் கொண்டவை. அதிலும் இறுதிக்காட்சிகளில் சந்தானம் பேசும் கொடூரமான நையாண்டிகளையெல்லாம் எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. விஜய்மல்லையாவை நினைவுப்படுத்தும் தோற்றம் கொண்ட ராம்குமார் கூட்டணி பழிவாங்குவதற்காக  திட்டமிடுவதும் பிறகு நாயகனை  அவமதிப்பதற்காக உரத்த குரலில் சிரிக்கும் காட்சிகள் எல்லாம் நம்பியார் படக்காலத்திலேயே வழக்கொழிந்து போய் விட்டது என்று நினைத்திருந்தேன். இல்லை போலிருக்கிறது.

தமக்கு இன்னல் இழைத்த தீயவர்களை பழிவாங்கும் கதைகளெல்லாம் மிகப் பழைய சமாச்சாரம்தான். வில்லன்களை திருத்துவதற்கெல்லாம் எம்.ஜி.ஆர் .ஃபார்முலா படங்களில் மிக எளிமையான தீர்வுகளை வைத்திருப்பார்கள். கோயில் பிரசாதம் போல வரிசையில் வந்து வந்து அடிவாங்கிக் கொண்டு போகும் அடியாட்களைத் தவிர பிரதான வில்லனாகப்பட்டவர், கிளைமாக்சில்  'யூ ஆர் அண்டர் அரெஸ்ட்' என்று சொல்லுவதற்காக மாத்திரமே நியமிக்கப்பட்டிருக்கும் காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டு உறுமிக் கொண்டே சென்று விடுவார். குணச்சித்திர நடிகர் வில்லனாக நடித்திருந்தால் நாயகனின் தூய்மை உள்ளத்தைக் கண்டு மனம் உருகி க்ளைமாக்சில் மன்னிப்பு கேட்டு விட்டு ஒரே குடும்பமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அவ்வளவுதான். ஆனால் தமிழ் திரையில் இந்த பழிவாங்குதலை எப்படியெல்லாம் வித்தியாசப்படுத்தலாம் என்று யோசித்து யோசித்து கை வெட்டப்படுவதையும் குருதி பொங்கி வழிவதையும் சதைகள் துண்டாவதையும் நிஜம் போல் காட்டுவதில் முன்னேறிக் கொண்டே செல்கிறார்கள். இப்போது இந்தக் கொடூரங்களின்  உச்சத்தில் ஷங்கர் நின்று கொண்டிருக்கிறார். வைரஸால் பாதிக்கப்படும் விக்ரமின் தோற்றம் கொண்டு அதற்கு காரணமானவர்களை அவர் பழிவாங்குவதற்காக யோசிப்பவைகள், செயல்படுத்தும் திட்டங்கள், அதற்கான ஒப்பனை, அதன் மீதான கொடூர நகைச்சுவைகளையெல்லாம் ஹிட்லரின் வதை முகாம்களில் செயல்பட்ட நாஜிகள் கூட யோசித்திருக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

ஹாலிவுட் மற்றும் இன்னபிற பிரதேசங்களிலும் இம்மாதிரியான பழிவாங்குதலை மையமாகக் கொண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. க்வெண்டின் டோரண்டினோ போன்றவர்கள் எல்லாம் இதில் விற்பன்னர்கள். ஆனால் இத்திரைப்படங்களில் எல்லாம் பழிவாங்குதல் என்பது வன்முறையின் அழகியல் சார்ந்து இருக்கும். இத்தனை வெளிப்படையான அருவருப்புடனோ வக்கிரத்துடனோ இருக்காது. அதாவது பழிவாங்கப்படுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அழுத்தமாக அமைந்திருந்தாலும் அது புறவயமாக அப்பட்டமாக காண்பிக்கப்படாமல் பார்வையாளர்கள் யூகித்துக் கொள்ளும் படி அமைந்திருக்கும். அந்த வன்முறையானது பெரும்பாலும் பார்வையாளர்களின் மனதில்தான் நிகழும். காட்சிகளாகத் தோன்றாது. சமீபத்தில் நிகழ்ந்த சென்னை சர்வதேச விழாவில்  திரையிடப்பட்ட Wild Tales என்னும் இருண்மை நகைச்சுவை கொண்ட ஸ்பானிய திரைப்படத்தைப் பார்த்தேன். பிரபல ஸ்பானிய இயக்குர் பெட்ரோ அல்மோடோவரும் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர். ஆறு குறும்படங்கள் இணைந்ததுதான் இந்த திரைப்படம். வன்முறையும் பழிவாங்குதலும்தான் இந்த ஆறு குறுங்கதைகளின் மையம். ஆனால் படம் துவங்கி முடியும் வரைக்கும் அரங்கத்தில் பார்வையாளர்களின் ஆரவார சிரிப்பொலிகளின் சத்தம் குறையவேயில்லை. வன்முறையை எப்படி பகடியாக்குவது என்பதற்கு இத்திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம்.  இந்த வருட அகாதமி விருதிற்காக 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்தின் பிரிவின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கிறது.

ஐ திரைப்படத்தில் காட்சிகளின் வக்கிரங்களைத் தவிர திரைக்கதை சார்ந்து இன்னொரு பிரச்சினையும் இருப்பதாகத் தோன்றுகிறது. படம் சலிப்பை ஏற்படுத்துவற்கு இதுவொரு காரணமாக இருக்கலாம். முதலில் பூடகமான சில சம்பவங்களைக் காண்பித்து விட்டு இடைவேளைக்கு பின் அதற்கான காரணங்களை ஒரு வலுவான ஃபிளாஷ்பேக்கின் மூலம் சொல்வது ஷங்கர் திரைப்படங்களின் பொதுவான வடிவமைப்பு. ஆனால் இத்திரைப்படத்தில் நாயகனுக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணம் ஏறக்குறைய க்ளைமாக்சுக்கு முன்புதான் வெளிப்படுகிறது. நாயகன் பழிவாங்குகிறான் என்றால் அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பு, அதற்கான காரணம், பாதிப்பை ஏற்படுத்திய நபர்கள் யார் என்பது போன்ற விவரங்கள் பார்வையாளர்களின் மனதில் மிக அழுத்தமாக கடத்தப்பட்டிருந்தால்தான் அவனும் அந்த பழிவாங்குதலில் மிக ஈடுபாட்டுடனும் உற்சாகத்துடனும் கலந்து கொள்வான்.

மாறாக இதில் விக்ரமிற்கு ஏற்பட்ட பாதிப்பு கடைசிக் காட்சிகளுக்கு முன்புவரை மிக பூடகமாகவே  அவர் கொடூரமாக பழிவாங்கும் செயல்களெல்லாம் எரிச்சலைத்தான் வரவழைக்கின்றன. மேலும் இந்தப் படத்திற்காக விக்ரம் உடல் எடையை வெகுவாகக் குறைத்து மிக மெலிதாக இருக்கும் ஒரு புகைப்படத்தை, திரைப்படம் வெளிவருதற்கு முன்னால் பார்க்க நேர்ந்தது. மிகப் பரிதாபம். ஒரு திரைப்படத்திற்காக தன் உடலை இப்படியா ஒருவன் வதைப்படுத்திக் கொள்வான் என்று அவருடய அர்ப்பணிப்பின் மீது பிரமிப்பாக இருந்தது. இத்திரைப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.  ஆனால் அந்தக் கடினமான உழைப்பை இயக்குநர் மிக மேம்போக்காகவும், அந்த உழைப்பு  அநாவசியமானது என்கிற வகையிலும்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது துரதிர்ஷ்டம். இதே மாதிரியாக சேது திரைப்படத்தில் தன்னுடைய உடலை உருக்கி நடித்த விக்ரமை இயக்குநர் பாலா எத்தனை அழுத்தமாக பயன்படுத்தியிருக்கிறார் என்பதை கவனிக்கலாம். டாம் ஹாங்ஸ் நடித்த Cast Away  போன்ற அற்புதமான திரைக்கதைகளுக்குதான் இப்படியெல்லாம் உடம்பை உருக்கி நடிக்க தயாராக இருக்கலாம்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்குபவர் ஷங்கர் என்று பெயரெடுத்து விட்ட படியால் ஒவ்வொரு பிரேமிலும் குறைந்தது நூறு பேராவது நிற்கிறார்கள். அந்நியன் திரைப்படத்தில் திருவையாறில் நிகழும் தியாகராஜர் ஆராதனை விழாவின் பஞ்சரத்தின கீர்த்தனைக்  காட்சியில் உன்னி கிருஷ்ணன், சுதாரகுநாதன் போன்ற கர்நாடக இசை பிரபலங்கள் எல்லாம் துணைநடிகர்கள் போலவே வந்து விட்டுப் போவார்கள். இதுதான் பிரம்மாண்டம் என்பதின் அடையாளம் போல. இத்திரைப்படத்தின்  பாடல் காட்சிகள் முதற்கொண்டு திகட்டுமளவிற்கான நுட்பமும் வண்ணமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாடிபில்டர்களுடனான ஒரு சண்டைக்காட்சியில் மாட்ரிக்ஸ் திரைப்படம் போன்று விக்ரம் குறைந்தது ஐம்பது மாமிச மலைகளுடன் மோதுகிற காட்சிகளெல்லாம் பிரம்மாண்டம் என்கிற பெயரில் சித்தரிக்கப்படும் அபத்தம். ஒரு போட்டிக்கு வருகிற அத்தனை பேருமா ஐயா வில்லன்களாக இருப்பார்கள்? இதன் மூலம் பாடிபில்டிங் என்கிற உடலைப் போற்றி வளர்க்கிற நல்ல விஷயத்தை ஏதோ வில்லன்களுக்கான அடையாளம் என்பதாக சித்தரித்து வைத்திருக்கிறார் இயக்குநர். மேலும் திருநங்கையாக வரும் பாத்திரமொன்றும் மிக மோசமாக கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது. பாலியல் சிறுபான்மையினர் மீது பொதுப்புத்தியின் பார்வை மெல்ல மாறிக் கொண்டிருக்கும் சூழலில் அதில் பின்னடைவை ஏற்படுத்தும் காட்சிகளை குறைந்தபட்ச தாாமீக உணர்வுடன் தவிர்த்திருக்க வேண்டாமா?

தனது அடுத்த திரைப்படத்தின் வில்லன்களை ஷங்கர் எப்படியெல்லாம் பழிவாங்குவதற்காக திட்டமிட்டிருக்கிறாரோ என்று நினைத்தால் இப்போதே கலக்கமாக இருக்கிறது.

- உயிர்மை - பிப்ரவரி 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

1 comment:

Anonymous said...

Y blood,same blood