Wednesday, July 24, 2013

பொதுச் சமூகமும் திரைப்பட ரசனையும்

அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவது என்பது ஒன்று. இன்னொன்று பொதுச் சமூகத்தை நோக்கி உண்மையைப் பேசுவது. பொதுக்கூட்டங்களிலும் பட்டிமன்றங்களிலும் பேசுபவர்களைக் கவனித்தால் கைத்தட்டலுக்காகவும் ஆதரவிற்காகவும்,  பெரும்பான்மைச் சமூகத்தின் மனநிலையை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அதற்கு ஆதரவாகத்தான் பேசுவார்கள். அப்படியே எதிர்க்கருத்துக்களை வைக்க விரும்பினாலும் பெரும்பான்மைக்கு வலிக்காமல் நாசூக்காகத்தான் பேசுவார்கள். மாறாக பொதுச் சமூகத்திற்கு உறைக்கிறாற் போல் அவர்களின் முன்னால் உண்மையை உடைத்து பேச அசாத்தியமான துணிச்சலும் நெஞ்சுறுதியும் வேண்டும். சிலவற்றோடு முரண்பட்டாலும் பெரியார் போன்ற ஆளுமையை உதாரணமாகச் சொல்லலாம்.

எதற்குச் சொல்ல வருகிறேன்.. என்றால் தங்கமீன்கள் திரைப்பட வெளியீட்டின் தாமதம் பற்றிய சில பதிவுகளை வாசித்த போது அதன் வணிகம், தயாரிப்பாளர்களின் அதீத லாப மோகம்,  திரையரங்கு கிடைப்பதின் பின்னுள்ள சிக்கல்கள் ஆகியவற்றைப் பற்றிதான் பலரும் பேசுகிறார்களே தவிர, மக்கள் ரசனையின் பங்கு யாரும் பேசுவதில்லை. உண்மையில் இதுதான் பிரச்சினையின் ஆணிவேர். நல்ல சினிமாவின் மீது அக்கறையுள்ள திரைத்துறையில் பணியாற்றுபவர்களே.. பொதுச் சமூகத்தை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. 'நல்ல படம் வந்தாதான் மக்கள் பாக்கத்தான் செய்யறாங்க" இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியைப் பாருங்கள்..மற்ற எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு விமர்சிக்கும் அவர்... 'மக்களை நான் குறை சொல்ல மாட்டேன்'' என்கிறார்.



என்னதான் சினிமாவின் தரம் பற்றி பேசினாலும் அது மிகுந்த பொருட்செலவை கோரி வரும் நிற்கும் வடிவம் என்பதால் அதன் பின்னுள்ள வணிகத்தை புறந்தள்ளவே முடியாது. வணிகர்கள் லாபத்தைத்தான் கோருவார்கள். மிக அடிப்படையான எளிய உண்மை இதுவே. வணிகர்களாகவும் இருந்து கொண்டு சினிமாவையும் விரும்பும் அரிதான சிலரினால்தான் சில நல்ல முயற்சிகளாவது வெளிவருகிறது. ஆண்டிற்கு இத்தனை திரைப்படங்கள் வெளிவந்தாலும் சர்வதேச திரைப்படங்களோடு ஒப்பிடக்கூடிய.... அது கூட வேண்டாம் .. அதை நெருங்கக் கூடிய ஒரு திரைப்படத்தைக் கூட நம்மால் இதுவரை உருவாக்க முடியவில்லை என்பது கசப்பான உண்மை.

இதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது. மிகக் கறாராக நல்ல திரைப்படங்களை மாத்திரமே திரையரங்கில் சென்று பார்ப்பது என்கிற தெளிவான தீர்மானம். நல்ல திரைப்படம் என்றவுடனே அது மாற்று சினிமா என்று மாத்திரமே பொருள் கொள்ள தேவையில்லை. வெகுஜன  திரைப்படமென்றாலும் அது எவ்வகையிலாவது இதுவரை வந்த திரைப்படங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறதா என்று பார்ப்பது நல்லது. இந்த மனநிலை மெதுவாக வளர்ந்து பரவலாக வளரத் துவங்கினால் அதன் மாற்றம், திரைப்பட உருவாக்கத்திலும் எதிரொலிக்கும். ஹீரோக்கள் மீதுள்ள அபிமானத்தினாலும் சந்தைப்படுத்துதலில் உள்ள சாமர்த்தியத்திலும் மயங்கி  அடித்துப்பிடித்து முதல் சில நாட்களிலேயே ஒரே மாதிரியாக உருவாக்கப்படும் வணிக மசாலாக்களை பார்ப்பதினால் மறைமுகமாக நல்ல சினிமாக்களுக்கு எதிராக நாமே இருக்கிறோம் என்பது புரியும்.

இதனால்தான் திரைப்பட ரசனை என்றொரு பாடத்தை கல்வித்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று இயக்குநர் பாலுமகேந்திரா தனியாளாக குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார். நிச்சயம் அது அதிகாரத்தின் காதுகளில் விழாது. மக்களை ஏதாவது ஒரு போதையிலேயே வைத்திருப்பதுதான் அதன் நோக்கமாக இருக்கும்.

சிங்கத்தை வெற்றிகரமாக கர்ஜிக்க வைத்து விட்டோம்.. இதோ தலைவன் வரப் போகிறது. என்ன செய்யப் போகிறோம்...?

suresh kannan

3 comments:

Anonymous said...

we shld avoid mokkai movies like Visvaroopam. hope u ll agree :)

Anonymous said...

மக்களின் பார்வையில் சினிமா என்பது கேளிக்கைக்கான பொருளாகவே இருந்து வருகிறது.. சினிமா என்பது ஏதாவது கிறுக்குத்தனங்கள் செய்து தங்களை சிரிக்கச் செய்யும் கோமாளியாக மட்டுமே இருக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் எண்ணுகிறார்கள்.. சினிமாவுக்கான ரசனை இங்கு மிகமிக குறைவு என்பதைவிட இல்லவே இல்லை என்று சொல்வதே தகும்...தங்கள் இருப்பியலை நிலை நிறுத்திக் கொள்ள போராடும் சில இயக்குநர்கள் வேறுவழியின்றி இது போன்ற வணிக குப்பைகளில் மாட்டிக் கொள்கிறார்கள்.. அவர்களை மட்டுமே குற்றம் சொல்லி இங்கு ஒன்றுமே மாறிவிடப் போவதில்லை....

வெங்கிராஜா said...



நிச்சயம் இல்லை. வருடத்திற்கு ஒரு திரைப்படம் நிச்சயம் சர்வதேச தரத்தில் இங்கு வெளிவருகிறது. விமர்சனம் என்ற வகையில் நம்மிடம் இருக்கும் மிகப்பெரும் ஆயுதம் மழுங்கியிருப்பது தான் படைப்புகளின் தரம் குறைவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்று நான் நினைக்கிறேன். கறாராக குப்பைகளை பொதுவெளியில் ஊடகங்கள் விமர்சிக்காமலிருப்பது தான் நிஜம். தொ.கா முக்கால்வாசிக்கு வெள்ளித்திரையை நம்பி மட்டுமே இயங்குகிறது. நிலைமை இப்படி இருக்கும் வரை மிக தைரியமாக இந்த துணையுடம் வணிக சினிமா ஆழக் கோலோச்சும்.