பேசாமொழி - என்கிற மாற்று சினிமாவிற்கான இணைய இதழ், சமீபத்திய இதழை வீடு திரைப்படத்தின் மீதான சிறப்பிதழாக கொண்டு வந்திருக்கிறது. 'திரையிலக்கணத்துடன் தமிழில் உருவாகியிருக்கும் இரண்டே படங்கள்' என்று நான் கருதுவதில் ஒன்றான 'வீடு' திரைப்படத்தின் மீதான மீள்பார்வையும் அதன் மீதான உரையாடல்களும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
உயிர் எழுத்து - ஜனவரி 2013 மாத இதழிலும் 'வீடு' திரைப்படம் பற்றிய அற்புதமானதொரு கட்டுரை (அதிகாலையின் பொன்னிற ஒளி) பிரசுரமாகியிருக்கிறது. ஒளிப்பதிவாளர் செழியன் எழுதியது. நான் வாசித்த வரையில் இத்திரைப்படம் பற்றி இதுவரை எழுதப்பட்டதில் மிகச்சிறந்ததாக செழியனின் கட்டுரையைச் சொல்வேன்.
வீடு திரைப்படம் தொடர்பான செழியனின் Nostalgia, அத்திரைப்படத்தை மிக ரசனையாக அணுகும் ஒரு பார்வையாளனின் கோணங்கள், ரசனையைத் தாண்டி திரைமொழியின் நுட்பங்கள் என்று ஒரு முழுமையான கட்டுரையாக இது உருவாகியிருக்கிறது என்று தோன்றுகிறது. இவை மூன்றையும் உறுத்தாதவாறு கலந்திருப்பதில் செழியனின் தன்னிச்சையான மேதமையை உணர முடிகிறது.
செழியனின் எழுத்தை சில ஆண்டுகளுக்கு முன்பே வாசித்து பிரமித்திருக்கிறேன். கவிஞர் மீரா நினைவு மலரில் வெளியான அவரது கட்டுரையும் மிகச் சிறந்ததொன்று. வாசகன் எழுத்தால் அல்லாது காட்சி வடிவமாக அக்கட்டுரையை உணரும்படி எழுதப்பட்டிருக்கும். ஒரு மிகச்சிறந்த Long Take என்கிற வகையில் எழுதப்பட்ட அந்தக்கட்டுரையின் ஆரம்ப பத்தி ஏற்படுத்தின பரவசம் இன்னமும் மீதமுள்ளது. (பின்னாளில் செழியன் சிறந்த ஒளிப்பதிவாளராக உருவாகப் போவதற்கான அடையாமிது).
எனக்கு உலக சினிமா குறித்த பரிச்சயத்தின் துவக்கத்தையும் அதன் ருசியையும் தூர்தர்ஷன் படங்கள் (குறிப்பாக சத்யஜித்ரே) தந்திருந்தாலும் இதை பிரக்ஞையோடு அணுகுவதற்கான உணர்வையும் பயிற்சியையும் தருவதற்கான துவக்கத்தைத் தந்தது செழியனின் ஆனந்த விகடன் கட்டுரைகளும் (உலக சினிமா), எஸ்.ராவின் தீராநதி கட்டுரைகளும் (அயல்சினிமா). அந்த வகையில் செழியனின் எழுத்து எனக்கு முக்கியமானது.
உயிர் எழுத்து கட்டுரையை தேடி வாசித்துப் பாருங்கள். நான் சொல்வதை உணர முடியும்.
suresh kannan