நம்மை நினைத்தால் பாவமாக இருக்கிறது. பொழுதுபோக்கு சினிமாதான் இங்கு பிரதானம் என்பது கூட பாவமில்லை என்றாலும் கூட ஒரு சுவாரசியமான, விறுவிறுப்பான, புத்திசாலித்தனமாக திரில்லர் படத்திற்கான வாய்ப்பு கூட இல்லாமல் எத்தனை காய்ந்து போயிருநதால், வெற்றுத் துப்பாக்கியை ஆஹா, ஓஹோ என்று புகழ்வோம்?.
நிற்க.. நான் ஏதோ உலகத் திரைப்படம், கலைப்படம், என்று பார்க்கிற ஹோதாவில், உயர்வுமனப்பான்மையில் ஒரு பாவனையாக இதைக் கூறவில்லை. எப்பேர்ப்பட்ட உயர்தர கலைஞனாய் இருந்தாலும் அவனுள் இருக்கும் பாமரன் சாகவே மாட்டான். சாவு மேளத்திலுள்ள கொண்டாட்டத்தை ரகசியமாகவேனும் ரசிக்கிற கர்நாடக சங்கீதக்காரன் இருப்பான். அதே போல் பாமரன் உள்ளிருக்கும் அறிவுஜீவியும்.
அந்த வகையில் எனக்கு ஆகசன் சினிமாக்கள் மிகப் பிடிக்கும். மன்னிக்கக்கூடிய சிறிய லாஜிக் பிழைகள் இருந்தாலும் கூட விறுவிறுப்பான திரைக்கதையாக இருந்தால் அதை ரசித்துப் பார்ப்பேன். இதே விஜய்யின் 'கில்லி' திரைப்படம் (தெலுங்கு மூலம்) சுவாரசியமான விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டது. ஆனால் துப்பாக்கி ஒரு ரெண்டுங்கெட்டான் தனமான ஆக்சன் படம். படங்களின் பாடல்களின் இடையூறு பற்றி நான் நீண்ட காலமாக புகார் கூறிக் கொண்டிருந்தாலும் இந்தளவு எரிச்சல் ஏற்படுத்தின பாடல் இடையூறுகளை சமீபத்தில் எந்த சினிமாவிலும் காண நேர்ந்ததில்லை. அசட்டுத்தனமான நகைச்சுவையுடன் கூடிய காதல் காட்சிகள். கஜினியில் இருந்த அந்த சுவாரசியம் கூட இல்லை. நல்ல நடிகர்களைக் கூட அபத்தமாக பயன்படுத்துவதில் தமிழ் சினிமாவிற்கு நிகரில்லை. ஜெயராம் இந்த மாதிரியான கண்றாவி பாத்திரங்களை ஏற்கிறார் என்று தெரியவில்லை.
இந்தத் திரைப்படத்தின் துணை தயாரிப்பு இந்திய ராணுவமோ என்கிற அளவிற்கு அட்டெஷனில் நின்று கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இந்திய ராணுவத்தின் முகம் 'விஜய்' என்கிற ஒற்றைப் பரிமாணத்தில் வழக்கம் போல் தமிழ் நாயக பிம்பத்திலேயே இருப்பதுதான் சோகம். விடுமுறையிலும் வேலை பார்க்கும் தேச பக்தராக ஒற்றை ஆளாக நின்று இந்தியாவை காப்பாற்றுகிறார் விஜய். விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் நடித்த படங்களின் தேய்ந்து போன சிடியை நன்றாக துடைத்து புது தொழில்நுட்பத்தில் தோய்த்து தந்ததை தவிர இயக்குநரின் பணி வேறு ஒன்றுமில்லை.
இந்தப் படத்தில் இசுலாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்தாக பத்திரிகை செய்திகளில் வாசித்தேன். என்னைக் கேட்டால், உலகத்திலுள்ள எந்த பிரிவிலுள்ள தீவிரவாதிகளாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் இணைந்து இந்தப் படத்தின் மீது மானநஷ்ட வழக்குத் தொடரலாம். அந்தளவிற்கு தீவிரவாத இயக்கங்களை அடி முட்டாள்களாகவும் பழைய எம்.என்.நம்பியார் தலைமையிலுள்ள கொள்ளைக் கூட்ட கும்பல் போலவும் சித்தரித்திருக்கிறார்கள். தீவிரவாதத்தின் ஊற்றுக் கண் எது என்கிற எவ்வித பிரக்ஞையில்லாமலும் தீவிரவாதம் குறித்த சமூகவியல் பார்வையில்லாமலும், நாயகன் தன்னுடைய தேசப்பற்றை வலுவாக காண்பித்து கைத்தட்டல் வாங்குவதற்கு ஏற்ற வகையிலான boxing punch bag போல உபயோகித்துக் கொள்கிறார்கள்
12 இடங்களில் வெடிகுண்டு வைப்பது போன்ற தீவிரமான 'ஆப்பரேஷனில்' ஏதாவது பிழையோ சந்தேகமோ வந்தால் அதை தள்ளிப் போடுவதுதான் புத்திசாலிகள் செய்வது. ஆனால் திட்டத்தில் தொடர்புடைய ஒரு நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு காணாமற் போன நிலையிலும் திட்டத்தைத் தொடர்வார்களா என்பது கேள்விக்குறி. தீவிரவாதிகளின் 'தலைவன்' நாயகனுடன் 'ஒண்டிக்கு ஒண்டி' மோதி தமிழ் சினிமா மரபைக் காப்பாற்றுகிறார். ஆர்த்தோபடிக் டாக்டர்கள் வருங்காலத்தில் தங்கள் பிழைப்பை எண்ணி வருத்தப்படுமளவிற்கு எலும்பு முறிந்த நாயகன் சுயசிகிச்சை எடுத்துக் கொள்ளும் காட்சி மயிர்க்கூச்சலை ஏற்படுத்துகிறது. தீவிரவாதிகள் டஜன் டஜனாக துப்பாக்கிகளை வைத்திருந்தாலும் சிக்கன நடவடிக்கை காரணமாக அதை ஓரமாக வைத்து விட்டு நாயகனுடன் கை,கால்களால் சண்டை போட்டு நாயகன் ஸ்டைலாக அடிப்பதற்கு தோதாக நின்று விழுகிறார்கள்.
புத்திசாலித்தனமோ விறுவிறுப்போ அல்லாத, தமிழ் சினிமாவின் இற்றுப் போய் சலித்துப் போன சம்பிரதாயங்களை எவ்விதங்களிலும் கைவிடாத, இம்மாதிரியான அரைகுறை வேக்காடான திரைப்படங்கள்தான் நம்முடைய பிரதான பொழுதுபோக்குத் திரைப்படங்கள் என்றால்...
நம்முடைய சமூகத்தின் ரசனை எத்தனை புரையோடிப் போயிருக்கிறது என்றுதான் நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
suresh kannan