Tuesday, October 09, 2012

சட்டம் எனும் விலங்கு - Présumé coupable



Présumé coupable  ஒரு பிரெஞ்சுத் திரைப்படம்.

அப்பாவியான ஒரு மனிதன் சட்டத்தின் கருணையில்லாத கண்களில் சிக்கி சின்னா பின்னாமாகிறான். பார்வையாளர்களில் நம்மில் எவருக்கும் இது நேரலாம் என்கிற திகிலான செய்தியை மிக ஆழமாக வாழைப்பழ ஊசியாக உள்ளிறக்குகிறது திரைப்படம். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.



Alain Marécaux  ஒரு நள்ளிரவில் காவல் துறையினரால் முரட்டுத்தனமாக கைது செய்யப்படுகிறார். கூடவே அவரது மனைவியும். அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுதான் கொடுமையானது. குழந்தைகள் மீதான வன்புணர்ச்சி. Alain சினமுறுகிறார், கத்துகிறார், கதறுகிறார், கண்ணீர் விடுகிறார். எந்தவொரு பயனுமில்லை. அடிப்படையான ஆதாரம் ஏதுமில்லாத பல யூகமான ஆதாரங்களை, குற்றச்சாட்டுக்களை காவல்துறை வைக்கிறது. "அப்பா என்னிடம் 'என்னமோ' செய்தார்' என்று அவருடைய சொந்த மகனையே சொல்ல வைக்கிறது. எந்தவொரு தகப்பனுக்கும் ஏற்படக்கூடாத நிலை. 'வேலை வேலை' என்று குழந்தைகள் மீது போதுமான அளவு அன்பு செலுத்தாமலிருக்கிறோமோ என்று ஏற்கெனவே குற்றவுணர்வில் இருக்கும் அவருக்கு இந்தக் குற்றச்சாட்டு தலையில் இடியை இறக்குகிறது. பல முறை தற்கொலைக்கு முயல்கிறார். கடுமையாயிருக்கும் இளம் நீதிபதி மனிதாபிமானம் சற்றுமில்லாமல் சட்டத்தின் விதிகளை இறுகப்பிடித்து தொங்குகிறார். இறுதியில் என்னவாயிற்று என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Alain Marécaux ஆக Philippe Torreton உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். மிகையாகச் சொல்லவில்லை. உண்மையாகவே. இதற்காக சுமார் 50 பவுண்டு எடையை இழந்திருக்கிறார். படத்தைப் பாருங்கள். உங்களுக்கே மிக அதிர்ச்சியாயிருக்கும். நமது சிக்ஸ் பேக் நாயகர்கள் செய்யும் கிம்மிக்ஸ் இல்லை.

படம் முழுக்க முழுக்க Alain பின்னாலேயே அலைகிறது. காவல்துறை மிரட்டல்கள், விசாணைக்கான அலைக்கழித்தல்கள், சிறைத்தனிமை, தற்கொலை முயற்சிகள், செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் சுயபச்சாதாபம், என்றாவது விடுதலை ஆகி விடுவோம் என்கிற சிறு நம்பிக்கை... இவைதான் படம் முழுக்கவே. பெரும்பான்மையாக வேறு எந்தக் காட்சிகளும் இல்லை. ஒரு கணத்தில் நாமே Alain ஆக உணர்கிறோம். அவர் தற்கொலைக்கு தொடர்ந்து முயலும் போது ஒரு கணத்தில் அது சரிதான் என்று நமக்குத் தோன்றி விடுகிறது.

மனிதர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவைதான் சட்டங்கள். ஆனால் அவை பூமராங் போல கண்மூடித்தனமாக ஒரு தனிமனிதனை குரூரமாக தாக்கும் போது, தவறு சட்டங்களின் மீதா அல்லது அவற்றை முறையாக கையாளத் தெரியாத அமைப்புகள், மனிதர்கள் மீதா என்கிற ஆதாரமான சந்தேகக் கேள்வியை அழுத்தமாக ஏற்படுத்துகிறது திரைப்படம். நிச்சயம் காணத் தவற விடக் கூடாதது.


suresh kannan

2 comments:

Anonymous said...

welcome bk

Ravikumar Tirupur said...

நிச்சயம் பார்க்கவேண்டிய படம்