ராஜமவுலி இயக்கி வெளிவந்த 'நான் ஈ' திரைப்படம் குறித்த முன்னோட்டங்களும் புகைப்படங்களும் விளம்பரங்களும் துவக்கத்தில் எனக்குள் எவ்வித ஆர்வத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக ஓர் ஒவ்வாமையையே அளித்தது. அவரின் முந்தைய படங்களை பார்த்த அனுபவமின்மை ஒரு காரணமாக இருக்கக்கூடும். படம் வெளிவந்து பெரும்பான்மையினரால் புகழப்பட்ட போதும் சலனமின்றி ஈ போல் ஆடாமல் அசையாமல் அந்த நிலையிலேயே இருந்தேன். ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "ஈடா ஈடா' என்கிற பாடல்தான் சிறு ஆர்வத்தைக் கிளறியது.
CG நுட்பத்தை அது இருக்கிறது என்கிற காரணத்தினாலேயே உபயோகப்படுத்தாமல் தேவையான அளவிலும் பொருத்தமாகவும் குறும்பாகவும் அந்தப் பாடலில் உபயோகப்பட்டிருக்கப்பட்டிருப்
ராஜமவுலி ஒரு சிறந்த (திரை) கதைசொல்லி என்பதை உணர முடிந்தது. சுமார் இரண்டரை மணி நேரத்தை பெரும்பாலும் எவ்வித விலகலும் இல்லாமல் பார்வையாளனை ஒன்றிப் பார்க்க வைக்கும் திறமையைப் பெற்றிருக்கிறார். காட்சிக் கோர்வைகளில் எவ்வித தர்க்கப்பிழையும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக கறாராக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இந்த ஒழுங்கே சமயங்களில் ஆயாசத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக நாயகன், நாயகியுடன் நடுஇரவுத் தனிமையில் பாடிச் செல்லும் போது மரங்களிலுள்ள இலைகள் ஆசிர்வசிப்பது போல் அவர்களின் மேலே உதிர்ந்து கொண்டேயிருக்கின்றன. இது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம். இலைகள் அவ்வாறு உதிர்வதற்கு முன் நாயகன் மேலே எம்பி மரக்கிளைகளை பிடித்து உலுக்கி விடுகிறான். அதனால்தான் இலைகள் உதிர்கின்றன என்பதால் பார்வையாளன் மனதில் எவ்வித ஐயமும் எழாது. ஆனால் அது இரண்டு, மூன்று நிமிடங்களுக்கு மேல் நிகழுமா என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்கக் கூடாது.
அது மாத்திரமல்ல. எப்படி ஈயால் 'I Will Kill you' என்று ஆங்கிலத்திலும் 'நான் ஈயாக மறுபிறவி எடுத்திருக்கிறேன்' என்று தமிழிலும் எழுத முடிகிறது என்றெல்லாம் கேட்கக்கூடாது. அந்த ஈ, பள்ளியில் ஆஆஇஈ படித்த ஈயா? என்று கேட்பதும் அறிவீனமே. இங்குதான் இயக்குநர் புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்திருக்கிறார். ஒரு தகப்பன் தன் குழந்தையை உறங்க வைப்பதற்காக சொல்கிற கதை என்பதை துவக்கத்தில் சொல்லி விடுகிறார். கதை என்றால் அதுவும் குழந்தைகளுக்கான கதை என்றால் அது எப்படியும் இருக்கலாம்தானே? (அந்த அப்பா மற்றும் குழந்தையின் குரல்கள் அத்தனை சிறப்பாக நடித்திருக்கின்றன).
இந்தத் திரைப்படத்தில் எனக்கு மிகப்பிடித்த அம்சமே, ஒரு ஈயை நாயகனாக ஆக்கியதுதான். கேமராவை பார்த்து மெஸெஜூம் பஞ்ச் டயலாக் பேசும், தீயசக்திகளை அழிப்பதற்கென்றெ அவதாரம் எடுத்திருப்பதான பாவனை செய்யும் அசட்டுத்தனமான நாயக பிம்பங்களுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவால் இது. ஒழுங்காக, சுவாரசியமாக கதை சொல்லத் தெரிந்தால் சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை, கணினியால் உருவாக்கப்பட்ட செயற்கை ஈ யே போதும் என்கிற பொட்டில் அடித்த மாதிரியான இந்தச் செய்தியே எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருப்பதும் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.
CG நுட்பத்தை உபயோக்குவதில் ஹாலிவுட் இதை விட அதிக அளவு முன்னணியில் இருக்கிறது என்றாலும் நம் பிரதேசத்திலும் இதை உருப்படியாக கையாள ஒரு ஆள் இருக்கிறார் என்பதே கவனத்திற்குரியது. ஷங்கர் திரைப்படங்களைப் போன்று அபத்தமாக அல்லாமல்(குறிப்பாக பாடல் காட்சிகள்) கதையின் போக்குகேற்றவாறு மிகப் பொருத்தமாக சுவாரசியமாக சிந்தித்திருப்பதே பாராட்டத்தக்கதாக இருக்கிறது. ஈக்கும் மனிதனுக்குமான அந்தப் போராட்டத்தை ராஜ்மவுலி இன்னும் கூட சுவாரசியப்படுத்தியிருக்க முடியும் என்றே நான் கருதுகிறேன்.
மேலும் இதை குழந்தைகளுக்கான பிரத்யேகமான திரைப்படமாக ராஜ்மவுலி உருவாக்கியிருக்கலாம். எனில் இத்திரைப்படம் வேறொரு சுவாரசியமான தளத்தில் வந்திருக்கக்கூடும். ஈயின் தொந்தரவு தாங்காமல் வில்லன் அவஸ்தைப்படும் போதெல்லாம் திரையரங்கில் குழந்தைகள் கும்மாளமிட்டு சிரிக்கிறார்கள். ஆனால் இந்த தருணங்கள் மிக சொற்பமானதாக இருக்கின்றன.
இதில் பிரதான பாத்திரத்தில் நடித்த சுதீப்பை பாராட்டியே ஆக வேண்டும். பின்னால் உருவாக்கப்பட போகும் கணினி ஈ தம்மை தெர்ந்தரவு செய்வதை முன்கூட்டியே கற்பனையாக உணர்ந்து அதற்கேற்றவாறு உடல்மொழியை பயன்படுத்துவது என்பது நிச்சயம் கடினமான காரியம். சுதீப் இதை மிக கச்சிதமாக செய்திருக்கிறார். இதற்காக கடுமையாக உழைத்திருக்கும் ஒளிப்பதிவாளரும் விஷூவல் எபெக்டஸ் குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
வசனம் கிரேசி மோகன் என்று பார்த்தேன். கடைசிக் காட்சியில் அவர் தோன்றுவதைத் தவிர படத்தில் அவரின் பிரத்யேகமான தடயங்கள் எங்குமே தெரியவில்லை. இந்தக் கதைச் சூழலுக்கு கிரேசியின் நகைச்சுவை பொருத்தமில்லாமல் போகலாம் என்று இயக்குநர் கருதியிருக்கலாம்.
இதன் அடுத்த பாகத்தை இயக்குநர் திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவலை அறிய நேர்ந்தது. அதை குழந்தைகளுக்கான பிரத்யேகமானதாக உருவாக்கினால் சிறப்பாக இருக்கும்.
suresh kannan