Friday, August 27, 2010

பிறன்மனை நோக்குதலில் பிறந்த காதல் (பகுதி 1)

பரவலாக அறியப்படாத, இணையத் தமிழில் இதுவரை யாராலும் எழுதப்படாத உலக சினிமாக்களைப் பற்றி எழுதுவதே என் நோக்கம் என்றார் நண்பர் ஒருவர். எனக்கும் இதில் உடன்பாடே. ஏனெனில் உலகசினிமா என்றாலே உடனே 'பைசைக்கிள் தீவ்ஸ்' 'ரஷோமான்'... போன்ற  திரைப்படங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் பொதுவாக பேசுவதில்லை. சுமார் நூற்றுக்குள் அடங்கி விடும்  இந்த பெயர்களின் கிளிஷேவான பட்டியலே பல காலமாக தொடர்ந்து சுழன்று வருகிறது. இது தவிர பல ஹாலிவுட் வணிகக் குப்பைகளும் 'உலக சினிமா' என்கிற அந்தஸ்துடனே எழுதப்படுகின்றன. இதையும் தவிர்த்து விட்டு பார்த்தால் 'ஆஸ்திரேலிய' நாட்டுத் திரைப்படம், 'பிரேசில்" நாட்டு காவியம் என்கிற அடைமொழிகளோடு  பெருமையாக எழுதப்படும் திரைப்படங்களை என்னவென்று அருகே சென்று பார்த்தால் அவை நம்மூரின் 'சுறா' 'வேட்டைக்காரன்' ரேஞ்சிற்கு கொடுமையானதாக  இருக்கின்றன. 'வெளிநாட்டு உருவாக்கம்' என்றாலே அது தரமானதாகவும் உயர்வானதாகவும்தான் இருக்கும் என்கிற முன்முடிவும் கற்பிதமும் இந்த அபத்தங்களுக்குக் காரணம்.

ஆனால் கிணற்றிலிருந்து வெளியே வந்து பார்த்தால் 'உலக சினிமா' என்பது சமுத்திரம் மாதிரி பரந்து விரிந்து கிடக்கிறது. வாயில் நுழையாத பெயர் கொண்ட சிறிய நாடுகளிலிருந்து கூட மிகத் தரமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் பெறுவதின் மூலம் பார்வையாளர்களுக்கு அடையாளம் காட்டப்படுகின்றன. விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பல இணையத் தளங்களில் பல திரைப்படங்கள் தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன. அதன் மீதான விவாதங்களும் சிலாகிப்புகளும் விமர்சனங்களும் செய்யப்படுகின்றன.

எனவேதான் தமிழிலும், ஏற்கெனவே மற்றவரால் எழுதப்பட்டு பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்களைப் பற்றி நாமும் எழுதுவதை தவிர்த்து மிகக் குறுகிய வட்டத்திலேயே அறியப்பட்டிருக்கிற சிறந்த திரைப்படங்களைப் பற்றி மாத்திரமே எழுத வேண்டும் என்பதை ஒரு கட்டத்தில் ஒரு விதியாகவே நிர்ணயித்து வைத்திருந்தேன். கூடுமானவரை இதை பின்பற்றவும் முயல்கிறேன்.

ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. ஏற்கெனவே மற்றவரால் எழுதப்பட்டிருந்தாலும் கூட நம்முடைய தரப்பையும் சொல்லி விட வேண்டும் என்கிற ஒரு தவிப்பு ஏற்படுமல்லவா? படம் பற்றின மற்றவர்களின் எண்ணங்களிடமிருந்து நம்முடையது முற்றிலும் விலகி வேறு திசையிலும் இருக்கலாமல்லவா? கலையின் அடிப்படை இயல்பே இதுதானே? 2+2 = 4  என்று யார் கூட்டினாலும் ஒரே விடை வர இதுவொன்றும் கணிதமல்லவே. பார்வையாளனின் அனுபவங்களை, நுண்ணுர்வுகளைப் பொறுத்து ஒரு படைப்பு கலைடாஸ்கோப் போல் வேறு வேறு வண்ணங்களையும் எண்ணங்களையும் வெளிப்படுத்த வைப்பதுதானே ஒரு சிறந்த கலைப்படைப்பின் அடையாளமாக இருக்க முடியும்?

அந்த வகையில் நான் சமீபத்தில் பார்த்த சிறந்த திரைப்படத்தைப் பற்றி இங்கு எழுத உத்தேசம். IN THE MOOD FOR LOVE.  நான் கவனித்த வரை இதைப் பற்றி உமாசக்தியும் கருந்தேள் கண்ணாயிரமும் ஏற்கெனவே எழுதியிருப்பதால் மேற்குறி்ப்பிட்ட சுயநிர்ணய விதியின் படி நான் இதை எழுதாமலிருப்பதுதான் நியாயமாக இருக்க முடியும். அதையும மீறி இதை எழுது எழுது என்று என்னைத் தூண்டுகிற உள்ளுணர்வின் இம்சையைத் தாங்க முடியாமல் இதை எழுதுகிறேன். பனிக்குடத்தை உடைத்துக் கொண்டு வெளிப்படுகிற சிசுவாகவோ, நேற்று உண்ட சில்லிசிக்கன் ஜீரணமாகாமல் வேறு வடிவில் வண்ணத்தில் வருகிறதாகவோ, இந்தப் பதிவை உங்கள் விருப்பத்தின்படியும் வெறுப்பின்படியும் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம்.



வெகுஜன சினிமா ரசிகர்கள், மாற்று சினிமா அல்லது கலை சினிமா என்று அறியப்படுபடுகிறவைகளைப் பற்றி  பொதுவாக எக்காளச் சிரிப்புடன்  இவ்வாறான 'விமர்சனத்தை' முன்வைப்பார்கள். 'இன்னா ஆர்ட்டு பிலிமு. ஆம்பளயும் பொம்பளயும் டிரெஸ் இல்லாம படுத்துக் கெடப்பாங்க". ஒருத்தன் பீடி பிடிக்கறதையும் ஒண்ணுக்கு போறதையும் அரை மணி நேரம் காமிப்பான்"

நானும் இப்படித்தான் முன்பிருந்தேன். கீஸ்லோவ்ஸ்கி, தார்க்கோவ்ஸ்கி என்று எவனாவது பினாத்திக் கொண்டு அருகே வந்தால் மிகவும்  காண்டாகி அவனை கிண்டலடிக்கத் தொடங்கி விடுவேன். அது போன்ற படங்களைப் புரியாமலிருப்பதிலிருந்து எழும்  தாழ்வுணர்வும், அதை நம்மால் எளிதி்ல் அணுக முடியாமலிருப்பது குறித்த ஆழ்மனதிலிருக்கும் எரிச்சலும் பயமுமே அதை கடக்கும் முயற்சியாக மேம்போக்கான கிண்டல்களாக வெளிப்படுகின்றன என்பது பின்னால்தான் புரிந்தது.

ஆக IN THE MOOD FOR LOVE திரைப்படத்தைப் பற்றி இவ்வாறான பாமர பாஷையில் விவரித்தால் "படம் வேற ஒண்ணுமில்லப்பா. இவன் பொண்டாட்டிய அவ புருஷன் வெச்சிருக்கான். அவ புருஷன் இவன் பொண்டாட்டிய வெச்சிருக்கான். நடுவுல இதுங்க ரெண்டும் சேந்து லவ்வுதுங்க. இத போட்டு அறு அறு அறுத்திருக்கான் பாரு. ஒரு 'மேட்டர்' சீன் கூட இல்ல. மொக்க வேஸ்ட்டுப்படம்"

படத்தின் குறுந்தகடு இடையில் நின்று நின்று என்னை வெறுப்பேற்றின இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? ஏன் என்னை ரொம்பவும் கவர்ந்தது?..

சொல்கிறேன். :)

suresh kannan

10 comments:

Mohan said...

இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு இரண்டு பதிவுகளாக அறிமுகம் மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்.அதுவே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தாலும்,பட விமர்சனத்தை முடிந்தவரை ஒரே பதிவிலேயே முடித்துக்கொள்ளலாமே!

R. Gopi said...

பில்ட் அப் ஜாஸ்தியா இருக்கே. கடைசியில் சொதப்பிவிடாதீர்கள் ப்ளீஸ்.

R. Gopi said...

உங்கள் கோரிக்கை நியாயமானது. எந்த விதமான பதிவாக இருந்தாலும் அதற்குப் பின்னூட்டம் மிக அவசியம். மனித மனம் ஏங்குவது recognition என்ற ஒன்றுக்குத்தான்.

நான் ஒரு பதிவரின் வலைப்பூவில் பார்த்தது இது. நிறைய பின்னூட்டம் இட்டவர்களின் பெயர்கள் தோன்றுகின்றன. நீங்களும் அதைச் செய்யலாம். பின்னோட்டம் இடுபவர்களை நீங்கள் recognise செய்வதும் நல்ல விஷயம்தானே.

Subbaraman said...

இன்னும் படத்திற்குள்ளேயே வரவில்லையா?
அருமையான படம், சு.க. இப்படத்தின் பின்னணி இசையும், கம்போடியாவில் வரும் கடைசி காட்சியும் என்னை மிகவும் கவர்ந்தது.

Anonymous said...

Sir, please create two static pages. go to layout, click posting, edit pages, click blue color new page button....then create archive bay dates and sitemap by categories as like nagarjunan in

http://nagarjunan.blogspot.com/

you can use the following two links

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

and

http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html

சி.பி.செந்தில்குமார் said...

you had make a very interesting itroduction about that film.good.(sorry for this english coment.tamil font not working in my system)

Venkat said...

Watched the movie yesterday after reading your post and liked it :-)

Thanks for identifying this movie for us - eagerly waiting for your second post on this movie...

Thanks

Venkat

Unknown said...

Thanks for mentioning my review Suresh ;))))

Anonymous said...

'கிளிஷேவான'---> what is its meaning? how do we spell tis in english?

Venkat said...

Hi Suresh,

I was checking your old posts and came across this one. What happened to the second part of this post?

Please post.

Anony,

It is cliche...

Thanks

Venkat R