Wednesday, February 03, 2010

அஞ்சுவண்ணம் தெரு

தோப்பில் முஹம்மது மீரானின் இன்னுமொரு சுவாரசியமான புதினம்.

நாஞ்சில் நாட்டின் பிரத்யேக வட்டார மொழியும் இசுலாமியச் சமூகப் பின்னணியில் இயங்குகிற காரணத்தால் ஆங்காங்கே இரைந்திருக்கிறஅரபிச் சொற்களும் வாசகனை ஒரு வேளை ஆரம்பத்தில் திணறடிக்கலாம். ஆனால் அது அதிகாலை குளிர் குளத்தில்  நீராடுவதைப் போலத்தான். மனதைத் திடப்படுத்தி முதல் முங்கை போட்டுவிட்டால் பிறகு எழுந்திருக்க மனதே வராத ஆனந்தத்தை மீரானின் புதினத்தின் மூலமாக அனுபவிக்க முடிகிறது.

கடலோர கிராமத்தின் கதை,  சாய்வு நாற்காலி, துறைமுகம்... என்று மீரானின் படைப்புகளில் தொடர்ச்சியாக இதை உணர்கிறேன். வழக்கமான கடலோர மனிதர்களைத் தவிர்த்து தறி நெசவுத் தொழிலில் ஈடுபடும் மனிதர்கள் இருந்தாலும் இந்தப் புதினத்தின் மையம் அவர்களைப் பற்றியல்ல. தொன்மங்களும் நம்பிக்கைகளும் நவீன காலத்தின் பரிணாமத்தில் மெல்ல சிதறுண்டுப் போவதை இந்தப் புதினம் விவரிக்கிறது. தான் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார் மீரான். இந்தச் சமூகப் புதினத்தை துப்பறியும் நாவல் போல் மிகுந்த சுவாரசியத்துடன் வாசித்து முடித்தேன்.


மலையாளத்து மகாராஜா சோள (?) பாண்டிய நாட்டிலிருந்து ஐந்து நெசவுக் குடும்பங்களை தருவித்து அவர்களுக்கான நிலத்தையும் ஒதுக்கி குடியமர்த்துகிறார். எனவேதான் அந்தத் தெருவின் பெயர் இயல்பாக 'அஞ்சு வண்ணம் தெரு'வாகிறது. 'அடக்கம் செய்யப்பட்ட தாய்'தான் அந்தத் தெரு மனிதர்களுக்கு தெய்வமாக இருக்கிறது. நாட்டார் மரபில் சிறு தெய்வங்கள் தோன்றும் அதே பின்னணிதான். மகாராஜா உலாவரும் போது அவரை மறைந்திருந்து பார்த்த தஞ்சாவூர் தாயும்மாவின் (ஹாஜரா) அழகில் மயங்கி மணம் முடிக்க தூது அனுப்புகிறார். ஒரு காபிருக்கு இசுலாமிய பெண்ணை மணம் முடிப்பதாவது? தந்தை கேட்கிறார் " மன்னன் உன்னை மனைவியாக்கி விடுவான். நீ காபிராக இறக்கப் போகிறாயா? ஈமானுள்ள முஸ்லிமாக இறக்க விரும்பிறியா?" மகள் சொல்கிறாள் "ஈமானுள்ள முஸ்லிமாக". "அப்படியானால் இந்த குழியில் இறங்கம்மா". மதத்திற்காக உயிருடன் புதைக்கப்படுவதை விரும்பி ஏற்றுக் கொள்ளும் அவள் 'அடக்கம் செய்யப்பட்ட தாய்' ஸ்தானத்தை அடைந்த புராதன நிகழ்வு அஞ்சுவண்ணம் தெருவின் ஆதி வரலாறு தெரிந்தவரான பக்கீர் பாவா சாகிப் மூலமாக வாப்பாவிற்கும் தெரிவிக்கப்படுகிறது.

அஞ்சுவண்ணம் தெருவில் ஜரிகை தாவணியும் அங்கவஸ்திரமும் பட்டு வேட்டியும் நெய்யக்கூடிய ஒரே தறிக்காரனான அப்பாஸ் முதலியின் மண்வீட்டை இடித்து ஷேக் மதார் சாகிப் 'நபீசா மன்ஸிலை' கட்டுகிறார்.  அந்தத் தெருவிலுள்ள தைக்கப்பள்ளியை விட அந்தக் கட்டிடம் உயரமாக இருப்பது ஆபத்து என்று பள்ளிவாசலை பராமரிக்கும் மைதீன் பிச்சை மோதீன் முதற்கொண்டு தெருவாசிகள் அனைவரும் சொல்கின்றனர். ஆனால் இதற்கொரு பரிகாரமுண்டு. தைக்காப்பள்ளியின் மேலே ரெண்டு மினாராக்கள் கட்டிக்கொடுப்பதுதான் அது. ஆனால் தொழில் சுணங்கியிருப்பதாலும் ஷேக் மதாப் சாகிப்பிற்கு விருப்பமில்லாததாலும் அதை நிறைவேற்ற முடிவதில்லை. தொழில் நொடித்து வீட்டில் அமீனா புகும் நிலை ஏற்படுகிறது. தெய்வத்தின் சாபம் என்றே தெருவாசிகள் இதைக் கருதுகின்றனர்.

பிறகு பாழடைந்த அந்த வீட்டினுள் பெண் தற்கொலையொன்று நிகழ்வதாலும் பேய்கள் இருப்பதாலும் யாரும் அதனருகே செல்வதில்லை. மகளுக்காக வீடொன்றை வாங்க முயலும் 'வாப்பா' எதிர்ப்பையும் மீறி அதை வாங்கி வீட்டின் பெயரை 'தாருல் சாஹினா' வாக மாற்றினாலும்  அவருடைய மகளும் மருமகனும் அதிருப்தியோடும் தெருக்காரர்கள் கிளப்பிவிடும் பீதியுடனும் அங்கு வாழ்கிறார்கள். இந்த இடத்திலிருந்து புதினம் நிகழ்காலத்தில் இயங்கத் துவங்குகிறது. அதன் பின்னர் அஞ்சுவண்ணம் தெருவில் ஏதேதோ சம்பவங்கள் நடக்கின்றன. மதத்தின் புராதனத்தன்மையும் நவீனத்தன்மையும் மோதிக் கொள்கின்றன. தைக்காப்பள்ளி கவனிப்பாரின்றி பாழாகிறது. 'அடக்கம் செய்யப்பட்ட தாய்க்கு' விளக்கேற்றவோ சந்தனத்திரி கொளுத்துவதற்கோ ஆளில்லை. மைதீன் பிச்சை மோதீன் மர்மப்பாம்பு கடித்து பள்ளிவாசலிலேயே இறக்கிறார்.

()

மீரான் இயல்பான வட்டார மொழியில் காலத்தை முன்னும் பின்னுமாக கடக்கின்ற உத்தியோடு இந்தப் புதினத்தை நகர்த்திச் செல்கிறார். மத நம்பிக்கைச் சார்ந்த ஆனால் பகுத்தறிவிற்கு ஒட்டாத விஷயங்களை தன்னுடைய மேதமையை நுழைக்காமல் அதனின் இயல்பிலேயே விவரித்திருப்பது நன்றாக இருக்கின்றது. பள்ளி வாசலை பராமரிக்கிற பாவப்பட்ட பாத்திரமொன்று மீரானின் படைப்புகளில் தொடர்ந்து சித்தரிக்கப்படும். இதிலும் அது 'மைதீன் பிச்சை மோதீனாக' வருகிறது. தைக்காப்பள்ளியில் தொடர்ந்து விளக்கு எரிவதற்கு தெருவாசிகளிடம் இரந்து கொண்டேயிருக்கிறார். "அடக்கம் செய்யப்பட்ட தாய் இன்னு இருட்டிலையாக்கும்" மம்முதம்மா என்றொரு பாத்திரம் இதில் முக்கியமானதும் சுவாரசியமாக சித்தரிக்கப்பட்டதுமாகும். அஞ்சுவண்ண தெருவின் பெரும் சண்டைக்காரியாக குழாயடியை கைப்பற்றியிருக்கும் அவள் தெருவாசிகளின் அந்தரங்கங்களை சண்டையில் போட்டு உடைக்கிறாள். 'எப்படி இவளுக்குத் தெரிந்தது' என்று தெருவாசிகள் திகைப்படைகிறார்கள்; ஆச்சரியப்படுகிறார்கள்; ஜின்னுவின் துணையுடன்தான் இது சாத்தியமாகும். அவளுடைய வரலாறு மைதீன் பிச்சை மோதீன் மூலமாக வாப்பாவிற்கு தெரியப்படுத்தப்படும் போது நமக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. சுதந்திரத்திற்காவும் தன்னுடைய மதத்திற்காகவும் உயிரை முன்வந்து இழந்த ஒரு தியாகியின் மகள். வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களில் இவ்வாறு ஆயிரக்கணக்கான சித்திரங்கள் உள்ளன.  

பொதுவாக எல்லாப் படைப்புகளிலும் பிரதியை உருவாக்குகிற ஆசிரியனும் ஒரு பாத்திரமாக உள்நுழைந்திருப்பான். அப்படியாக இதில் 'வாப்பா'வரும் பாத்திரம் நூலாசிரியர் மீரானாக இருக்கக்கூடும் என யூகிக்கிறேன். இசுலாமிய மதத்தின் சில கூறுகளை அறியாமையில் ஏற்பட்டிருக்கிற மூடத்தனம் என்ற புரிதல் இவருக்கு இருக்கிறது. தைக்காப்பள்ளிக்கு மினாராக்கள் கட்டிக் கொடுக்காததால்தான் வீட்டில் துன்பங்கள் நிகழ்கின்றன என்று தீவிரமாக நம்பும் மகளையும் மருமகனையும் இவர் தெளிவுப்படுத்த முயன்று கொண்டேயிருக்கிறார். அவர்கள் தரும் எரிச்சலையும் சலிப்பையும் அறிவின் துணையுடன் கடக்கிறார். அதன்படியே அந்தக்குடும்பம் முதலில் சில பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டாலும் பின்னர் நல்ல நிலைமைக்கு ஆளாகிறது.

நாவலின் பிற்பகுதி கசப்பான வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது. மதத்தை நவீனப்படுத்துவதாகச் சொல்லும்   ஒரு கூட்டத்திற்கும் மரபின் மீதான நம்பிக்கைவாதிகளும் மோதல் நிகழ்கின்றன. இரு குழுக்களின் மோதலில் வேம்படி பள்ளி நீதிமன்றத்தின் கைக்குப் போகிறது. நீதிமன்றத்தின் சார்பாக ரீசிவராக நியமிக்கப்படுபவர் ஓர் இந்து. எல்லா வரவு செலவுகளையும் அவரிடம் ஒப்படைக்கவும் எந்தவொரு அனுமதிக்கும் அவரை நம்பியிருக்கவும் வேண்டியிருக்கிறது. இதிலுள்ள முரண்நகையை பூடகமாகச் சொல்லியிருக்கிறார் மீரான். எந்தவொரு வன்முறைச்சம்பவத்திற்கும் அப்பாவி இசுலாமியர்கள் பலிகடாக்களாக முன்நிறுத்தப்படுவதையும் சில நிகழ்வுகள் சொல்லிச் செல்கின்றன.

தறியின் நெசவு போலவே புரானத்தோடும் மத ஆன்மீகத்தோடும் இயைந்து இயைந்து கதை சொல்லியிருக்கும் மீரானின் படைப்புத் திறமைக்காகவும் வட்டார மொழிச் சுவைக்காகவும் கட்டாயம் வாசிக்கப்பட வேண்டிய புதினம் - அஞ்சுவண்ணம் தெரு.

அஞ்சுவண்ணம் தெரு,(நாவல்) அடையாளம் வெளியீடு, 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம்,621310 , முதல் பதிப்பு , 2008, விலை ரூ.130/ -

நாவல் குறித்த  ஜெயமோகனின் பதிவு
                                
                                 அ.ராமசாமியின் பதிவு
                           
                                 களந்தை பீர்முகம்மதுவின் பதிவு

மீரானின் 'துறைமுகம்' நாவல் குறித்த பதிவு

suresh kannan

11 comments:

கே.என்.சிவராமன் said...

படிக்கணும்னு வச்சிருக்கேன். இந்த இடுகையை வாசிச்சதும் உடனே படிக்கணும்கற ஆர்வம் வந்திருக்கு.

உணர்ந்து எழுதியிருக்கீங்க.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

வினவு said...

கடலோர கிராமத்தின் கதை நினைவுக்கு வருகிறது. இந்த நாவலையும் படிக்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதையும் இவர் ஏனைய படைப்புக்களையும் இணையத்தில் வாங்க முடியுமா? பதிப்பக முகவரி தரவும்.
நன்றி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

போன வருடம் புத்தகச் சந்தையில் வாங்கி உடனே படித்தது. இவரது மற்ற நாவல்கள் அளவிற்கு இது என்னைக் கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், பிடித்திருந்தது.

பிச்சைப்பாத்திரம் said...

//பதிப்பக முகவரி தரவும்.//

யோகன்: மறந்தே போனேன். மன்னிக்கவும். இப்போது இணைத்து விட்டேன்.

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி சுரேஷ்.

முகமது மீரானின் புத்தக வரிசையில் கூனன் தோப்பும் பிரபலமானது.

நேசமித்ரன் said...

புத்தகத்துக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறது உங்கள் எழுத்து !!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக்க நன்றி!
முகவரிக்கு

தமிழன் வீதி said...

பொதுவாக இஸ்லாமிய எழுத்தாளர்கள் தங்களது இனம் சார்ந்து எழுதுவது மிகக் குறைவு. எங்கே அப்படி எழுதினால் வெகுஜன ரசிப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற பயத்தினால், அவர்கள் பொதுவான பாணியையே கையாளுகின்றனர். ஆனால் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான், தனது தடம் மாறாமல் அந்தப் பணியை தொடர்ந்து செவ்வனே செய்துவருகிறார்.

பிராமண கதை சொல்லிகள், பெரும்பாலும் தங்களது வாழ்வியல் சூழலில், அவர்கள் வீட்டில் பயன்படுத்தும் சொற்களை கொண்டே சுதந்திரமாக எழுதுகிறார்கள். வேறு யாரும் தங்களது இனம் சார்ந்து (அதிகமாக)எழுதுவதில்லை.

இயக்குனர் அமீர் கூட ஒரு நேர்காணலில் (இஸ்லாம் தொடர்பான ஒரு வார இதழில்) " பருத்தி வீரன், ராம் போன்ற கதைகள் எனது சமுகத்தாரின் வாழ்வியல் பிரதிபலிப்புக் கிடையாது. அந்த கதைகளின் வாழ்வியல் போக்கும் எனக்கு தெரியாத ஒன்று. தேவர் சமுகத்து வீட்டில் எப்படி பேசிக் கொள்வார்கள் என்பது ஒரு இஸ்லாமியனுக்குத் தெரியாததல்லவா? இருந்தும் நான் அதைத்தான் எடுக்கமுடியும். ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட, பெரும்பாண்மை சமுகத்தைப் பற்றிய படங்களைத்தான் என்னால் எடுக்கமுடியும். அத்தகையச் சூழல் தான் இங்கு நிலவுகிறது". என்றார். அது உண்மையும் கூட...

அந்தவகையில் தோப்பில் முகமது மீரானின் எழுத்து பாரட்டுக்குறியது.

நன்றி.
தோழன் மபா

இளங்கோ-டிசே said...

தோப்பில் முக‌ம‌து மீரானை (க‌ட‌லோர‌க் கிராம‌த்தின் க‌தை த‌விர‌)அவ்வ‌ள‌வாய் நான் வாசித்த‌தில்லை. அண்மையில் ஈழ‌த்தில் (கிழ‌க்கு மாகாண‌த்தில்) முக‌ம‌து மீரானின் புத்த‌க‌ வெளியீடு ந‌ட‌ந்த‌ததாக‌வும், மிகுந்த‌ வ‌ர‌வேற்புப் பெற்ற‌தாக‌வும் அடையாள‌ம் சாதிக்குட‌ன் உரையாடும்போது அறிந்தேன்.
....
சுரேஷ், முக‌மது மீரானை விரும்பி வாசிப்ப‌தால் உங்க‌ளிற்கு புன‌த்தில் குஞ்ஞ‌ப்துல்லாவின் நாவ‌ல்க‌ள் (மஹ்ஷூர் வெளி, மீஸான் க‌ற்க‌ள்)பிடிக்கும் என்று நினைக்கிறேன். கால‌ச்சுவ‌டு வெளியீடாய் குள‌ச்ச‌ல் மு யூசுப்பின் அருமையான‌ மொழிபெய‌ர்ப்பில் வ‌ந்திருக்கின்ற‌து.

-dj

பொன் மாலை பொழுது said...

வைக்கம் முகமது பஷீர் எழுதிய "பாத்திமாவின் வெள்ளாடுகள்", "எங்கள் தாத்தாவிர்கொர் ஆணை இருந்து "
போன்ற நாவல்களில் அவர் தான் சார்ந்த இஸ்லாம் இன சூழலில் கதைகளை புனைந்திருப்பார்.பிரமாதமாக இருக்கும். அனைவரும் படித்து இன்புறவேண்டியது. பல வருடங்களுக்கு முன்னாள் பள்ளி நாட்களில் கோடை விடுமுறையில் ஊரில் இருந்த நூலகத்தில் தமிழ் மொழியாக்கத்தில் சாகித்ய அகாடமி வெளியீட்டில் படித்ததுண்டு.