Wednesday, August 26, 2009

காசி - தமிழ்மணம் - 05ம் ஆண்டு நிறைவு - கேள்வி-பதில்

இந்தக் கேள்விகள் என்னுடைய தகுதிக்கும் மீறியவை என்பதை உணர்ந்தாலும் பதிலளிக்கச் சொன்னவர் நண்பர் காசி என்பதாலேயே இது தவிர்க்க முடியாததாகிறது. சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய வலைப்பூவை துவங்குவதற்கு காசி எழுதிய ஒரு கட்டுரைத் தொகுப்பே காரணமாக அமைந்திருந்தது. அவ்வகையில் நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அதை சிறிதாவது தீர்ப்பதற்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள உத்தேசம்.




1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இணையத்தில் துறைசார் தமிழ் உள்ளடக்கங்கள் இன்னும் அதிகமாக ஏற்றப்பட வேண்டும். மதுரைத் திட்டக் குழுவினரின் ஆத்மார்த்தமான உழைப்பின் காரணமாக தமிழின் தொன்மையான இலக்கியங்கள் இணையத்தில் ஏற்றப்பட்டிருந்தாலும் அது பெரும்பாலும் பாரதியோடு நின்று விட்டிருக்கிறது. இவையோடு நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளின் பிரதிகளும் சேர்க்கப்பட வேண்டும். நூலகம்.நெட் தளத்தை இதற்கு சிறந்த முன்னுதாரணமாக சொல்லலாம். யாழ்ப்பாண நூலக எரிப்பு போன்ற அவலங்கள் இனியும் ஒரு முறை நிகழாமல் இருக்க சாத்தியமானவை அனைத்தையும் இணையத்தில் ஏற்றிவிட்டால் அவற்றிற்கொரு சாஸ்தவதான அந்தஸ்து கிடைப்பதோடு உலகத் தமிழர்கள் அனைவரும் கையாளும் எளிதான நிலையும் ஏற்படும். ஆனால் இவ்வாறான முயற்சிகள் ஆங்காங்கே தனித்தனி நபர்களால் செயல்படாமல் திட்டமிட்ட ஒருங்கிணைப்போடு நிகழ்த்தப்பட்டால் சிறப்பாக இருக்கும். இது போன்ற அனைத்துத் துறை சார்ந்த நூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் இணையப்பதிவுகளும் எழுதப்பட்டு ஒரே இடத்தில் கிடைக்குமாறு தொகுக்கப்பட்டால் அது இணையத்தின் பயன்பாட்டை அடுத்த தளத்திற்கு நகர்த்திச் செல்ல உதவும் என்று நம்புகிறேன்.


2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

இணையத்தின் பயன்பாடு தமிழகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்துவருவதாக புள்ளிவிபரங்கள் கூறினாலும் இன்னமும் கூட தகவல் நுட்பப் புரட்சி பெரும்பான்மையான மக்களை சென்று அடையவில்லை என்பதே என் அவதானிப்பு. நகரங்களில் மாத்திரமே தகவல்நுட்பத்தின் பயன்பாடு குறிப்பிடத்தகுந்த அளவு உள்ளது. ஒரு கணினியை இதுவரை கண்ணால் கண்டிராதவர்கள் கூட தமிழக கிராமங்களில் இன்னும் சிலர் இருக்கலாம். உயர்கல்வி பெற்றவர்கள்தான் கணினியை கையாள முடியும் என்பதான மனத்தடைகள் நம்மிடையே உள்ளன. எளிய நுட்பங்களை கையாளக்கூடிய தைரியத்தை இத்தகைய மனத்தடைகள் முறியடிக்கின்றன. இவைகளைத் தாண்டி வரக்கூடிய நிலையை அரசும் தன்னார்வ நிறுவனங்களும் ஏற்படுத்த வேண்டும். இணைய வாசிப்பைப் பொறுத்தவரை பெரும்பான்மையான செய்தித்தாள்கள் இணையத்தில் வாசிக்கக் கிடைத்தாலும் அச்சு வடிவில் வெளிவரும் செய்தித்தாள்களை இது எவ்வகையிலும் பாதிக்கவில்லை. மாறாக அவற்றின் விற்பனை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே வருகிறது. வெளிநாட்டுவாழ் தமிழர்கள் மாத்திரமே இணையச் செய்தித்தாள்களை அதிகளவில் வாசிக்கின்றனர் என்று கருதுகிறேன். ஆச்சரியகரமாக ஆமை வேகத்தில் இயங்கும் அரசுத்துறைகளின் சில சேவைகளை இணையத்திலேயே பெற முடிகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இன்று இணையத்திலேயே பெற்றுக் கொள்ள முடியும். மின்கட்டணத்தை இணையத்திலேயே செலுத்த முடிகிறது. இவையெல்லாம் வரவேற்கத்தக்க முயற்சிகள்தான் என்றாலும் நுட்பத்தை பெரும்பான்மையாக பயன்படுத்திக் கொள்ளும் பாதையில் நாம் கடக்க வேண்டிய தூரம் மிக நீளமாக இருக்கிறது.


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

பலவிதமான திறமூல மென்பொருட்களை தமிழுக்கு ஏற்றவாறு உருவாக்கியதிலும் எழுத்துரு சார்ந்த பல ஆரம்ப குழப்பங்களை தீர்ப்பதற்கும் தன்னார்வலர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. தமிழ் விக்கிபீடியா குறித்த விழிப்புணர்வு அதிகமில்லை என்றே கருதுகிறேன். இது குறித்த விழிப்புணர்வை ஒரு இயக்கமாகவே செய்யலாம். தமிழ் விக்கிபீடியாவை விட ஆங்கில விக்கிபீடியாவை அதிகம் பயன்படுத்துவதற்கு ஆங்கிலத்தில் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிற மயக்கம் நமக்கு இருப்பது ஒரு காரணமாய் இருக்கலாம். தமிழ் விக்கிபீடியாவில் பல்வேறு துறை சார்ந்த கட்டுரைகள் விபரப் பிழைகள் திருத்தப்பட்டு இன்னும் அதிக அளவில் இணைக்கப்பட வேண்டும்.

4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

கணினியில் தமிழால் எழுத முடியும் என்பதே இன்னும் பல நபர்களுக்கு - கணினி பயன்படுத்துபவர்கள் உட்பட - ஆச்சரியமான செய்தியாக இருக்கிறது. கணினி என்பது நம் கட்டளைகளை நிறைவேற்ற உதவும் ஒரு இயந்திரம்தான் என்கிற அடிப்படையை மறந்துவிடுகிறார்கள். கணினியில் தமிழ் பயன்படுத்துவது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த முயலலாம். கணினி சார்ந்த நம் செயல்பாடுகளை மெல்ல மெல்ல தமிழிலேயே செய்வதற்கான புள்ளியை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளைச் செய்யலாம்.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக
வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?


அச்சு ஊடகத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து இன்று யார் வேண்டுமானாலும் தங்களின் எண்ணங்களையும் கருத்துக்களையும் தணிக்கைத் தடையின்றி எழுதி அதை உடனே பதிப்பித்து உடனே சில நூறு நபர்களின் பார்வைக்கும் எடுத்துச் செல்ல முடிகிறது. மிகுந்த முயற்சிக்குப் பின் வெளியிடப்படும் ஒரு அச்சு ஊடக சிற்றிதழக்கு கூட சாத்தியமில்லாதது இது. தகவல்நுட்பப் புரட்சியால் ஏற்பட்டிருக்கிற இந்த நல்ல வாய்ப்பை நாம் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்வேன். நேர்ப்பேச்சில் நாம் பெரும்பாலும் உரையாடுகிற அரசியல், சினிமா குறித்த கிசுகிசுக்களே அதிகம் எழுத்திலும் பதியப்படுகின்றன. ஆரம்ப உற்சாகத்தில் எழுத வரும் பலர் இன்னும் அந்த நிலையிலிருந்து மேல்நோக்கிச் செல்லாமல் அங்கேயே தங்கிவிடுகின்றனர்; சிலர் அந்த உற்சாகமும் வடிந்து எழுதுவதிலிருந்து விலகி விடுகின்றனர். வம்புப் பேச்சுகள், அதனால் ஏற்படும் சச்சரவுகள், அவதூறுகள், ஆபாசப் பின்னூட்டங்கள் போன்றவற்றிலேயே பெரும்பாலான சக்தி விரயமாகிறது. மற்றவர்களின் கவனத்தை உடனே கவர பரபரப்பான தலைப்புகளை மாத்திரம் வைத்து உள்ளடக்கத்தில் ஒன்றுமே இல்லாதிருப்பது, செய்தித்தாள்களில் வரும் செய்திகளை அப்படியே மறுபிரசுரம் செய்வது போன்றவை வாசிப்பவர்களுக்கு சோர்வையும் அவநம்பிக்கையையுமே தோற்றுவிக்கின்றன.

அவ்வாறில்லாமல் தம்முடைய பணிசார்ந்த அல்லது தமக்கு விருப்பமான துறையைப் பற்றின ஆழமான கட்டுரைகளை எழுத முயல வேண்டும். பின்னூட்டங்களை பெரிதும் எதிர்பார்க்கவோ நம்பவோ கூடாது. தொடர்ந்த செயல்பாடுகளின் மூலம் தானாகவே ஒரு வாசகர் வட்டம் உருவாவதை நீங்கள் பிற்பாடு உணர முடியும்.


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

திரட்டி ஒன்றை உருவாக்குவது குறித்து காசி எழுதின ஆரம்பப் பதிவை இன்னும் என்னால் நினைவு கூர முடிகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதப்பட்டுக் கொண்டிருந்த பதிவுகள் தமிழ்மணம் மூலம் அதிக கவனத்தைப் பெற ஆரம்பித்ததும் இன்னும் பல உற்சாகமான பதிவுகள் பல்கிப் பெருகியது. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டியும் இணையச் செயல்பாட்டில் தமிழ் மணத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. என்னுடைய வலைப்பூவிற்கு வரும் பார்வையாளர்கள் குறித்த விபரங்களைக் காணும் போது பலரும் தமிழ்மணம் மூலமாகவே வருவதைக் கவனிக்க முடிகிறது. பரிந்துரை, மென்னூல் நூலாக்கம், திரட்டியில் வலைப்பூவை இணைக்கும் செயற்பாட்டை எளிமைப்படுத்தியது, பதிவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுப்படுத்துவது, ஆக்கப்பூர்வமான பதிவர்களை உற்சாகப்படுத்த அவர்களின் திறமையாக எழுதப்பட்ட பதிவுகளை தேர்ந்தெடுத்து இணைத்தது, அதிகம் வாசிக்கப்படும் பதிவுகளை தனித்து தெரியச் செய்தது.. போன்ற செயற்பாடுகள் முக்கியமானவை. இவற்றில் சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றையும் மீறி இவை சிறப்பாக செயல்பட்டதாகவே கருதுகிறேன்.

திரைமணம் போன்று துறைசார்ந்த பதிவுகளுக்கு தனித்தனி திரட்டிகளை உருவாக்கலாம். சிறப்பாக எழுதப்படும் பதிவுகளை உற்சாகப்படுத்த இன்னும் அதிக முயற்சிகள் எடுக்கலாம். வாசகர் பரிந்துரைகளில் எழும் சர்ச்சைகளைத் தவிர்க்க வெளிப்படையான செயற்பாட்டு முறையை ஏற்படுத்தலாம். தொடர்ந்து எழுதப்படும் மோசமான வலைப்பூக்களை திரட்டியிலிருந்து நீக்கிவிடலாம்.

தமிழ்மணத்திற்கு என்னுடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

suresh kannan

4 comments:

ஜோசப் பால்ராஜ் said...

5 ஆண்டுகளை கடந்து ஆறாம் ஆண்டில் அடி வைக்கும் தமிழ்மணம் திரட்டிக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் திரட்டிகளில் தமிழ்மணத்திற்கு என்று தனி இடம் எப்போதும் இருக்கும்.

வாழ்க உங்கள் பணி.

தமிழ்நதி said...

தமிழ்மணத்தின் பணிகள் தொடர வாழ்த்துக்கள். என்னைப்போன்றவர்களின் ஆக்கங்கள் கவனத்தைப் பெறவும் பிறகு அச்சில் ஏறவும் நதிமூலமாக தமிழ்மணமே இருந்தது என்பதை என்றும் மறவேன். ‘பூங்கா’போன்ற இணைய இதழை மீண்டும் ஆரம்பித்தால், தரமான எழுத்துக்களைத் தேடியலைய வேண்டியிராது. குறிப்பிட்ட சிலரின் பக்கங்களுக்கே மீண்டும் மீண்டும் சென்று வாசிக்கும்போது, புதிதாக வந்து நன்றாக எழுதிக்கொண்டிருக்கும் பலரைத் தவறவிடக்கூடும். அதனை ‘பூங்கா’போன்ற சஞ்சிகை நிவர்த்தி செய்யும்.

Unknown said...

நீண்ட காலமாக பதிவுகள் எழுதிவரும் உங்களின் பதில்கள் மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளன. தமிழ்மண நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இரா. வசந்த குமார். said...

//சாஸ்தவதான

இது 'சாஸ்தவதான' அல்ல. வாத்தியாரைச் சரியாகப் படித்துப் பின் எழுதவும்.