Thursday, March 19, 2009

பழைய டெல்லியும் கறுப்புக் குரங்கும்

இந்தி மொழியோடும் இந்திப் படங்களோடும் எனக்கு அதிகம் பரிச்சயமில்லை. சிறுவயதுகளில் பொழுதுபோக்கிற்கு வேறுவழியில்லாத சூழலில் பழைய தூர்தர்ஷனில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் படங்களை வைஜயந்தி மாலா போன்றவர்களுக்காக பார்ப்பதுண்டு. யானைகளை வேடிக்கைப் பார்க்கும் நோக்கத்தில் திரையரங்கில் பார்த்த 'அன்னை ஓர் ஆலயத்தின்' இந்திப் பதிப்போடு (Maa) அந்தத் தொடர்பு அறுந்து போயிற்று. சில வருடங்கள் கழித்து பதின்மங்களில் இந்தி மொழித் திரைப்படம் என்ற பிரக்ஞையோடு பார்த்தது RGV-யின் ரங்கீலா. ரஹ்மானின் பிரமிப்பூட்டின இசை, சற்றும் புரியாத வேற்று மொழி திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வை மறக்கச் செய்தது. பிறகு மாற்றுத்திரைப்படங்களின் பரிச்சயம் ஏற்பட்ட பிறகு வணிக நோக்கில் எடுக்கப்படும் திரைப்படங்களின் மீது ஒரு ஒவ்வாமையே ஏற்பட்டு விட்டது. "ஹே ஜிந்தகி...." என்று வண்ண வண்ண விளக்குகள் பின்னணியில் ஒளிர தலையில் பட்டு ரிப்பன் கட்டின கதாநாயகன் தோன்றும் திரைப்படங்கள்... என்கிற அலட்சியம் காரணமாக ஷாரூக்கும் அஜய் தேவ்கனும் உலவும் பிரதேசத்திற்கு செல்லாமலேயே இருந்தேன்.

ஆனால் சமீபத்திய சில வருடங்களில் இந்தி சினிமாவின் முகமே மாறிக் கொண்டே வருகிறதை உணர முடிகிறது. வணிகப்படங்கள் ஒரு பக்கம் வெளிவந்துக் கொண்டிருந்தாலும் அதற்கு இணையாக அவற்றிலிருந்து ஒதுங்கி புதிய சுவாசக் காற்று போல புது முயற்சிகளும் வெளிவருகின்றன. பெருநகரங்களில் மல்டிபிளக்ஸ் ரசிகர்களை நோக்கி எடுக்கப்படும் படங்களாக இவை இருக்கின்றன. பெரும்பாலும் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படங்கள் வணிகநோக்கில் சுமாரான வெற்றியைப் பெற்றாலும் முற்றிலும் புதியதொரு காண்பனுபவத்தை அளிக்கின்றன. Dus Kahaniyan, A Wednesday, Aamir, A life in a metro போன்ற சமீபத்திய மாற்றுத் திரைப்படங்கள் இந்திய சினிமாவிற்கான சர்வதேச நம்பிக்கையைத் தருகின்றன. அப்படியொரு படம் சமீபத்தில் பார்த்த Delhi6.

Photobucket

படம் பெரும்பாலும் பழைய டெல்லியை பின்னணிக்காட்சிகளாக கொண்டு நகர்கிறது. இந்த பழைய டெல்லி புதுடெல்லி என்பது சென்னையில் வடசென்னை, தென்சென்னை ஆகிய பிரிவைப் போன்றது. இதில் வடசென்னையின் ஆன்மாவை எந்த தமிழ்த் திரைப்பட இயக்குநரும் தம்முடைய படைப்பில் இன்னும் முழுமையாக பிரதிபலிக்கவில்லை என்றே கருதுகிறேன். 'மெட்ராஸ் தமிழைப்' பேசும் அடித்தட்டு மக்களை காட்டி விட்டால் வடசென்னையை காட்டி விட்டதாக கருதுகிறார்கள். வடசென்னை என்பது அது மாத்திரமல்ல. காசிமேடு முரட்டு மீனவர்கள் தொடங்கி தங்கவியாபாரம் செய்யும் செளகார்பேட்டை சேட்டுகளும், பனியாக்களும், தேவராஜ்முதலி தெரு கோமுட்டி செட்டியார்களும், போரினால் பர்மாவிலிருந்து வந்த அகதிகளும், துறைமுகத்தில் அருகில் இருப்பதனால் வியாபார வசதிக்காக வந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களும், பல தலைமுறைகளாக இங்கேயே செட்டிலான துலுக்கர்களும், போர்ச்சுக்கீசிய தெருவில் ஆங்கிலோ-இந்தியன் குடும்பங்களும், ஆர்மேனியன் தெருவும்... என வினோதமான கலவையது. இந்தப்படத்திலும் அப்படியானதொரு கலவையின் சாயல்களைக் காண முடிகிறது.

அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கும் இந்தியக் குடும்பத்தின் வயதான தாய்க்கு (வஹீதா ரஹ்மான்) இருதயக் கோளாறின் காரணமாக சில காலம் மாத்திரமே வாழவிருக்கும் சூழ்நிலை. பழைய டெல்லியில் தனது பாரம்பரிய வீட்டில் தன்னுடைய மரணம் நிகழ வேண்டுமென விருப்பப்பட்டு அங்கு சென்று வாழ முடிவெடுக்கிறார். அவரை அழைத்துச் செல்ல யாரும் முன்வராத சூழ்நிலையில் அவருடைய பேரன் ரோஷன் (அபிஷேக் பச்சன்) துணைக்கு வருகிறான். நியூயார்க்கிலேயே பிறந்து வளர்ந்த அவனுக்கு பழைய டெல்லியின் நெரிசலும் கலாசாரமும் மூச்சு முட்ட வைக்கின்றன. ஆனால் மேலுக்கு பார்ப்பதற்கு முரட்டுத்தனமாய் இருக்கும் மக்களின் உள்ளார்ந்த அன்பை பிறகு புரிந்து கொள்ள முடிகிறது. பக்கத்து வீட்டிலிருக்கும் பிட்டுவுடன் (சோனம் கபூர்) நேசம் ஏற்படுகிறது. அதை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் வேறொரு காரணத்தினால் அந்தப் பகுதி மக்களின் மீது வெறுப்பேற்பட்டு அமெரிக்காவிற்கே திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறான். அவனுடைய பாட்டியும் இதே முடிவை எடுக்கிறார் என்பது ஆச்சரியம். ஆனால் அவ்வாறு அவன் திரும்ப முடிவதில்லை. ஏன் என்று அறிய திரைப்படத்தைப் பாருங்கள்.

()

'ரங்தே பசந்தி' திரைப்படத்தை இயக்கிய ராக்கேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா இதை இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட முக்கால் படமும் கவிதையான தருணங்களின் மூலம் இயங்குகிறது.

வீட்டிலிருக்கும் புறாக்களை பறக்க வைத்து மகிழும் மதனகோபால் (ஓம்புரி), அவ்வாறே சுதந்திரமாக பறக்க முயலும் தன்னுடைய மகளை (பிட்டு) கட்டுப்பெட்டித்தனத்தால் ஒடுக்கி வைக்கிறார். இவரும் இவரின் சகோதரரான ஜெய்கோபாலும் எலியும் பூனையுமாக எப்போதும் முறைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இந்தப் பகைமை இவர்களின் குடும்ப உறவினர்களைப் பாதிப்பதில்லை. தங்களுடைய வீட்டைப் பிரிக்கும் சுவற்றில் துளையை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களின் உணர்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தி இரண்டு பிரதேச மக்களையும் பகைமை கொண்டவர்களாக தோற்றமளிக்கச் செய்தாலும் மக்கள் எதிர்பிரதேச மக்களோடு அன்போடேயே உறவாட விரும்புகிறார்கள் என்பதை குறியீடாக இந்தக் காட்சிகள் சொல்கிறதோ, என்னவோ?

வயதான லாலாஜயின் இளம் மனைவிக்கும் அந்தப் பகுதியின் போட்டோகிராபர் ஒருவனுக்கும் திருட்டுத்தனமாக உறவிருக்கிறது. இருவரும் கட்டிலில் உருள்கையில் காலடியில் சிக்கிக் கொள்ளும் ரிமோட்டின் மூலம் தொலைக்காட்சியில் சேனல் மாறி மாறி இருவரும் செய்து கொண்டிருக்கும் காரியத்திற்கு ஏற்ப செய்திகளும் காட்சிகளும் ஒளிபரப்பாவது (ராக்கெட் கிளம்பும் காட்சி) நகைச்சுவையாக இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன் வடமாநிலமொன்றில் மனிதக் குரங்கு எதிர்படும் மனிதர்களை தாக்கி விட்டு மறைந்தவிடுவதாக கடும்பீதி ஒன்று உலவியது. அந்தக் குரங்கை பார்த்தாக நிறைய வதந்திகளும் கட்டுக்கதைகளும் உலவியதே ஒழிய யாரும் அதை நேரில் பார்த்ததாக தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை மிக ஆழமாக தன்னுடைய படம் நெடுக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அந்தக் குரங்கு வேறொன்றுமில்லை, நம்முடைய மனத்தில் இருக்கும் வன்முறையும் குரோதமும்தான் என்பதுதான் இயக்குநர் சொல்ல விரும்புவது. மேலும் அங்கு நிகழும் 'ராம லீலா'வின் நாடகக் காட்சிகளையும் தொடர்ந்து நிகழும் சம்பவங்களையும் பிணைத்திருப்பது சுவாரசியமானதாக இருந்தது.

ரோஷனுக்கும் பிட்டுவிற்கும் ஏற்படும் நேசம் மிக மிக இயற்கையாக நாடகத்தனமின்றி சொல்லபட்டிருக்கிறது. போட்டோகிராபரின் மூலம் தன்னுடைய மாடல் கனவு நிறைவேறப் போவதாக நம்பிக் கொண்டிருக்கும் பிட்டுவிடம் தன்னுடைய காதலை சொல்ல தயங்குகிறான் ரோஷன். ஆனால் ரோஷனின் தந்தையின் நண்பரான அலி (ரிஷி கபூர்) தன்னுடைய நிறைவேறாத காதலினால் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாத தன்னுடைய தனிமையை உணர்த்தி அவனை ஊக்கப்படுத்துகிறார். அவர் இசுலாமிய மதத்தைச் சேர்ந்த ரோஷனின் தாயைத்தான் (தன்வி ஆஸ்மி) இளம் வயதில் விரும்பியிருக்கிறார். ஆனால் அவளை விரும்புகிற இன்னொருவரான ரோஷனின் தந்தை மத எதிர்ப்புகளை பிடிவாதமாக சந்தித்ததினால் திருமணம் செய்துக் கொள்ள முடிகிறது. இதைப் பற்றி ரோஷனும் அலியும் உரையாடுவது நெகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னுடைய தாயை காதலித்தவனுடன் நாயகன் சகஜமாக உரையாடும் இந்த மாதிரியான காட்சியை எந்தவொரு திரைப்படத்திலும் பார்த்த நினைவில்லை.

நீயுயார்க்கிலிருந்து ரோஷன் முழுவதுமாக திரும்பியிருக்காத மனநிலையை பழைய டெல்லியின் மசூதி அருகே அமெரிக்க சுதந்திரச் சிலை இருப்பதாக ரோஷனக்கு தோன்றுவதை வைத்து உணர முடிகிறது. பழைய டெல்லியின் ஏதோ ஒரு கதவை திறந்தவுடன் நியூயார்க்கின் வீதியில் இந்தியக் கலாசாரம் வீசும் மக்கள் உலாவுவதாக கற்பனை செய்யும் பாடலொன்று சிறப்பான முறையில் பதிவாகியிருக்கிறது.

()

முன்பே சொன்னது போல் கவிதைக் கணங்களால் நிரம்பி ததும்புகிற இந்தப்படம் கடைசிப்பகுதியில் ஒரு மோசமான மத எதிர்ப்புப் பிரச்சாரப்படமாக திசை திரும்புகிறது. கருப்புக்குரங்கை முன்வைத்து இந்துக்களும் முஸ்லிம்களும் கலவரத்தில் ஈடுபடுகின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்டதின் மூலக்காரணத்தை பாவனை செய்வதாக இந்தக் காட்சிகள் அமைந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழ்ப்படங்களில் ஆர்ப்பாட்டமான வில்லனாக வரும் அடுல் குல்கர்னியின் திறமையாக வடிவமைக்கப்பட்ட அப்பாவித்தனமான பாத்திரத்தை நிச்சயம் நீங்கள் பார்க்க வேண்டும். கூடவே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவராக நடிக்கும் திவ்யா தத்தாவையும்.

ஓட்டகத்தைப் போலவே தோன்றும் அபிஷேக் பச்சனை சில கணங்களிலேயே பிடித்துப் போகிறது. அந்த மாதிரியான பிரியமானதொரு நடிப்பை தந்திருக்கிறார்.

Photobucket

இந்தப்படத்தின் நாயகியான சோனம் கபூரைப் பற்றி தனிப்பதிவே எழுத வேண்டும். (அனில் கபூரின் மகளாமே!) அம்மணியை நாளெல்லாம் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பது போன்று அப்படியொரு செளந்தர்யம். படம் முழுக்க மேலேயிருந்து இறங்கி வந்த தேவதை போலவே உலவுகிறார். இவருக்கு சம்மதமானால் என்னுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் முப்பத்தெட்டாயிரத்து இருநூற்று பன்னிரெண்டு ரூபாயை செலவழித்தாவது இவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம். ("ஆசை, தோசை, அப்பளம், வடை" - என் மனச்சாட்சி). இந்த விஷயத்தில் தமிழத் திரைப்பட ரசிகர்களின் ரசனையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஜாக்கி சானுக்கு உறவோ என்று நினைக்க வைக்கிற குஷ்புவில் இருந்து இடுப்பு மாத்திரமே அழகாக இருக்கும் சிம்ரன், சின்னக்குழந்தைகள் பயந்து அலறியழுகிறாற் போல் மணிபர்ஸ் வாயால் சிரிக்கும் சினேகா, மண்டையோட்டிற்கு ஒப்பனை செய்த மாதிரியான அசின், சரத்குமாரை விட அகலமாக தோன்றும் நமீதா. வரை திரைப்படங்களைப் போலவே நாயகிகளின் தேர்வு ரசனையும் மட்டமானதாகவே இருக்கிறது. (கோபிகா போன்ற நிஜ அழகிகளை உடனே திருமணம் செய்ய வைத்து அனுப்பி விடுகிறார்கள்).

மிக அழுத்தமாக குறிப்பிட வேண்டியது ரஹ்மானின் இசை. துள்ளலான 'மஸாக்கலி' முதல் அர்ஜியான் என்கிற கவ்வாலிப்பாடலும், இந்துக்களின் பக்திப்பாடலும், பழைய திரைப்படப்பாடலின் பாவனையில் ஒலிக்கும் 'Genda Phool' என வகைக்கொன்று இசையாக அதகளம் செய்திருக்கிறார் ரஹ்மான்.

()

தமிழிலும் இந்த மாதிரியான மல்டிபிளெக்ஸ் ரசிகர்களுக்கான திரைப்படங்களின் கலாசாரம் துவங்கி விட்டது. 'பொய் சொல்லப் போறோம்", த.நா.4777 போன்ற திரைப்படங்கள் அதைச் சொல்லுகின்றன. இதன் மூலம் இன்னும் வணிகக் குப்பைகள் ஒதுக்கப்பட்டு இரான் தேசம் போன்று தரமான திரைப்படங்களை தமிழிலும் எதிர்பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.

suresh kannan

11 comments:

கானா பிரபா said...

அருமையான பார்வை, இதையும் தேவ் டி ஐயும் எடுத்து வைத்திருக்கிறேன் இன்னும் பார்க்க சமயம் கிடைக்கவில்லை.

நாஞ்சில் பிரதாப் said...

சூப்பர் விமர்சனம் சார்...

உங்களுக்கவாது படம் பிடிச்சிருந்தே..மகிழ்ச்சி...

//ஜாக்கி சானுக்கு உறவோ என்று நினைக்க வைக்கிற குஷ்புவில் இருந்து இடுப்பு மாத்திரமே அழகாக இருக்கும் சிம்ரன், சின்னக்குழந்தைகள் பயந்து அலறியழுகிறாற் போல் மணிபர்ஸ் வாயால் சிரிக்கும் சினேகா, மண்டையோட்டிற்கு ஒப்பனை செய்த மாதிரியான அசின், சரத்குமாரை விட அகலமாக தோன்றும் நமீதா. வரை திரைப்படங்களைப் போலவே நாயகிகளின் தேர்வு ரசனையும் மட்டமானதாகவே இருக்கிறது. (கோபிகா போன்ற நிஜ அழகிகளை உடனே திருமணம் செய்ய வைத்து அனுப்பி விடுகிறார்கள்). //


நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு...சிரிப்பை அடக்க முடியவில்லை நம்மூர் நடிகைகளின் உண்மையான வர்ணனை. சரத்குமாரி விட அகலமாக தோன்றும் நமீதா...சூப்பர்...

டில்லி-6 பற்றி நானும் போட்டிருந்தேன் ஒரு பதிவு...
http://ushnavayu.blogspot.com/2009/03/6-125.html

Venkatesh subramanian said...

த.நா.4777 intha padathai theateril poi parkavilaiye kupai hindi padathil irutha oru livenesai suthamaka sothapi eduthuvitarkal tamilil very bad matrabadi tamililum sila padankal nambikai alikendrana utharanam vanila kabadi kulu mikavum arumaiyana padam d6 nan inamum parkavilai unkal vimarsanam arumai padam paraka thundiyathu

சரவணகுமரன் said...

//சின்னக்குழந்தைகள் பயந்து அலறியழுகிறாற் போல் மணிபர்ஸ் வாயால் சிரிக்கும் சினேகா//

:-))

கதிர் said...

:))

சாணக்கியன் said...

சுரேஷ்,

நீங்கள் எல்லாக் கதா நாயகிகளும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் ரசனைக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அது நியாயமா? ஆனால் சினேகாவைப் பற்றி அப்படி அபிப்ராயம் பலருக்கு உண்டு. குடும்பப் பாங்கான முகம். கொஞ்சம் வாய் பெருசுதான்.... அதுக்காக ‘மணிபர்ஸ் வாய்’ என்பது கொஞ்சம் ஓவர். கனிகா போன்ற நிஜ அழகிகள் பெரிய அளவில் வரவில்லை என்பதில் எனக்கும் வருத்தமே. குஷ்பூ, நமீதா பற்றிய கமெண்ட் ok. ஆனால் கோபிகாவை உங்களுக்கு பிடித்துள்ளதால் ரொம்ப புகழ்ந்திருக்கிறீர்கள். அவர் ஒன்றும் அப்படிப்பட்ட அழகி அல்ல. உதாரணத்திற்கு அவரை ஜீன்ஸ்-டீ ஷர்டில் கற்பனை செய்து பாருங்கள்!

மேலும் அழகு என்பது பார்வையால் கவனிக்கும் உடலழகு மாத்திரமல்ல. ஒருவருடைய செயல்திறனும் அவருக்கு அழகைக் கொடுக்கிறது. person+ability=personality. உதாரணத்திற்கு சிம்ரனின் நடனம், அசினின் நகைச்சுவை நடிப்பு. சிம்ரனால் ஒரு மொக்கை ஹீரோயினாகவும் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற கதாபாத்திரத்திலும், கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க முடிந்த திறமை இருப்பதை கவனிக்காமல் உதாசீனப்படுத்தி விடுவீர்களா? வாலி, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்கு முன்னர் நான் சிம்ரனை ஏரெடுத்து கூட பார்த்தது கிடையாது.

மேலும் ஹிந்தியில் கரிஷ்மா கபூர், கரீனா கபூர் போன்றவர்களுக்கு கிட்டத்தட்ட ஆண் முகம், இல்லையா?

Anonymous said...

"... இருவரும் கட்டிலில் உருள்கையில் காலடியில் சிக்கிக் கொள்ளும் ரிமோட்டின் மூலம் தொலைக்காட்சியில் சேனல் மாறி மாறி இருவரும் செய்து கொண்டிருக்கும் காரியத்திற்கு ஏற்ப செய்திகளும் காட்சிகளும் ஒளிபரப்பாவது (ராக்கெட் கிளம்பும் காட்சி) நகைச்சுவையாக இருக்கிறது."

இதே போன்ற காட்சி நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பல ஆஸ்கர் விருதுகளை வென்ற “Midnight Cowboy" படத்தில் (இயக்கம்: John Schlesinger Jr.) இடம் பெற்றுள்ளது. ராகேய்ஷ் மேஹ்ரா effective-ஆக சுட்டிருக்கிறார் என்று தெரிகிறது. மெச்சிவிடுவோம்:-)

Anonymous said...

//ஜாக்கி சானுக்கு உறவோ என்று நினைக்க வைக்கிற குஷ்புவில் இருந்து இடுப்பு மாத்திரமே அழகாக இருக்கும் சிம்ரன், சின்னக்குழந்தைகள் பயந்து அலறியழுகிறாற் போல் மணிபர்ஸ் வாயால் சிரிக்கும் சினேகா, மண்டையோட்டிற்கு ஒப்பனை செய்த மாதிரியான அசின், சரத்குமாரை விட அகலமாக தோன்றும் நமீதா. வரை திரைப்படங்களைப் போலவே நாயகிகளின் தேர்வு ரசனையும் மட்டமானதாகவே இருக்கிறது. (கோபிகா போன்ற நிஜ அழகிகளை உடனே திருமணம் செய்ய வைத்து அனுப்பி விடுகிறார்கள்). //

LATCS.......

Yet, I agree with whatever சாணக்கியன் said...

Btw, Yesterday I was completely off and read almost 90% of ur articles. And also watched Delhi 6 after reading ur comments. I dont like Abhishek. I thought he only acted well in Dostana cos he just looks gay. But, he acted well in this movie.

Though the scenes dint flow properly the movie was good. Thnx for the review. I made a list of movies that i should watch after watching delhi 6 as i belive in ur reviews.
:D
Good day

பிச்சைப்பாத்திரம் said...

Triumph,

TFYC (Thanks for your comment) :-)

சென்ஷி said...

:)

சென்ஷி said...

//
மேலும் அழகு என்பது பார்வையால் கவனிக்கும் உடலழகு மாத்திரமல்ல. ஒருவருடைய செயல்திறனும் அவருக்கு அழகைக் கொடுக்கிறது. //

சூப்ப்பரப்பூ :)