Monday, November 10, 2008

மூத்திரம் முட்டும் நகைச்சுவை

முந்தைய பதிவின் தொடர்ச்சி

Photobucket

(2) The Party (1968)

பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகரான Peter Sellers, Hrundi V. Bakshi என்ற இந்திய நடிகராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் தயாரிப்பாளர் தரும் விருந்தொன்றிற்கு பக்ஷி கலந்து கொள்வதும் அங்கு நடக்கும் கலாட்டாக்களும்தான் முழுப்படமும். விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பக்ஷிக்கு கிடைப்பதே விநோதமானதோர் நிகழ்வு.

பீரியட் பிலிம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் படப்பிடிப்பில் ஒரு இந்தியச் சிப்பாயாக நடித்துக் கொண்டிருக்கிறார் பக்ஷி. படப்பிடிப்பின் கடைசி நாளான அன்று ஒரு பெரிய மாளிகை வெடித்துச் சிதறும் காட்சி கடைசி ஷாட்டாக எடுக்கப்படவிருக்கிறது. மாளிகை வெடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிகழ்ந்து கொண்டிருக்க, பக்ஷியின் காலில் ஏதோ ஒட்டிக் கொள்வதால் தன்னிச்சையாக குண்டு வெடிப்பதற்காக அழுத்தப்படும் வால்வு மீது காலை வைத்து அதைப் பார்க்கிறார். கேமராவில் படமாகும் முன்பே மாளிகை வெடித்துச் சிதறுகிறது. அதிர்ச்சியடையும் பட இயக்குநர் பக்ஷியை அங்கிருந்து துரத்தியடிப்பதோடு பட தயாரிப்பாளருக்கு தொலைபேசி பக்ஷியை எந்தவொரு படத்திலும் பணியாற்றவொட்டாமல் தடை செய்யச் சொல்கிறார். தயாரிப்பாளர், பக்ஷியின் பெயரை அவசரத்தில் ஒரு காகிதத்தில் குறித்துக் கொள்கிறார். அந்தக் காகிதம் விருந்திற்காக அழைக்கப்படவிருப்பவர்களுக்கான பட்டியல்.

இப்படியாக தண்டனைக்குப் பதிலாக விருந்தில் கலந்து கொள்ளும் பக்ஷியின் நகைச்சுவையான நடவடிக்கைகளும் அதனால் ஏற்படும் குழப்பங்களும்தான் படம் முழுதுவதுமாக நிகழ்கிறது.

மூத்திரம் முட்ட கழிவறைக்கு நீங்கள் விரைந்து கொண்டிருக்கும் போது யாராவது உங்களை நிறுத்தி ஒரு நகைச்சுவை துணுக்கை சாவகாசமாக சொன்னால் எப்படி உணர்வீர்கள்? இந்தப் படத்தின் பெரும்பாலான நகைச்சுவைக் காட்சிகள் அப்படித்தான் ஒரு அவஸ்தைத் தன்மையோடு Black comedy போல் அமைந்திருக்கின்றன. இப்போதைய காலகட்டத்தோடு ஒப்பிடும் போது படத்தின் நகைச்சுவை சுமாராகத்தான் இருக்கிறது என்றாலும் இது 1968-ல் வெளிவந்த படம் என்பதை வைத்துப் பார்க்கும் போது அந்தக் கால கட்டத்தில் இது பெருவாரியான வரவேற்பைப் பெற்றிருக்கும் என்று தோன்றுகிறது.

விருந்தில் படத்தயாரிப்பாளரால் துன்புறுத்தப்படும் ஒர் ஆரம்ப நடிகையை பக்ஷி காப்பாற்றுகிறார். அவர்களுக்கிடையே ஏற்படும் மெலிதான காதலோடு படம் நிறைவுறுகிறது.

()

பாத்திரப்படி இந்திய நடிகர் என்பதால் இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் பீட்டர் செல்லர்ஸ். (சினிமாவிற்கு முன்பு வானொலியில் அறிவிப்பாளராக பணிபுரிந்த இவருக்கு இதே போல பல மொழிகளை அந்நந்த பிரத்யேக accent-ல் பேசத் தெரியும்.) அறிமுகமில்லாத இருவர் உரையாடிக் கொண்டிருக்கும் அபத்தமாக நுழைந்து ஏதோ பேசுவது, அசட்டுத்தனமாக சிரிப்பது, தாழ்வுணர்ச்சியுடன் செயல்படுவது என்று ஒரு சராசரி இந்தியக் குணத்தை இவர் இயல்பாக வெளிப்படுத்தினாலும் நமக்குத்தான் சங்கடமாக இருக்கிறது. கிட்டத்தட்ட சிவாஜி கணேசனின் முகச்சாயலில் இருக்கும் இவருக்கு இந்தியனின் வேடம் மிகப் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. படத்தின் டைட்டில் காட்சிகள் இவர் சித்தார் வாசிக்கும் ஒலிப் பின்னணியில் தோன்றுகின்றன.

இந்தப்படத்தில் வெயிட்டராக நடிக்கும் துணைநடிகர் ஒருவரின் (Steven Franken) நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருப்பதோடு பல முறை சிரிப்பை வரவழைப்பதாகவும் உள்ளது. விருந்தினர்களுக்கு வழங்க வேண்டிய மதுவகைகளை யாருக்கும் தெரியாமல் குடித்துவிட்டு பார்ட்டியில் ஏற்படும் நகைச்சுவை கலாட்டாக்களுக்கு இவரும் பொறுப்பேற்கிறார்.

பீட்டர் செல்லர்ஸ் மூன்று வேடங்களில் இவர் நடித்த Dr.Strangelove மிகச்சிறப்பான படமாக பேசப்படுகிறது.

சத்யஜித்ரே ஹாலிவுட் படமாக தயாரிக்க திட்டமிருந்த The Alien படத்திற்காக பீட்டர் செல்லர்ஸைப் பற்றி கேள்விப்பட்டு அவரை தன்னுடைய படத்தில் உபயோகிக்க விரும்பியிருக்கிறார். ஆனால் The Party படத்தைப் பார்த்தவுடன் பக்ஷி இந்தியர்களை கிண்டலடிப்பதைக் கண்டு அருவருத்து தன்னுடைய திட்டத்தை மாற்றிக் கொண்டார் என்கிறது விக்கிபீடியாவிலுள்ள ஒரு தகவல்.

()

சிறந்த படம் என்று சொல்லாவிட்டாலும் Peter Sellers என்கிறதொரு சிறப்பான நகைச்சுவை நடிகரின் அறிமுகத்திற்காக இந்தப்படத்தைப் பார்க்கலாம்.

suresh kannan

6 comments:

Anonymous said...

படத்தை அறிமுகத்திற்கு நன்றி. பதிவின் தலைப்பை மாற்றியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்.

Sridhar Narayanan said...

சில வாரங்களுக்கு முன்னர் இந்தப் படத்தை பார்த்தேன். Very light comedy. மூத்திரம் முட்டும் நகைச்சுவை - Stellars-ம் அப்படித்தான் அவஸ்தைப் படுவார் படத்தில். அவருடைய பூடகமான சிரிப்பு அவருக்கு மிகப் பெரிய ப்ள்ஸ் பாயிண்ட் :)

விமர்சனத்திற்கு மிக்க நன்றி.

Anonymous said...

Stellars-ன் panther series படங்களை பாருங்கள்.

யு.எஸ்.தமிழன் said...

>>தாழ்வுணர்ச்சியுடன் செயல்படுவது என்று ஒரு சராசரி இந்தியக் குணத்தை<<

அதென்ன சராசரி இந்திய குணம்? யாருமே செய்யாத சோசியாலஜி ஆராய்ச்சி கட்டுரையில எங்காவது படிச்சீங்களா? உங்க குணத்தையெல்லாம் இந்திய குணம்ன்னு நீங்களே "கட்டமைச்சு"கிட்டீங்களா?

பிரதீப் said...

may i know where u get these kind of DVDs?

சாணக்கியன் said...

என்னுடைய முதல் திரைப்பட விமர்சனம். படித்துவிட்டு சொல்லுங்களேன். நன்றி.

http://vurathasindanai.blogspot.com/2008/11/blog-post.html