Wednesday, October 31, 2007

கற்றது தமிழ் திரைப்படத்தின் இயக்குநர் ராமின் பேட்டி

எண்பது, தொண்ணூறுகளில் எஸ்.பி.முத்துராமன்களும், ஜெகன்னாதன்களும் வணிகப்படங்களை கொளுத்திப் போட்டுக் கொண்டேயிருக்க,
மகேந்திரன், பாலுமகேந்திரா வகையறாக்களிடமிருந்து வெளிப்படும் கலாபூர்வமான மென்மையான படங்களின் வரவு அபூர்வமாகத்தானிருந்தது. இன்றைய சூழ்நிலையிலும் வணிகப்படங்களின் ஆதிக்கத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லையெனினும் சேரன், பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என்று நம்பிக்கை தரக்கூடிய இயக்குநர்கள் தட்டுப்பட்டு அவர்களின் படைப்புகளும் பொருளாதார ரீதியாக ஒரளவிற்கு வெற்றிகரமாகவே பயணிக்கிறது. அந்த வரிசையில் இன்னொரு இயக்குநராக 'கற்றது தமிழ்' இயக்குநர் ராம்- ஐ சொல்லாம் என்று நினைக்கிறேன். இவரின் படத்தை இன்னும் நான் பா¡க்கவில்லை. பத்திரிகைகளின், நண்பர்களின் விமர்சன ஆரவாரங்கள், பரபரப்புகள் போன்றவைகள் அடங்கிய பின்பே "நல்ல படம்" என்று சுட்டப்படுபவைகளை நான் பார்ப்பது வழக்கம்.

புதியபார்வை (நவம்பர் 1-15) இதழில் இவரின் ஆரோக்கியமான 'திமிருடன்' கூடிய உரையாடல் பதிவை வாசித்த போது மகிழ்வாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். சற்று நேரம் செலவு செய்து படித்து விடுங்கள். (நன்றி: புதிய பார்வை)

()

இயக்குநர் ராம் உடன் புதிய பார்வைக்காக தொலைபேசியில் நடந்த உரையாடல்..........

"ஹலோ ராம்... எப்படியிருக்கீங்க... புதிய பார்வைக்காக கொஞ்ச நேரம் பேசலாமா?"

"பத்து நிமிஷம் போதும் இல்லையா?.. உங்க பேர் என்ன சொன்னீங்க?"

"பரசுராம்"

"ஓ.. பரசுராம்.. கேள்விப்பட்ட மாதிரி இருக்குது. எங்கேயாவது பாத்திருக்கமா?"

"ஆமாம். படம் வெளிவர்றதுக்கு முன்னால, ஒரு ஹோட்டல்ல மதிய சாப்பாட்டுக்குப் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம்."

" சரி. கேள்வி கேளுங்க"

"எப்படி இந்தப் படத்தை ஆரம்பிச்சீங்க?"

"எனக்கு வசதியா எந்தப் படம் இருக்குமோ அதைத்தான் என்னால எடுக்க முடியும்."

"எப்படி இருக்கு படத்துக்கு இருக்கற வரவேற்பு"?

"நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படல. படம் எடுத்தாச்சு. அவ்வளவுதான். பாலுமகேந்திரா சார் பாத்துட்டு ஆசியாவிலேயே ஐந்து சிறந்த திரைப்படத்தை வரிசைப்படுத்தினா அதுல கற்றது தமிழ் வரும்னார். அவருக்கு கண் கலங்கிடுச்சு. வண்ணதாசன் இந்த வயசுல என்னைத் தேடி வந்து படத்தைப் பத்தி நிறைய பாராட்டிப் பேசி ஒரு இராத்திரி என்னோடவே தங்கிட்டுப் போனார். சாருநிவேதிதா ஒரு பத்திரிகையில படத்தைப் பத்தி பதினைந்து பக்கம் எழுதியிருக்கிறதா சொன்னார். ஊர் ஊரா கூப்பிட்டுப் பாராட்டறாங்க"

"பத்திரிகை விமர்சனங்களை எல்லாம் பார்த்தீங்களா"

"நீங்க எத்தனை தடவை படம் பார்த்தீங்க?"

"ஒரு தடவை"

"எநதத் தியேட்டர்ல?"

"உதயம்"

"ஒரு நாவலை விமர்சனம் பண்றதுக்கு எத்தனை தடவை படிப்பீங்க?"

"இரண்டு மூன்று தடவை"

"அப்பப் படத்தை மட்டும் ஒரே ஒரு தடவை பாத்திட்டு விமர்சனம் எழுத முடியுமா?"

"கஷ்டம்தான்"

"அதான். பத்திரிகையில வர்றது எல்லாமே வெறும் பதிவுதான். ஒரு தனிநபரால எழுதப்படுகிற பதிவு. என்னை கற்றுக் கொள்ள வைக்கிற விமர்சனம் எதையும் இந்தத் தேதி வரை - இன்னைக்குத் தேதியை குறிச்சுக்கோங்க - வரலை. சில தனிநபர்கள் நேர்ல நான் கத்துக்கற மாதிரி சில விஷயங்கள் சொன்னாங்க. பிரிண்ட்ல இதுவரைக்கும் வந்ததெல்லாம் விமர்சனமே இல்ல."

"ம்.... படம் நீங்க நினைச்சு எடுத்த மாதிரி ரிசீவ் பண்ணப்படுதா?"

"படம் எடுக்கறதுதான் என்னோட வேலை. புரிய வைக்கறதா என்னோட வேலை?"

"எந்த அடிப்படையில் கதாபாத்திரத்தைத் தொடங்க ஆரம்பிக்கிறீங்க?"

"தத்துவத்தின் அடிப்படையில்தான்"

"என்ன தத்துவம்"

"தத்துவத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா? சென்னைதான் என் தத்துவம்".

"சென்னையா?"

"ஆமாம். சென்னை என்கிற நகரம்தான். அதற்குள் புறத்திலிருந்து வரும் மாந்தர்கள்தான் என் கதாபாத்திரங்கள். அவர்களின் அக..புறச் சிக்கல்கள், முடிச்சுகள்."

" தமிழ் படிச்சவனோட பிரச்சினையைத்தான் படத்தில் பேசியிருக்கிறதா நிறைய பேச்சு இருக்கு. நீங்க அப்படி நினைச்சு எடுத்தீங்களா?"

"உங்களுக்கு எப்படி தோணுது?"

"எனக்கென்னவோ தமிழ் படிச்சவனோட பிரச்சினையை மட்டுமே பேசற மாதிரி தெரியலை."

"இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு தோணுது. படத்தில் நிறைய sub text வச்சிருக்கேன். அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ பேசிக்கட்டும்."

"இந்த ஐ.டி. துறை மேல வச்சிருக்கிற விமர்சனத்துக்கு என்ன ரெஸ்பான்ஸ் வருது?"

"உங்க ஆபிஸ்ல நெட் இருக்கா. இருந்தா கற்றது தமிழ்-னு போடுங்க. ஆயிரக்கணக்குல பேசியிருக்காங்க. படிங்க."

"படம் சுயவிவரிப்புல நடக்குது. ஆனா முடியும் போது நீங்க வந்து... ஒரு மூன்றாவது குரல் - பேசுவது எதற்கு?"

"அப்படி வரக்கூடாதுன்னு எந்த சினிமா மேதை எந்தக் கலைக் கோட்பாடுல பேசியிருக்கார். இருந்தா பேர் சொல்லுங்க. இல்ல இது நீங்களே சொல்றதா? சிட்டி ஆ·ப் காட்னு ஒரு படம் பாத்திருக்கீங்களா? அதுல சுயவிவரிப்பும் வரும். மூன்றாவது குரலின் விவரிப்பும் வரும்."

"ஒரு விவாதத்தை இப்படி ஆரம்பிச்சா முடிவு கிடைக்காது"

"எனக்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நான் நினைக்கிறததான் எடுப்பேன்"

()

5 comments:

Voice on Wings said...

//"உங்க ஆபிஸ்ல நெட் இருக்கா. இருந்தா கற்றது தமிழ்-னு போடுங்க. ஆயிரக்கணக்குல பேசியிருக்காங்க. படிங்க."//

:)

-L-L-D-a-s-u said...

//எனக்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நான் நினைக்கிறததான் எடுப்பேன்//
சபாஷ் .. இந்த ஆளுமைதான் இயக்குநரிடம் இருக்கவேண்டியது . இதையே விஜய், அஜித் என்று போகும்போதும் தொடரவேண்டும் , வெற்றி தொடர வாழ்த்துக்கள்.

ஹரன்பிரசன்னா said...

பேட்டி நல்ல காமெடியாக இருக்கிறது. நாவலை இரண்டு முறை படிப்பதால் படத்தை இரண்டு முறை பார்க்கவேண்டுமா? ஒருமுறை பார்க்கும்போதே சலித்துவிடும் படங்கள் என்ன செய்ய? கற்றது தமிழ் நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் ராம் தேவைக்கதிமாக அவர் படத்தைப் பற்றிப் பேசுகிறார் என்ற எண்ணம் எழுகிறது. சாருவின் விமர்சனத்தைப் பார்த்தால் இது சுமாரான படம் என்கிற உணர்வே எழுகிறது. இதை நான் முன்முடிவாகக் கொள்ளவில்லை என்றாலும், நான் பார்த்த சில துணுக்குக் காட்சிகளும் இதே உணர்வைத் தந்தன. கற்றது சிறந்த படமாக இல்லாமல், நல்ல முயற்சி என்கிற அளவில் முடிந்துபோகலாம்.

பாலுமகேந்திரா ஆசியாவின் சிறந்த ஐந்தில் ஒன்றாக இதைத் தேர்ந்தெடுத்திக்கிறாராமா? மற்றவரைப் புகழ்வதில் இவர் ரஜினியை மிஞ்சாமல் இருந்தால் சரி.

Ayyanar Viswanath said...

எனக்கு படம் பிடிச்சிருந்தது சுரேஷ் நம்ம மக்க தான் சரியா புரிஞ்சிக்காம போயிட்டாங்கன்னு தோனுது..சரியா புரிஞ்சிகிட்டா நல்லா ஓடுச்சின்னா அது சிறந்த படம் இல்லைதானே :)

Osai Chella said...

so what? ஒரு படம் பாப்புலர் ஆகிவிட்டால் டைரக்டர்கள் ஆடும் ஆட்டம் என்ன என்று பாரதிராஜா அவர் வாயாலேயே சொல்லியிருக்கிறார்! ஹ ஹ! படம் பார்த்துவிட்டுத் தான் நான் எழுதனும்! ஆனால் ராம் வார்த்தைக்கு வார்த்தை So என்று பேட்டிகளில் கலக்குகிறார் தமிங்கிலத்தை! Paradox!