Wednesday, April 25, 2007

Traffic Signal - திரைப்பார்வை

மதூர் பண்டார்க்கரின் படமான "சாந்தினிபார்" வெளிவந்த போது அது ஏதோ மூன்றாந்தர "பிட்டு" இந்திப்படம் என்று தவறான புரிதலோடு இருந்தேன். அந்தப் படத்தை தமிழில் "காபரே டான்சர்" என்று வணிக நோக்கத்துடன் "கச்சாமுச்சா"வான தலைப்போடு வந்ததும் காரணமாக இருந்திருக்கலாம். இதனால் நான் ஏதோ "பிட்டு" படங்களை பார்க்காத நல்ல பிள்ளை என்று நீங்கள் தவறாக நினைத்து விடக்கூடாது. இதற்காகவே வடசென்னையில் உள்ள அத்தனை தியேட்டர்களுக்கும் ஒரு காலத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். (இப்போதுதான் குறுவட்டுகள் வந்துவிட்டனவே!) மேற்சொன்ன படத்தை ஒரு பண்டிகை மதியத்தில் ராஜ்டிவியில் பார்க்க நேர்ந்த போது இது வேறு ஜாதிப்படம் என்று தெரிந்தது. ஒளிப்பதிவுக் கோணம், காட்சியமைப்பு, வசனம், ஆகியவற்றைக் கொண்டு நாலைந்து பிரேம்களை வைத்தே வித்தியாசமான படங்களைக் கண்டு கொள்ளலாம். அடுல் குல்கர்னி, தபு போன்றவர்களின் திறமையான நடிப்புடன், நிழல் உலகைச் சேர்ந்த அடிமட்டத்தவர்களின் பரிதாபமான நிலையை அறிந்து கொள்ள முடிந்தது. (சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஓரின வன்புணர்ச்சியை காட்சிகளைக் கொண்டு வந்த முதல் இந்தியப்படம் இதுவாகத்தானிருக்கும் என நினைக்கிறேன்)

இன்னொரு படமான page3 பற்றி நரேன் பதிவில் எழுதியதிலிருந்து ஆவல் அதிகமாகி அதையும் ஸ்டார் சேனலில் ஒரு தடவை பார்க்க நேர்ந்தது. அடுத்த படமான கார்ப்பரேட்டை (பிபாசுவை கோட் போட்டு போர்த்தி எடுத்த படம் இதுவாகத்தானிருக்கும்) இதுவரை பார்க்க நேரவில்லை. இந்த நிலையில் அவரின் Traffic Signal வெளிவருவதற்கு முன்னே எனக்குள் ஆவலை எழுப்பி, DVD-ஐ தேட வைத்தது.

()

Photo Sharing and Video Hosting at Photobucket

விளிம்புநிலை மக்களை பிரதானமாக அமைத்து தமிழ் படைப்புகள் வந்திருக்கிறதா என்று மேம்போக்காக பார்த்தால், நவீன இலக்கியப் பரப்பில், நடுத்தர பிராமணத் தமிழ் பேசிக் கொண்டிருந்த கதாபாத்திரங்களிலிருந்து விலகி செக்ஸ் தொழிலாளிகள், குஷ்டரோகிகள், பிச்சைக்காரர்கள் என்று மற்றவர்கள் ஜாக்கிரதையாக புறக்கணிக்கிற அருவருத்து ஒதுக்குகிற பாத்திரங்களை ஜெயகாந்தன் தம் படைப்புகளில் கொண்டுவந்தார். பின்னர் வந்த ஜி.நாகராஜன், சுயஅனுபவங்கள் வெளிப்படும் வகையில் இன்னும் அருகாமையில் சென்று வந்தார். பின்னர் "தலித் இலக்கியம்" என்று ஒரு வகையறா மலர்வதற்கு பல வருடங்கள் பிடித்தது. திரைப்படங்களிலாவது இம்மக்கள் பிரதானப்படுத்தப் பட்டிருக்கிறார்களா என்று பார்த்தால், பசி, எச்சில் இரவுகள், என்னுயிர்த் தோழன் என்று சில அரைகுறை பிரசவங்களே சட்டென்று நினைவுக்கு வருகின்றன.

Traffic Signal திரைப்படம் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களை மையமான காட்சிகளாக வகைப்படுத்தலுடன் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு பிரதான சாலையின் டிராபிக் சிக்னல், அதைச் சுற்றி விரியும் நாம் ஆழமாக அறிந்திராத ஒரு வியாபார உலகம், அதன் மூலம் பிழைக்கும் சிறுவர்கள் முதல் தாதாக்கள் என்று பல கதாபாத்திரங்கள். ..........

ரொட்டிக்கு தொட்டுக் கொள்ளும் ஜாமை பாண்டேஜ் துணியின் மீது தடவிக் கொண்டு ரத்தகாய போலித் தோற்றத்துடன் பிச்சை எடுப்பவர்கள், சிக்னலில் நிற்கும் கார்களில் mid-day தினசரியை கூவி விற்கும், சிவப்பழகு க்ரீமினால் அழகுவரும் என்று நம்பி பிறகு தோற்றுப் போய் விளம்பர பானர் கல்லெறியும் சிறுவன், "குழந்தைக்கு ரொம்ப சாப்பிடக் குடுத்து குண்டாக்கிடாதே. அப்புறம் காசு போடமாட்டாங்க" என்று எச்சரிக்கும் சில்சிலா (இவன்தான் படத்தின் நாயகன். சில்சிலா என்ற இந்திப்பட வெளியீட்டின் போது பிறந்ததால் அதுவே பெயராகிவிட்டது) அவனை காதலிக்கும், பிளாட்பாரத்தில் துணிவிற்கும் குஜராத்காரி, பூ விற்கும் சிறுமியின் கைகளை ரகசியமாய் தடவும் காரில் போகும் கனவான், "சார் நான் ஒரு சாபட்வேர் இன்ஜினியர். இண்டர்வியூவிற்கு வந்தேன். பர்ஸ் தொலைஞ்சிடுச்சி. ஒரு ஹண்டர்ட் ருபிஸ் ப்ளீஸ். உங்க மொபைல் நம்பர் கொடுங்க. திருப்பி கொடுத்துடுவேன்" என்று கெளரவப் பிச்சை எடுக்கும் ஒரு இளைஞன் (ஏற்கெனவே பணம் கொடுத்தவனை மறுபடியும் எதிர்கொள்ள நேர்கிற கணத்தில் இருவரின் முகபாவங்களும்...) ரோட்டில் நிற்கவைக்கப்ட்ட வாகனத்திலியே "தொழில்' செய்ய நேர்கிற விபச்சாரி (கொன்கனா சென்), அவர்களுக்கு தொழில் போட்டியாக வரும் ஒரு gay, ("கொடுமையைப் பாருடி, இவன்க கூடல்லாம் போட்டி போட வேண்டியிருக்கு"), "கார்" லோனுக்காக போனில் தொல்லை கொடுக்கும் இரண்டு விற்பனை ஏஜெண்ட்டுகள், தொல்லை பொறுக்க முடியாமல் நேரில் வரச்சொல்லி அரை நிர்வாணப்படுத்தி அடிக்கும் தாதா (போலீஸ்காரனுங்க கிட்ட கூட நம்ப நம்பர் இல்ல. இவனுங்களுக்கு எப்படிர்ரா கிடைக்குது?"), சுனாமியில் தம் பெற்றோர் இறந்திருப்பார்களா என்று அறிய STD தொலைபேசியில் காசை செலவழிக்கும் பேப்பர் பொறுக்கும் தமிழ்நாட்டு அப்பாவி சிறுவன் (இவனின் பெற்றோர் இறந்து அவர்களின் உறவினர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகையை அரசியல் கைகள் பிடுங்கித் தின்றிருப்பது பிறகு தெரிகிறது) ஆகஸ்டு 15 இரவில் தெருவில் கசக்கி எறியப்பட்டிருக்கும் தேசியக் கொடிகளை கனமான இதயத்துடன் பொறுக்கும் நல்வாழ்வு மைய பொறுப்பாளர், சிக்னலில் மெதுவாக வண்டியை செலுத்தி அதன் மூலம் சைடில் சம்பாதிக்கும் டிரைவர்கள், (சிவப்பு விழப் போவது தெரிந்தும் மெதுவாக வந்து சிக்னலில் நிற்கும் இவர்கள், பிச்சை கேட்டு வருபவர்களுக்கு தன்னிச்சையாக இரண்டு ரூபாயை அளிப்பார்கள். தாம் உட்கார்ந்திருக்க டிரைவர் பிச்சை போடுவதா என்று ஈகோ கொப்பளிக்கும் முதலாளிகள், டிரைவரை தடுத்து தாம் பத்து ரூபாயை பிச்சையளிப்பார்கள். Psychology!) .......... என்று இத்தனை பேர் பிழைப்பு சிக்னல் இருப்பதினால் ஓடுகிறது.

()

நேரடி காட்சிகள் மூலமே பெரும்பான்மையான காட்சிகள் விரிவதால் படத்தின் நம்பகத்தன்மை பார்வையாளன் மீது தீர்க்கமாக பரவுகிறது. படத்தின் ஆதார மையமாக சிக்னல் அருகே ஒரு மேம்பாலம் கட்டப்படுவதில் அமைகிறது. குறிப்பிட்ட சிக்னல் அருகே, நிறைய ·பிளாட்களை கட்டி வைத்திருக்கும் ஒரு பில்டிங் புரோமோட்டர், பிச்சைக்கார ஏரியாவாக இருப்பதால் அதிக விலைக்கு விற்க முடியாமல் இருக்கிறார். அங்கே ஒரு மேம்பாலத்தை நிறுவி சிக்னலை ஒழித்தால் தீர்வு கிடைக்கும் என்பது அவர் கணக்கு. இதற்காக அவர் ஒரு வலிமையான சுயேட்சை எம்.எல்ஏ.வை நாட, அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியை நெருக்குகிறார். நேர்மையான அந்த அதிகாரி, திட்டத்தில் இல்லாத அந்த இடத்தில், மேம்பாலம் அமைக்க மறுத்து தாதாவால் கொல்லப்படுகிறார். இதன் பின்னணி தெரியாமல் இதில் சம்பந்தப்பட்டிருக்கிற சில்சிலா அப்ருவராகி சம்பந்தப்பட்டிருக்கிற அனைவரும் கைது செய்யப்படுவதற்கு காரணமாக இருக்கிறான். படத்தின் இறுதியில் சிக்னல் தகர்க்கப்பட, பிழைப்பு பறிபோகிற வேதனையில் அனைவரும் கலங்குகிறார்கள். போலீஸ் வேனில் செல்லும் சில்சிலா இன்னொரு சிக்னலை பார்ப்பதும் நம்பிக்கை கீற்றுடனான அவன் புன்னகையுடனும் படம் நிறைகிறது.

()

மதுபண்டார்க்கரின் (நான் பார்த்த) முந்தைய படங்களோடு ஒப்பிடும் போது இந்தப்படம் எனக்கு பொதுவாக நிறைவைத் தரவில்லை. சம்பவங்கள் தனித்தனியாக அழுத்தமாக இருந்தாலும், ஒட்டுமொத்த கதையமைப்பு வலுவாக இல்லாததால் படம் வெறும் வலுவான காட்சிகளின் கோர்வையாக இருக்கிறது. நாடகத்தனமான சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். (சிக்னலில் தேசியக் கொடி விற்கும் சிறுவனிடம், "மூணு பத்து ரூபாய்க்கு தருவியா?" என்று அநியாயமாக பேரம் பேசும் காங்கிரஸ் குல்லா அரசியல்வாதிகளை, "இவன்க நம்பள காப்பாத்தப் போறானுங்களாம். தூ...." என்று இலவசமாகவே கொடிகளை பிடுங்கி தூக்கி எறியும் ஒரு அரவாணி.

குறிப்பிடத்தக்க ஒரு காட்சி: கெளவரப்பிச்சை எடுக்கும் இளைஞன், விபச்சாரி மீது ஒருதலையாக காதல் கொண்டு வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறான். அவளிடம் தன் இழிவான நிலையை அவ்வப்போது சொல்லி புலம்புவான். சாப்பிடுவதற்கு எதாவது வாங்கும் போது காசு கொடுக்க முயலும் அவளை தடுத்து தானே காசு கொடுப்பான். "தேவடியா காசுல சாப்பிடறதுக்கு உனக்கு கூசுது போல இருக்குது?" என்று கேட்கப்படும் போது, தன் தாயும் ஒரு விபச்சாரியாக இருந்தததைக் கூறி "தேவடியா காச நான் நிறைய சாப்பிட்டிருக்கேன்" என்று கூறி அழும் போது நம் மனமும் கலங்கிப் போகிறது. தொடர்ச்சியான போதைப் பழக்கத்தின் காரணமாக அநாதையாக இறந்து போகிறான் அவன்.

()

இந்தப்படம் எனக்கு ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" என்கிற நாவலை நினைவுப்படுத்தியது. அதில் வரும் பிச்சைக்காரர்களும், அவர்களைச் சுற்றி இயங்கும் குருரமாக வியாபார உலகும் "உருப்படியாக" பார்க்கப்படும் மனித ஜீவன்களும்.... பெரும்பாலானவர்கள் அறியாத இன்னொரு குருரமான உலகின் தீர்க்கமான அறிமுகத்தை படித்து விட்டு அன்று இரவு தூங்கமுடியாமல் அவஸ்தைப்பட்டேன்.

18 comments:

Anonymous said...

> பசி, எச்சில் இரவுகள்....
> அரைகுறை பிரசவங்களே

சுரேஷ்ஜி,

பார்வை சரியாத்தான் இருக்கு. ஆனாலும், துரை, ஏ.எஸ்.பிரகாசம் ரெண்டுபேரு படத்தையும் இப்படி ஒரேயடியா அடிச்சுவுர்ரது ஜாஸ்தி. எச்சில் இரவுகள் ரூபா - சந்திரசேகர் இன்னும் ஒரு மீள்பார்வை பாத்துருங்களேன்.

எஸ்.என்.பார்வதியும் வனிதாவும் நடிச்சது - ஹாஸ்பிட்டல் வாசல்ல புட்டி விக்கிற பெண்மணி பாத்திரம். படம் பேரு மறந்துடுச்சுஜி.

அன்புடன்
ஆசாத்

Jayaprakash Sampath said...

//எஸ்.என்.பார்வதியும் வனிதாவும் நடிச்சது - ஹாஸ்பிட்டல் வாசல்ல புட்டி விக்கிற பெண்மணி பாத்திரம். படம் பேரு மறந்துடுச்சுஜி.//

பாய்ஜான்..

ஒளி பிறந்தது? விஜயன், மேனகா நடிச்சது....

பிச்சைப்பாத்திரம் said...

ஆசாத் பாய்,

நீங்கள் குறிப்பிடும் படம் நினைவுக்கு வருகிறது. விஜயன் பிணங்களை ஏற்றிச்செல்லும் குதிரை வண்டிக்காரராக இருப்பார். (போட்டியாளர் சுருளிராஜன்).

என்றாலும் அப்போதைக்கு வழக்கமான சினிமாக்களிலிருந்து மாறுதலான காட்சியமைப்புடன் வந்த "வித்தியாசமான" படங்களே தவிர, பிரக்ஞையோடு முழுக்க விளிம்புநிலை மாந்தர்களைக் கொண்டு எந்த தமிழ் திரைப்படமும் வந்தததாக எனக்கு ஞாபகமில்லை. இருப்பவர்களுக்கு பகிர வேண்டுகிறேன்.

இளங்கோ-டிசே said...

Madhur Bhandarkarன் Corporateம், Traffic Signalம்' பார்த்திருக்கிறேன். நீங்கள் கூறியதுபோல இந்தப்படத்தைப் பார்க்கும்போது ஜெயமோகனின் ஏழாம் உலகந்தான் எனக்கும் நினைவுக்கு வந்தது (விமர்சனங்கள் மூலமே ஏழாம் உலகத்தை அறிந்திருக்கின்றேன்; இன்னமும் வாசிக்கவில்லை; வாசிக்கும் மனவுறுதியும் இல்லை). ஒரளவு இயல்பாய் போய்க்கொண்டிருக்கின்ற இப்படம் பின்பகுதியில் சினிமாத்தனத்துக்குள் நுழைந்ததுபோலத் தோன்றியது. அண்மையில் பார்த்த இந்திப்படங்களில் அமிதாப்பச்சனின் Nishabd சற்று வித்தியாசமாயிருந்தது. ரேவதி, நாசர் எல்லாம் நடித்திருந்தது ஒரு த்மிழ்ப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத்தந்திருந்தது. பார்த்திருக்கின்றீர்களா?

G.Ragavan said...

இந்தப் படத்தை நானும் பார்த்தேன். ரசித்தேன். கனத்தேன். பின்னூட்டத்தை முழுமையாக இரவு இடுகிறேன்.

லிவிங் ஸ்மைல் said...

//// நாடகத்தனமான சில காட்சிகளை தவிர்த்திருக்கலாம். (சிக்னலில் தேசியக் கொடி விற்கும் சிறுவனிடம், "மூணு பத்து ரூபாய்க்கு தருவியா?" என்று அநியாயமாக பேரம் பேசும் காங்கிரஸ் குல்லா அரசியல்வாதிகளை, "இவன்க நம்பள காப்பாத்தப் போறானுங்களாம். தூ...." என்று இலவசமாகவே கொடிகளை பிடுங்கி தூக்கி எறியும் ஒரு அரவாணி. ///


தவிற்குமளவிற்கு இதிலென்ன நாடகத்தன்மை என்று விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Anonymous said...

மொத்தத்தில் இது மிக அழுத்தமானதொரு விமர்சனம்...படத்தை பார்க்கத்தூண்டி விட்டீர்கள்...

குறிப்பாக சில்சிலாவின் இறுதி புன்னகையை காணவேண்டும் போல் குறுகுறுப்பாயுள்ளது...

பிச்சைப்பாத்திரம் said...

டிசே,

இந்திய சினிமாவில் குறிப்பாக இந்தி சினிமாவில் ராம்கோபால்வர்மாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. கதை சொல்லும் பாணியில், கேமரா கோணத்தில், ஒளியமைப்பில், வசனத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். நிழலகத்தினரை இவர்போல் ஆழமாக சித்தரித்தவர்கள் மிகக்குறைவே. இதிலிருந்து மாறுபட்ட படமான nishabd பற்றி வரும் நண்பர்களின் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இல்லை எனினும் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இதனையும் வைத்துள்ளேன்.

லிவிங்ஸ்மைல்,

எல்லாத்துறைகளிலும் தீயவரும், நல்லவரும் இருந்தாலும், சினிமாவில் காவல்துறையினரையும், அரசியல்வாதிகளையும் நிறையவே விமர்சிக்கிறார்கள். அவர்களை குரூரமானவர்களாக அல்லது ஜோக்கர்களாக சித்தரிப்பது இயக்குநர்களின் வாடிக்கை. இதையெல்லாம் தாண்டி அவர்கள் ரொம்பவும் தந்திரமானவர்கள் என்பதுதான் நடைமுறை உண்மை. அப்படியிருக்க காரில் போகும் இரண்டு அரசியல்வாதிகள் "தேசியக் கொடியை" வாங்க பேரம் பேசுவது நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது. அரசு சார்பில் தேசியக்கொடி அச்சடிப்பதில் ஊழல் செய்தார்கள் என்றாலாவது நம்புகிறாற் போலிருக்கும். பெரிய அளவில் திருடுபவன்தான் அரசியலில் பிழைக்க முடியும்.

சரி. பேரம் பேசுவதோடு இயக்குநர் நிறுத்தியிருந்தாலாவது, பார்வையாளர்களுக்கே இது உறுத்தியிருக்கும். "இப்பேர்ப்பட்ட அரசியல்வாதிகள் கையிலா நாம் சிக்கியிருக்கிறோம்? என்று. ஆனால் இந்த உணர்வை ஒரு பாத்திரம் மூலமாக வெளிப்படுத்தியிருப்பது தேவையில்லாதது. பார்வையாளனுக்கும் மூளை இருக்கிறது. அவனும் சிந்திப்பான் என்று தன் படைப்பில் பார்வையாளனையும் பங்கெடுக்க வைப்பதே ஒரு சிறந்த இயக்குநனின் வேலையாக இருக்கும்.

இந்த மாதிரி காட்சி "இராமநாராயணன்" போன்றோர் படங்களில் வந்திருந்தால் பேச்சே கிடையாது. மதூர் பண்டார்கர் என்பதால்தான்.

G.Ragavan said...

டிராபிக் சிக்னல்..ஐதராபாத்தில் மூன்று வாரங்கள் வெந்து கருவாடிக்கொண்டிருந்த பொழுது பார்த்தது. நல்ல படம். ஒரிஜினல் விசீடி வாங்கித்தான் படத்தைப் பார்த்தேன். ஒரு நல்ல படம் பார்த்த முழுத் திருப்தியைக் கொடுத்த படம்.

அந்தக் கதாநாயகனுக்கு மிஞ்சிப் போனால் 23 வயது இருக்குமா? அவனுடைய தலையில் பனங்காய்...இல்லையில்லை..பூசணிக்காய். ஆனாலும் சிறப்பாகச் செய்திருக்கிறான். தெலுங்கிலிருந்து இறக்குமதி செய்து படமெடுத்து தன்னைத் தளபதி தள்ளாதபதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் நடிக்கத்தெரியாதவர்கள் எல்லாம் அந்த நடிகனின் காலை ஒரு முறை தொட்டுக் கும்பிட்டால்...தங்களை நடிகன் என்று நினைத்த பாவம் தொலையும்.

எத்தனை பாத்திரங்கள்...எத்தனை கதைகள்...அத்தனையையும் கட்டியிருப்பது ஒரு கயிறு. ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து கோர்த்து வைத்திருந்தேன் என்று எழுதினார் கண்ணதாசன். இந்த முத்தாரத்தில் முப்பது கண்ணீர் முத்துகள் கோர்க்கும்படி படமெடுத்திருக்கிறார் மதுர்.

விபச்சாரம் முடிந்து திரும்பி வருகின்றவன்....மற்ற பாலியல் தொழில் பெண்களோடு சேர்ந்து பேசும் பொழுது "தனக்கும் வலிக்கும்" என்று சொல்லும் பொழுது...அவனுக்கு முதலில் டீ குடிக்கச் சொல்லும் கொங்கனசென்னின் நக்கலில் சிரித்துக் கொண்டிருக்கும் பொழுதே...ஒங்களையெல்லாம் பேச விட்டா தலைக்கு மேல ஏறீருவீங்க...சரி சரி..துணியெல்லாம் கழட்டு என்று சொல்லும் போலீஸ்காரன் முன்னிலையில் நமக்கு நெஞ்சம் கனக்கச் செய்து விடுகிறார்.

அந்த முத்துசாமி. தமிழ்நாட்டுச் சிறுவன். தாய்தந்தையரைச் சுனாமியில் பறிகொடுத்து விட்டுத் திண்டாடுகின்றவனிடமும் சில்லறை சில்லறையாக பிடுங்கித் தின்பது ஒரு கூட்டமென்றால்...சுனாமி நிவாரண நிதியை மொத்தமாகப் பிடுங்கித் தின்றது அரசியல் கூட்டம்.

மொத்தத்தில் டிராபிக் சிக்னல் ஒரு திரைப்படம். இன்றைய நாசமாய்ப் போன இந்தி(யத்) திரைப்படங்களில் ஒரு உண்மையான திரைப்படம். சில குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் நல்ல படம். போக்கிரியை பிளாக்கில் பார்த்தவர்கள் இந்தப் படத்தைத் திருட்டு வீசிடியிலாவது பாருங்கள். திரைப்படம் என்றால் என்னவென்று கொஞ்சமேனும் உங்களுக்குப் புரிந்தாலும் புரியலாம்.

Anonymous said...

சுரேஷ்ஜி,

ஏ.எஸ்.பிரகாசம் இப்ப எச்சில் இரவுகள எடுத்திருந்தா வேற மாதிரிதான் எடுத்திருப்பார். பசியும் அப்படித்தான்.

//அப்போதைக்கு வழக்கமான சினிமாக்களிலிருந்து மாறுதலான காட்சியமைப்புடன் வந்த "வித்தியாசமான" படங்களே//

அதேதான். இதுக்குமேல அந்த *தவிர* மேட்டருக்கு நான் வரவேஇல்ல :)

//பாய்ஜான்..
ஒளி பிறந்தது? விஜயன், மேனகா நடிச்சது....//

பிரகாஷ்ஜி,

அதே அதே. ஞாபகப்படுத்துனீங்க.

இந்த வரிசைல கே.எஸ்.சேதுமாதவன் படம் ஒண்ணு இருக்குமே, நிஜங்களா? மேனகாதான். ஒரு பஸ் ஸ்டாண்டு தொடர்பான கதை. சே...நெறைய ஞாபக மறதி. வலைப்பதிவுக்கு முழுக்கு போட்டதால அவுட் ஆஃப் டச். சல்தா ஹை.

அன்புடன்
ஆசாத்

லிவிங் ஸ்மைல் said...

//// எல்லாத்துறைகளிலும் தீயவரும், நல்லவரும் இருந்தாலும், சினிமாவில் காவல்துறையினரையும், அரசியல்வாதிகளையும் நிறையவே விமர்சிக்கிறார்கள். அவர்களை குரூரமானவர்களாக அல்லது ஜோக்கர்களாக சித்தரிப்பது இயக்குநர்களின் வாடிக்கை. இதையெல்லாம் தாண்டி அவர்கள் ரொம்பவும் தந்திரமானவர்கள் என்பதுதான் நடைமுறை உண்மை. //

உண்மைதான்.. ஆனால், அது மட்டும் உண்மையில்லை. நீங்கள் எதிர்பார்க்கும் அந்த உண்மையை மட்டுமே காட்ட வேண்டுமென்பதில்லை. அந்த உண்மை இங்கு அநேகருக்கு தெரியும், ஆனால், இத்தகைய தந்திரமான அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு அல்பைகள் என்பதை ஒரு பிச்சைக்காரிகளின் ஆதங்கத்தோடு காண்பிக்கப்படுகிறது. மேற்படி, படத்தின் நோக்கமும் அதுதானே..

///அப்படியிருக்க காரில் போகும் இரண்டு அரசியல்வாதிகள் "தேசியக் கொடியை" வாங்க பேரம் பேசுவது நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது. /////


நடைமுறை என்பது என்ன? நீங்கள் எதிர்கொண்டவை மட்டும் தான் நடைமுறையா? ஒன்னறைவருட பிச்சைக்காரி என்ற எனது அனுபவத்தில் இதைவிட பல விசயங்களை சொல்லமுடியும். அத்தகைய நேரடி அனுபவமற்ற நீங்கள் எந்த அர்த்ததில் அபத்தம் என்று முடிவு கட்டுகிறீர்கள்?!

அரசு சார்பில் தேசியக்கொடி அச்சடிப்பதில் ஊழல் செய்தார்கள் என்றாலாவது நம்புகிறாற் போலிருக்கும். பெரிய அளவில் திருடுபவன்தான் அரசியலில் பிழைக்க முடியும்.

//// சரி. பேரம் பேசுவதோடு இயக்குநர் நிறுத்தியிருந்தாலாவது, பார்வையாளர்களுக்கே இது உறுத்தியிருக்கும். "இப்பேர்ப்பட்ட அரசியல்வாதிகள் கையிலா நாம் சிக்கியிருக்கிறோம்? என்று. ஆனால் இந்த உணர்வை ஒரு பாத்திரம் மூலமாக வெளிப்படுத்தியிருப்பது தேவையில்லாதது.////

இங்கே ஒரு அரசியல்வாதியை தோலுரிப்பதல்ல நோக்கம், ட்ராபிக் சிக்னலில் வாழ்பவர்களையும் அவர்களது கஸ்டமர்களையும் கொண்டு சில நிதர்சனங்களை முன்வைப்பதே நோக்கம். அவ்வகையில், பிச்சையெடுக்கும் அரவானிக்கும் ஒரு பணக்கார, அரசியல்வாதி ஆனால் அல்பத்தனமாக இருப்பவனிடம் ஏற்படக்கூடிய தார்மீகக் கோபம் தான் அது.

இது அபத்தம் என்றால், நேர்மையாக இருந்து உயிர்விடும் அதிகாரி பாத்திரமும், சமூக சேவகர் பாத்திரமும், பிச்சைக்காரனுக்கு தினமும் பணம் கொடுப்பதாக பீத்திக்கொண்டு, மல்டிபிளக்ஸ் தியேட்டரில் கண்டு அதிரும் கதாபாத்திரமும், சிறுமியின் கையைபிடித்து பத்து ரூபாய் தரும் பாத்திரமும் எல்லாமே உங்களுக்கு அபத்தமாகத் தானேதெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை இந்த வசனத்தை ஒரு அரவானி சொல்வது தான் உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறதா?

//// பார்வையாளனுக்கும் மூளை இருக்கிறது. /////

ஆமாம், பார்வையாளக்கும் மூலையிருக்கிறது. ஆனால், எத்தனை பார்வையாளனுக்கு (நீங்கள் மட்டும் தான் பார்வையாளனா? )

////// இந்த மாதிரி காட்சி "இராமநாராயணன்" போன்றோர் படங்களில் வந்திருந்தால் பேச்சே கிடையாது. மதூர் பண்டார்கர் என்பதால்தான். ///

ஏன் இராமநாரயணனோடு ஒப்பிடுகிறீர்கள். அந்த வசனத்தை பேசும் திருநங்கை மனிதப்பிறவி கிடையாது என்பதாலா?!

லிவிங் ஸ்மைல் said...
This comment has been removed by the author.
பிச்சைப்பாத்திரம் said...

அன்பு லிவிங்ஸ்மைல்,

எதை எழுதினாலும் அதில் உள்ளதை தனக்கேற்றாற் போல் கட்டுடைத்துக் கொண்டு அதை திரித்துப் பெரிதாக்கி பரபரப்பை ஏற்படுத்தி கவனத்தை தன்பால் ஏற்படுத்தும் ஒரு போக்கு சமீபத்திய வலைப்பதிவு செயல்பாடுகளில் பெரும்பான்மையாக நிகழ்ந்து கொண்டு வருகிறது. உங்களுடைய பின்னூட்டம் அத்தகையது இல்லை என நம்புகிறேன். ஏனெனில் அத்தகைய செயற்கைத்தனமான கோபங்களுடன் கூடிய விவாதங்களில் பங்கெடுக்கும் அளவிற்கு நேரமும் எண்ணமும் பொறுமையும் என்னிடமில்லை.

நான் என்னுடைய திரைப்பார்வை குறித்த பதிவில் அரவாணிகள் குறித்து கீழ்த்தரமாகவோ, கேவலப்படுத்தும் விதத்திலோ எதையும் எழுதவில்லை. ஆனால் நீங்களாவே ஏதேதோ கற்பதை செய்து கொண்டு "அரவாணி கூறியதுதான் உங்களை தொந்தரவு படுத்துகிறதா?" "அவர்கள் மனிதப்பிறவிகள் இல்லையா?" என்றெல்லாம் கேட்டிருப்பது பொருத்தமில்லாமலிருப்பதுடன் அதீதமாகவும் இருக்கிறது.

நான் கூறவந்தது இதுதான்: சம்பந்தப்பட்ட வசனத்தை ஒரு பாத்திரம் கொண்டு கூறியிருப்பதை தவிர்த்திருந்தால் காட்சியில் இன்னும் அழுத்தம் கூடியிருக்கும் என்பதே என் பார்வை. அது அரவாணி கூறியதுதான் பிரச்சினை என்று கூறவில்லை. வேறு எந்த பாத்திரம் பேசியிருந்தாலும் தேவையில்லை என்பதுதான் என் கருத்து.

மேலும் விமர்சனம் என்பதே ஒரு தனிநபரின் பார்வைதான். அவனுடைய கோணத்திலிருந்துதான் அவன் எழுதுகிறான். இது நபருக்கு நபர் மாறுபடலாம்; மாறுபடும். நான் கூறியதுதான் "நடைமுறை" என்று நான் கூற மாட்டேன். என் பார்வையில் அது செயற்கையாகத் தெரிந்தது. அவ்வளவுதான்.

லிவிங் ஸ்மைல் said...

/// சுரேஷ் கண்ணன் said...
அன்பு லிவிங்ஸ்மைல்,

எதை எழுதினாலும் அதில் உள்ளதை தனக்கேற்றாற் போல் கட்டுடைத்துக் கொண்டு அதை திரித்துப் பெரிதாக்கி பரபரப்பை ஏற்படுத்தி கவனத்தை தன்பால் ஏற்படுத்தும் ஒரு போக்கு சமீபத்திய வலைப்பதிவு செயல்பாடுகளில் பெரும்பான்மையாக நிகழ்ந்து கொண்டு வருகிறது. உங்களுடைய பின்னூட்டம் அத்தகையது இல்லை என நம்புகிறேன். ////

இல்லை என்னுடைய பின்னூட்டம் அத்தகையதே..

/// ஏனெனில் அத்தகைய செயற்கைத்தனமான கோபங்களுடன் கூடிய விவாதங்களில் பங்கெடுக்கும் அளவிற்கு நேரமும் எண்ணமும் பொறுமையும் என்னிடமில்லை. ///

தங்களின் உயரிய நோக்கம் புரியாமல் பின்னூட்டமிட்ட என் பிழையை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி!!

லிவிங் ஸ்மைல் said...

//// எதை எழுதினாலும் அதில் உள்ளதை தனக்கேற்றாற் போல் கட்டுடைத்துக் கொண்டு அதை திரித்துப் பெரிதாக்கி பரபரப்பை ஏற்படுத்தி கவனத்தை தன்பால் ஏற்படுத்தும் ஒரு போக்கு சமீபத்திய வலைப்பதிவு செயல்பாடுகளில் பெரும்பான்மையாக நிகழ்ந்து கொண்டு வருகிறது. உங்களுடைய பின்னூட்டம் அத்தகையது இல்லை என நம்புகிறேன். ///

என்னுடைய பின்னூட்டம் அத்தகையதே. ஏனெனில் சென்சிடைசேஷன் என்று கருதி செய்வது சிலசமயம் விளம்பரம் போலவும் ஆகிவிடுகிறது.


//// ஏனெனில் அத்தகைய செயற்கைத்தனமான கோபங்களுடன் கூடிய விவாதங்களில் பங்கெடுக்கும் அளவிற்கு நேரமும் எண்ணமும் பொறுமையும் என்னிடமில்லை. ///

நல்ல விசயம்

//// நான் என்னுடைய திரைப்பார்வை குறித்த பதிவில் அரவாணிகள் குறித்து கீழ்த்தரமாகவோ, கேவலப்படுத்தும் விதத்திலோ எதையும் எழுதவில்லை. ஆனால் நீங்களாவே ஏதேதோ கற்பதை செய்து கொண்டு "அரவாணி கூறியதுதான் உங்களை தொந்தரவு படுத்துகிறதா?" "அவர்கள் மனிதப்பிறவிகள் இல்லையா?" என்றெல்லாம் கேட்டிருப்பது பொருத்தமில்லாமலிருப்பதுடன் அதீதமாகவும் இருக்கிறது. ////

சரி, கீழ்தரமாக, கேவலமாக எழுதினீர்கள் என்று சொல்லவில்லை. பின்வருவது தங்களது திரைப்பார்வையில் படத்தில் வரும் கதாப்பாத்திரங்களை வரிசைப்படுத்தியிருப்பது. அனைத்து விளிம்புகளையும் வகைப்படுத்திய தாங்கள், திருநங்கைகள் அப்படத்தில் மறந்து விட்டீர்கள் என்றே நினைக்கிறேன். (பாலியல் தொழிலாளியான கே-யைப் பற்றி அறிமுகம் உள்ளது)

////Traffic Signal திரைப்படம் பெரும்பாலும் விளிம்பு நிலை மக்களை மையமான காட்சிகளாக வகைப்படுத்தலுடன் வெளிப்பட்டிருக்கிறது. ஒரு பிரதான சாலையின் டிராபிக் சிக்னல், அதைச் சுற்றி விரியும் நாம் ஆழமாக அறிந்திராத ஒரு வியாபார உலகம், அதன் மூலம் பிழைக்கும் சிறுவர்கள் முதல் தாதாக்கள் என்று பல கதாபாத்திரங்கள். ..........

ரொட்டிக்கு தொட்டுக் கொள்ளும் ஜாமை பாண்டேஜ் துணியின் மீது தடவிக் கொண்டு ரத்தகாய போலித் தோற்றத்துடன் பிச்சை எடுப்பவர்கள், சிக்னலில் நிற்கும் கார்களில் mid-day தினசரியை கூவி விற்கும், சிவப்பழகு க்ரீமினால் அழகுவரும் என்று நம்பி பிறகு தோற்றுப் போய் விளம்பர பானர் கல்லெறியும் சிறுவன், "குழந்தைக்கு ரொம்ப சாப்பிடக் குடுத்து குண்டாக்கிடாதே. அப்புறம் காசு போடமாட்டாங்க" என்று எச்சரிக்கும் சில்சிலா (இவன்தான் படத்தின் நாயகன். சில்சிலா என்ற இந்திப்பட வெளியீட்டின் போது பிறந்ததால் அதுவே பெயராகிவிட்டது) அவனை காதலிக்கும், பிளாட்பாரத்தில் துணிவிற்கும் குஜராத்காரி, பூ விற்கும் சிறுமியின் கைகளை ரகசியமாய் தடவும் காரில் போகும் கனவான், "சார் நான் ஒரு சாபட்வேர் இன்ஜினியர். இண்டர்வியூவிற்கு வந்தேன். பர்ஸ் தொலைஞ்சிடுச்சி. ஒரு ஹண்டர்ட் ருபிஸ் ப்ளீஸ். உங்க மொபைல் நம்பர் கொடுங்க. திருப்பி கொடுத்துடுவேன்" என்று கெளரவப் பிச்சை எடுக்கும் ஒரு இளைஞன் (ஏற்கெனவே பணம் கொடுத்தவனை மறுபடியும் எதிர்கொள்ள நேர்கிற கணத்தில் இருவரின் முகபாவங்களும்...) ரோட்டில் நிற்கவைக்கப்ட்ட வாகனத்திலியே "தொழில்' செய்ய நேர்கிற விபச்சாரி (கொன்கனா சென்), அவர்களுக்கு தொழில் போட்டியாக வரும் ஒரு gay, ("கொடுமையைப் பாருடி, இவன்க கூடல்லாம் போட்டி போட வேண்டியிருக்கு"), "கார்" லோனுக்காக போனில் தொல்லை கொடுக்கும் இரண்டு விற்பனை ஏஜெண்ட்டுகள், தொல்லை பொறுக்க முடியாமல் நேரில் வரச்சொல்லி அரை நிர்வாணப்படுத்தி அடிக்கும் தாதா (போலீஸ்காரனுங்க கிட்ட கூட நம்ப நம்பர் இல்ல. இவனுங்களுக்கு எப்படிர்ரா கிடைக்குது?"), சுனாமியில் தம் பெற்றோர் இறந்திருப்பார்களா என்று அறிய STD தொலைபேசியில் காசை செலவழிக்கும் பேப்பர் பொறுக்கும் தமிழ்நாட்டு அப்பாவி சிறுவன் (இவனின் பெற்றோர் இறந்து அவர்களின் உறவினர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணத் தொகையை அரசியல் கைகள் பிடுங்கித் தின்றிருப்பது பிறகு தெரிகிறது) ஆகஸ்டு 15 இரவில் தெருவில் கசக்கி எறியப்பட்டிருக்கும் தேசியக் கொடிகளை கனமான இதயத்துடன் பொறுக்கும் நல்வாழ்வு மைய பொறுப்பாளர், சிக்னலில் மெதுவாக வண்டியை செலுத்தி அதன் மூலம் சைடில் சம்பாதிக்கும் டிரைவர்கள், (சிவப்பு விழப் போவது தெரிந்தும் மெதுவாக வந்து சிக்னலில் நிற்கும் இவர்கள், பிச்சை கேட்டு வருபவர்களுக்கு தன்னிச்சையாக இரண்டு ரூபாயை அளிப்பார்கள். தாம் உட்கார்ந்திருக்க டிரைவர் பிச்சை போடுவதா என்று ஈகோ கொப்பளிக்கும் முதலாளிகள், டிரைவரை தடுத்து தாம் பத்து ரூபாயை பிச்சையளிப்பார்கள். Psychology!) .......... என்று இத்தனை பேர் பிழைப்பு சிக்னல் இருப்பதினால் ஓடுகிறது. /////

ஆக திருநங்கைகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லை என்பதும், தொடர்ந்து திரைப்படத்தின் அபத்தமான காட்சியாக இதைச் சுட்டிகாட்டுவதும் தான் எனக்கு தொந்தரவாக இருந்தது. இது வழக்கமான திருநங்கைகள் குறித்த தவறான புரிதலாலும் இருக்கலாம் என்று எண்ணிணேன். அதனை சரிசெய்து புரிதல ஏற்படுத்தவதே என் முதல் பின்னூட்டத்தின் நோக்கமாகும்.


/// மேலும் விமர்சனம் என்பதே ஒரு தனிநபரின் பார்வைதான். அவனுடைய கோணத்திலிருந்துதான் அவன் எழுதுகிறான். இது நபருக்கு நபர் மாறுபடலாம்; மாறுபடும். /////


தங்களது மற்ற திரை விமர்சனங்கள் ( குறிப்பாக புதுப்பேட்டை மற்ற விவரணைகள் உட்பட) என் மதிப்பீட்டிற்கு ஒத்துப் போனதால், தங்களின் மதிப்பு கொண்டே இந்த உரிமையையும் எடுத்துக் கொண்டேன்.

//// நான் கூறியதுதான் "நடைமுறை" என்று நான் கூற மாட்டேன். என் பார்வையில் அது செயற்கையாகத் தெரிந்தது. அவ்வளவுதான். ////

மீண்டும் சொல்கிறேன், தாங்கள் சொல்வது சரியே. ஆனால், காட்சியின் நோக்கம், நடைமுறை இவற்றை முன்னிறுத்தியே நானும் என் கருத்தை கூறினேன். தங்களை புண்படுத்தியமைக்கு மன்னிக்கவும்.

நன்றி!!

Anonymous said...

ரொம்ப நாள் கழித்து இப்போதுதான் எட்டிப் பார்க்கிறேன் இங்கெ. நல்ல பதிவு, ஆனாலும், பேஜ் 3, கார்பரேட் அளவிற்கு இல்லை. ஒருவிதமான விடேத்தியான விளம்பர நிலையாக இந்த படம் இருக்கிறது. Is Mathur wanted to commercialise the options with him. சஹாரா நிறுவனதோடு 5 படங்கள் செய்ய ஒப்பந்தம் போட்டிருக்கிறார் மதுர். இது "வேறுவிதமான கெட்டிக்காரத்தனமாய்" தெரிகிறது. ஆனாலும், மசாலா இந்திப்படங்களை தாண்டி கட்டம் கட்டி அடிக்க இந்தியில் இந்தமாதிரி ஆட்கள் இருக்கிறார்கள். டிராபிக் சிக்னல் பிடித்திருந்தால் ப்ளாக் ப்ரெடே பாருங்கள், பல குறைபாடுகள் இருந்தாலும் docu-cinema வின் உன்னதங்கள் உள்ள படம்

நாராயணன்

தறுதலை said...

சுரேஷ்,
இப்படி நல்ல படங்களைப் பற்றி அடிக்கடி விமர்சனம் எழுதவும். படங்கள் என்றாலே இப்போதெல்லாம் காத தூரம் ஓடுகிறேன். நல்ல அறிமுகம் கிடைத்தால் நிச்ச்யம் பார்ப்பேன். பார்க்கக்கூடிய ஆவலை தூண்டுகிரது இந்த விமர்சனம்.

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

manjoorraja said...

படத்தை விரைவில் பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.