Wednesday, October 18, 2006

ஒரு Corporate இலக்கியக் கூட்டம்

பொதுவாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே செல்வதை தவிர்ப்பவன் நான். ஒரு அலுவலக இயந்திரமாக போலிப்புன்னகைளும், வெளிக்காட்ட முடியாமல் மென்று விழுங்கப்பட்ட எரிச்சலுமாக ஆறு நாட்களும் கழியும் போது மிகப் பெரிய விடுதலையாக ஒரு நாள் கிடைக்கும் போது அதன் ஒவ்வொரு கணத்தையும் சுதந்திரமாக என்னுடைய விருப்பப்படி எனக்காக மட்டுமே செலவு செய்யவே விரும்புவேன். பொதுவாக குளியலுக்கு கூட அன்று விடுமுறைதான். வாரப்படாத தலையும், அலட்சியமாகக் கட்டப்பட்ட லுங்கியுமாக (எனக்கே) சகிக்காத கோலத்தில்தான் ஞாயிறுகள் கழியும். பெரும்பாலும் புத்தகம், கொஞ்சம் இசை, கொஞ்சம் தொலைக்காட்சி என்பதாகவே அது இருக்கும். முழு நாளையும் செலவு செய்து விட்டு இரவு 10 மணிக்கு துணி துவைப்பவன் சென்னையிலேயே நானாகத்தான் இருக்க முடியும். சுருங்கக்கூறின் ஞாயிறுகளின் பொழுதுகளை தீர்மானிப்பவன் நானே. இதற்காகவே என்னுடைய திருமணம் நடந்த நாளைக்கூட ஞாயிறு அல்லாத தினத்தில் அமைத்துக் கொண்டேன் என்று சொன்னால் அது சற்று அதீதமாகவே உங்களுக்குத் தோன்றக்கூடும். பல நல்ல திரைப்பட விழாக்களை, நண்பர்களின் சந்திப்பை ஞாயிறு அன்று அமைந்ததாலேயே பல முறை தவற விட்டதுண்டு. அலுவலக நாள் போலவே அன்றும் குளித்து, ரெடியாகி, பேருந்து பிடித்து போக வேண்டியதை நினைத்து ஏற்படும் சோம்பேறித்தனம்தான் காரணம். (போதும்பா. விஷயத்துக்கு வா!)

உயிர்மை பதிப்பகம் வெளியிடும் சாருநிவேதிதாவின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பினை பார்த்ததிலிருந்து ஞாயிறன்று அது அமைந்ததில் செல்லலாமா, வேண்டாமா என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். சாருவின் எழுத்து குறித்து எனக்கும் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பாசாங்குகளைக் களைந்து வெளிப்படையாக எழுதப்படுகிற மற்றும் உலக இலக்கியங்களை - சற்றே அலட்டலுடனும் என்றாலும் - சுவாரசியமாக அறிமுகப்படுத்துவது என்கிற வகையிலும் அவர் எழுத்துக்கள் மீது ஒரு ஆதாரமான விருப்பம் எனக்கு இருந்தது என்பதையும் சொல்லியாக வேண்டும். நேற்று எல்லாமே சரியாக அமைந்துவிட விழாவிற்கு செல்வதென்று முடிவெடுத்தேன். மேலும் பங்கேற்போர் பட்டியலில் ஆர்.பார்த்திபன், பிரகாஷ்ராஜ் போன்ற பெயர்களை பார்த்திருந்ததனால், என்னதான் அறிவுஜீவி வேடம் போட முயற்சித்தாலும், நடிகர்களை நேரில் பார்க்க வேண்டும் என்கிற உள்ளுக்குள் மறைத்திருக்கிற பாமர ஆசையும் போகும் எண்ணத்தை உசுப்பியிருக்கலாம். :-)

()

தியாகராய சாலையில் ரெஸிடென்ஸி டவர்ஸில் எம்பரர் ஹால். பொதுவாக இலக்கியக்கூட்டங்கள் என்றாலே வெற்றிலைப் பாக்கு கறைகளுடன் கூடிய இருட்டான மாடிப்படிகள் அமைந்த, கொட்டாவியை அடக்கிக் கொண்டு இருபது அல்லது முப்பது நபர்கள் அசுவாரசியமாக கவனித்துக் கொண்டிருக்கிற, கதர்ச்சட்டையும் ஜோல்னா பையுமாக "இலக்கியவாதிகள்" என்று நெற்றியில் எழுதி ஒட்டி வைத்திருக்கிற சில நபர்களுமாக (அவர்களில் கட்டாயம் ஒருவர் தலை நிறைய முடியுடன் குடுமி வளர்த்திருப்பார்) டீயும் பிஸ்கெட்டும் கொடுப்பார்கள். வெளியே பழைய புத்தகக் கடைகளுமாக இருக்கும் ...... இப்படித்தான் அனுபவப்பட்டிருக்கிறேன். ஆனால் சாண்டலியர் விளக்குகள் இருளை துப்புரவாக துரத்தி வெளிச்சமாக்கி வைத்திருக்கிற, அஜாக்கிரதையாக நடந்தால் கால்வழுக்கி விடக்கூடிய மார்பிள் மாயாஜாலங்கள், குஷன் நாற்காலிகள், குளிர்பதன வசதியுட்ன கூடிய அரங்கத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தை பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் நடந்த விருந்து, முழு ப·பேயாக சைவம் மற்றும் அசைவ பதார்த்தங்களோடு இருந்தது. வணிக நிறுவனங்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்யும் பிரஸ் மீட் போன்றவைகளில்தான் இந்த மாதிரியான அனுபவங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன.

()

சில வருடங்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணன் என்றொரு பிரகஸ்பதி ஒரு பிரபல வங்கியின் சேர்மனாக இருந்தார். சென்னை நகரில் எது திறக்க வேண்டுமானாலும் இவரை கூப்பிட்டனுப்புவார்கள். (இந்த வாக்கியத்தை வரிகளின் இடையில் படிக்காமலிருக்க வேண்டுகிறேன்) இவரும் திறந்து அடுத்த நாள் நாளிதழ் செய்திகளில் வாயெல்லாம் பல்லாக நிற்பார். நல்லி குப்புசாமி செட்டியாரையும், சென்னை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜனையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாமா என்று தோன்றுகிறது. பல நூல் வெளியீட்டு விழாக்களிலும் இவர்களைப் பார்க்கிறேன். சாருவின் "கோணல் புத்தகங்கள்" வெளியீட்டுவிழா உட்லண்ஸில் நடந்த போது கூட இவர்கள்தான் பிரதானமாக கலந்து கொண்டனர். எனவே பேச்சு என்கிற பெயரில் இவர்கள் ஆற்றினவைகளை தவிர்க்கிறேன்.

கூட்டத்தில் பேசியவர்களின் உரைகளிலிருந்து எனக்கு நினைவிலிருக்கும் பகுதியை என்னுடைய மொழியில் தருகிறேன். (கருத்துப்பிழை ஏதேனும் இருந்தால் அது என்னுடைய பிசகேயாகும்)

நாஞ்சில் நாடனின் பேச்சு வழக்கம் போல் ஆத்மார்த்தமாகவும் பாசாங்கில்லாமலும் கச்சிதமாக அமைந்தது.

.... என்னுடைய எழுத்துக்களின் மீது சாருவிற்கும் அவர் எழுத்துக்களின் மீது நானும் பொறாமையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரை sex writer என்கிறார்கள். இன்றைக்கு சினிமாவில் இல்லாத செக்ஸா? முன்பெல்லாம் ஒரு நடிகை மாடிப்படியிலிருந்து இறங்கி வருவதை கேமராவை கீழே வைத்து படம் பிடித்ததையே பார்த்து அன்றைய ரசிகர்கள் கிறங்கிக் கொண்டிருந்தார்கள். இன்று அந்த மாதிரியான காட்சி அதே உணர்வைத் தருமா? அதையெல்லாம் தாண்டித்தானே தமிழ் சினிமா சென்று கொண்டிருக்கிறது? .........

........ இன்றைக்கு இலக்கிய உலகில் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது. சக எழுத்தாளின் வீட்டுக்கு செல்லும் போது பருகத்தருகிற எதையும் குடிக்க பயமாயிருக்கிறது. ஒரு படைப்பை விமர்சனம் செய்ய அதைப் படித்தாக வேண்டிய கட்டாயம் ஒன்றுமில்லாத நிலையே இருக்கிறது. படிக்காமலேயே விமர்சனம் செய்யலாம். "இவன்தான் இப்படித்தான் எழுதுவான்" என்று முத்திரை குத்தி முன்தீர்மானத்துடனேயே அணுகுகிறார்கள். எதையும் படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். என் எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள். செருப்பால் கூட அடியுங்கள். ஆனால் படித்து விட்டு செய்யுங்கள்......

......... இலக்கியம் என்பது வாசகனை பயமுறுத்தி விரட்டுவதாக இருக்கக்கூடாது. சிநேகித பாவத்துடன் இருக்க வேண்டும். சாருவின் எழுத்துக்கள் சுவாரசியமானது...

அடுத்து பேசிய கனிமொழியின் பேச்சு கனமில்லாமல் இயல்பாக இருந்தது.

...........சாரு என்னை தத்தெடுக்கிட்டவர்னு சொல்லுவேன். இந்து நாளிதழில் பணிபுரிந்த காலத்தில் எனக்கு சாரு உலக இலக்கியத்தை, இசையை அறிமுகப்படுத்தினார். பதே அலிகானெல்லாம் (Nusrat Fateh Ali Khan) அவர்தான் தெரியப்படுத்தினார். அப்பவே நெறைய விஷயம் தெரிஞ்சிருப்பார். நெஜமாவே விஷயம் தெரிஞ்சவரா..இல்ல.. கொஞ்சம் பெயர்களை தெரிஞ்சுக்கிட்டு பாவனை காட்றாரோன்னு சந்தேமாக இருக்கும். ஆனா அணுகிப் பார்க்கறப்போ ஒவ்வொண்ணைத்தையும் விவரமா சொல்வார். இப்ப இருக்கற மாதிரி இண்டர்நெட் வசதியெல்லாம் அப்ப கெடையாது. நெறைய படிச்சிருப்பார். திவ்வியப் பிரபந்தம் பத்தி கூட அவர் விவரமா சொன்னது ஆச்சரியமா இருந்தது. ..........அவர் இளைஞர்னு சொல்லிக்கறததான் சகிச்சிக்க முடியல....(சிரிப்பு)

டிராஸ்ட்கி மருதுவின் பேச்சு சீரியஸாகவும் விஷயபூர்வமாகவும் இருந்தது. (கொஞ்சம் போரடித்தது என்று கூட சொல்லலாம்)

..........சாருவின் புத்தகங்களை படிக்க முடியலைன்னாலும், அவர் ஹொடரோவ்ஸ்கி (Jodorowsky) பத்தி உயிர்மைல எழுதின கட்டுரை ஆச்சரியமா இருந்தது. அதனாலதான் இந்த கூட்டத்துக்கே வந்தேன். நெறைய பேருக்கு அந்த பெயரையே தெரியாது. பொதுவா உலக மக்களை ஹொடரோவ்ஸ்கி படங்களை பார்த்தவர்கள் / அல்லாதவர்கள்னு ரெண்டு பிரிவா பிரிக்கலாம். அந்தளவிற்கு அவருடைய படங்கள் முக்கியமானது. .............

........எனக்கு பிடிச்சது காமிக்ஸ். உலகத்திலேயே பிரான்சும், ஜப்பானும் காமிக்ஸ சீரியஸா இலக்கிய அளவுல பாக்கறாங்க. ஒரு சினிமா இயக்குநருக்கு காட்சியின் ஒவ்வோரு பிரேமும் ஒவியம் மாதிரி முக்கியமானதா இருக்கணும். ரெண்டு பேர் பிரேம்ல நிக்கறாங்கன்னா. எந்த இடத்துல நிக்கணும், எந்த இடத்துல லைட் இருக்கணும்னு எல்லாமே முன்கூட்டியே தீர்மானமா இருக்கணும். நாசரோட தேவதைங்கற படத்துல "ஒரு 300 வருஷத்துக்கு முந்தைய கால கட்டத்துல எந்த செட்டும் போடாம கணினி கொண்டே அமைச்சோம். இம்சை அரசன்ல கூட அந்த மாதிரி சில விஷயங்கள் செஞ்சிருக்கோம். ..........

சாருவின் எழுத்துக்களை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் ராமகிருஷ்ணன் மலையாளத்தில் பேசியதில் எனக்கு புரிந்த சில:

சாருவின் எழுத்துக்களை மலையாள இலக்கிய உலகில் மிகவும் மதிக்கிறார்கள். அவர் பெயரை வைத்து பெண் எழுத்தாளர் என்று கூட சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

()

பார்த்திபன் தனக்கேயுரிய வார்த்தை விளையாட்டுக்களோடு சபையை சிரிக்க வைத்தார் என்பதோடு வேறு எந்த விஷயமும் இல்லை. சில பிரபலங்களை எதிர்பாராத இடங்களில் சகித்துக் கொள்ள வேண்டியிருப்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணம். தனக்கு சாரு சமீபத்தில்தான் அறிமுகமானார் என்றாலும் 15 வருடமாக பழகியது போன்ற உணர்வு இருவருக்குமே ஏற்பட்டிருக்கிறது என்றார்.

எந்தவித சம்பிரதாயங்களுமில்லாமல் தன் உரையை ஆரம்பித்தார் சாரு.

.......... இன்றைய பதிப்பக சூழ்நிலையில் எந்தவொரு புத்தகமுமே முதல் பதிப்பில் 1000 பிரதிகளே அச்சடிக்கப்படுகின்றன. ரஜினிகாந்ந்த் போன்று எழுத்துலகின் சூப்பர் ஸ்டாராக விளங்குகிற சுஜாதாவிற்குமே இதே நிலைதான் என்று மனுஷ்யபுத்திரன் வாயிலாக தெரிகிறது. நம்மை விட ஏழை நாடான துருக்கயின் மொத்த மக்கள் தொகையே தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடானது. அங்கு ஒரு புத்தகம் முதல் பதிப்பாக 1 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்படுகின்றன. மத்தவங்களுக்கு எழுதறதுதான் பிரச்சினை. எனக்கு அதோட என் புத்தகங்களை நானே பதிப்பிக்கிற தொல்லை வேற இருக்கு. இப்பதான் மனுஷ்யபுத்திரன் என் புத்தகங்கள கொண்டு வர்றார்.

.......... எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருக்கார். எனக்கு சந்தோஷமாக இருக்கு. அவரை எவ்வளவோ விமரசித்து எழுதியிருக்கேன். ஆனா ignore பண்ணலையே. ஆனா நான் கடந்த 30 வருஷமா தொடர்ந்து புறக்கணிக்கப்படறேன். இது ரொம்ப முக்கியமானது. .........

......... நாலு புக்ல மத்த புத்தகங்களல வந்து மாணவர்களுக்கு பாடமாக கூட வைக்கலாம். ஆனா ராஸ லீலால நெறைய சர்ச்சையான விஷயங்கள எழுதியிருக்கேன். புத்தகமா போடறதுக்கு முன்னாடி மனுஷ்யபுத்திரன் கிட்ட "இதனால உங்களுக்கு தொல்லைகள் வரலாம். ஏன் ஜெயில்ல கூட போடலாம்"னேன். "நல்ல பாத்ரூம் மாத்திரம் இருந்தா போதும். நான் சமாளிச்சுக்குவேன்"றாரு அவரு.

.......அடுத்து காரைக்கால் அம்மையாரை பத்தி ஒரு நாவல் எழுதிக்கிட்டு இருக்கேன். செக்ஸே கிடையாது. (சிரிப்பு). ஆனா supression of body பத்தினது அது. இதுல கூட பாடி வருது பாருங்க. அப்புறம் "ஆஸ்பிட்டல்"னு ஒரு நாவல் எழுதறேன். இந்த நூல்களோட வெளியீட்டை பிரம்மாண்டமா cosmopolitan club-ல வைக்கலாம்னு ஒரு யோசனை. .... என்றவர் "வாழ்க்கைய கொண்டாடணும்ங்க" என்கிற செய்தியோடு முடித்துக் கொண்டார்.

()

சாருவின் முக்கிய அடையாளமே கலகம்தான். யதார்த்தவாத எழுத்துக்களால் தமிழ் இலக்கிய தேங்கிய நிலையிலிருக்கும் போது எல்லா மரபுகளையும் உடைத்துப் போட்டு எழுதின கலகக்கார எழுத்தாளர்களில் சாருவும் முக்கியமானவர். அவரின் நூல் வெளியீடு ஒரு வணிக நிறுவனத்தின் தயாரிப்பு அறிமுகத்திற்கு ஒப்பான சம்பிரதாயங்களுடன் நடைபெறுவது - என்னைப் பொறுத்தவரை - முரணாக தோன்றுகிறது. இந்த நூல்வெளியீட்டு விழா ஒரு பொதுக் கழிப்பறையின் முன்னால் நடைபெற்றிருந்தால் அது எனக்கு இயல்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

பிற்பாடு சாருவுடன் ஒரிரு வார்த்தைகள் (பொதுவாக அறிமுகப்படுத்தப்படாமல் என்னால் யாரிடமும் உரையாட முடியாது. ஆனால் நிர்மலாவும் (ஒலிக்கும் கணங்கள்) கூட இருந்த காரணத்தினால் என் இயல்புக்கு மாறான நிலையில் உரையாடினேன்) பேசும் போது "உங்க நூல்வெளியீட்ல விஸ்கியோ, பியரோ வழங்கப்பட்டிருந்தா அது எனக்கு இயல்பா இருந்திருக்கும். இப்படி சாம்பார் வடைல்லாம் இருக்கும் போது கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கு" என்றேன். புன்னகையோடு கேட்டுக் கொண்டார். "கிட்டத்தட்ட 600 பேருக்கும் மேல தமிழ்ல வலைப்பதியறாங்க. நீங்க எதையாச்சும் பாக்கறதுண்டா" என்றதற்கு "இல்லை" என்றார்.

சாப்பிடும் போது எஸ்.ராமகிருஷ்ணணுடன் சற்று உரையாட முடிந்தது. பேருந்து நிலையத்தில் பார்க்க நேர்ந்த ஒரு நிகழ்வைச் விவரித்து அதை எழுதவிருப்பதாகச் சொன்னார். அவரின் சமீபத்திய சிறுகதைகள் நிறம் மாறியிருப்பதை குறிப்பிட்ட போது 'மிகவும் திட்டமிட்டே ஆரம்ப நிலையில் எழுதின பாணியிலேயே' எழுதுவதாகச் சொன்னார்.

பிரகாஷ்ராஜ் இந்த கூட்டத்திற்கு வரவில்லை. நிறைய வாசிப்பவர் என்று அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழ் இலக்கியம் படிக்க முயற்சிக்கிறாரா என்று தெரியவில்லை. "ராஸ லீலா" வை மாத்திரம் வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். சாப்பிட்டு விட்டு வருவதற்குள் விற்பனை மேஜை காலியாக கிடந்தது.

ஹொடரோவ்ஸ்கி (Jodorowsky) பற்றி சாருவின் கட்டுரை. ஒன்று இரண்டு


இந்த விழா பற்றிய நிர்மலாவின் கட்டுரை