Wednesday, April 05, 2006

மன்னிச்சிடுங்க!

ஐந்தாண்டுக்கொருமுறை அரசியல்வாதிகள் முதல் பாக்கிச் சில்லறை தராமலிருக்கும் பேருந்து நடத்துனர் வரை அனைவரிடமும் ஏமாந்து ஏமாந்து... ஒரு மாறுதலுக்காக நான் யாரையாவது ஏமாற்றிப் பார்க்கலாம் என்று யோசித்ததின் விளைவுதான் முன்னர் எழுதிய தொலைக்காட்சியில் நடிப்பதாக போடப்பட்ட பதிவு.

மிகவும் உஷாரான நம் மக்கள், ஏப்ரல் 1 அன்று இதை வெளியிட்டால் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்கிற யூகத்தினால் இரண்டு நாட்கள் கழித்து வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. பொதுவாகவே என்னிடம் ரகசியத்தை காப்பாற்றுவதிலோ, நம்பகத்தன்மையுடன் பொய் சொல்வதிலோ திறமை கிடையாது. வேடிக்கைக்காக பொய்யை காப்பாற்ற சொன்னால் கூட சிரித்தே காண்பித்து கொடுத்துவிடுவேன். கலர் டி.வி கொடுப்பதாக எந்த அரசியல் கட்சியாவது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தால் கூட "கூடவே ரிமோட்டும் கொடுப்பீங்கதானே" என்று கேட்குமளவிற்கு ஏமாறுபவன் நான். எனவே என்னாலும் திறமையாக நம்பும்படி பொய் சொல்ல முடிகிறதா என்று என்னையே சோதித்துப் பார்ப்பதற்காக இந்தப் பதிவு.

எனவேதான் கற்பனையுடன் நிஜத்தையும் கொஞ்சம் பிசைந்து எழுதினேன். எழுதி விட்டேனே தவிர, மனப்பூர்வமான வாழ்த்துக்களுடன் வரும் பின்னூட்டங்களை பார்க்கும் போது, இத்தனை நல்ல உள்ளங்களை ஏமாற்றி விட்டோமே என்கிற குற்ற உணர்வு எழுந்தது நிஜம்.

()

இந்த மாதிரி ஏப்ரல் 1ல் மற்றவர்களை முட்டாள்களாக்குவதில் அப்படியொன்றும் நான் சமர்த்தனில்லை. என்றாலும் இவ்வாறு மற்றவர்கள் முட்டாளாக்கப்படுவதை பார்த்து ரசிக்கப்பிடிக்கும். எனவேதான் Pogo சானலில் just for laughs:Gags என்கிற நிகழ்ச்சியை இயன்ற போதெல்லாம் பார்த்து ரசிப்பது வழக்கம். அம்மாதிரி ஏதாவது செய்யலாம் என்கிற யோசனையிலிருக்கும் போது யதேச்சையாக தோன்றியதுதான் இந்த சமாச்சாரம்.

உண்மையில் நான் மிகவும் வெறுக்கும் பட்டியலில் தொலைக்காட்சி தொடர்களுக்கு பிரதான பங்குண்டு. சிறுவயதுகளில் என்னை மனரீதியாக பாதித்ததற்கு தூர்தர்ஷனின் செவ்வாயக்கிழமை நாடகங்களுக்கு பெரிய பங்குண்டு. ஏதாவது ஒரு தொடரை விரும்பிப் பார்த்தேனென்றால் அது நாகாவின் "மர்மதேசம்"தான். Split personality என்கிற விஷயத்தை சந்திரமுகியின் தாத்தா காலத்திலேயே மிகத் திறமையாக கையாண்டிருப்பார் நாகா. மேலும் விஷீவல் மீடியம் என்பதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு தன் தொடரில் மிகச் சரியாக உபயோகித்தவர் அவர்.

ஏமாற்றுகிறேன் பேர்வழி என்று இத்தனை பேரை தெரிந்தோ தெரியாமலோ அந்த தொலைக்காட்சி தொடரை பார்த்து தண்டனை அடைவதற்கு ஒரு காரணமாகி விட்டோமே என்று நானும் 9.00 மணிக்கு அந்த தொடரை பார்க்க முடிவு செய்தேன். மைகாட்! செத்துத் தொலைப்பதற்கு முன் பக்கம் பக்கமாக வசனம் பேசும் அப்பா கேரக்டரும், அவர் சாவதற்கு முன்னாலேயே சங்கு, தப்பட்டையுடன் சுடுகாட்டு எபக்டை தன் கத்தல்களினால் கொண்டு வந்த நளினியாகட்டும்... எப்படி இந்த தொடர்களை ஜனங்கள் சகித்துக் கொள்கிறார்கள் என்று மகா ஆச்சரியமாக இருந்தது. என்னை மாதிரியே தொடர்களில் வெறுப்பு கொண்டிருப்பவர்களையும், நட்பு ரீதியான வேண்டுகோளின் மூலம் பார்க்க வைத்து அவர்களின் நேரத்தை வீணடித்து, வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டோமே என்று குறுகுறுவென்றிருந்தது. தேவையில்லாமல் இந்த எரிச்சலூட்டும் தொடருக்கு வேறு விளம்பரம் தேடிக் கொடுத்தோமே என்கிற குற்ற உணர்ச்சி வேறு. எதையோ செய்யப் போய் ஒரு அபத்த நாடகத்தை நிகழ்த்தியவன் போல் உணர்ந்தேன்.

()

ஆகவே மக்களே...

வெள்ளந்தி மனசுடன் மனப்பூர்வமான வாழ்த்து சொன்னவர்களுக்கும், "இந்த மூஞ்சில்லாம் நடிக்கப் போவுதாமா, இன்னிக்கு வீட்டுக்குப் போனவுடனே டிவியை ஒடைச்சுட்டுதான் மறுவேலை" என்று கறுவிக் கொண்டிருந்தவர்களுக்கும், ஏதாவது ஏமாற்றுச் சமாச்சாரமாகத்தானிருக்கும் என்று சரியாக யூகித்து நமட்டுச் சிரிப்புடன் அமைதி காத்தவர்களுக்கும், வேறு யாரையோ பார்த்து நான் என்று தவறாக நினைத்துக் கொண்டு வாழ்த்தியவர்களுக்கும், உங்களின் விலைமதிப்பில்லாத நேரத்தை
வீணடித்ததிற்கும்...

மன்னிச்சுடுங்க.

12 comments:

Geetha Sambasivam said...

நல்லவேளை நான் பிழைத்தேன்.நேற்று அந்தக் குறிப்பிட்ட சீரியல் பார்க்க முடிய வில்லை என நினைத்தேன்.ஏமாற வில்லை.கோலங்கள் தினமும் பார்க்க முடியாது. வெறுத்துப் போய் விடும்.

abiramam said...

this not too much...three much...but over much................

VSK said...

Thank God! I saw these posts[both] only today and escaped!!!

But definitely it is OVER>>>>!

முத்துகுமரன் said...

நீங்க பெரிய மனுசனா மன்னிப்பு கேக்குறப்ப நாங்க மனுசனா மன்னிச்சிட மாட்டோமா என்ன:-)))))))))

Anonymous said...

சுரேஷ், ஒரு தகவல்.

சீரியலிலேயே பணியாற்றுபவர் என்றாலும் வசனகர்த்தா ரெகமண்ட் செய்தெல்லாம் ஒருவருக்கு சான்ஸ் கிடைக்காது!;-)

குறிப்பாக, குட்டி பாத்திரங்களுக்கு. பெரும்பாலும் யூனிட்டிலேயே உள்ள லைட்மென், கேமரா அசிஸ்டெண்ட், கேட்டரிங் உதவியாளர்கள் போன்றவர்களைத்தான் ஒரு காட்சி நடிப்புக்குப் பயன்படுத்துவார்கள். சம்பளம் குறைவாக உள்ள அவர்களுக்கு அன்று ஒருநாளாவது சற்றே கூடுதல் வருமானம் கிடைக்கும் என்கிற எண்ணம்தான் காரணம். இது பொதுவாக அனைத்து சீரியல்களிலுமே உள்ள நடைமுறை.

இதுவே துணை நடிகர்களாகக் கூட்டத்தில் வந்து போவதென்பது வேறு. அதற்கு யூனியனிலிருந்துதான் ஆளெடுக்க வேண்டும்.ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே அது செய்யப்படும்.

மற்றபடி சிபாரிசுகள் சினிமாவில் செல்லுபடியாகலாமே தவிர, தொலைக்காட்சியில் சாத்தியமில்லை.

அன்புடன்
பாரா

அபுல் கலாம் ஆசாத் said...

Suresh,

You made me to glue with Sun to watch Nalini's over acting and put me in nostalgic thought of 'dhiim tha naka dhiim'...that rain song with Ganga ;-) boss.

anbudan
Azad

PKS said...

இப்படி ஏமாற்றிய பாவத்திற்கு நீர் நிஜமாகவே ஒரு சீரியலில் நடிக்கக் கடவது என்று சபிக்கிறேன். :-))

அன்புடன், பி.கே. சிவகுமார்

பிரதீப் said...

சுரேஷ்,

சும்மா கத விடாதீங்க. உங்களுக்கா ஏமாத்தத் தெரியாது? நம்ம தொலைபேசி சம்பாஷனைய பத்தி மக்களுக்கு சொல்லவா? நல்ல வேளை, இந்த முறை நான் ஏமாறவில்லை.

துளசி கோபால் said...

ஓ மை காட்!!!!

என்ன நடக்குது இங்கே?

J. Ramki said...

//சீரியலிலேயே பணியாற்றுபவர் என்றாலும் வசனகர்த்தா ரெகமண்ட் செய்தெல்லாம் ஒருவருக்கு சான்ஸ் கிடைக்காது!;-)
//

சுரேஷ், பிடிங்க சாபத்தை! இப்படியொரு போஸ்ட் போட்டு பாராவை பதில் சொல்ல வைச்சு, எனக்கு நடிக்க சான்ஸ் கிடையாதுங்கிறதை....!

டிபிஆர்.ஜோசப் said...

என்னங்க நீங்க,

உங்க போட்டோவ கைல வச்சிக்கிட்டு இவரா இருக்குமோ, அவரா இருக்குமோன்னு அலைபாய வச்சிட்டீங்க.

யார் என்ன சொன்னாலும் கோலத்தை வெறும் வசனங்களுக்காக, அதில் வரும் குட்டி, குட்டி பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களையும் ஓரளவு திறம்பட நடிக்க வைத்திருப்பதாலும் முடிந்த அளவுக்கு விடாமல் பார்ப்பவன் நான். எனக்கு கதை சொல்வது மிகவும் பிடிக்கும். அத்துடன் இந்த சீரியல் ஒலிபரப்பப்படும் நேரம் எனக்கு ஒத்துவருவதால் பார்ப்பேன். அன்னைக்கி உங்க மூஞ்ச தேடிக்கிட்டே இருந்ததுல யார் என்ன பேசினான்னே கவனிக்க முடியலை.

அதுக்காகவே உங்கள் நா மன்னிக்கவே மாட்டேன்:-(

அதுசரி. அதான் மாடரேஷன் வந்துருச்சே இன்னமும் ஏன் இந்த வேர்ட் வெரிஃபிகேஷன வச்சிருக்கீங்க. அந்த எழுத்துகள் பார்த்து பார்த்து அடிக்கறதுக்குள்ள போறும், போறும்னு ஆயிருதுங்க. எடுத்துருங்க.

பிச்சைப்பாத்திரம் said...

//அதுக்காகவே உங்கள் நா மன்னிக்கவே மாட்டேன்:-( //

Dear Mr. Joseph,

Sorry once again.

//ஏன் இந்த வேர்ட் வெரிஃபிகேஷன வச்சிருக்கீங்க//

I removed the word verification, as per your suggestion. Thanks.