Friday, March 31, 2006

எழுத்தாளர் (திருமதி & திரு) சுஜாதாவின் நேர்காணல்

1)

குமுதம் 'சிநேகிதி' (ஏப்ரல் 2006) இதழை அலுவலகத்தில் பார்க்க நேர்ந்தது. நான் பொதுவாக இம்மாதிரியான 'அம்மாமி' பத்திரிகைகளை படிப்பதில்லை. 'பால் பாயாசம் செய்யறப்போ தீஞ்சு போகாம இருக்கணும்னா.... என்கிற அதி உபயோகமான குறிப்புகளுடன் உள்பாடி தெரியாமல் ஜாக்கெட் அணிந்து கொள்வது எப்படி போன்ற குறிப்புகள் மாடலிங் முயற்சி செய்து தோற்றுப் போன பெண்ணின் புகைப்படங்களுடன் விளக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த இதழை எதிரே இருந்தவர் புரட்டிக் கொண்டிருந்த போது, மிகவும் பரிச்சயமான ஒரு முகத்தின் பல புகைப்படங்கள் கண்ணில் பட்டது. எழுத்தாளர் சுஜாதா.
இவரின் புகைப்படங்கள் ஏன் இதில்? "மாமிகளும் மாயாஜால டெக்னாலஜியும்" என்றொரு அறிவியல் தொடர் எழுத ஆரம்பித்து விட்டாரா? என்ற கேள்வியுடன் புத்தகத்தை வாங்கி புரட்டினேன். திருமதி. ரங்கராஜனின் (உண்மையான சுஜாதா) பேட்டி ஒன்றொரு வெளியாகியிருக்கிறது, 'நான் ஒரு துருவம். அவரோ மற்றொரு துருவம்".. என்கிற தலைப்புடன். சுஜாதாவைப் பற்றின சில சுவாரசியமான செய்திகளை அதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. (இவர் அருமையா கிதார் வாசிப்பார்.... சின்ன சின்ன ரெ·ப்ரன்ஸீக்கு கூட கையில இருக்கற காசையெல்லாம் போட்டு புத்தகம் வாங்கிட்டு வந்துடுவார்... )

அது மட்டுமல்லாமல் சுஜாதாவின் பல புகைப்படங்களும் காணக் கிடைக்கின்றன. சுஜாதா பிரியர்கள் ரசிக்கக்கூடும்.


2)

விஜய் டி.வியில் ஒவ்வொரு ஞாயிறு இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரப்படி) 'சிகரம் தொட்ட மனிதர்கள்' என்கிற தலைப்பில் பிரபலங்களின் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்ட நேர்காணல் ஒளிபரப்பாகிறது. பார்ப்போரை எரிச்சலடைய வைக்காத வகையில் கோபிநாத் நேர்காணல் அளிப்பவரை சாவகாசமாக பேச அனுமதிக்கிறார். இதில் எழுத்தாளர் சுஜாதாவின் நேர்காணல் வரும் ஞாயிறு (02.04.06) ஒளிபரப்பாறகிறது. (தினமணியில் வந்த செய்தியை வைத்து தெரிவிக்கிறேன். ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் என்னை திட்டாதீர்கள்)

()

தேசிகனுக்கு போட்டியா எல்லாம் இல்லீங்க... சும்மா சொல்லணும்னு தோணிச்சு. என்றாலும் ஒரு ரசிகரின் மனோபாவத்தோடேயே இந்தப்பதிவு எழுதபட்டிருப்பதை என்னாலேயே உணர முடிகிறது.

13 comments:

சம்மட்டி said...

உங்கள் பதிவுகளை படித்தேன், நீங்க சுப்புடு மாதிரி ஒரு நல்ல விமர்சகராக வருவீர்கள். வாழ்த்துக்கள்
சம்மட்டி

Anonymous said...

'//பால் பாயாசம் செய்யறப்போ தீஞ்சு போகாம இருக்கணும்னா.... என்கிற அதி உபயோகமான குறிப்புகளுடன் உள்பாடி தெரியாமல் ஜாக்கெட் அணிந்து கொள்வது எப்படி போன்ற குறிப்புகள்//

//இவர் அருமையா கிதார் வாசிப்பார்.... சின்ன சின்ன ரெ·ப்ரன்ஸீக்கு கூட கையில இருக்கற காசையெல்லாம் போட்டு புத்தகம் வாங்கிட்டு வந்துடுவார்..//

மேலே உள்ள தகவலைவிட கீழே உள்ள தகவல் எந்த விதத்தில் உசத்தி?

என்ன இலக்கியமோ என்னவோ?

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

///திருமதிகளின் நேர்காணல்களைப் படிப்பது / பார்ப்பது போன்ற கொடுமை வேறெதுவுமில்லை. //

பிரசன்னா,

இது கொஞ்சம் ஓவர்தான். :-)

//மேலே உள்ள தகவலைவிட கீழே உள்ள தகவல் எந்த விதத்தில் உசத்தி?//

நீங்கள் கேட்பது சரிதான். அவரவர் பார்வையில் தேவையானதுதான் முக்கியமாகப்படும் போலிருக்கிறது. என்றாலும் நான் அந்தக் குறிப்புகளை போட்டது, முழு நேர்காணலையும் படிக்க தூண்டுதலாக இருக்கும் என்கிற நம்பிக்கையினால்தான்.

rajkumar said...

அம்மாமி பத்திரிக்கைகளை படிக்காததற்கான காரணங்கள் உங்களிடம் இருக்கலாம். ஆனால் அதை வைத்து ஏளனம் செய்யக் கூடாது. தகவல் தேடல்கள் அனைவருக்கும் பொதுவானது. உள்ளாடை தெரியாமல் ஜாக்கெட் அணிவதற்கான தகவல் ஒருவருக்கு தேவைப்படுவதிலோ, அதை ஒரு பத்திரிக்கை பூர்த்தி செய்வதிலோ என்ன தவறு காண முடியும்?

ஒரு ஆணாதிக்க மனோபாவத்துடன் நீங்கள் எழுதியுருப்பதைப் போல் எனக்கு தொன்றுகிறது. பிரச்சன்னாவின் பின்னூட்டம் சந்தேகமேயில்லாமல் ஆணாதிக்க மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது

Anonymous said...

//பால் பாயாசம் செய்யறப்போ தீஞ்சு போகாம இருக்கணும்னா.... என்கிற அதி உபயோகமான குறிப்புகளுடன் உள்பாடி தெரியாமல் ஜாக்கெட் அணிந்து கொள்வது எப்படி போன்ற குறிப்புகள் //

நேர்மையாக பதில் சொல்லுங்கள்! உங்க வீட்டுல பாயசம் தீஞ்சுபோய் அப்படியே சாப்பிடக்கொடுத்தால் முகம் சொனங்காமல் இதெல்லாம் வாழ்க்கைல முக்கியமா அப்படினு சாப்பிடுவீங்களா?! பெண்கள் இதையெல்லாம் பார்த்துக்கறதுனாலதான் உங்களைப்போல இலக்கியவியாதிக கால்மேல கால் போட்டுக்கிட்டு "அம்மாமி" பத்திரிக்கைகளை நொக்கை சொல்லிக்கிட்டு சாரு போன்றவர்களின் பனிவிடை செய்த தாதிகளை விபச்சாரிகளாக நோக்கும் இலக்கியங்களை சிலாகிக்க முடிகிறது!

முக்கிமுக்கி முக்காநாளு இலக்கியம் படிச்சாலும் வாய்லதான் தின்னு காலைத்தான் கழுவனும்!

:( வருத்தப்படுகிறேன்!

பிச்சைப்பாத்திரம் said...

அன்பு Old Reader,

இது குறித்து எழுத நினைத்து பணி அழுத்தத்தால் இயலாமற் போய்விட்டது. எனினும் ஓர் அவசர பின்னூட்டம்:

சமையலையோ, ஆபாசமின்றி உடுத்துதலையோ நான் குறை சொல்ல வரவில்லை. ஆணாதிக்கப்பார்வையுடன் இந்த வார்த்தைகள் உள்ளதாக சில நண்பர்கள் பின்னூட்டமிட்டுள்ளனர். நிச்சயமாக இல்லை. (காலங்காலமாக நிலவி வரும் சில ஆணாதிக்க குணாசியங்களின் கற்பிதங்கள் என்னுள் உறைந்து போயிருப்பதையும் நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால் இதை எழுதியது அந்த தொனியில் நிச்சயமாக அல்ல). பெண்கள் பத்திரிகை என்றாலே சமையலைப் பற்றியும், ஆபரணங்கள் அணிதல், உடை உடுத்துதல் போன்றவற்றையே பிரதானமாக எழுதி அவர்களை இன்னும் சமையலறைக்குள்ளேயே பூட்டி வைக்கும் ஒரு ஊடகமாகத்தான் இந்த மாதிரி பத்திரிகைகளை பார்க்கிறேன். ஷேர் மார்க்கெட் பற்றியோ, விமான ஒட்டும் பயிற்சி குறித்தோ பெண்கள் பத்திரிகையில் வரக்கூடாதா? ஆண், பெண் என்கிற வேறுபாட்டையே மனர £தியாக நாம் கடந்து வர வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.

Anonymous said...

சுரேஷ் கண்ணன்,

உங்கள் பதிலுக்கு நன்றி!

நல்லவேளையாக இந்த உலகில் பெண்கள் இன்னும் பெண்களாகவே இருப்பதனால்தான் உலகம் ஓடிக்கொண்டிருக்கிறது!

இலக்கியம் என்பது வாழ்வின் உணவு, உறைவிடம் எல்லாம் மறந்த ஒரு ஏகாந்தத்தில் மிதப்பதற்காகவே இப்போதெல்லாம் எழுதப்படுகிறது. படிப்பவர்களுக்கும் அதுவே உணரவைக்கப்படுகிறது! ஒரு மனிதனின் அடிப்படைதேவைகளை அவன் பிறந்ததில் இருந்து பாலூட்டி, சோறூட்டி, மலத்துணிமாற்றி... செய்பவள் பெண்தான்! இவைகள் இன்னும் 100 வருடங்கள் ஆகினாலும் மாறிவிடுமா என்ன? இவைகளும் ஒரு குடும்பத்தினை நிர்வகிக்கும் சிந்தனைகளும் பெண்களுக்கு இருப்பதினால்தான் ஆண்கள் கவலையற்று வெளியுலகம் சுற்ற முடிகிறது! பெண்கள் இத்தகைய சிந்தனைகளில் இருந்து விடுபட்டு வரவேண்டும் என்று சொல்வதைவிட மாறிவரும் சூழ்நிலையில் ஆண்கள் இந்த சிந்தனைகளை சிரமேற்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஆண் பெண் இருபாலரும் வேலைக்கு ஓடும் அவசர யுகத்தின் முதல்தேவை!

இன்றைக்கு weekend Foodworldல் நிரம்பும் பேச்சுலர்களுக்கு இதெல்லாம் தேவையே இல்லை என்று சொல்லமுடியுமா? இக்கால IT இளைஞர்களில் 50% மேல் சமையல் தெரியும்! மனைவி/கணவன் இருவரும் இரண்டு shiftகளில் வேலைக்கு சென்று குழந்தையை பார்த்துக்கொள்வதையும் நானறிவேன்! இத்தகைய நிலைக்கு யார் காரணம் என "துக்ளக் வியாசர்"த்தனமாக யோசிப்பதைவிட, காலத்தின் மாறுதல் என எடுத்துக்கொள்வதுதான் நல்லதெனப்படுகிறது.

//ஷேர் மார்க்கெட் பற்றியோ, விமான ஒட்டும் பயிற்சி குறித்தோ பெண்கள் பத்திரிகையில் // இக்கால ஆண்களுக்கும் பெண்களுக்கும் இதையெல்லாம் சொல்லித்தர / கற்றுக்கொள்ள ஆயிரம் வழிகள் உள்ளன. உணவைப்பற்றியும், குழந்தை வளர்ப்புமுறை பற்றியும், குடும்பநலம் பேணுதல் பற்றியும் சொல்லித்தரத்தான் ஆட்கள் இல்லை! அதை இந்த பத்திரிக்கைகள் செய்யட்டுமே!!

வாய்ப்புக்கிடைத்தால் சென்றவார "அவள் விகடன்"னில் வந்த இட்டிலி விற்று 4 மக்களை ஆளாக்கிய IIM சரத்தின் அம்மாவின் கட்டுரையை படியுங்கள்!

Anonymous said...

சொல்ல விடுபட்ட ஒன்று...

1000 கவிதைகள் எழுதிய பாரதி "மாகாகவி" ஆகிவிட்டார்! அவருடன் கடைசிவரை வாழ்ந்து உப்பு புளி கணக்குப்பார்த்து குழந்தைகளை வளர்த்து பாரதியையும் பார்த்துக்கொண்டு அவரை மாகாகவியாக ஆக்கி கடைசிவரை வாழ்க்கையை போராட்டமாக வாழ்ந்த செல்லம்மா இன்னும் "அம்மாமி"யாகத்தான் வரலாற்றில் பார்க்கப்படுகிறாள்!

:(

ரவி said...

அண்னாச்சி...நீங்க மொதல்ல அத்த படிச்சதே தப்புன்றேன் நானு...அதுல வந்தது வென...

அத தயாரிக்கறவங்க பெண்கள் தான...அவங்க அவங்களுக்கு புடிச்சத போட்டுகுறங்க..

'//பால் பாயாசம் செய்யறப்போ தீஞ்சு போகாம இருக்கணும்னா.... என்கிற அதி உபயோகமான குறிப்புகளுடன் உள்பாடி தெரியாமல் ஜாக்கெட் அணிந்து கொள்வது எப்படி போன்ற குறிப்புகள்//

இத்த விட்டு புட்டு ராக்கெட் தயாரிப்பது எப்படி ? க்ளோனிங் வழிமுறை எல்லாம் எழுதினா வாங்குறது யாரு ???

ரவி,
தாய்லாந்து..

பிச்சைப்பாத்திரம் said...

Dear Old Reader,

மன்னிக்கவும், சாவகாசமாக பதிலளிக்க இயலவில்லை.

மறுபடியும் ஆண், பெண் என்கிற வேறுபாடுகளுக்குள் நுழைகிறீர்கள். உலகமயமாக்கலின் விளைவாக பால் வேறுபாடுகளின் எல்லைக் கோடுகள் தேய்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் யதார்த்தம். TATA கம்பெனியின் விளம்பரத்தில் "பெண்கள் விண்ணப்பிக்க வேண்டாம்" என்கிற வார்த்தையைப் பார்த்து பொங்கியெழுந்து சண்டை போட்டு அங்கே பணிபுரிந்தவர் சுதா மூர்த்தி. (இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி - ஒரு தகவலுக்காகத்தான்.) ஆனால் இன்றைய நிலைமை அவ்வாறாக இல்லை. எல்லாத் துறையிலும் இன்று திறமையான ஆட்களே தேவைப்படுகிறார்ளே ஒழிய, அவர்கள் ஆண்களா, பெண்களா என்பது முக்கியமில்லை. (உடல் ரீதியாக வலிமையைப் பயன்படுத்தும் பணிகள் இதில் விதிவிலக்கு).

பாரதியைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதற்கு பதிலாக நானும் பல பெண் பிரபலங்களின் பின்னால் நின்ற ஆண்களைப் பற்றி எழுதினால் அது வழக்கமான "ஆண் சிறந்தவனா, பெண் சிறந்தவனா" என்கிற பட்டிமன்ற தலைப்பு போலாகிவிடும்.

Anonymous said...

//உலகமயமாக்கலின் விளைவாக பால் வேறுபாடுகளின் எல்லைக் கோடுகள் தேய்ந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் யதார்த்தம்//

நானும் அதையேதான் கூறுகிறேன்! எல்லைக்கோடுகள் தேயும்பொழுது பெண்களை "இந்தப்பக்கம் வா... வந்து ஷேர் மார்க்கெட்டையும் ராக்கெட் டெக்னாலஜியும் கற்றுக்கொள்" என்று சொல்லத்தெரிகிற நமக்கு "எல்லைகோடு தேய்கிறது! நீ ஷேரும் ராக்கெட்டும் பார்! நான் உன் எல்லைக்குள் வந்து வீட்டையும் குழந்தைவளர்ப்பையும் பார்த்துக்கொள்கிறேன்" என்று ஏன் சொல்லத்தோணவில்லை? குடும்பதில் ரெண்டுபேரும் ராக்கெட் விட்டுக்கிட்டு இருந்தா பொங்கிச்சாப்படறது எப்படி?

//எல்லாத் துறையிலும் இன்று திறமையான ஆட்களே தேவைப்படுகிறார்ளே ஒழிய, அவர்கள் ஆண்களா, பெண்களா என்பது முக்கியமில்லை.// இது வேலைக்கு போக! குடும்பம் நடத்த?! எனவே தான் சொன்னேன்..

"பெண்கள் இத்தகைய சிந்தனைகளில் இருந்து விடுபட்டு வரவேண்டும் என்று சொல்வதைவிட மாறிவரும் சூழ்நிலையில் ஆண்கள் இந்த சிந்தனைகளை சிரமேற்று கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் ஆண் பெண் இருபாலரும் வேலைக்கு ஓடும் அவசர யுகத்தின் முதல்தேவை! "

தவறா என்ன? இதற்கு உதவுமெனில் அவள் விகடனும் சினேகிதியும் தவறில்லை! அவர்கள் வடாம் காயப்போட 30 வழிகள்னு புத்தகம் போட்டாலும்!

இதில் கிண்டல் செய்யவோ, இல்லை இதன் மூலம் இன்னும் பெண்களை கட்டுப்பெட்டிகளாகவே வைத்திருக்கிறார்கள் என்றோ வருத்தப்படுவதில் அர்த்தமேயில்லை!

Kannan said...

ருசியான சாப்பாட்டில் கல் நெருடியது போன்ற உணர்வுதான் எனக்கும்.

தமயந்தி said...

வணக்கம் . நான் தமயந்தி. சிறுகதை எழுத்தாளர். எனது மழைக் கால மரணங்கள் பற்றி நீங்கள் எழுதி இருந்தீர்கள். தற்போது நான் தொகுப்பு கொண்டு வர முயற்சி செய்வதால் தங்களிடம் அந்த கதைக்கன நகல் இருந்தால் தெரிவிக்கவும்..pravinjaju@gmail.com