Friday, March 31, 2006

எழுத்தாளர் (திருமதி & திரு) சுஜாதாவின் நேர்காணல்

1)

குமுதம் 'சிநேகிதி' (ஏப்ரல் 2006) இதழை அலுவலகத்தில் பார்க்க நேர்ந்தது. நான் பொதுவாக இம்மாதிரியான 'அம்மாமி' பத்திரிகைகளை படிப்பதில்லை. 'பால் பாயாசம் செய்யறப்போ தீஞ்சு போகாம இருக்கணும்னா.... என்கிற அதி உபயோகமான குறிப்புகளுடன் உள்பாடி தெரியாமல் ஜாக்கெட் அணிந்து கொள்வது எப்படி போன்ற குறிப்புகள் மாடலிங் முயற்சி செய்து தோற்றுப் போன பெண்ணின் புகைப்படங்களுடன் விளக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த இதழை எதிரே இருந்தவர் புரட்டிக் கொண்டிருந்த போது, மிகவும் பரிச்சயமான ஒரு முகத்தின் பல புகைப்படங்கள் கண்ணில் பட்டது. எழுத்தாளர் சுஜாதா.
இவரின் புகைப்படங்கள் ஏன் இதில்? "மாமிகளும் மாயாஜால டெக்னாலஜியும்" என்றொரு அறிவியல் தொடர் எழுத ஆரம்பித்து விட்டாரா? என்ற கேள்வியுடன் புத்தகத்தை வாங்கி புரட்டினேன். திருமதி. ரங்கராஜனின் (உண்மையான சுஜாதா) பேட்டி ஒன்றொரு வெளியாகியிருக்கிறது, 'நான் ஒரு துருவம். அவரோ மற்றொரு துருவம்".. என்கிற தலைப்புடன். சுஜாதாவைப் பற்றின சில சுவாரசியமான செய்திகளை அதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. (இவர் அருமையா கிதார் வாசிப்பார்.... சின்ன சின்ன ரெ·ப்ரன்ஸீக்கு கூட கையில இருக்கற காசையெல்லாம் போட்டு புத்தகம் வாங்கிட்டு வந்துடுவார்... )

அது மட்டுமல்லாமல் சுஜாதாவின் பல புகைப்படங்களும் காணக் கிடைக்கின்றன. சுஜாதா பிரியர்கள் ரசிக்கக்கூடும்.


2)

விஜய் டி.வியில் ஒவ்வொரு ஞாயிறு இரவு 7.30 மணிக்கு (இந்திய நேரப்படி) 'சிகரம் தொட்ட மனிதர்கள்' என்கிற தலைப்பில் பிரபலங்களின் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்ட நேர்காணல் ஒளிபரப்பாகிறது. பார்ப்போரை எரிச்சலடைய வைக்காத வகையில் கோபிநாத் நேர்காணல் அளிப்பவரை சாவகாசமாக பேச அனுமதிக்கிறார். இதில் எழுத்தாளர் சுஜாதாவின் நேர்காணல் வரும் ஞாயிறு (02.04.06) ஒளிபரப்பாறகிறது. (தினமணியில் வந்த செய்தியை வைத்து தெரிவிக்கிறேன். ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் என்னை திட்டாதீர்கள்)

()

தேசிகனுக்கு போட்டியா எல்லாம் இல்லீங்க... சும்மா சொல்லணும்னு தோணிச்சு. என்றாலும் ஒரு ரசிகரின் மனோபாவத்தோடேயே இந்தப்பதிவு எழுதபட்டிருப்பதை என்னாலேயே உணர முடிகிறது.

Tuesday, March 28, 2006

அற்பஜீவியாக மதிக்கப்படும் தமிழ் எழுத்துக்காரன்

வாசித்ததில் நேசித்தது: மார்ச் 2006

அற்பஜீவியாக மதிக்கப்படும் தமிழ் எழுத்துக்காரன்
===================================

தேரோடும் வீதி: நீலபத்மநாபனின் ஏறத்தாழ 800 பக்க நாவலை மலச்சிக்கல்காரன் போல் சிறிது சிறிதாக படித்து முடித்துவிட்டேன். தனது எழுத்துலக சம்பந்தப்பட்ட சுய அனுபவங்களை புனைவு மொழியில் எழுதியிருக்கிறார். நேரடியாகவே எழுதியிருக்கலாம்தான். ஆனால் ஒரு படைப்புக்கு சற்றே காட்டமாக விமர்சனமோ எதிர்வினையோ எழுதிவிட்டால் - அது நேர்மையானதாக இருக்கும் பட்சத்திலும் கூட - கோர்ட்டுக்கு இழுக்கும் சக எழுத்தாளர்களின் தொட்டாற்சுணுங்கித்தனம் நீல.பத்மநாபனுக்கு தெரிந்திருக்கும் அல்லது ஏற்கெனவே அனுபவித்திருப்பார் போலிருக்கிறது. எனவேதான் எழுத்துல வாழ்க்கையை விவரிக்க புனைவு மொழி அவருக்கு செளகரியமானதாக அமைந்திருக்கிறது போலும்.

ஒரு தமிழ் எழுத்தாளனின் புலம்பல்கள், சுயஅனுதாபங்கள், எரிச்சல்கள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள், பொறாமைகள், காழ்ப்புணர்ச்சிகள், சண்டை சச்சரவுகள், ஆகியவை இந்த நாவலின் ஏறத்தாழ எல்லா பக்கங்களிலும் இறைந்திருக்கின்றன. எழுத்தாளனுக்கும் பதிப்பகத்தாருக்கும் நடக்கின்ற போராட்டங்கள், பதிப்பகங்களின் அசிங்கமான வியாபார முகங்கள், அதன் பின்னணியில் உள்ள அரசியல், சக எழுத்தாளர்களின் ஆடுபுலி ஆட்டங்கள், விருதுகள் வழங்கப்படுவதில் உள்ள பித்தலாட்டங்கள், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசு இயந்திரங்கள் தரமான நூல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் காண்பிக்கும் அலட்சியங்கள் என எழுத்துத் துறையின் ஒரு அகோரமான பக்கம் எந்தவித அலங்காரமுமில்லாத ஒரு மொழியில் நீல.பத்மநாபனால் நம்மிடம் சேர்க்கப்படுகிறது.

சக எழுத்தாளர்களின் பெயர்களும் (மந்திர மூர்த்தி, நாஞ்சில் நாதன்) பத்திரிகைகளின் பெயர்களும், படைப்புகளின் பெயர்களும் சற்றே மாற்றப்பட்டு சங்கேத மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சமுள்ள எவராலும் இதைப் புரிந்து கொண்டு புன்னகையுடன் கடந்து செல்ல முடியும். தமிழ் இலக்கியத்தின் நடைமுறை யதார்த்தத்தை அறிய விரும்பும் வாசகர்கள் தவறவிடக்கூடாத படைப்பு இது. தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம் போன்றவை நீல.பத்மநாபனின் மற்ற சில நாவல்கள்.

()

சிறுகதை என்னும் பிரம்மராட்சசம்
================================

சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் ஆங்கிலத்திலிருந்து இறக்குமதியாகியிருந்தாலும் தமிழிற்கு வந்து ஏறத்தாழ நூறாண்டுகளாகியிருக்கிறது என்றாலும் ஆங்கிலத்தோடு ஒப்பிடும் போது தமிழ்ச்சிறுகதைகளில் பரிசோதனை முயற்சி என்பது சொற்பமான அளவிலேயே உள்ளது. அதன் வடிவமும் இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் மாறாமல் ஒரு நிர்ணயிக்கப்பட்ட வடிவத்திலேயே உள்ளதாக நான் நம்புகிறேன். மரபை உடைத்துக் கொண்டு வெளியே வருவதில் நம் படைப்பாளிகள் பெருமளவு தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. வ.வே.சு ஜயரின் "குளத்தங்கரை அரசமரம்" பேச ஆரம்பித்தில் தொடங்கிய இந்த வடிவம், இன்னமும் கூட உள்ளடக்கத்திலோ, வடிவத்திலோ பெரிதும் புரட்சியேதும் நடந்ததாக தெரியவில்லை. புதுமைப்பித்தன் தொடங்கி ந.பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன், கு.ப.ரா., லா.ச.ரா., கு.அழகிரிசாமி, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், ஆதவன், ஜெயந்தன், அசோகமித்திரன், சா.கந்தசாமி, சுஜாதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், இரா.முருகன், அழகிய பெரியவன், கண்மணிகுணசேகரன், ஜே.பி.சாணக்யா என்று இன்றைய நவீன படைப்பாளிகள் வரை சிறுகதை என்கிற வடிவத்தை தங்களால் இயன்ற வரை மெள்ள மெள்ள இழுத்து வந்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் "சார்.. போஸ்ட்" என்று தபால்காரன் கடிதத்தை வீசிச் சென்றான்".. என்றோ "காலை ஆறு மணி இருக்கும். பொழுது பளபளவென விடிந்திருந்தது" என்றோ எழுதுபவர்களை நரகத்தில் பெரிய எழுத்து விக்கிரமாதத்தன் கதையை இடமிருந்து வலமாக நாளொன்றுக்கு நூறு முறை படிக்க வேண்டிய தண்டனையை கொடுக்கலாம்.

நவீன இலக்கியத்தில் சிறுகதை என்பது ஓர் அற்புதமான வடிவம். டெஸ்ட் மேட்ச் நாவல் என்றால், சிறுகதையை ஒன்டே மேட்ச்சுடன் ஒப்பிடலாம். (அற்பமான கிரிக்கெட் விளையாட்டை இலக்கியத்துடன் ஒப்பிட்டு அதன் புனிதத்தை பாழ்படுத்தியதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். அவசரத்திற்கு வேறு உதாரணம் கிடைக்கவில்லை) மார்ச் 2006-ல் படித்த சில சிறந்த சிறுகதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம்.

()

புதியபார்வை 16-28, 2006 இதழில் 'மழைக்கால மரணங்கள்' என்றொரு சிறுகதை தமயந்தி என்பவரால் எழுதப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த சிறுகதையாக இதைக் குறிப்பிடுவேன். தமயந்தியின் சில சிறுகதைகளையும் கவிதைகளையும் ஏற்கெனவே படித்திருக்கிறேன். கவிதையும் உரைநடையும் மிக அழகாக இந்தப் படைப்பில் கைகோர்த்திருக்கிறது. ஆனானப்பட்ட வைரமுத்துவே இந்த விஷயத்தில் தடுமாறியிருக்கிறார் என்பதை அவரது ஆரம்ப கால நாவல்களை படித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

'எனது மரணம் ஒரு மழைக்காலத்தில் நிகழக்கூடாது....' என்று ஆரம்பிக்கும் இந்தச் சிறுகதை கவிதையின் இயல்பான வாசனையோடு நகர்கிறது. .... மழையடிக்கும் போது வீட்டு வாசல்களில் விரிக்கப்பட்டிருக்கும் குடைகள் நீர் வடிந்தபடியே இருப்பதைப் பார்த்திருக்கிறேன் என்பதால் என் மரணத்திற்கு வரக்கூடிய சுமார் முந்நூறுலிருந்து ஐநூறு நபர்கள் எங்கள் வீட்டு வாசலில் விரிக்கும் குடைகள் எனக்காக அழும்....." போன்ற வரிகளிலிருந்து இதை உணரலாம். சிறுகதையின் கடைசி வரி, 'மழை எனக்குப் பிடித்திருக்கிறது என்பது மட்டும் உண்மை' என்று வாசகனுக்கு சிறிய ஆச்சரியத்தை தருவதோடு முடிகிறது.

சாவகாசமான நேரம் கிடைக்கும் போது முழுக்கதையையும் உள்ளிட முயற்சிக்கிறேன்.

()

காலச்சுவடு மார்ச் 2006 இதழில் சல்மா எழுதியிருக்கும் நெடுங்கதை 'விளிம்பு'. பெண் கவிஞர்கள் தங்கள் உடலை முன்னிறுத்தி எழுதி சர்ச்சையை ஏற்படுத்தி அதில் குளிர்காய்கிறார்கள்... என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டிருக்கும் விமர்சகர்கள்.. அவர்களின் மற்றைய படைப்புகளையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன். .. எல்லா புரிதல்களுடன் விரிகிறதென் யோனி,... போன்ற வரிகளையே குற்றஞ்சாட்டிக் கொண்டு கிளர்ச்சியடைந்துக் கொண்டிருக்காமல் அந்த பகுதியிலிருந்து நகர்ந்து வர வேண்டும்.
நேரெதிரான குணாசியங்களைக் கொண்ட இரண்டு கிழவிகளை (ஒருவர் அப்பாவின் அம்மா, இன்னொருவர் அம்மாவின் அம்மா) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நேர்ந்த ஒரு இளம் பெண்ணின் பிரயாணத்தில் தொடங்குகிறது கதை. காரில் இருவருக்கும் நடக்கும் உரசல்கள், முறைப்புகள், சமாதானப்படுத்தல்கள், இளம் பெண்ணின் சங்கடங்கள் என்று இயல்பான சுவாரசியத்துடன் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு கிழவியின் பரிசோதனை முடிவு தெரிந்து அவளின் மரணம் நிச்சயிக்கப்பட்டு விட்டதை அறியும் இன்னொருத்தி, தன் வீம்புகளை விட்டு இயல்பான அனுதாபத்துடன் அதை அணுகுவது யதார்த்தமான நிறைவு. செக்குமாடு மாதிரி சுற்றிக் கொண்டிருக்கும் படைப்புகளுக்கு மத்தியில் இம்மாதிரியான படைப்புகளே சற்று ஆறுதலைத் தருகிறது.

()

கணையாழி மார்ச் 2006 இதழில் 'தொனினோ பெனக்கிஸ்ட்டா' என்பவர் எழுதிய 'கறுப்புப் பேழை' என்றொரு பிரெஞ்சு சிறுகதையை நாகரத்தினம் கிருஷ்ணா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இதுவும் சுவாரசியமானதொரு பின்னணியில் அமைந்திருக்கிறது. விழிப்பு நிலை கோமாவில் இருக்கும் நோயாளி ஒருவனிடமிருந்து தொடர்பில்லாமல் உதிரும் சொற்களை பதிவு செய்கிறாள் தாதி. அவன் குணமடைந்தவுடன் அவனிடம் இந்தக் குறிப்புகளை தருகிறாள். அந்தக் குறிப்புகள் அவனுடைய கடந்த காலத்தின் மீது வேறொரு பரிமாண வெளிச்சத்தை பாய்ச்சுவதும் அதனால் அவன் அனுபவிக்கும் மன உளைச்சல்களுமாக மீதிக் கதை நீள்கிறது.

()


புதிய பார்வை 16-31, 2006 இதழில் 'வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி?' என்றொரு அற்புதமான அலசல் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. கூட்டணி ஆட்சியை ஆதரிக்கும் இந்தக் கட்டுரை அதற்கான காரணங்களையும், இப்போதைய அரசியல் சதுரங்க நகர்த்தல் காட்சிகளையும் மிகவும் ஆரோக்கியமானதொரு பார்வையில் அலசுகிறது. சமீபக் காலங்களின் நான் படித்ததில் சிறந்ததான இந்தக் கட்டுரையை சுவாரசியமாக படித்து முடித்தவுடன்தான் இதை எழுதியவரின் பெயரை படித்தேன். ஆச்சரியம்தான்.

..... இன்றுள்ள தலைவர்கள் கட்சியையும், அரசாங்கத்தையும், தாங்கள் முதலீடு செய்து வளர்த்த ஒரு தனியார் கம்பெனியைப் போல தலைமைப் பதவியை வாரிசுகளுக்குரியதாக ஆக்கும் மனோபாவத்தைக் கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியின் பேரனும், ராமதாசின் மகனும், மூப்பனாரின் மகனும், தத்தம் கட்சிகளுக்குச் செய்த பங்களிப்புகள் என்ன? தத்தம் கட்சிகளின் வளர்ச்சிக்கு அளித்த உழைப்பு என்ன? கட்சியில் அவர்களை விட அதிக காலம் உழைத்தவர்களைவிட இவர்களுக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சித்தாங்களுக்காக அல்ல, அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காகத்தான் கட்சி என்ற நிலையிலிருந்து, அந்த அதிகாரம் தங்கள் குடும்பத்தின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனற நிலைக்கு அரசியில் கட்சிகளின் நடத்தை மாறிக் கொண்டிருக்கிறது...... என்று எழுதுபவர் 'மாலன்' என்றால் ஆச்சரியமாக இருக்காதா?

()

.... ஒரு புதிய களத்தையும், புதிய வாழ்க்கை முறையையும், அறிமுகப்படுத்துவதனால் மட்டும் ஒரு நாவல் முக்கியத்துவம் பெற்றுவிடுவதில்லை. ஒரு படைப்பைப் பொறுத்தவரை உண்மையில் இவை இரண்டாம் பட்சமானவைதான். ஒரு படைப்பின் அடிப்படையான வெற்றி அது வாழ்க்கையை அணுகும் முறையிலும் அதுகாட்டும் வாழ்க்கைத் தரிசனத்திலும் தங்கியுள்ளது. இத்தரிசனம் குறிப்பாக அப்படைப்பு சித்தரிக்கும் வாழ்க்கை பற்றியதான மட்டுமன்றி பொதுவாக மனித வாழ்க்கை முழுமையையும் தழுவி அமைகின்றது. அவ்வகையில் ஒவ்வொரு சிறந்த படைப்புக்கும் ஓர் இரட்டைத் தன்மை இருக்கிறது எனலாம். ஒன்று குறிப்பான தன்மை (Particularity) அதாவது அப்படைப்பு சித்தரிக்கும் சூழலின் ஒரு உண்மையான படிமத்தைத் தருவது. மற்றது பொதுவானத் தன்மை. (Generality). அதாவது முழு மனித வாழ்வுக்கும் ஒரு பொதுக் குறியீடாக அமைவது. ஒவ்வொரு சிறந்த நாலாசிரியனுக்கும் அவனது படைப்பு ஒரு ஜன்னலாக அமைகின்றது. அவன் தன் படைப்பில் சித்தரிக்கும அவனது காலம், சமூகம் என்னும் ஜன்னலூடாக வெளிஉலகம் முழுவதையும் பார்க்கிறான். முழு வாழ்க்கையையும் காண்கிறான். வாழ்வு பற்றிய ஒரு தரிசனத்தைப் பெறுகிறான். இவ்வாறுதான் ஒரு படைப்பு கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில், இடத்தில், சமூகத்தில் தோன்றினாலும் உலகப் பொதுமையாகின்றது. இவ்விரட்டைத் தன்மை இல்லாவிட்டால் ரஷ்ய நாவல் ரஷ்ய நாவலாகவும், ஆப்ரிக்க நாவல் ஆப்ரிக்க நாவலாகவும், இந்திய நாவல் இந்திய நாவலாக மட்டுமே இருக்கும். தன் வட்டார எல்லைகளைக் கடந்து செல்லாது. ஆனால் டால்ஸ்டாயும், ஹெமிங்வேயும், மஹ்·பூசும், சிவராம கரந்தும் நமது உணர்வோடு கலக்க முடிகிறது என்றால் இந்த இரட்டைத் தன்மைதான் காரணம். ஒவ்வொரு உண்மையான கலைஞனும் பிரக்ஞை பூர்வமாக அல்லது பிரக்ஞை பூர்வமற்ற இவ்விரட்டைத்தன்மைக்கு தன் படைப்பில் இடம் கொடுத்துவிடுகிறான். .............

..... தோப்பில் முஹம்மது மீரானின் 'ஒரு கடலோர கிராமத்தின் கதை' என்கிற நாவலின் பின்னிணைப்பில் எம்.ஏ.நு·மான்.

()

சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி.