Monday, February 20, 2006

அன்பும் சிவமும்

இந்தப் படம் பலரை பாதித்திருப்பது எதிர்பார்க்கக்கூடியதொன்றுதான் என்றாலும் சமீபத்திய பதிவுகளின் மூலம் பல இணைய நண்பர்கள் இப்போதுதான் இதை முதன்முதலாக பார்க்கிறார்கள் என்பது ஆச்சரியமளிக்கக்கூடியதாகவே இருந்தது. நான் சமீபத்திய ஒளிபரப்பில் இந்தப் படத்தை பா¡க்கவில்லையெனினும், திரைப்படம் வந்தவுடன் 'ஆஹா ஓஹோ' விமர்சனங்களை படித்துவிட்டு உடனே திரையரங்கில் பார்த்துவிட்டேன். இதன் நிழலான குறுந்தகட்டிலும் அவ்வப்போது பார்ப்பதுண்டு. அதுமட்டுமல்லாது கமல் என்கிற கலைஞனின் மேல் எனக்கிருக்கும் பொதுவாக நம்பிக்கையும், "ஏதாவது வித்தியாசமா பண்ணுவாம்ப்பா" என்கிற எண்ணமும் உண்டு என்கிற காரணத்தினால் நான் ரசிக்கிற நடிகர்களின் பட்டியலில் கமல்ஹாசனும் உண்டு. (இங்கே ரசிகன் என்கிற வார்த்தையை பொதுவாக புரிந்துகொள்ளப்படும் அர்த்தத்தில் இடவில்லை. எனக்கு ஒரு படத்தின் இயக்குநரும் கதையும்தான் முக்கியமே ஒழிய நடிகர்கள் இரண்டாம் பட்சம்தான். இதே கமல்ஹாசனின் 'காதலா காதலா' போன்ற குப்பைப் படங்களை தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது கூட என்னால் பொருந்திப் பார்க்கஇயலவில்லை.)

"தன்னுடைய தோற்றத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க தயாராயிருப்பவனே சிறந்த நடிகனாக மிளிரக்கூடும்" என்று சிவாஜி கணேசன் ஏதோவொரு நேர்காணலில் கூறின ஞாபகம். ரிக்ஷா ஒட்டுகிறவன் வேடமாயிருந்தாலும், கல்லூரி மாணவன் வேடமாயிருந்தாலும் பெரிதாக ஒப்பனையில் வித்தியாசம் காண்பிக்காத நடிகர்களுக்கு மத்தியில் ஒரு பாத்திரத்தை யதார்த்தமாக திரையில் தோன்றவைக்க, அதிக பிரயத்தனமும், சிரமமும் ஏற்றுக் கொள்வதில் தற்கால தமிழ் நடிகர்களில் கமல் முதன்மையானவர். அவருடைய திரையுலக வாழ்க்கையை (மணிரத்னத்தின்) நாயகனுக்கு முன், நாயகனுக்குப் பின் என்று பிரிக்கலாம் என்று சொல்லும் வகையில் மிகவும் நுட்பமான நடிப்பையும், ஒப்பனையையும் ஆரம்பித்தது அந்தப்படத்திலிருந்துதான் என்று நினைக்கிறேன். (ஆரம்பத்தில் இன்ஸ்பெக்டரிடம் அடிவாங்கி புருவத்தில் ஏற்படும் தழும்பு படம் முடிகிற வரை தொடர்வதை நீங்கள் அவதானித்திருக்கலாம்) அவரின் பழைய நேர்காணல்களை படிக்கும் போது அப்போதே அவரின் முற்போக்கான சிந்தனைகளையும், உலக சினிமா குறித்த அறிவையும், இதுகுறித்த அவரின் ஆர்வங்களையும், எதிர்ப்பார்ப்புகளையும் உணர முடிகிறது. ஆனால் இதையெல்லாம் மனத்தில் ஒருபுறம் தேக்கி வைத்துக் கொண்டு survival-க்காக "அம்மா.... உன்னக் கொன்னவங்கள பழிவாங்காம விடமாட்டேன்" என்று அபத்தமாக கதறி நடிக்க நேரும் போது ஒரு கலைஞன் உள்ளுக்குள் எவ்வாறெல்லாம் புழுங்க வேண்டியிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.

()

சில மசாலாத்தனங்களையும் குறைகளையும் கழித்துக்கட்டி விட்டால் 'அன்பே சிவம்' திரைப்படத்தை சர்வதேசதர திரைப்படங்களின் வரிசையில் என்னால் வைக்க இயலும். (இங்கே சர்வதேச தரம் என்பதை நான் புரிந்து கொண்ட வகையிலும் பார்த்த படங்களின் வகையிலும் மட்டும் வைத்தே கூறுகிறேன். இவ்விஷயத்தில் நான் கிணற்றுத் தவளையாக கூட இருக்கக்கூடும்) அமெரிக்கக்கனவு, கம்ப்யூட்டர், சுயநலம், ஏழ்மையை அறியாமை என்று தற்கால நடுத்தர இளைஞனின் ஒரு குறியீட்டுப் பாத்திரமாக மாதவன். தொழிற்சங்க போராட்டக்காரனாக, காதலனாக, விபத்தில் சிக்கி வாழ்க்கையின் அத்தனை சிறப்பான அம்சங்களையும் இழந்து, இறுதியில் சக மனிதன் மீது செலுத்தக்கூடிய அன்பே புனிதமானது என்று உணர்ந்து முதிர்ச்சி பெற்ற ஒரு மனிதனாக கமல். இவ்விரு நேரெதிரான கதாபாத்திரங்கள் இணையும்போது வழக்கமாக ஏற்படும் சுவாரசியங்களுடன் இயல்புகளுடன் நகர்கிறது கதை. ஒரு சிறுவனின் மரணம் மூலம் அன்பு என்கிற விஷயத்தை மாதவன் உணரும் போது படம் முடிவடைகிறது. "என்னப்பா மாத்தி மாத்தி ரெண்டு பேரும் பேசிக்கினே இருக்கறத எவ்ள நேரம் பாக்கறது" என்கிற சராசரித்தான முணுமுணுப்புகளையும் இந்தப் படம் வெளிவ்நத போது கேட்டிருக்கிறேன்.

கமல்ஹாசனின் நனவோடையில் இருந்து சொல்லப்படுகிற காலத்தின் பின்னணியும், கதை நிகழ்கிற காலமும் (இரண்டிற்கும் தொலைவு அதிகமில்லை) அவ்வளவாக பொருந்திப் போகவில்லை. 910ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிற காலமும் செல்பேசி உபயோகப்படுகிற காலத்திற்கும் தூரமதிகம். இதில் வருகிற வட மாநில மழை வெள்ளக் காட்சிகளும், ரயில் விபத்துக் காட்சிகளும் கலை இயக்குநரின் திறமையை முழுக்க உணர வைப்பவை.

நேரமின்மை காரணமாக இந்தப் பதிவை இங்கேயே முடிக்கிறேன் என்றாலும், இந்தப் படத்தை நினைவுகூரும் போதே, இதை மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

()

கமல்ஹாசனின் திரைப்பட பயணத்தில் சிறந்தவையாக நான் நினைப்பது:(உடனே நினைவுக்கு வருபவை)

அவர்கள்
16 வயதினிலே
அவள் அப்படித்தான்
நிழல் நிஜமாகிறது
மீண்டும் கோகிலா
சிவப்பு ரோஜாக்கள்
சலங்கை ஒலி
ராஜபார்வை
வறுமையின் நிறம் சிவப்பு
உன்னால் முடியும் தம்பி
மூன்றாம் பிறை
நாயகன்
குணா
குருதிப்புனல்
மஹாநதி
ஹே ராம்
அன்பேசிவம்
விருமாண்டி

4 comments:

ஜோ/Joe said...

நல்ல பதிவு!
கமல் என்கிற கலைஞனின் அருமை பலருக்கு காலம் கடந்து தான் புரியும் போலிருக்கிறது.

Balamurugan said...

/ஒரு கலைஞன் உள்ளுக்குள் எவ்வாறெல்லாம் புழுங்க வேண்டியிருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது./

கொன்னுட்டீங்க!

வசந்தன்(Vasanthan) said...

தமிழ்ச்சினிமாவின் மலட்டுத் தன்மைக்கு பாடல்கள் முக்கிய காரணமென்பது என் கணிப்பு. பாடல்களில்லாமல் படமெடுக்கவே முடியாதென்பது இன்றுவரை தொடர்ந்துவரும் அவலம். (இதை மீறி சில படங்கள் வந்துள்ளன என்பது வரவேற்கப்பட வேண்டிதே) படத்தின் அவ்வப்போது பலமாக இருக்கும் பாடல்கள் பெரும்பாலும் பலவீனமாகவே இருக்கிறது. அவசியத்துக்கு மட்டும் பாடல் இருக்கவேண்டுமென்ற நிலைபோய் விட்டது. பாடல்கள் மட்டில் கமலுக்குச் சரியான புரிதலிருப்பதாகவே எண்ணுகிறேன்.

திரையுலகக் கலந்துரையாடலொன்றில் (மதன் நடத்தியது) கமல், பாடல்களில்லாமல் படமெடுப்பது பற்றிச் சொன்னார். "நாயகன்" படத்தின்போதே மணிரத்தினத்திடம் கமல் இதைச் சொல்லியதாக மணி அந்த இடத்தில் சொன்னார். சேரனும் பாடல்களில்லாமல் படமெடுக்கவேண்டுமென்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

Anonymous said...

It would have been difference if kamal is born in hollywood.

- Balaji