Saturday, January 29, 2005

வக்காலி... சூப்பரா படமெடுத்திருக்கானுய்ங்க மாப்ள..

நம் மனதிற்குள் ஊடுருவி உணர்வுகளை மென்மையாக ஆனால் ஆழமாக பாதிக்கும் தமிழ்த்திரைப்படங்கள் மிக அரிதான வரவாக இருக்கிறது. சென்ற வருட உதாரணம் ஆட்டோகிராப். அதே போன்றதொரு அம்சத்துடன் சமீபத்தில் வந்திருக்கும் திரைப்படமாக சொல்லக்கூடியது 'காதல்'.



O

பாரதிராஜா 'அலைகள் ஓய்வதில்லை'யில் ஆரம்பித்து வைத்த கருமமிது. இளைஞர்களின் வாழ்க்கையின் லட்சியம் மற்றும் குறிக்கோள் காதலில் ஜெயிப்பது மட்டுமே, உலகம் காதலால் மட்டுமே ஆனது என்கிற மாதிரியான ஒரு மாயபிம்பத்தை அந்தப்படத்திலிருந்து தொடங்கிவைத்தார். விடலைத்தனமாக இளங்காதலர்கள் அசட்டுபிசட்டென்று காதலித்து விட்டு கிளைமாக்சில், ஊர் முழுவதும் தீப்பந்தங்களுடனும் அரிவாள்களுடனும் துரத்த ஒருவரையருவர் கைப்பிடித்து 18-ம் நம்பர் பஸ்ஸை பிடிக்கிற அவசரத்தோடு ஓடுவார்கள். சில்-அவுட்டில் அந்த காட்சி ஒரு வானவில்லுடனோ, சூரியஉதயத்துடனோ அப்படியே freeze ஆக 'காதல் என்றும் அழிவதில்லை - அழிவதென்றால் அது காதல் இல்லை' என்கிற மாதிரியான அசட்டு messageகயோடு (இயக்குநர் குரலில்) படம் முடியும். பார்வையாளர்களும் காதலர்கள் ஒன்றுசேர்ந்த திருப்தியோடு வீட்டுக்கு கிளம்புவார்கள்.

அப்படி வானவில்லை தாண்டி ஒடிய காதலர்கள் யதார்த்த உலகில் போராட முடியாமல் தடுமாறுவதை சித்தரிக்கின்ற படங்கள் மிக அரிது. அப்படிப்பட்ட படமாக இதை மிகுந்த யதார்த்தத்தோடு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். (இவர் இயக்கிய முதல்படம் விக்ரம் நடித்த 'சாமுராய்') என்றாலும் அவர் வணிகரீதியாக சமரசம் செய்து கொண்ட காட்சிகள் சில, இது சினிமாதான் என்பதை துரதிர்ஷ்டவசமாக நமக்கு அவ்வப்போது நினைவுப்படுத்துகிறது.

O

மதுரை பஸ் ஸ்டாண்ட், முருகன் இட்லி கடை, சர்வோதய இலக்கியப் பண்ணை, தமிழக எண்ணெய்ப்பலகாரம் என்ற மதுரையின் முக்கியமான landmark-களை சில விநாடிகள் காட்டுகிற டைட்டில் காட்சிகளிலேயே படம் களைகட்டி விடுகிறது. இளங்காதல் ஜோடி ஒன்று ஊரை விட்டுப் போகிற திகில் காட்சிகளோடு படம் ஆரம்பமாகின்றது. காதலிக்காக காத்திருக்கின்ற அந்த இளங்காதலன் தோளில் மாட்டியிருக்கிற பையின் நுனியை பிய்க்கிற குளோசப் காட்சியிலேயே அவனின் தவிப்பை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். பின்பு பஸ்ஸில் பயணிக்கிற அவர்களின் இருவர்களின் பார்வையிலும் மாறி மாறி அவர்கள் காதல் பிறந்து வளர்ந்த (?!) கதை சொல்லப்படுகிறது.

ஒரு பெண்ணின் வெட்கம் கலந்த பார்வைக்காகவும் புன்சிரிப்புக்காகவும் நான் சிறுவயதில் நாயாய் பேயாய் அலைந்ததையெல்லாம் நினைவுபடுத்தும்வகையில் அவர்களுக்குள் காதல் வளரும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் அவர்களுக்குள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துகிற காதல் வருகிற காட்சிகள் அழுத்தமாக சொல்லப்படாமல் just like that சொல்லப்பட்டிருப்பது ஒரு குறைதான். (இந்த வயதில் - அதுவும் இந்த காலகட்டங்களில் ஒரே பார்வையில் காதல் வருகிற கர்மமெல்லாம் சாத்தியம் என்பதை தெரிந்தேதான் சொல்கிறேன்)

O

தமிழ்ச்சினிமாவின் வழக்கப்படி ஒரு மோதலில்தான் அவர்களின் காதல் தொடங்குகிறது.

அவன் பார்த்ததுமே நான் பூத்துவிட்டேன்அந்த ஒரு நொடியை நெஞ்சில் ஒளித்து வைத்தேன்.

நான் குழந்தையென்றே நேற்றுநினைத்திருந்தேன்.அவன் பார்வையிலே என் வயதறிந்தேன்.

(சமீபத்திய கற்றதும் பெற்றதுமில் கூட இந்த வரிகளை பிடித்தமானமானதாக சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார்)

என்கிற நா.முத்துக்குமாரின் பாடல்வரிகளில் தேர்ந்த இலக்கியத்தரம் தெரிந்தாலும் இது சம்பந்தப்பட்ட காட்சிகள் சற்றும் பொருந்தாமல் படமாக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். அந்தப் பாடலின் வரிகளின் படி படமாக்கப்பட்டிருந்தால் அது இவ்வாறு இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அவன் நெஞ்சு நிறைய காதலோடும் காமத்தோடும் ஒரு ஆணுக்கு பெண்ணிடம் இச்சை தரக்கூடிய பாகங்களை அழுத்தமாக பார்ப்பதும் அதனால் அதனால் அவள் வெட்கப்பட்டு (?!) இத்தனை நாள் தன்னை குழந்தையாக நினைத்துக் கொண்டிருந்தவள் அந்தப் பார்வையின் மூலம் தன்னை குமரியாக உணருகிறாள் என்பதாக படமாக்கப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனால் அந்த காட்சியோ அவன் அவளுடன் முறைப்புடன் சண்டை போடுவதாகவும் அதனாலேயே அவளுக்கு அவன் மீது காதல் வருவதாகவும் எடுக்கப்பட்டிருப்பதால் இந்த வரிகள் சற்றும் பொருந்தாமல் இருக்கின்றன.

O

நாயகி தன் காதலுடன் ஊரைவிட்டு விலகி பயணிக்கத் தொடங்குகிற அதே கணத்தில் அவளுடைய அம்மாமார்கள் இந்த விஷயம் தெரியாமல் வீட்டில் 'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தில் ஷாலினியும் விஜய்யும் ஊரைவிட்டுப் போகிற காட்சிகளை கண்கலங்க பார்த்துக் கொண்டிருப்பதும் அவளுடைய அப்பா வேறு யார் காதலையோ பிரிக்கும் முயற்சியில் பஞ்சாயத்து செய்துக் கொண்டிருப்பதும் நாடகத்தனம்.

நாயகி வயதுக்கு வந்ததற்காக நடத்தப்படும் மஞ்சள் நீராட்டுவிழா காட்சிகள் வெகு இயல்பாக ஒரு பாட்டின் பின்னணியில் சொல்லப்படுகிறது. அவள் குடும்பத்தார் என்ன ஜாதி என்பதை நேரடியாக கூறாமல் குறிப்பால் உணர்த்துவது சர்ச்சைகளை தவிர்ப்பதற்கான உத்தியாக இயக்குநர் நினைத்திருக்கலாம்.

அவர்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தவுடன்தான் கதையே வேகமாக நகருகிறது. நகரம் என்கிற மாயப்பிசாசு தன் கொடூர நகங்களால் அவர்களை பிறாண்டத் தொடங்குகிற யதார்த்தத்தை கண்டு நொந்துப் போகிற அவர்களை ஒரு கிறிஸ்துவ நண்பன் அடைக்கலமளித்து (அவனே எங்கோ ஒண்டிக் கொண்டிருக்கிறான்) அவர்கள் திருமணத்தை ஒரு ரோட்டோர பிள்ளையார் கோவிலில் நடத்திவைக்கிறான்.

தன் காதலியின் நகைகள் அனைத்தையும் - அவள் அணிந்திருக்கிற ஸ்கூல் யூனிபார்ம் உட்பட - விலக்கி விட்டு வரச் சொல்கிற, அவள் வீட்டுப் பொருட்களை உபயோகிக்க விரும்பாத அந்த சுயமரியாதையுள்ள இளைஞன், அவ்வளவு பெரிய நகரத்திற்கு எந்தவித முன்னேற்பாடுமில்லாமல் கையில் போதுமான அளவு பணமுமில்லாமல் செல்வான் - என்னதான் தவிர்க்க முடியாத அவசரம் என்றாலும் - என்பது சற்று பொருத்தமில்லாமல் தோன்றுகிறது.

O

எந்தவித முன்னேற்பாடுகளுமில்லாமல் அவர்கள் படும் அவஸ்தைகள் பரிதாபத்துக்குரியவை என்றாலும் சற்று விஸ்தாரமாகவே சொல்லப்படுகிறது. (அவள் மாதவிலக்கினால் அவஸ்தைப்படுகிற காட்சிகள் உட்பட) வாடகைக்கு வீடு கிடைக்காமல் அவர்கள் தெருத்தெருவாக அலைவதும் இருட்டி விட்டதால் நண்பனின் யோசனைப்படி சாயந்திரம், இரவுக்காட்சிகள் சினிமா பார்த்துவிட்டு திண்டிவனம் சென்று திரும்பும் அந்த காட்சிகள் (பின்னணியில் ஒலிக்கும் பாடல் மிக உருக்கமாக இருக்கிறது) யதார்த்ததிற்கு மிக நெருக்கமாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன.

மேன்ஷன் காட்சிகள் சிறப்பாக காண்பிக்கப்பட்டிருந்தாலும் ('சேவல் பண்ணை' என்கிற உவமையை பாலகுமாரனின் குறுநாவல் ஒன்றின் தலைப்பிலிருந்து உருவியிருக்கிறார் இயக்குநர்) அவர்களின் கல்யாண வரவேற்பிற்கு ஏற்பாடு செய்வதும் மணமகனும் மணமகளும் - அந்த பதட்டமான சூழ்நிலையிலும் - ஆனந்தக் கூத்தாடுவதும் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

அவர்கள் சுடச்சுட குடித்தனம் நடத்தத் தொடங்குகிற அந்தப் பெண்ணின் சித்தப்பா அவர்களின் முகவரியை எப்படியோ கண்டுபிடித்து நேரில் வந்து உருக்கமாக பேசி நடித்து அவர்களை ஊருக்கு அழைத்துச் செல்கிறார். (தனது அப்பாவின் ஜாதி வெறியையும் சித்தப்பாவைப் பற்றியும் நன்றாக அறிந்து வைத்திருக்கக்கூடிய நாயகி இதை நம்பி ஊருக்கு புறப்படுவது சற்று நெருடலாக இருக்கிறது)

அந்த பயணத்தில் சித்தப்பாவிற்கும் நாயகனுக்கும் நடக்கிற உரையாடல் புதிதானது.

"நீங்க என்ன சாதி தம்பி?"

நாயகன் விறைப்பாக சொல்கிறான் "மனுச சாதி"

"அது சரி. மிருகத்துலயும் நெறைய சாதி இருக்கு. சிங்கம், சிறுத்தை, கழுதை, நெறைய இருக்கு. நீ என்ன சாதி. நாயா? பன்னியா? சொல்லுடா .. ஈனசாதிப் பயலே"

என்று அவர் உறுமும் போதுதான் அவரின் நிஜமான முகம் பார்வையாளர்களுக்கு உறைக்கிறது.

பிறகு அந்த புதுமணமக்கள் பெண்ணின் பெற்றோர்களால் பிரிக்கப்படுவதும் தொன்று தொட்டு வரும் வழக்கமாக அவள் இன்னொருவனை கல்யாணம் செய்து கொண்டு குழந்தை, குட்டியுடன் செளக்கியமாக வாழ்வதும் அவன் பைத்தியமாக திரிவதும் சில வருடங்களுக்குப் பிறகு நிகழ்வதாக சொல்லப்படுகிறது. அவனை பைத்தியமாக அலைவதை எதிர்பாராத சூழ்நிலையில் பா¡க்க நேரும் அவள் குற்ற உணர்ச்சி மிகுதியில் அவனை கட்டிபிடித்து கதறுவதும் இதனை ஆரோக்கியமான மனநிலையில் எதிர்கொள்ளும் அவள் கணவன் இருவரையும் ஆதரவாக அணைத்துச் செல்வதுடன் நிறைகிறது கதை.

(இந்த இடத்தில், பெண்கள் ஜாக்கிரதையானவர்கள்' என்று எழுதிய இரவிச்சந்திரனின் சிறுகதை ஒன்றின் வரிகள் நினைவிற்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. தன்னால் காதலிக்கப்பட்டவன் பைத்தியமாக அலைவதை காணச் சகியாமல் குற்ற உணர்ச்சியில் வருத்தப்பட்டாலும், கணவனையும் குழந்தையையும் உதறிவிட்டு சமூகத்தைப் பற்றி கவலைப்படாமல் அவனை தேடிப் போவதாக சொல்லப்படுவது எந்தளவிற்கு யதார்த்த உலகில் சாத்தியம் என்பது விவாததத்திற்குரியது)

ரயில் பயணத்தில் சந்தித்த ஒருவர் சொன்ன உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தக் கதை அமைக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் தெரிவிக்கிறார். இந்தச் சம்பவத்தை அவரிடம் சொன்ன அந்த கணவன், மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிற இளைஞனை மருத்துவமனையில் வைத்து பராமரித்து வருவதாக அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.

O

படத்தின் வருகிற பாத்திரங்கள் பெரும்பான்மையானவர்கள் புதுமுகங்கள் என்கிற செய்தி மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக படத்தின் நாயகி சந்தியா. இவரின் முகபாவங்கள் பெரும்பான்மையான காட்சிகளில் இயல்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. (உதாரணமாக மஞ்சள் நீராட்டு விழாவில் அவரின் வயதான மாமா ஒருவர் குடிப்போதையில் தள்ளாடிக் கொண்டே அவளுக்கு மாலையிட வரும்போது அவள் காட்டுகிற முகபாவம்).

பாய்ஸில் பேண்ட் ஜிப்பை திறந்து போட்டுக் கொண்டு வருகிற குறும்பான இளைஞனா இவர்? என்கிற கேட்கிற அளவிற்கு பரத், இந்தப்படத்தில் மெக்கானிக்காக வித்தியாசம் காட்டியிருக்கிறார். மதுரை வட்டார வழக்கையும் சிறப்பாக உச்சரித்திருக்கிறார்.

ஒரு கையை இழந்த சித்தப்பா வேடத்தில் வருகிறவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மெக்கானிக்கடையில் வேலைசெய்யும் அந்தச் சிறுவன், முகத்தில் அம்மைத் தழும்புகளுடன் விகாரமாக இருக்கும் பெண்ணின் அப்பா, அவரின் அம்மாவாக நடிக்கும் வயதான பெண்மணி, நண்பனாக வரும் சுகுமார் என்று ஒவ்வொருவரும் தம் பங்கை மிக இயல்பாக வெளிப்படுத்தியிருப்பதில் இருந்து இயக்குநர் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள இயலுகிறது.

பாடல்காட்சிகளைத் தவிர்த்து விஜய் மில்டனின் காமிரா வழக்கமான சினிமாத்தனத்தை தவிர்த்து, ஒரு டாக்குமெண்டரித் தனத்தோடு கதையை நிழல் போல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக இருந்து ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் இனிமையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கிறது.

O

தமிழின் சிறப்பான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

suresh kannan

8 comments:

Badri Seshadri said...

இவ்வளவு நன்றாக நீங்கள் விமர்சனம் எழுதியதால் நான் இந்தப் படத்தை ஒருமுறை பார்த்துவிடுகிறேன்.

Anonymous said...

சுரேஷ்,
நல்லா எழுதுறீங்க.. நானும் இன்டப் படத்தைப் பார்த்தேன். நல்லா இருக்குது. தலைப்பில் அந்த ஒரு வார்த்தையை நீக்கினால் பளீரென இருக்கும் வெள்ளைத்துணியில் இருக்கும் கறுப்புக்கறையை நீக்கியதுபோல இருக்கும்.

By: Muthu

ROSAVASANTH said...

படமெடுத்திருக்கானுய்ங்க = படமெடுத்திருகாய்ங்க?

Vijayakumar said...

விமர்ச்சனம் நல்ல இருக்குப்பா... ஆனா அது என்ன தலைப்பு.... வ்வ்வே... எடுத்துருங்க... தலைப்பை படிக்கவே ரொம்ப மோசமா இருக்கு,

Anonymous said...

நண்பர்களுக்கு,

பின்னூட்டங்களுக்கு நன்றி.

விமர்சனத்தை விட தலைப்பே உங்களை அதிகம் பாதிப்பதாய் உணர்கிறேன். மதுரை சினிமா ரசிகர் ஒருவர் இந்தப் படத்தை உணர்ச்சிவசப்பட்டு பாராட்டினால் எப்படியிருக்கும் என்று யூகித்து எழுதினேன்.


By: suresh kannan

Anonymous said...

படம் குறித்தான என்னுடைய கருத்துக்களை இங்கே படிக்கவும்.

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10766


நன்றி
ச.திருமலை


By: Thirumalai

Anonymous said...

சூபர் படம் மாப்பல!

Anonymous said...

பிட்சை பாத்திரத்தில் அட்சச்ய பாத்திரமாய் ஒரு விமர்சனம். இயல்புக்கு மிக பக்கத்தில் ஒரு தமிழ் படம் - அதிசயமாய் !