Saturday, January 08, 2005

ஒரு 'ஆய்' படம்

'காதல்' திரைப்படத்தைப்பற்றி பத்திரிகை விமர்சனங்களும் நண்பர்களும் 'ஆகா ஓகோ' என்று புகழ்கிறார்களே என்று அந்தப்படத்தைப் பார்க்க குடும்பத்தோடு சென்றேன். சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்றாலும் யாமறிந்த வட்டார மொழிகளிலேயே மதுரை வட்டார மொழியின் இனிமையை வேறெதிலும் காண இயலவில்லை. 'ஏ புள்ள, என்னா என் கிட்ட வம்பு பண்றே, சரஸ்ஸாடுயிவே, போய்றிரிரி....' என்று பரத் மதுரை தமிழில் நாயகியை பைக்கில் உறுமிக்கொண்டே வந்து மிரட்டுகிற காட்சியை தொலைக்காட்சியில் கண்டவுடனே இந்தப் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று தோன்றிவிட்டது.

ஆனால் நான் பார்க்கவிரும்பிய படங்களை உடனே பார்க்கவிடாமல் எந்த துர்தேவதையாவது எனக்கு சாபம் கொடுத்திருக்கிறதோ என்னமோ, அந்தப் படத்திற்கு அனுமதிச்சீட்டு கிடைக்காமல் அரங்கம் நிரம்பிவிட்டதாக தகவல் கிடைத்தது. முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ள படி, சினிமாவுக்கு என்று கிளம்பினால் எந்த ஒரு எழவு சினிமாவையாவது பார்க்காமல் வீடு திரும்புவதில்லை என்கிற நம் தமிழ் மரபுப்படி, இன்னொரு வேறுவழியில்லாத சாய்ஸாக கிடைத்ததுதான் 'ஏய்'. இது A சர்டிபிகேட் வழங்கப்பட்ட படம் என்பதால் '18 வயதிக்குட்பட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது' என்று கொட்டை எழுத்தில் போர்டு தொங்கியது. என் நான்கு வயது மகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, கவுண்டரில் டிக்கெட் வழங்கும் பெண்மணி தானாகவே முன்வந்து யோசனை கூறினார். "படம் ஆரம்பிச்சதும் தூங்கிடுவான்னு சொல்லுங்க"

O



இந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதுவதை விட &*(^&(*(_ செய்யலாம் என்று தோன்றினாலும், என்னைப் போல நண்பர்கள் யாரும் தப்பித்தவறி கூட இந்தப்படத்திற்கு சென்றுவிடக்கூடாது என்கிற நல்லெண்ணமே இதை எழுதக் காரணம்.

கதை என்று ஒரு எழவும் கிடையாது. பழைய கால பத்திரிகைப்பாணியில் எழுதினால், சரத்குமார் என்கிற பெரிய வாணலியை எடுத்துக் கொள்ளவும். அதில் பாட்ஷா, இந்தியன், ரமணா, சாமி பிராண்ட் மசாலா பொடிகளை உபயோகித்து, காதைப்பிளக்கிற சகிக்காத பாடல்களை ஊற்றி, நமீதா, மும்தாஜ் என்கிற கருவேப்பிலை கொத்தமல்லிகளை போட்டு வேகாமலேயே இறக்கிவைத்தால் ரெடியாகிற பண்டம்தான் 'ஏய்'

வழக்கமாக நம் தமிழப்பட இயக்குநர்கள் லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். ஒரு மாறுதலுக்கு இந்த இயக்குநர் 'டன் என்ன விலை' என்று கேட்டிருக்கிறார். பொதுமக்களின் பார்வையில் காவல்துறையினர் எவ்வளவு கேவலமாக தோற்றந்தருகின்றனர் என்று சரத் காவல் உயர்அதிகாரியிடம் விளக்குகிற காட்சியிலும் (கான்ஸ்டபிள், எஸ்.ஐ. என்று போலீஸ்ல எத்தன போஸ்டு இருந்தாலும் மக்கள் போலீஸ்காரன 'மாமா'ன்னுதான் கூப்பிடறாங்க) வில்லன் கோட்டா சீனிவாசராவ் சரத்தின் வீட்டுக்கே வந்து மிரட்டுகிற காட்சியிலும் (எல்லாரும் சின்னப்புள்ளைல அணில், ஆடுன்னுதான் பாடம்படிப்பாங்க, நான் அப்பவே அருவா, ஆசிட்டுன்னு பாடம் படிச்சவன்) வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் மீது லேசாக வெளிச்சம் படுகிறது.

O




சரத்குமாரின் பெரிய பலமே அவரது புஜபலபராக்கிரம ஆஜானுபாகுவான உடம்புதான். மனிதர் பத்துப்பேரை அடித்து வீழ்த்தினாலும் சிரிக்க தோன்றவில்லை. டியூப்லைட்டுக்கு சண்டை பேண்ட் மாட்டின மாதிரி இருக்கிற சுள்ளான்கள் இதை செய்யும் போதுதான் சிரிக்க தோன்றுகிறது. ஆனால் படத்தின் பிற்பாதியில் இதுவே ஓவர்டோஸ் ஆகிவிடும் போது எரிச்சலே மண்டுகிறது. ஒரு காட்சியில் சரத் முழு நிர்வாணமாகவும் ஆஷிஷ் வித்யார்த்தி முக்கால் நிர்வாணமாகவும் போலீஸ் ஸ்டேஷனில் சண்டை போடுகின்றனர். இந்த காட்சிக்கே டபுள் A கொடுக்கலாம் போலிருக்கிறது.

கதாநாயகி நமீதாவின் இடுப்பளவு சரத்தின் மார்பளவை விடப் பெரிதாக இருக்கிறது. இவர் தொப்புள் தெரியாமல் வருகிற காட்சிகளை கண்டுபிடிக்கச்சொல்லி ஒரு போட்டியே வைக்கலாம். 'அர்ஜீனா அர்ஜீனா' பாடலை ஏற்கெனவே தொலைக்காட்சியில் கொஞ்ஞீண்டு பார்த்து இங்கே பிரம்மாண்ட திரையில், 'வந்ததுக்கு இதுதான் மிச்சம்' என்று எண்ணிக்கொண்டே இருக்கையில் வசதியாக சாய்ந்து பார்க்காமென்றால், மகள் என் சட்டையைப் பிடித்து இழுத்து காதில் கிசுகிசுக்கிறாள் "அப்பா ஒன் பாத்ரூம் போகணும்".

அடிப்பாவி.

மறைந்த வில்லன் நடிகர் அசோகனின் மகன் இதில் ஒரு வில்லனாக வருகிறார். ஆனால் இஞ்சி தின்ற ஏதோ மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு போதாதற்கு ஈ என்று இளித்துக் கொண்டே வரும் போது எரிச்சலே வருகிறது. அடுத்த படத்திலாவது நல்ல இயக்குநர் கையில் சிக்க வேண்டும். இசையமைப்பாளர் sriகாந்த் தேவா இதற்கு முன் சாவுமேளக் கச்சேரிகள் லட்சமாவது செய்திருப்பார் போல. ஒரு பாடலையும் காதைப் பொத்திக் கொள்ளாமல் கேட்க முடியவில்லை.

வடிவேலு இருக்கவே கொஞ்சமாவது பிழைத்தோமோ என்னமோ?

இயக்குநர் கண்ணில் சிக்கினால் "ஏய்" என்னடா படம் எடுத்திருக்கே? என்று சட்டையைப் பிடிக்க வேண்டும் போலிருக்கிறது.

சன் டி.வி. திரைப்பட விமர்சன பாணியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு முடிவாக சொல்கிற பஞ்ச் வசன பாணியில் சொன்னால்

ஏய் - ஆய்.

suresh kannan

8 comments:

ROSAVASANTH said...

சாரு, ஆய்த எழுத்திற்கு வைத்த விமர்சனம் "ஆய்"

வசந்தன்(Vasanthan) said...

அட!
வாணலியில சத்ரபதிய போட மறந்துட்டீங்களே.
-வசந்தன்.

மாயவரத்தான் said...

'ஆய்'ன்னா அவ்வளவு கேவலமா போய்டிச்சா?! போயும் போயும் 'ஏய்'-ஓட கம்பேர் பண்ணிருக்கீங்க?! ஒரு நாள் ஆய் போகாம இருங்களேன் பார்ப்போம்..! :) (சரத்குமார் என்னைக்கு மாட்டுவார்னு இருந்தோமில்லே?!)...அது சரி..மூக்கன் சார்.. இப்படி எல்லாம் எழுதினா மெரட்டல் கடுதாசி வருமா என்ன?!

Anonymous said...

சுரேஷ்ஜி, வருத்தப்படாதீங்க, இனிமேல
சித்தப்பு,இமேஜ் பார்க்காம கேரக்டர மட்டும் பாத்து நடிக்கப் போறாராம் :-)
எங்க படிச்சேன்? ஆ.வியா? குமுதமா?

By: usha

Anonymous said...

ஏங்க மாயவரத்தான்,

உங்க கமெண்ட்டை பாத்தா மலச்சிக்கல் வந்து அப்பப்ப அவஸ்தை படூவீங்க போல. :-)

அய்யா சுரேஷ் கண்ணன்,

இந்த மாதிரி படத்துக்கெல்லாம் ஏன் போவானேன், அப்புறம் குய்யோ ஆய்யோன்னு கத்துவானேன். :-)

அக்கினிக்குஞ்சு

By: akkinikunchu

Anonymous said...

ஏம்பா, இப்படி போட்டு அசிங்கப்படுத்துறே?! சன் டி வியில மொத எடத்தை தந்துருக்காங்கெ?! ஆனாலும் அனியாயம்பா!

எம்.கே.

By: M.K.K

Anonymous said...

'ஏய்' இன்னும் பார்க்காவிட்டாலும், எப்படி போகும் என்று ஓரளவு முன்கூட்டியே சொல்லிவிடுகிறார்கள். எதிர்பார்த்து ஏமாற முடியாது! ஆனால், 'காதல்' மற்றுமொரு காதல் திரைப்படம். 'சொல்லாமலே', இத்யாதி போன்று கொஞ்ச நாளாக வராமல் இருந்த புற்றீசல் பட வரிசையில் இன்னொரு அர்ப்பணிப்பு.

By: பாலாஜி சுப்ரா

enRenRum-anbudan.BALA said...

எனக்கும் மலச்சிக்கல் பிரச்சினை உண்டு :-( 'ஏய்' படம் பார்த்தால், (வயிற்றைக் கலக்கி!) ஆய் ஃப்ரீயா போக வாய்ப்பு இருக்கு போல இருக்கே :-)
நகைச்சுவை தொக்கி நிற்கும் அருமையான விமர்சனம்!
Keep it up!
என்றென்றும் அன்புடன்
பாலா