Monday, July 11, 2005

காசியிடம் சில கேள்விகள் கேட்டவருக்கு ..........

மாலன் என்பவர் தமிழ்மணம் திரட்டித் தருகிற (வெளியிடுகிற அல்ல) அவரது சமீபத்திய பதிவில் தமிழ்மண நிர்வாகிகளை நோக்கி சில கேள்விகளை கேட்டுவிட்டு கூடவே நான் முன்னர் எனது பதிவில் எழுதியிருப்பவற்றை (கூடவே என்னையும்) விமர்சித்திருக்கிறார்.

போலிப் பெயரில் வரும் பின்னூட்டங்கள் மற்றும் ஆபாச பின்னூட்டங்களைப் பற்றின தீர்வைப் பற்றி விவாதிக்கவே தேவையில்லை என்று நான் என் பதிவில் எங்குமே கூறவில்லை. இதைப் பற்றி விவாதிப்பதே - என்னைப் பொறுத்தவரை - தேவையற்ற வீணான செயல் என்றுதான் கூறியிருக்கிறேன். இணையம் என்பதே நல்லதும் தீயதும் கலந்ததுமான பெருவெளி என்பதை தெரிந்து வைத்துக் கொண்டுதான் நாம் இதில் நுழைகிறோம். இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோர் நல்லதை எடுத்துக் கொள்வதும், தீயதை ஒதுக்கியும் (அதுவாக நம் வழிக்கு வந்தாலும்) செயல்படுவது இயல்பு. Penis Enlargement மின்மடல்களை எதையும் யோசிக்காமல் நாம் அழிப்பதில்லையா?

ஆக.. வலைப்பதிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விழைபவர்கள்,

(1) தங்கள் பதிவில் இடப்படும் ஆபாச பின்னூட்டங்களை அழித்து விட்டோ அல்லது ஒதுக்கி விட்டோ தங்கள் வேலைகளைத் தொடரலாம். (இவ்வாறு செய்வதாலேயே ஆபாச பின்னூட்டங்களை இடுபவர்கள் சோர்ந்து போய் தங்கள் தீய பழக்கத்தை கைவிடலாம். மாறாக இது குறித்து அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் உற்சாகமாகி இன்னும் ஜரூராக தங்கள் வேலையைத் தொடர்வார்கள்)

(2) போலி பின்னூட்டங்களைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்டவரை நாம் ஒரளவு அறிந்திருக்கிறவரை, அது அவரிடமிருந்து வந்தது அல்ல என்பதை உணர்ந்து - தேவையென்றால் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு தெளிவுபெற்று - அதையும் ஒதுக்கி விடலாம்.

(3) அதிக பின்னூட்டங்கள் பெற சர்ச்சைக்குரிய விஷயங்களை வேண்டுமென்றே எழுதுபவர்களின் பதிவுகளை படிப்பதை தவிர்த்து விடலாம்.

இந்த முறையில்தான் தமிழ்மணத்தை நான் பயன்படுத்துகிறேன். எனவே ஆபாச பின்னூட்டங்கள் குறித்தான பிரச்சினை என்னைப் பொறுத்தவரை மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. (நன்கு கவனிக்கவும். 'என்னைப் பொறுத்தவரை') நான் இதை பொதுமைப்படுத்தவில்லை. நான் நண்பர்களிடம் பேசியவரை பெரும்பாலோனார் என்னைப் போன்ற நிலையிலேயேதான் இருப்பதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களும் மேற்கூறின செயல்பாடுகளை பின்பற்றினால் ஆபாச பின்னூட்டங்களின் உக்கிரத்திலிருந்து பெரும்பாலும் தப்பிக்கலாம்.

()

தமிழ்மணம் என்பது பதியப்படும் வலைப்பதிவுகளை ஒரே கூரையின் கீழ் திரட்ட காசி என்கிற தனிமனிதரின் கடின உழைப்பினால் பொதுநல நோக்கில் உருவாக்கப்பட்டது. பின்னர் சில நண்பர்களின் உதவியோடு இந்த சேவை தொடரப் படுகிறது. நாளாக நாளாக வலைப்பதிவோரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பயனீட்டாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சிறந்த பதிவுகளை வாசிப்போரே தேர்ந்தெடுத்து அந்தப்பதிவிற்கு முன்னுரிமை தருமாறு ஒட்டுரிமை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தை சிலபலர் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தியதால் வீணான குழப்பங்கள் ஏற்பட்டு, சர்ச்சையான பதிவுகளே முன்னுரிமை பெற்று, உருப்படியான பதிவுகள் நீண்டகால கவனம் பெறாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய நிலை.

ஆக.. இந்த நிலையை முறைப்படுத்த அல்லது மாற்றியமைக்க தமிழ்மண நிர்வாகிகளிடம் வேண்டுகோள் ¨வ்க்கலாமே ஒழிய ஆபாச பின்னூட்டங்கள் வருவதை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றே கருதுகிறேன். ஆனால் அதையும் முறைப்படுத்த முடியும் என்றால் கணினி நுட்பவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் கூடி இதற்கொரு தீர்வு காணச் செய்வதுதான் முறையான செயலாக இருக்குமே ஒழிய, பழகிய அமைப்பை விட்டு விட்டு தடாலென்று இன்னொரு அமைப்பிற்கு - அதுவும் இந்த உப்புப் பெறாத காரணத்திற்காக - மாறுவது சற்று தடுமாறச் செய்வதுடன் தேவையற்ற செயலாகும். எத்தனை தடுப்புக் கோட்டைகளையும் தாண்டிவரும் Hacker-கள் அந்த அமைப்பையும் ஊடுருவ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?.

()

இனி மாலன் என் கருத்துக்களுக்கு கூறிய எதிர்க்கருத்துகளுக்கு வருகிறேன்.

///இருப்பதிலிருந்து மேம்பட்ட ஒரு இடத்திற்கு மாறிக் கொள்வதில் என்ன அபத்தம் என்று எனக்குப் புரியவில்லை. ///

மாலன் கூறுகிற மேம்பட்ட இடம் என்பதிற்கு காரணங்கள் புரியவில்லை. ஒப்புநோக்கினால் ப்ளாக்கம்.காம்மில் உள்ள பரவலான வசதிகளே இதிலுள்ளன. பின்னூட்டங்கள் என்ற வகையை மட்டும் கருத்தில் கொண்டு பார்த்தால், நீங்கள் விரும்பும் நபர் மட்டுமே உங்கள் பதிவில் பின்னூட்டங்கள் அளிக்குமாறு நீங்கள் ஏற்படுத்த முடியும் என்று தெரிகிறது. (இதையும் ஆபாச பின்னூட்டக்காரர்கள் உடைக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த நிச்சயமுமில்லை) அதாவது ஆபாச பின்னூட்டங்கள் தவிர மாற்றுக்கருத்து கொண்டவர்களின் பின்னூட்டங்களை பார்த்து நீங்கள் சங்கடப்பட வேண்டும். உங்கள் நண்பர்களின் 'ஆஹா ஓஹோ' பாராட்டுக்களை மட்டும் நீங்கள் காது குளிர கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்கலாம். ஆஹா! ஜனநாயகம் தழைக்க இதுவல்லவா மேம்பட்ட வசதி?

மேலும் ஆபாச பின்னூட்டமிட்டு பிரச்சினையை ஏற்படுத்துபவர் என்று பெரும்பாலோனோர் ஒருவரை வெறுப்புடன் சுட்டிக்காட்ட (அவர்தானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது) அந்த நபரோ மேம்பட்ட வசதி உள்ள நண்பரின் அமைப்பில் நண்பர்கள் பட்டியலில் பெருமையுடன் வீற்றிருக்கிறார். ஆக.. பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கிற விந்தையான செயலில் ஈடுபட்டிருப்பவரை என்ன சொல்வது? இவர் மற்றவருக்கு நாள், நட்சத்திரம் குறித்து தரும் ஜோசியர் வேலையில் இறங்கும் போது ந¨க்காமல் இருக்க முடியவில்லை.

///பிறந்து வளர்ந்த இந்தியாவை விட்டு வெளிநாட்டில் போய் வேலை பார்க்கிறோமே அது அபத்தமா?இப்போது இருக்கிற வீட்டில் பழுது ஏற்பட்டால், அந்தப் பழுதை நீக்க முடியவில்லை என்றால். விடு மாறமாட்டோமா? பயன்படுத்திக் கொண்டிருக்கிற வாகனம் பழுதாகிவிட்டால் வேறு வாகனம் வாங்க மாட்டோமா? இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை விட நல்லதொரு வேலை கிடைத்தால் மாறமாட்டோமா? விண்டோஸ் 98லிருந்து நாம் xpக்கு மாறவில்லையா? விண்டோசிலிருந்து லினக்சிற்கு மாறவில்லையா? ////

கப்பலில் ஓட்டை விழுந்தால் சக தொழிலாளர்கள் உதவியோடு அதை அடைக்கத்தான் முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய அதற்குள் கப்பல் முழுகிப் போய்விடுகிறாற் போல் அலறிக் கொண்டு 'நான் தப்பிக்க வழி கிடைத்துவிட்டது. நீங்களும் ஓடிவாருங்கள்' என்று அமைதியாக அமர்ந்திருப்போரையும் பதட்டமடையச் செய்வதுதான் மேம்பட்ட வசதிக்கு அழைத்துச் செல்லும் லட்சணமா என்று புரியவில்லை. (உவமைகளை வைத்துக் கொண்டு தனக்கு சாதகமாக ஒரு விவாதத்தை எவ்வாறு திசைதிருப்ப முடிகிறது, கவனீத்தீர்களா?)

////சுரேஷ் கண்ணன் போன்ற அறிவுஜீவிகளுக்காகத்தான் பாரதியார் எழுதி வைத்திருக்கிறார்: " அப்பன் தோண்டிய கிண்று என்று உப்புத் தண்ணியைக் குடிக்கிறார்கள்" என்று/////

இதைக் கண்டு நகைப்பாக இருக்கிறது. மாலன் போன்ற ஒரிஜினல் அக்மார்க் அறிவுஜீவிகள், பாரதியின் வரிகளை தமக்கு சாதகமாக ஒட்டி, வெட்டி ஜெயகாந்தனை திட்டின அதே பாணியை என் போன்ற சாதாரணர்களுக்கும் அவர் பயன்படுத்தியதைக் கண்டு எனக்கு புல்லரிக்கிறது. (இங்கு அறிவுஜீவி என்பதை அவர் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கிறாரோ, அதே அர்த்தத்தில்தான் நானும் பயன்படுத்தியிருக்கிறேன்) பாரதியின் வார்த்தைகளை வைத்துக் கொண்டு எதிரியிடம் சிலம்பம் விளையாடும் விளையாட்டும் புதுமையாகத்தானிருக்கிறது. பாரதிக்கு ஒருபுறம் மணிமண்டபம் கட்டிக் கொண்டு அவரை தனது அடியாளாக பயன்படுத்தும் ஒரே நபர் இவராகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது.

////கட்சிமாறுகிற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். த்லைவன் என்ன செய்தாலும் அதை சிந்தனையற்று, கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்ட தொண்டர்களும் இருக்கிறார்கள்.///

இதை இவர் கூறியதுதான் இன்னும் வேடிக்கை. இன்னும் விவரித்தால் வம்பாகி போகுமென்பதால் தவிர்க்கிறேன்.

/////சுரேஷ் கண்ணன் நம்மையெல்லாம் சிந்தனையற்ற தொண்டர்களாக இருக்கச் சொல்கிறார் போலும்!////

அடடா! ஒரே வார்த்தையில் என்னை தனியாளாய் நிறுத்திவிட்டு மற்றவர்களையெல்லாம் அவர் பக்கமாய் நிற்கிறாற் போலொரு பிரமையை ஏற்படுத்தின சாமர்த்தியத்தை வியக்கிறேன்.

()

மாலன் அவர்களே... இந்த விஷயத்தில்தான் உங்களோடு மாறுபடுகிறேனே ஒழிய, மாலன் என்கிற படைப்பாளியிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன் என்பதையும் உங்கள் மனதின் ஒரத்தில் குறித்துக் கொள்ளவும்.

()

தமிழ்மண வசதியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு,

ஆபாச பின்னூட்டங்களை ஏற்படுத்துகிறவர்கள், அதை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறவர்கள் என்று பட்டியலிட்டால் அவர்கள் இரு கை எண்ணிக்கையில் அடங்கிவிடுவர். எனவே அவ்வாறானவர்களுக்காக நாம் இடம்பெறுவது, அவர்களுக்கு பயந்து சென்றாற் போல் ஒரு பிரமையை ஏற்படுத்தி அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தினாற் போலாகிவிடும். எனவே கண்டும்காணாமல் அவர்களை புறக்கணித்தால் தானாகவே அவர்கள் விலகிவிட வாய்ப்புகள் அதிகம். தொழில்நுட்ப ஓட்டைகள் எல்லா இடத்திலும் உண்டு. வேறுவழியில்லை என்னும் பட்சத்தில் மட்டுமே இடம்பெயர்தல் அவசியம்.
இதை அவரவர் சுய யோசனைக்கும், பரீசீலனைக்கும், முடிவிற்கும் விடுகிறேன்.

Friday, July 08, 2005

'தமிழ்மணம்' காசியுடன் ஒரு சந்திப்பு

மழை காரணமாக முன்னர் ஏற்பாடு செய்திருந்த மெரீனா, (இல்லாத) கண்ணகி சிலைக்குப் பதிலாக உட்லண்ஸ் டிரைவ்-இன்-னில் சந்திக்க காசியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் போவதற்குள் கலந்துரையாடல் சாம்பார் வடையுடன் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முன்னமே சந்தித்திருந்தவர்கள் தவிர, காசி ஆறுமுகம் மற்றும் செல்வராஜ் ஆகியோர்களை அறிமுகப்படுத்திக் கொண்டேன். (ஆர்.வெங்கடேஷ், பத்ரி, பிரகாஷ், ராம்கி, சாகரன், நாராயண், இராம.கி, அருள் செல்வன், சந்திரன், ராமச்சந்திரன் உஷா, மதுமிதா மற்றும் சிலர் வந்திருந்தனர்)

எதிர்பார்த்திருந்த மாதிரியே தமிழ்மணத்தின் burning issue-வான (நான் அப்படி நினைக்கவில்லை) ஆபாச மற்றும் போலி பின்னூட்டங்களைப் பற்றி உரையாடல் போய்க் கொண்டிருந்தது. நான் சற்று தொலைவில் அமர்ந்திருந்ததால் (வாசகர்களுடன் குறைந்த பட்ச தூரம் வேண்டும் என்று சுஜாதா சொன்னதிலிருந்து நான் எல்லோரிடமும் - முக்கியமாக தலைக்கு பின்னால் ஒளிவட்டத்தை சுமந்திருக்கும் எழுத்தாளர்களிடமிருந்து - சற்று தூரத்தை மெயின்டெயின் செய்ய ஆரம்பித்திருக்கிறேன்) உரையாடலை முழுமையாக என்னால் கேட்க இயலவில்லை.

காசியையும், செல்வராஜையும் சந்தித்தது முக்கியமான விஷயமென்றாலும் ஆபாச பின்னூட்டங்களை ஒரு பிரச்சினையாக கருதி கூடி விவாதிப்பது என்னைப் பொருத்தவரை ஒரு அவமானமாகரமான காரியமாகவே கருதுகிறேன். ஒரு சில உளவியல் ரீதியான சிகிச்சை தேவைப்படுபவர்கள் செய்யும் காரியங்களை ஒரு பொருட்டாக கருதி, நம்முடைய நேரத்தை செலவு செய்வதே சம்பந்தப்பட்டவர்களால் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஆபாச பின்னூட்டக்காரர்கள் உணர்ந்து மகிழ்ந்து போக ஏதுவாக இருக்கும் என்பது என் கருத்து. ஒரு நிலைக்கு மேல் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்; சற்றும் பொருட்படுத்தப்படக்கூடாதவர்கள்.

மேலும் ஏற்கெனவே நிறுவப்பட்ட ஒரு அமைப்பில் உள்ளவர்கள் மற்றும் அந்த வசதியில் புழங்கிக் கொண்டிருப்பவர்கள், இந்த ஒரு காரணத்திற்காகவே - சில பிரத்யேக வசதிகள் இருந்தாலும் - இன்னொரு அமைப்பிற்கு மாறுவது அல்லது மாறுவதற்கு யோசனை கூறுவது மிக மிக அபத்தமான கருத்து. இருக்கிற இடத்தில் உள்ள பிரச்சினைகளை களைய அல்லது ஒதுக்க வேண்டிய வழிவகைளை ஆராய வேண்டுமே ஒழிய அரசியல்வாதிகள் போல் அவ்வப் போது கட்சி மாறுவது ஒரு நிலையான தீர்வு அல்ல.

()

இந்த Official மீட்டிங் முடிந்தவுடன் நண்பர் அருள் செல்வன் பற்றவைத்த நெருப்புப் பொறிதான் நேற்றைய மாலைப் பொழுதை அர்த்தமுள்ளதாக்கியது. அவர் சொன்னதில் நான் உள்வாங்கிக் கொண்டது இதுதான்.

1980-களில், 'இதுதான் இலக்கியம்' என்று சிலபலர் எழுதி எழுதி பம்மாத்து செய்துக் கொண்டிருக்கையில் அந்த மாயையை உடைக்க ஒரு கலகக்கூட்டம் புறப்பட்டது. ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கிற மாய பிம்பங்களை கலைத்துப் போடுவதுதான் அந்த கூட்டத்தின் நோக்கம். இதன் மூலம் ஒரு மாற்று இலக்கியம் புதுவெள்ளமென தமிழ் இலக்கியத்திற்குள் பாய இது ஏதுவாக இருக்கும் என்று நினைக்கப்பட்டது. நாகார்ஜீனன், தமிழவன், கார்லோஸ், சாருநிவேதிதா போன்றோர் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் இலக்கிய வடிவங்களை தங்களின் மாற்று இலக்கியத்தால் கலைத்துப் போட்டனர். ஆங்கிலத்தில் இம்மாதிரியான உடைப்புகள் காலந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. தமிழில்தான் அவ்வப்போது ஒரு தேக்கநிலை ஏற்பட்டு குட்டையில் சுகமாக ஊறிக் கொண்டிருக்கிற எருமைமாடுகள் போல் நாம் ஒரேமாதிரியான இலக்கியத்தை வேறுவழியில்லாமல் சுகித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது 2005-ல் ஏறக்குயை இதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் என்றவுடன் நமக்கு சில பெயர்கள்தான் நினைவுக்கு வருகிறது. அவர்கள் எழுதுவதையும், அவர்களின் தகுதிகளையும் கட்டுடைத்துப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. புதுவகையான இலக்கியம் என்பது ஒரு கனவாகவே இருக்கிறது. இந்நிலை மாற இளம் எழுத்தாளர்கள் இருக்கிற பிம்பங்களை உடைத்து ஒரு புதிய வழியை ஏற்படுத்த வேண்டும் என்பது அருளின் ஆதங்கம்.

என்ன செய்யப் போகிறோம்?

()

மேற்கூறிய இரண்டு விஷயங்களுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.