Saturday, May 01, 2021

The Kill Team (2019)





கும்பல் மனோபாவம்தான் வன்முறையின் ஆதார எரிபொருள் எனலாம். தனியாக இருக்கும் போது ஆதாரமான நல்லியல்புகளுடன் இருக்கும் ஒருவன், வெறி பிடித்த கும்பலில் இணையும் போது அவனும் அந்த மூர்கத்த்தின் தன்னிச்சையான உறுப்பாகி விடுகிறான். 

ஏறத்தாழ போரும் ஒருவகையில் கும்பல் மனோபாவத்தின் வெளிப்பாடுதான். 

எங்கோ சில தலைவர்கள் எடுக்கும் முடிவிற்காக பல தனிநபர்கள் கும்பலாக ஒன்றுகூடி அந்நியமான தனிநபர்களைக் கொன்று குவிக்கிறார்கள். இதன் எரிபொருளாக தேசபக்தி, பாதுகாப்பு என்று பல கற்பிதங்கள் அவர்களுக்குள் விதைக்கப்படுகின்றன. 

இப்படிப்பட்ட கும்பல் மனோபாவத்தில் இணைய நேரும் ஒருவன், தன் அடிப்படை மனச்சாட்சியை இழக்காமல் இருந்தால் என்னவாகும்.. என்பதை இந்தத் திரைப்படம் மிக இயல்பாக விவரிக்கிறது. 

**


அடிப்படையில் இது ஒரு War film என்றாலும் போர் வன்முறையை அதன் சாகசங்களை வணிகமாக்கி  கொண்டாடவில்லை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 

Andrew Briggman அமெரிக்க  ராணுவத்தில் பணிபுரிபவன். ஆப்கானிஸ்தானிற்கு பயணப்பட வேண்டிய முதல் நாளன்று ‘நான் அதுக்குச் சரிப்பட்டு வருவேனா?” என்று தந்தையிடம் கேட்கிறான். ‘நல்லா வருவே’ என்று மையமாக ஆசிர்வாதம் செய்து அனுப்புகிறார் தந்தை.

தீவிரவாத வேட்டை என்கிற பெயரில் இதர நாடுகளின் மீது போர் தொடுக்கும்  வல்லரசு ராணுவங்கள், அங்குள்ள பொதுமக்களிடம் நல்லெண்ணத்தைப் பெறுவது வெற்றியின் ஒரு அடிப்படை. அதே சமயத்தில் பொதுமக்களிடையே கலந்திருக்கும் தீவிரவாதிகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.  ஒரு சிறிய பையன் கூட மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலைப்  படையாக மாற்றப்பட்டிருக்கும் ஆபத்து உண்டு.  

ஆண்ட்ரூ இருக்கும் குழுவின் தலைவன் அவ்வாறானதொரு கண்ணி வெடியில் சிக்கி உயிரை விடுகிறான். அவனுடைய இடத்தில் டீக்ஸ் என்கிற கறாரான அதிகாரி வருகிறான். 

‘இனிமேலும் ஒரு அமெரிக்கனின் உயிர் கூட இந்தக் கண்ணி வெடியால் பறிபோகக்கூடாது” என்கிற எச்சரிக்கையுடன் அங்குள்ள குடிமக்களை சோதனையிடச் சொல்கிறான். 

ஆனால் டீக்ஸ் செய்யும் ஒரு நயவஞ்சகமான செயலை ஆண்ட்ரூ மெல்ல மெல்ல அறிந்து முடிகிறான். 

அடிப்படையில் மனச்சாட்சியும் நல்லியல்பும் உள்ள ஆண்ட்ரூவால் அப்பாவிகள் மீதான வன்முறையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் சக வீரர்கள் செய்யும் அவமானத்திற்கு இடையில் தவிக்க வேண்டியதாக இருக்கிறது. 

இதற்கிடையில் டீக்ஸ் செய்யும் நயவஞ்சகமான செயல் அவனை மனஉளைச்சலாக்குகிறது. அதை பொதுவில் துணிச்சலாக வெளிப்படுத்துவதா வேண்டாமா என்கிற அச்சம் அவனுக்குள் சூழ்கிறது. 

சிறப்பாக பணிபுரிந்து தான் ஒரு ராணுவ வீரன் என்பதை மெய்ப்பிப்பதா.. அதற்காக இவர்கள் செய்யும் அட்டூழியத்திற்கு துணைபோவதா.. என்கிற தத்தளிப்பில் மிகவும் தவிக்கிறான். 

இறுதியில் என்னவானது என்பதை ஆர்வம் குலையாமல் சொல்லியிருக்கிறார்கள். 


**

பொதுவாக அமெரிக்கா தான் செய்யும் எந்தவொரு அநீதியையும் பல்வேறு நியாய முலாம்கள் பூசி மறைப்பதே வழக்கம். ஆனால் இந்தத் திரைப்படம், அப்படிப்பட்ட ஒரு பொய்யை உடைத்து உண்மையை பதிவு செய்திருக்கிறது. 

இயக்குநர் Dan Krauss, இதே கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். ஆண்ட்ரூவாக Nat Wolff மிக அற்புதமாக நடித்திருக்கிறார். போலவே கறாரான அதிகாரியாக Alexander Skarsgård-ன் நடிப்பும் நன்றாக உள்ளது. 

காதலிலும் போரிலும் எவ்வித விதியும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதில்லை என்பார்கள். ஆனால் போர் தர்மம் என்ற ஒன்றும் மிக அவசியமானது என்கிற ஆதாரமான உண்மையை இந்தத் திரைப்படம் இயல்பாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்துகிறது. 

 

suresh kannan

No comments: