எந்தவொரு விருதும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதில்லை. பொதுவாக எல்லா விருதுகளிலும் ஏதோவொரு அரசியல் உள்ளுறையாக பதுங்கியிருக்கும். ஆஸ்கர் விருதும் அப்படியே. உலகளாவிய வணிகச்சந்தையை கைப்பற்றிக் கொண்டிருக்கிற ஹாலிவுட் தேசத்திலிருந்து இந்த விருது தரப்படுவதால் பரவலான கவனத்திற்கு உள்ளாகிறது. இந்த விருது தொடர்பாக பல சர்ச்சைகள், புகார்கள் ஏற்கெனவே நிறைய உள்ளன. அவற்றில் இரண்டு பிரதானமானது. ஒன்று, வெள்ளையினத்தவரின் ஆதிக்கம். இவர்களுக்கே பெரும்பாலான விருதுகளும் அங்கீகாரங்களும் வழங்கப்படும். காரணம், இனம் மற்றும் நிறவெறி அரசியல். குறிப்பாக கருப்பினத்தவர்கள் அப்பட்டமான வெறுப்புடனோ அல்லது நாசூக்கான தந்திரத்துடனோா ஒதுக்கப்படுவார்கள்.
இன்னொன்று, அமெரிக்க தேசத்தின் இறையாண்மையை விதந்தோதும் திரைப்படங்களுக்கு உறுதியான அங்கீகாரம். பரிந்துரைப் பட்டியலில் இதர சிறந்த திரைப்படங்கள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி விட்டு அமெரிக்க ஆதரவை அடிநாதமாக கொண்டிருருக்கும் திரைப்படங்களுக்கு விருதுகள் அளிக்கப்படும் தந்திரம். உலகளாவிய அளவில் கவனிக்கப்படும் விருதாக இருந்தாலும் அடிப்படையில் இது அமெரிக்காவில் உருவான ஆங்கில திரைப்படங்களுக்குத் தரப்படுவது என்பதால் இரண்டாவதிலுள்ள அப்பட்டமான சுயநல அரசியலை சற்று ஒதுக்கி வைக்கலாம். ஆனால் முதலாவதாக உள்ள இன அரசியல் சகிக்க முடியாதது மட்டுமல்ல, மனித சமத்துவத்திற்கு எதிரானதும் கூட.
ஆஸ்கர் விருதிற்கான தேர்வுக் குழுவில் இருப்பவர்களில் பெரும்பான்மையான சதவீதத்தினர் வெள்ளையினத்தவர்களே. 88 வருடங்களைக் கடக்கும் ஆஸ்கரின் நீண்ட வரலாற்றில், கறுப்பினக் கலைஞர்கள் இதுவரை 14 விருதுகளை மட்டுமே வென்றுள்ளனர். அதுவும் பெரும்பாலும் துணை நடிகர்களுக்கான விருதாகவே அது இருக்கும். வெள்ளையினத்தவர்களால் கேலி செய்யப்படும், இழிவு படுத்தப்படும் பாத்திரங்களாக அவை இருக்கும். பிரதான பாத்திரத்திற்கு தரப்பட்ட விருதுகள் என்பது அரிதான விதிவிலக்குகளே.
1939ல் " கான் வித் தி விண்ட் " படத்தில் நடித்த Hattie McDaniel என்கிற கறுப்பின நடிகை சிறந்த துணை நடிகைக்கான விருதை முதன்முதலாக பெற்றார். 1964-ல் Sidney Poitier என்கிற கறுப்பின நடிகர், சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார். டென்சல் வாஷிங்டன் - 2002-ம் ஆண்டிலும் ஜேம்மி ஃபாக்ஸ் 2005--ம் ஆண்டிலும் ஃபாரஸ்ட் விட்டேகர் 2006--ம் ஆண்டிலும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினைப் பெற்ற கருப்பின நடிகர்கள். 2002-ல் Monster's Ball படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் Halle Berry. இதுவரையான வரலாற்றில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்ற ஒரே கறுப்பின பெண் ஹாலேபெர்ரி மட்டும் தான்.
இந்த விருதிற்குப் பின்னால் வணிகம் சார்ந்த நடவடிக்கைகளும் நிழலான செயற்பாடுகளும் நிறைய உள்ளன. இதனால் கலை சார்ந்த அர்ப்பணிப்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வணிக நோக்கு முயற்சிகள் முன்னிலை பெறும் அநீதிகள் நிகழ்கின்றன. இந்த விருதைப் பெறுவதற்காக அடித்துப் பிடித்து நடைபெறும் தள்ளுமுள்ளு பிரமோஷன்கள், லாபிகள் நடந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் பல்வேறு காரணங்களுக்காக மனச்சாட்சியுள்ள சில கலைஞர்கள் ஆஸ்கர் விருதை நிராகரித்த, விருது நிகழ்ச்சியைப் புறக்கணித்த சம்பவங்கள் இதற்கு முன் நிகழ்ந்துள்ளன. 45-வது அகாதமி விருதில் 'காட்ஃபாதர்' திரைப்படத்திற்காக 'சிறந்த நடிகராக' தேர்வு செய்யப்பட்ட மார்லன் பிராண்டோ விருதைப் பெற மறுத்து விட்டார். இனவெறி காரணமாக திரைத்துறையில் செவ்விந்தியர்கள் மோசமாக நடத்தப்படுவதைக் கண்டித்து தமக்கு அளிக்கப்பட்ட விருதை நிராகரித்தார். அவருடைய பிரதிநிதி ஒருவர் விழா மேடையில் பிராண்டோவின் கடிதத்தை வாசித்தார். இது போல் பல கண்டனங்களும் சர்ச்சைகளும் இந்த விருது குறித்து ஏற்கெனவே உள்ளன.
***
ஆனால் சமீபத்தில் நிகழ்ந்து முடிந்த, 2017-ம் ஆண்டிற்கான 89வது அகாதமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் இதற்கான மாற்றம் மெல்ல உருவாகி வருவதை கவனிக்க முடிகிறது. அரங்கத்தில் எழுந்த கரவொலிகளும் கூக்குரல்களும் இனவாத ஆதிக்க அரசியலுக்கு எதிரானவையாக இருந்ததைக் காண மகிழ்ச்சி ஏற்பட்டது. 'வந்தேறிகளை வெளியேற்றுவோம், உள்ளே அனுமதிக்க மாட்டோம்' என்றெல்லாம் அப்பட்டமான இனவெறி அரசியலை முன்வைக்கும் டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆகியிருக்கும் சூழலில், இது தொடர்பான வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையில் கலைஞர்களின் எதிர்ப்புக்குரலில் உள்ள இந்த அரசியல் சமிக்ஞைகள் முக்கியமானதாக அமைகின்றன. மதம், இனம், நிறம் போன்ற கற்பிதங்களின் மீதான பாகுபாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கலைஞர்கள் என்பது நிரூபணமாகிறது.
'சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட' பிரிவில் இரானின் 'தி சேல்ஸ்மேன்' விருதை வென்றது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் அஸ்ஹார் ஃபர்ஹாடி விருது நிகழ்ச்சியைப் புறக்கணித்தார். இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர டிரம்ப் ஏற்படுத்தியிருக்கும் தடைகளை கண்டிக்கும் வகையில் அவரது புறக்கணிப்பை ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சரமாரியாக கிண்டலடித்துக் கொண்டே இருந்தார். விருது ஒன்றை வழங்க வந்த மெக்ஸிகோவைச் சேர்ந்த நடிகரான கார்ஸியா பெர்னால் 'நம்மை பிரித்தாள எண்ணும் எல்லா சுவர்களையும் எதிர்க்கிறேன்' என்று குறிப்பிட்டது பார்வையாளர்களிடமிருந்து பலத்த வரவேற்பைப் பெற்றது.
இனவாத அரசியலுக்கு எதிரான கலைஞர்களின் சமிக்ஞைகள், இது சார்ந்த விமர்சனங்களுக்கு பார்வையாளர்களிமிருந்து கிடைத்த ஆதரவு தவிர, இந்த வருட விருதுப்பட்டியலில் கருப்பினக் கலைஞர்கள் பங்கெடுத்த படைப்புகள் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இடம் பெற்றிருந்தது வரவேற்கத்தக்கது. தேர்வுப் பட்டியல்களிலும் விருது விழா நிகழ்வு பங்களிப்புகளிலும் கறுப்பினத்தவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து கடந்த சில வருடங்களில் எழுந்த கண்டனங்களும் விமர்சனங்களும் கூட ஆஸ்கர் கமிட்டியின் இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
சிறந்த திரைப்படமாக 'மூன்லைட்' தேர்ந்தெடுக்கப்பட்டதையே இதற்கு சான்றாக சொல்லலாம். முழுக்க முழுக்க கருப்பினக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆஸ்கர் விருது வெல்வது இதுவே முதன்முறை. என்றாலும் இது தொடர்பான அறிவிப்பில் நிகழ்ந்த குளறுபடி தற்செயலானதுதானா என்பதை கவனிக்க வேண்டும். சிறந்த படம் என்று 'லா லா லேண்ட்' முதலில் அறிவிக்கப்பட்டு பிறகு திருத்தப்பட்டது. ஆஸ்கர் வரலாற்றிலேயே இது போன்ற தவறு இதற்கு முன் நிகழ்ந்ததில்லை. 'மூன்லைட்' திரைப்படத்தின் இயக்குநர் அடலே ரொமன்ஸ்கியால் இந்த இனிய அதிர்ச்சியை நம்பவே முடியவில்லை. மிகுந்த நெகிழ்வுடன் விருதைப் பெற்றுக் கொண்டார். இதே திரைப்படத்தில் நடித்த மஹெர்சலா அலி 'சிறந்த துணை நடிகருக்கான' விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கறுப்பினத்தைச் சார்ந்த இஸ்லாமியர் ஒருவர் ஆஸ்கர் விருது பெறுவது இதுவே முதல் முறை என்பதையும் கவனிக்க வேண்டும். 'சிறந்த தழுவல் திரைக்கதை'க்கான விருதையும் இத்திரைப்படம் பெற்றது.
அதுவரை பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்களில் கருப்பினத்தவர்களை சமூகவிரோதிகளாகவும் முரட்டுத்தனமானவர்களாகவும் சித்தரித்த போக்கிலிருந்து விலகி அவர்களின் வாழ்வியலில் உள்ள துயரத்தின் பக்கத்தை பதிவு செய்தது 'மூன்லைட்' ஒரு கருப்பின இளைஞனின் வாழ்க்கையை மூன்று வெவ்வேறு வளர்ச்சி படிநிலைகளில் விவரிக்கின்ற திரைப்படம் இது. சிரோன் என்பவனின் உளவியல் சிக்கல்களையும் பாலியல் சார்ந்த அடையாளக் குழப்பங்களையும் எளிமையான திரைமொழியில் உரையாடியது. இந்த திரைப்படம் எட்டு பிரிவுகளில் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தது. சிறுவனின் தாயாகவும் போதைப் பழக்கத்தில் சிக்கியிருந்த பெண்ணாகவும் நடித்திருந்த Naomie Harris-ன் பங்களிப்பு அபாரமானதாக இருந்தது. சிறந்த துணை நடிகைக்கான நாமினேஷன் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தாலும் விருதை வெல்லவில்லை.
***
1950-ல் வெளிவந்த All About Eve மற்றும் 1997-ல் வெளியான 'டைட்டானிக்' ஆகிய திரைப்படங்களுக்கு ஈடாக, 14 பிரிவுகளில் நாமினேஷன் ஆன வரலாற்று சாதனையைப் படைத்திருந்தது லா லா லேண்ட். சிறந்த இயக்குநர். சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகை உள்ளிட்டு ஆறு பிரிவுகளில் வெற்றி பெற்றது.
அடிப்படையில் இதுவோர் எளிய காதல் கதை. அபாரமான இசையும் பாடல்களும் காதலுணர்வு பொங்கி வழியும் திரைக்கதையும் இந்தப் படத்தின் காண்பனுபவத்தை உற்சாமாக்குகிறது. குறிப்பாக இதன் உச்சகக்காட்சி உருவாக்கப்பட்ட விதம் அபாரமானது. இதன் நாயகன் வெள்ளையினத்தவனாக இருந்தாலும் ஜாஸ் இசையை விதந்தோடியபடியே இருக்கிறான். ஜாஸ் இசை ஆப்ரிக்க அமெரிக்கர்கள் உருவாக்கிய விளிம்பு நிலைச் சமூகத்தின் முக்கியமான கலை அடையாளம் என்பதையும் கவனிக்கலாம். இந்த திரைப்படத்திற்காக 'சிறந்த இயக்குநர்' விருதைப் பெற்ற, 32 வயதான Damien Chazelle, இந்தப் பிரிவில் விருது பெற்றவர்களிடையே குறைந்த வயதுள்ளவராவார்.
சிறந்த திரைப்படத்திற்கான விருது மெல் கிப்சன் இயக்கிய Hacksaw Ridge-க்கு கிடைக்கலாம் என்று நான் அனுமானித்திருந்தேன். போர் திரைப்படமான இது, ஹாலிவுட் திரைப்படங்களின் வழக்கமான போக்கைப் போல அமெரிக்க ஆதரவை அடிநாதமாக கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவிற்கும் ஜப்பானிற்கும் நிகழும் போர் ஒன்றில் ஜப்பானியர்களை மூர்க்கமானவர்களாகவும் தந்திரக்காரர்களாகவும் இத்திரைப்படம் சித்தரித்திருந்தது.
இதற்கு மாறாக அமெரிக்க தரப்பில் போருக்குச் செல்லும் நாயகன் அமைதியின் அடையாளமாகத் திகழ்கிறான். இந்த அரசியலைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இதுவொரு சிறந்த திரைப்படமே.. தன்னுடைய சிறுவயது கசப்பான அனுபவங்களால் இனி தன் வாழ்நாளில் எந்நாளும் வன்முறையைக் கைக்கொள்ள மாட்டேன் என்கிற உறுதியை போர்க்களத்திலும் கடைப்பிடிக்கும் ஒருவரைப் பற்றிய திரைப்படம். Desmond Doss என்கிற நபரின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவானது. போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிய வீரர்கள் பலரை தனியொருவராக இவர் காப்பாற்றினார்.
சிறந்த அனிமேஷன் திரைப்படமாக 'ஜூடோபியா' தேர்வானது. இனப்பாகுபாடுகளும் வன்முறையும் அல்லாத ஒரு கற்பனை உலகம் சாத்தியமானால் அது எத்தனை இனிமையானதாக இருக்கும் என்பதை சுவாரஸ்மாக விவரிக்கிறது. ஆனால் இதை விடவும் 'மோனா' திரைப்படம் எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. கருப்பினச் சிறுமியின் கடல் தாண்டும் சாகசங்களின் மூலம் விரியும் இந்த திரைப்படம், இயற்கையின் மிக ஆதாரமான இதயமாக விளங்கும் பசுமையை மனித குலம் மெல்ல சுரண்டிக் கொண்டு எத்தனை அட்டூழியங்களை நிகழ்த்துகிறது என்பதை மறைமுகமான பொருளில் இடித்துரைக்கிறது.
***
சிறந்த துணை நடிகைக்கான விருதை கருப்பினப் பெண்ணான 'வயோலா டேவிஸ்' பெற்றார். 'பென்சஸ்' திரைப்படத்தில் அபாரமாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு கிடைத்தது. மூன்றாவது முறையாக நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் அவர் விருதை இதுவே முதல் முறை. மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் தனது ஏற்புரையை வழங்கினார். " மிகப்பெரும் கனவு கண்டு, அந்தக் கனவுகள் நனவாவதற்கு முன்னரே மரித்துப்போன மக்களின் உடல்களில் மிச்சம் இருக்கும் அந்தக் கதைகளையே நான் சொல்ல விரும்புகிறேன். மக்களின் கதைகளைத் தோண்டி எடுங்கள்" என்கிற வேண்டுகோளை படைப்பாளிகள் முன் வைத்தார்.

'Loving' திரைப்படத்தில் அபாரமாக நடித்திருந்த Ruth Negga-விற்கு 'சிறந்த துணை நடிகை' விருது கிடைக்கக்கூடும் என்கிற என் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. போலவே சிறந்த நடிருக்கான விருது 'பென்சஸ்' திரைப்படத்திற்காக டென்ஷல் வாஷிங்டனுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் 'மான்செஸ்டர் பை த சீ ' திரைப்படத்திற்காக கேஸே அப்லெக் அந்த விருதை தட்டிச்சென்றது நியாயமான தேர்வே.
Garth Davis இயக்கிய 'lion' திரைப்படம் ஏறத்தாழ இந்திய திரைப்படம் என்று சொல்லி விடலாம். அந்த அளவிற்கு படத்தின் முதற்பகுதி காட்சிகள் பெரும்பாலும் இந்திய நிலப்பகுதியில் படமாக்கப்பட்டிருந்தன. 'ஸ்லம்டாக் மில்லியனர்' பாணியில் ஆஸ்கர் விருதை குறிவைத்து எடுக்கப்பட்டதோ என்கிற சந்தேகம் எழுந்தாலும் (தேவ் பட்டேல்தான் இதிலும் பிரதான பாத்திரத்தை ஏற்றிருந்தார்) இது அபாரமாக உருவாக்கப்பட்ட நெகிழ்வான திரைப்படம்.
வெளிநாட்டவரால் தத்தெடுக்கப்பட்ட ஓர் இளைஞன், தன் குடும்பத்தை பிரிந்த துயர் தாங்க முடியாமல் பல மாதங்களாக தேடி பின்பு அவர்களை கண்டடையும் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதை. மிகையுணர்வுகளால் அல்லாமல் இயல்பான தொனியில் உருவாக்கப்பட்டது பாராட்டத்தக்கது. ஆறு பிரிவுகளில் நாமினேஷன் ஆகியிருந்தாலும் எந்தப் பிரிவிலும் விருதை வெல்லவில்லை. 'சிறந்த துணை நடிகருக்கான' விருதை தேவ் பட்டேல் வெல்லக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடையே இருந்தது. வளர்ப்புத் தாயாக நடித்திருந்த நிகோல் கிட்மன் தனது அபாரமான நடிப்பைத் தந்திருந்தார். இதில் நடித்த சிறுவனான சன்னி பவார், விருது விழாவில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தான்.
இதர பிரிவுகளில் இன்னமும் பல விருதுகள் வழங்கப்பட்டிருந்தாலும் இந்த வருட தேர்வுகளில் கருப்பினத்தவர்களின் அங்கீகாரம் சில விருதுகளால் நியாயமான முறையில் சாத்தியமாகத் துவங்கியவதை குறிப்பிடத்தகுந்த மாற்றமாகவும் நல்ல அடையாளமாகவும் கருத வேண்டியிருக்கிறது. இனவெறி பாகுபாட்டு அரசியலும் அது சார்ந்த வன்முறைகளும் பெருகுவதை கலை சார்ந்த மனங்களாலும் நுகர்வுகளாலும்தான் மட்டுப்படுத்த முடியும். இதுவொரு மிகையான நம்பிக்கையாக இருந்தாலும் இருள் மட்டுமே நிறைந்திருக்கும் வெற்றிடத்தில் ஒரு துளி வெளிச்சம் ஏற்பட்டாலும் அது மகிழ்ச்சிதானே?
suresh kannan