Friday, April 15, 2016

எண்பதுகளின் தமிழ் சினிமா : பொற்காலத்தின் நாயகிகள்








இதுவரையான தமிழ் சினிமா காலக்கட்டத்தின் பொற்காலம் எதுவென்று கேட்டால் சந்தேகமில்லாமல் அது எண்பதுகள்தான். வழக்கமான வெகுசன திரைப்படங்களிலிருந்து விலகி மாற்று சினிமா கலாசாரம் என்பது பெரும்பாலும் மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த பாணி திரைப்படங்கள் மெல்ல தமிழ் சினிமாவிலும் படரத் துவங்கி தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலை அடிக்கத் துவங்கியது எண்பதுகளில்தான்.  மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா, பாரதிராஜா போன்றவர்கள் தங்களால் இயன்ற சாத்தியங்களின் மூலம் இந்தப் புதிய  அலையை உருவாக்கினார்கள். இன்னொரு புறம் இளையராஜாவின் தன்னுடைய ஆட்சிக்காலத்தின் உச்சியில் இருந்தார். அவருடைய பின்னணி இசையை நம்பியே பல திரைப்படங்கள் அதற்கான மெளன இடைவெளிகளுடன் உருவாகின. இந்தப் புதிய அலை தோன்றிய வேகத்திலேயே மறைந்து வெகுசன திரைப்படங்களில் மூழ்கிப் போனது ஒரு கலாசார சோகம்.

இந்தக் காலக்கட்டத்தில் தமிழ் சினிமா கதாநாயகிகளின் சித்திரம் என்பது எவ்வாறு இருந்தது என்பதை அந்தக் காலக்கட்டத்தின் பின்னணியுடன் இந்தக் கட்டுரையில் பார்க்க முயல்வோம்.

மேற்கத்திய நாடுகளில் முழங்கத் துவங்கியிருந்த பெண்ணுரிமைக் குரல்களின் தாக்கம் இந்தியாவிலும் மெல்ல எதிரொலிக்கத் துவங்கியது. பெரும்பாலும் உலகமெங்கிலும் பெண்ணிய இயக்கத்தின் இரண்டாவது அலை அடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. பெண்களுக்கான சமூக உரிமை, சுதந்திரம், பால் வேறுபாடுகளின் மீதான ஏற்றத் தாழ்வுகள், அணுகுமுறைகள், பாலியல்  வன்முறை, குடும்ப வன்முறை போன்றவற்றின் மீதான விவாதங்கள் மெல்ல நிலைபெறத் துவங்கின. நவீன இந்தியாவிலும் அது சார்ந்த உரையாடல்களும் போராட்டங்களும் கூர்மையடையத் துவங்கின. அப்போதைய தேசிய அரசியலில் இந்திரா காந்தி என்னும் பிம்பம் வலுவானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் நிலைபெற்றது இந்தியப் பெண்களுக்கான ஒரு முன்னுதாரணமாகவும் உத்வேகம் தரும் மேற்கோளாகவும் அமைந்தது. கூட்டுக்குடும்பங்கள் சிதறி தனிக்குடும்பங்கள் பெருகும் சூழ்நிலை ஏற்பட்ட போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள பெண்களும் வேலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது. அதுவரை பொருளாதார காரணத்திற்காக ஆண்களை சார்ந்திருந்த பெண்ணுலகம் அதிலிருந்து விடுபடத் துவங்கியுடன் தன்னிலை உணர்ந்து தங்களுக்கான சுதந்திரத்தையும் உரிமையையும் தன்னிச்சையாக தேடியது.

உலக அளவிலான இந்தப் போக்கு தமிழ் திரையுலகிலும் எதிரொலித்தது. தங்களுக்கான எல்லையின் சாத்தியத்திற்குள் தங்களை நிறுவிக் கொண்ட பானுமதி, சாவித்திரி போன்றோர் ஏற்கெனவே இருந்தாலும் அவர்களால் ஆண்மையப் படைப்புகளின் ஒரு பகுதியாக மட்டுமே  அப்போது இருக்க முடிந்தது. ஆண் பாத்திரங்களை குறிப்பாக நாயகர்களின் பிம்பத்தை நிலைநிறுத்தும் வழக்கமான திரைக்கதைகளின் இடையே பெண் பாத்திரங்களை பிரதானமாகவும் மையப்படுத்தியும் உருவான திரைக்கதைகள், அவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தும் உரையாடல்கள், பெண்களின் பிரத்யேகமான பிரச்சினைகளை அலசும் படைப்புகள் ஆகியவை மெல்ல வலுப்பெறத் துவங்கியது எண்பதுகளில்தான்.

***

தமிழ் திரையுலகில் ஏற்கெனவே தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர்களின் வரிசையில் புதிதாக இணைந்த எண்பதுகளின் தமிழ் சினிமா நாயகிகளின் தோராயமான பட்டியலை ஒரு முறை நினைவுகூர்வோம். லட்சுமி, ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி,  ரதி, சுமலதா, ரேவதி, ஷோபா, ராதிகா, சுஹாசினி, சரிதா, பானுப்பிரியா, சிலக் ஸ்மிதா, அம்பிகா, ராதா, நதியா, மாதவி, தீபா, ஜெயபிரதா, ஸ்வப்னா, பூர்ணிமா, விஜி, நளினி, ஊர்வசி, அர்ச்சனா, ஜீவிதா, சீதா, அமலா, ரேகா, கெளதமி, நிரோஷா,பல்லவி, குஷ்பு.

நாற்பது வயதைக் கடந்த பார்வையாளர்களுக்கு இந்தப் பெயர் ஒவ்வொன்றுமே அவரவர்களுக்கான nostalgia மனப்பதிவுகளை நினைவுப்படுத்துகிறதுதானே?

''கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு கர்வமா இருக்கலாம், கர்ப்பமாத்தான் இருக்கக்கூடாது' என்பது போன்ற அபத்தம் கலந்த கலகக்குரல்கள் ஏற்கெனவே ஒலித்திருந்தாலும் பெண்ணுலகின் அக/புறப் பிரச்சினைகளைப் பற்றி உரையாடும் திரைப்படங்கள் வெளிவரத்துவங்கியது இந்தக் காலக்கட்டத்தில்தான். ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்களால் பெண்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்திருந்ததாலும் அவை பெண் பார்வையாளர்களை கவர்வதற்கான ஓர் உத்தியாகவே இருந்தது. பெண் பாத்திரங்களை மையமாகக் கொண்டு உருவாகிய திரைப்படங்கள் கே.பாலச்சந்தரின் வருகைக்குப் பிறகுதான் கூர்மையடைந்தது எனலாம். அவரால் கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான நடிகைகளில் ஒருவர் சரிதா.

மிகுந்த நுண்ணுணர்வும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் கொண்ட ஒரு பெண் தன்னைச் சுற்றி நிகழும் அற்பமான நிகழ்வுகளை தாங்கிக் கொள்ள முடியாமல் வெடிப்பதும் அதனால் ஏற்படும் மனச்சிக்கலும் கொண்ட ஒரு சிக்கலான பாத்திரத்தை 'அக்னிசாட்சி' திரைப்படத்தின் மூலம் அற்புதமான வெளிப்படுத்தியிருந்தார். சிவகுமார் அதில் நாயகனாக இருந்தாலும் திரைக்கதை சரிதாவை மையப்படுத்தியே இருந்தது பாலச்சந்தரின் துணிச்சலான முயற்சிக்கு எடுத்துக்காட்டு. அதைப் போலவே தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை, அச்சமில்லை போன்ற அரசியல் உரையாடல் படங்களிலும் சரிதாவின் நடிப்பு அபாரமானதாக இருந்தது. ஆணாதிக்க சமூகத்தினால் பாதிக்கப்பட்ட  சில பெண்கள் இணைந்து தங்களுக்கான சிறு உலகத்தை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் விதத்தை உணர்ச்சிகரமாக பதிவு செய்தது 'கல்யாண அகதிகள்'' எனும் திரைப்படம். 'அம்முலு' என்கிற சுவாரசியமான பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் சரிதா. எண்பதுகளின் காலக்கட்ட சாதனை நாயகி எனும் பட்டத்தை சரிதாவிற்கு தயங்காமல் அளிக்கலாம்.

இந்தக் காலக்கட்டத்தின் இன்னொரு அற்புதமான கண்டுபிடிப்பு சுஹாசினி. ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராக பணிபுரிந்து கொண்டிருந்த ஹாசினியை மிகுந்த வற்புறுத்தலுக்குப் பின் திரைக்கு முன்னாக அழைத்து வந்தவர் இயக்குநர் மகேந்திரன். அன்பிற்காக ஏங்கும் ஒரு துடுக்குத்தனமான பெண் பாத்திரத்தை முதல் திரைப்படத்திலேயே அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தார் சுஹாசினி.பெண்ணுரிமை பேசும் பாத்திரம்  என்றால் அதில் தயக்கமின்றி இவரை நடிக்க வைக்கலாம் என்கிற அளவிற்கு தமது தொடர்ச்சியான கண்ணியமான பாத்திரங்களின் அழுத்தமான முத்திரையை ஏற்படுத்தியிருந்தார். 'மனதில் உறுதி  வேண்டும்' ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஒரு பெண் x நான்கு நண்பர்கள் என்கிற பாணியில் பிந்தைய காலக்கட்டத்தில் வெளிவந்த பல திரைப்படங்களுக்கு முன்னோடி திரைப்படம் என்பது 'பாலைவனச் சோலை'. ராபர்ட்-ராஜசேகர் என்கிற புதுமுக இயக்குநர்களின் இயல்பான திரைக்கதையால் இத்திரைப்படம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. சொல்லப்படாமலேயே  முடிந்து போகும் ஒரு காதலை மரணத்தால் கடக்கும் ஒரு நடுத்தர வர்க்க பெண்ணின் பாத்திரத்தை மிக இயல்பாக கையாண்டிருந்தார் சுஹாசினி. 'கோபுரங்கள் சாய்வதில்லை' எனும் திரைப்படத்தில் அவலட்சணமான தோற்றத்தை துணிந்து ஏற்றிருந்தார். இந்தக் காலக்கட்டத்தின் சிறப்பான நடிகைகளுள் சுஹாசினி தனித்த அடையாளத்துடன் விளங்கினார்.

இந்தக் காலக்கட்டம் அறிமுகப்படுத்திய இன்னொரு சிறந்த நடிகை ரேவதி. 1983-ல் வெளியான 'மண்வாசனை' திரைப்படம் மூலம் அறிமுகமான ரேவதி எண்பதுகளில் குறுகிய காலத்திலேயே ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். பெண்ணுரிமைக் குரலை உயர்த்தி முழங்கின திரைப்படங்களுள் ஒன்று 'புதுமைப் பெண்'. இதே காலக்கட்டத்தில் இவர் நடித்த மெளனராகம் திரைப்படத்தில் துடுக்குத்தனமான பெண்ணாகவும் காதலனை மனதில் சுமந்து கொண்டு விரும்பாத திருமணத்தில் சிக்கித் தவிக்கும் பெண்ணாகவுமான பாத்திரத்தை திறம்பட கையாண்டதை யாராலும் மறக்க முடியாது. மிக கண்ணியமான பாத்திரங்களை தொடர்ந்து நடித்து தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்தார்.

எண்பதுகளின் காலக்கட்டத்திலேயே வாடகைத் தாய் எனும் முற்போக்கான விஷயத்தின் சிக்கல்களை வைத்து உருவான படம் 'அவன் அவள் அது'.  கருவுற இயலாத இன்னொரு பெண்ணிற்காக வாடகைத்தாய் பாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரீப்ரியா. பொதுவாக கவர்ச்சி பிம்பமாகவே உபயோகப்படுத்தப்பட்ட இவருக்குள் இருந்த அற்புதமான நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்தது 1978-ல் வெளிவந்த 'அவள் அப்படித்தான்'. பெண்மையப் படைப்பான இத்திரைப்படத்தில் மனச்சிக்கலுடைய  மஞ்சு என்கிற அற்புதமான பாத்திரத்தை இவர் சிறப்பாக கையாண்டிருந்தார்.

ஆணின் காதலுக்காக பெருமூச்செறிந்து ஏங்கித் தவிக்கும் நாயகிகள் உலா வந்து கொண்டிருந்த மிகையுலகின் காலக்கட்டத்திலிருந்து விலகி ஒரு பெண்ணின் காதலுக்காக ஓர் இளைஞன் உருகி மன்றாடும் திரைக்கதையுடன் வெளிவந்த 'ஒருதலை ராகம்' நவீன அலையை தமிழ் சினிமாவில் தோற்றுவித்த ஒரு முக்கியமான திரைப்படம். காதல் குறித்த ஒரு நவீன காலத்து இளைஞனின் ஏக்கத்தையும் தாழ்வுணர்வையும் சோகத்தையும் இயல்பாக வெளிப்படுத்திய திரைப்படம் அது. நடைமுறைச் சிக்கல்கள் கருதி ஒரு பெண் நிராகரிக்கும் காதலானது எவ்வாறு உடைந்து போகிறது என்கிற அளவில் பெண்ணுக்கான முக்கியத்துவத்தை நிறுவிய திரைப்படமாக இதை கருதலாம்.

பொதுவாக பாக்யராஜின் திரைப்படங்கள் அசட்டுத்தனமான மெலிதான ஆபாசமுமம் கூடிய நகைச்சுவையை கொண்டிருப்பவையாக கருதப்பட்டாலும் அவைகளில் பெண் பாத்திரங்கள் சாத்தியமான அளவில் வலிமையாக உருவாகப்பட்ட விதத்திற்காகவே கவனத்தில் கொள்ளக்கூடியவை. மனைவியின் புறஅழகை கருத்தில் கொண்டு அவரை ஒதுக்கும் ஓர் அசட்டுக் கணவனின் சிக்கல்களை யதார்த்த நகைச்சுவையுடன் சொன்ன திரைப்படம் 'சின்னவீடு'. ஊர்வசியின் சகோதரி கல்பனா இந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.  தாலி கட்டிய கணவனுக்கும் காதலனுக்கும் இடையேயான ஒரு பெண்ணின் மனப்போராட்டத்தை அற்புதமான சொன்ன திரைப்படம் 'அந்த ஏழு நாட்கள்' இந்த தவிப்பை அம்பிகா நன்றாக கையாண்டிருந்தார். இதே காலக்கட்டத்தில் வெளியான 'இன்று போய் நாளை வா' என்கிற திரைப்படம் காதலைப் பெறுவதற்கான ஆண்கள் செய்யும் அசட்டுத்தனமான முயற்சிகளையும் பொய்யான வாக்குறுதிகளையும் நகைச்சுவையாகச் சொன்னது. இதில் ராதிகாவின் வெள்ளந்தியான நடிப்பு குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. இதே ராதிகா 'மீண்டும் ஒரு காதல் கதை' என்கிற அற்புதமான படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மனநலம் பிசகியவர்களுக்கு இடையேயான காதலை விவரித்த திரைப்படம் இது. இந்தக் காலக்கட்டத்தின் மிகச் சிறப்பான நடிகைகளுள் ஒருவராக ராதிகா இருந்தார்.

ஏராளமான வெகுசன திரைப்படங்களில் நாயகியாக ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த ஸ்ரீதேவி, மறதிக் கோளாறினால் குழந்தைப் பருவத்து உடல்மொழியுடன் நடித்து அசத்திய 'மூன்றாம் பிறை' வெளிவந்தது எண்பதுகளின் காலக்கட்டத்தில்தான்.

அம்பிகாவும் அவருடைய சகோதரியான ராதாவும் எண்பதுகளில் அதிகமான வெகுசன திரைப்படங்களில் நடித்த நாயகிகள் எனலாம். என்றாலும் ''முதல் மரியாதை' எனும் திரைப்படத்தில் மிக வித்தியாசமானதொரு ராதாவை நமக்கு அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

இந்தக் காலக்கட்டத்தில் தோன்றிய முக்கியமான நட்சத்திரம் என்று சில்க் ஸ்மிதாவைச் சொல்லலாம். விஜயலட்சுமி என்கிற பெயரில் ஆந்திரத்தில் இருந்த வந்த ஸ்மிதா  'வண்டிச்சக்கரம்' எனும் 1980-ல் வெளியான திரைப்படம் மூலம் தமிழிற்கு அறிமுகமானார். அத்திரைப்படத்தின் பாத்திரப் பெயரான 'சிலுக்கு' என்பதே அவருடைய பெயராக நிலைத்து விட்டது. அதற்குப் பிறகு ஏறத்தாழ பத்து, பதினைந்து வருடங்களுக்கு அவர் இல்லாத தென்னிந்திய திரைப்படங்களே இல்லை எனலாம். சினிமாவின் வணிகத்திற்கு ஆண் நாயகர்களே பிரதான காரணமாக சுட்டிக் காட்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அந்த நிலைமையை தலைகீழாக மாற்றியமைத்த பெண் நடிகையாக ஸ்மிதாவை சுட்டிக் காட்ட வேண்டும். இவரின் தற்கொலை சம்பவம் மிகுந்த துரதிர்ஷ்டமானது. இதே காலக்கட்டத்தில் உருவான இன்னொரு அற்புதமான நடிகையான ஷோபாவின் இழப்பும் ஈடுசெய்ய முடியாதது.

அதுவரை பெரும்பாலும் நகைச்சுவை நடிகையாக மட்டுமே அறியப்பட்டிருந்த மனோரமாவின் பிம்பத்தை இந்தக் காலக்கட்டத்தில் வெளியான 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படம் மாற்றியமைத்தது. இத்திரைப்படத்தின் மூலமாக வெளிப்பட்ட அற்புதமான நடிப்பின் மூலம் அவரை குணச்சித்திர நடிகையாக்கின உருமாற்றம் பாலச்சந்தரால் நிகழ்ந்தது. ஆண் நாயகர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் இருக்க முடியும் என்கிற கருத்தை மாற்றியமைத்தது 'நட்சத்திரம்' எனும்  திரைப்படம். இதில் நடிகையாக நடித்தவரின் அபிமான ரசிகராக நாயகர் நடித்திருப்பார். இந்தக் காலக்கட்டத்தில் அறிமுகமான குஷ்பு குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய புகழை அடைந்தார். அவருக்காக ரசிகர்கள் கோயில் கட்டும் அளவிற்கு இவர் மீதுள்ள அபிமானம் கண்மூடித்தனமாக வளர்ந்தது. மூடத்தனம்தான் என்றாலும் வேறெந்த ஆண் நாயகரும் அடையாத பெருமையை ஒரு நடிகை பெற்றது கவனிக்கத்தக்கது. இதைப் போலவே இதே காலக்கட்டத்தில் அறிமுகமான 'நதியா' பெண் ரசிகர்களிடையேயும் பெரிய வரவேற்பைப் பெற்றார். அவரது பெயரால் அமைந்த பாணி அலங்காரங்களும் அலங்காரப் பொருட்களும் மக்களிடையே பிரபலமடைந்தன.

பெண்ணுரிமை சார்ந்த அழுத்தமான அடையாளங்களுடன் கூடிய பாத்திரத்தை துவக்கத்திலிருந்தே ஏற்று நடித்தவர் சுஜாதா. இந்தக் காலக்கட்டத்தில் இவர் நடித்த 'விதி' என்னும் திரைப்படம் அதன் உரையாடல்களாலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த உரையாடல்களை மக்கள் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தார்கள். காதலனால் ஏமாற்றப்பட்ட ஓர் இளம் பெண்ணுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆவேசமாகவும் விவேகமாகவும் வழக்காடும் வழக்கறிஞர் பாத்திரத்தை சுஜாதா சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

இடஒதுக்கீடுகளில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை மையமாக வைத்து உருவான 'ஒரே ஒரு கிராமத்திலே' அதன் பரபரப்பு சர்ச்சை காரணமாக அதிகமாக கவனிக்கப்பட்டது. இதன் மையப்பாத்திரத்தை நடிகை லட்சுமி திறமையாக கையாண்டிருந்தார். இந்தக் காலக்கட்டத்தில் இவர் நடித்து வெளிவந்த 'சிறை' அதன் கதையமைப்பிற்காகவும் திறமையாக இயக்கத்திற்காகவும் லட்சுமியின் உணர்ச்சிகரமான நடிப்பிற்காகவும் அதிகம் பாராட்டப்பட்டது. அனுராதா ரமணன் எழுதிய நாவலையொட்டி உருவான திரைப்படம் இது.

பாலச்சந்தரின் நீட்சியாக ஆனால் பாலச்சந்தரை விட அதிக நாடகத்தனத்துடன் திரைப்படங்களை உருவாக்கியவர் விசு என்றாலும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள், குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல் ஆகியவற்றை மையப்படுத்தி எடுத்தவர் என்கிற வகையில் அவரின் பங்களிப்பு முக்கியமானது. இந்தக் காலக்கட்டத்தில் வந்த 'மணல் கயிறு'  திருமணத்திற்காக  ஆண்கள் போடும் நிபந்தனைகளான வரதட்சணை உள்ளிட்ட பலவற்றில் உள்ள அநீதிகளை நகைச்சுவையுடன் விவரித்தது. சுஹாசினி, ரேவதி, ராதிகா வரிசையில் இன்னொரு அற்புதமான நடிகை அர்ச்சனா. ஒரு வீட்டைக் கட்டுவதென்பது ஆண்களின் கம்பீரமான பொறுப்பாக கருதப்படும் சூழலில் நடுத்தரவர்க்க பெண் தனக்கான வீட்டைக் கட்டுவதற்காக படும் இன்னல்களை பெண் பாத்திரத்தை மையப்படுத்தி பதிவாகிய திரைப்படம் 'வீடு'. பாலுமகேந்திரா உருவாக்கிய உன்னதமான படைப்புகளில் ஒன்று.

1936-ம் ஆண்டிலேயே தமிழின் முதல் பெண் இயக்குநர் (டி.பி.ராஜலட்சுமி) உருவாகி விட்டாலும் தமிழ்த் திரையில் பெண் இயக்குநர்களின் குறைவுதான். பெண்களின் அகவுலகுப் போராட்டங்களை, பிரச்சினைகளை ஆண் படைப்பாளர்களை விட அவர்களால்தான் துல்லியமாக உருவாக்க முடியும். ஆனால் வணிகச்சந்தையின் சூழல் அது போன்ற படைப்புகளுக்கு இணக்கமானதாக இல்லை என்பது ஓர் உபசோகம். விஜயநிர்மலா, ஜெயதேவி, பி.ஆர்.விஜயலட்சுமி, லட்சுமி, ரேவதி, சுஹாசினி, ஸ்ரீப்ரியா, ஜெயசித்ரா, ஜானகி விஸ்வநாதன், ப்ரியா, மதுமிதா, நந்தினி போன்றவர்கள் உள்ளிட்ட பெண் இயக்குநர் பட்டியல் இருந்தாலும் பெண்ணியம் சார்ந்த ஆழமான திரைப்படங்கள் வெளிவர முடியாததற்கு ஆணாதிக்கச் சூழல் ஒரு பிரதானமான காரணம்.

ஒட்டுமொத்த பார்வையில் எண்பதுகளின் தமிழ் திரையுலகமும் நாயகிகளின் கதாபாத்திர சித்தரிப்புகளும் குறிப்பிடத்தகுந்த அளவில் கவனத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. அது மெல்ல வளர்ந்து பெருக வேண்டிய இயல்பான போக்கிலிருந்து திரும்பி அடுத்தடுத்த காலக்கட்டங்களில் வழக்கமான கவர்ச்சி பிம்பங்களாகவும் ஆண்களால் காப்பாற்றப்பட வேண்டிய அபலைகளாகவும் நாயகிகள் மாற வேண்டிய சூழல் சோகத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் சமகாலத்து நாயகிகள் பெரும்பாலும் குழந்தைத்தனமாக சித்தரிக்கப்படுவது திரையுலகம் இன்னமும் ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வெளிவரவில்லை என்கிற நடைமுறை உண்மையை பிரதிபலிக்கிறது. 

***

நாயகிகளை முன்னிலைப்படுத்தும் சில திரைப்படங்கள் இந்தக் காலக்கட்டத்தில் வெளியாகியிருந்தாலும், தமிழ் சினிமாவின் மாற்று முயற்சிகளால் புதிய அலை உருவாகத் துவங்கியிருந்தாலும்  அவற்றின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்தது. வழக்கம் போல வெகுசன ரசனைக்கு தீனி போடும், வணிக நோக்குத்  திரைப்படங்களின் ஆதிக்கமே எண்பதுகளிலும் நிலவியது. கமல்ஹாசன் ஏற்கெனவே ஒரு வெற்றிகரமான நாயகனாக இந்தச் சமயத்தில் நிலைபெற்று விட்டார். அதுவரை எதிர்நாயகனாக சிறப்புற நடித்துக் கொண்டிருந்த  ரஜினிகாந்த்தும் நாயகனாக  மெல்ல உருவாகிக் கொண்டு வந்தார். எனவே இந்த இருவரின் திரைப்படங்களின் ஆதிக்கமே எண்பதுகளில் இருந்தது. மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோர் உருவாக்கிய புதிய அலையை சகலகலா வல்லவன், முரட்டுக் காளை போன்ற இவர்களின் திரைப்படங்களே குரூரமாக கலைத்துப் போட்டது ஒரு கலாசார பேரிடராக ஆக்கியதை திரை விமர்சகர்கள் மறக்க முடியாத புகாராகவே தொடர்ந்து பதிவு செய்வார்கள்.

வணிக நோக்குத் திரைப்படங்களின் ஆதிக்கம் இருந்ததால்  அந்த திரைப்படங்களின் வார்ப்பிற்கேற்பவே நாயகிகளும் அமைய வைக்கப்பட்டார்கள். திரைப்படங்களின் கவர்ச்சிக்காகவும் ஹீரோயின் என்கிற அம்சம் தவிர்க்க முடியாதது என்கிற காரணத்திற்காகவுமே இத்திரைப்படங்களில் இவர்கள் இருந்தார்கள். என்றாலும் இந்த வழக்கமான போக்கிற்கு இடையேயும் தன்னுடைய தனித்தன்மையின் வசீகரத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்த நாயகிகளும் இருக்கத்தான் செய்தார்கள். நாயகர்களின் ஆதிக்கத்தையும் மீறி திரைப்படங்களில் ஜொலித்தார்கள். இவர்களுக்கென்று பிரத்யேமான வணிகச் சந்தையும் ரசிகர் வட்டமும் இருந்தது.

இந்த வரிசையில் மிக முக்கியமானவராக ஸ்ரீதேவியைச் சொல்லலாம். எண்பதுகளில் இவர் இந்திக்குச் சென்று அங்கேயும் வெற்றிக் கொடி நாட்டியவராக இருந்தாலும் இந்தக் காலக்கட்டத்தில் அவர் நடித்த ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு ஆகிய திரைப்படங்களில் தமது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். 'இந்தியத் திரையிலேயே மிக அழகான முகவெட்டைக் கொண்டவர்' என்று மேற்கு வங்க இயக்குநர் சத்யஜித்ரேயால் வர்ணிக்கப்பட்ட பெருமை ஜெயப்பிரதாவிற்கு உண்டு. அதில் பெரும்பாலும் உண்மையும் உண்டு. ரஜினியையும் கமலையும் தாண்டி 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தை மறக்கமுடியாதபடி செய்ததில் இவருக்கு அதிக பங்குண்டு. மொழிமாற்றப் படமென்றாலும் 'சலங்கை ஒலி' திரைப்படத்தில் இவரது கண்ணியமான நடிப்பு மிகச் சிறப்பானது.

இவரைப் போலவே மிக வனப்பான நாயகி  என்று பானுப்பிரியாவைச் சொல்லலாம். அந்தக் காலக்கட்டத்தின் பெரும்பாலான துணிக்கடை காலண்டர்களில் இவரது விதவிதமான தோற்றங்களில் மயங்கியவர் பலருண்டு. இவர் அறிமுகமான 'மெல்லப் பேசுங்கள்' 1983-ல் வெளியாகியது. இந்தக் காலக்கட்டத்தில் இவர்  நடித்தது பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில்தான் என்றாலும் இதன் இறுதியில் 'ஆராரோ ஆரிரரோ' படத்தின் மூலமாக தமிழிற்கு திரும்பி வந்து அதற்குப் பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்தார். அழகிய தோற்றத்தைத் தாண்டியும் நடிப்புத் திறமையும் இவருக்கு இருந்தது. இவரைப் போலவே மாதவியும் வசீகரமான தோற்றத்தைக் கொண்டவர். குறிப்பாக அவரது கண்களின் அழகிற்கே பிரத்யேகமான ரசிகர் கூட்டமிருந்தது.

ஒரு நடிகைக்கே அதிக பெண் ரசிகைகள் இருந்தார்கள் என்றால் அது நதியாவிற்கு மட்டுமே சாத்தியமானது என கருதுகிறேன். 1985-ல் இவர் தமிழில் அறிமுகமாகிய 'பூவே பூச்சூடவா' வெளிவந்த போது தமிழக இளம்பெண்களின் கூட்டம் இவரை வாஞ்சையுடன் தங்களின் கையில் ஏந்திக் கொண்டது. இவரது உடைகளும் அலங்காரமும் அணிகலன்களும் அவர்களது பேசுபொருளாகவும் விருப்பத்துடன் பின்பற்றும் விஷயங்களாக மாறின. கவர்ச்சிப் பாதையின் பக்கம் போகாமல் தனது கண்ணியமான தோற்றத்திற்கு  ஏற்ப திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நதியா. இன்றும் கூட தனது இளமைத்தோற்றத்தை அவர் பெரிதும் இழக்காமல் பாதுகாப்பது ஓர் ஆச்சரியமான விஷயம்.

எண்பதுகளின் காலக்கட்டத்தில் அதிக திரைப்படங்களில்  நாயகிகளாக நடித்தவர்களாக அம்பிகா, ராதா ஆகிய சகோதரிகளைச் சொல்லலாம். இருவருமே வசீகரமான தோற்றத்தைக் கொண்டவர்களாலும் வெகுசன திரைப்படங்களுகளின் இலக்கணங்களுக்கு ஏற்ற திறமைகளையும் கொண்டவர்களாக இருந்தார்கள். ஆனால் வெறுமனே அழகுப் பதுமைகளாக அல்லாமல் தங்களின் நடிப்புத் திறமையையும் அவவப்போது நிரூபித்தார்கள். படிக்காதவன் திரைப்படத்தில் அம்பிகா கர்ப்பிணி பெண்ணாக நடித்து  ரஜினியை ஏமாற்றும் காட்சியை எவராலும் மறக்க முடியாது. 'எங்கேயோ கேட்ட குரல்' 'வாழ்க்கை' போன்ற திரைப்படங்களில் இளமைக் காலத்திலேயே முதிர்ச்சியான தோற்றத்தில் நடித்த துணிவு இவருக்கு இருந்தது. ராதா அறிமுகமான 'அலைகள்  ஓய்வதில்லை' 1981-ல் வெளியாக அதன் சர்ச்சையான உச்சக்காட்சிக்காகவே மிகுந்த பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. ராதாவின் அசாத்தியமான அழகு தமிழக இளைஞர்களின் உறக்கத்தை கலைத்துச் சென்றது. வெறும் அழகு நாயகி என்கிற நிலையைத் தாண்டி தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் (முதல் மரியாதை) தனது திறமையையும் நிரூபித்தார்.

இந்தக் காலக்கட்டத்தில் அறிமுகமான அமலாவும் தனது அழகாலும் நடிப்புத்திறமையாலும் பார்வையாளர்களைக் கவர்ந்தார். வசனமே இல்லாமல் உருவான திரைப்படமான 'பேசும் படத்தில்' தனது முகபாவத்தாலும் உடல்மொழியாலுமே காட்சிகளை சிறப்பாக்கினார். முறையான நாட்டியப் பயிற்சியை கற்றிருந்த தகுதி இவருக்கு உதவிகரமாக இருந்தது. ஓர் உற்சாகப்  புயல் போல் தமிழ் திரையில் நுழைந்தவர் நிரோஷா. இவர் அறிமுகமான 'அக்னி நட்சத்திரம்' திரைப்படத்தில் இவரது வசீகரத்தைக் கண்ட தமிழக இளைஞர்கள் உடனடியாக இவரிடம் சரணடைந்தார்கள். ஆனால் இவரது தன்னுடைய நிலையை வெற்றிகரமாகத் தொடர முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம்.

குஷ்புவைப் பற்றி குறிப்பிடாமல் இந்தப் பகுதி முழுமையடையாது என்பது நிதர்சனமான உண்மை. இவரை கதாநாயகியாகப் போடமுடியாமல் ஒரு படத்தின் உருவாக்கத்தை திட்டமிடவே முடியாது என்கிற நிலையை இவரது இளமையும் அழகும்  ஏற்படுத்தின. இவர் நடித்த 'சின்ன தம்பி' என்கிற அசட்டுத்தனமான  திரைப்படம் இளையராஜாவின் இசையைத் தவிர என்னவென்று விளக்க முடியாத காரணத்தினால் பல நாட்கள் பேயோட்டம் ஓடியது. இவருக்காக கோயில் கட்டும் விபரீதமான நிலைக்கு ரசிகர்கள் சென்றதே இவரது புகழிற்கும் அழகிற்கும் சான்று. இந்தப் பெருமை வேறு எந்த நடிகைக்கும் அமையவில்லை என்பது வரலாற்றில் அவசியமாக இணைக்கப்பட வேண்டிய குறிப்பு.

ஒரு சுவாரசியத்திற்காக சர்ச்சையான ஒரு குறிப்புடன் இந்தப் பதிவை நிறைவு செய்வோமா? மேற்குறிப்பிட்ட நடிகைகளில்  பெரும்பாலோனோர் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் அல்ல என்பதில் ஏதோவோர் கலாசார முரணும் உளவியல் சுவாரசியமும் இருக்கிறதுதான் அல்லவா?

'தி இந்து' பொங்கல் மலரில் (2016) வெளியான கட்டுரை. அதன் சுருக்கப்படாத வடிவம் இது (நன்றி: தி இந்து)

suresh kannan

No comments: