Friday, August 20, 2010

மானுடத்திற்கு எதிரான அஃறிணைகளின் சதி


 ஒர் அலட்டலுக்காக வைக்கப்பட்ட இந்தத் தலைப்பைக் கண்டு திகைத்து அஞ்சி நிற்காமல் உள்ளே வாருங்கள். பதிவின் இறுதியில் உங்களுக்கோர் அதிர்ச்சி காத்திருக்கிறது.

அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் இயந்திரங்களும் பொருட்களும் மிக நெருக்கடியான நேரங்களில் எதிராக இயங்கி பழிவாங்குவதை பல சமயங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். பரபரப்பான காலை நேர உணவுத் தயாரிப்பின் போது மிகச் சரியாக சிலிண்டர் வாயு தீர்ந்து போவது எப்போதும் நிகழ்வதை கவனத்திருக்கிறீர்கள் அல்லவா? முக்கி முனகி மலம் கழித்து சாவகாசமாக எழுந்த சமயத்தின் போது குழாய் நீர் வராமலிருப்பதும் அடித்துப் பிடித்து விரைந்து செல்லும் போது நாம் போக வேண்டிய ரயில் மிகச்சரியாக நம் முன்னாலேயே வாலை ஆட்டி ஒழுங்கு காட்டிக் கொண்டே செல்வதை சதி என்று சொல்லாமல் என்னவென்பது? முக்கியமான நேர்காணலுக்கு கிளம்ப பிடித்தமான வண்ண அதிர்ஷ்ட சட்டையை அணியும் போது அதிலிருந்து ஒரு பொத்தான் கழன்று விழும் போது ஒரு மனிதனுக்கு கோபம் வருமா, வராதா? வேலை வெட்டியில்லாத மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் இந்த வயிற்றெரிச்சலையும் மர்பி, பர்பி என்று ஏதாவது ஒரு விதிக்குள் அடக்கி அதன் மீது நூற்றுக் கணக்கான ஆய்வுப்புத்தகங்களையும் எழுதிக் குவித்திருப்பார்கள்.

ஏன் இத்தனை கோபமும் பீடிகையும் என்று அறிய விருப்பமுள்ளவர்கள் மாத்திரம் தொடர்ந்து வாசிக்கவும்.

எதாலோ அல்லது எவராலோ தூண்டப்பட்டு நல்லதொரு இசையை அல்லது திரைப்படத்தை கேட்கலாம் அல்லது பார்க்கலாம் என்று சம்பந்தப்பட்ட குறுந்தகட்டை எல்லாவற்றையும் கவிழ்த்து தேடோ தேடுவென்று தேடினால் போன வாரம் வரைக் கூட கண்ணில்பட்டு தொலைத்துக் கொண்டிருந்த அந்தச் சனியன், மிகச்சரியாக இந்தச்சமயத்தில் கண்ணாமூச்சி விளையாடி மகிழ்வதின் பின்னணியை என்னவென்று சொல்வது? இப்படித்தான் பாருங்கள். அலுவலக வேலையை விட மிக கருத்துடன் செய்யும் பணியான வலைப்பதிவு எழுதும் காவியப் பணியை தொடர்வதற்காக நீண்ட நாட்களாக வரிசையில் காத்துக் கொண்டிருந்த மிகச் சிறந்த திரைப்படம் ஒன்றை வழக்கம் போல் நள்ளிரவில் பார்த்துக் கொண்டிருந்தேன். முக்கால்வாசி வரைக்கும் மிக சமர்த்தாக இயங்கிக் கொண்டிருந்த அந்த குறுந்தகடு அதற்குப் பிறகு சதித்திட்டத்துடன் விழித்தெழுந்து கொடுத்த மனஉளைச்சலை வார்த்தைகளால் விளக்க முடியாது. லயித்த மனநிலையுடன் கரமைதுனம் செய்யும் போது தடாலென்று கதவைத் திறந்து கொண்டு எவரேனும் நுழைந்தால் எப்படியிருக்கும்? இந்த உதாரணம் சிலருக்கு சங்கடம் தருமென்றால் மாற்றிக் கொள்ளலாம் ஒன்றும் பிரச்சினையில்லை. 'மிகச் சிறந்த இசையை கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருக்கும் போது மின்துண்டிப்பு நிகழ்ந்தாலோ, யாராவது அதை நிறுத்திவிட்டு இரைச்சலான இசைக்கு மாற்றியமைத்தாலோ எப்படியிருக்கும்?

அப்படித்தான் ஆயிற்று. அந்த திரைப்படத்தில் மிக மிக கவித்துமான தருணம் நிகழ்ந்து கொண்டிருந்த போது திடீரென்று குறுந்தகடு திக்கித் திணற ஆரம்பித்தது. பயங்கர எரிச்சலை அடக்கி பொறுமை காத்தேன். சமயங்களில் அப்படியே சற்று நகர்ந்து நகர்ந்து சரியாகிவிடும். ஆனால் இது என்னை பழிவாங்கத் திட்டமிட்டிருக்கும் போது எப்படி சரியாகும்? அப்படியே திக்கித் திக்கி உறைந்தே போயிற்று. நீலப்படமென்றாலும் பரவாயில்லை. தூக்கிக் கடாசிவிட்டு வேறொன்றை உபயோகித்து உடல்விசாரத்தை கடந்துவரலாம். இது அப்படியில்லை. அதற்குப் பிறகு என்ன நிகழ்ந்தது என்பதை அதன் தொடர்ச்சியோடு உடனே அறியாவிடில் மண்டை காய்ந்துவிடும். அந்த குறுந்தகடை ஆராய்ந்தேன். பெரிதாக எந்த சிராய்ப்புமில்லை. இதை விட காலில் போட்டு தேய்த்த மொக்கைப்படங்களெல்லாம் பின்பு மிக ஜோராக இயங்கியிருக்கிறது. எனவே அதை பல விதங்களில் தாஜா செய்து பார்த்தேன். மிருதுவான துணியை எடுத்து அதன் உடல் முழுவதும் தூசு போக துடைத்தேன். ஒருவேளை பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என்கிற பழமொழிக்கு ஏற்ப, தகட்டை இயக்கும் கருவியில் உள்ள குறைபாட்டிற்கு தகட்டை பழிச் சொல்கிறோமோ என்று கணினியில் இயக்கிப் பார்த்தேன். எத்தனை முறை நிகழ்த்தினாலும் ஒரே விடை என்கிற அறி(ற)வியல் தத்துவத்திற்கேற்ப திரைப்படம் கணினியிலும் மிகச்சரியாக அதே இடத்தில் உறைந்தது. தகடு இயக்கக் கருவியையும் அதற்குரிய துடைப்பான் தகட்டை வைத்து சுத்தம் செய்தேன். இறுதி முயற்சியாக எப்பவோ நண்பர் சொல்லியிருந்து யோசனைப் படி தகட்டை மென்னீரால் லேசாக கழுவி மிருதுவாக துடைத்து இளஞ்சூட்டில் காய வைத்தேன். பவுடர் போட்டு, யூனிபார்ம், ஷீ அணிவிக்காதுதான் குறை. ம்ஹூம்..

இதனால் அறியப்படும் நீதி யாதெனில்... மிக நல்ல திரைப்படம் என்று பரவலாக அறியப்பட்டதை மிக ஆவலுடன் காண அமர்கிறீர்கள் என்றால் எல்லாத் திசைகளிலும் வணங்கி, கடவுள்நம்பிக்கையோ, ஜாதக நம்பிக்கைகளோ இருந்தால் அதற்குரிய அனைத்து பரிகாரங்களையும் முடித்துவிட்டு அமரவும்.

இப்படியாக நான் அவஸ்தைப்பட்டு எரிச்சலின் உச்சத்தில் அந்த குறுந்தகட்டை எனக்குப்பிடிக்கவே பிடிக்காத எழுத்தாளரின் புத்தகத்தின் இடையில் வைத்து பழிவாங்கிய திருப்தியுடன் மறுநாள் இன்னொரு நல்ல குறுந்தகட்டை உபயோகித்து பார்த்த திரைப்படத்தைப் பற்றிதான் அடுத்த பதிவில் எழுதப் போகிறேன். எப்பூடி? திரை விமர்சனம் எழுதுவதற்காக டிரைய்லர் ஓட்டிய ஒரே இணையப் பிரகஸ்பதி நான் ஒருவனாகத்தான் இருக்கக்கூடும்.

தொடர்புடைய பதிவு:

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?

suresh kannan

13 comments:

R. Gopi said...

எது எப்படியோ ஒங்களுக்குப் பதிவெழுத ஒரு மேட்டர் கெடச்சாச்சு

தலைவர்
'My glass is half full' என்போர் சங்கம்

Kaarthik said...

நல்லா பில்ட் அப் தர்றீங்க. நீங்க சன் பிக்ச்சர்ஸ்ல சேர்ந்துடலாம் :-)

Anonymous said...

இதே கடுப்பு எனக்கு 2 வாரத்திற்குமுன் ஏற்ப்பட்டது! குறுந்தகட்டை உடைக்காமல் விட்டேன்!

தர்ஷன் said...

//இப்படியாக நான் அவஸ்தைப்பட்டு எரிச்சலின் உச்சத்தில் அந்த குறுந்தகட்டை எனக்குப்பிடிக்கவே பிடிக்காத எழுத்தாளரின் புத்தகத்தின் இடையில் வைத்து பழிவாங்கிய திருப்தியுடன்//

அவரை பற்றி எழுதவே மாட்டேன் என சொல்லியிருந்ததாய் ஞாபகம்

ராம்ஜி_யாஹூ said...

எஸ் ரா ஏன்தான் தமிழில் இந்த பாணியை புகுதினாரோ. ஒரு திரைப்பட விமர்சனம் எழுதும் முன்பு வேறு பல விசயங்களை சொல்லி திரைப்பட விமரசனத்தை எழுதுவது.

எல்லாரும் இதே பாணியை கடை பிடிப்பதால், எடுத்த உடனே கடைசி பத்தி படிக்க கண் ஓடுகிறது.

Prathap Kumar S. said...

அழகான உதாரணங்கள்...:))

உங்களுக்கு ஏற்பட்ட துன்பதை எங்களுக்கும் கொடுக்கறீங்களா??:))

அப்படி என்னப்படத்தைத்தான் பார்த்திங்கன்னு கடைசில சொல்லுவிங்கன்னு பார்த்தா இப்படி தொடரும் போட்டுட்டீங்க... சீக்கிரம் விமர்சனத்தைப்போடுங்க...மண்டை காயுது...:))

Anonymous said...

ராம்ஜி_யாஹூ> இது அநியாயம். எஸ்.ரா எப்போது இப்படியெல்லாம் எழுதினார். உதாரணம் தர முடியுமா? ஏன் அவரை வம்புக்கு இழுக்கிறீர்கள்?

PRABHU RAJADURAI said...

வேஸ்ட்! தினமும் ஏதாவது எழுதியாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு உட்பட்டு விட்டீர்கள் போல...

இதற்கு 'பிளாக்கியோபீலியா' என்று பெயர். பக்க விளைவு டிவோர்ஸ் நோட்டீஸாக கூட இருக்கலாம்:-)

குரங்குபெடல் said...

எப்படி சரி பண்றதுன்னு பிரபல இயக்குனர்கள் கிட்ட
கேட்டுபாருங்களேன் . . .?

Ashok D said...

நல்ல விமர்சனம்... பலே..

சாமக்கோடங்கி said...

என்னா வில்லத்தனம்,,,

Anonymous said...

//எல்லாரும் இதே பாணியை கடை பிடிப்பதால், எடுத்த உடனே கடைசி பத்தி படிக்க கண் ஓடுகிறது.//

அய்யா , நீங்கள் எல்லாவற்றையும்மே அப்பத்தானே படிக்கிறீர்கள் ?

இணைய உலகம் உங்களை போன்றவர்களை சேர்த்துக் கொண்டே இயங்குகிறது

Kannan said...

வன்மையாக கண்டிக்கிறேன் அஃறிணை என்ற பிரயோகத்தை. அதுவும் அணுக்களால் ஆனது நீங்களும் (நானும்) அணுக்களால் ஆனவர் பிறகு என்ன அது அஃறிணை!!. மர்பி, பர்பி நன்றாக இருந்தது.